இந்திய மண்ணில் வேறு எங்குமில்லாத சாதியம், ஒடுக்குமுறையாக, சுரண்டல் முறையாக, அடிமைத்தளமாக மூவாயிரம் ஆண்டுகளாக இருந்து வருகிறது.

பிராமணிய ஆதிக்கத்தின் நால்வருணப் பேதத்தின் உச்சபட்சக் கொடுமைகளை அனுபவித்த மாநிலம் மராட்டிய மாநிலமாகும்.

phuleஅங்கே ஆதிக்கச் சாதியினரால் சூத்திரர்கள். ஆதிசூத்திரர் கள் அடிமைகளாக நடத்தப்பட்டு கொடுமைகளுக்கு ஆளானார்கள். கொடுமைகளுக்கு எடுத்துத்காட்டாக தாழ்த்தப்பட்ட மக்களினம்-மகர். மாங் சாதியினர் வீதிகளில் பகலில் நடக்கமுடியாது; நடக்கக்கூடாது. ஏனெனில் அவர்களின் நிழல் பிராமணர்களுக்குத் தீட்டடாகும். பார்ப்பன பேஷ்வாக்கள் ஆட்சியில் பிராமணிய ஆதிக்கம் மிக வலிமையுடன் வேரூன்றியிருந்தது மராட்டியத்தில்.

1848இல் புனாவில் ஒரு சூத்திர வகுப்பு படித்த இளை ஞன், தன்னுடைய பிராமண நண்பனின் திருமண மாப் பிள்ளை வரவேற்பில் கலந்து கொண்டான். அப்பொழுது அவ்விளைஞன் மாலி இனத்தைச் சார்ந்த சூத்திரன் என்று பார்ப்பனர் கண்டு கொண்டனர். அவர்கள் கடுஞ் சீற்றத்துடன் அவனைப் பார்த்து “ஏய் மாலியே-சூத்திரனே எங்களுடன் சரி சரிசமமாக நடந்து வர உனக்கு எவ்வளவு துணிச்சல்? சாதிக்கட்டுப்பாடுகளை மறந்துவிட்டாயா? ஆங்கிலப் பள்ளியில் படித்துவிட்டால், நீ மேலானவன் ஆகிவிட முடியுமா? பிரிட்டிஷ் காரர்கள் உன்னைப் போன்ற சூத்திரர்களை மனம்போன போக்கில் நடக்கவிடுவதை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம்! மரியாதையாக ஓடிவிடு” என்று கூறி அவமானப் படுத்தி, ஊர்வலத்திலிருந்து துரத்திவிட்டனர்.

அவ்விளைஞன் இச்சம்பவத்தைக் குறித்து ஆத்திரமுடன் தன் நண்பர்களிடம் விவரித்தான். நண்பர்கள், “நாம் சூத்திரர்கள், பிராமணர்களோடு சமமாக எப்படி நடந்து வர முடியும்? உனது நல்லகாலம் உன்னை அடித்து உதைக் காமல் விட்டுவிட்டனர்! பேஷ்வா ஆட்சிக்காலமாக இருந்திருந் தால், உன்னைக் கலகக்காரன் என்று முத்திரை குத்திக் கடுமையாகத் தண்டித்திருப்பார்கள், நல்லவேளை பிரிட்டிஷ் ஆட்சி நடைபெறுகிறது! தப்பித்தாய் தண்டடையிலிருந்து!” என்று கூறி, நண்பர்கள் அவனை சமாதானப்படுத்த முயன்றார்கள். அவன் சமாதானம் ஆகவில்லை.

பின் தன் தந்தையிடமும் கூறி வருந்தினான். “பார்ப் பனர்களை விரோதித்துக் கொள்ளாதே! அவர்கள் சமூகத்தில் உயர்ந்த நிலையிலுள்ளவர்கள். அவர்கள் என்ன வேண்டு மானாலும் செய்ய வல்லவர்கள். ஆட்சியதிகாரம் அவர்கள் கையில். எனவே அவர்களை அனுசரித்துப் போய்விடு” என்று தந்தை அறிவுரை புகன்றார். மகன் எரிமலையாக மாறினான்.

