சென்ற ஆண்டு மே 17 – முள்ளிவாய்க்கால் முழுப்பேரழிவு உச்சம் கண்ட நாள். இந்த ஆண்டு அதே மே 17 – நாடு கடந்த தமிழீழ (நா.க.த.) அரசாங்கப் பேரவையின் முதல் கூட்டம் தொடங்கியது. முல்லைத் தீவின் குருதிச் சேற்றில் புதையுண்ட ஈழக்கனவு அமெரிக்க நகரம் பிலடெல்பியாவின் சுதந்திரச் சதுக்கத்தில் மீண்டெழுந்தது.
நா.க. தமிழீழ அரசின் பேரவைக் கூட்டம் 2010 மே 17 பிற்பகல் தொடங்கி மே 19 பிற்பகல் வரை மூன்று நாள் நடைபெற்ற அந்த மண்டபமும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஒன்று. இதே மண்டபத்தில்தான் வட அமெரிக்காவின் 13 குடியரசுகள் கூடி அமெரிக்க ஐக்கிய நாடுகளை (யு.எஸ்.ஏ.) உருவாக்கி, அதற்கான அரசமைப்பையும் வரைந்தன.
தமிழீழ விடுதலைப் போர் படைவகையில் கொடுந்தோல்வி அடைந்த போதிலும், தமிழீழத்துக்கான வரலாற்றுத் தேவை மறைந்தோ தணிந்தோ போய்விடவில்லை. பார்க்கப் போனால், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தமிழீழ மக்களுக்கான தனியரசுத் தேவையை அறுதியாக வலுப்படுத்தியே உள்ளது. ஒருபுறம் விடுதலையின் தேவை வலுப்படுதல், மறுபுறம் விடுதலைப் போராட்டம் தோற்று அதனால் மக்களிடம் பெருஞ்சோர்வு ஏற்படுதல் – இந்த இரு நிலைகளுக்கும் இடையிலான முரண்பாட்டை எப்படிக் களைவது? புலத்திலிருந்து எழுந்த இவ்வினாவிற்குப் புலம் கடந்து காணப்பட்டுள்ள ஒரு விடைதான் நா.க. தமிழீழ அரசாங்கம்.
நா.க. தமிழீழ அரசாங்கம் என்ற கருத்தாக்கம் அனைத்து வடிவங்களிலுமான தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தேவையை விலக்கிவிடவில்லை. இறுதிக் களம் இப்போதும் கூட தமிழீழமே. புலம்பெயர் நாடுகளிலும் கூட நா.க.த. அரசாங்கம் வந்து விட்டதால் வேறு அமைப்புகளே தேவையில்லை என்று யாரும் கூறவில்லை. ஆனால் பிற அமைப்புகளிலிருந்து நா.க.த. அரசாங்கம் அடிப்படையிலேயே வேறுபட்டது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். தமிழீழ மக்கள் அனைவரின் சார்பிலும் அரசுறவியல் முயற்சிகளை மேற்கொள்ள நா.க.த. அரசாங்கத்தால் மட்டுமே இயலும். இது பாலத்தீனத் தேசிய மன்றம் போன்ற அமைப்பு; தாயகத்திலிருந்து துரத்தியடிக்கப்பட்ட மக்களின் ஆட்சி மன்றம் எனலாம்.
முள்ளிவாய்க்கால் முழுப்பேரழிவிற்குப் பின் தமிழீழ விடுதலையின் தேவையை ஏற்றுக் கொள்வோர் தொகை உலகெங்கிலும் பெருகியுள்ளது. அரசுகளின் அறிந்தேற்பு உடனே வராமல் போகலாம். உலகப் பொதுக் கருத்தில் தமிழீழம் ஏற்கப் பெறும் நிலை வளர்ந்து வருவதன் அறிகுறியாக நா.க.த. அரசாங்கத்தின் முதல் நாள் அமர்வில் சிறப்பு விருந்தினர்கள் பலரும் பங்கேற்றிருப்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி. 1967-69 காலத்தில் அமெரிக்க அதிபர் ஜான்சன் ஆட்சியில் சட்ட மா அதிபராக இருந்த ராம்சி கிளார்க் இவ்வாறு பேசியுள்ளார்:
"உங்கள் சுதந்திரம் அடையக் கூடியதே. உங்கள் வரலாற்றை மறக்காதீர்கள். கடந்து வந்த பாதைகளை மறக்காதீர்கள். நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். உங்கள் நியாயத்தை நன்றாக எடுத்துரைக்க வேண்டும். நீங்கள் ஒற்றுமையாக இருந்தால் வெற்றி உறுதி."
