சென்னையில் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் பெரியார் ஈ.வெ.ரா.வின் முழக்கம்

13.11.1938ஆம் நாள் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் ஈ.வெ.ரா. ஆற்றிய உரை வருமாறு :

“தலைவர் அவர்களே! தாய்மார்களே!

இத்தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாட்டில், உங்கள் முன்னால் பேச சந்தர்ப்பம் கிடைத்தது பற்றி உண்மை யிலேயே பெரு மகிழ்ச்சியடைகிறேன். சமுத்திரம் போல் பெண்கள் கூடியுள்ள இந்தக் கூட்டத்தைப் பார்க்க என் மனமே ஒருவித நிலை கொள்ளா மகிழ்ச்சியடை கிறது.

இவ்வளவு பெரிய ஒரு பெண்கள் கூட்டம் சென் னையில் வரும் என நான் நினைக்கவில்லை. சென் னையைப் பற்றி நான் சில சமயங்களில் பரிகாசமாய் நினைப்பதுண்டு. என்னவென்றால் சென்னை மூடநம் பிக்கைக்கு இருப்பிடமானது என்று நான் சொல்லு வதுண்டு. இதை நான் அடிக்கடி பத்திரிகை யிலும் எழுதி வந்திருக்கிறேன். சென்னையிலுள்ள எனது சில தோழர்களுக்கு நீங்கள் மூடநம்பிக்கையை விடுங்கள், பகுத்தறிவுடன் வாழுங்கள் என்று கூறுகின்ற காலத் தில், அவர்கள் ‘நீங்கள் சொல்வதெல்லாம் சரி என்றும், அவற்றை அப்படியே ஒப்புக்கொள்வதாகவும், ஆனால் தங்கள் வீட்டில் உள்ள பெண்கள் ஒப்புக்கொள்ளமாட் டேன் என்கிறார்களே என்றும், உங்களை இழித்துக் கூறி உங்கள் மீது பழியைப் போட்டதை நான் பல தடவை கேட்டிருக்கிறேன்.’ அதனால்தான் வெளி ஜில்லாக் களைப்போல் சென்னையில் பகுத்தறிவியக்கக் கொள் கைகள் அவ்வளவு அதிகமாக இல்லையோ என்றும் கருதுவதுண்டு, ஆனால் இன்று இப்பெண்கள் மாநாட் டையும், இன்றுள்ள உணர்ச்சியையும் ஊக்கத்தையும், இங்கு நடந்த உபந்யாசங்களையும் தீர்மானங்களை யும் பார்க்கும்போது, எனக்கு ஒரு புதிய எண்ணம் தோன்றுகிறது. அதாவது சென்னை பெண்மக்கள் ஆண் களைவிட எந்த வகையிலும் பின்னடைந்தவர்களல்ல என்பதைக் காட்டுகிறது.

இங்கு நான் அநேக வயது சென்ற பெண்களைக் காண் கின்றேன். அவர்களது ஊக்கம் எனக்குப் பெரிய தொரு வெளிச்சத்தையும் தைரியத்தையும் கொடுக் கிறது. சென்னை தாய்மார்களுக்கு இப்படிப்பட்ட உணர்ச்சி ஏற்பட்டதற்கு முக்கிய ஆதாரம் எனது பழம்பெரும் தோழ ராகிய கனம் ஆச்சாரியாருடைய பெருங்கருணையே ஆகும். இதற்காக அவருக்கு நான் உள்ளம் நிறைந்த நன்றி செலுத்துகிறேன். பின்னும் இக் கிளர்ச்சியும் உணர்ச்சியும் மேலும் மேலும் வளர வேண்டுமானால் இன்றைய அடக்குமுறை ஆட்சி யை இதுபோலவே குறைந்தது இன்னும் ஒரு வருடத்திற்காவது நடத்தி உதவ வேண்டுமென்று எனது அருமைத் தோழர் ஆச்சாரியாரை மற்று மொருமுறை வணக்கமாகக் கேட்டுக் கொள்ளுகிறேன்.