அவமானமடைந்த அந்த இளைஞன் தான், சனாதன-பார்ப்பனிய மேலாதிக்கத்தை எதிர்த்துப் போராடிய முதல் சமூகப் போராளியான மகாத்மா ஜோதிராவ் புலே ஆவார். அவரது வரலாறு வருமாறு :

ஜோதிராவ் புலே, கோவிந்தராவ்-சிம்னாபாய் இணைய ருக்கு மூன்றாவது குழந்தையாக மஹாராஷ்டிரா மாநிலத்தில் - சதாரா மாவட்டத்தில் வால்கன் என்ற கிராமத்தில் சூத்திர சாதிகளில் ஒன்றான மாலி என்ற பிரிவில், 1827 ஆம் ஆண்டு எப்ரல் 11 ஆம் தேதி பிறந்தார். “சுடர் ஒளி” என்ற பொருளில், “ஜோதி” என அக்குழந்தைக்குப் பெயர் சூட்டினார்கள்.

அவரது தந்தை கோவிந்தராவ் காய்கறி விற்பனை செய்து வந்தார். இவர்களது குடும்பம், மராட்டிய பேஷ்வாக் களுக்குப் பூ விற்பனை செய்த குடும்பம். புலே என்றால், பூ விற்பவர் எனப் பொருள்படும். ஆதலால் புலே என்றே இவர்களது குடும்பப் பெயர் வழங்கப்பட்டது.

திண்ணைப் பள்ளிக்கூடத்தில் சில ஆண்டுகள் படித்தார். அவர் சிறு வயதிலேயே புத்திக் கூர்மையும் கல்வி பயில்வதில் மிகுந்த ஆர்வமும் கொண்டிருந்தார்.

அவர் கல்வி பயில்வதற்குத் தடை, தந்தையின் பிராமண நண்பர் ஒருவர் மூலம் ஏற்பட்டது. அந்த நண்பர் “உன் மகன் அதிகம் கல்வி கற்றால் மூளை கெட்டு, மத விரோதி யாகிக் கலக்காரனாகி விடுவான். விவசாய வேலைகளுக்குப் பயன்படமாட்டான்,” என்று அச்சுறுத்தினார். தன் நண்பரின் அச்சுறுத்தலின் பின்புலம் அறியாத கோவிந்தராவ், ஜோதியின் படிப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்தார். சாஸ்திர சம்பிரதாயப்படி பார்ப்பனரைத் தவிர மற்ற சூத்திர சாதியினர் கல்வி கற்பது சாஸ்திர விரோதமானது என்பது அன்றைய விதியாகும்.

பள்ளிப் படிப்பை இழந்த ஜோதிராவ் புலே, பகல் முழுவதும் தோட்ட வேலையில் ஈடுபட்ட போதிலும், இரவில் மிகுந்த ஆர்வத்துடன் புத்தகங்களை நேசித்து வாசித்து வந்தார்.

இந்நிலையில், 13 வயதில் ஜோதிராவிற்கு, 9 வயதே நிரம்பிய சாவித்திரி என்ற பெண்ணுடன் 1840இல் திரு மணம் நடைபெற்றது.

ஜோதிராவின் அறிவுத் தேடலையும், புத்திக் கூர்மை யையும், கற்பதிலிருந்த பேரவாவையும் கண்டு வியந்த அண்டை வீட்டுக்காரர்களான ஒரு முஸ்லீம் ஆசிரியரும், ஒரு கிறித்துவ மத போதகரும், கோவிந்தராவிடம், ஜோதியை மீண்டும் பள்ளியில் சேர்த்துப் படிக்கவைக்க வலியுறுத்தி னார்கள்.

