எதிர்வரும் சூன் 21 அன்று நான் 91 அகவையை முடித்து 92இல் அடியெடுத்து வைப்பேன்.

இப்போதைய தமிழ கத்திலேயே 100 அகவையைத் தாண்டியவர்கள் நூற்றுக்கணக்கில் இருக்கிறார்கள். எனவே, 92 என்பது பெரிது அன்று.

என் பெரியார் கொள்கை வாழ்வு 28.10.1944இல் தொடங்கியது. அதிலிருந்து 20 ஆண்டுகள் கழித்து 1964இல் தான், நான், தன் இயக்கத்துக்கு இன்றியமையாதவன் எனத் தந்தை பெரியார் நினைத்தார்.

அவரின் ஒப்புதலோடு, அன்னாரின் எழுத்துக்களையும் சொற்பொழிவுகளையும் தொகுத்து, அவர் மறைந்த 6 மாத காலத்தில், “பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்” என்ற பெயரில் 3 பெருந்தொகுதிகளை, திருச்சி சிந்தனையாளர் கழகத்தின் சார்பில், 1-7-1974 இல் திருச்சியில் வெளியிட்டேன். இதற்கு, ஆசிரியர்கள் ந. கணபதி, வே. காசிநாதன் துணை மிகப் பெரியது.

பெரியார் தொண்டர்களும், தமிழ்ப்பெருமக்களும், அன்றையத் தமிழக அரசினரும் பேரார்வத்துடன் அந்நூற்றொகுதியை அன்று வரவேற்கவில்லை.

1980இல் 1500 தமிழக அரசுக் கிளை நூலகங்களுக்கு அரசு அந்நூற்றொகுதிகளை வாங்கியது. அதன் பிறகு தான், பெரியார் தொண்டர்கள் பலரும், தமிழ்ப் பெருமக்களும், பெரியாரியல் ஆய்வறிஞர்களும் அத்தொகுப்பின் அருமையையும் பயன்பாட்டையும் அறிந்தனர்.

1992க்குப் பிறகு அப்படிப்பட்ட தொகுப்பு வேண்டும் என்று தமிழ் மக்கள் பெரிதும் விரும்பினர்.

1993 முதல் முயன்று, 2010 மார்ச்சு 23 அன்று, 1974 பதிப்புடன் மேற்கொண்டு, 60 விழுக்காடு சேர்த்து, உயர்ந்த பரிசுப் பதிப்பாக, “பெரியார் ஈ.வெ. இராமசாமி - நாகம்மை கல்வி ஆராய்ச்சி அறக்கட்டளை”யின் சார்பில், 9300 தெமி 1/8 பக்கங்களைக் கொண்ட 20 தொகுதிகளாக “பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்” நூற்றொகுப்பு வெளியிடப் பெற்றது.

மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சித் தோழர்களும், சூலூர் பாவேந்தர் பேரவைத் தோழர்களும், கோவைப் புதூர் தோழர்களும் வேலைக்காரத் தேனீக்கள் போல் பறந்து, பறந்து உழைத்து 2900 தமிழ்ப் பெருமக்களிடம் நூல் முன்பதிவு செய்து, 1 கோடியே 5 இலட்சம் ரூபாவை அறக்கட்டளை வங்கிக் கணக்கில் சேர்த்தனர். விசுவ கரும சங்கத்தினரும், வண்ணத்தார் சங்கத்தினரும் ஆர்வத்துடன் உதவினர்.

நூல் வெளியீட்டு விழா மிகச் சிறப்பாக நடை பெற்றது. அச்சிடப்பட்ட 3000 படிகளும் 30 நாள்களில் தீர்ந்து போயின.

மீதப்பட்ட தொகையைக் கொண்டும், கடன் பெற்றும் உடனேயே 2000 தொகுப்பு மறுபதிப்புச் செய்தோம். அரசுக் கிளை நூலகங்களுக்கு வாங்குவாரில்லை. கடனில் தத்தளித்தோம்.

தமிழக அரசினர், கைநிறையக் கையூட்டுப் பெற்றுக்கொண்டு, 2014இல், “பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்” 1000 படிகள்; “டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு” 1000 படிகள் அரசு நூலகங்களுக்கு வாங்கிக் கொண்டனர்.

இந்த இக்கட்டான பணிகளுக்கிடையேதான், அரசமைப்புச் சட்டத்திலுள்ளபடி, “சமுதாயத்திலும் கல்வியிலும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இந்திய மய்ய அரசுக் கல்வியிலும், வேலையிலும் 1956லேயே தரப்பட்டிருக்க வேண்டிய இடஒதுக்கீடு ஏன் தரப்படவில்லை” என, முதன்முதலாக 1975இல் நான் கவலைப்பட்டேன். 1975, 1976இல் இந்தியக் காங்கிரசு அரசுக்கு எழுதினேன். விடையே இல்லை.

