மலேசியத் தமிழர் தன்மான இயக்கமும், பேரா மாநிலப் பெரியார் பாசறையும், மலேசியத் திராவிடர் கழகமும் ஏற்பாடு செய்த கூட்டங்களில், “பெரியார் இயக்கம் ஓர் அரசியல் இயக்கம்” என்பதை விளக்கி வே. ஆனைமுத்து விரிவாக உரைகளாற்றினார்.

18.1.2014

மலேசியத் தமிழர் தன்மான இயக்கத் தேசியத் தலைவரும், சிறந்த தமிழறிஞரும், இதழ்களின் கட்டுரையாளருமான மலேசியா, தாமான் ஸ்ரீ கோம் பாக்கில் உள்ள முனைவர் பெரு. அ. தமிழ்மணி -கிளிமொழி இணையரின் மகன் நேயமணி - பினாங்கு புக்கிட் பெர்தாஜம், சாகரன்-கனகவள்ளி மகள் ஜெஸ்லின சுவாரி இணையரின் இல்வாழ்க்கை இணைப்பு விருந்தழைப்பு விழாவில் சிறப்புரையாற்ற வேண்டி, 16.1.2014 பிற்பகல் 2 மணிக்கு வே. ஆனைமுத்து கோலாலம்பூரை அடைந்தார்.

வானூர்தி நிலையத்துக்கு வந்திருந்த தோழர்கள் முனைவர் பெரு. அ. தமிழ்மணி, த.சி. அழகன் ஆகியோர் வே. ஆனைமுத்துவை வரவேற்று அழைத்துச்சென்றனர்.

“சனசக்தி” தமிழ்க் கிழமை இதழின் வெளியீட்டு அலுவலகத்தில் வே. ஆனைமுத்து கொள்கைக்கனல் தாப்பா கெ. வாசு, கொள்கைமணி த.சி. முனியரசன் ஆகியோர் தங்கியிருக்க ஏற்பாடு செய்தனர்.

18.1.14 இரவு இல்வாழ்க்கை இணைப்பு விருந்தளிப்பு விழா

மணமக்கள் வீ. நேயமணி - சா. ஜெஸ்லின சுவாரி ஆகியோரின் இல்வாழ்க்கை இணைப்பு விருந்தளிப்பு விழாவில், கோலாலம்பூர், பேரா மாநிலம், பினாங்கு, சுங்கைப் பட்டாணி ஆகிய பல பகுதிகளிலிருந்து மலேசியத் தமிழர் தன்மான இயக்கத்தினரும், பெரியார் பாசறையினரும், திராவிடர் கழக - திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களும், தமிழ்மணியின் உறவினர்களும், நண்பர்களும் கோலாலம்பூர், கிராண்ட் பசிபிக் ஓட்டல் மண்டபத்திற்கு 18.1.2014 இரவு 7 மணிக்குத் திரளாக வந்திருந்தனர்.

இவ்வரவேற்பு நிகழ்ச்சிக்கு மலேசியத் தமிழர் தன்மான இயக்கத் துணைத் தலைவர் பேரா மாநிலம் தாப்பா கெ. வாசு தலைமையேற்றார். மேற்படி இயக்கத்தின் உதவித் தலைவர் த.சி. முனியரசன் ஒருங்கிணைப்பு உரையும், தலைமைச் செயலாளர் த.சி. அழகன் வரவேற்புரையும் ஆற்றினர்.

முனைவர் தமிழ்மணியின் உரையை அடுத்து, மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் வே. ஆனைமுத்து, பெரியாரின் தன்மானத் திருமண முறையின் முதன்மை பற்றி விளக்க உரையாற்றினார்.

மலேசிய அரசு மக்கள் நல அமைச்சர் முனைவர் சுப்ரமணியம், சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழ் அறிஞர்கள் உள்ளிட்டோர் இவ்விழாவில் பங்கேற்றனர்.

அனைவரும் விருந்து உண்டு, மணமக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்த பின்னர், இரவு 10 மணிக்கு மன்றல் விருந்தளிப்பு விழா நிறைவுற்றது.

