கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

'அறுக்க மாட்டாதவன் கையில் அய்ம்பத்தெட்டு அரிவாள்' என்பது பழமொழி. 'எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டாத அரசுக்கு ஏகப்பட்ட கமிசன்கள்' என்பது புது மொழி. கமிசன்கள் விசாரணை செய்வது என்பது வெங்காயத்தை உரிப்பது போன்றது. கடைசியில் எதுவும் இருக்காது.

பிறகேன் விசாரணைக் கமிசன் போடப்படுகிறது எனக் கேட்கலாம். ஒரு பெரிய அசம்பாவிதம் - துப்பாக்கிச் சூடு, கலவரம், பிரமுகர் கொலை, குண்டு வெடிப்பு, பெரிய அளவில் ஊழல் போன்ற அசம்பாவிதங்கள் நடந்தால், அதன் காரணமாக ஆளுங்கட்சிக்கு இக்கட்டு ஏற்படும் என்றால், அது தன்னைத் தற்காத்துக் கொள்வதற்காகவும் இந்த அசம்பாவிதங்களை சாக்கிட்டு எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் வாய்ப்பு ஏற்படும் என்றால், அதில் எதிர்க்கட்சியைச் சிக்க வைத்து ஆளும் கட்சியினர் சொற்படி நடக்கும் கட்சியாக்குவதற்கும், பொது மக்களின் கோபாவேசத்தைத் தணிப்பதற்கும், கவனத்தைத் திசை திருப்புவதற்கும், நிகழ்ச்சியே மறந்து போகும்படி காலங் கடத்துவதற்கும் என்று அமைக்கப்படுவதுதான் விசாரணைக் கமிசன் ஆகும்.

இதெல்லாம் உண்மைதானா என்பதையும் கமிசனைப் பற்றி நடுவர்களும் (நீதிபதிகள்) வழக்கறிஞர்களும் என்ன கூறுகிறார்கள் என்பதையும் முறையாகப் பார்ப்போம்.

1850ஆம் ஆண்டு போடப்பட்ட பொதுப்பணி விசாரணைச் சட்டம்தான் 1952வரை செயல்பாட்டில் இருந்தது. விசாரணைக் கமிசன் சட்டம் 1952ஆம் ஆண்டு போடப்பட்டது. இச்சட்டத்தின் பிரிவு 3இன் படிதான் விசாரணைக் கமிசன்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலும் ஓய்வுபெற்ற நடுவர்களே (ஒருவரோ அதற்கும் மேலோ) நியமிக்கப்படுவார்கள். இவர்கள் 'அசல்' நடுவர்கள் போலவே நடப்பார்கள், நிற்பார்கள், உட்காருவார்கள், சம்பளம் பெறுவார்கள். விருப்பம் போல் காலநீட்டிப்புச் செய்து கொண்டு சுகவாசத்தைத் தொடர்வார்கள். இவர்களுக்கு விசாரிக்கவும் குற்றச்சாட்டுக் கூறவும்தான் அதிகாரம் உண்டே தவிர யாரையும் தண்டிக்கும் அதிகாரம் கிடையாது, பரிந்துரைக்கலாம், அதை ஆளும் அரசு ஏற்கலாம் அல்லது நிராகரிக்கலாம். மற்றபடி, நீதிமன்றம்தான் மேல் விசாரணை செய்ய, தண்டிக்க உரிமையுடையதாகும். சில விசாரணைக் கமிசன்களைப் பற்றிப் பார்ப்போம்

எம்.சி. சக்ளா கமிசன்

ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் ஊழல்: ஆ.கா.க.த்தின் பங்குகள் விதிக்குப் புறம்பாகப் பரிமாறப்பட்டன. இதற்கு மூளையாகச் செயல் பட்டவர் ஹரிதாஸ் முந்திரா என்பவர். இது நடந்தது 1950களில் - நேரு காலத்தில். சக்ளாவின் பரிந்துரையை அரசு ஏற்றது. பிறகு, வழக்குமன்றம் விசாரித்து முந்திராவுக்கு 22-ஆண்டு சிறைத்தண்டனை வழங்கியது. அப்போதைய நிதியமைச்சர் டி.டி. கிருஷ்ணமாச்சாரி, வேறு வழியின்றிப் பதவி விலகினார். ஒரே மாதத்தில் கமிசன் தனது விசாரணையை முடித்துக் கொடுத்துத் தண்டனை வழங்கப்பட்டது என்பது இதுவே முதல்முறையும் கடைசி முறையுமாகும்.