அவர்களின் வலியுறுத்தலுக்கு இணங்கி, அவர்களது உதவியுடன், தந்தை கோவிந்தராவ் 1841 ஆம் ஆண்டு 14 வது வயதில் ஜோதியைப் பூனாவிலுள்ள ஸ்காட்லாந்து மிஷனரி பள்ளியில் சேர்த்தார்.

பள்ளியில் ஆர்வத்துடனும் அறிவுத் தேடலுடனும் கல்வி பயின்றார். தன் சக மாணவர்கள், ஆசிரியர்கள் நன்மதிப் பையும் பெற்றார்.இப்பள்ளியில் பயின்ற, சதாசிவபலால் கோவிந்தே, மோரோவித்தல் வல்வீகர், சகாராம்பயஷ்வந்த் புரன் ஜிபி, என்ற மூன்று பார்ப்பன மாணவர்கள் நட்பினைப் பெற்றார். அந்த மூவரும் ஜோதிராவ் புலேயின், நம்பிக்கைக் குரிய நண்பர்களாக விளங்கினார்கள். அவர்கள் ஜோதியின் எல்லா நடவடிக்கைகளிலும் இறுதிவரை துணை நின்றனர்.

மாணவப் பருவத்தில் ஜோதிராவ் புலே, நிறையப் படித்தார்.

சத்ரபதி சிவாஜி, ஜியார்ஜ் வாஷிங்டன் ஆகியோர் வாழ்க்கை வரலாறுகளைப் படித்துணர்ந்து எழுச்சியும் விடுதலை உணர்வும் பெற்றார். மேலும் கபீர், துக்காராம் கவிதைகளும், மார்ட்டின் லூதர், புத்தர், பசவண்ணா ஆகியோரின் நூல்களையும் கற்றார். ஆழ்ந்து சிந்தித்தார். சாதிகளை உருவாக்கியது யார்? அவை எப்படி, யாரால் வளர்ந்தன? என்று ஆய்வு செய்தார். சாதியப் பிரிவினையை உருவாக்கியது பிராமணிய வர்ணாஸ்ரமக் கோட்பாடுதான் பிராமணர்களின் நன்மைக்காக, சாதாரண மக்களின் வாழ்க்கையைப் பல நூற்றாண்டுகளாகப் பாழாக்கி வரு கின்றது என உணர்ந்தார். பேஷ்வாக்களின் காலத்தில் பிராமணியக் கொடுமைகள் உச்சத்தைத் தொட்டன என் பதையும் அறிந்தார்.

இந்தச் சூழலில் ஸ்காட்டிஷ் உயர் நிலைப்பள்ளி ஆசிரியர், கோவன்டே என்பவர் கல்வித் திறனுடைய இம் மாணவர் மீது அன்பு கொண்டு உதவினார். இவர் மூலம் அமெரிக்க அறிஞர் தாமஸ் பெய்ன் எழுதிய “மனிதனின் உரிமைகள்” (The Rights of Man) நூலை ஆர்வத் துடன் படித்துத் தெளிந்தார். மனிதனின் அடிப்படை உரிமை கள், கடமைகள் பற்றிப் பேசுகின்ற அரிய நூலாகும், அது.

தாமஸ் பெய்ன் புகழ்மிக்க அமெரிக்க அறிஞர். அவர் பிரிட்டிஷ் குடியேற்ற ஆதிக்கத்தை எதிர்த்து, அமெரிக்கா விடுதலை பெறவேண்டும் என்று பேசியும் எழுதியும் வந்தவர். பிரெஞ்சுப் புரட்சியில் பங்கேற்றவர். 1791இல் பிரெஞ்சுப் புரட்சிக்கு ஆதரவாக அவர் எழுதிய நூல்தான் “மனிதனின் உரிமைகள்”.