19.1.14 கோலாலம்பூர் சோமா அரங்கில் கலந்துரையாடல்

19.1.2014 ஞாயிறு முற்பகல் 11 மணிக்கு, கோலாலம்பூர் டான் ஸ்ரீ சோமா அரங்கில், மலேசியத் தமிழர் தன்மான இயக்கத்தாரும், “வல்லினம்” இதழ் ஆசிரியர் ம. நவீன் ஆகியோரும் இணைந்து நடத்திய, பகுத்தறிவுக் கலந்துரையாடல் நடைபெற்றது.

கெ. வாசு தலைமை தாங்கினார். த.சி. அழகன் அறிமுக உரையாற்றினார். த.சி. முனியரசன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

மலேசியத் தமிழரின் - தமிழ்ப் பள்ளிகளின் இரங்கத்தக்க நிலை பற்றி முனைவர் பெரு.அ. தமிழ்மணி உரையாற்றினார்.

தந்தை பெரியாரின் “தமிழ் ஒரு காட்டுமிராண்டிக் காலமொழி” என்ற கூற்று பற்றிப் பலரும் எழுப்பின வினாக்களுக்கு, தமிழ்மொழியில் இடம்பெற்றுள்ள இழுக்கான கொள்கை பற்றிய பெரியாரின் அறிவார்ந்த விளக்கங்களை வே. ஆனைமுத்து எடுத்துரைத்தார்.

தமிழர் - இனத்தால் ‘திராவிடர்’, - மொழியால் ‘தமிழர்’ - ஆனால் இரண்டாயிரம் ஆண்டாகப் பண்பாட்டால் “இந்து - சூத்திரர்” என்பது ஏன் என்பதை விளக்கி உரையாற்றினார்.

பிற்பகல் 2 மணிக்கு இந்நிகழ்ச்சி முடிவுற்றது.

வே. ஆனைமுத்துவுடன் நேர்காணல்

19.1.2014 இரவு 7 மணிமுதல் 9 மணிவரை, “வல் லினம்” இதழாசிரியர் ம. நவீன், “சனசக்தி” அலுவலகத் தில், வே. ஆனைமுத்துவை நேர்காணல் செய்தார்.

20.1.14 பேரா மாநிலம், பெக்கான் கிச்சில், தாப்பா சாலையில் விளக்கக் கூட்டம்

பேரா மாநிலம், பெக்கான் கிச்சில், தாப்பா சாலை யில், பெரியார் பாசறைத் துணைத் தலைவர் மு. சிவப் பிரகாசம் குடும்பத்தார் ஏற்பாட்டில், கெ. வாசு தலைமையில், மாலை 6.30 மணிக்கு, பெரியாரின் பணி பற்றிய விளக்கக் கூட்டம் நடைபெற்றது.

த.சி. அழகன் அறிமுக உரை, த.சி. முனியரசன் ஒருங்கிணைப்பு உரை, முனைவர் பெரு.அ. தமிழ்மணி விளக்க உரைக்குப்பின், வே. ஆனைமுத்து சிறப்புரை ஆற்றினார். மகளிரணி செயலாளர் சி. இளவரசி நன்றி கூறினார்.

21.1.14 காலை, கெ.வாசு இல்லத்தில், அனைவர்க்கும் சிற்றுண்டி அளித்தனர்.

அங்கிருந்து ஜலான் பெலகாங் சகோலா என்ற ஊருக்கு மதிய உணவுக்குப் புறப்பட்டனர்.

பெரியநாயகம் மறைவு

பாகன் செராய் பெரியார் தன்மானப் பேரவைச் செம்மல் பெரிய நாயகம் அவர்கள், தம் 73ஆம் அகவையில், 21.1.14 முற்பகலில் மறைந்தார் என்ற செய்தி அறிந்து, அவரில்லத்துக்குச் சென்று, இறுதி மரியாதை செலுத்திவிட்டு, பிறகு ஜலான் பெலகாங் நோக்கிக் குழுவினர் பயணித்தனர்.

