வாசர் : என்ன மூர்த்தி, இந்த தடவை தேர்தலில் நமது ஜபம் செல்லாது போல் இருக்கின்றதே.

மூர்த்தி : எதனால் இவ்வளவு சந்தேகப்படுகின்றீர்கள்.

periyar 425வாசர் : எதனால் என்று கேட்கின்றாயே, ஒவ்வொன்றும் நீ நேரில் பார்க்கவில்லையா? நாம் போகின்ற இடங்களில் எல்லாம் மீட்டிங்கு போடக் கூட முடியாதபடி கலவரங்கள் நடக்கின்றதே; எவ்வளவோ கஷ்டப்பட்டு மிதவாதிகளிடம் இருந்த மேடைகளை நமது சுவாதீனம் செய்தோம். பிறகு அதை ஒத்துழையாமைக்காரர்கள் வந்து பிடுங்கிக் கொண்டார்கள். அதற்கும் எவ்வளவோ பாடுபட்டு அவர்களையும் விரட்டி அடித்து அவர்களிடமிருந்து சுவாதீனம் செய்து கொண்டோம். கடைசியாக அது ஜஸ்டிஸ்காரரிடம் கூட இல்லாமல் சுயமரியாதைக்காரரிடமல்லவா போய்விட்டது.

மூர்த்தி: அதென்ன ஜஸ்டிஸ்காரரிடம் கூட இல்லாமல் என்று அவர்களுக்காக வருத்தப்படுகின்றவர் போல் பேசுகின்றீர்களே.

வாசர் : ஜஸ்டிஸ்காரரிடம் போகாததால் எனக்கு வருத்தமில்லை. ஜஸ்டிஸ்காரரிடம் இருந்தால் நாம் அவர்களை சுலபத்தில் விரட்டியடித்து பிடுங்கிக் கொள்ளலாம். ஏனென்றால் அவர்களும் நம்மைப் போலவே ஓட்டர்களிடம் போய் பொய்யும் புளுகும் அடித்து ஓட்டுப்பெற முயற்சிக்கின்றவர்கள். ஆதலால் நாம் கொஞ்சம் அதிக கூலி ஆள் வைத்து விரட்டினால் மேடையை விட்டுவிட்டு ஓடி விடுவார்கள். சுயமரியாதைக்காரருக்கு ஒரு கவலையும் இல்லை. ஒருவர் தயவும் வேண்டியதில்லை. உள்ளதை உள்ளபடி கூப்பாடு போடுகின்றார்கள். அதனால் மேடைகள் எல்லாம் அவர்கள் வசமாய் விட்டன. அவர்களை விரட்டுவதென்றால் பெரிய கஷ்டமாக இருக்கின்றது. எங்கு போனாலும் அவர்கள் தொல்லை நம்மை தலைகாட்ட விடாமல் செய்கின்றது பார்.

மூர்த்தி: என்ன மகா பிரமாதம். திருச்சி, சேலம், கோயமுத்தூர், மதுரை இந்த ஜில்லாக்களில் தானே அவர்கள் ஜபம் செல்லும், மற்றபடி தஞ்சாவூர் நம்முடையது. அங்கு சில ஆட்கள் மாத்திரம் கூப்பாடு போடுவார்களே ஒழிய மற்றபடி ஓட்டர்களை ஒன்றும் செய்துவிட முடியாது.

வாசர் : என்ன சொன்னாலும் இந்த தடவை எலக்ஷனில் தமிழ் நாட்டை பொறுத்தவரை நமக்கு பூஜ்ஜியம்தான் கிடைக்கும் போலிருக்கின்றது. வேண்டுமானால் கணக்கு சொல்கின்றேன் கேள். திருநெல்வேலியில் திரு.ரெட்டியார் எப்படியும் வந்து விடுவார். மற்றொரு ஸ்தானம் யாராவது சைவ பிள்ளைமார்தான் வர முடியும். எப்படியும் பிராமணன் வர முடியாது. அந்த சைவப்பிள்ளையும் நம்முடன் சேர மாட்டார். டவுன் தொகுதிக்கும் இந்த தடவை சாவடிப் பிள்ளை வருவது கஷ்டம். வந்தாலும் நமக்கு ஒன்றும் இலாபமில்லை. ஆதலால் அந்த ஜில்லாவையும் மறந்துவிடவேண்டியதுதான்.

