இந்தியா விடுதலை பெற்ற காலத்தில் இருந்தே காங்கிரசுக் கட்சி ஆட்சி அசைக்க முடியாத ஆட்சியாக இருந்தது. விடுதலைக்காகப் போராடிய காங்கிரசில் பல தலைவர்கள் அரும் பெரும் தியாகங்களைச் செய்திருந்தனர். மாநிலங்கள் அளவிலும் கட்சியை வழி நடத்தியவர்கள் பெரும் தலைவர் களாகத் திகழ்ந்தனர். காங்கிரசினுடைய பெரும் தலைவரும் முதல் பிரதமரு மான சவகர்லால் நேரு மக்களின் தலைவராகவே இருந்தார். காங்கிரசு தொடக்கக் காலத்திலிருந்து முற்போக்குச் சிந்தனை உடையவர்களைப் பெருமளவில் அணைத்துச் செல்லவில்லை. இதன் காரணமாகப் பல மாநிலங்களில் காங்கிரசு ஆட்சியமைத்தாலும் அந்தந்த மாநிலங்களில் உள்ள உயர் சாதி உயர் வர்க்கத்தினர்தான் முதலமைச்சராக இருந்தனர். சமூக நீதிக் கொள்கையை இவர்கள் பின்பற்ற விரும்பவில்லை. இதற்கு மாறான நிலை தென்னகத்தில் மட்டும்தான் இருந்தது. சாதாரணக் குடும்பத்தில் பிறந்த தலைவர்கள் தான் காங்கிரசு முதல்வர்களாகத் திகழ்ந்தனர்.

1954இல் தமிழ்நாட்டில் முதலமைச்சராகப் பொறுப் பேற்ற காமராசர் ஏழைகளின் தலைவராகவே வாழ்ந்தார். ஆந்திராவில் சஞ்சீவ ரெட்டி, சஞ்சீவய்யா; பிரம்மானந்த ரெட்டி போன்றவர்கள் விடுதலைப் போராட்டக் காலத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு மக்களின் பிரச்சினைகளை உணர்ந்து தீர்ப்பதில் முன்னிலை வகித்தனர். கர்நாடகத்தில் நிசலிங்கப்பா பெரும் தியாகி யாகவும் நேர்மையான முதலமைச்சராகவும் இருந்தார். கேரளாவில் 1957ஆம் ஆண்டிலேயே கம்யுனிஸ்ட் கட்சி இ.எம்.எஸ். தலைமையில் ஆட்சியமைத்தது. மிக எளிமையாக வாழ்ந்த இ.எம்.எஸ். 1957இல் முதல்வராக இருந்த போது தலைமைச் செயல கத்திற்கு மிதி வண்டியில் சென்றவர். இதன் தாக்கம் கேரளாவில் எல்லாக் கட்சியினரிடமும் இன்றளவும் நீடிக்கிறது. தேர்தலில் பண விளையாட்டுகள் முன்னிலை வகிக்கவில்லை.

கேரள மாநிலத்தில் காங்கிரசின் சார்பாகப் பல முறை முதல்வராக இருந்த ஏ.கே. அந்தோணி மிக மிக எளிமையாக வாழ்ந்தவர். சான்றாக 1982ஆம் ஆண்டு சென்னையில் நடந்த தென் மாநில முதல மைச்சர்கள் மாநாட்டிற்கு வந்திருந்தார். இக்கட்டுரை யாசிரியர் காலை 9.30 மணிக்கு சென்னைப் பல்கலைக் கழக நூலகத்தில் ஒரு நூலைத் தேடி எடுக்கச் சென்றார். அப்போது ஏ.கே.அந்தோணி அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து நடந்து வந்து சென்னைப் பல்கலைக்கழக நூலகத்தின் பதிவேட்டில் கையொப்ப மிட்டுப் படிக்கத் தொடங்கினார். எனக்கு இவர்தான் எ.கே.அந்தோணியாக இருக்குமோ என்ற சந்தேகம் வந்தது. அவரிடமே போய்க் கேட்டேன். ஆம் நான் கேரள மாநில முதல்வர் என்று சொன்னார். 10.30 மணி அளவில் நான் நூலகத்தை விட்டு வெளியே வந்த போது காவல்துறையின் உயர் அதிகாரிகள் கேரள முதல்வர் உள்ளே இருக்கிறாரா என்று என்னிடம் கேட்டார்கள். அப்போது உள்ளே சென்று அவரை அழைத்தார்கள். 11.30 மணிக்குதானே கூட்டம். நான் வந்து சேர்ந்து விடுகிறேன். நீங்கள் போங்கள் என்று கூறி நூலைப் படித்து முடித்து நடந்தே விருந்தினர் மாளி கைக்குச் சென்று பின்பு தலைமைச் செயலகக் கூட்டத் திற்கு அரசு மகிழுந்தில் சென்றார். இந்தியாவின் பாது காப்பு அமைச்சராக இருந்த போதும் அவர் காலத்தில் எந்தவித ஊழலும் நடைபெறவில்லை. ஏழை எளியோரின் நிலையை உணர்ந்து கேரள முதல்வர்கள் கட்சிக்கு அப்பாற்பட்டு கல்வி வளர்ச்சிக்காகச் செயலாற்றினர். இதன் காரணமாகத்தான் கேரளா கல்வி வளர்ச்சியில் முதல் இடத்தைப் பெற்றது.

