புதிய ஜனநாயகம் வெளியிட்ட சிவசேகரம் பேட்டிக்கு எதிர்வினையாக . . .

ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் ஏற்பட்ட பெரும் பின்னடைவு - கொடுந் தோல்வி குறித்துத் திறனாய்வு செய்து படிப்பினைகள் பெறுவது தேவையான ஒன்று. அந்த முறையில் பல்வேறு திறனாய்வுகள் வந்து கொண்டிருக்கின்றன. ஈழ விடுதலையை ஆதரிப்பவர்கள், எதிர்ப்பவர்கள் ஆகிய இரு தரப்பினரிடமிருந்தும் வரக் கூடிய இந்தத் திறனாய்வுகளை விருப்பு வெறுப்பின்றிக் கருதிப் பார்க்க வேண்டும். இந்த வகையில் இலங்கையைச் சேர்ந்த மார்க்சிய இலக்கியத் திறனாய்வாளர் தோழர் சிவசேகரம் புதிய ஜனநாயகம் ஏட்டுக்கு அளித்துள்ள நேர்காணல் அவ்வேட்டின் அக்டோபர்-நவம்பர் இதழ்களில் வெளிவந்துள்ளது. சிவசேகரத்தின் அடிப்படைத் திறனாய்வுகளைக் கருதிப் பார்ப்பதே இக்கட்டுரையின் நோக்கம். சற்றே காலந்தாழ்ந்து என்றாலும் இன்றைய சூழலின் தேவை கருதி இதை எழுதுகிறேன்.

"ஆயுத வழிபாடு விடுதலையைத் தராது" என்பது சிவசேகரம் அளித்த நேர்காணலுக்குப் புஜ கொடுத்துள்ள தலைப்பு."... ஆயுத வலிமையை நம்பியதே புலிகளின் தோல்விக்கு முக்கியக் காரணம்" என்கிறார் சிவசேகரம். புலிகள் ஆரம்பத்தில் மக்கள் பேச்சைக் கொஞ்சம் கேட்டதாகவும், ஆயுத வலிமை வந்த பிறகு மக்கள் பேச்சைக் கேட்டதில்லை எனவும் அவர் சொல்கிறார். புலிகள் மட்டுமல்ல, தொடக்கத்திலிருந்தே எல்லா இயக்கங்களும் இப்படித்தான் எனக் குற்றம் சாட்டுவதோடு, ஆயுத வழிபாடு செய்த இந்தத் தவறுதான் தமிழ்த் தேசியத்தின் முக்கியப் பலவீனமாக இருந்தது என்றும் சுட்டுகிறார். 

ஆயுத வழிபாடு என்பது உண்மையா? 

சிவசேகரம் பொதுவாகத் தமிழ்த் தேசியம் பற்றியும், குறிப்பாகப் புலிகள் பற்றியும் செய்துள்ள இந்தக் குற்றாய்வுக்கு ஆவணச் சான்று எதுவும் தரவில்லை. காட்டாகப் புலிகளின் அறிக்கைகள், பிரபாகரனின் மாவீரர் நாள் உரைகள் போன்ற எதிலிருந்தும் அவர் சான்று காட்டவில்லை. உண்மையில் புலிகள் ஆயுத வழிபாட்டில் நம்பிக்கை வைக்கவில்லை என்பதற்கு அவர்களின் அறிக்கைகளிலிருந்து நம்மால் சான்று தர இயலும். 1987 இந்தியப் படையெடுப்பின் போது சுதுமலைத் திடலில் பிரபாகரன் ஆற்றிய உரை தெள்ளத் தெளிவானது.

புலிகள் 'ஆயுத வழிபாடு' செய்ததற்குச் சான்றாகச் சிவசேகரம் சில நிகழ்ச்சிகளை எடுத்துக்காட்டுகிறார். யாழ்ப்பாணத்திலிருந்து மக்கள் வெளியேற வேண்டும் எனப் புலிகள் உத்தரவிட்டார்களாம். மக்களின் இசைவின்றியே அதைச் செய்து முடித்தார்களாம்! சென்ற ஆண்டு கிளிநொச்சியிலும் இதேதான் நடந்ததாம்!

கிட்டத்தட்ட 5 இலட்சம் மக்களை அவர்களின் இசைவின்றியே வெளியேற்றுவது புலிகளால் எப்படிக் கூடும்? மக்கள் கட்டாயமாக வெளியேற்றப்பட்டார்கள் என்றால் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தி அனுப்பினார்களா? அவர்கள் பிறகு யாழ்ப்பாணத்துக்குத் திரும்பியது கூட அச்சுறுத்தலால்தானா? வெறும் ஐயாயிரம் பேரை அவர்களது விருப்பமின்றி வெளியேற்றுவது என்றால் கூடத் துப்பாக்கியைக் காட்டினால் போதாது, அதைக் கொண்டு சுடவும் வேண்டியிருக்கும் என்பதே இயல்பறிவு. யாழ்ப்பாணத்திலிருந்து ஐந்து லட்சம் மக்களை வெளியேறச் செய்வதற்காகப் புலிகள் துப்பாக்கியைக் காட்டி மிரட்டினார்களா? அம்மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்களா? அன்று யாழ்ப்பாணத்திலும் சரி, பிறகு கிளிநொச்சியிலும் சரி, சிங்கள இராணுவம் மீதான பேரச்சத்தினாலும், புலிகள் மீதான நம்பிக்கையினாலுமே மக்கள் விரும்பி வெளியேறினார்கள் என்பதுதான் உண்மை. புலிகள் மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையைச் சிவசேகரத்தால் ஒப்புக் கொள்ள முடியாதிருக்கலாம். ஆனால் சிங்களப் படை குறித்து மக்கள் கொண்டிருந்த அச்சத்தைச் சிவசேகரம் மறைக்க வேண்டிய தேவை என்ன?

மக்கள் பங்களிப்பும் பங்கேற்பும்

விடுதலைப் போராட்டத்தின் எந்த அம்சத்திலும் மக்களின் பங்களிப்பு இல்லாமலே இருந்தது என்கிறார் சிவசேகரம். மக்களின் பங்களிப்பே இல்லாமல்தான் புலிகள் இயக்கம் இவ்வளவு பெரிய விடுதலைப் படையாக உருவாயிற்றா? தாயக மீட்புப் போரில் முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட விடுதலைப் புலிகள் வீரச் சாவடைந்தார்களே, இந்த மாவீரர்கள் மக்களின் பங்களிப்பில்லையா?