மூர்த்தி : ராமநாதபுரம் ஜில்லாவோ?

வாசர் : அதுவும் அப்படித்தான்: எப்படியும் திவான் பகதூர் முருகப்ப செட்டியார் வந்துவிடுவார். திரு. அள.அரு. நாராயண செட்டியார் சந்தேகம் வந்தாலும் நமக்குப் பிரயோஜனப்படமாட்டார். திரு.டி.சி.சீ. அய்யங்கார் வருவது இந்த தடவை கஷ்டமாகிவிடும். நாட்டுக் கோட்டைச் செட்டியார் போட்டியில் ஏதாவது நமக்கு கிடைத்தால்தான் உண்டு. அவர்கள் ஏதாவது ராஜியாய் போய்விட்டால் நம்ம பாடு ஆபத்துதான். ஆதலால் அதையும் விட்டுவிட வேண்டியதுதான்.

மூர்த்தி : சரி, அப்படியே வைத்துக்கொள்ளுவோம். மதுரை ஜில்லாவோ?

வாசர் : மதுரையை நினைக்காமலிருப்பதே மேலானது. ஏனென்றால் திரு.கே.ஆர்.வெங்கிடராமய்யர் தான் மாத்திரம் இனிமேல் சட்டசபைக்கு நிற்பதில்லை என்று அல்ல, தனது பின் சந்ததிகளையும் நிற்க வேண்டாம் என்று திட்டம் செய்ய தீர்மானம் செய்து கொண்டார். சென்ற தடவை நமது சி.பி. அவருக்கு பொய் நம்பிக்கை கொடுத்து எலக்ஷனால் 40, 50 ஆயிரம் ரூபாய் கடன் உண்டாக்கி விட்டார். அது சூடுகண்ட பூனை ஆதலால் இனி தலை காட்டாது.

சேத்தூர் ஜமீன்தாரும் இந்த ஜில்லாவில் நிற்பதில்லை என்று சொல்லிவிட்டாராம். எனவே திருவாளர்கள் பி.டி.ராஜனும், சௌந்திர பாண்டியனும், போடிநாயக்கனூர் செட்டியாரும் மாப்பிள்ளைகள் போல எதிரிகள் கூட இல்லாமல் வந்து விடுவார்கள் போல இருக்கின்றது. இதை நினைக்கும்போது என் வயிறு பற்றி எரிகின்றது. யாரையாவது போட்டிக்கு பெயருக்காவது நிறுத்தாவிட்டால் நமது யோக்கியதையே போய்விடும் போலிருக்கின்றது. ஆதலால் நாம் பணம் கொடுத்தால் கூட ஆள்களைக் காணோமே என்கின்ற கவலையில் இருக்கின்றேன்.

மூர்த்தி : சரி மதுரை டவுன்சீட்டு ஒன்று இருக்கின்றதல்லவா. அது நமது திரு. துளசிராமுக்குத் தானே அதில் என்ன ஆnக்ஷபம்?

வாசர்: அது அநியாயமாய்ப் போகின்றது. ஏன்? போய் விட்டதென்றே சொல்லலாம்.

மூர்த்தி : ஏன் அப்படிச் சொல்லுகின்றீர்கள்? அதில் கூடவா சந்தேகம்.

வாசர் : அதில் சந்தேகம் ஒன்றுமில்லை. தீர்மானமேதான். நமது துளசிராம் நிற்கவே மாட்டார். நின்றாலும் அவர் வகையார்களே ஓட்டு செய்ய மாட்டார்கள்.

மூர்த்தி : ஏன் ஓட்டு செய்ய மாட்டார்கள்?

வாசர் : ஏன் என்றா கேட்கின்றாய். அவர்கள் முன் போல கண்மூடித் தனமாக இல்லை. இப்போது காரியம் தெரிந்து கொண்டார்கள். முக்கால் வாசிப்பேர்கள் திரு.ஆர்.எஸ்.நாயுடுவுக்கே போடுவதாக இப்போதே தீர்மானம் செய்து கொண்டார்கள் என்பது அந்த வகைக்காரர்களாலேயே சொல்லத் தெரிந்து கொண்டேன். அந்த ஸ்தானம் கண்டிப்பாக ஆர்.எஸ். நாயுடுவுக்குத்தான். அதைவிட்டு வேறே பேச்சுப் பேசு.