ஜே.சி.ஷா கமிசன்

ஜனதா கட்சி 24.3.1977 அன்று ஆட்சிக்கு வந்தவுடன் 1977-இல் இக்கமிசன் அமைக்கப்பட்டது. இந்திரா காந்தி அம்மையார் ஆட்சியிலிருந்த போது பிரகடனப்படுத்திய அவசரநிலைக் காலத்தில், அதிகாரம் தவறாகப் பயன்பட்டதென்று கூறி, அதை விசாரிக்க இக்கமிசன் அமைக்கப்பட்டது. இது, 500 பக்க அறிக்கையை சமர்ப்பித்தது.

பிறகு நடந்த 1980ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் மீண்டும் இந்திரா காங்கிரஸ் கட்சி ஆட்சிக் கட்டிலேறியது. அம்மையார் செய்த முதல் வேலை இக்கமிசனைக் கலைத்ததுதான். பிறகு எதுவுமே நடக்கவில்லை. இதைப் போலவே, மாருதி உத்யோக் நிறுவன முறைகேடுகளை விசாரிக்க அமைக்கப்பட்ட ஏ.சி. குப்தா கமிசனும் கலைக்கப்பட்டது.

தாக்கர் கமிசன்

பிரதமராக இருந்த இந்திரா அம்மையார் 31-10-84 அன்று அவரது காவலர்களாலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். அது குறித்து விசாரிக்க இக்கமிசன் அமைக்கப் பட்டது. மார்ச்சு 1986இல் நாடாளுமன்றத்தில் இக்கமிசனின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இந்திராவுடன் கூடவே இருந்த ஆர்.கே. தாவன் மீது அவ்வறிக்கையில் கடுமையான சந்தேகம் தெரிவிக்கப்பட்டிருந்தது. அவர் மீது எவ்விதப் புலன்விசாரணையும் நடக்கவில்லை. முதல் தகவல் அறிக்கை கூட போடப்படவில்லை.

வேடிக்கை என்னவென்றால் இந்திராவின் மகன் இராஜீவ் காந்தி தவானுக்கு மறுவாழ்வளித்தார். தாவன் இப்போது சோனியா காந்திக்கும் நெருக்கமானவராக இருந்து வருகிறார்.

ரெங்கநாத் மிஸ்ரா கமிசன்

இது 26-04-1985 அன்று அமைக்கப்பட்டது. இந்திரா கொல்லப்பட்ட போது ஏராளமான அப்பாவிச் சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். டெல்லியில் வன்முறை வெறியாட்டம் கட்டவிழ்த்து விடப்பட்டது. இது ஒரு திட்டமிட்ட செயலா என்பதை விசாரிக்க இக்குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் அறிக்கை 1986ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டது. வன்முறைக் கலவரம் முன்கூட்டியே திட்டமிட்ட செயல் என அவ்வறிக்கையில் சொல்லப்பட்டிருந்தது. அரசு இதை ஏற்கவில்லை. ஏன் தெரியுமா? கமிசன், காங்கிரசை அல்லவா குற்றவாளிக் கூண்டில் நிறுத்திவிட்டது, அதனால்தான்.

இதை மேலும் விசாரிக்க வேண்டும் என்று நொண்டிச் சாக்கு கூறி, இருநபர் கமிசனை 1987-ஆம் ஆண்டு அரசு நியமித்தது கப+ர் மிட்டல் மற்றும் ஜெயின் ரெனிசன்தாம் அந்த இருநபர்கள். ஈராண்டு கழித்து டெல்லி உயர்நீதி மன்றம் மூலம் இக்குழு செயல்படக் கூடாதென்று தடையாணை பெறப்பட்டது.