உண்மையில் இன்றைய தமிழ் நாட்டுப் பெண்கள் மாநாட்டில் பெண் கள் பிரதிநிதித்துவம் வழிந்தோடு கின்றது. அநேக பிரபல பெண்கள் கூடியிருக்கிறீர்கள். பல அருமையான தீர்மானங்களையும் செய்தீர்கள்.

ஆனால் நான்கு நாட்களுக்கு முன்பு உலகந்தெரி யாத சில பெண்கள் கூடிக்கொண்டு இந்திய மாதர் சங்கம் என்னும் பேரால் ஒரு அறையில் உட்கார்ந்து கொண்டு இந்நாட்டு மக்களபிப்பிராயத்துக்குத் நேர் மாறாக இந்தியை ஆதரித்துத் தீர்மானங்கள் நிறை வேற்றியிருக்கின்றனர் என்பதாகத் தெரிகிறது. இதற்கு நமது எதிரிகள் பத்திரிகைகள் பிரமாதமாகப் பெருக்கி விளம்பரப்படுத்தியிருக்கின்றன. அது எதற்காகச் செய்யப் பட்டது என்றால், இம்மாநாடு கூடப் போவது தெரிந்து இம்மாநாட்டுத் தீர்மானங்களை அசட்டை செய்யச் செய்வதற்காகவும், இங்கு செய்யப்படும் தீர்மானங்கள் சரியான பிரதிநிதித்துவம் பெற்றதல்லவென்று கருதும் படி செய் வதற்காகவும், நமது சுயமரியாதைக்குக் கேடு சூழவும் கூட்டப்பட்ட ஒரு சூழ்ச்சி மாநாடு ஆகும். நம்மி டையில் (தமிழர்களிடத்து) ஒற்றுமை இல்லாததால் அவர்கள் யாரோ அகவிலை அறியாத இரண்டு பெண் களைக்கொண்டு நம்மைக் கேலி செய்யவும், தாழ் வாக நினைக்கவும் இடம் உண்டாக்கப் பார்க்கிறார்கள்.

வடமொழிச் சார்புடையது - ஆரியக் கலைகளுக் காக இருக்கிறது என்றும் அவர்களாலேயே ஒப்புக் கொள்ளப்பட்ட இந்தி என்கின்ற ஒரு மொழியை நம் குழந்தைகளுக்குப் புகட்டி நம்மக்கள் தம் மானத்தை மாசுபடுத்தும் ஒரு சூழ்ச்சியை எதிர்ப்பதற்காக நாம் இங்கு கூடினோம். நம்மில் பல கருத்துக்காரர்களிருக் கலாம். சைவ வைணவ மதக்காரர்களிருக் கலாம், முஸ்லிம், கிறித்துவர்கள் இருக்கலாம், மேல்சாதி, கீழ் சாதிக்காரர்கள் என்பவர்களிருக்கலாம், எந்த மதத் தையும், சாதியையும் நம்பாதவர்களுமிருக்கலாம்.

எனவே நம்மில் ஒருவருக்கும் தீங்கு வராத நிலையில் ஒரு குறிப்பிட்ட கொள்கைக்காக நாம் ஒன்றுசேர்ந்து பாடுபட வேண்டுவது இன்றியமையாத தாகும். நம் தாய்மொழி மீதுள்ள பற்று காரணமாகவே நம் மானத்துக்கு ஏற்றவைகள், உணர்ச்சிகள் காரண மாகவே நாம் இன்று ஒன்றுகூடியுள்ளோம். உண்மை யிலேயே ஒருவனுக்கு நாட்டுப்பற்று உண்டானால் - மொழிப்பற்று உண்மையில் ஏற்படுமானால் அதனை கனம் ஆச்சாரியார் அடக்க நினைப்பாரானால் அது ஒரு நாளும் முடியாத காரியமாகும். அதற்கு மாறாக பற்றும், உணர்ச்சியும் வளரத்தான் செய்யும். மேலும் அவர் கடினமான அடக்குமுறைகளைக் கையாளுவாரானால் அதனால் தமிழர்கள் மனங்கொதிப்படையுமானால் அது எங்குபோய் நிற்கும் என்பதைச் சொல்வதற்கில்லை. அது தமிழர்களிடத்திலும் ஏன் ஹிட்லருணர்ச்சியை உண்டாக்காது எனக் கேட்கிறேன். எதற்காக இந்த அடக்குமுறை?