மூர்த்தி : சரி அதுவும் தொலைந்து போகட்டும். திருச்சி ஜில்லாவோ?

வாசர்: அது மாத்திரம் என்ன வாழுமா? எப்படியும் திரு.நாராயண சாமிப்பிள்ளை வந்து விடுவார். நம்ம சேதுவுக்கு பதிலாக யாரையாவது போடலாம் என்றுதான் தோன்றுகின்றது. ஏன் என்றால் நம்மை ஏமாற்றி விட்டார். ஆனால் வேறு யாரைப் போடுவது என்று பார்த்தால் எல்லாம் அவரைவிட மோசமான ஆள்களாகத்தான் இருக்கின்றார்கள். அன்றியும் வேறு ஒரு பிராமணனை நிறுத்தினால் இரண்டு பிராமணன் சண்டையில் ஒரு பிள்ளைக்கோ, தேவருக்கோ, ரெட்டிக்கோ போய்விட்டால் அது இதைவிட கேவலமாய்விடும். பிராமணன் என்கின்ற பெயருக்காவது ஒரு ஆள் இருக்கட்டும். அவர் வந்தாலாவது மறுபடியும் மந்திரியாக்கி மாதம் 4,000 ரூ. வாங்கிக் கொண்டு ஏதோ 4 பிராமணனுக்கு வேலை கொடுத்துக் கொண்டி ருக்கட்டும். அவரை தொந்திரவு செய்ய வேண்டாம். ஆனால் நம்ம கணக்கிலும் சேர்க்க வேண்டாம்.

மூர்த்தி : சரி, திருச்சி, சீரங்கம், டவுன் சீட்டு இருக்கின்றதே. அதைப் பற்றி என்ன சொல்கின்றீர்கள்.

வாசர்: சரி, அது கண்டிப்பாய் இப்போது இருக்கும் திரு.யூ.ராமசாமி அய்யருக்கு கிடைக்காது. தவிரவும் முன்போல் இரண்டு பிராமணரல்லாதார் சண்டை போட்டுக் கொண்டால் மாத்திரம் ஒரு பிராமணனுக்குக் கிடைக்கும். ஆனால், இந்த தடவை அவர்களுக்குள் சண்டை வராது என்றே நினைக்கின்றேன்.

மூர்த்தி : சரி, இனி நம்முடைய தஞ்சாவூரில் மூன்றும் நம்முடையது தானே?

வாசர் : சரிசரி, நன்றாகச் சொன்னாய். மூன்றும் நம்முடையதென்றா சொல்லுகின்றாய்? மூன்றும் ஜஸ்டிஸ் கட்சிக்காரருக்கே போய்விட்டாலும் சரி அல்லது சுயமரியாதை கட்சிக்காரருக்கே போய்விட்டாலும் சரி. எப்படியாவது இந்த முத்தையா முதலியாருக்கு இல்லாமலிருந்தால் அதுவே பத்து ஸ்தானம் நமக்கு கிடைத்தது போலாகும்.

மூர்த்தி : இந்த தடவை கண்டிப்பாய் அவருக்கு ஆகப்போவதில்லை. நீங்கள் ஏன் கவலைப்படுகின்றீர்கள். காரணம் சொல்லட்டுமா?

வாசர் : நீ ஏன் அந்தக் கனவு காண்கின்றாய். உன்னுடைய காரணத்தைத்தான் சொல்லு பார்ப்போம்.

மூர்த்தி: சொல்லுகின்றேன் கேளுங்கள். ஒன்று சுயமரியாதைக் கட்சியில் சேர்ந்ததால் மடாதிபதிகள் உதவி செய்ய மாட்டார்கள்.

இரண்டு திருவாளர்கள் சாமியப்பா, பன்னீர் செல்வம் ஆகியவர்கள் முத்தையா முதலியாருக்கு விரோதிகள். மூன்று நம்முடைய ஆட்கள் கண்டிப்பாய் அவருக்கு ஓட்டு செய்ய மாட்டார்கள். இந்த மூன்று முக்கிய காரணங்கள்தான்.

