எந்தவொரு விடுதலைப் போராட்டத்திற்கும் அதன் அகக்காரணிகளும் புறக்காரணிகளும் சாதகமாக இருக்கும் போது மட்டுமே அந்தப் போராட்டம் வெற்றியடையும். இதற்கு எந்த நாட்டின் விடுதலைப் போராட்டமும் விதிவிலக்கல்ல.

எடுத்துக்காட்டாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தமிழீழ மக்கள் ஈக உணர்வும்,விடுதலை உணர்வும் கொண்டிருந்தனர். விடுதலைப் புலிகள் வீரஞ்செறிந்த ஆயுதப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருந்தனர். ஆனால், சர்வதேச நிலைமை அதற்கு சாதகமாக இல்லை.

catalonia 590

செப் 2011 அமெரிக்காவில் இரட்டைக் கோபுரம் தாக்கப்பட்ட பிறகு ஆயதந்தாங்கிய போராளி இயக்கங்கள் அனைத்தும் தடை செய்யப்பட்டன. உலக ஒழுங்கு வேறு வடிவம் எடுத்தது அது விடுதலை இயக்கங்களுக்கு சாதகமானதாக இல்லை.அது பாஸ்க் மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கும் தடைக்கல்லாக அமைந்தது. ETA வின் ஆயுதப் போராட்டம் கடுமையான நெருக்கடியைச் சந்தித்தது.
ETA வின் போராட்டத்திற்கு தளவாடங்கள் கொடுத்து முதலில் ஆதரவாக இருந்த பிரான்சு பிறகு ஸ்பெயினுடன் இணைந்து கொண்டு பாஸ்க் விடுதலைப் போராட்டத்தை எதிர்த்தது. ஏனெனில் E TA பிரான்சின் தென்மேற்குப் பகுதியையும் ஸ்பெயினின் வடக்குப் பகுதியையும் இணைத்துத்தான் அவர்கள் தனி நாடு கேட்டு வந்தார்கள்.

ETA வின் 40 ஆண்டு கால தொடர் போராட்டம், தொடர் ஆயுதத் தாக்குதல்கள் அம்மக்களையே சோர்வடைய வைத்து விட்டது.

ETA - வுக்கு ஆதரவாக இருந்த நாடுகளும் அந்த இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக அறிவித்துவிட்டன. இதனால் அந்த இயக்கத்திற்கான தளங்கள் முடங்கிப் போயின. வல்லரசு நாடுகள் தங்களுக்குள் ஒப்பந்தம் செய்து கொண்டு அரசியல் கைதிகளை அந்நாட்டிடம் ஒப்படைக்கத் தொடங்கின. இதனால் ETA - வின் அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களின் ஆயுதக் கிடங்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. எனவே, அரசியல் ரீதியாக ETA பலவீனமடையத் தொடங்கியது. ஸ்பெயினை எதிர்த்து போராடியது மட்டுமின்றி பிரான்சு அரசாங்கத்திற்கு எதிராகவும் போராட வேண்டியதாகிவிட்டது.

அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்கா மட்டுமின்றி ஐரோப்பிய நாடுகளும் பயங்கரவாதத்திற்கெதிரான போர் என்ற போர்வையில் தத்தமது நாடுகளில் இயங்கிக் கொண்டிருந்த இயக்கங்கள் மீது தடை விதித்தன். சூழலியலாளர்கள் உள்ளிட்டு கைது செய்து சிறையிலடைக்கப்பட்பட்டனர்.

ஐரோப்பிய நாடுகள் தங்கள் நாடுகளில் நடக்கிற போராட்டங்களை ஒடுக்குவதற்காக 'ஐரோப்பிய காவல் துறையையே ' உருவாக்கிக் கொண்டன.