1977இல் ஜனதாக் கட்சி அரசு அமைந்தது. 29.4.1978 முதல் 2015 மார்ச்சு வரையில் இந்த ஒரு பணியை மட்டும் முன்வைத்து, நானும், சீர்காழி மா. முத்துச்சாமி, சேலம் தாதம்பட்டி எம். இராஜு, சேலம் அ. சித்தய்யன் ஆகியோரும்; பின்னாளில் தோழர்கள் து. தில்லைவனம், சங்கமித்ரா, வாலாசா வல்லவன், ஆவடி க. நாகராசன், கலச. இராமலிங்கம் ஆகியோரும் இடையறாது வடநாட்டுக்குச் சென்றோம். 1978 முதற் கொண்டு, பீகார் ராம் அவதேஷ் சிங், வாழப்பாடி கூ. இராமமூர்த்தி ஆகியோரின் பேரொத்துழைப்புடன் “மண்டல் குழு” என்பது 1-1-1979இல் அமைக்கப்பட எல்லாம் செய்தோம்.

இது இன்றும் முழுமையாக நிறைவேறவில்லை.

பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் வகுப்பினர், பட்டியல் பழங்குடியினர், முற்பட்ட வகுப்பினரி டையே - 100 விழுக்காடு இடங்களும் விகிதா சாரம் பங்கீடு செய்து தரப்படும் வகையில் அரசமைப்புச் சட்டத்தைத் திருத்தும் வரையில் நாமும், எல்லா ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களும் தொடர்ந்து இதற்காகப் போராட வேண்டும்; போராடுவோம்!

ஆயினும், என்னுடன் தொடர்ந்து மனமாரப் பணி யாற்றும் எல்லாத் தோழர்களும், இனிய நண்பர்களும் “பெரியார் வாழ்க்கை வரலாறு” என்னால் எழுதி முடிக்கப்பட்டு, விரைவில் வெளியிடப்பட வேண்டும் எனப் பெரும் நெருக்கடி தருகின்றனர். அவர்கள் அனைவரின் உணர்வுகளையும் நான் மிகவும் மதிக் கிறேன்; மிகச் சரியானது எனவும் உணருகிறேன்.

இது கருதி, 2016இல் மீதமுள்ள 6 மாத காலத்திலும், 2017இல் ஆகத்து வரையிலும் வட இந்தியப் பயணத்தை மேற்கொள்ளுவதை உறுதி யாகத் தவிர்ப்பேன். இந்த 14 மாத காலத்தில் உறுதியாக பெரியார் வரலாறு இரண்டாம் தொகுதி, பெரியார் வரலாறு மூன்றாம் தொகுதி இவற்றை எழுதி முடித்து, என் உற்ற தோழர்களின் பார்வைக்கு மூன்று தொகுதிகளையும் ஒப்படைத்து விட்டு, 2017 செப்டம்பர் - அக்டோபரில் நான் தில்லி, அலிகர், லக்னோ, பாட்னா, சிலிகுரி முதலான இடங்களுக்குப் போவேன். இதில் நான் உறுதியாக உள்ளேன்.

என் முதுமைக்கு உரிய இயலாமையும் என்னைத் துரத்துகிறது.

எப்போதும் 4 மாடிகள் வரையில் மடமடவென ஏறுவேன்; இப்போது மூன்றாவது மாடிக்கு ஏறவே திணறுகிறேன்.

பேருந்திலும், தொடர் வண்டியிலும் 20, 30 கிலோ சுமையுடன் ஏறுவேன்; இறங்குவேன். இதற்கு இப் போது தடுமாறுகிறேன்; பிறர் துணையை நாடுகிறேன்.

எப்போதும் ஒரு மணிநேரம் மிக விசையாக நடப்பேன்; இப்போது அரைமணி நேரம் நடந்தவுடன் அயர்வுறுகிறேன்.

உணவு அளவைக் குறைக்க நேரிடுகிறது.

இவை முதுமையின் விளையாட்டுக் கோலங்கள். இவற்றைத் துணிவுடன் எதிர்கொள்வேன்.

21.6.2016இல் 92இல் அடியெடுத்து வைக் கும் நான், 95 அகவை வரை நலமாக வாழ விரும்புகிறேன்; அல்ல, அல்ல ஆசைப்படுகிறேன்.

என் ஆசை நிறைவேறிட என் குடும்பத்தினர் ஒத்துழைப்பர்.

என் கட்சித் தோழர்களும், தமிழ்ப் பெரு மக்களும் மனமார ஒத்துழைக்க அன்புடன் வேண்டுகிறேன்.

- வே.ஆனைமுத்து

Pin It