விடுதலைப் போராட்டத்தில் மக்களின் பங்களிப்புக்கு மட்டுமல்ல, பங்கேற்புக்கும் கூட புலிகள் அளித்த முக்கியத்துவத்துக்குச் சான்றாக, ஆனையிரவைக் கைப்பற்றும் போரில் முதலில் தோல்வி ஏற்பட்ட போது பிரபாகரன் அளித்த விளக்கத்தைச் சுட்டலாம். மக்களின் முனைப்பான பங்கேற்பு இல்லாததால்தான் நாம் தோற்றோம் என்று அவர் சொன்னார். இறுதியில் மக்களின் பங்கேற்புடன்தான் ஆனையிரவில் வெற்றி கிடைத்தது என்பதைக் கூறத் தேவையில்லை.

ஆயுதப் போராட்டம் நடத்துகிற ஒரு விடுதலை இயக்கம் ஆயுதங்களுக்குத் தர வேண்டிய அளவு முக்கியத்துவத்தையே புலிகளும் தந்தார்கள். இதில் ஆயுத வழிபாடு என்ற பேச்சுக்கே இடமில்லை.

கொடிய இன அழிப்புக்கு நடுவே விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதில் மக்களுக்கும் இயக்கத்துக்கும் மாறுபாடுகள் இருந்திருக்கலாம். ஆனால் போராளிகள் வேறு, மக்கள் வேறு எனச் சொல்வதற்கு இது போதிய காரணமாகாது.

தோல்விக்குத் துரோகம் எப்படிப் பங்களிப்புச் செய்தது என்பதை விளக்கும் போது தவிர்க்க முடியாமலே கருணாவின் பேர் வந்து விடுகிறது. ஆனால் சிவசேகரம் சுற்றடியாகக் கருணாவை நியாயப்படுத்தவே முயல்கிறார். கருணாவின் துரோகத்துக்கும், வடக்கு, கிழக்கு முரண்பாடுகளுக்கும் அவர் முடிச்சுப் போடப் பார்க்கிறார். கருணா தன் துரோகத்தை நியாயப்படுத்த இதே முரண்பாடுகளைக் காரணம் காட்ட முற்பட்டது நினைவிற்கொள்ளத்தக்கது.

புலிகள் நடத்திய போர் மக்கள் போராக இல்லாததால்தான் தோற்றுப் போனது என்று சிவசேகரம் கருத்துரைக்கிறார். புலிகளுக்கு மக்கள் ஆதரவு இல்லை என்கிறாரா? அல்லது எல்லா மக்களும் புலிப் படையில் சேர்ந்து போரிடவில்லை என்கிறாரா? எல்லா மக்களும் ஆயுதம் ஏந்திப் போரிடும் மக்கள் போர் என்பதாக எதுவுமில்லை. சீனத்திலோ வியத்நாமிலோ வேறு எங்கும் அப்படி நடைபெறவில்லை. நடைபெறவும் முடியாது. மக்கள் ஆதரவில்லாமல்தான் விடுதலைப் புலிகள் இத்துணை நீண்ட காலம் போராடினார்கள் எனச் சிவசேகரம் சொல்வாரானால் அதன் அபத்தம் வெளிப்படையானது.

புலிகள் தமது வலிமையைக் கூட்டியும் பகையின் வலிமையைக் குறைத்தும் மதிப்பீடு செய்து விட்டார்கள் எனச் சிவசேகரம் சொல்கிறார். இதில் ஓரளவு உண்மை இருக்கலாம். இந்தியப் படையுடனான சமர் குறித்துப் பேசும் போது பிரபாகரனே இதை ஒப்புக் கொண்டிருக்கிறார். ஆனால் இதற்கும் மக்கள் ஆதரவு அல்லது ஆதரவின்மைக்கும் என்ன தொடர்பு? 

போர்முறை மாறாதது ஏன்?

புலிகள் தொடர்ந்து இறுதி வரை மரபு வழியில் போரிட்டது சரிதானா? அல்லது கெரில்லாப் போருக்கு மாறியிருக்க வேண்டுமா? இவை போன்ற வினாக்களுக்கு விடை தேடும் முயற்சியில் தவறில்லை. ஆனால் போதிய தரவுகளின்றி வெறும் ஊகங்களின் அடிப்படையில் இந்தத் திறனாய்வை முன்வைப்பது சரியன்று.

புலிகள் தமது போர்முறையை மாற்றிக் கொள்ளாததற்குச் சிவசேகரம் தான் சுட்டும் காரணங்களுக்கு உருப்படியான சான்றேதும் தரவில்லை. ஆனால் மேற்கு நாடுகளிலும் தமிழ்நாட்டிலும் தங்கள் ஆதரவாளர்கள் நடத்தி வந்த போராட்டத்தின் மீது புலிகள் நம்பிக்கை வைத்தார்கள் எனச் சொல்லி அதையும் குறை சொல்கிறார் சிவசேகரம். இப்படி நம்பிக்கை வைத்தால் என்ன? இது ஒரு வகை அரசியல் நம்பிக்கைதானே? ஆயுத வழிபாடு அல்லவே? 

போரை நிறுத்தும் முயற்சி

புதிய அதிபர் ஒபாமைவைக் கூட நம்பினார்கள், இறுதிக் காலத்தில் நார்வேயைக் கூட அளவுக்கதிகமாக நம்பினார்கள் என்கிறார் சிவசேகரம். இந்தக் கூற்றுக்கு அவர் சான்றேதும் தரவில்லை. ஒன்று வதந்திகளின் அடிப்படையிலோ, அல்லது தமிழீழ மக்கள் மீதான முழுப் பேரழிப்புப் போரை நிறுத்தத் துடித்தவர்கள் விடுத்த அவசர வேண்டுகோளின் அடிப்படையிலோ அவர் இப்படிக் கூறுவதாக இருக்கலாம். இது உண்மையாகவே கூட இருக்கட்டும், அதனால் என்ன? ஒபாமைவை நம்புவதோ, நார்வேயை நம்புவதோ தமிழீழத்துக்கு விடுதலை பெற்றுத் தருவார்கள் என்பதற்காக அன்று, ஒரு போர் நிறுத்தத்தைக் கொண்டுவருவதற்காகவே என்பதைச் சிவசேகரம் புரிந்து கொள்ளவில்லையா? சிங்களப் பேரினவாதம் பாசிசமாக உருவெடுத்து அப்பாவிப் பொதுமக்களைக் கோரப் படுகொலை செய்து கொண்டிருக்கும் போது, அதைத் தடுத்து நிறுத்த வல்லாதிக்க ஆற்றல்கள் உள்ளிட்ட அனைத்து உலக ஆற்றல்களின் ஆதரவையும் திரட்ட முற்படுவதில் என்ன தவறு?