பெருந்தலைவர் காமராசர் தந்தை பெரியாரின் வழி களைப் பின்பற்றி ஏழை எளிய மாணவர்கள் பள்ளிக் கல்வியைப் பெறுவதற்குப் பெரும் தொண்டாற்றினார். சத்துணவுத் திட்டத்தைப் பள்ளிகளில் செயல்படுத்தி இந்திய மாநிலங்களுக்கே வழிகாட்டியாகத் திகழ்ந்தார்.

மேற்கு வங்கம் உட்பட வட மாநிலங்களில் பிற் படுத்தப்பட்டவர்கள், மிகப் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப் பட்டோர், பழங்குடியினர் பள்ளிக் கல்வியில் தொடங்கிக் கல்லூரிக் கல்வி வரை இன்றளவும் மிகவும் பின் தங்கிய நிலையிலேயே உள்ளனர். இந்த மாநிலங்களின் முதல்வர்கள் உயர் சாதி ஆதிக்க மனப்பான்மையோடு செயல்பட்டு இடஒதுக்கீடு சார்ந்த சமூக நீதிக் கொள்கை யைப் பின்பற்றாததே இதற்குக் காரணமாக அமைகிறது.

தமிழ்நாட்டில் நீதிக்கட்சிக் காலத்திலிருந்து இட ஒதுக்கீடு கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்ட காரணத் தினாலேயே மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் கல்வி வளர்ச்சியில்-குறிப்பாக உயர் கல்வியில் இந்திய அளவில் முதல் மாநிலமாக இன்று திகழ்கிறது. சமூகம் சார்ந்த அரசியல் விழிப்புணர்ச்சி வட மாநிலங்களில் 1980களுக்குப் பின்தான் ஏற்பட்டது. இவற்றையெல் லாம் தெரிந்தோ தெரியாமலோ கன்னியாகுமரி காங்கிரசுத் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் தமிழ்நாடு வட மாநிலங்களைவிட முற்போக்கானது கல்வியில் வளர்ச்சியடைந்துள்ளது என்று ராகுல் குறிப்பிட்டார். இக்கருத்தினை பாசகவின் தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வடக்கு தெற்கு என்று பிரித்து நாட்டின் ஒருமைப்பாட்டை ராகுல் சிதைக்கிறார் என்று கூறியுள் ளார்.

வடக்கு, தெற்குப் பிரச்சினை விடுதலைப் போராட்டக் காலத்திலேயே காங்கிரசுத் தலைவர்களாலேயே விவா திக்கப்பட்டது. கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் தமிழ்நாட்டில் பார்ப்பனர்-பார்ப்பனரால்லாதார் பிரச்சினை போன்று வட நாட்டில் இந்துக்களுக்கும் முசுலிம் களுக்கும் ஒரு மோதல் போக்கு இருந்துள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார். தந்தை பெரியார் காங்கிரசுத் தலைவராக இருந்தபோது பார்ப்பனரின் ஆதிக்கத்தை எதிர்த்தும் சமூக நீதிக் கொள்கைக்கு ஆதர வாகவும் பணியாற்றினார்; இடஒதுக்கீடு கொள்கையை ஏற்காத காரணத்தினால் காங்கிரசு இயக்கத்தைவிட்டு 1925இல் வெளியேறினார். இம்மாதிரியான பிரச்சினைகள் இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் அங்கு நிலவும் புவிசார் அரசியல் தன்மைகளுக்கு ஏற்ப நிலவி வருகின்றன. வடகிழக்கு மாநில மக்கள் பெரும்பாலும் பண்பாட்டால் / இனத்தால் தாங்கள் தனித்தன்மை யானவர்கள் என்பதை மெய்ப்பிப்பதற்காகத் தொடர் பேராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்திய அரசி னுடைய மேலாதிக்கத்தை அவர்கள் ஏற்றுக்கொள் வதே இல்லை. தென்னகத்தில் இதுபோன்ற பிரச்சி னைகள் தொடர்ந்து வெவ்வேறு வடிவங்களில் பல வரலாற்றுக் காரணங்களால் நிலவி வருகின்றன. தென்னக மண்ணில் பசவண்ணா, வள்ளலார், நாராயண குரு போன்றோர் சாதியத்திற்கு எதிராகவும் வர்ணாசிர மத்திற்கு எதிராகவும் களம் அமைத்துப் போராடினர்.

