கோயில்களில் பெண்களைப் பொட்டுக் கட்டு வதைத் தடுக்கச் சட்டம் செய்ய வேணுமாய் திருமதி. முத்துலட்சுமி அம்மாள் அவர்களால் சட்டசபைக்கு அனுப்பப்பட்டிருக்கும் சட்டத்தைச் சர்க்கார் நமக்கு அனுப்பி, அதன்மீது நமது அபிப்பிராயம் கேட்டிருக்கின்றார்கள்.

இதற்காகச் சர்க்கார் பொதுஜனங்களின் அபிப்பிராயம் கேட்பது என்பது கோமாளித்தனம் என்பதே நமது அபிப்பிராயம். ஏனெனில், கோவில்களில் கடவுள்கள் பேரால் பெண்களுக்குப் பொட்டுக்கட்டி அவர்களையே பொதுமகளிர்களாக்கி நாட்டில் விபசாரித்தனத்திற்குச் செல்வாக்கும் மதிப்பும், சமய சமூக முக்கிய தானங்களில் தாராளமாய் இடமும் அளித்துவரும் ஒரு கெட்டவழக்கம் நமது நாட்டில் வெகுகாலமாய் இருந்து வருகின்றது. அன்றியும், நாளாவட்டத்தில் இது ஒரு வகுப்புப்கே உரியது என்பதாகி, இயற்கையுடன் கலந்த ஒரு தள்ள முடியாத கெடுதியாய் இந்தநாட்டில் நிலைபெற்றும்விட்டது.

ஒரு நாட்டில் நாகரிகமுள்ள அரசாங்கமாகவாவது அல்லது நாட்டின் சுயமரியாதை யையோ, பிரஜைகளுடைய ஒழுக்கத்தையோ, நலத் தையோ, கோரின அரசாங்கமாகவாவது ஒன்று இருந்தால் இந்த இழிவான கெட்ட பழக்கம் கடவுள் பேராலும், மதத்தின் பேராலும், சமூகத்தின் பேராலும், தேசிய வழக்கத்தின் பேராலும் இருந்துவர ஒருகண நேரமும் விட்டுக் கொண்டு வந்திருக்காதென்று சொல்லுவோம்.

ஆனால், நமது இந்தியாவில் வெள்ளைக்கார ஆட்சி குடிபுகவும் நிலைபெறவும், நம் நாட்டுச் சுயநலப் பார்ப்பனர்கள் உளவாளிகளாகவும், உதவியாகவும் இருந்து வந்ததால், அப்பார்ப்பனர்களுக்கு அனுகூல மாக வெள்ளைக்காரர்களும் இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருந்ததால், அந்தப் பார்ப்பனர்கள் சொல்லுகின்றபடியே நடந்து (வெள்ளைக்காரர்கள்) தங்கள் காரியத்தைச் சாதித்துக் கொள்ள வேண்டிய அவசியத்தில் பட்டுவிட்டார்கள்.

இந்தக் காரணங்களால் அவர்கள் பார்ப்பனர் களுக்கு விரோமாய்ச் சீர்திருத்தத் துறையிலாவது, மனிதத்தன்மைத் துறையிலாவது இதுவரை ஒருவித முற்போக்கான காரியமும் செய்யாமலே இருக்க வேண்டியவர்களாகிவிட்டார்கள். ஆனால், இப்போது கொஞ்சகாலமாய் அப்பார்ப்பனர்களின் தந்திரத்தையும் சூழ்ச்சியையும் கண்டுபிடித்து அவர்களது யோக்கிய தைகளை அடியோடு வெளியாக்கி சீர்திருத்தங்களை உத்தேசித்து நாமும் வெள்ளைக்காரர்களை மிரட்டக் கூடிய சமயம் மிரட்டியும், ஆதரிக்கக்கூடிய சமயம் ஆதரித்தும் பார்ப்பனர்களின் செல்வாக்கை ஒழித்து நமது சக்தியையும் தீவிர ஆசையையும் காட்ட ஆரம் பித்துவிட்டதால், இப்போது ஏதோ சிறிது அளவுக்காவது சர்க்காரார் சீர்திருத்தத் துறையில் நமது இஷ்டத்திற்கும் இணங்கும்படியான நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.