இரண்டாம் உலகப் போரில் இட்லர் தலைமையிலான பாசிசக் கூட்டணியை எதிர்த்து ஸ்டாலினும், சப்பானிய எதிர்ப்புப் போரில் மாவோவும் எடுத்த நிலைப்பாடுகளை 'அமெரிக்க வல்லாதிக்கத்தின் மீதான நம்பிக்கை' எனத்தான் சிவசேகரம் புரிந்து கொள்கிறாரா? பாலத்தீனர்களுக்கு எதிரான இசுரேலியப் படுகொலைத் தாக்குதலைத் தடுத்து நிறுத்த யாசர் அராஃபத் அமெரிக்க அரசுக்கு விடுத்த வேண்டுகோள்களை எப்படி எடுத்துக் கொள்வது? 'அமெரிக்க அதிபரை நம்புதல்' என்றுதானா?

இந்திய வல்லாதிக்கத்தின் வழிகாட்டுதலோடும், சீனா, பாகிஸ்தான் போன்ற அரசுகளின் துணையோடும் சிங்களப் படை நடத்த முற்பட்ட முழுப் பேரழிவைத் தடுத்து நிறுத்தக் களத்தில் நின்று தற்காப்புப் போர் நடத்தியது புலிப்படை. களத்துக்கு வெளியே உலகத் தமிழர்களும் அமைதி விரும்பிகளும் அரசியல் முயற்சி மேற்கொண்டோம். இரு வகை முயற்சிகளுமே தோற்றுப் போய் விட்டன. இதனாலேயே இந்த முயற்சிகள் தவறானவை எனத் தூற்றத் தேவையில்லை. 

தோல்வியும் தொடர்முயற்சியும் 

புரட்சிகளும் விடுதலைப் போர்களும் தோல்வியடைவது உலக வரலாற்றில் ஒருபோதும் நிகழாத உலக அதிசயமா? உருசியப் புரட்சி 1905இல் தோல்வியடைந்த போது மென்சுவிக்குகள், 'இந்த நேரம் தாக்குதல் நடத்தியிருக்கக் கூடாது' என்றார்கள். 'தாக்கியது சரி, இன்னும் வலுவாகத் தாக்காமல் விட்டதுதான் தவறு' என்றார் லெனின்.

கியூபாவில் பிடல் காஸ்ட்ரோவுக்கு முன்பே ஹொசே மார்த்தி விடுதலைப் புரட்சி செய்து தோற்றார். அதனாலேயே மார்த்தி புரட்சி செய்தது தவறு எனப் பழிப்பவர் யார்? காஸ்ட்ரோவுங்கூட 1953இல் தோற்றுத்தான் 1958இல் வென்றார்.

உலகில் எந்த விடுதலைப் போரும், எந்தப் புரட்சியும் செங்குத்தாக முன்னேறிச் செல்வதில்லை. முயற்சி, தோல்வி, மீண்டும் முயற்சி, மீண்டும் தோல்வி, மீண்டும் மீண்டும் முயற்சி, மீண்டும் மீண்டும் தோல்வி . . . இறுதி வெற்றி கிட்டும் வரை தோல்விகளே வெற்றியின் படிக்கட்டுகளாகின்றன. 

சரணடைதலும் குப்பி கடித்தலும் 

"இறுதி நாட்களில் போர் முனையில் நடந்தது என்ன?" என்ற வினாவுக்குச் சிவசேகரம் அளித்துள்ள விடை: ". . . இறுதி நாட்களில் பலரும் சரணடைந்தே கொல்லப்பட்டுள்ளார்கள். புலிகள் எதிரிகளிடம் சிக்காமல் இருப்பதற்கு சயனைடு கடிப்பது பழக்கம். இவர்கள் அப்படியும் சாகவில்லை." 

எந்தவொரு போரிலும், தோல் வியடையும் படை பின்வாங்கிச் செல்வதும், பின்வாங்கிச் செல்ல வழியே இல்லாத போது சரணடைவதும் வழக்கமான ஒன்றுதான். 'குப்பி கடித்தல்' என்பது ஒரு போராளியோ ஒருசில போராளிகளோ உயிரோடு பிடிபட்டுக் கொடுஞ்சித்திரவதையால் பகைவரிடம் இரகசியங்களைக் கக்கி விடாமல் தடுப்பதற்கான உத்தியே தவிர, ஒரு பெரும் படை பகைவரிடம் வீழ்ந்து விடாமல் தடுப்பதற்கான வழிமுறையன்று. எந்தப் போர்க்களத்திலும் எந்தச் சூழலிலும் பகைவரிடம் சரணடையாத படை என்பது கற்பனையில் மட்டுமே இருக்க முடியும். சிவசேகரம் போன்றவர்களின் பாராட்டைப் பெறுவதற்காகப் பல்லாயிரம் வீரர்கள் குப்பி கடித்துச் சாக வேண்டும் என்ற தேவையில்லை. சாவதால் ஆவது ஒன்றுமில்லாத நிலையில், 'இப்போது உயிர் பிழைத்து இன்னொரு நாள் போரிடுவோம்' என்ற எண்ணம் போர் வீரருக்கு இழுக்காகாது.

பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? இறந்து விட்டாரா? இறந்து விட்டார் என்கிறார் சிவசேகரம். இது தொடர்பாக சிங்கள அரசு வெளியிட்டுள்ள செய்திகளையும் படங்களையும் பெரும்பாலும் நம்புகிறார். நம்புவது அவர் உரிமை. இதில் நாம் குறுக்கிடவோ, இந்த நம்பிக்கைக்கு உள்நோக்கம் கற்பிக்கவோ தேவையில்லை. ஆனால் சிவசேகரமே கூறுவது போல் 'வெளிநாடுகளில் இருக்கும் புலிகளில் ஒரு பிரிவினர் இன்னமும் பிரபாகரன் இறக்கவில்லை எனக் கூறுவதை இவர்கள் (வைகோ, நெடுமாறன் போன்றவர்கள்) ஏற்கிறார்கள்.' பிரபாகரன் இறந்து விட்டார் என்ற செய்தியை நம்புவதற்குச் சிவசேகரத்துக்குள்ள உரிமை 'பிரபாகரன் இருக்கிறார்' என்ற செய்தியை நம்புவதற்கு வைகோ, நெடுமாறனுக்கு இல்லையா? இந்த நம்பிக்கைக்கு உள்நோக்கம் கற்பித்துக் கொச்சைப்படுத்துகிறார். புதிய ஜனநாயகம் பார்வையில் இவர்கள் தமிழினவாதிகள்! நல்ல வேளை, புஜ போல் இவர்கள் இந்தியவாதிகளாய் இல்லாமற்போன வரை மகிழ்ச்சி! சிவசேகரத்தின் பார்வையில் இவர்கள் அரசியல் இலாபம் கருதிப் பொய்ப் பிரச்சாரம் செய்கிறவர்கள்!