சூடானிய மக்கள் விடுதலை இயக்கத்தின் அமெரிக்கப் பேராளர் டொமாஸ் வோல்ரூஸ் பேசியதாவது: "எப்போதுமே போராட்டத்தின் விளைவு ஓர் இரவில் வந்து விடுவதில்லை. அதற்குக் காலம் வரையறுக்க முடியாது. இந்த உண்மையை உள்வாங்கித் தமிழர்கள் ஒற்றுமையுடன் போராட வேண்டும். சூடானிய விடுதலை இராணுவம் பெரும் படைகளை வைத்திருந்த போதும் இராணுவ வகையில் இன்னமும் வெல்ல முடியவில்லை. ஒருங்கிணைந்த மக்கள் போராட்டமும் நீண்ட காலச் செயற்பாடுகளும் தேவை."
நா.க. தமிழீழ அரசாங்கம் திட்டவட்டமான சனநாயக நெறிகளின்படி அமைக்கப்பட்டுள்ளது. பேரவையின் உறுப்பினர் தொகை 135 என்றும், இதில் 115 உறுப்பினர்களை நேரடித் தேர்தல் வழியாகத் தேர்ந்தெடுப்பது என்றும், எஞ்சியவர்களை அமர்த்தம் செய்வது என்றும் திட்டமிடப்பட்டது. சில நடைமுறைச் சிக்கல்களால் இதுவரை 87 உறுப்பினர்களே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கனடாவிலிருந்து மட்டும் 25 பேர்; பிரிட்டன் - 17; அமெரிக்கா - 10; சுவிட்சர்லாந்து - 10; பிரான்சு - 07; இவ்வாறு மேலும். ஒரு சில இடங்களில் தேர்தல் முறைகேடுகள் பற்றிய முறையீடுகளினால் காலத் தாழ்வு ஏற்பட்டுள்ளது.
தொடக்கம் என்றாலே இடர்ப்பாடுதான் என்பதை மறந்து விடக் கூடாது. மேலும் சனநாயகத்தைச் செயலாக்கும் போது எழும் சிக்கல்களுக்கு அஞ்சி சர்வாதிகாரத்தை நாட முடியாது. ஒட்டடைக்கு அஞ்சி வீட்டைக் கொளுத்த முடியாது அல்லவா?
நா.க.த. அரசாங்கத்தின் முதல் பேரவைக் கூட்டம் பல நல்ல முடிவுகளை எடுத்துள்ளது. தமிழர்த் தாயகத்தில் முன்னெடுக்க வேண்டிய அவசரத் திட்டங்கள், குறுங்காலத் திட்டங்கள், இதற்குப் பொருத்தமான அமைச்சுக் கட்டமைப்புகள், சட்டவாக்கக் குழுக்கள், புலம் பெயர் மக்கள், காவலில் அடைத்து வைக்கப்பட்டிருப்போர் தொடர்பான ஒரு செயற்பாட்டணி. . . இப்படிப் பல முடிவுகளும் முதல் அமர்வில் எடுக்கப்பட்டுள்ளன.
நா.க.த. அரசாங்கத்துக்கான அரசமைப்பை உருவாக்கும் அரசமைப்புக் குழுவும், அதுவரைக்குமான இடைக்கால நிறைவேற்றுக்குழுவும் அமைக்கப்பட்டிருப்பது நம்பிக்கை தரும் நல் முயற்சியாகும். நா.க. தமிழீழ அரசாங்கத்தின் தலைவராக உருத்ர குமாரன் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு நல்வாழ்த்தினை உரித்தாக்கி மகிழ்கிறோம். தமிழின வரலாற்றில் பெரும் நெருக்கடி சூழ்ந்த காலக்கட்டத்தில் இவர் இப்பொறுப்பினைத் திறம்பட நிறைவேற்றுவார் என உறுதியாக நம்புகிறோம்.
நா.க. தமிழீழ அரசாங்கத்தின் உருவாக்கத்தில் தமிழகத்திலிருக்கும் ஈழத் தமிழர்களுக்குப் பங்கில்லாமற் போனது தமிழகத்தின் அவல நிலையைக் காட்டுகிறது. பிற நாடுகளில் நடைபெற்றது போல் இந்தியாவிலும் – குறிப்பாகத் தமிழகத்திலும் – நா.க. தமிழீழ அரசாங்கத்துக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும். இந்திய அரசோ தமிழக அரசோ இதை எவ்வகையிலும் தடுக்கலாகாது.
தமிழக மக்களும், உலகத் தமிழர்களும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை வரவேற்று ஆதரிக்க வேண்டுகிறோம்.
பகலவன் மறைந்து இரவு வந்த பின்
வெளிச்சம் தர ஏற்றிய அகல் விளக்கை அணையாது காப்போம்!
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வருக! வாழ்க! வெல்க!