இந்துக்கள் என்பவர்களும், திரு. காந்தியும், காங்கிரசும் தீண்டாதார்க்கு அரசியல் தனித் தொகுதியை ஏற்படுத்துவதை ஆதி முதல் மறுத்து வருவதற்குக் காரணம், அவர்களை இதுவரையிலும் இருந்தது போலவே எப் பொழுதும் இந்துக்களுக்கு அடிமையாக வைத்திருக்க வேண்டும் என்னும் எண்ணமேயாகும் என்று நாம் கூறி வருகிறோம்.

இவ்வாறு நாம் சொல்லி வந்ததின் உண்மை, இப்பொழுது திரு. காந்திக்கும், இந்தியா மந்திரிக்கும், முதல் மந்திரிக்கும் நடந்த கடிதப் போக்குவரத்துகளின் மூலம் நன்றாக விளங்கி விட்டது.

தீண்டாதாருக்குத் தனித் தொகுதி கொடுத்துவிட்டால் அவர்களுக் காகத் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள், வேறு எந்த உயர்ந்த வகுப்பினருடைய தயவையும் எதிர்பாராமல் சட்டசபைக்குத் தெரிந்தெடுக்கப் படலாம். சட்டசபையிலும் அவர்கள் தங்கள் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு, உண்மையாகவும் தைரியமாகவும் போராடலாம்.periyar and maniyammai 670அன்றியும், இந்துக்களினின்றும் தீண்டாதாரைத் தனியாகப் பிரிப்பதனால், அவர்களுக்கு மற்றொரு பெருஞ் சாதகமும் உண்டு. அதாவது, தற்போது பிரிட்டிஷ் அரசாங்கம் செய்திருக்கும் வகுப்புப் பிரச்சினைத் தீர்ப்பின்படி பார்த்தால், ஒவ்வொரு சட்டசபைகளிலும் உள்ள, முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், ஆங்கிலோ இந்தியர்கள், ஆங்கிலேயர்கள், தீண்டாதார்கள் ஆகிய இவர்கள் எல்லோருடைய தொகையும் ஒன்று சேர்ந்து இந்துக்களின் தொகையைக் காட்டிலும் சிறிது மெஜாரிட்டியாகி விடுகிறது. தீண்டாதாருக்குத் தனித் தொகுதி கொடுத்துப் பிரிக்கா விட்டால், மற்றவர்களின் தொகையைக் காட்டிலும் இந்துக்களின் தொகை சிறிது மெஜாரிட்டியாக இருக்கும்.

மேற்கூறியவாறு, இந்துக்களின் தொகையை விட, தீண்டாதாரை உள்ளிட்ட மற்றவர்களின் தொகை மெஜாரிட்டியாவதன் மூலம் தீண்டா தாருக்கு அவர்கள் கோரிய நன்மைகள் கிடைக்கக் கூடும் என்பதில் ஐய மில்லை. எப்படியெனில், இன்று தீண்டாதார்கள், பொதுத் தெருக்களில் நடக்கும் உரிமைக்கும், பொதுக் குளம், கிணறுகளில் தண்ணீர் எடுக்கும் உரிமைக்கும், பொதுக் கோயில்களில் நுழையும் உரிமைக்கும், பொதுப் பள்ளிக் கூடங்களில் சேர்ந்து படிக்கும் உரிமைக்கும், இன்னும் மற்ற மக்களைப் போல் தாங்களும் தேசத்தில் சமத்துவத்துடன் வாழ வேண்டும் என்னும் உரிமைக்கும் போராடிக் கொண்டு வருகின்றார்கள். இப் போராட்டத் திற்கு எதிராக நிற்கின்றவர்கள் கிறிஸ்தவர்களல்லர்; முஸ்லிம்களல்லர்; ஆங்கிலேயர்களல்லர்; ஆங்கிலோ இந்தியர்களல்லர் என்பது யாரும் அறியாததல்ல. ஆனால் தீண்டாதார்களின் மேற்கண்ட உரிமைகளை மறுத்துப் போராடுகின்றவர்கள், வைதீக இந்துக்கள் தான் என்பதை யாரும் மறுக்க முடியாது. இதற்கு உதாரணம், நாசிக், குருவாயூர் முதலிய இடங்களில் நடை பெறும் சத்தியாக்கிரகமும், இன்னும், அடிக்கடி ராமநாதபுரம் ஜில்லாவிலும் மற்றும் பல இடங்களிலும் தீண்டாதாருக்கு உண்டாகும் துன்பமுமே போதியவைகளாகும்.