வாசர் : இதுதானா பெரிய சங்கதியாய் கருதிவிட்டாய். மடாதிபதிகள் திரு.முதலியாரை சட்டசபைக்கு நிற்கும் படிக்கும் செலவும் போட்டுக் கொள்ளுவதாகவும் வற்புறுத்திக் கொண்டிருக்கின்றார்கள். நான் மடாதிபதி களுக்கு என்ன என்னமோ சொல்லிப் பார்த்தேன். அவர்கள் அத்தனையும் கேட்டுக்கொண்டு கடைசியாக அதையெல்லாம் முதலியாரிடமும் சொல்லி விட்டார்கள். அந்த மடாதிபதிகளுக்கு முத்தையா ரொம்பவும் நம்பிக்கை யுள்ளவர். சுயமரியாதை இயக்கத்தைப் பற்றி மடாதிபதிகளுக்கு ஒன்றும் தகராறில்லை. அது எப்படியாவது பிராமணர்களைத்தான் ஒழிக்கக் கிளம்பி இருக்கின்றதே அல்லாமல் பிராமணரல்லாத மடாதிபதிகளுக்கு ஒன்றும் அதனால் ஆபத்தில்லை என்பது அவர்களுக்கு நன்றாய்த் தெரியும்.

சுயமரியாதைக்காரருக்கும், சைவர்களுக்கும் இருக்கும் தகரா றெல்லாம் ஒன்றே ஒன்றுதானே. அதாவது கோவில்களுக்குள் எல்லோரையும் விடவேண்டும் என்பது. இதில் சைவ மடாதிபதிகள் யாருக்கும் தகராறு இருப்பதாய் தெரியவில்லை. சீக்கிரத்தில் அவர்கள் எல்லாம் ராஜியாய் போய் நம்மீது திரும்பப் போகின்றார்கள். அதெல்லாம் முத்தையா முதலியார் இரண்டு பேருக்கும் தக்கபடி சொல்லி, கூடிய சீக்கிரத்தில் ஒரு விதத்தில் முடிவு செய்துவிடுவார்.

அடுத்தபடியான திருவாளர்கள் பன்னீர் செல்வம், சாமியப்பா இவர்கள் விரோதம் ஒன்றும் நிலைக்காது. அதெல்லாம் வெளிக்குத் தானே யொழிய காரியத்தில் ஒருவொருக்கொருவர் முட்டிக் கொள்ள மாட்டார்கள். தவிர திரு.சாமியப்பாவும் அசெம்பளிக்கு நிற்பதாய்த் தெரிகின்றது. ஆதலால் அவர் விரோதத்திற்குப் போக மாட்டார். போனாலும் இருக்கின்றவர்கள் விட மாட்டார்கள். எப்படியாவது இருவரையும் சரிப்படுத்தி விடுவார்கள். திரு. சாமியப்பாவை சரிக்கட்டிவிட்டால் திரு.பன்னீர்செல்வம் தகராறு இருக்கவே இருக்காது.

அன்றியும் திரு.முத்தையா சென்ற தேர்தலில் “சுதேசமித்திரனும்” மற்றும் சில பிராமணர்களும் உள்ளுக்குள் விரோதமாக வேலை செய்தும் இந்த மாகாணத்திலேயே அதிகப்படியான ஓட்டு வாங்கினவர். பிராமணர்கள் வெகுபேர் இந்த தடவை அவருக்கு வெளிப்படையாகவே அனுகூலமாக வேலை செய்வார்கள் என்று கூடத் தெரிகின்றது.

தவிர, அவரும் இந்த தேர்தலுக்கு முப்பது நாற்பது ஆயிரம் ரூபாய் எடுத்து வைத்து விட்டார். போதாக்குறைக்கு நாகப்பட்டினம் திரு.காயா ரோகணமும் சட்டசபைக்கு நின்று அவரோடு சேர்ந்து வேலை செய்யப் போகின்றாராம். அவரும் முப்பது நாற்பது ரூபாய் ஆறு மாத வரும்படியை இப்போதே ஒதுக்கி வைத்து விட்டாராம். இரண்டு பேரும் சேர்ந்துவிட்டால் பிறகு சொல்லக்கூட வேண்டுமா? மூன்றாவது ஸ்தானம் தானாக வந்தால் வரட்டும் இல்லாவிட்டால் வேண்டியதில்லை என்று அவ்வளவு அலட்சிய மாய் சொல்லுகின்றார்களாம். அப்படி அவர்கள் அலட்சியமாய் விட்டால்கூட நம்மில் யாருக்காவது வருமா என்பது சந்தேகமாக இருக்கின்றது. ஏனெனில் திரு. மருதவாணம் பிள்ளைக்கு ஒன்று நாம் விடவேண்டாமா? தவிர திரு. நாடிமுத்து பிள்ளை ஆசைப்பட்டால் அவருக்கு விட வேண்டாமா? எப்படியாவது கஷ்டப்பட்டால் இந்த ஜில்லாவில் வேண்டுமானால் ஒரு ஸ்தானம் கிடைக்கலாம்.