சிவசேகரம் சொல்கிறார்: ". . . பிரபாகரன் இறந்து விட்டார், இறக்கவில்லை என்று இறந்த கட்சி, இறவாத கட்சி என்று இரு பிரிவுகளாகப் புலம் பெயர்ந்த புலி ஆதரவாளர்களிடம் பிளவு உள்ளது. இதில் இறந்து விட்டார் என்ற பிரிவு தனது அரசியல் சுயலாபத்துக்காக இந்த நாடு கடந்த ஈழத்தை அறிவித்திருக்கிறது என்றுதான் நான் பார்க்கிறேன். . ." 

விடுதலைக் குறிக்கோள்

பிரபாகரன் இறக்கவில்லை என்கிறவர்கள், இருக்கிறார் என்கிறவர்கள் எல்லாருமே, சிவசேகரத்தின் பார்வையில், அரசியல் சுயலாபம் கருதிச் செயல்படுகிறவர்கள்தாம்! ஏன் தெரியுமா? இந்த இரு சாராருமே ஈழ விடுதலைக் குறிக்கோளைக் கைவிட மறுக்கிறார்கள், அவ்வளவுதான். ஈழ விடுதலைக்காகப் போராடியவர்களில் யாரெல்லாம் அந்தக் குறிக்கோளைக் கைவிட்டார்களோ, அவர்கள் மட்டுமே சிவசேகரத்தின் சீரிய கண்ணோட்டத்தில் அரசியல் சுயலாபம் கருதாச் செம்மல்களாக இருக்க முடியும்.

நம்மைப் பொறுத்த வரை, பிரபாகரன் இருக்கிறாரா? இல்லையா? என்பது கருத்து தொடர்பான அல்லது நம்பிக்கை தொடர்பான சிக்கலன்று. நடந்தது என்ன? என்னும் மெய்ம்மை தொடர்பான சிக்கலே அது. முள்ளிவாய்க்காலில் மூழ்கிப் போன எத்தனையோ உண்மைகளைப் போலவே இந்த உண்மையும் முழுமையாக வெளிப்படும், அது வரை இந்த வினாவை ஒத்தி வைத்து விட்டு, நம் கடமைகளைச் செய்வோம். உறுதியில்லாத் தரவுகள் மீது ஊக விளையாட்டு ஆடுவதை விடுத்து, உறுதிப்பட்ட செய்திகள் மீது தேர்ந்து தெளிந்து செயற்படுவோம். பிரபாகரனைப் பற்றிய வினாவின் மீதே நம் கவனத்தையும் உலகின் கவனத்தையும் குவியச் செய்து, முள்ளிவாய்க்கால் இனப்பேரழிப்பை முழு அளவில் பார்க்க விடாமல் செய்யும் பகைவரின் சூழ்ச்சிக்கு நாம் பலியாகி விட வேண்டாம்.

சிவசேகரம் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. சிங்கள அரசைப் போலவே அவரும் புலிகளைப் பயங்கரவாதிகளாகப் பார்க்கிறார். 'புலிகளின் சுத்த இராணுவக் கண்ணோட்டமே இந்த அழிவைத் தேடிக் கொண்டது' என்கிறார். விடுதலை என்னும் குறிக்கோள் சரியானது, ஆனால் புலிகளின் வழிமுறைதான் சரியில்லை எனச் சிவசேகரம் கூறுவாரானால் அது கருதிப் பார்க்கத்தக்கக் குற்றாய்வு என்றாவது கொள்ளலாம். ஆனால் வழிமுறையைச் சாடுவது போல் குறிக்கோளையே மறுதலிக்கிறார்.

ஆயுதப் போராட்டம் தோல்வியடைந்து, புலத்தில் அறப் போராட்டத்துக்கும் வாய்ப்பில்லாத இருண்ட சூழலில் புலம்பெயர்த் தமிழர்கள் சனநாயக நெறிகளின்படி ஓர் அமைப்பை நிறுவ முயன்றால் அதையும் சுயலாபம் என்றும், நாடகம் என்றும் வன்மத்துடன் சாடுகிறார் சிவசேகரம். தெரிந்தோ, தெரியாமலோ இவ்வகையில் அவர் மகிந்த இராசபட்சனின் குரலில் பேசுகிறார் என்பதை அவதானிக்கலாம். எல்லாமே அரசியல் சுயலாபம், எல்லாமே நாடகம் என்றால், தமிழீழ விடுதலைக்காக என்னதான் செய்யச் சொல்கிறார் இவர்? தமிழீழ விடுதலைக் குறிக்கோளைக் கைவிடச் சொல்கிறார், அவ்வளவுதான். 

நாடு கடந்த தமிழீழ அரசு

நாடு கடந்த தமிழீழ அரசுக்கு முன்மாதிரி இல்லை எனக் கூறும் சிவசேகரம், அதே மூச்சில் 1970இல் நரோதம் சிகானுக் சீனத்தில் அமைத்த நாடு கடந்த கம்பூச்சிய அரசை எடுத்துக்காட்டுகிறார். கம்பூச்சியாவில் அவருக்கென்று விடுவிக்கப்பட்ட பிரதேசங்கள் இருந்ததை ஒரு வேறுபாடாகச் சுட்டுகிறார். பாலத்தீன விடுதலை அமைப்பு (பிஎல்ஒ), அம்மக்களின் நாடாளுமன்றமாகிய பாலத்தீனத் தேசிய மன்றம் போன்ற முன்மாதிரிகளைக் கருத்தில் கொள்ளலாமே? ஒன்றுக்கொன்று சிற்சில வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும் என்றாலும், முன்மாதிரிகளே இல்லை என்று எப்படிச் சொல்ல முடியும்? ஒரு சதுர அங்குல நிலப் பரப்பு கூட இல்லாமல் நாடு கடந்த தமிழீழ அரசு எனப் புலம்பெயர்ந்த தமிழர்கள் அறிவிப்து கேலிக்கூத்து என்கிறார் சிவசேகரம். தமிழீழ நிலப் பரப்பில் பெரும் பகுதியை விடுதலைப் புலிகள் கைப்பற்றி, அங்கே ஆட்சிக் கட்டமைப்பு ஒன்றை நிறுவியிருந்தார்களே, அதனைச் சிவசேகரம் போன்றவர்கள் அறிந்தேற்றார்களா? நிலப் பரப்பு இல்லையே என்று ஏகடியம் செய்யும் இவர்கள் தமிழீழ நிலப் பரப்பு முழுவதையும் புலிகள் விடுவித்திருந்தால் அப்போதும் குற்றஞ்சொல்லத்தான் செய்வார்கள். ஏனென்றால் இவர்கள் விடுதலைக்கு எதிரானவர்கள்.