இப்புத்தகம் ஜோதிராவ் புலேயின் உள்ளத்தில் புரட்சிக் கனலைத் தூண்டியது. சாதியக் கொடுமைகளுக்கு எதிராகப் போராடும் எண்ணத்தை விதைத்தது.

1848ல் ஜோதிராவ் புலே பார்ப்பன நண்பனின் திருமண ஊர்வலத்தில் அடைந்த அவமானம், இவரது புரட்சி எண்ணத் தீயில் ஊற்றிய எண்ணெய் ஆயிற்று. (இந் நிகழ்வு குறித்து இக்கட்டுரையில் முன்பே குறிப்பிட்டள்ளேன்)

வர்ணபேதத்தால், பிறப்பால் தீண்டத்தாகவர் களாகக் கருதப்பட்டுக் கொடுமைகளுக்கு ஆளாவனர் களை-சமூகத்தால் ஒடுக்கப்பட்டவர்களை விடுவிக்க என்னவழி யென்று சிந்தித்தார்.

“கல்விக் குறைவால், அறிவு சீரழிந்தது;

அறிவுக் குறைவால், நல்லொழுக்கம் அழிந்தது;

நல்லொழுக்கக் குறைவால், முன்னேற்றம் தடைப் பட்டது;

முன்னேற்றம் தடைப் பட்டதால் செல்வம் குறைந்தது;

செல்வக் குறைவினால் சூத்திரர்கள் தாழ்ந்தனர்;

கல்லாமையிலிருந்தே அனைத்துத் துயரங்களும்                                                          ஊற்றெடுக்கின்றன.”

என்று உணர்ந்த ஜோதிராவ் புலே, அனைவருக் கும் கல்வி, அதிலும் சிறப்பாகப் பெண்களுக்குப் கல்வி என்பதில் மிகுந்த ஆர்வங் கொண்டார்.

“தொட்டிலை ஆட்டும் கை, ஆட்சிக் கட்டிலையும் ஆட்டும்” என்ற மொழியின் உண்மையை உணர்ந்த ஜோதிராவ், அறியாமை இருளை அகற்றவும், கல்வி அறிவை வழங்கவும் 1848, ஆகஸ்டு திங்களில் ‘புத்தர்வதே’ என்ற இடத்தில் ஒரு வீட்டில் மகர், மாங் இன தாழ்த்தப்பட்ட வகுப்புப் பெண்களுக் கான முதல் பள்ளியைத் தன் 21 ஆவது வயதில் தொடங்கினார்.

கல்வி கற்பிப்பதற்கு ஆசிரியர் எவரும் முன்வரவில்லை. ஆதலால் தன் மனைவி சாவித்திரிக்குக் கல்வி போதித்து அவரையே பள்ளி ஆசிரியராக்கினார்.

சாஸ்திர விதிகளின்படி கல்வி கற்கும் உரிமை சூத்திர னுக்கில்லையென்றும், கடவுளுக்கும் மதத்திற்கும், சமூகத் திற்கும் எதிரானது என்றும், பெண்களுக்குக் கல்வி கற்பிப்ப தென்பது மோசமான பாவச் செயலென்றும் உயர் சாதி இந்துக்கள் கூக்குரலிட்டு எதிர்த்துக், கலவரத்தில் ஈடுபட்டனர். சாவித்திரிபாய் பள்ளிக்குச் செல்லும்போது கலகக்காரர்கள் அவர் மீது கற்களையும் சேற்றையும் வாரி இறைத்தார்கள்.

சனாதானிகளின் அச்சுறுத்தலுக்கு அஞ்சி புலேவின் தந்தை அவரை வீட்டைவிட்டு வெறியேற்றினார். என்றாலும் புலே தன் கொள்கையில் உறுதியாக நின்றார். பெண்கள் கல்வியறிவு பெறுவது சாத்தியமாயிற்று. 1851 சூலையில் நவ்புதாவர் பேத்திலும், 1851 செப்டம்பரில் ராஸ்தா பேத்திலும், 1852 மார்ச்சில் விதல் பேத்திலும் பெண்கள் கல்விக் கூடங்களை நிறுவினார். (பேத்=பேட்டை)

பெண்களுக்காகக் கல்விக் கூடங்களைத் திறந்த முதல் இந்தியச் சமூகப் போராளி ஜோதிராவ் புலே ஆவார்.

