மறைநூலே சுருதியென்றும் அறவொழுக்கே
(சு)மிருதியென்றும் உணர்வீரே. உலகியல்தன்
அறிவுகொண்டு இவ்விரண்டும் ஆய்தல் வேண்டாம்.
அறிந்த நூலின் அறிவாலும் தருக்கத்தாலும்
செறிவாகப் பகுத்தாய்ந்து இவ்விரண்டும்
செம்மையில்லை என்றவமதிப்போன் இங்கே
நெறியில்லா நாத்திகனாய்க் குமுகத்தாலே
நீக்கற்கு உரியவனாய் ஆவான் காண்க.
(மனுநீதி. அத்தியாயம் 2, கூற்று 10, 11)
பெரியாரை எம் குமுகம் ஒதுக்க ஆமோ?
பேரழிவின் ஆரியத்தை உடனொதுக்கச்
சரியாகத் தமிழினத்தைப் புதுக்கி வைத்தார்.
சலியாத அவருழைப்பால் உழைக்கும் சாதி
அரிமாவின் நடைவீச்சை உள்வாங்கிற்று.
ஆளுயர்த்தும் மானத்தை மூச்சாக்கிற்று
நரிமாவின் கூட்டத்து எதிர்ப்பாயிற்று
நல்விளைவுப் பகுத்தறிவைப் பயிராக்கிற்று.
நாத்தழும்பேறப் பெரியார் நாத்திகத்தை
நாடெங்கும் பேசி ஆத்திகத்தின் மண்டை
மாத்தழும்பேறச் சாடிக் கொண்டிருந்தார்.
மறை மிருதியில் மண்டிக்கிடந்த கீழ்மைச்
சாத்தழும்பைச் சுட்டியவாறு வலம் வந்தார்.
சாதிமதச் சம்மட்டி கொண்டடித்த
தீக்கொழுப்பின் ஆத்திகத்தை நாத்திகத்தின்
தீத்தெறலாய்த் தாக்கினாரே எரித்துக் காட்டி
ஆளுக்கோர் நீதி சொல்லும் மனுவின் நூலும்
ஆரியச் செல்லுமரித்த தமிழினத்தைத்
தோளுயர்த்தி மீட்டிட ஈராயிரத்துத்
தொல்லாண்டுக் கனவாகப் பெரியார் தோன்றி
“நாலைந்து நூற்றாண்டாய் மிதிபட்டோனே!”
நடுக்குறுத்தும் பகுத்தறிவுப் படையாம் கூர்மை
வாளெடுத்துச் சுழற்று; சூழ்ந்த ஆர்ய மாயை
வீலிட்டு வீழுமடா மிதிடா” என்றார்.
காளான்போல் சூத்திரரை மிதித்திருந்த
கடுந்திமிரின் ஆரியத்தைக் களிறு போலக்
காலால்தான் அவர் உதைத்திருக்காவிட்டால்
‘கால்சாதி’ தலைநிமிர்ந்து ஏற்றங்கண்டு
மேலாண்மை ஆட்சி எய்தி இருக்க ஆமோ?
வேளைக்கோர்(பச்) ஓந்தியாகும் ‘ரசினி காந்தன்’
ஓலைப் புழுவாய்ப் பெரியார் மீது ஊர்ந்தான்.
ஓங்குதீயாய்த் தமிழினமே சுடமாட்டாயோ?