19.11.2017 - பத்தாம் ஆண்டு நினைவு நாள்

sankarapandiyan 350என் 40 ஆண்டுகால நெருங்கிய நண்பர் ‘கொள்கைவேள்’ தோழர் நாத்திக நந்தனார். நாத்திகக் கொள்கையால் நாங்கள் இணைந்தோம். எங்கள் நட்பு அவர் மறையும் வரை நீடித்தது. கடைசி வரை அவர் என்பால் பொழிந்த அன்பை மறக்கவே முடியாது.

1968-ஆம் ஆண்டிலேயே அவரை நான் அறிந் திருந்தாலும், 1971-இல் ‘அறிவியக்கப் பேரவை’ தோற்று விக்கப்பட்ட போதுதான் இவரோடு பழக்கம் ஏற்பட்டது. பேராசிரியர் சாலை இளந்திரையன் இந்த அமைப்பின் அமைப்பாளர். அவர் தில்லியில் வசித்ததால் ஆண்டுக்கு ஒருமுறைதான் தமிழகம் வருவார். மே மாதம் முழுக்க அவர் இங்கிருப்பார். இந்த அமைப்பின் தொடக்கக்கால பொதுச் செயலாளராக நானும் நண்பர் நாத்திக நந்தனாரும் நியமிக்கப்பட்டோம். சில ஆண்டுகளிலேயே நான் ‘அறி வியக்கப் பேரவை’யிலிருந்து ஒதுங்கிக் கொண்டேன். ஆனால் நண்பர் நாத்திக நந்தனார் மட்டும் கடைசி வரை அந்த இயக்கத்தின் பொதுச் செயலாளராகத் தீவிரப் பணியாற்றினார். நான் அந்த அமைப்பை விட்டு ஒதுங்கிக் கொண்ட போதும் அவர் என்னை வெறுக்க வில்லை; பகைக்கவில்லை. அவர் மறையும் வரை எங்கள் நட்பும் நீடித்தது.

‘அறிவியக்கப் பேரவை’யின் சார்பில் இவர் பல ஆண்டுகள் தீவிரப் பணியாற்றினார். அந்த அமைப்பின் சார்பில் நிறைய பொதுக் கூட்டங்களையும் மாநாடு களையும் கருத்தரங்குகளையும் அறிஞர் பெருமக்களைக் கொண்டு ஏற்பாடு செய்து மக்களின் சிந்தனையில் ஓர் மாற்றத்தை ஏற்படுத்தக் கடுமையாகப் போராடினார்.

‘அறிவியக்கப் பேரவை’யின் சார்பில் நூல்களும் ஏடுகளும் வெளியிடப்பட்டன. அவைகளை முன்னின்று நடத்திக் காட்டியவர் தோழர் நாத்திக நந்தனார். ‘அறி வியக்கம்’ எனும் மாத ஏடு ‘அறிவியக்கப் பேரவை’ யால் பல ஆண்டுகள் வெளியிடப்பட்டது. அந்த ஏட்டின் ஆசிரியராகப் பொறுப்பேற்றும் வெளியீட்டாளராகப் பொறுப்பேற்றும் திறம்படச் செயலாற்றியவர் தோழர் நந்தனார். இந்த ஏட்டின் சிறப்பாசிரியர் பேராசிரியர் சாலை இளந்திரையன். சில ஆண்டுகள் திருமதி. சாலினி இளந்திரையனை சிறப்பாசிரியராகக் கொண்டு ‘மனித வீறு’ என்னும் இதழ் நடத்தப்பட்டது. இந்த ஏட்டையும் தம் பொறுப்பில் சிறப்பாக நடத்திய பெருமை தோழர் நந்தனாருக்கு உண்டு.

1971-ஆம் ஆண்டில் அப்போது சென்னைப் பல் கலைக்கழகத் துணைவேந்தராய் இருந்த திரு.நெ.து.சுந்தர வடிவேலு அவர்கள் தலைமையில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த பெண் மணியை இவர் சாதி மறுப் புத் திருமணம் செய்து கொண் டார். இவரின் திருமணத் தில் வரவேற்புரை ஆற்றும் அரிய வாய்ப்பு எனக்கு அந்த இளமைக் காலத்திலேயே கிடைத்தது. இவர் சாதி மறுப் புத் திருமணம் செய்து கொண்டதோடு இல்லாமல் தம் பிள்ளைகள் இருவருக் கும் சாதி மறுப்புத் திருமணமே செய்து வைத்தார். இவரின் மகளின் திருமணத்திலும் வாழ்த்துரை வழங்க எனக்கு வாய்ப்பளித்தார் தோழர் நந்தனார்.