நாடு கடந்த தமிழீழ அரசு என்பது அதனளவிலேயே ஒரு முழுமையான அரசு அன்று. அது வாய்ப்புள்ள தமிழீழ மக்கள் அனைவரும் சேர்ந்து உருவாக்கும் அரசு போன்றதோர் ஏற்பாடு. அதன் வலிமை அறஞ்சார்ந்த ஒன்று. புலம் பெயர்ந்தவர்கள் என்றாலும் சரி, ஏதிலிகள் என்றாலும் சரி, வேறு நாட்டுக் குடியுரிமை பெற்றவர்கள் என்றாலும் சரி, ஈழ மக்கள் ஈழ மக்களே. இன அடையாளத்தைச் சட்ட வரையறைக்குள் குறுக்கிப் பார்ப்பது இடதுசாரிச் சிவசேகரத்துக்கு அழகன்று. தமிழன் என்பது என் தேசிய இன அடையாளம். இந்தியக் குடிமகன் என்ற இப்போதைய சட்ட வரையறையால் இந்த இன அடையாளம் மாறி விடாது. சிவசேகரம் தமது தேசிய அடையாளமாக எதைக் கருதுகிறார். அவர் தமிழரா? இலங்கையரா? அல்லது இடதுசாரி என்றாலே இரண்டுங்கெட்டானாகத்தான் இருக்க வேண்டுமா? 

மலையகத் தமிழரும் இசுலாமியத் தமிழரும்

மலையகத் தமிழர்களும் இசுலாமியத் தமிழர்களும் சிங்கள மக்களும் புலிகளின் தோல்வியை எப்படிப் பார்க்கிறார்கள்? இதற்குச் சிவசேகரம் அளித்துள்ள பதில் கருத்துக்குரியது. இந்தியவாத இடதுசாரிகள் (புஜ உட்பட) கருதிப்பார்க்கத்தக்கது:

• மலையகத் தமிழர்கள் புலிகளின் போராட்டத்தைப் பரிவோடு பார்த்தார்கள். இந்தத் தோல்வியால் அவர்கள் ஏமாற்றமடைந்துள்ளார்கள்.

• புலிகள் போராடுவது தமக்குப் பாதுகாப்பு என்றே தென்னிலங்கை முசுலீம்கள் கருதினார்கள். புலிகள் தோற்கடிக்கப்பட்ட பிறகு சிங்களப் பேரினவாதத்தால் தமக்கு அபாயம் ஏற்படலாம் என்று அஞ்சுகிறார்கள். வடக்கு, கிழக்கு முசுலீம்களில் ஒரு பகுதியினர் புலிகள் மற்றும் இதர விடுதலை இயக்கங்களின் அராஜகங்களால் பாதிக்கப்பட்டவர்கள் என்றாலும், புலிகளின் தோல்வியைத் தமிழ்த் தேசிய இனத்தின் மீதான சிங்களப் பேரினவாதத்தின் வெற்றி என்று அவர்களில் சிலர் உணர்கின்றனர்.

• தமிழ் மக்கள் மீது வெற்றி பெற்றதாக சிங்கள மக்கள் கருதுவதை வைத்து இராசபட்ச அரசு பல அடக்குமுறைச் சட்டங்களை ஏவி வருகிறது. இறுதியில் இந்தப் போக்கு சிங்கள மக்களுக்கே எதிராக வரும் போது அவர்களும் அரசின் இந்தப் பாசிசப் போக்கை உணரக் கூடும். சிங்கள மக்களிடம் தமிழீழச் சிக்கலைப் பேசுகிறவர்களை சிங்களப் புலி என்று அவதூறு செய்த போதிலும், ஒருசிலர் அப்படி வேலை செய்து சிறைப்பட்டும் உள்ளனர். தமிழ் இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்படும் காட்சிகளைக் கூட சிங்களப் பத்திரிகையாளர்கள்தான் வெளியிட்டனர். இத்தகைய சக்திகளை நாம் அங்கீகரிக்க வேண்டும்.

தோழர் சிவசேகரத்தின் இந்தப் பார்வைகள் நமக்கும் அடிப்படையில் உடன்பாடானவையே. தமிழீழ விடுதலைக் குறிக்கோளை ஏற்காத ஒருவரின் பார்வைகள் என்றாலும், விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல விரும்புவோர் இவற்றைத் தக்கவாறு கருத்தில் கொள்ள வேண்டும்.

தமிழீழம்: வணங்காமண் அடங்காப்பற்று என்ற கட்டுரையில் நான் எழுதினேன்:

"சிங்கள மக்களின் சனநாயக உரிமைப் போராட்டம் நேரடியாகவும் சுற்றடியாகவும் தமிழ் மக்களின் மீளெழுச்சிக்குத் துணைசெய்யும் என்பது நம் நம்பிக்கை. ஆனால் இதன் பொருள், தமிழீழ விடுதலை சிங்கள மக்களிடம் தங்கியிருக்கிறது என்பதன்று; தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வெற்றி சிறிலங்காவின் சனநாயகப் புரட்சியினது வெற்றியைப் பொறுத்தது என்பதுமன்று. *அப்படி ஒன்றுக்கொன்று எந்தச் சார்புறவும் இல்லை. தமிழீழ விடுதலைப் போராட்டமும் சிங்கள சனநாயகப் போராட்டமும் ஒன்றுக்கொன்று துணைசெய்யும் வரலாற்றுப் போக்குக்கு இனிவரும் காலத்தில் கூடுதலான பங்கிருக்கும் என்பதையே சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.”

*['என்பதுமன்று' என்பதற்குப் பதில் 'என்பதாகும்' என்று தமிழீழம்: வணங்காமண் அடங்காப் பற்று நூலில் (பக்கம் 22) பிழையாக அச்சிடப்பட்டுள்ளது.] 