அவரது பள்ளிகளுக்கு எந்த உதவியும் தராத பிரிட்டிஷ் அரசினர், மேல்சாதி மாணவர்களின் கல்விக்காகப் பெரும் நிதியைச் செலவிட்டனர்.

“தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வி வளர்ச்சிக் கழகத்தை”, 1853 செப்டம்பர் 10 ஆம் தேதி தொடங்கி, அதன் செயலா ளராக அவரது பள்ளி நண்பர் வல்வீகர் நியமிக்கப்பட்டார். இக்கழகத்தோடு தான் தொடங்கிய பள்ளிகளை இணைத் தார். அதன் பின் பூனாவிலுள்ள ஸ்காட் மிஷினரி பள்ளியில் ஆசிரியப் பணியை ஏற்றார். இவர் மீது ஆத்திரங்கொண்ட உயர் சாதியினர், 1856இல் இவரைக் கொல்வதற்கு என, நேம்தி தேவ் கும்பர், ரோடி என்ற இரு மாங் இனத்தைச் சேர்ந்த இளைஞர்களை உருவா 2000 கொடுத்து ஏற்பாடு செய்தனர். ஆனால் அவர்களிருவரும் ஜோதிராவ் புலேயைப் பார்த்தவுடன் அவர் காலில் விழுந்து மன்னிப்புக் கோரினர். பின்னர் அவர்களிருவரும் புலேயின் மாலை நேரப்பள்ளியில் சேர்ந்து படித்தனர். ரோடி, புலேயின் பாதுகாவலனாகவும்; கும்பர், பண்டிதராகி “உண்மை நாடுவோர் சங்கத்தின்” கொள்கை பரப்புச் செயலாளராகவும் பணியாற்றினர்.

புலே, குழந்தைத் திருமணங்களை எதிர்த்தார். விதவைகள் மறுமணத்திற்கு மதவிதிகளில் தடையிருந்தது. அதனால் விதவைகள் பெற்ற குழந்தைகள் குப்பைகளில் வீசப்படும் கொடுமைகள் நடந்து வந்தன. இந்த அநாதைக் குழந்தைகளையும், கருவுற்ற விதவைகளைக் காக்கவும் அநாதை விடுதி ஒன்றை உருவாக்கினார். அன்று உருவான முதல் அநாதை விடுதி இதுவே. கருவுற்ற விதவைகளைப் பாதுகாக்கவும், திருமணத்திற்குப் புறம்பாகப் பிறக்கும் ‘சட்டவிரோதமான’ குழந்தைகளைப் பாதுகாத்து வளர்க்கவும் உறுதி கொண்டார். அன்று இது ஒரு துணிச்சல்மிக்க புரட்சி கரமான செயலாகும். இதனால் பிராமணர்களின் கடுஞ் சொற்களுக்கும் அவதூறுகளுக்கும் ஆளானார்.

தான் உருவாக்கிய அநாதை இல்லத்தில் இருந்த ஒரு பார்ப்பன விதவைக்கு 1873 இல் பிறந்த ஓர் ஆண் குழந் தையைத் தத்தெடுத்து, ‘யஷ்வந்த்’ எனப் பெயரிட்டு ஜோதி ராவ் புலேயும், சாவித்திரிபாயும் வளர்த்தார்கள்.

1856 சூலை 25இல் விதவை மறுமணச் சட்டம் அரசால் நிறைவேற்றப்பட்டது. ஜோதிராவ் புலே இச் சட்டத்தை வரவேற்று விதவைகளின் வேதனைகளை ஒழித்திடத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.

