திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் வட்டம், சிறுநாத்தூர், மேட்டூர் கிராமத்தில் வசித்த வரதக்கவுண்டர் மகன் மறைந்த பரசுராமன் - அம்மாகண்ணு அம்மா இணையருக்கு 16.04.1957-இல் பிறந்த வடிவேலு ஆகிய நான் மட்டுமே எங்கள் பரம்பரையில் பட்டப் படிப்பு படித்தவன். என் குடும்பத்தில் எனக்கு முன் பிறந்த அனைவரும் எழுத, படிக்க மட்டுமே தெரிந்தவர்கள். 1982 வரை கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தனர்.

vadivelu 5391962 முதல் 1978 வரை கல்வியுடன் பகுத்தறிவையும் ஊட்டிய, சிறுநாத்தூர் ஊ.ஒ.ந.நி. பள்ளி நல்லாசிரியர்கள் திருவாளர்கள் இராசகோபால் (த.ஆ.), கு. மன்னார், ஜானகிராமன், நாகமையன், ஜெனேந்திரன், கீழ்பென்னாத்தூர் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் கள், திருவாளர்கள் டி.கே. இராசேந்திரன், என். சானகிராமன், துரைசாமி (த.ஆ.), மு. சுப்பிரமணியன், கே. மன்னார், வாணியம் பாடி இசுலாமிய கல்லூரி ஆசிரியர்கள் திருவாளர்கள் மீர்சா அப்துல் மஜீத், முதல்வர், கவிக்கோ அப்துல் ரகுமான், கவிஞர் காதர் ஆகியோர் ஆவர். பட்டயக் கணக்கர் பயிற்சிக்குத் தோழர் கலச.இராமலிங்கம், தோழர் கலையரசு, மறைந்த தோழர் ச. தட்சணாமூர்த்தி இவர்களின் பெரும் முயற்சியால் 1980 முதல் 1983 வரை நீதிபதி மகாராசன் அவர்களின் மகன் ம. சிதம்பரம் (அய்யாவு & கோ.) அவர்களிடம் சேர்ந்தேன். உடனிருந்த தோழர் கள் என்றும் என் நினைவில் நிலைத்து நிற்கின்றனர்.

நான் பள்ளிப் படிப்பை படிக்கும் பொழுது கடவுள் நம்பிக்கை, சோசியம், சாதகம், பேய், சைத்தான் போன்றவற்றில் நம்பிக்கை கொண்டதில்லை. என் குடும்பத்தினருடன் கோவிலுக்குச் சென்றால் வேடிக்கை மட்டுமே பார்ப்பேன். இன்று வரை என் உழைப்பைத் தவிர வேறு எதுவும் என் வளர்ச்சிக்கு உதவும் என்று நம்பிக்கை இல்லை. கோவிலுக்குச் செல்வதைவிட நான் படித்த கல்விக் கூடங்களுக்குச் சென்று பார்த்து மகிழ்ந்துள்ளேன்.

1990-இல் சிறுநாத்தூர் நடுநிலைப்பள்ளி ஆசிரியர் கோ.கோதண்டராமன் வகுப்பிற்குச் சென்றேன். அவர் அவரு டைய வகுப்பு மாணவர்களின் கல்வி ஆற்றலை அளவிட என்னை கேள்வி கேட்கச் சொன்னார். என் கேள்விக்கு அனைவரும் மிகச் சிறப்பாகப் பதில் அளித்தனர். பதில் கூறிய மாணவர்களுக்கு அன்றே பரிசு கொடுக்கு மாறு கோதண்டராமன் ஆசிரியர் கேட்டுக் கொண்டார். அன்றே பரிசும் கொடுத்தேன். இதைத் தொடர்ந்து ஆசிரியர்கள் த.தானப்பன், வி. நடராசன், குப்புசாமி ஆகியோரும் என்னை ஊக்கப்படுத்தி பள்ளி மாணவர்களுக்குக் கல்வியை ஊக்குவிக்கப் பரிசு வழங்கவும் செய்தனர். இதன் தொடர்ச்சியாக கடந்த 28 ஆண்டுகளாக நான் படித்த நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்குப் பரிசு கொடுத்தும் ஆசிரியர்களைப் பாராட்டியும் வருகின்றேன். என்னைப் பின்பற்றி பள்ளியின் முன்னாள் மாணவர் சு. தமிழரசன் கடந்த ஏழு ஆண்டுகளாக மாணவர்களுக்குப் பரிசளித்து வருகின்றார்.