மூர்த்தி : அப்பாடா! இது வரையில் ஐந்து ஜில்லாவுக்கு கணக்கு போட்டதில் ஒரு ஸ்தானம் கிடைத்தது. மற்றபடி தென் ஆற்காடு ஜில்லாவோ?

வாசர் : அதில் ஒன்று திரு.வேணுகோபால் நாயுடுவுக்கு கிடைக்கும் மற்றொன்று திரு.குமார ராஜா முத்தையா செட்டியாருக்கு கிடைக்கலாம். (ராஜா சர். அண்ணாமலையாரின் குமாரர்) மற்றொன்று திரு.சீதாராம ரெட்டியாருக் காவது மற்றும் வேறு யாருக்காவது கிடைக்குமே ஒழிய எந்த விதத்திலும் இத்தடவை பிராமணனுக்கு கிடைப்பதற்கு மாத்திரம் இடம் இல்லை.

மூர்த்தி : சரி, அந்த ஜில்லாவிலும் உள்ளதும் போச்சுதா? தொலைந்து போகட்டும். வடஆற்காடு ஜில்லாவின் சங்கதி என்ன?

வாசர் : அதுவும் அநேகமாய் அப்படித்தான் ஆகும். ஒன்று திரு.மாணிக்கவேலுக்கும், மற்றொன்று திரு.கிருஷ்ணசாமி நாயுடுவுக்கும் உறுதி. மூன்றாவது ஸ்தானம் திருவாளர்கள். வெங்கிட்டரங்கமும் ஆதிநாரா யண செட்டியாரும் சண்டை போட்டுக் கொள்ள வேண்டியது தான். வெங்கிட்டரங்கம் தனக்கு வேண்டாமென்று சொல்லுகின்றாராம். ஆதி நாராயண செட்டியாரோ என்ன என்னமோ குள்ளநரி தந்திரம் செய்கின்றார். கடைசியில் எப்படியாகுமோ தெரியவில்லை. ஒரு சமயம் 100-க்கு 25 பங்கு ஆதி நாராயண செட்டியார் வந்தால் வரலாம். ஒரு சமயம் வன்னியகுல க்ஷத்திரியர்களுக்கும் நாயுடு க்ஷத்திரியர்களுக்கும் புத்தி வந்து ஒன்று சேர்ந்து செட்டியார் யோக்கியதை தெரிந்து கொண்டார்களானால் மற்றும் ஒரு படையாச்சியோ நாயுடோ கடைசி பக்ஷம் முதலியாரோ தான் வரக்கூடும். ஆனால் செட்டியார் வருவதுகூட அவ்விரு சமூகத்திய முட்டாள்தனத்தைப் பொறுத்திருக்கிறது.

மூர்த்தி: சரி! ஆதிநாராயண செட்டியார் வருவதைவிட வராமல் இருப்பதே மேல். ஏனென்றால், வந்துவிட்டால் அதுவேண்டும் இது வேண்டும் மக்களுக்கு உத்தியோகம் வேண்டும் என்றும் மற்றும் பல விதத்தில் நம் உயிரை வாங்கி விடுவார்.

வாசர் : அப்படிச் சொல்ல வேண்டாம். அவர் பார்ப்பனரல்லாதாரை பொய்யும் புளுகும் சொல்லி வைவதற்கும், விஷமப் பிரசாரம் செய்வதற்கும், பிறத்தியார் நம்பும்படி தந்திரமாய் பேசுவதற்கும் அவர் நல்ல ஆசாமி தெரியுமா?