குற்றங்களை விசாரிக்க ஐரோப்பிய நீதிமன்றத்தையும் அமைத்துக் கொண்டன். ஐரோப்பாவில் இருக்கக் கூடிய நாடுகளில் இனி ஒரு நாடு தனியாகப் பிரிந்து விடக் கூடாது என்பதில் இன்று வரை கவனமாக இருக்கின்றன.எனவே,விடுதலைக்காகப் போராடுகிற இயக்கங்களை ஒடுக்குவதில் தங்களுக்குள் இணைப்பை வைத்துக் கொண்டன. 'தளங்களை ' தங்கள் நாடுகளுக்குள் அமைத்துக் கொள்ளாதவாறு பார்த்துக் கொண்டன. பண பரிவர்த்தனைகள் தடுத்து விட்டன. இவையெல்லாம் பாஸ்க் இன மக்களின் விடுதலைப் போராட்டத்தை நலிவடையவிட்டது. அதிலும் மார்க்சியக் கண்னோட்டத்தில் ஏகாதிபத்திய எதிர்ப்பை உள்ளடக்கிய ETA இவ சும்மா விடுவார்களா ? எனவே, சுற்றி நின்று பாஸ்க் ஆயதப் போராட்டத்தை கடுமையாக ஒடுக்கினர். போராட்டத்தில் தோற்பதைவிட பின் வாங்குவதே சிறந்தது என்றடிப்படையில் ETA தன்னுடைய ஆயுதம் போராட்டத்தை கைவிட்டது. ஆனாலும் பாஸ்க மக்களின் விடுதலை உணர்வு வளர்ந்து கொண்டே தான் இருக்கிறது. உலகம் முழுவதும் விடுதலைக்காகப் போராடுகிற மக்களுக்கு இன்றும் ஆதரவை வழங்கிக் கொண்டு தான் இருக்கின்றனர். அதனால் தான் கட்டலோனிய மக்கள் ஒடுக்கப்படுவதை வேடிக்கை பார்க்காமல் அவர்களுக்காக பல்லாயிரக்கணக்கில் அவர்களால் அணிதிரள முடிகிறது

கட்டலோனியா கற்றுக் கொண்ட பாடம்

ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகள் உலகத்துக்கே ஜனநாயகத்தைப் போதித்து கொண்டிருப்பதாகப் பீற்றிக் கொள்வதெல்லாம் வெறும் வாய் சவடால் தான் என்பதை கட்டலோனியா புரிந்து கொண்டிருக்கும்.

ஐ.நா. அவை, ஒன்றிற்கு மேற்பட்ட தேசிய இனங்களை கொண்ட நாட்டிலிருந்து எந்தவொரு தேசிய இனமும் பிரிந்து செல்வதற்கு உரிமை உள்ள சுயநிர்ணய உரிமையை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது.அந்த சுயநிர்ணய உரிமையை சட்டப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு தான் எல்லா நாடுகளும் ஐ.நா அவையில் அங்கம் வகிக்கின்றன. அதற்கு ஸ்பெயின் விதிவிலக்கல்ல.

தான் ஏற்றுக் கொண்ட விதிமுறைகளுக்கு மாறாக தமது நாடுகளின் சுய நிர்ணய உரிமையை எந்தவொரு நாடும் அங்கீகரிப்பதில்லை.
கடந்த 10,15 ஆண்டுகளில் விடுதலை பெற்றுள்ள நாடுகளும் மிக எளிமையான முறையில் தங்கள் விடுதலையை சாத்தியப்படுத்திக் கொள்ள முடியவில்லை.
வல்லரசு நாடுகளின் வேட்டைக்காடாக இருக்கிற எந்தவொரு தேசிய இனத்தின் விடுதலையும் வல்லரசு நாடுகளின் ஆதரவு, எதிர்ப்பு நிலைகளிலிருந்தே தீர்மானிக்கப்படுகிறது,என்பதை கட்டலோனியாவுக்கு புரிந்திருக்கும்.

40 ஆண்டுகளாக ஆயுத போராட்டத்தை நடத்தி கொண்டிருந்த பாஸ்க் விடுதலை போராட்டத்தை ஒடுக்கிய ஸ்பெயினுக்கு கட்டலோனியா விடுதலை போராட்டத்தை நசுக்குவது மிக பெரிய வேலையாக கருதவில்லை. அதனால் தான், கட்டலோனியா விடுதலை பிரகடனத்தை அறிவித்த அடுத்த நாளே கட்டலோனிய நாடாளுமன்றம் ஸ்பெயின் பிரதமரால் கலைக்கப்படுகிறது.

