இப்பொழுது பல வழிகளில் எளிதில் பொது மக்களை ஏமாற்றுகின்றனர். குறிப்பாக உழவர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். மானியம் என்பது உழவர்களுக்கு இன்றுவரை முழுமையாகக் கிடைக்கவில்லை. ஆளும் கட்சிக்காரர்களே பல வழிகளில் மானியத்தைக் கொள்ளை யடித்துவிடுகின்றனர். உழவுக்கு நீர்நிலைகள் மிக முக்கியம். அனைத்து நீர்நிலைகளையும், நீர்வழிகளையும் நம்மை ஆண்ட- ஆளும் கட்சிக்காரர்களே ஆக்கிரமித்துள்ளனர். நீர் நிலைகளை ஆக்கிரமிப்பது பல உயிரினங்களைக் கொலை செய்ததற்குச் சமம். இப்படிப்பட்டவர்களைத் தண்டிக்காத அரசும் அதிகாரிகளும் மக்கள் விரோதிகளே.

இலவசமாகத் தேர்தல் காலங்களில் பணம் மற்றும் பொருள் கள் கொடுத்து வாக்கு கேட்கும் அனைத்து அரசியல் கட்சிகளும் மக்கள் விரோதிகளே. இலவசமாகக் கொடுக்க வேண்டிய மருத்துவம், கல்வி, குடிநீர் போன்ற அத்தியாவசியமானவற்றை வியாபாரமாக்கிய அனைவரும் மக்கள் விரோதிகளே.

வியாபாரப் பொருட்களை வாங்கும் பொழுது அதிக எடை வைத்து வாங்குவதும், விற்கும் பொழுது எடை குறைவாக வைத்து விற்பதும், இதைக் கட்டுப்படுத்தாத அதிகாரிகளும் அரசும் மக்கள் விரோதிகளே. மருத்துவம் மற்றும் கல்வி நிறுவனங்களை வியாபாரமாக நடத்துபவர்களும், காடுகளை- இயற்கை வளங்களை அழிப்பவர்களும் மக்கள் விரோதிகளே.

பொது நலனுக்குப் போராடும் போராளிகளைப் பாராட்டாமல், அவதூறாகத் தீவிரவாதி என்று விமர்சிக்கும் ஊடகங்களும், விமர்சகர்களும் மக்கள் விரோதிகளே.

நதிகளை இணைக்காமல், கொள்ளையடிக்கும் திட்டங்களை மட்டும் தொடர்ந்து செயல்படுத்தும் அரசுகள் மக்கள் விரோதிகளே.

Pin It