மூர்த்தி : சரி, தொலைந்து போகட்டும். வந்த காலத்து நல்லவரா கெட்டவரா பார்த்துக் கொள்ளலாம். செங்கற்பட்டு ஜில்லாவைப் பற்றி என்ன சொல்லுகின்றீர். அதிலுள்ள இரண்டு ஸ்தானமும் நம்முடையது தானே?

வாசர் : சரியாய் போய்விட்டது. முதலாவது திரு.முத்துரங்கமும் கிருஷ்ணசாமி நாயக்கரும் இந்தத் தடவை சட்டசபைக்கு நிற்பதில்லை என்று சொல்லிவிட்டார்கள். வேறு ஆள் பிடிப்பது வெகு கஷ்டமாய் இருக்கிறது. ஆனாலும் சூனாம்பேட்டைக்கும் அப்பாசாமிக்கும் இருக்கும் விரோதத்தினால் யாரையாவது போட வேண்டுமென்று சூனாம்பேட்டைக்கு ஆத்திரம் மாத்திரம் இருக்கின்றது. நிற்பதற்குத்தான் ஆட்களைக் காணோம். அவைகள் அநேகமாய் ஒன்று திரு. வேதாசலத்திற்கும் மற்றொன்று திரு.ஜெயராம நாயுடுவுக்காவது அல்லது வேறு ஒரு ரெட்டியாருக்காவதுதான் போய்விடும். அதை நம்புவதில் பிரயோஜனமே இல்லை.

மூர்த்தி: சரி, நம்முடைய மதராஸ் 4 ஸ்தானங்கள் இருக்கின்றதே அவை நான்கும் நம்முடையதுதானே?

வாசர் : நான்குக்கும் நமக்காக நிற்பதற்கு ஆள்கள் எங்கே முதலில் சொல் பார்ப்போம். முதலாவது திருவாளர்கள் கோவிந்தராஜு முதலியார் பெயரையும் பக்தவத்சலத்தின் பெயரையும் சென்னை ஓட்டர்களிடம் சொன்னால் அடிதான் கிடைக்கும். அவர்கள் யோக்கியதை ஓட்டர்களுக்கு அவ்வளவு தூரம் தெரிந்து போய்விட்டது. திரு.மல்லையாவையோ பிராமணன் என்கிற முறையால் தள்ளிவிடுவார்கள். ஒரு சமயம் திரு.சாமி. வெங்கிடாசலத்திற்கு கிடைத்தால் கிடைக்கலாம். ஆனால் அவரே அந்த தொகுதியில் நிற்க பயந்து கொண்டு வேறு தொகுதிக்கு நிற்க பிரயத்தனப் படுவதாய்த் தெரிகிறது. அவர் நின்று ஜெயித்தாலும் முன்போல நமக்கு உதவியாய் இருக்கமாட்டார். நமக்கு தலையும் ஜஸ்டிஸ் கக்ஷிக்கு வாலையும் காட்டிக் கொண்டிருக்கிறார். ஆதலால் அதை நம்புவதில் பயனில்லை.

மூர்த்தி : ஜஸ்டிஸ் கக்ஷியில் யார்தான் நிற்பார்கள்?

வாசர் : திரு டாக்டர் சி. நடேச முதலியார் இஷ்டப்படி அவர் யாரை நிறுத்துகின்றாரோ அவருக்குத்தான் ஆகக்கூடும். கொஞ்சம் நஞ்சம் நமக்கு இருந்த நம்பிக்கையும் “ஆஸ்தீக” சங்க காலிகளால் கெட்டுப் போய் விட்டது. அன்றியும் அதனால் நமது யோக்கியதையும் வெளியாய் விட்டது. இதனால் ஜஸ்டிஸ் கக்ஷிக்காரர்கள் தங்கள் பெருமையைச் சொல்லிக் கொண்டுகூட ஓட்டுக் கேட்க வேண்டியதில்லை. நம்ம யோக்கியதையையும் காங்கிரஸ் யோக்கியதையையும் சொல்லிக் கேட்டாலே அவர்களுக்கு கண்டிப்பாய் ஜெயம் கிடைத்துவிடும்.

மூர்த்தி : சரி, சேலம் ஜில்லா என்ன ஆகும்?

வாசர் : ஒன்று திரு. எல்லப்ப செட்டியாருக்கு கிடைத்துவிடும். மற்றொன்று டாக்டர் சுப்பராயனுக்குக் கிடைக்கும்.