கட்டலோனிய விடுதலை பிரகடனத்தை செய்தவர்களும் துணை நின்றவர்களின் மீதும் தேசத்துரோக குற்றசாட்டு பதிய படுகிறது. காவல்துறை அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்படுகின்றனர்.நீதிமன்றத்தில் நேர்மையாக விசாரணையை எதிர்கொள்ளச் சென்றவர்கள் சிறையில் அடைக்கபடுகிறார்கள். இப்படி ஸ்பெயின் கட்டலோனியா மீது அடக்கு முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது.

கார்லஸ் பியூஸ்மண்ட உள்ளிட்ட சில அமைச்சர்கள் மட்டும் பெல்ஜியத்தில் அரசியல் அடைக்கலம் புகுத்துள்ளார்கள்.

ஸ்பெயினில் பாஸ்க் இனமக்கள் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு கட்டலோனியாவுக்கு ஆதரவாக பேரணி நடத்தியுள்ளனர். மற்றபடி குறிப்பிடத்தக்க அளவில கட்டலோனியாவுக்கு ஆதரவாக சர்வதேச அளவில் பெரும் போராட்டம் நடந்தது போல் நமக்கு தெரியவில்லை.

இப்படியான நிலையில் ஸ்பெயின் நியாயமான முறையில் நீதி விசாரனை நடத்தினால் அதை சந்திக்க தயாராக இருப்பதாக கட்டலோனிய பிரதமர் கார்லஸ் பியூஸ் மண்ட் அறிவித்துள்ளார். ஒருவேளை அவர்கள் ஸ்பெயினிடம் சரணடைந்தால் நிச்சயம் தண்டனைக்குள்ளாவர்கள் அல்லது கட்ட லோனிய போராட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்தால் ஒரு வேளை மன்னிப்பு வழங்கப்படலாம். இதனாலெல்லாம் கட்டலோனிய மக்களின் விடுதலை உணர்வைக் குறைத்து விட முடியாது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள கட்ட லோனியத் தலைவர்களை விடுதலை செய்யக் கோரி பார்சிலோனா வில் பல லட்சம் மக்கள் பேரணி நடத்தியுள்ளனர். எனவே, இனி வரும் காலங்களில் விடுதலைக்கான போராட்டம் அதிகமாகுமே தவிர குறையாது.

முதலாளித்துவ சட்டங்களுக்கு உட்பட்டு தனக்கான விடுதலையை பெற முடியாது என்பது தான் கட்டலோனியா பெற்றிருக்கும் பாடம்.ஏனெனில் முதலாளித்துவ சட்டம் "சுண்ரடலை "அடிப்படையாக கொண்டதே தவிர "சுதந்திரத்தை" அடிப்படையையாக கொண்டது அல்ல.சுதந்திரத்தை விரும்புவதும் சுரண்டலை ஒழிப்பதும் பாட்டாளி வர்க்கத்தின் கைகளில் தான் உள்ளது.

முதலாளித்துவத்திற்க்கெதிரான அரசியல் வர்கத்தை கட்டலோனியா கையிலெடுக்கவேண்டும்.தேசிய - சர்வதேசிய அரசியல் அமைப்பியல் உறவுகளை உருவாக்கி கொள்ள வேண்டும். உலகெங்கும் போராடுகிற முற்போக்கு சக்திகள் தான் தனக்கான நட்பு சக்திகள் என்பதையும் கட்டலோனியா மக்கள் உணர்ந்திருப்பார்கள்.

வல்லரசியங்கள் எப்போதும் பகை சக்திகள் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.தேசிய இன விடுதலை போராட்டத்தை வர்க்கக் கண்ணோட்டத்தோடு நடத்த வேண்டும். அந்த புரிதல் இருந்ததால்தான் பாஸ்க் விடுதலை இயக்கம் விடுதலைப் புலிகளின் போராட்டத்தை ஆதரிகின்றனர். எனவே, பாஸ்க் மக்களின் போராட்டப் படிப்பினையும் உலகெங்கும் நடக்கும் விடுதலை போராட்டங்களை உள்வாங்கி தனக்கான அரசியல் திட்டத்தை வகுத்து பாட்டாளி வர்க்க கண்ணோட்டத்தில் விடுதலை போராட்டத்தை முன்னெடுப்பதே கட்டலோனியா கற்று கொள்ள வேண்டிய பாடம். தமிழகமும் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.

(முற்றும்)

- க.இரா.தமிழரசன்

Pin It