1978-இல் அய்யா வே. ஆனைமுத்து அவர்களைக் கீழ்பென்னாத்தூரில் ஆசிரியர் கோதண்டராமன் இல்லத்தில் முதன்முதலில் சந்தித்தேன். அப்போது ஆசிரியர் கோதண்ட ராமன் தோழர் கலச. இராமலிங்கம் உடன் இருந்தனர். படித்துக் கொண்டு இருந்ததால், அய்யாவைத் தொடர்ந்து சந்திக்க முடியவில்லை.

1984 முதல் சென்னையில் பல நிறுவனங்களில் தொடர்ந்து பகுதி நேரக் கணக்கராக வேலை செய்து கொண்டு வருகின்றேன். அய்யா ஆனைமுத்துவுக்கு 1984 தொடக்கம் முதல் சிந்தனையாளன், மா.பெ.பொ. கட்சி, பெரியார் அச்சிடுவோர் வெளியிடுவோர் குழுமம் மற்றும் அறக்கட்டளைக் கணக்குகளை அய்யா கொடுத்த வரவு செலவுக் குறிப்புகளைக் கொண்டு எழுதிக் கொடுத்துக் கொண்டு அலுவலகப் பணிகளிலும் சிந்தனையாளன் மாத இதழ் அனுப்புவது, முகவரி எழுதுவது உள்ளிட்ட அனைத்து உதவியும் புரிந்து வருகின்றேன்.

3.5.1987-இல் அய்யா வே. ஆனைமுத்து தலைமையில் கீழ்பென்னாத்தூர் வாசன் திரையரங்கில் சென்னையைச் சேர்ந்த சீனிவாசன் - யசோதா இணையரின் மகள் சுகுணாவை என் வாழ்க்கைத் துணைவியாக ஏற்றுக் கொண்டு வாழ்ந்து வருகின்றேன். 12ஆம் வகுப்பு படித்த என் துணைவியாரை B.A., M.A., PGDCA, BAL., BLIS ஆகிய பட்டங்கள் பெறத் துணையாக இருந்தேன். 5.5.1989-இல் மகள் அருவியும் 18.1.1991-இல் மகன் அரிராசும் பிறந்தனர். என்னுடன் என் பிள்ளை களும் துணைவியாரும் கட்சி, சிந்தனையாளன் பணிகளையும் செய்தனர்.

1982-இல் நிறுவப்பட்ட பெரியார் அச்சிடுவோர் வெளியிடுவோர் குழுமத்தைத் தொடங்கிய பொழுது முதலில் கி. இராம நாதன், பின்னர் இரா. முருகேசன், க. நாகராஜன், மு. சுகுமார், வ. சுகுணா, வாலாசா வல்லவன், தங்கவயல் வெற்றி, துரைசிங் ஆகியோர் அலுவலகப் பொறுப்புகளைக் கவனித்துக் கொண்டனர். பின் இவர்களில் மு. சுகுமாரும் நானும் நிருவாகத்தைக் கவனித்துக் கொண்ட காலம் எனக்குப் பொற்காலமாகத் தோன்று கின்றது. மற்றவர்களின் உதவியுடன் நிருவாகம் செய்ய முடிந்தது. நிருவாகத்தின் வரவு-செலவுக் கணக்குகளை அய்யா வே. ஆனைமுத்து அவர்கள் கொடுக்கும் குறிப்புகள் மற்றும் கட்சிப் பணிகள் செய்தவர்களின் வரவு-செலவுக் குறிப்புகளின் அடிப்படையில் கணக்குகளை எழுதிக் கொடுப்பேன். அந்த கணக்கைப் பொதுக் குழுவில் ஆய்வுக்கு வைத்து கணக்கை உறுதி செய்து பட்டையக் கணக்கர் திரு. சி.பி. செங்கல்வராயன் அவர்கள் தணிக்கை செய்து சான்றளித்த பின் கணக்கைச் சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு அனுப்பி வைப்பேன்.