அன்றியும், தீண்டாதாருக்குச் சுதந்தரம் அளிப்பதன் சம்பந்தமாகச் சட்டசபைகளில் ஏதாவது தீர்மானங்கள் வருகின்ற காலங்களில் அவைகளை இந்துக்களே எதிர்த்து வருகின்ற செய்தியும் போதுமானதாகும். இத்தகைய மனப்பான்மையுடைய இந்துக்களுடன், தீண்டாதார் சேர்ந்திருப்பதன் மூலம் அவர்களுக்கு எள்ளளவாவது நன்மை கிடைக்கப் போவதில்லை என்பது உறுதியாகும்.

அன்றியும் தீண்டாதாருக்குத் தனித் தொகுதியளிக்காமல், பொதுத் தொகுதியில் ஸ்தானங்கள் ஒதிக்கி வைத்தால் கூட, அதனாலும் அச்சமூகத்திற்கு கடுகளவும் பயன் உண்டாகாது. ஏனெனில் பொதுத் தொகுதியில் உள்ள மற்ற இந்துக்களின் வாக்கையும் பெற்றே அச்சமூகத்தினர் சட்டசபை ஸ்தானம் பெற முடியும். தீண்டாதார்களில் வயது வந்தவர்களுக்கெல்லாம் ஓட்டுரிமை அளித்தால் கூட, அவர்களைக் காட்டிலும் உயர்ந்த சாதி இந்துக்களின் வாக்காளர் தொகையே மிகுதியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. ஆகவே, இந்துக்களின் தயவினால் தான் தீண்டாதார் பிரதிநிதிகள் சட்டசபைக்குச் செல்ல முடியும். உயர்ந்த சாதி இந்துக்களின் தயவினால் செல்லும் பிரதிநிதிகள் எவ்வாறு தீண்டாதாராகிய தங்கள் சமூகத்திற்கு உண்மையாகவும், தைரியமாகவும் போராட முடியும் என்று கேட்கிறோம். ஆகையால் தீண்டா தார்களுக்குத் தனித் தொகுதி இல்லாவிட்டால் அவர்கள் முன்னேற்றமும் நீண்ட காலங்களுக்கு இல்லை என்றுதான் முடிவு செய்ய வேண்டும்.

இவ்வுண்மையை உணர்ந்தேதான், வைதீகர்களின் பிரதிநிதியாகிய திரு. காந்தியவர்கள், ஆதி முதல், தீண்டாதாருக்கு தனித் தொகுதி கொடுப்பதைப் பலமாக ஆட்சேபித்துக் கொண்டு வருகிறார். முஸ்லிம்களுக்கும், சீக்கியர்களுக்கும் தனித் தொகுதி கொடுக்க ஒப்புக் கொண்ட திரு. காந்தியவர்கள் “தீண்டாதாருக்குத் தனித் தொகுதி கொடுத்தால் எனது உயிரை விட்டாயினும் அதைத் தடுப்பேன்” என்று கூறியதற்கு காரணம் தீண்டாதார் முன்னேற்றம் கருதியல்ல; இந்துக்களின் முன்னேற்றம் கருதியும், இந்து மதம், வருணாச்சிரம தரும மதம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது கருதியுமே யாகும் என்பது இப்பொழுது நன்றாகத் தெரிந்து விட்டது.

இரண்டாவது வட்ட மேஜை மகாநாட்டின் போது, சிறுபான்மையோர் சம்பந்தமாக ஒரு முடிவு செய்வதற்கு, திரு. காந்தியுள்பட மற்றப் பிரதிநிதிகளும் எவ்வளவோ முயன்று பார்த்தார்கள்; ஆனால் தனித் தொகுதித் தகராறினாலும், ஸ்தானங்களின் எண்ணிக்கையில் உண்டான தகராறினாலும், ஒரு ஒப்பந்தத்திற்கும் வரமுடியாமற் போய்விட்டது. ஆகவே வகுப்புப் பிரச்சினை சம்மந்தமாக ஒரு முடிவுக்கும் வர முடியாமல், அதைத் தீர்மானிக்கும் விஷயத்தைப் பிரதம மந்திரியிடமே ஒப்படைத்து வந்து விட்டார்கள்.