பிறகு, 1990இல் போட்டி மற்றும் ரோஷ் இவர்களைக் கொண்ட வேறோர் கமிசன் அமைக்கப்பட்டது. அதன் பதவிக் காலம் முடிந்த பிறகு ஜெயின் மற்றும் அகர்வங் கொண்ட இருநபர் பேனல் (Panel) நியமிக்கப்பட்டது. கடைசியாக 1993ஆம் ஆண்டு 129 வழக்குகளை மீண்டும் விசாரிக்கும்படி உத்தரவிடப்பட்டது.

குற்றவாளிகள் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தால் சட்டம் அவர்களைத் தீண்டாது, மாறாகச் சுற்றி சுற்றி வரும் என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும்.

1995-96 இல், அதாவது பதினோராண்டுகள் கழித்து, 136 பேர் தண்டிக்கப்பட்டனர். காங்கிரஸ் தலைவர் ஹெச்.கே.எல்.பகத் சிறையிலடைக் கப்பட்டார். அவரும் குறுகிய காலத்திலேயே பிணையலில் வெளிவந்தார் இதற்கிடையில், மக்கள் இதை மறந்து விட்டார்கள். இதற்காகத் தானே இத்தனைக் கமிசன்கள் போடப்பட்டன! காலமும் நீட்டிக்கப்பட்டது!

எம்.எஸ்.லிபரான் கமிசன்

உத்தரப் பிரதேசத்தில் அயோத்தி நகரில் இருந்த பாபர் மசூதி கடந்த 6.12.1992 அன்று இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. நாடெங்கும் கலவரம் மூண்டது. ஏறக்குறைய 3000 பேர் கொல்லப் பட்டனர். இதை விசாரிக் கத்தான் மன் மோகன் சிங் லிபரான் கமிசன் அமைக்கப் பட்டது. பத்தாவது நாளில் அதாவது 16.12.1992 அன்று. மூன்றே மாதத்தில் அறிக்கை சமர்ப்பிக்கு மாறு லிபரான் கேட்டுக் கொள்ளப்பட்டார்., அப்போதையப் பிரதமர் நரசிம்ம ராவ். ஆனால் மூன்று மாதம் கழித்துத்தான் விசாரணையே தொடங்கியது.

விசாரணை செய்ய 13 ஆண்டுகள். அறிக்கை எழுத நான்கு ஆண்டுகள். நான்கு தொகுதிகள் சமர்ப்பிக்கப்பட்டன. மூன்று மாதங்கள் எப்படி பதினேழு ஆண்டுகள் ஆயின? ஓய்வு பெற்றும் ஓய்வு பெறாத நீதிபதி போல் சொர்க்க வாழ்க்கை வாழ்ந்தார் லிபரான். அதை இழக்க அவர் தயாராக இல்லை. அவருக்கு சம்பளம் மாதம் 30,000 ரூபாய். காருக்குச் செலவு 2 லட்சம். எரிபொருள் மாதம் 200 லிட்டர். பயணச் செலவு 16 லட்சம். பணியாளர்கள் 22 பேர்கள். அவர்களுக்கு இதுவரை ஆன செலவு 4.5 கோடி. மொத்தத்தில் ஆன செலவு 8 கோடி. 48 முறை கால நீட்டிப்புப் பெற்றார். 399 அமர்வுகள். 30.6.2009 அன்றுதான் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

இவ்வளவு பணமும் காலமும் ஏன் வீணாக்கப்பட்டது? அன்றைய பிரதமர் நரசிம்மராவ் குற்றவாளி. பிறகு வந்த வாஜ்பாயி குற்றவாளி. எல்.கே.அத்வானி குற்றவாளி. இவைதாம் காரணம்.

இன்றைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நாடாளுமன்றத்தில் இவ்வறிக்கையை சமர்ப்பித்து, யார் மீதும் எந்த நடவடிக்கையும் கிடையாது என்று கூறி விட்டார்.

'எண்ணெய் செலவானதே தவிர பிள்ளை பிழைத்த பாடில்லை' என்னும் கதையாகி விட்டது நிலைமை.

இதனால்தான் விசாரணைக் கமிசனும் வெங்காயமும் ஒன்றென்கிறோம் நாம்.