2000 முதல் 2006-ஆம் ஆண்டு வரை சிந்தனையாளன் கட்சி மற்றும் அறக்கட்டளை நிருவாகத்தை கோ. அருண்மொழி பார்த்துக் கொண்டிருந்தார். அலுவலகத்தில் தங்கி பணியாற்றியதால் அருண்மொழி அனை வருக்கும் சிறந்த சுவையான உணவளித்து அனைத்து தோழர்கள் மனத்திலும் இடம் பெற்றார். பின்னர் வி. தேவராசு, வி. சதானந்தம், இரா. மதியழகனும் அலுவலகப் பணிகளைப் பார்த்து கொண்டனர். இவர்களுடன் நான் வரவு-செலவுக் கணக்குகளைப் பார்த்துக் கொண்டு நானே அய்யாவின் நேரடிப் பார்வையில் பொறுப்புகளையும் கவனிக்க நேரிட்டது. என்னுடன் 2010 முதல் 2017 வரை தோழர் நாத்திகன்சாமியும் மகிழ்ச்சியுடன் கட்சி, சிந்தனையாளன் வேலைகளைச் செய்து வந்தார். அவர் இப்பொழுது வயது முதிர்வு காரணமாகக் கட்சி அலுவலகத்திற்கு வர இயலவில்லை. பொது வேலைகள், சிந்தனையாளன் இதழ் வேலைகளை இன்று வரை மிக மகிழ்ச்சியுடன் செய்து வருகிறேன்.

கட்சிக்கும் சிந்தனையாளனுக்கும் அறக் கட்டளைக்கும் அளித்த என் உழைப்பை மறைந்த தோழர்கள் ஆ.செ. தங்கவேலு, மா. முத்துசாமி, புலவர் து. தயாளசாமி, விழுப்புரம் க. திருப்பாண்டியன், து. தில்லை வனம், அம்பத்தூர் தே. முத்து, சங்கமித்ரா, மரு.பூ. பழனியப்பன், புலவர் கி.த. பச்சையப்பன், கண்ணியம் குலோத்துங்கன், வீ. இராசா பிள்ளை, கவிஞர் தமிழேந்தி ஆகியோரும் மற்றும் தோழர்கள் க. முகிலன், புலவர் ந. கவுதமன், சூலூர் தேவராசு, சேலம் ஆனையப்பன், இரா. பச்சமலை, துரை கலையரசு, கு. வனரோசா, கோ.மு. கருப்பையா, புலவர் கலியமூர்த்தி, திருச்சி இராதா கிருட்டிணன், வரகூர் மா. நாராயணசாமி, திருச்சி கலியபெருமாள், ந. கருணாகரன், பா.வே. பரமசிவம், மு. சுவாமிநாதன், நாத்திகன்சாமி, சோ.சு. பாவேந்தன் ஆகியோர் என்னைப் பாராட்டினர். அதேபோன்று என் மனைவி சுகுணா, மகள் அருவி, மகன் அரிராசு ஆகியோரின் கட்சிப் பணிகளைக் கண்ணுற்று மகிழ்ந்து பாராட்டியுள்ளனர்.

1993 முதல் 2019 வரை பெரியார் - நாகம்மை கல்வி ஆராய்ச்சி அறக்கட்டளை வரவு-செலவுக் கணக்குகளை எழுதிக் கொடுத்து வருகின்றேன். என் பணியை மா.பெ.பொ. கட்சிக்கும் சிந்தனையாளனுக்கும் அறக்கட்டளை மற்றும் ஒடுக்கப்பட்டோர் பேரவைக்கும் என்றும் தொடருவேன். திட்டமிட்டால் திடமான செயல்கள் வெற்றி பெறும்; நம்பினால் நாணயம் வளரும்; தொடர்வோம் தோழமையுடன்! நாம் நல்ல பணிகளை நட்பாகச் செய்வோம், நலமுடன் பழகுவோம், நலமுடன் வாழ்வோம். தொடரட்டும் தோழமை!

Pin It