21.1.14 மாலை பெராக் மாநிலம் சுங்கை சிப்புட்டில் பொதுக்கூட்டம்

21.1.14, செவ்வாய் இரவு 7.30 மணிக்கு சுங்கை சிப்புட் ஊர்ப் பொது மண்டபத்தில், கெ. வாசு தலைமையில் பொங்கல் விழாப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

எலன் வரவேற்புரை ஆற்றினார்.

அத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயகுமார், தமிழரின் நிலைபற்றி விளக்க உரையாற்றினார்.

த.சி. அழகன் அறிமுக உரையும், த.சி. முனியரசன் ஒருங்கிணைப்பு உரையும் ஆற்றினர்.

முனைவர் பெரு. அ. தமிழ்மணி, வே. ஆனைமுத்து ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

தோழர் எலன் பணி பாராட்டத்தக்கதாக அமைந்தது.

22.1.14 புதன் சுங்கைப் பட்டாணியில், மலேசிய திராவிடர் கழகச் சார்பில் பொங்கல் புத்தாண்டு விழா

“பெரியார் இயக்கம் ஓர் அரசியல் இயக்கம்” என்பதை வே. ஆனைமுத்து விளக்கினார்.

மலேசியா, சுங்கைப் பட் டாணி, கம்போங் ராஜா, மலேசிய திராவிடர் கழகக் கிளையின் சார்பில், திராவிடர் கழக அலுவலக வாயிலில், கழகத் தலைவர் சா. வடிவேலு குடும்பத்தினரால், 22.1.14 மாலை 6 மணிக்கு, சர்க்கரைப் பொங்கல் பொங்கி, அனை வர்க்கும் வழங்கப் பட்டது.

இரவு 7 மணிக்கு, சா. வடிவேலு தலைமையில், கூட்டம் தொடங்கியது. தோழர்கள் முரளி, மா. நண்பழகன், செல்லா, கெ. வாசு ஆகியோர் ‘தமிழ்ப் புத்தாண்டு தைத் திங்களே’ என்பது பற்றியும், ‘பொங்கல் விழா வேளாண் உழைப் பாளர் நாள்’ என்பது பற்றியும் உரையாற்றினர்.

முனைவர் பெரு. அ. தமிழ்மணி மலேசியத் தமிழரின் - தமிழ்ப்பள்ளிகளின் இரங்கத்தக்க நிலை பற்றி உரையாற்றினார்.

இறுதியாக வே. ஆனைமுத்து தம் உரையில், பெரியார் கொள்கையினர் மார்க்சியம் பற்றி ஏன் அறிய வேண்டும் என்பதை விளக்கிக் காரல் மார்க்சு, 1853 மே 14 அன்றே, “இந்தியாவிலுள்ள இழிசாதி மக்கள், தாங்கள் மோட்சத்துக்குப் போக வேண்டு மானால், எந்தப் பலனும் எதிர்பார்க்காமல், மேல் வருணத்தாருக்குத் தொண்டு செய்யவேண்டும்” என்று, மனுநீதியில் கூறியிருப்பதை எடுத்துக்காட்டிக் கண்டித் தார் என்பதையும்; மற்றும், “தெற்கு ஆசியாவிலும் இந்தியாவிலும் அனுமான் என்கிற குரங்கையும், பசு மாட்டையும் மண்டியிட்டு வணங்குகிற மூடர்கள் இருக்கிற வரையில், ஆசியாவில் ஒரு பண்பாட்டுப் புரட்சி வருமா?” என்று, காரல் மார்க்சு 1958இல் ஓர் அய்ய வினாவை எழுப்பியிருப்பதையும் எடுத்துக் காட்டி, நாம் மார்க்சியக் கொள்கைக்காரர்களாகவும், உண்மையான பெரியார் கொள்கைக்காரர்களாகவும் உருவாக வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

“பெரியார் இயக்கம் ஓர் அரசியல் இயக்கம்” என்பதை வே. ஆனைமுத்து, அனைவர்க்கும் புரிய வைத்துப் பேசியதாவது :

“தந்தை பெரியார் 30.9.1945இல் திருச்சி மாநாட்டில், அந்நியர்களின் ஆதிக்கம் ஒழிந்த ‘தனிச் சுதந்தரத் திராவிட நாடு’ வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினார். 1956 நவம்பரில், இந்திய மாகாணங்கள் மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்ட உடனேயே, ‘தனிச் சுதந்தரத் தமிழ்நாடு’ வேண்டும் என்று கோரினார்; 9.12.1973இல் நடந்த கடைசி மாநாட்டிலும், 19.12.1973இல் தியாகராய நகரில் ஆற்றிய கடைசிச் சொற்பொழிவிலும் ‘தனிச் சுதந்தரத் தமிழ்நாடு பெறுவதே நம் குறிக்கோள்’ என்று பெரியார் முழங்கினார்.