பிரபாகரனும் அமிர்தலிங்கமும் ஒன்றா?

தமிழீழப் போராட்டத்தை ஒரு விடுதலைப் போராட்டமாக அறிந்தேற்று, அதில் நேரிட்டத் தவறுகளைச் சுட்டிக் காட்டித் திறனாய்வு செய்வதில் தவறில்லை. விடுதலைப் புலிகளையோ பிரபாகரனையோ போப்பரசரைப் போல் பிழையாப் பெருமை கொண்டவர்களாக நாம் கருதவில்லை. ஆனால் அவர்களின் நேர்வகை வரலாற்றுப் பங்களிப்பை ஏற்க மனமின்றி எதிர்வகைக் கூறுகளை மட்டுமே மிகைப்படுத்திக் காட்டுவதில்தான் சிவசேகரம் போன்றவர்கள் குறியாக இருக்கிறார்கள். இதன் விபரீத விளைவுதான் "பிரபாகரன் ஆயுதம் தாங்கிய அமிர்தலிங்கம்; அமிர்தலிங்கம் ஆயுதம் ஏந்தாத பிரபாகரன்" என்று இலங்கைப் புதிய ஜனநாயகக் கட்சியின் செந்தில்வேல் செய்துள்ள ஒப்பீடு. இந்த ஒப்பீட்டுக்குச் சிவசேகரமும் ஒப்புதல் முத்திரை வழங்குகிறார்:

"பிரபாகரன், அமிர்தலிங்கம் இருவரிடமும் தமிழீழத்தைத் தவிர, ஏகாதிபத்திய எதிர்ப்போ, மக்கள் திரள் அரசியல் வழியெல்லாம் கிடையாது.”

ஒடுக்குண்ட தேசிய இனத்தின் விடுதலைக்காகப் போராடுவதில் ஏகாதிபத்திய எதிர்ப்பை உங்களால் காண முடியவில்லையா? சிங்களப் பேரினவாத அரசை எதிர்ப்பதில் அந்த அரசுக்கு முட்டுக் கொடுத்துள்ள வல்லாதிக்கங்களை எதிர்ப்பதும் அடக்கமல்லவா? தெற்காசியாவின் முதற்பெரும் வல்லாதிக்கமாகிய இந்திய வல்லாதிக்க அரசை எதிர்த்துப் புலிகளின் அளவுக்கு உறுதியாகப் போராடிய வேறொரு விடுதலைப் படையைக் காட்ட முடியுமா? தங்கள் மண்ணை ஆக்கிரமித்த இந்தியப் படைக்குத் தோல்வி தந்த புலிகளின் வீரத்தையும் ஈகத்தையும் ஏன் உங்களால் மதிக்க முடியவில்லை? ஒருவேளை சிவசேகரத்தின் இடதுசாரிகள் இயற்றிய அளவுக்கு ஏகாதிபத்திய எதிர்ப்புத் தீர்மானங்களைப் புலிகள் இயற்றவில்லை என்பதுதான் குறையா?

அமிர்தலிங்கம் தமிழர் விடுதலைக் கூட்டணியின் (ஜிஹிலிதி) தலைவர் என்ற முறையில் தமிழீழக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டவர்தாம். 1977 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டுத் தமிழீழத் தனியரசுக்கு மக்களின் சனநாயகக் கட்டளையைப் பெற்றவர் என்பதும் மெய். ஆனால் அதன் பிறகு நடந்தது என்ன? தமிழீழ மக்களின் போராட்டத்தைத் திசை திருப்பவும் முனை மழுங்கச் செய்யவும் செயவர்த்தனா அரசு கொண்டு வந்த மாவட்ட அபிவிருத்தி சபை முதலிய சமசரசத் திட்டங்களில் பங்கேற்று விடுதலைக் குறிக்கோளுக்கு அவர் இரண்டகம் செய்தார். அதனால் அவரும் அவர் தலைமையிலான அமைப்பும் மக்களிடம் செல்வாக்கிழந்தன. விடுதலைக் குறிக்கோளில் உறுதியாக நின்ற போராளி இயக்கங்கள் செல்வாக்குப் பெற்றன.

திம்புப் பேச்சுவார்த்தையில் பங்கேற்றுப் போராளி இயக்கங்களோடு சேர்ந்து நான்கு அடிப்படைக் கொள்கைகளை முன்வைத்த அமிர்தலிங்கம் அந்தக் கொள்கைகளுக்குப் புறம்பான ராசீவ்-செயவர்த்தனா உடன்படிக்கையை ஏற்றுச் செயல்பட்டதன் மூலம் தமிழீழ விடுதலையைக் காட்டிக் கொடுத்தார். புலிகளல்லாத மற்றப் போராளி இயக்கங்களும் ஈரோஸ் தவிர இந்த இரண்டகத்தில் பங்கு பெற்று இந்திய வல்லாதிக்கத்தின் தலையாட்டிகளாகச் செயல்பட்டன.

தமிழீழ விடுதலைக்கு அப்பட்டமாக இரண்டகம் செய்த அமிர்தலிங்கமும், தமிழீழ விடுதலைக் குறிக்கோளை எந்நிலையிலும் கைவிட மறுத்து அதற்காக அளப்பரிய ஈகம் செய்து போராடும் விடுதலைப் புலிகளின் தலைவரும் ஒன்று எனச் சொல்வதை அறியாமை என்பதா? வரலாற்றுக் குருட்டுத்தனம் என்பதா? 

சிவசேகரம் சொல்கிறார்: 

"அமிர்தலிங்கம் பின்னாட்களில் எதிர்க்கட்சித் தலைவராக மாறி அரசுடன் சமரசம் செய்து கொண்டார். ஒருவேளை பிரபாகரன் சரணடைந்து கொல்லப்படாமல் இருந்திருந்தால், அவரும் இதையே செய்திருப்பார்.”

