அசோகனின் கொள்ளுப் பேரன் பிரிகத்ரதன், கி.மு.182இல், புஷ்யமித்திர சுங்கனால் கொல்லப் பட்டான். அரசனான அவனிடமே சேனாதிபதியாக இருந்தவன்தான் புஷ்யமித்திர சுங்கன்.

புஷ்யமித்திர சுங்கன்தான், அதுவரை செவி வழியாக இருந்த மனுநீதியைத் தொகுத்தவன். மனுநீதிதான் இந்துக்கள் பிறவியிலேயே நான்கு வருணத்தாராகப் பிறந்தார்கள் என்று கூறியது. அதன் செல்லுபடிப் பரப்பு இந்தியா முழுவதுக்கும் உண்டு.

தென்னாட்டைப் பொறுத்தவரையில் பராசரஸ்மிருதி, யக்ஞவல்க்கிய ஸ்மிருதி ஆகிய இரண்டும்தான் அதிகச் செல்வாக்கு உள்ளவை. மேலே சொல்லப்பட்ட ஸ்மிருதிகளில் நால் வருணங்கள் கலக்கக் கூடாது என்று கட்டளை விதி இருக்கிறது. ஆனாலும் அதை மீறி நால் வருணத்தார் கலந்தார்கள். அவர்களுக்குப் பிறந்தவர்கள் 6400க்கும் மேற்பட்ட உள்சாதிக்காரர்கள் ஆவார்கள்.

நால்வருணங்களுக்கிடையே திருமண உறவு கூடாது என்பது 1872ஆம் ஆண்டினுடைய சிறப்புத் திருமணச் சட்டம் மூலம் செல்லுபடி அற்றதாக ஆக்கப்பட்டது. அதாவது வெவ்வேறு வருணத்தைச் சேர்ந்தவர்கள் கலப்புத் திருமணம் செய்து கொள்ளலாம் என்று ஏற்பட்டது. அதற்கு ஒரு நிபந்தனை மட்டும் உண்டு. அதாவது மணமகனும் மணமகளும், “தாங்கள் இந்து மதத்தைப் பின்பற்றுகிறவர்கள்” என்று உறுதி கூற வேண்டும். அது மட்டுமே நிபந்தனை.

அதேபோல் 6400 உள்சாதிகளாகப் பிறவியினால் பிரிந்து கிடந்தவர்கள், 1949ஆம் ஆண்டினுடைய திருமணங்கள் செல்லுபடிக்கான 21ஆவது சட்டம் (Hindu Marriage Validity Act, XXI of 1949) வருணங்கள் மாறித் திருமணம் செய்து கொள்ளுவதும்; ஒரே வருணத்தில் உள்சாதி மாறித் திருமணம் செய்து கொள்ளுவதும் செல்லுபடியாகும் என்றும்; 1949-க்கு முன்னர் அப்படி வருணம் மாறியும், உள்சாதி மாறியும் செய்து கொண்ட திருமணங்களும் அம் முன்தேதி முதலே (Retrospective) செல்லும் எனவும் அய்யத்துக்கிடமின்றி வரையறை செய்தது. மேதை அம்பேத்கர் சட்ட அமைச்சராக இருந்த போது நிறைவேற்றப்பட்ட அரிய சட்டங்கள் இவை.

ஆனால் மேலே சொல்லப்பட்டபடி, நால்வருணங்கள் கலப்பதற்குத் தடை இருந்ததும் மக்களுக்குத் தெரியாது; அவர்கள் வருணம் மாறித் திருமணம் செய்துகொள்ள 1872இல் சட்டம் வந்ததும் மக்களுக்குத் தெரியாது.

உள்சாதி மாறித் திருமணம் செய்துகொள்வது சட்டப்படிக் குற்றம் என்பதும் மக்களுக்குத் தெரியாது.