அந்நாளில் தாழ்த்தப்பட்ட மக்கள் பொது நீர் நிலை களிலிருந்து நீரெடுக்கத் தடை இருந்து வந்தது. 1868இல் ஜோதிராவ் புலே, உயர் சாதி இந்துக்களுக்கு அஞ்சாமல், தன் வீட்டுக் குடிநீர் கிணற்றைத் தாழ்த்தப்பட்ட மக்கள் பயன் பாட்டிற்குத் திறந்துவிட்டார். எந்த உயர்சாதி சீர்திருத்த வாதியும் இத்தகைய செயலைச் செய்ததில்லை.

வைதிக பூனா நகரமே அவரை எதிர்த்தது; பாதி கிறித்துவன் என்று குறை கூறியது; சமூக விலக்கு செய்திடுவதாக மிரட்டியது. ஊரே ஒன்று திரண்டு எதிர்த்தபோதும் அஞ்சாமல் செயல்பட்டார்.

“அடிமைத்தனம்” நூல் :

சூன் 1, 1873இல் “அடிமைத்தனம்” என்ற நூலை வெளியிட்டார். இந்நூல் பிராமணர்களுக்கு எதிராக விஷம் கக்கும் பிரச்சாரம் என்று கடுமையாகக் கண்டித்து விமரி சிக்கப்பட்டது. பொதுவாழ்க்கையும் பத்திரிக்கைகளும் பிராம ணர் பிடியில்தான் அன்று இருந்தன, இன்றும் அந்நிலை தொடர்கின்றது.

“ஒரு மனிதன் அடிமையாகும் போது அவன் தன் நற்பண்புகளில் பாதியை இழந்துவிடுகின்றான்”, என்ற ஹோமரின் மேற்கோளோடு இப்புத்தகத்தைத் தொடங்குகிறார்.

இந்நூலை, அமெரிக்காவில் நீக்ரோக்களின் அடிமை நிலையை ஒழிக்கப் பாடுபட்ட அனைத்துத் தியாகிகளுக்கும் அர்ப்பணித்தார்.

அமெரிக்க நீக்ரோ அடிமை முறையும், இந்திய சூத்திரர்-தீண்டத்தகாதவர் அடிமை முறையும் ஒத்திருப்பதைச் சுட்டிக் காட்டினார். இவற்றிற்கிடையே இருந்த வேறுபாட்டையும் அவர் சுட்டிக்காட்டத் தவறவில்லை.

அமெரிக்க அடிமைமுறை மனிதனால் உருவாக்கப்பட்ட, முதலாளித்துவக் காலகட்டத்தின் ஏற்பாடு; அண்மைக்கால வரலாற்று நிகழ்ச்சி. இதை மனிதனே நீக்கிவிடமுடியும், சிறிது முயற்சி செய்தால். 1860இல் ஆப்பிரஹாம் லிங்கனால் நீக்ரோக்கள் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

ஆனால் இந்தியாவில், சூத்திரர்-ஆதிசூத்திரர் என்கிற அடிமைத்தனம் இறைவன் பெயரால், மதத்தின் பெயரால், சாஸ்திரத்தின் பெயரால் உருவாக்கப்பட்ட தெய்வீக ஏற்பாடு. இதை மனிதனால் மாற்றவே முடியாது. மாற்றவும் கூடாது. மதம் மாறலாம், ஆனால் சாதி மாறவே முடியாது.

ஆகவே, இந்தப் பிறவி அடிமைத்தனம் கொடுமை யானது, அடித்து, உடைத்துத் தகர்த்தொழிக்கப்பட வேண்டிய ஏற்பாடு. இதுவே ஜோதிராவ் புலேயின் நிலைப்பாடு.