இன்று 400 பேர் சிறை சென்றதைப் பாராட்டி நீங்கள் தீர்மானம் நிறைவேற்றிய போது உண்மை யிலேயே எனக்குப் பரிகாசமாயிருந்தது. ஆண்கள் சிறை செல்வதில் அதிசயம் ஒன்றும் இல்லையே! ஆண்கள் சென்றதைப்பற்றி நீங்கள் பாராட்டிவிட்டால் நீங்கள் வீரப்பெண்மணிகள் என்று அர்த்தமா? நீங்கள் 400 பேர் சிறை சென்று அதை ஆண்கள் அல்லவா பாராட்ட வேண்டும்? நீங்கள் ஏன் செல்லக்கூடாது? இது கனம் ஆச்சாரியார் கோவில் பிரவேச விஷயத்தில் திருவிதாங்கூர் ராஜாவைப் பாராட்டி விட்டு தோழர் எம்.சி. ராஜாவை ஏமாற்றிவிட்டது போலல்லவா இருக் கிறது (சிரிப்பு). இன்று ஒரு அம்மையார் என்னிடம் வந்து தான் சிறைக்குப் போகத் தயார் என்றார். அந்தப் பேச்சு எனக்கு மகிழ்ச்சியாயிருந்தது.

ஆனால் அது நாளைக்குத் தெரியப் போகிறது. அக்காலம் அதாவது, தமிழ்ப் பெண்களை சிறைசெல் லும் காலம் வந்தால்தான் நமக்கு நன்மையுண்டாகும். மாநாட்டுத் திறப்பாளர் முற்காலப் பெண்களின் வீரத்தைப் பற்றிப் பெருமையாகப் பேசினார். நான்கூட அப்போது அக்காலத்தில் ஒரு பெண்ணாய்ப் பிறந்திருந் தோமா என்று கூட நினைத்தேன், அவ்வளவு பெருமை யாய்ப் பேசினார். ஆனால் பழம் பெருமைப் பேசிப் பயனென்ன? இது பார்ப்பனர் பேசுவதுபோல்தானே இருக்கிறது. இன்றைய பெண்களைப் பற்றியும் அவர்கள் கடமையைப் பற்றியும் பேசினால்தான் நீங்கள் உரிமை பெறலாம்-நன்மை அடையலாம். பெரியவர்கள் தேடி வைத்த சொத்தைக் கொண்டு எவ்வளவு நாளைக்குப் பிழைக்கலாம்? நமது வாழ்வுக்கும் வகைக்கும், இன்னல்கbல்லாம்-பெண்கள் முன்னேற்றத்திற்கும் வீரத்திற்கும்-இம்மாநாடு ஒரு வழி காட்டிவிட்டது.

பார்ப்பனர்கள் ஊர் பெயர் தெரியாத பெண்களைப் பிடித்துத் தங்களைப் பற்றியே தங்களுக்கு தெரியாத பெண்களைப் பிடித்தும் படம்போட்டு விளம்பரப்படுத்தி பட்டம் பதவி வாங்கிக்கொடுக்கின்றனர். உண்மையாக எத்தகைய கஷ்டங்களையும் அனுபவிக்கத் தயாராக உள்ள-நாட்டு நலனுக்குப் பாடுபடக்கூடிய பல பெண்கள் நம்மில் இருக்கின்றார்கள். ஆனால் நம் ஆண்கள் அவர்களை வெளியில் விடாது வீட்டிற்குள்ளேயே அடைத்து வைக்கின்றனர்.