சாதி ஒழிப்பில் அவர் தீவிர ஆர்வம் காட்டினார். கடவுள் நம்பிக்கை இல்லாதவராகவே இவர் கடைசி வரை வாழ்ந்தார். கருப்புச் சட்டை அணிந்து பெரியாரின் தொண்டராகத் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டார்.

மூடநம்பிக்கை ஒழிப்பிலும் இவர் தீவிர ஆர்வம் காட்டினார். சடங்கு முறையில் நடைபெற்ற எந்த நிகழ்விலும் இவர் கலந்து கொண்டதே கிடையாது.

பெரியாரின் நாத்திகக் கொள்கைகளில் அளவற்றப் பற்றுக் கொண்ட இவர், 1960-களில் பெரியாரிடமிருந்து சூழ்ச்சியாளர்களால் விலக்கப்பட்ட ‘சுயமரியாதைச் சுடரொளி’ தோழர் குத்தூசி குருசாமியுடன் இவரும் பெரியார் இயக்கத்தை விட்டு வெளியேறினார். தோழர் குத்தூசி குருசாமியால் தோற்றுவிக்கப்பட்ட சுயமரியாதை இயக்கத்தில் இவர் சேர்ந்தார். தோழர் குத்தூசியாரின் சொற்பொழிவுகளைக் கேட்டதோடு அவரின் எழுத்து களையும் இவர் ஆர்வத்தோடு படித்தார். குத்தூசி, அறிவுப்பாதை ஆகிய ஏடுகளின் உறுப்பினராகி அந்த ஏடுகளைப் படிப்பதில் தனி ஆர்வம் காட்டினார்.

‘அறிவியக்கப் பேரவை’யில் சேருவதற்கு முன்னா லேயே இவர் குத்தூசியார் சுயமரியாதைக் கொள்கைப் பரப்புக் குழு எனும் பேரால் துண்டு வெளியீடுகளை ஆயிரக்கணக்கில் அச்சிட்டுப் பரப்பினார்.

நண்பர் நாத்திக நந்தனார் ஆரம்பக் கல்வியைக் கூட முடிக்காதவர். முடிவெட்டும் கடையை வைத்து நடத்தி வந்த முடிவெட்டும் தொழிலாளியே தோழர் நந்தனார் என்றால் வியப்பாக உள்ளதல்லவா? ஆம்! அவர் ஒரு முடிவெட்டும் தொழிலாளிதான். என்றாலும் நாத்திகக் கொள்கை மறவராக அவர் கடைசி வரை விளங்கினார். நாத்திகப் பிழம்பு என்றும் இவரைச் சொல்லலாம்.

அவரை நான் முதல்முறையாகச் சந்தித்த போது மிகவும் இளைஞரான அவர் முடிவெட்டும் தொழிலையே செய்து வந்தார். இவர் பிறந்து வளர்ந்ததெல்லாம் வண்டலூர்-ஓட்டேரிப் பகுதிதான். புதுப்பெருங்களத்தூர் தொடர்வண்டி நிலையத்தின் அருகில் இவர் தம் கடையை நடத்தி வந்தார்.

தம் இளமைக் காலத்திலே இவர் தம் தந்தையாரை இழந்தார். அதன் பொருட்டு குடும்பத்தைக் காப்பாற்றும் பொறுப்பு இவருக்கு ஏற்பட்டது. நல்ல முறையில் தொழில் செய்து இவர் தம் தாயையும் சகோதரிகளையும் காப் பாற்றினார். வண்டலூர்-ஓட்டேரி பகுதி அப்போது முன் னேற்றம் அடையாத காலம். வண்டலூர் உயிரியல் பூங்கா அமையாத காலம். அந்தக் காலத்தில் இவர் ஓர் ஓலைக் குடிசை வீட்டில் வாழ்ந்தார்.

