14.4.2015 அன்று இரவு 8.30 மணியளவில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்-பாவேந்தர்-பாரதிதாசன் 125ஆவது பிறந்த நாள் கூட்டம் அம்பத்தூர் பெரியார் ஈ.வெ. இராமசாமி-நாகம்மை கல்வி ஆராய்ச்சி அறக் கட்டளையில் முடித்துவிட்டு மகிழுந்து மூலம், நானும் கோ.மு. கருப்பையாவும், புலவர் செந்தலை ந. கவுதமன் அவர்களும் திருவல்லிக்கேணிக்கு வந்து கொண்டிருந்தோம்.

அப்பொழுது நான் சேலம் எம். இராசு அவர்கள் என்னிடம் கூறிய ஒரு செய்தியை நண்பர்களிடம் சொன்னேன். அந்தச் செய்தி “ஒரு திருமணத்தில், பெரியார் அவர்கள் உணவு உண்ட பிறகு கை கழுவச் சென்றார். அருகில் இருந்தவரிடம் தண்ணீர் ஊற்றச் சொன்னார். அவரும் ஒரு குவளை நிறைய இருந்த தண்ணீரை ஒரேயடியாக ஊற்றிவிட்டார். கழுவின கையால் தண்ணீர் ஊற்றியவரை, கன்னத்தில் அறைந்துவிட்டார். காரணம் தெரியாத அவர் பயந்து பயந்து பெரியார் அருகில் சென்று, ‘அய்யா நான் என்ன தவறு செய்தேன்?’ என்று கேட்டார்.”

உடனே பெரியார், “நெய் கிடைக்கும்; தண்ணீர் கிடைக்காது; சிக்கனமாக தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும்” என்று சொன்னார் என்பதை, சேலம் எம். இராசு அய்யா கூறினார்.

அன்று பெரியார் சொன்னது, இன்று பால் விலையும் தண்ணீர் விலையும் போட்டி போட்டுக் கொண்டு தான் உள்ளன என்று நான் கூறினேன்.

புலவர் செந்தலை ந. கவுதமன் அவர்களும் நான் கண்ட இரு சிந்தனைச் செய்திகளைக் கேளுங்கள் என்று சொன்ன செய்திகள் :

செய்தி 1 : கோவை Sarvajana பள்ளியில் கல்வியாளர் தமிழறிஞர் ச.சி. இராசகோபால் பணியாற்றிய போது மாவட்டக் கல்வி அலுவலர் பார்வையிடப் பள்ளிக்குச் சென்றுள்ளார். பார்வைகளை முடித்துவிட்டுப் புறப்படும் பொழுது, இளையவனாக இருந்த என்னைக் குறிப்பிட்டு, ‘இவரை என் வீட்டுக்கு அனுப்புங்கள், சில பொருட்கள் வாங்க வேண்டும்; சில பணிகள் செய்ய வேண்டும்’ என்று சொன்னார். உடனே கல்வியாளரான ச.சி. ரா. அவர்கள், “வேறு ஆளை வைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள். அப்படியே அதற்குண்டான உங்கள் செலவுத் தொகையையும் குறித்துக் கொடுங்கள்; நானே கொடுத்து விடுகிறேன்; என்னிடம் பள்ளியில் வேலை செய்யும் எவரையும் அனுப்ப முடியாது” என்றார். “அன்றிலிருந்து அந்த மாவட்டக் கல்வி அலுவலர் எவரிடமும் இதுபோன்று நடந்துகொள்ளவில்லை” என்று புலவர் செந்தலை ந. கவுதமன் கூறினார்.

செய்தி 2 : ஒருமுறை ச.சி. இராசகோபாலன் அவர்கள் கல்வி அமைச்சர் அவர்களின் நேர்முகச் செயல் உதவியாளரைக் காணச் சென்றார். அப்படிச் சென்ற பொழுது உதவியாளரின் எதிரே இருந்த இருக்கையில், சென்றவுடன் உட்கார்ந்துவிட்டார். உடனே செயல் உதவியாளர், ‘நான் உங்களை உட்காரச் சொல்லவில்லையே’ என்று கூறினார். உடனே ச.சி. இரா. அவர்கள், ‘நாகரிகம் தெரிந்தவர்கள் எவரும் இப்படிக் கேட்க மாட்டார்கள்’ என்றார். அன்று முதல் எவர் வந்தாலும் அந்தச் செயல் அலுவலர், ‘உட்காருங்கள், உட்காருங்கள் என்று இருமுறை கூறுவார்’ என்று புலவர் செந்தலை ந. கவுதமன் கூறினார்.

மேற்கண்ட செய்திகளைக் கேட்டுக்கொண்டே மகிழுந்து ஓட்டுநர், அய்யா இப்படி நாகரிகங்களை நறுக்கென்று கற்றுக் கொடுத்து பாடம் புகட்டியவருக்கு, இப்பொழுது வயது என்ன என்று கேட்டார். “90க்கு மேல் இருக்கும்; சென்னையில் இருக்கின்றார். ஆண்டு தோறும் சிந்தனையாளன் பொங்கல் மலருக்குக் கல்வி வளர்ச்சிக்குண்டான கட்டுரைகளை எழுதிக் கொடுக்கின்றார்” என்று புலவர் செந்தலை ந. கவுதமன் கூறினார். நாங்கள் இறங்குமிடம் சேப்பாக்கம் வரை பேசிக் கொண்டு வந்ததை ஓட்டுநரும் மகிழ்ந்து கேட்டு வந்தார். நன்றி சொல்லி விடைபெற்றார்.

உடனிருந்து செய்திகளைக் கேட்டது உழவர் மகன் ப.வ.

Pin It