ஆனால், திரு. காந்தி அவர்களுக்கு மாத்திரம், மற்ற விஷயங்களைக் காட்டிலும், தீண்டாதாருக்குத் தனித் தொகுதியளிக்கக் கூடாது என்னும் விஷயத்தில் மாத்திரம் பெருங்கவலை இருந்ததாகத் தெரிகிறது. இதை திரு. காந்தியவர்களே, இந்தியா மந்திரிக்கு எழுதிய கடிதத்தில் “இந்தியாவிற்கு வந்து, தனித் தொகுதிக்கு விரோதமான பொதுஜன அபிமானத்தை, தீண்டாதார் விஷயத்திலாவது மிகுதிப்படும்படி செய்யலாம் என்று நினைத்தே இந்தியாவுக்குத் திரும்பினேன். ஆனால் அது முடியாமல் போய்விட்டது” என்று குறிப்பிட்டிருப்பதிலிருந்து அறியலாம்.

இந்தியா முழுதும் உள்ள தீண்டாதார் ஸ்தாபனங்களும், அவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமான தலைவர்களும் ஆரம்பம் முதல் தங்களுக்குத் தனித் தொகுதிதான் வேண்டுமெனப் போராடி வந்திருக்கின்றனர். இவ் விஷயம் திரு. காந்தியவர்களுக்குத் தெரியும். இதனால், பிரிட்டிஷ் அரசாங்கம், வகுப்பு பிரச்சினை சம்பந்தமாக முடிவு செய்யும் போது தீண்டாதாருக்குத் தனித் தொகுதிதான் அளிப்பார்கள் என்ற விஷயமும் திரு. காந்திக்குத் தெரியும். ஆகையால்தான் அவர் சிறையிலிருந்து கொண்டே, வகுப்புப் பிரச்சினைத் தீர்ப்பு வெளியாவதற்கு முன்பே, இந்தியா மந்திரிக்கு சென்ற மார்ச்சு மாதம் 11 தேதி எழுதிய கடிதத்தில் தீண்டாதாருக்குத் தனித் தொகுதி கொடுக்கக் கூடாது என முன்னெச்சரிக்கையாக மறுத்திருக்கிறார். அவ்வாறு பிடிவாதத்துடன் மறுத்திருப்பதற்குக் காரணம், இந்து மதம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை யென்பதை அக் கடிதத்தில் உள்ள வாக்கியங்களைக் கொண்டே தெரிந்து கொள்ளலாம்.

“இந்து தர்மம் சம்பந்தப்பட்ட வரையில், தனித் தொகுதி முறை அச் சமூகத்தை சின்னா பின்னமாகச் சிதைத்து உருப்படாமல் செய்து விடும். நான் சம்பந்தப்பட்ட வரையில் இந்த வகுப்பாரின் தர்ம சம்பந்தமானதும், மத சம்பந்தமானதுமே முக்கியமானதாகும். தர்ம விஷயத்தையும், மத விஷயத்தையும் கவனிக்கும் போது அரசியல் விஷயம் முக்கியமானதா யிருந்தாலும் அதுதானே முக்கியமற்றதாகி மறைந்து விடுகிறது”

என்றும்

“எனது பயமெல்லாம் வெறும் பயமாகி தீண்டாதாருக்கு, பிரிட்டீஷ் சர்க்கார் தனித் தொகுதியளிக்க விரும்பவில்லை என்று ஏற்பட வேண்டுமென்றே நம்புகின்றேன்”

என்றும் குறிப்பிட்டிருப்பதைக் கொண்டு, 7 கோடி தீண்டாதார்களைப் பலி கொடுத்தாவது இந்து மதத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதில், திரு. காந்திக்கு எவ்வளவு பிடிவாதம் இருக்கிறதென்பதை அறியலாம்.

