இருட்டறையில் உள்ளதடா உலகம் சாதி
இருக்கிறது என்பானும் இருக்கின் றானே!
மருட்டுகின்ற பொய்க்கதைகள் மேல்கீழ் என்று
வகுத்ததுவே பார்ப்பனியம் மறந்தா போனோம்?
விரட்டுகின்ற கூட்டமடா வெள்ளைக் கூட்டம்;
வீழ்ந்துபட்ட கூட்டமாகத் தமிழர் கூட்டம்
மிரட்டுகின்ற வெறிச்சாதிச் செயலால் இன்று
வேறுபட்டோம்; பலவாறாய்ச் சிதைந்தே போனோம்!

உடன்பிறந்த பிறப்புகளைப் பகைத்தோம்! நாமோ
ஒருசாதிக் குள்ளேயே சிறுத்துப் போனோம்!
தடம்மாறித் தற்குறியாய் ஆனோம்; வீணில்
தறிகெட்டு வேற்றுமையால் உயர்வி ழந்தோம்!
விடம்போன்ற பார்ப்பனரின் புளுகுக் கூற்றை
விருப்பமுடன் மதிகெட்டு ஏற்றுக் கொண்டோம்!
தடந்தோளர் தமிழர்நாம் என்றோ வீழ்ந்தோம்
தாய்மொழியை உதறிவிட்டு நோயிற் சாய்ந்தோம்!

இளைப்பாற அமர்ந்தால்நம் நிழலும் தீட்டாம்
இக்கொடுமை அவர்க்கெதுவும் இல்லை பாரீர்!
இளக்காரம் ஏன்என்றே எதிர்த்துக் கேட்டால்
எலும்புடைப்பர் நம்முடலைத் துண்டாய்ச் செய்வர்
விளைக்கின்ற பயிர்மொத்தம் அவர்கள் வீட்டின்
விருந்திற்கு; நம்முடைய உழைப்பும் வேண்டும்
சளைக்காமல் உழைத்தாலும் சாமி; கோயில்
சாகும்வரை நுழைவதற்கு வழியே இல்லை!

பீடுபெறத் திருக்குறளைக் கற்றுத் தேர்வோம்
பீடையெனும் சாதிபேத நார்கி ழிப்போம்!
கேடற்ற நீதிநெறி தமிழில் உண்டு
கீழான சாத்திரத்தை எரிப்போம் இன்று!
பாடாற்றத் தயங்காத தமிழர் மாண்பு
பதிக்கட்டும் செம்மணியைத் தலையின் மீதில்
மேடுற்ற ஒருசிலரின் கொள்ளை வாழ்வு
வீழட்டும் இனிவேண்டாம் ஏற்றத்தாழ்வு!

- வள்ளுவன், பட்டாபிராம்

Pin It