இந்த நிலைமையின் பலனேதான் இப்போது நமது கொள்கைகள் சிலது நாட்டில் பிரச்சாரம் செய்ய வும் செல்வாக்குப் பெறவும் இடம் ஏற்பட்டதும், சட்ட சபையில் இதுசமயம் ஒரு முடிவைப் பெற்றுத் தீர வேண்டிய அவசியம் ஏற்பட்டுப் பொதுஜன அபிப் பிராயத்திற்கு வரநேர்ந்ததுமாகும்.

நிற்க. இப்போது திருமதி. டாக்டர் முத்துலட்சுமி அம்மாள் அவர்களால் சென்னை சட்டசபைக்கு அனுப்பப் பட்டிருக்கும், பொட்டுக்கட்டுவதை ஒழிக்கும் இந்த மசோதாவானது, வெகுகாலமாகவே, ஜனப்பிரதிநிதிகள் என்பவர்களால் பொதுக்கூட்டங்களிலும், பொது மகா நாடுகளிலும் கண்டித்துப் பேசப்பட்டிருப்பதுடன், இம் மாதிரி ஒரு சட்டம் செய்ய வேண்டுமென்று இந்திய சட்டசபைக் கூட்டங்களிலும் அடிக்கடி பிரதாபிக்கப்பட்டும் வந்திருக்கின்றது. இவ்வாறெல்லாமிருக்க, இச்சட்டத் திற்குப் பொதுஜன அபிப்பிராயத்தை அறிய விரும்பு வானேன்? என்பது விளங்கவில்லை. இந்த நாள்பட்ட-கொடிய சமூகக் கொடுமையை ஒழிக்க யாருக்கும் ஆட்சேபணையோ, எதிர் அபிப்பிராயமோ இருக்கவே முடியாது, இந்தியத் தலைவர்கள் கூறியிருப்பதுபோல், தேவதாசி என்று ஒரு வகுப்பு இருப்பது இந்து சமுதாயத்திற்கே இழிவானது மல்லாமல், இந்து மதத்திற்கே பெரும் பழியுமாகும்.

ஒரு தனிப்பட்ட பெண்ணுக்கு ஏற்படும் இழிவு, பெண்ணுலகிற்கே ஏற்பட்டதாகுமாகையால் இவ்வழக் கம் பெண்களின் அந்தஸ்தையும், கவுரவத்தையும் பெரிதும் பாதிக்கக் கூடியதாயிருக்கிறது. அன்றியும் ஒரு குறிப்பிட்ட சாதியையோ, சமூகத்தையோ, விபச்சாரத்திற்கு அனுமதி கொடுப்பதும், பின்னர்  அவர்களை இழிந்த சமூகமாகக் கருதுவதும் பெரும் சமூகக் கொடு மையாகும். சிறு குழந்தைகளிலிருந்தே இத்தகைய துராசார வழிகளில் பயிற்றுவிப்பது ஜனசமூக விதிகளையே மீறியதாகும். எனவே இப்படிப்பட்ட நிலை மையில் இனி இதைப்பற்றி பொது ஜனங்களுடைய அபிப்பிராயத்தைத் தெரிய வேண்டிய அவசியமே இல்லை.

பொதுஜனங்கள் எந்தவிதத்திலாவது இந்தச் சட்டத்தை ஆட்சேபிப்பார்களா என்று எண்ணுவதும் ஒன்று முட்டாள்தனமாகவோ அல்லது யோக்கியப் பொறுப்பற்றத் தன்மையாகவோதான் இருக்க வேண்டும். ஏனெனில் இந்து சமூகத்தில் கடவுள் பேரால், மதத்தின் பேரால் விபச்சாரிகளை எற்படுத்த வேண்டும் என்று எந்த சமூகத்தாரோ, தேசத்தாரோ கருதுவார்ளானால், அவர்களைப் போல் காட்டுமிராண்டிகளோ கெட்டவர்களோ இருக்கவே முடியாது.

மற்றபடி எந்த சமூகமாவது இம்மாதிரியான தொழில் தங்கள் வகுப்புக்கு இருக்க வேண்டுமென்று கேட்பார்களேயானால் அவர்களைப்போல் சுயமரியாதையற்றவர்களும் இழிகுலமக்களும் வேறு யாரும் இருக்க முடியாது.

- “குடிஅரசு”, 23.03.1930

Pin It