ஜெயின் கமிசன்

ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதை விசாரிக்க இது அமைக்கப்பட்டது. ஏழு ஆண்டுகள் விசாரணை நடந்ததே தவிர எந்த அறிக்கையும் சமர்ப்பிக்கப்படவில்லை. இடைக்கால அறிக்கையைத் தவிர. இதன் காரணமாக ஐ.கே.குஜ்ரால் அரசை சீத்தாராம் கேசரி கவிழ்த்தார். விளைவு பொதுத் தேர்தல். மக்கள் வரிப்பணம் பல ஆயிரம் கோடி பாழானது. இதோடு கமிசனுக்கு ஆன செலவு 2.81 கோடி ஆகும். கமிசனின் பலனைப் பார்த்தால் வேதனையாக இருக்கிறது.

ஜே.எஸ்.வர்மா கமிசன்

இராஜீவ் கொலைக்குப் பாதுகாப்புக் குறைபாடுகள் காரணமா என்பதறிய இக்கமிசன் அமைக்கப்பட்டது. சூன் 1992இல் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. உள்துறை அமைச்சர் எஸ்.பி. சவான் அதை முற்றாக நிராகரித்தார். 5 ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டது.

ஈராண்டுகள் கழித்து தமிழ்நாட்டு (ஐஜிபி) ஆர்.கே. ராகவன் மற்றும் உளவுத்துறை (ஐஜிபி) சர்மா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாட்டரசு கேட்டுக்கொள்ளப்பட்டது. அன்றைய முதல்வர் ஜெயலலிதா இதைக் கண்டு கொள்ளவேயில்லை!

மத்திய உளவுத்துறையின் தலைவர் எம்.கே. நாராயணன் உட்பட நான்கு அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டது. சாக்குப் போக்குச் சொல்லி இவர்கள் தப்புவிக்கப்பட்டனர். அதே எம்.கே. நாராயணன் பாதுகாப்புத்துறை செயலாளராகவும் இருந்து இப்போது மேற்கு வங்க கவர்னராக இருந்து வருகிறார்.

இராஜீவ் கொலைக்குக் காரணமான வர்கள் இன்றும் சுதந்திரமாக உலவி வருகின்றனர். அதை மறைக்க விடுதலைப் புலி காரணம் என்று ஒப்பாரி வைக்கின்றனர் ஊராள்வோர்.

வெங்கிடசாமி (டெஹல்கா) கமிசன்

ஆயுத பேர ஊழல் 13.3.2001இல் தொடங்கி நடந்தது. பொறி வைத்து வலைவிரித்துப் பெண்ணைக் கருவியாகப் பயன்படுத்தி ஊழலில் சிக்க வைத்து இரகசிய படக்கருவி மூலம் பதிவுசெய்து டெஹல்கா ஊடகம் ஒளிபரப்பியது. இதை விசாரிக்க 24.3.2002 அன்று கமிசன் அமைக்கப்பட்டது. பதவியிலிருந்த நடுவர் வெங்கிடசாமி தலைமையில், அதிர்ச்சி தரும் உண்மைகளின் வேர்களுக்குச் சென்றவுடன் இப்பணியே வேண்டாம் என்று ஓடி விட்டர்கள்.

பிறகு, நடுவர் எஸ்.என்.ஃபுகான் தலைமையில் 1.1.2004 அன்று கமிஷன் அமைக்கப்பட்டது. 4.10.2004 அன்று இது கலைக்கப்பட்டது. பிறகு சி.பி.ஐக்கு மாற்றப்பட்டது. 30 மாதங்கள் வீணாக்கப்பட்டன. ஏன் இத்தனைக் கூத்து நடந்தது என்றால் ஊழல் புரிந்தவர்கள் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள். அதனால் ஊழல் புரிந்தவர்களை விட்டுவிட்டு அதை அம்பலப்படுத்தியவர்கள் மீது சட்டம் திரும்பிப் பாய்ந்தது.

டெஹல்கா ஊடகத்திற்குப் பணஉதவி செய்தவர்கள் வீட்டில் வருமான வரிச் சோதனைகள் நடத்தப்பட்டன. அம்பலப்படுத்த உதவியவர்கள் சிறையிலடைக்கப்பட்டனர்.