பிரபாகரன் சரணடைந்து கொல்லப்பட்டார் என்று அவதூறான ஒரு வதந்தியை நம்பி, அல்லது தாமே இட்டுக்கட்டிப் பரப்புவதன் மூலம் அந்த வீரத் தலைவன் குறித்துத் தமிழ் மக்கள் உள்ளத்தில் ஓங்கி நிற்கும் படிமத்தைக் கலைக்க முயல்கிறவர்களில் சிவசேகரமும் ஒருவர் எனத் தெரிகிறது. போரிட்டோ வேறு வகையிலோ பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டார் என்றே வைத்துக் கொள்வோம். அவர் கொல்லப்படாதிருந்தால் இப்படிச் செய்திருப்பார் எனக் குற்றஞ்சாட்டுவது அறிவியலுக்கும் அறத்துக்கும் ஏற்புடையதா? பிரபாகரன் ஆனாலும் சரி, வேறு எவர் ஆனாலும் சரி, இறந்து போன ஒருவரைப் பற்றி இவர் இறக்கா விட்டால் இப்படிச் செய்திருப்பார் எனச் சொல்லித் தீர்ப்பெழுதுவதானால், மறைந்து விட்ட யாரைப் பற்றி வேண்டுமானாலும் இப்படிக் கதை எழுதலாம் அல்லவா? சே குவேரா கொல்லப்படாமல் போயிருந்தால் அமெரிக்க வல்லாதிக்கத்தோடு சமசரம் செய்து கொண்டிருப்பார் எனச் சொல்கிறவர்களுக்குப் புஜவும் சிவசேகரமும் என்ன பட்டம் தருவார்கள்? 

விடுதலையும் வல்லாதிக்க எதிர்ப்பும்

ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் விடுதலைக்குள்ள சனநாயக உள்ளடக்கத்தை, வல்லாதிக்க எதிர்ப்புத் தன்மையைக் காண விடாமல் சிவசேகரத்தின் பார்வையை மறைக்கிறது பிரபாகரன் மீதான வெறுப்பு; புலிகள் மீதான காழ்ப்பு!

சிங்கள இடதுசாரிகள் ஆனாலும் சரி, தமிழ் இடதுசாரிகள் ஆனாலும் சரி, தமிழீழ விடுதலையின் வரலாற்றுத் தேவையை ஏற்காதவர்கள் அறிந்தோ அறியாமலோ சிங்களப் பேரினவாதத்துக்குத் துணைபோவது தவிர்க்க முடியாதது. 1972இல் சிங்களப் பொதுமையரும் டிராத்ஸ்கியர்களும் இதை மெய்ப்பித்தார்கள். சிவசேகரம் போன்ற தமிழ் இடதுசாரிகள் இப்போது இதை மெய்ப்பிக்கிறார்கள். அவர்களைப் போலவே இவர்களும் 'உழைக்கும் வர்க்கக் கண்ணோட்டம்', 'சோசலிசச் சார்பு', 'முதலாளித்துவ மறுப்பு' போன்ற பெருஞ்சொல்லாடல்களில் தங்கள் பேரினவாதச் சார்பை மறைக்க முற்பட்டுள்ளனர். சிவசேகரத்தின் உலக அரசியல் பார்வையும் இதே தன்மையில்தான் உள்ளது. கொசாவோ பற்றிச் சொல்கிறார்:

"கொசாவோவைப் பொறுத்த வரை, யுகோஸ்லாவியா நாடு செர்பியா, போஸ்னியா என்று பிரிக்கப்பட்ட பிறகு, செர்பியா மட்டும் ஒரு சோசலிசக் கண்ணோட்டம் கொண்ட நாடாக நீடிப்பது ஏகாதிபத்தியங்களுக்கு விருப்பமில்லை. எனவே செர்பியாவை பலவீனப்படுத்துவதற்காக கொசாவோ விடுதலையை ஏகாதிபத்தியங்கள் அளித்தன.”

யுகோஸ்லாவியாவுக்கு உட்பட்டிருந்த பிற தேசிய இனங்கள் மீது செர்பியா செலுத்திய ஒடுக்குமுறை, அதற்கெதிராக எழுந்த தேசிய விடுதலைப் போராட்டங்கள் . . . எதுவும் சிவசேகரத்தின் கண்ணுக்குப் புலப்படவில்லை. செர்பியா ஒரு சோசலிசக் கண்ணோட்டம் கொண்ட நாடாக நீடித்ததாம்! செர்பியாவின் பாசிசக் கொடுங்கோன்மையை, பிற தேசிய இனங்கள் மீது அது தொடுத்த இன அழிப்புப் போர்களை 'சோசலிசக் கண்ணோட்டம்' என்னும் ஒற்றை சுலோகத்தில் மறைத்து விடுகிறார் சிவசேகரம். குரேசியர்கள், அல்பேனியர்கள் போன்ற தேசிய இன மக்களை இனப்படுகொலை செய்த குற்றத்துக்காகக் கூண்டிலேற்றப்பட்ட 'செர்பிய இட்லர்' ஸ்லோபோதான் மிலோசெவிக் தனக்குச் சிவசேகரம் போன்ற இடதுசாரி அபிமானிகள் இலங்கையில் இருப்பது தெரியாமலே, பாவம், செத்துப் போய் விட்டார்! மிலோசெவிக்கின் செர்பிய சோசலிசத்தை நம்புகிற சிவசேகரம் தனக்கு அருகிலிருக்கும் சிங்கள இராசட்பசனின் சோசலிசக் கண்ணோட்டத்தையும் ஏகாதிபத்திய எதிர்ப்பையும் கூட நம்பலாமே! பிரபாகரன் அணியாத செந்துண்டை இராசபட்சன் அணிந்திருப்பது போதாதா? புலிகள் மீதான வெறுப்பு சிவசேகரத்தை எங்கு கொண்டு போய் நிறுத்துகிறது, பாருங்கள்!

சிவசேகரம் சொல்கிறார்: 

"இலங்கையைப் பொறுத்தவரை, ஏகாதிபத்தியங்கள் முழு இலங்கையையுமே தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க இயலும் போது, தனி ஈழத்தை அவர்கள் ஆதரிக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்தக் கருத்தில் இந்தியாவிற்கும் உடன்பாடு இருப்பதாலும் தனி ஈழம் அவர்களால் ஆதரிக்கப்படவில்லை.”

இலங்கைத் தீவு ஒரே அரசின் கீழ் இருப்பதை வல்லாதிக்கங்கள் இந்தியா உட்பட விரும்புகின்றன. தனி ஈழத்தை அவர்கள் விரும்பவில்லை. இந்த முற்கோளிலிருந்து அடைய வேண்டிய முடிவு என்ன? தமிழீழ விடுதலைக்கான போராட்டம் வல்லாதிக்கங்களுக்கு எதிரானது என்பதுதானே? தனிநாடு கிடைப்பதும் கிடைக்காமற் போவதும் வல்லாதிக்கங்களின் ஆதரவு அல்லது எதிர்ப்பைப் பொறுத்தது என்ற பார்வை எவ்வகையில் இடதுசாரி அல்லது மார்க்சிய அணுகுமுறையாகும்? 

