மத்திய அரசு நெல்லுக்கான ஆதரவு விலையை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.200/- உயர்த்தி அறிவித்துள்ளது.
2018 சூலை முதல் 2019 சூன் வரையிலான பயிர் ஆண்டுக்கு சாதாரண ரக நெல்லுக்குக் குறைந்த பட்ச ஆதரவு விலை ரூ.200/- உயர்த்தி ரூ.1750/-ஆக நிர்ணயிக்கவும், ‘ஏ’ கிரேடு (சன்ன ரக) நெல்லுக் கான விலையை ரூ.180/- உயர்த்தி ரூ.1770/- ஆக நிர்ணயிக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு விவசாயிகளிடையே பெரும் ஏமாற்றத்தையே ஏற்படுத்தியுள்ளது.
விவசாயத் தொழிலாளர்களின் கூலி, டீசல் விலை, இயந்திரத் தளவாடங்களின் வாடகை, உரங்களின் விலையேற்றம், தண்ணீர்த் தட்டுப்பாடு ஆகியவற்றை மத்திய-மாநில அரசுகள் கருத்தில் கொள்ளாததுதான், நெல்லுக்கான விலை நிர்ணயக் குளறுபடிக்கான காரணம். மேலும் சந்தையில் (கர்நாடக) பொன்னி அரிசியின் விலை ஒரு கிலோ ரூ.50/- என விற்பனையாகிறது.
இதன்படிக் கணக்கிட்டால், ஒரு கிலோ நெல்லுக்கு அரசு விலை ரூ.25 என நிர்ணயிக்க வேண்டும். ஆனால் தற்போது ஒரு கிலோ நெல்லுக்கு ரூ.17.70 மட்டுமே விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது எந்த வகையில் நியாயம்?
ஒரு ஏக்கர் நெல் சாகுபடி விவரம்
விதை நெல் 30 கிலோ ரூ.1000
நாற்று உழவு மற்றும் ஓரம் கட்டக் கூலி ரூ.1500
உழவு 5 மணிநேரம் ரூ.5500
பரம்பு ஓட்ட ரூ.1000
வரப்பு கட்ட 4 ஆள்கள் கூலி ரூ.1600
நடவு கூலி ரூ.3500
யூரியா 2 மூட்டை ரூ.540
டி.ஏ.பி. உரம் 2 மூட்டை வீதம் (2 முறை) ரூ.2550
சிங்க் சல்பேட் 10 கிலோ ரூ.570
நுண்ணூட்டம் ரூ.250
அம்மோனியா சல்பேட் (கதிர் உரம்) ரூ.750
பொட்டாஷ் 1 மூட்டை ரூ.670
களையெடுக்கும் கூலி ஆள் 7 பேர் ரூ.1400
பயிர்ப்பாதுகாப்பு மருந்து மற்றும் மருந்தடிக்க ரூ.3000
அறுவடைச் செலவு ரூ.2000
மொத்தச் செலவு ரூ.25830
* மொத்தச் செலவு ரூபாய் இருபத்தைந்தாயிரத்து எண்ணூற்று முப்பது.
மேற்கண்ட செலவினங்களில் 4 மாத அறுவடை வரை வயலுக்கு நீர் பாய்ச்சு வது, எலித் தொல்லையைக் கட்டுப்படுத்துவது, வரப்புப் புல் அறுப்பது - இதில் நடவிலிருந்து 3 மாதங்களுக்கு நாளொன்றுக்கு ரூ.100 எனக் கூலி நிர்ணயம் செய்து கணக்கிட ரூ.9000 ஆகும். இதில் விவசாயக் கூலியாள்களுக்குக் குறைந்தபட்சக் கூலியே கணக்கிடப்பட்டுள்ளது.
நெல் சாகுபடி செலவு ரூ.25830 + விவசாயியின் கூலி ரூ.9000 ஆக ரூ.34830 ஆகிறது. தமிழக அரசின் பண்ணை நிர்வாகத்தில் 2015ஆம் ஆண்டின் போது ஒரு கிலோ நெல்லுக்கான உற்பத்திச் செலவு ரூ.27.50 எனக் குறிப்பிடப்படும் நிலையில் தற்பொழுது மேலும் கூட்டியிருக்க வாய்ப்புண்டு.
மேற்கண்ட அனைத்துச் செலவுகளையும் செய்து ஒரு ஏக்கரில் அதிகபட்சமாக 25 முதல் 30 மூட்டை நெல் (77 கிலோ எடை கொண்டது) கிடைக்கும். சற்றொப்ப 20 குவிண்டாலாகக் கணக்கிட்டாலும் மத்திய அரசு அறிவித்துள்ள விலைப்படி ரூ.35400 கிடைக்கும். வேளாண் அறிஞர் எம்.எஸ். சுவாமிநாதன் அறிக்கை விவசாய உற்பத்திச் செலவைவிட விவசாய விளை பொருள்களுக்கு 50 விழுக்காடு கூடுதலாக விவசாயிகளுக்குக் கிடைக்க வேண்டும் எனப் பரிந்துரைத்தபடி, கிடைக்கவில்லை.
மேலும் 2022ஆம் ஆண்டில் விவசாயிகளின் வருவாய் இரண்டு மடங்காக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பிரதமர் கூறி வருகிறார். அதற்கேற்ப நெல் விலை உயர்த்தி அறிவிக்கப்படவில்லை. உர விலையை உயர்த்திவிட்டு நெல்லுக்கான விலையைக் குறைந்த அளவில் உயர்த்தியிருப்பது விவசாயிகளை வஞ்சிப்பதாகும். விவசாயிகளின் நிலையைப் புரிந்து கொண்டு மத்திய மாநில அரசுகள் செயல்பட வேண்டும்.
நிகழாண்டு நெல்லுக்கான ஊக்கத்தொகை அறிவிப்பை மறுபரிசீலனை செய்து, மத்திய-மாநில அரசுகள் உயர்த்திட வேண்டும். தமிழ்நாடு அரசும் தம் பங்கிற்கான ஊக்கத் தொகையை உயர்த்தி அறிவித்து நெல் விலையைக் குவிண்டாலுக்கு ரூ.2500 என வழங்கிட வேண்டும், என வேண்டுகிறோம்.
- கு.வரதராசன், பூலாம்பாடி