1873 செப்டம்பர் 24 ஆம் நாள் ஒரு மாநாட்டைக் கூட்டி, “சத்ய சோதக் சமாஜ்” (உண்மை நாடுவோர் சங்கம்) என்ற அமைப்பைத் தொடங்கினார்.

இந்து மதத்தின் தீமைகளுக்கு எதிராகப் போராட இச்சங்கத்தினைத் தோற்றுவித்தார். மதம் மாற அவர் ஒருப் படவில்லை. மதத்தைவிட மனிதநேயமே முக்கியம் என்று, எதிர்ப்புக்களிடையே பிரச்சாரம் செய்தார்.

சூத்திரர்களையும் ஆதிசூத்திரர்களையும் பிராமணியச் சுரண்டலிலிருந்து விடுவித்தல், மூடச்சடங்குகள், மூடப்பழக்க வழக்கங்களிலிருந்து மக்களை விடுவித்தல், புரோகித ஒழிப்பு, வேதங்களின் புனிதத்தை மறுத்தல், உருவ வழிபாட்டை மறுத்தல், இயற்கை வழிபாட்டைப் போற்றுதல், உழவர்-தொழிலாளர் உரிமைகளுக்காகப் போராடுதல், அனைவர்க் கும் கல்வி உரிமை பெறுதல், பெண்கல்வி, மாதர் முன்னேற் றம் விதவைத் திருமணங்கள் ஆகியவற்றை ஊக்குவித்தல் என்பவையே இச்சங்கத்தின் குறிக்கோள்களாகும்.

சத்யசோதக் சமாஜத்தின் ஏடு “தீனபந்து”. இதன் ஆசிரியர் புலேயின் நண்பர் கிருஷ்ணாராவ் பலேக்கர். இந்தியத் தொழிற்சங்கத்தின் தந்தை எனப் போற்றப் படும் நாராயண் மேகாஜி லோகண்டே இவரது நெருங்கிய தோழர். இந்த நண்பர்கள் மூவரும்- பலேக்கர், லோகண்டே, புலே ஒன்றுசேர்ந்து, 1880 இல் முதல் தொழிற்சங்கத்தை உருவாக்கி ஆலைத் தொழிலாளர் உரிமைக்காகப் போராடி னார்கள்.

1857 சூன் 1ஆம் தேதி நகராட்சியாக்கப்பட்ட பூனா நகராட்சியின் உறுப்பினராக, 1876 முதல் 1882 வரை, பிரிட்டிஷ் அரசால் நியமிக்கப்பட்டார். வைஸ்ராய் லிட்டன் பிரவு பூனா வருவதையொட்டி பூனா நகராட்சி அவருக்கு வரவேற்பளிக்க முந்தியது. லிட்டன் பிரவு இந்தியப் பத்திரிக் கைகளின் சுதந்திரத்தை ஒடுக்க சட்டம் கொண்டு வந்தார். வைஸ்ராயின் வருகைக்காகச் செலவிடும் பணத்தை ஏழை மாணவர்களின் கல்விக்hகச் செலவிடலாம் என்று கூறி, நகராட்சியிலிருந்த 36 உறுப்பினர்களில் தைரியமாகக் கண்டித்து எதிர்த்தவர் ஜோதிராவ் புலே ஒருவர் மட்டுமே.

அரசு புதிய மதுக்கடைகளைத் திறக்க அனுமதி அளித்த போது, மதுக்கடைகள் பொது ஒழுக்கத்தற்கு ஊறு விளை விக்கும் என்பதோடு, உடல் நலத்திற்குக் கேடாகிக் குடும்பங் கள் அழிந்துபோகும் எனக் கூறி எதிர்த்தார்.

விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி யும், அவர்தம் நலன்கள் பாதுகாக்கப்படல் வேண்டு மென்று வலியுறுத்தியும் “விவசாயிகளின் சாட்டை” என்ற நூலை எழுதி, 1883ஆம் ஆண்டு சூலையில் வெளியிட்டார். சீனா வில் விவசாயிகளுக்காகப் போராடிய மாவோவுக்கு ஜோதிராவ் புலே முன்னோடி எனலாம்.