மூர்த்தி : ஏன் திரு. ராஜகோபாலாச்சாரி நிற்கக் கூடாதோ?

வாசர்: நிற்கலாம். அவருக்கும் ஆசைதான்; ஆனால் திரு. வரதராஜுலு ஒரு பக்கம் உபத்திரவம் செய்கின்றார். என்ன வென்றால் ராஜகோபாலாச்சாரி நின்றால் தானும் நிற்பேன் என்று சொல்லுகின்றாராம். ஆதலால், ராஜகோபாலாச்சாரி தனக்கு வேண்டாம் என்பதுபோல் பேசுகிறார். ஆனாலும் ஜில்லா முழுவதும் இதற்காகத்தான் மதுவிலக்கின் பேரால் சுற்றுகின்றார். கடைசியாக அவர் நின்றாலும் ஒன்றும் ஆகப் போவதில்லை. மேற்கண்ட இருவரும் தான் வருவார்கள். ஒரு சமயம் டாக்டர் சுப்பராயன் நிற்கவில்லையானால் திரு.ராஜமாணிக்க பண்டாரத்திற்காவது, தருமபுரி செட்டியாருக்காவது ஆகும்.

மூர்த்தி : கோயமுத்தூர் ஜில்லாவோ?

வாசர் : அதுவும் அப்படித்தான். ஒரு கவுண்டர், ஒரு முதலியார், ஒரு செட்டியார் வருவார்கள்.

மூர்த்தி : ஏன் நாயுடுமார் வரமாட்டார்களோ?

வாசர் : ஒரு சமயம் அவர்களிலும் யாராவது ஒருவர் வந்தாலும் வரலாம். ஆனாலும் எந்தவிதத்திலும் திரு.வெங்கிட்ட ரமணய்யங்கார் மாத்திரம் வரமாட்டார் என்பது உறுதி.

மூர்த்தி : அப்படியானால் அங்கு யாரோ வந்துவிட்டுப் போகட்டும். நமக்குக் கவலையில்லை. ஏனென்றால், அய்யங்காரைத்தவிர யார் வந்தாலும் நம்முடன் சேரப் போவதில்லை.

வாசர் : இதுதான் பொதுத் தொகுதியின் நிலை. இனி கிறிஸ்தவத் தொகுதியில் நம்ம குழந்தை வந்தால்தான் நமக்கு உதவும். ஆனால் அவருக்கு கட்டின பணம் கூட வராது. மற்றபடி யார் வந்தாலும் திரு. ஆரோக்கியசாமி வந்தாலும் நமக்குப் பயனில்லை. மகம்மதியர்களிலும் ஜனாப்புகள் ஷாபிமகமது, அமித்கான், பஷீர் அகமது ஆகிய இந்த மூன்றே மூன்று கனவான்களைத் தவிர வேறு யார் வந்தாலும் பயன்படாதென்றே சொல்லலாம். ஆனால் இந்த மூன்று பேரும் வருவது கஷ்டமான வேலை. ஏனென்றால், ஜனாப் ஜமால் முகம்மது விஷயத்தில் நாம் நடந்து கொண்ட மாதிரி அப்படிச் செய்து விட்டது. மீதி உள்ளது ஜமீன்தார் தொகுதி. இந்த தடவை ஒரு ஜமீன்தாராவது நமக்கு அனுகூலமாய் நிற்கின்றவர்களைக் காணோம். எந்த விதத்திலும் நமக்கு சிறிதும் நம்பிக்கை இல்லை என்பது மாத்திரம் உறுதி. மற்ற தொகுதிகளைப் பற்றியும் இந்திய சட்டசபையைப் பற்றியும் மற்றொரு சமயம் பேசலாம்.

எதற்கும் இந்த தேர்தலுக்கு சுயமரியாதை இயக்கத்தையும், கடவுளையும், மதத்தையும், கோவிலையுமே பிடித்துக் கொள்ளுவோம். வேறு வழி ஒன்றையும் காணோம். ஆதலால், நம்ம ஆட்களை யெல்லாம் இனிமேல் இதைப் பற்றியே பேசச்சொல்லு.

மூர்த்தி : சரி, அப்படியே ஆகட்டும்.

('சித்திரபுத்திரன்' என்ற பெயரில் எழுதியது. குடி அரசு - உரையாடல் - 19.05.1929)

Pin It