ஒருமுறை நான் அந்தக் குடிசை வீட்டுக்குப் போயிருக்கிறேன். இவர் என்னை நள்ளிரவு நேரத்தில் நான் தங்கும் பொருட்டு என்னை அக்குடிசை வீட்டுக்கு அழைத்துச் சென்றார். குடிசையின் கதவைத் திறந்து விளக்கைப் போட்டார். அங்கே ஒரு பெரிய மர பீரோவில் நிறைய புத்தகங்கள் பைண்டு செய்யப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. குத்தூசி, அறிவுப்பாதை போன்ற அறிவியக்க ஏடுகளை இவர் பைண்டு செய்து பாதுகாத்த தோடு அவற்றைப் பயிலவும் செய்தார். இவர் படிப்பதற்கு அந்தக் குடிசை வீட்டில் ஒரு மேசையையும் நாற்காலி யையும் வாங்கிப் போட்டிருந்தார். மேஜையில் டேபிள் லைட்டையும் பொருத்தி இருந்தார். பள்ளிக் கல்வி இல்லாத தோழர் நந்தனாரின் படிப்பார்வம், வியக்கத்தக்கது. இன்றைக்கும் அவரின் படிப்பார்வம் என்னை வியக்க வைத்துக் கொண்டுள்ளது.

பல ஆண்டுகளுக்கு முன் தம் மாமன் மகளான மீஞ்சூர்-நெய்தவாயிலைச் சேர்ந்த தம்பி மகேந்திரனை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். மீஞ்சூரில் உள்ள தம் மாமா வீட்டுக்கு வரும் போதெல்லாம் மணலி புதுநகர் வந்து என்னைச் சந்திக்காமல் போகமாட்டார். நானும் அவர் நெய்தவாயிலுக்கு வரும்போதெல்லாம் அவரைத் தேடிப் போய் பார்ப்பதும் உண்டு.

என்மீது அவர் காட்டிய பேரன்பு உண்மையில் ஈடுஇணை இல்லாததாகும். என்னைப் பற்றிப் பெருமை யாக எல்லாரிடமும் சொல்லுவார். அவர் இறப்பதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்பாகவே அவர் பாரிச வாயு நோயால் பாதிக்கப்பட்டுச் சிதைந்த கோட்டையானார். அவருக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்ட போதும் அவர் அந்த நோயுடனேயே அறிவியக்கப் பணியாற்றினார்.

பிறகு திடீரென ஒருநாள் அவர் மறைந்துவிட்ட தகவலை நண்பர் சிலர் தெரிவித்தனர். அவரின் மறைவை என்னால் இன்றுவரை செரித்துக் கொள்ளவே முடிய வில்லை. அவரின் மரணத்தின் போது நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் இரங்கலுரை ஆற்றும் அரிய வாய்ப்பும் எனக்குக் கிட்டியது.

அவரின் மறைவு குறித்து நடத்தப்பட்ட இரங்கல் கூட்டத்தில் தமிழ்நாடு மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் வே.ஆனைமுத்து, சென்னைப் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டா பொற்கோ, ‘கொள்கை வேழம்’ தோழர் தியாகு, கவிஞர் இன்குலாப், அறிஞர் சங்கமித்திரா போன்ற அறிஞர் பெருமக்கள் இரங்கலுரை ஆற்றினர். ஏராளமான கொள்கைத் தோழர்கள் அணிதிரண்டு வந்து அவரின் இறுதி நிகழ்வில் பங்கேற்றது குறிப்பிடத் தக்கதாகும்.

அவருடைய உடல் போரூர் ராமச்சந்திரா மருத்துவ மனைக்கு அளிக்கப்பட்டது. அவரின் மரணம் தமிழக அறிவியக்கவாதிகள் மத்தியில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக வண்டலூர்-ஓட்டேரி பகுதியில் அவர் மரணம் ஓர் பெரிய அதிர்வலையை உருவாக்கி யது என்றால் அது மிகையாகாது.

தாம் ஏற்றுக்கொண்ட கொள்கையில் இறுதி வரை மாறாமல் உறுதி காட்டிய அவரின் கொள்கை உள்ளம் காலங்காலங்களுக்கு என் நெஞ்சில் நிலைத்து நிற்கும். இறப்புக்கு முன்வரை அவர் என் நண்பர். இறப்புக்குப் பின் அவர் என் தலைவர்.

வாழ்க நாத்திக நந்தனாரின் புகழ்!

Pin It