விடுதலையும் கூட்டாட்சியும் 

சிவசேகரம் சொல்கிறார்: 

". . . புலிகள் தாங்கள் பிரிவினையைக் கோரவில்லை, சமஷ்டியைத்தான் கோருகிறோம் என்பதாகப் பிரச்சாரத்தை எடுத்துச் சென்றிருக்கலாம். அப்படிச் செய்திருந்தால் உலக நாடுகளின் ஆதரவைக் கூட ஒருவேளை பெற்றிருக்கலாம்.”

தனித் தமிழீழத்தை வல்லாதிக்கங்கள் ஆதரிக்கவில்லை என்றும், புலிகள் தனித் தமிழீழம் கேட்கவில்லை என்று அறிவித்திருந்தால் உலக நாடுகளின் ஆதரவு கிடைத்திருக்கக் கூடும் என்றும் சிவசேகரம் சொல்வதன் பொருள் என்ன? வல்லாதிக்கங்களின் ஆதரவைப் பெறுவதற்காகப் புலிகள் தமிழீழ விடுதலைக் குறிக்கோளைக் கைவிட்டிருக்க வேண்டும் என்பதே. விடுதலைக்கு என்ன மாற்று? சமஷ்டி அல்லது கூட்டாட்சியே எனச் சிவசேகரம் நம்புவதாகத் தெரிகிறது. சிங்களப் பேரினவாத ஒற்றையாட்சி அரசை சமஷ்டி அல்லது கூட்டாட்சி அரசாக மாற்றுவது எப்படி? என்பதற்கு யாரிடமும் விடையில்லை.

வட அமெரிக்காவில் நிகழ்ந்தது போல் தனித் தனி அரசுகள் தாமாக விரும்பிச் சேர்ந்து உருவாக்குவதுதான் கூட்டாட்சி. இந்தியாவிலோ இலங்கையிலோ தேசிய அரசுகள் தாமாக விரும்பிக் கூட்டாட்சி அமைக்கவில்லை. வருங்காலத்தில் அப்படி அமைக்க வேண்டுமானால், முதலில் தேசிய இனங்கள் விடுதலை பெற்றுத் தமக்கான அரசுகளை அமைத்துக் கொள்ள வேண்டும். விடுதலைக்குப் பிறகுதான் கூட்டாட்சிக்கான வாய்ப்பே உண்டு என்பதால் கூட்டாட்சியை விரும்புகிறவர்கள் விடுதலைக்கான போராட்டத்தை ஆதரிக்க வேண்டும். விடுதலையை மறுப்பதற்காகக் கூட்டாட்சி, சுயாட்சி என்றெல்லாம் பசப்பக் கூடாது. இதற்குத்தான் கருணாநிதி இருக்கிறாரே, சிவசேகரம் எதற்கு?

இடதுசாரி என்பவர் சமூக மாற்றத்தை விரும்புகிறவர். அடிமைப்பட்டிருக்கும் எந்தத் தேசிய இனத்தாலும் சமூக மாற்றம் காண முடியாது. ஒடுக்குண்ட தேசத்தின் விடுதலையை எதிர்க்கிற யாரும் இடதுசாரியாக இருக்க முடியாது, ஏன், சனநாயகவாதியாகக் கூட இருக்க முடியாது. தமிழ்த் தேசமும் தமிழீழத் தேசமும் ஒடுக்குண்டுக் கிடக்கின்றன. அவற்றின் விடுதலைப் போராட்டத்தை எதிர்த்துக் கொண்டே இடதுசாரிப் பட்டஞ்சுமந்து திரியவும் ஆசைப்பட்டால் எப்படி? 

ஈழப் போராட்டம் விடுதலைப் போராட்டம் இல்லையா?

புஜ தனது கேள்விகளிலோ சிவசேகரம் தன் விடைகளிலோ தமிழீழப் போராட்டத்தை விடுதலைப் போராட்டம் எனக் குறிப்பிடவில்லை. 'ஈழத் தமிழ் மக்களின் சுயநிர்ணயப் போராட்டம்' என்றுதான் புஜ சொல்கிறது. தேசிய விடுதலைப் போராட்டத்துக்கு அடிப்படையாக இருக்கும் உரிமை சுயநிர்ணய உரிமைதான் என்பதில் ஐயமில்லை. ஆனால் ஒரு தேசிய விடுதலைப் போராட்டத்தை நேராகவே அப்படிச் சொல்வதில் தயக்கம் ஏன்? வியத்நாமிய விடுதலைப் போராட்டத்தையோ, அல்ஜீரிய விடுதலைப் போராட்டத் தையோ, பாலத்தீன விடுதலைப் போராட்டத்தையோ இவர்கள் 'சுயநிர்ணயப் போராட்டம்' எனத் தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவதில்லையே, ஈழம் குறித்து மட்டும் ஏனிந்தக் காழ்ப்பு?

விடுதலைப் போராட்டங்களும் சரி, விடுதலை இயக்கங்களும் சரி, குற்றங்குறையே இல்லாதவை - செந்நிறைவானவை - அல்ல. இந்தக் குற்றங்குறைகளைச் சுட்டிக்காட்டித் திறனாய்வு செய்வது விடுதலை இயக்கத்தின் தேவையை அறிந்தேற்று, அதன் முன்னேற்றத்துக்கு உதவுவதாய் இருக்க வேண்டும். புஜவும் சரி, சிவசேகரமும் சரி, விடுதலையை மறுப்பதற்கே இடதுசாரிக் கொடி பிடிக்கிறார்கள். இவ்வகையில் இந்தத் தமிழ் இடதுசாரிகள் பழைய சிங்கள இடதுசாரிகளிடமிருந்து பெரிதாய் மாறுபடவில்லை. ஓர் உண்மையான இடதுசாரி உண்மையான மார்க்சியர், உண்மையான சோசலிசவாதி கூறியதை எடுத்துக்காட்டி இந்தக் கட்டுரையை நிறைவு செய்வது பொருத்தமாக இருக்கும்:

"சோசலிசவாதிகளின் கண்ணோட்டத்தில் தேசிய ஒடுக்குமுறை எழும் சூழலில் தேசிய விடுதலைக் கடமைகளைக் கண்டுகொள்ளாமல் இருப்பது தவறு என்பதில் ஐயமில்லை."

(தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை, லெனின், தேர்வு நூல்கள் - முதல் பாகம், பக்கம்: 628)

Pin It