நமது நண்பர்கள் கனம் ராமநாதனுக்கும் கனம் சுப்பரா யனுக்கும் பல ஊர்களில் எத்தனையோ பார்ப்பனப் பெண்கள் கார் ஓட்டினர். அதற்காக எந்தப் பெண்ணை அவர்கள் தள்ளிவிட்டனர்? யார்மீது அவர் கள் குறை கூறினார்கள்? பெண்களாகிய நீங்கள் தலை நிமிர்ந்து “எங்கள் உரிமையில் தலையிட்டால் நாங்கள் சும்மாயிரோம்” என்றால் என்ன? இதைவிட்டு அல்லிராணி, கண்ணகி, மாதவி முதலிய நமது பாட்டிமார்களைப் பற்றிப் பெருமை பேசுவதில் என்ன பலன் இருக்கிறது? ஆணுடன் பெண்களும் ஒத்துழைத்துப் போராட முன்வரவேண்டும். போராட்டத்தில் ஆணுக்கு ஒரு வேலை, பெண்ணுக்கு ஒரு வேலை என்று இல்லை. இருவரும் சமமே. ஆகவே ஆண்களைப் போல் பெண்களும் தமிழ்ப் போராட்டத்தில் இறங்கினால் கூடிய சீக்கிரம் தமிழ்நாடு தமிழனுக்கே ஆகிவிடும்.

நீங்கள் எல்லோரும் சேர்ந்து ஏன் சிறையை நிரப்பக் கூடாது? சிறை என்றால் பயமா? அதற்காக யாரையாவது அடிக்கவோ வையவோ வேண்டிய தில்லை. எந்தச் சட்டத்தையும் மீறவேண்டியதில்லை. காங்கிரஸ் பேரால் சட்டம் மீறியவர்கள் பிரதிநிதிகளாக சட்டப் பாதுகாப்பாளர்களாகி விட்டார்கள். ராஜத்து வேஷம் எனது மதம் என்றவர்கள் மகாத்மாக்களாகி விட்டார்கள். நாம் அப்படிக் கூடச் செய்ய வேண்டிய தில்லை. தமிழ் வாழ்க! என்றால் சிறை பிடிப்பார்கள். இந்தி வீழ்க! தமிழ் வாழ்க! என்றால் போதும். உடனே ஆச்சாரியார் சிறைக்கு வா என அழைத்துக் கொள்வார் (கைதட்டல்). எனக்கு ஒரு பயம்! என்னவென்றால் எங்கே அவர் பின்வாங்கி விடுவாரோ என்று. முதலில் நான்கு பேர் போனால், பின்னால் அவர் பிடிக்கிறாரா என்று பார்த்து பிறகு 8, 10, 100, 1000 என்று போக வேண்டும். நமக்கு ஏற்படும் வேதனைக்கோ, தொல் லைக்கோ எல்லையில்லை. இந்நிலையில் நீங்கள் சொல்வதைக் கேட்காது - நாட்டுக்குப் பாடுபடாது ஆண் கள் உங்கள் கிட்ட வருவார்களானால் ரோஷம் இருக்கும் இடம்பார்த்து அவர்களைக் குத்தவேண்டும். வீட்டிற்குள்ளே அனுமதிக்கக் கூடாது. கதவை மூடிவிட வேண்டும். இதேபோல் அநேக நாடுகளில் பெண்கள் தங்கள் கணவர்களை இடித்துப் திருத்தியதாகச் சரித் திரம் கூறுகின்றது. அநேக ஆண்கள் நீங்கள் சிறைக் குப் போவதைக்காண பயப்படுகிறார்களாம். அவர்க ளைத் திருத்த வேண்டுமானால் நீங்கள் ஏதாவதொரு ஊருக்குப்போவதாக வீட்டில் சொல்லிவிட்டு அவர்கட் குத் தெரியாது சிறைக்குப் போய்விட வேண்டும். அப்படிச் செய்தால் அவர்களும் பின்வந்துவிடுவார்கள். நம்மில் சாதி மத உயர்வுகளையும், சுயநலத்தையும் மறக்கவேண்டும்.