விக்டோரியா மகாராணியின் பேரன் கன்னாட் பிரபுவுக் கும் அவரது மனைவிக்கும் பூனாவில் 1888, மார்ச் 2ஆம் நாள் நடைபெற்ற வரவேற்பு விழாவுக்கு, ஒரு ஏழை விவ சாயி போல் உடை உடுத்திக் கொண்டு போனார். வரவேற் பில் கலந்துகொண்டு உரையும் ஆற்றினார். ஜோதிராவ் புலே, “அரச குடும்பத்தினர் இந்திய விவசாய மக்களின் உண்மை நிலையை அறிய வேண்டுமானால், பூனாவின் அருகிலுள்ள கிராமங்களுக்கும், தீண்டப்படாதவரின் சேரி களுக்கும் சென்று நிலைமையைக் கண்டறிய வேண்டும்; கண்டறிந்ததை மகாராணியிடம் தெரிவித்து அவர்களின் கல்விக்கு ஏற்பாடு செய்யவேண்டும்” என்று கோரினார்.

1891இல் வெளியிடப்பட்ட நூல், “சர்வஜனிக் சத்ய தர்ம புஸ்தக்”

இந்நூல் மனிதர்களுக்குள்ளே ஒற்றுமையையும் சுதந்தரம், சமத்துவம், சகோதரத்துவத்தையும், வலியுறுத்து கிறது. இந்நூலில் வேதங்களின் புனிதத் தன்மையை மறுத்தும், நால் வருணப்பகுப்பினை எதிர்த்தும் எழுதியுள் ளார். பக்கவாதத்தால் இவரின் வலது பக்க உடல் அசை வற்றுப் போனதால், இடது கையினால் எழுதி, இந்நூலை 1889 ஏப்ரல் 1ஆம் நாள் முடித்தார்.

அவரது மரணத்திற்குப் பின், 1891 இல் வளர்ப்பு மகன் யஷ்வந்த்தால் அந்நூல் வெளியிடப்பட்டது.

“தற்போதைய சமூக முறையை மாற்ற வேண்டுமா னால், பிறரைச் சார்ந்திருத்தல், அறியாமை, கல்லாமை ஏழ்மை ஆகியவற்றை ஒழிக்க வேண்டும். அப்பொழுதுதான் பிறரால் தாழ்த்தப்பட்ட மக்கள் சுரண்டப்படுவதைத் தடுக்க முடியும். மூடநம்பிக்கை ஒழிப்பே சமூகப் பொருளாதார மாற்றங்களுக்கு வழிகோலும்”, என்று கூறித் தொண்டு செய்த ஜோதிராவ் புலே, 28-11-1890 இல் இயற்கை எய்தினார்.

மகாத்மா காந்தி 1933ஆம் ஆண்டு மே மாதம் எரவடா சிறையில் இருந்தபோது, ஜோதிராவ் புலேயை “ஒரு உண்மையான மகாத்மா” என்று பாராட்டினார்.

மகாத்மா புலேயின் சமகாலத்தவர்களான பிராமண சீர்திருத்தவாதிகளான ராஜா ராம்மோகன் ராய், தயானந்த சரஸ்வதி போன்றவர்களைப் பாராட்டிய வரலாற்று ஆசிரியர் கள், புரட்சிகர சூத்திர சீர்திருத்த மாவீரரான மகாத்மா ஜோதிராவ் புலேயைக் கண்டு கொள்ளவில்லையே ஏன்? அவர் சூத்திர சாதியைச் சார்ந்தவர் என்பதாலா? இன்றும் நிலைமை சீர் பெறவில்லையே!

-----------------------------------------------------------

நவம்பர் 28, புலே மறைந்தநாள்

Pin It