அகப்பட்டவர்கள் வக்கிரமாக வாதம் புரிந்தனர். ஊழல் செய்தவரின் அந்தரங் கத்தில் தலையிட லாமா என்றனர் அம்பலப்படுத்தப் பெண்களைப் பயன்படுத்தலாமா என்றனர். தூண்டில் போட்டுப் பிடிப்பது தர்மமல்ல என்றனர். அழிச்சாட்டியமாகக் குதர்க்கம் பேசினார்கள். ஊழல் செய்தவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதுதான் விளைவு. ஊழல் புரிந்தவரை விட்டுவிட்டு அதை அம்பலப்படுத்தியவர்களைத் தண்டிப்பதற்கா கமிசனும் சி.பி.ஐயும்?.

வலதுசாரி ஆட்சியில்தான் கமிசன்கள் வெங்காயம் என்பதல்ல. இடதுசாரி ஜோதிபாசு அமைத்த கமிசன்களும் இப்படித்தான். ஆஜாய் போஸ் கமிசன், ஹரட்டோஷ் சக்ரவர்த்தி கமிசன், ஜே.ஷர்மா கமிசன் என மூன்று கமிசன்கள் அவர் ஆட்சிக்கு வந்தவுடன் அமைத்தார். எல்லாம் அவசர நிலைப் பிரகடனம் பற்றியவை. கமிசன்களின் அறிக்கைகள் தூசுதட்ட ஆளின்றி குப்பையாகக் கிடக்கின்றன.

எத்தனையோ கமிசன்கள் அமைக்கப்பட்டன. அவற்றில் கோமாளித்தனத்தின் உச்சகட்டமான இருகமிசன்களைச் சொல்லியே ஆகவேண்டும்.

குஜராத் மாநிலம் கோத்ரா ரயில் நிலையத்தில் தொடர் வண்டியில் தீப்பிடித்தது குறித்து அலட்சியம் செய்யப்பட்டது. காரணம், மத்தியிலும் மாநிலத்திலும் பா.ஜனதா கட்சி ஆட்சி நடந்தது. பிறகு, நானாவதி கமிஷனை மோடி நியமித்தார். காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு யு.சி. பானர்ஜி தலைமை யில் கமிசன் அமைக்கப் பட்டது.

பானர்ஜி கமிசன் தீப்பிடித்தது ஒருவிபத்து என்றது. நானாவதி கமிசன் அது ஒரு திட்டமிட்ட சதி என்றது. நிகழ்ச்சி ஒன்று, முடிவுகளோ இரண்டு. அதுவும் நேரெதிர் முடிவுகள். இவர்கள் நீதிபதிகள்தாமா? அல்லது கோமாளிகளா? என்று கேட்கத் தோன்றுகிறது.

தமிழ்நாடு மட்டும் ஒழுங்கோ என்று கேட்டு விடாதீர்கள். சமச்சீர் கல்விக்காகப் போடப்பட்ட முத்துக்குமரசாமிக் குழுவின் அறிக்கையை ச.ம.உ.க்களே போராடித் தான் பெற்றார்கள். வலைதளத்தில் கூட நீங்கள் பார்க்க முடியாது. பயிற்று மொழி தமிழாக இருக்க வேண்டும் எனப் பரிந்துரைத்ததால் அதற்கு 'பெப்பே' சொல்வதற்காக இன்னொரு ஒருநபர் கமிட்டியைப் போட்டார் கருணாநிதி. அந்தக் கமிட்டி என்ன கூறியது என்பது நாட்டுக்குத் தெரியாது வெளியிடப் படவில்லையே. கடைசியாக ஆங்கிலவழிப் பள்ளி இருக்கும் என்று முடிவு கூறிவிட்டார் முதல்வர். முத்துக்குமரன் குழுவின் முக்கிய தமிழ் வழிக் கல்விப் பரிந்துரை குப்பையில் கலந்துவிட்டது.