1949ஆம் ஆண்டினுடைய சட்டப்படி உள்சாதி மாறித் திருமணம் செய்துகொள்ள உரிமை உண்டு என்பதும் மக்களுக்குத் தெரியாது. இவையெல்லாம் ஏட்டில் இருக்கின்றன. ஆனால் இவை கல்வி மூலம் மக்களுக்குக் கற்பிக்கப்படவில்லை.

அதனால்தான் புத்தர், மகாத்மா புலே, வடலூர் வள்ளலார், அயோத்திதாசர், பெரியார் ஈ.வெ.ரா., மேதை டாக்டர் அம்பேத்கர் ஆகியோர் கி.மு.500 முதல் கடந்த 2500 ஆண்டுகளாக நால்வருணத்தை எதிர்த்தும், உள்சாதித் தடைகளை எதிர்த்தும் பரப்புரை செய்தும் அக்கொள்கைகள் இன்று வரை வெற்றி பெறவில்லை.

நால்வருணப் பாதுகாப்பு, இந்துச் சட்டம் மூலம் அப்படியே வழக்குரைஞர்களுக்குக் கற்பிக்கப்படுகிறது.

அதுமட்டுமன்றி இந்திய அரசமைப்புச் சட்டம் பகுதி-3 (Part III) அடிப்படை உரிமைகள் என்கிற பகுதியில் உள்ள 13ஆம் விதியில் உள்பிரிவு 3ஆ(b) பிரிவின்படி “செல்லுபடியாகிற சட்டம்” (Laws in force) என்பது எது?

“ஏற்கெனவே ஒரு சட்டமன்றத்தாலோ அதிகாரம் வாய்ந்த வேறு ஒரு அமைப்பாலோ இந்தியாவில் இந்த அரசமைப்புச் சட்டம் நடப்புக்கு வருவதற்கு முன்னால் செய்யப்பட்டதாகும். அது ஏற்கெனவே எந்த ஒரு சட்ட அமைப்பாலும் நீக்கப்படாமல் இருந்தால் அந்தப் பழைய சட்டம் இன்றும் செல்லும்” என்றே பொருளாகும்.

அத்துடன் நில்லாமல், அரசமைப்புச் சட்டம் 372ஆம் விதியில் 3‘ஆ(b)’ பிரிவில் விளக்கம்-ஐ என்று வருகிற பகுதியிலும் இதேபோல், சொல்லப்பட்டுள்ளது. இவை யெல்லாம் 26.11.1949இல்தான் நிறைவேற்றப்பட்டன.

இந்தப் பாதுகாப்பு இருக்கக்கூடாது என்று கருதிய அம்பேத்கர், 1947இல் அரசமைப்புச் சட்ட அவையில் முன்மொழிந்த “இந்துச் சட்டத் திருத்த மசோதாவின்” கடைசிப் பகுதியில் ஒரு விதியைத் தெளிவாக எழுதினார். “எந்தப் பழைய சட்டமும் வழக்கச் சட்டமும் (Custom), இந்த அரசமைப்புச் சட்டம் நடப்புக்கு வந்த பிறகு செல்லுபடியாகமாட்டா” என்று எழுதினார்.

அந்தப் பகுதியைப் படித்த உடனே, அரசமைப்புச் சட்ட அவையின் தலைவர் இராசேந்திர பிரசாத், அம்பேத் கரிடம் நேரிடையாக அவையிலேயே, “நீங்கள் முன் மொழிந்துள்ள இந்தப் பகுதி நிறைவேற்றப்பட நான் இடங்கொடுக்க மாட்டேன்” என்று சொன்னார்.

பெரியார், அம்பேத்கர் வழிவந்த நாம் இன்று என்ன செய்ய வேண்டும்? சட்டம் படித்த மேதைகளைக் கூட்டிவைத்து நால் வருணப் பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவுகளை நீக்குவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்று விவாதிக்க வேண்டும் என நான் வேண்டுகிறேன்.