இங்கு ஒரு தோழர் (பெயர் கூற ஆசைப்பட வில்லை) ராமசாமி நாஸ்திகன் அவரோடு சேரலாமா என்று ஒருவரிடம் கூறினாராம். ராமசாமி எப்படிப்பட்ட வனாயிருந்தாலென்ன? அவன் கூறுவது சரியா, தப்பா என்பதைத்தானே நீங்கள் ஆலோசிக்க வேண் டும். இப்பொழுது இங்கு நான் ஒரு கடை வைத்தால் நாஸ்திகன் என்று சாமான் வாங்க மாட்டீர்களா? அன்றி நான் ஏறின இரயில் வண்டியில் ஏறமாட்டீர் களா? அல்லது உங்கள் வண்டியில் தான் எனக்கு இடம்கொடுக்க மாட்டீர்களா? நான் நாஸ்திகனா அல்லவா என்று உங்களிடம் விளக்க வேண்டியதில்லை. ஏனெ னில் இது சில காங்கிரஸ் பார்ப்பனர்களின் சூழ்ச்சி. அதைக்கேட்டு சில சோணகிரிகள் ஏமாறலாம்.

இன்று தேசிய மகாசபை என்று கூறப்படும் காங்கிரஸ் தலைவராக ராஷ்டிரபதி என்னும் பேரால் தோழர் ஜவஹர் லால் தலைவராயிருந்தார். அவர் தன்னை நாஸ்திகன் என்று சொல்லிக்கொள்கிற முறையில் எனக்கு சத்தியத்தில் - கடவுள் மீது நம்பிக்கையில்லை யென்பதாகக் கூறி கோர்ட்டில் சத்தியப் பிரமாணம் கூற மறுத்திருக்கிறார். இன்று அவருடைய வீரத்தைப் பற்றி சூரர், தீரர் என்று பாராட்டுகிறார்களே ஒழிய எந்தப் பார்ப்பனராவது பண்டித ஜவஹர்லால் நாஸ்திகர் என் பதற்காக அவரை வெறுத்தார்களா? ஆனால் எங் களிடத்து இவ்விழிகுணம் கிடையாது.

ஜஸ்டிஸ், சுயமரியாதை முதலிய கட்சிகளிலிருந் தாலும், நாம் என்ன செய்தால் வாழ முடியும் என்பதை யோசிக்க வேண்டும். “காடு வா வா என்கிறது; வீடு போ போ என்கிறது”. எனக்கு மட்டிலும் இதிலென்ன அத்துணை அக்கறை? சென்ற 25 ஆண்டுகளாகப் பார்க்கிறேன் : பார்ப்பனர்கள் நாடோறும் நம்மைப் பற்றி கேவலமாக - அகங்காரமாகப் பேசுகிறார்கள் - எழுது கிறார்கள். ஒரு குரங்குப் பத்திரிகை, தோழர் சண்முகம் செட்டியாரைப் பற்றி செக்குப் போட்டு செக்கு ஆட்டுகிற மாதிரி படம் போட்டு இழிவுபடுத்திற்று.

நம்மைக் கழுதை என்றும் நாய் என்றும் வயிற்றுச் சோற்றுக்காரர்களென்றும் கூறி வருகிறது. இதைப்பார்த்து உங்கள் இரத்தங் கொதிப்பதில்லை; கண் சிவப்பதில்லை. இந்நிலையில் வீணே ‘தமிழ் நாடு தமிழனுக்கு’ என்று கூற உங்கட்கு யோக்கியதை உண்டா? தமிழ்மொழி, கலை, நாகரிகம் காப்பாற்றப் பட நாடு வளர வேண்டுமானால், பெண்மணிகளாகிய நீங்கள் துணிந்து முன்வர வேண்டும். இதைக் கருதியே இம்மாநாட்டைக் கூட்டினீர்கள்; பல தீர்மானங்கள் நிறைவேற்றினீர்கள். பெண்கள் உண்மையில் வீரமுடை யவர்கள்தான்; நினைத்ததை முடிக்கும் ஆற்றலுடைய வர்கள்தான் என்பதை செயலில் காட்டவேண்டும். ஆனால் சிறைக்குச் செல்லும் ஆண்களை மட்டும் பாராட்டுவதுடன் நில்லாது, நீங்கள் சிறைச் செல்வதைப் பார்த்து ஆண்கள் பாராட்ட வேண்டிய நிலையை உண்டாக்க வேண்டும். இதற்குச் சிறிதும் பின்னிடலா காது” (நீண்ட கைதட்டல்).

- விடுதலை, 19-11-1938

தொடரும்

Pin It