மேற்கூறிய இந்தியா மந்திரிக்கு எழுதிய கடிதத்திலேயே, “அரசாங் கத்தார், தீண்டாதாருக்குத் தனித் தொகுதி அளித்துவிடுவதெனத் தீர்மானித்து விடுவார்களாயின் நான் பட்டினிக் கிடந்து சாவதைத் தவிர வேறு வழி யில்லை” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இதன்பின் அதாவது பிரிட்டிஷ் அரசாங்கத்தாரின் வகுப்புப் பிரச்சினைத் தீர்ப்பு வெளியான பின், “தீண்டாதாருக்குத் தனித் தொகுதி கொடுத்திருப்பதை மாற்றா விட்டால் செப்டம்பர் மாதம் 20ம் தேதி முதல் பட்டினி கிடக்கத் தீர்மானித்து விட்டேன்” என்று பிரதம மந்திரிக்கு ஆகஸ்ட் மாதம் 18 ம் தேதி ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அக்கடிதத்திற்கு முதல் மந்திரி திரு. மெக்டனால்ட் கொடுத்திருக்கும் பதில் சரியான பதிலாகும். பிரதம மந்திரியின் பதிலில்,

“நீங்கள் பட்டினிக் கிடந்து உயிர் துறக்க நினைத்திருப்பது, தாழ்த்தப்பட்டவர்களுக்கு மற்ற இந்துக்களுடன் கூட்டுத் தொகுதி அளிக்க வேண்டும் என்பதற்காக அல்ல; ஏனெனில் இவ்விதக் கூட்டுத் தொகுதி முன்னமே கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்துக்களுக்குள் ஒற்றுமை உண்டாக்க வேண்டுமென்னும் எண்ணத்துடனும் அல்ல; அதுவும் முன்னமே அரசாங்கத்தாரின் திட்டத்தில் அடங்கி இருக்கிறது. ஆனால் தற்சமயம், பெருங் கஷ்டங்களுக்கு உட்பட்டுள்ள தாழ்த்தப்பட்ட சமூகத்தினர், தங்கள் சார்பாகச் சட்டசபைகளில் பேச, ஒரு சில பிரதிநிதிகளைத் தாங்களாகவே தங்களுக்குள் தேர்ந்தெடுத்து அனுப்பும் உரிமையைத் தடுப்பதற்காக மாத்திரந்தான் நீங்கள் பட்டினி விரதத்தைக் கைகொள்ள எண்ணியிருக்கிறீர்கள் என்று நான் அறிகிறேன்”

என்று குறிப்பிட்டிருக்கும் வார்த்தைகள் உண்மை என்றே நாம் கூறுவோம். திரு. காந்தியின் இந்துமத அபிமானத்தையும், வருணாச்சிரம தருமப் பிடிவாதத்தையும் உணர்ந்தவர்கள் இதை மறுக்க முன் வரமாட்டார்கள்.

பிரதம மந்திரியின் தீர்ப்பின்படி தாழ்த்தப்பட்டவர்களுக்கு பொதுத் தொகுதியில் “ஓட்” செய்யும் உரிமை யிருக்கிறது. இதனால், உயர்ந்த ஜாதி இந்துக்களுக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் ஒற்றுமை உண்டாக இடமிருக் கிறது. ஆகையால் இத்தீர்ப்பினால் இந்துக்களினின்றும் தீண்டாதாரைப் பிரித்து விட்டார்கள் என்று குறை கூறுவதற்குச் சிறிதும் இடமில்லை, இப்படி யிருந்தும் வீணாகக் கூச்சலிடுவதெல்லாம் பிரதம மந்திரி குறிப்பிட்டிருப்பது போல, “தீண்டாதார் தங்கள் சார்பாகச் சட்ட சபைகளில் பேச தாங்களே ஒரு சில பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து அனுப்பும் உரிமையைத் தடுப்பதற்கே” யன்றி வேறல்ல என்பதில் கடுகளவும் ஐயமில்லை.

உண்மையிலேயே திரு. காந்தி அவர்கள் தீண்டாதாரின் நன்மையை உத்தேசித்து அவர்களுக்குத் தனித் தொகுதியளிக்கக் கூடாதெனக் கூறுவாறா னால், அவ்வாறு அளித்திருப்பதற்காகப் பட்டினி கிடந்து உயிர்விடுவது அவர்கள் நன்மைக்கே என்று கூறுவாரானால், இதுவரையிலும் அவர் தீண்டாதார்களுக்குச் செய்த காரியம் என்ன என்றுதான் கேட்கின்றோம்? காங்கிரசில் 1920ல் முக்கிய திட்டத்தில் ஒன்றாக யிருந்து வந்த “தீண்டாமை விலக்குதல்” என்னும் திட்டத்தை ஏன் கை விட்டார், காங்கிரஸ் அரசியல் திட்டத்தில் மதப் பாதகாப்பு ஏன் வைத்திருக்கிறார்? மதப் பாதுகாப்பை ஒப்புக் கொண்டால் தீண்டாதார் இன்னும் பரம்பரையாக இப்பொழுது இருப்பது போலவே இருக்க வேண்டியதுதானே. தீண்டாதார்கள் இதுவரையிலும் போராடிக் கொண்டு வரும் எந்த உரிமையைக் கொடுக்கும் படி செய்தார்? ஆகையால் திரு. காந்தியின் இத்தகைய பயமுறுத்தல் உண்மையாக இருந்தாலும், அது தீண்டாதாரின் கேட்டிற்கும், உயர்ந்த சாதி இந்துக்களின் பாதுகாப்பிற்குமே என்று நாம் கூறுவோம்.