அப்போதுதான் நால்வருண ஒழிப்பு, மதம் சார்ந்த கல்வி ஒழிப்பு, மத விழாக்களுக்கு அரசு விடுமுறை ஒழிப்பு, மத ஆதிக்க ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு, சமதர்ம சமுதாய அமைப்பு வந்துசேர முடியும் என்பதால் தனிச் சுதந்தர நாடு கேட்டாரே அன்றி, திராவிட நாட்டைப் பிரித்து - அல்லது தமிழ் நாட்டைப் பிரித்து இன்னொரு நாட்டானுக்கு விற்கவா கேட்டார்? அல்லது அதை நெய்யில் பொரித்துத் தின்னவா கேட்டார்?” என்பதை எல்லாப் பெரியார் தொண்டர்களும் புரிந்துகொள்ளவேண்டும் எனக் கோரினார்.

இதுபற்றி, மலேசியாவில், மலேசிய திராவிடர் கழக மாநாட்டில், 21.12.2013 அன்று தி.க. தலைவர் கி. வீரமணி, “... ... ... நாம் அரசியல்வாதிகள் அல்ல; சமூக மாற்றத்திற்கான மனிதநேய அமைப்பில் பணி செய் பவர்கள். அவர்களுக்குத் தேர்தல் முக்கியம்; நமக்குத் தலை முறைகள் குறித்தும் கவலைகள் உள்ளன ...” (“விடுதலை” 28/29-12-2013) எனப் பேசியிருப்பதைiயும், பெரியாரின் அரசியல் குறிக்கோள் பற்றிய அது, தவறான விளக்கம் என்பதையும் - ‘பெரியார் இயக்கம் ஓர் அரசியல் இயக்கம்தான்’ என்பதையும் அங்கிருந்தோர்க்கு உணர்த் தினார்.

கூட்டம் முடிந்த பிறகு, பெரியாரைத் தமிழகத் தமிழரும் நன்கு உணரவில்லை; உலகத் தமிழர் உண்மையை உணரவும் நாம் ஆவன செய்யவில்லை என்பதை அங்கிருந்த பலரும் கருத்தாகக் கூறினர்.

23.1.2014 ரந்தாவ் நெகிரி செம்பிலான் அரங்கக் கூட்டம்

தன்மானச் செம்மலும், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவருமான மூத்த தோழர் இரா.மா. தன பாலன் தலைமையில், ரந்தாவ் நெகிரி செம்பிலான், சுங்ஹூவா சீனப்பள்ளி மண்டபத்தில், 23.1.2014 வியாழன் மாலை 6.30 மணிக்கு, தமிழர் தன்மான இயக்கக் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் எ.ஸ் நாராயணசாமி வரவேற்புரை ஆற்றினார். ஏ. சுகுமாறன், அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் குணா என்கிற பி. குணசேகரன் மற்றும் தமிழர் தன்மான இயக்கப் பொதுச் செயலாளர் த.சி. அழகன், முனைவர் பெரு. அ. தமிழ்மணி ஆகியோர் உரைக்குப்பின் வே. ஆனைமுத்து சிறப்புரையாற்றினார்.

மாணவ, மாணவியர் 30 பேர்களுக்கு, “திருக்குறள்” நூல் வழங்கப்பட்டது.

பங்கேற்ற அனைவர்க்கும் இரவு உணவு அளிக்கப் பட்டது.

மலேசியப்பயணத்தை முடித்துக்கொண்டு, 24.1.2014 மாலை 5.30 மணிக்கு, வே. ஆனைமுத்து சென்னை வந்தடைந்தார்.

Pin It