இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையின ராகவுள்ள காங்கேசன் துறைத் தொகுதியில், சென்ற வாரம் நடைபெற்ற பார்லிமெண்டு இடைத்தேர்தல் முடிவு இலங்கைத் தமிழர்களின் கோரிக்கைகளை நியாயப்படுத்தியுள்ளது.

அத்தொகுதியில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற எஸ்.ஜே.வி. செல்வநாயகம் 1972இல் அப்பதவியை இராஜினாமா செய்தார்.

அவ்வாறு இராஜினாமா செய்ததற்கு அவர் சொன்ன முக்கியக் காரணங்கள் மூன்று :

1.            சிங்கள மொழிக்கு அளிக்கப்பட்ட அதே அந்தஸ்து தமிழ் மொழிக்கு அளிக்கப்படவில்லை.

2.            பௌத்த சமயத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதே உயர்நிலை மற்ற சமயங்களுக்கு வழங்கப்பட வில்லை.

3.            படிப்பிலும், உத்தியோகத்திலும் சிங்களவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள உரிமைகள் தமிழர்களுக்கு அளிக்கப்படவில்லை.

- என்கிற இந்த மூன்று நிலைமைகளையும் பாது காத்து, தமிழர்-சிங்களவரிடையே பேத நிலையை நிலைப்படுத்தி, தமிழர்களை இரண்டாந்தரப் பிரஜை களாக ஆக்கும் இலங்கை அரசியல் அமைப்புச் சட்டத் தை அடியோடு எதிர்க்கிறார், செல்வநாயகம்.

140 இலட்சம் மக்கள் தொகையைக் கொண்ட இலங்கையில் 31 இலட்சம் பேர் தமிழர்கள் ஆவார்கள்.

இலங்கையில் யாழ்ப்பாணத்திலுள்ள தமிழ் மக்கள் சுமார் ஓராயிரம் ஆண்டுக்கு முன் அங்குக் குடியேறிய தமிழர்களின் சந்ததிகளாவர்.

இலங்கையை வளம் கொழிக்கும் நாடாக மாற்றி யதில் தமிழர்களுக்குப் பெரும் பங்கு உண்டு.

இத்தனை உரிமைகளும் இருந்துங்கூட தமிழர்களின் கோரிக்கைகளை “வகுப்புவாதக் கோரிக்கைகள்” என்று பெயர் சூட்டித்தான் பண்டார நாயகா மறுத்து வருகிறார்.

காங்கேசன் துறைத் தொகுதித் தேர்தலில் செல்வ நாயகம் பெற்ற வெற்றியானது, “இலங்கை அரசியல் சட்டம் புறக்கணிக்கப்பட வேண்டும்” என்ற கோரிக் கைக்கு நல்ல வலுவை அளித்துள்ளது.

அதைத் தொடர்ந்து இலங்கை பெடரல் கட்சியா னது இன்னொரு பார்லிமெண்டு அங்கத்தினரின் பதவியையும் இராஜினாமா செய்ய ஏற்பாடு செய்து, அந்தத் தொகுதியிலும் இடைத்தேர்தல் நடைபெறச் செய்வதன் மூலம் - பெடரல் கட்சியின் கோரிக்கை களிலுள்ள நியாயத்தை மேலும் வற்புறுத்திக் காட்டத் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.

கடல் கடந்து வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு உள்ள சுதந்தர உணர்ச்சி, தமிழகத்தில் உள்ள நான்கு கோடித் தமிழர்களுக்கு இல்லாமல் இருப்பது ஏன்?

இந்தியாவின் வடகோடியிலுள்ள தில்லி தான் இந்தியாவின் தலைநகரம்; இந்தியா முழுவதற்கும் அரசியல் சட்டப்படி ‘இந்தி’ தான் ஆட்சிமொழி; தமிழகத்தில் கலெக்டர்களாகவும், உயர்நீதிமன்ற நீதிபதிகளாகவும் வருகிறவர்கள் தில்லியின் அங்கீகாரம் பெற்ற பிறகே அதிகாரிகளாக அமர்த்தப்படலாம்; அபரிமிதமான வரு மானம் தரக்கூடிய வரி இனங்கள் எல்லாம் தில்லிக்கு உரிமையானவை.

இப்படி எந்தத் துறையில் எடுத்தாலும் தில்லி - ‘எஜமான்’ அந்தஸ்தில் இருப்பதை, எதற்காகத் தமிழர் கள் பொறுத்துக் கொண்டு இருக்க வேண்டும் என்பது புரியவில்லை.

“தில்லியிலிருந்து பிரிந்து கொள்ள வேண்டும் என்ற கொள்கையைக் கொண்ட கட்சி அபேட்சகர்கள் தேர்தல்களில் போட்டியிட முடியாது” என்ற ஒரு சட்ட ஏற்பாடு 12 ஆண்டுகளுக்கு முன் இங்கு அமுலுக்கு வந்தது.

அதை அடுத்து 1967இல் நிறைவேற்றப்பட்ட, “சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்” என் பதன் மூலம் நாட்டுப் பிரிவினையை இலட்சியமாகக் கொண்ட கட்சிகள் அக்கொள்கையைப் பிரசாரம் செய்கிற காரியம் கூட, சட்டப்படி தண்டனைக்கு உரியதாக ஆக்கப்பட்டது.

அந்தச் சட்டத்தின் பிரிவு 10, 13 - ஆகியவற்றின் படி பிரிவினைக் கொள்கையைப் பிரசாரம் செய்கிற வர்கள் சிறைத் தண்டனைக்கும் அபராதத்திற்கும் உரியவர்கள் என்று ஆக்கப்பட்டுள்ளது.

இவ்வளவு கட்டுப்பாடுகளையும் ஏற்றுக்கொண்டு, “சுதந்தர இந்தியா” என்பதில், “அடிமைகள்” போல் அல்லது “இரண்டாந்தரக் குடிமக்கள்” போல தமிழர் கள் இருப்பது முறையா, சரியா என்பதை அனைவரும் சிந்திக்க வேண்டும்.

(“சிந்தனையாளன்”, 15-2-1975)