சட்டக் கல்லூரி மாணவர் மோதல் குறித்த நீதிபதி சண்முகம் விசாரணை என்ன ஆனது? வழக்கறிஞர்கள் காவல்துறையினர் மோதல் குறித்த நீதிபதி பக்தவத்சலம் விசாரணை என்ன ஆனது? எல்லாம் மண்ணாய்ப் போனது.

இவ்வளவு ஏன்? விசாரணைக் கமிசன்களைப் பற்றி அதற்குத் தலைமை தாங்கியவர்களும் மூத்த வழக்கறிஞர்களும் மக்கள் உரிமைக் கூட்டமைப்பைச் சார்ந்தவர்களும் என்ன கூறுகிறார்கள் என்பதைப் பார்த்து விடுவோமே.

முன்னாள் இந்தியத் தலைமை நடுவர் வி.என்.கரே கூறுகிறார்:

“விசாரணைக் கமிசன்களை விட்டொழிக்க வேண்டும். அவை, நீதித்துறை நடவடிக்கைகளுக்கு அவப்பெயரை ஏற்படுத்தி வருகின்றன. ஓய்வு பெற்ற நீதிபதிகளுக்கு இது புகலிடமாக உள்ளது. இது ஒரு சங்கடமான உண்மை…….”

விசாரணைக் கமிசனுக்கு ஏற்கெனவே தலைமைதாங்கிய முன்னாள் நடுவர் ஆர்.சி. லஹோட்டி கூறுவது:

“விசாரணைக் கமிசன் சட்டத்தில் குறைபாடுகள் உள்ளன. திருத்தப்படவேண்டும்….. என்னைப் பொறுத்தளவில் கமிசனின் பரிந்துரைகளையும் முடிவுகளையும் செயற்படுத்த உத்தரவாதம் அளிக்காத வரை எந்த ஒரு நீதிபதியும் கமிசனுக்குத் தலைமை தாங்கும் பொறுப்பை ஒத்துக்கொள்ளக் கூடாது என நினைக்கிறேன்…. ஒரு கமிசனை நியமிப்பது மக்களின் கவனத்தைத் திசை திருப்புகிற தந்திரயுக்தியேயாகும். அது காலத்தை வீணாக்கும் காரியமே…”

உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் சொலிசிட்டர் ஜெனரல் கே.டி.எஸ். துளசி கூறுகிறார்:-

“அவசரம் முக்கியமானது. ஒரு விசாரணை சில வாரங்களில் முடிக்கப்பெறல் வேண்டும். மாதங்கள் ஆண்டுகள் கணக்கில் நீட்டக் கூடாது. நீட்டிக்கப்பட்டால் சான்றா தாரங்கள் மறைகின்றன. சாட்சிகள் நெருக்கடிக்கு ஆளாகின்றனர்….

“இந்தியா வேண்டுமானால் அமெரிக்க முறையைப் பின்பற்றலாம். அங்கே சுதந்திரமான கவுன்சில் சட்டம் உள்ளது… கென்னத் ஸ்டார் என்பவர் பில் கிளின்டன் மோனிகா லெவன்ஸ்கி பிரச்சினையை மேற்கண்ட சட்டத்தின் மூலம் விசாரித்தார். கிளின்டன் குற்றமிழைத்துள்ளார் எனப் பத்தே நாட்களில் கண்டுபிடித்து உலகிற்குத் தெரிவித்தார்”.

ஆர்.கே.தாவன் இந்து ஆன்லைன் ஏட்டில் 15.10.2004 அன்று இவ்வாறு கருத்து கூறுகிறார்:

'விசாரணைக் கமிசன்களுக்குப் பல் இல்லை. மிக அதிக காலம் எடுத்துக் கொள்ளும். சில அரசியல் காரணங்களால் தொடர் நடவடிக்கை இருக்காது…' என்று உச்ச நீதிமன்றம், ஹரியானா வழக்கு (2003) ஒன்றில் எச்சரித்திருப்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்… இன்று இந்தியக் கமிசன்கள் என்பவை தப்பிக்க உதவும் கருவிமட்டுமல்ல, பிரச்சினையை மூழ்கடிக்கவும் பிறரை அச்சுறுத்தும் கருவியாகவும் பயன்படுத்தப் படுகிறது.

மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் தலைவர் கே.ஜி.கண்ணபிரான் மே 2001 சுற்றறிக்கையில் கூறுகிறார்:

“டெஹல்கா மின்னூடகம் வெளியிட்ட செய்தி ஏற்கெனவே பத்திரிகையிலும் மின்னூடகங்களிலும் வெளியாகி விட்டன. பதவி விலக வேண்டிய நாடாளுமன்றப் பொறுப்பிலிருந்த ஆளுங்கட்சி அதிலிருந்து தப்பிக்க ஒரு விசாரணைக் கமிசனை அமைத்தது. பணியிலிருக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் பணியிலிருக்கும் நீதிபதி தலைமையில் புலனாய்வு செய்யவும் குற்றமிழைத்தவரைத் தண்டிக்கவும் போதுமான அதிகாரமற்ற விசாரணைக் கமிஷனுக்கு மாற்றியதன் மூலம் அவர் என்ன செய்துவிடமுடியும்?

“டெஹல்கா பதிவுசெய்த ஒளிநாடாவைத் தவிர, விசாரிப்பதற்கு வேறென்ன இருக்கிறது? அனுபவப்பட்ட ஒரு காவல்துறை அதிகாரியை விட, நடுவர்கள் (உயர் நீதிமன்ற அல்லது உச்ச நீதிமன்ற நடுவர்கள் - பணியிலிருக்கிற அல்லது ஓய்வு பெற்ற நடுவர்கள்) எந்த வகையில் புலனாய்வைச் சிறப்பாகச் செய்துவிட முடியும்? சான்றாதாரங்களைக் கலைத்துவிடுவார்களோ என்று சந்தேகத்திற்கிடமான நபர்களைக் கைது செய்வதற்கு கமிஷனுக்கு அதிகாரம் உள்ளதா?...” என்று கேட்கிறார் கே.ஜி. கண்ணபிரான்.

எனவே விசாரணைக் கமிசன் என்பது ஒரு வெட்டிக் கமிசனே ஆகும். அது ஒரு பல்லற்றக் கிழட்டு பொம்மைச் சிங்கம் அதனால் எதையும் பிடிக்கவும் முடியாது, கடிக்கவும் முடியாது. அது ஒரு கொம்பொடிந்த காளை- யாரையும் அதனால் முட்ட முடியாது. ஆனாலும் அதற்கு ஒரே ஒரு சக்தி மட்டும் உண்டு. ஆம், எதிர்கட்சிகளை அச்சுறுத்தி அடக்கி வைக்க அதற்கு ஆற்றல் உண்டு. வட்டரங்கில் (சர்க்கஸில்) அதன் இயக்குநர் (ரிங் மாஸ்டர்) வைத்திருக்கும் சாட்டையைப் போன்றது விசாரணைக் கமிசன். ஆளுங்கட்சி இந்த விசாரணைக் கமிசன் எனும் சாட்டையை எடுத்ததால் எதிர்கட்சித் தலைவர்களான லல்லு எனும் சிங்கம் சிறு நரியாயிற்று: மாயாவதி எனும் புலி இடித்த புளியாயிற்று: முலாயம்சிங் எனும் முரட்டுக்காளை சாதுவான முயலாயிற்று: இதுதான் நடந்தது. அண்மையில் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட வெட்டுத் தீர்மானத்தின் போது இவர்களனைவரும் (சிபுசோரன் உட்பட) வாலையும் ஆட்டினர், ஊளையும் இட்டனர்.

எனவேதான் நாம் கூறுகிறோம் : விசாரணைக் கமிசன் என்பது காலங் கடத்தவும், மறக்கடிக்கவும், ஆறப்போடவும் எதிர்க்கட்சிகளை ஒடுக்கிவைக்கவும் போடப்படுவதாகும். மக்கள் வரிப்பணம் பாழடிக்கப் படுகிறது. வுpசாரணைக் கமிசன் என்பது வெங்காயமே! உரித்தால் ஒன்றுமிருக்காது! எதிர்க் கட்சிகளின் கண்களில் நீர் வடியும். அவ்வளவுதான்!

- முருகு.இராசாங்கம்