அன்றியும், திரு. காந்தி அவர்கள், மற்ற பெருங்காரியங்களை யெல்லாம் விட்டு விட்டு இந்தத் தீண்டாதார் விஷயத்திற்கு மாத்திரம் இவ்வளவு பிடிவாதம் செய்வதன் அர்த்தம் விளங்குவது யாருக்கும் கொஞ்சம் சங்கடமாகவேதான் இருக்கக் கூடும். ஜனநாயகத்துவத்தைப் பற்றி பரிந்து பரிந்து பேசும் திரு. காந்தியவர்கள், தேசமக்களின் அபிப்பிராயத்தை மாற்றி, வகுப்புப் பிரச்சினைத் தீர்ப்பை ஒப்புக் கொள்ளாமல் வேறு ஒரு சிறந்த முடிவைச் செய்வதுதானே. இதற்கு பிரிட்டிஷ் அரசாங்கம் ஒன்றும் தடை கூறவில்லையே. பிரதம மந்திரி, வகுப்புப் பிரச்சினைத் தீர்ப்பின் மேல் எழுதி இருக்கும் அபிப்பிராயத்தில், “வேறு சமரசமான முடிவை எல்லாச் சமூகத்தினரும் சேர்ந்து செய்வார்களாயின் அதை பிரிட்டிஷ் அரசாங்கத்தார் ஏற்றுக் கொள்ளுவார்கள்” என்று கூறியிருப்பது திரு. காந்தியவர்களுக்குத் தெரியாதா? இங்ஙனமிருக்க, பட்டினி கிடந்து உயிர் துறக்கத் துணிவது எவ்வளவு நேர்மையான செயலாகும் என்றுதான் கேட்கின்றோம்.

ஒரு காரியத்தைத் தானும் செய்யச் சக்தியில்லை. பிறர் செய்வதையும் ஒப்புக் கொள்வதில்லை என்றால், அத்தகைய மனிதரால் யாருக்கு என்ன நன்மையுண்டு என்று ஆராய்ந்து பாருங்கள்.

உண்மையிலேயே திரு. காந்தியவர்கள் உயிர் விடுவதாயிருந்தாலும்., அதற்குப் பயந்து கொண்டு தீண்டாதாருக்கு அளித்திருக்கும் தனித் தொகுதி அமைப்பு மாற்றப்படுமானால், அது ஒரு மனிதரைக் காப்பாற்ற வேண்டி, ஏழுகோடி மனிதர்களைப் பலி கொடுப்பதாகத்தான் முடியும் என்று தான் உறுதியாக நாம் கூறுவோம்.

இச்சமயத்தில் தேசாபிமானப் பட்டத்திற்கும் பத்திரிகைகளில் கொட்டை எழுத்துக்களில் புகழ்ந்து தங்களைப் பற்றி எழுதுவதற்கும் ஏமாந்து ஒரு சில தீண்டாத தலைவர்கள் தங்களையும் இந்துக்களென்றும், ஆகையால் தாங்கள் இந்துக்களோடுதான் சேர்ந்திருக்க வேண்டும் என்றும் வீண் ஆர்ப்பாட்டம் செய்பவர்களின் வார்த்தையைக் கேட்டு யாரும் ஏமாற வேண்டாம். அவர்கள் இதுவரையிலும் இந்துக்கள் என்று சொல்லிக் கொண்டு அவர்களுடன் சேர்ந்திருந்ததனால் அடைந்த பலன் என்ன? என்பதை மாத்திரம் பொறுமையோடு சுயநலமில்லாமல் ஆராய்ந்து பார்ப்பார்களாயின் உண்மை யுணர்ந்து கொள்ளாமல் போகமாட்டார்கள்.

(குடி அரசு - தலையங்கம் - 18.09.1932)

Pin It