இந்தியா எப்போதும் ஒரே நாடாக இருந்ததில்லை என் பதைப் பல வரலாற்றுத் தொல்லியல் ஆய்வு முடிவுகள் மெய்ப்பித்து வருகின்றன. அரியானா மாநிலத்தில் ராகிகர்கியில் நடந்த அகழ்வாராய்ச்சியில் பல உண்மைகள் தற்போது வெளிப்பட்டுள்ளன. ஹரப்பா, மொகஞ்சதாரோ அகழ்வாராய்ச்சியைவிட பல ஆயிரம் ஏக்கர் நிலத்தில் மேற் கொள்ளப்பட்டது தான் அரியானா அகழ்வாராய்ச்சியாகும். புதிய அறிவியல் தரவுகள், உடற்கூறுகள் ஆகியவற்றின் அடிப்படையில் ஆய்ந்ததில் ஏறக்குறைய எட்டாயிரம் ஆண்டு களுக்கு முன்பே இப்பகுதியில் மக்கள் வாழ்ந்துள்ளார்கள். இவர்களின் மரபணுக்கள் தென்னகத்தில் வாழ்ந்த மக்களின் மரபணுக்களில் இருந்து வந்தது என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். வடக்கு, தெற்கு என்கிற கருத்து தொன்மைக்காலம் தொட்டு இருந்து வருகிறது என்பதற்கு மேற் கூறிய அகழ்வாராய்ச்சி முடிவுகள் சான்று பகர்கின்றன.

1956இல் மொழிவழி மாநிலங்கள் அமைக்கப் பட்டபோது, அறிஞர் அம்பேத்கர் சிறந்த ஆய்வுகளை மேற்கொண்டு தனது கருத்துகளைக் கட்டுரை வடிவில் பதிவு செய்துள்ளார். இக்கட்டுரைகள் மராட்டிய மாநில அரசு வெளியிட்ட அம்பேத்கரின் பேச்சுகளும் எழுத்து களும் என்ற நூலின் முதல் தொகுதியில் இடம் பெற் றுள்ளன. தொடக்கக் காலத்தில் அம்பேத்கர் மொழிவழி மாநிலங்கள் அமைவதை எதிர்த்தவர். பின்பு மொழிவழி மாநில மறுசீரமைப்பு ஆணைய அறிக் கையைப் படித்துவிட்டு 1955ஆம் ஆண்டு தனது கருத்தை மாற்றிக்கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அம்பேத்கருக்கே உரிய தனித்தன்மையான அறிவாண் மையின்படி மேற்கத்திய அறிஞர் எமர்சனின் கருத் தையும் தனது கருத்துக்கு ஆதரவாகப் பதிவு செய்துள் ளார். ஒரே கொள்கை நிலைப்பாட்டில் இருப்பது ஒரு கழுதையின் குணமாகும். சிந்திக்கின்ற மனிதன் ஒரே சிந்தனை என்ற கூட்டுக்குள் விலங்கிடப்பட்டு இருக்க மாட்டான். ஒரே நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதை விடப் பொறுப்புதான் உயர்ந்தது. மனிதன் ஏற்கெனவே கற்றதை விட்டுப் புதிதாகக் கற்றதை ஏற்பதுதான் ஒரு பொறுப்புள்ள மனிதனின் கடமையாகும். பொறுப்புள்ள மனிதனுக்கு மறுசிந்தனைக்கு உட்பட்டு பழைய கருத்துகளை மாற்றும் வீரம் தேவை.... இதுதான் சிந்தனைக்கு இறுதியானது என்று ஏதும் இல்லை.

தற்போது அம்பேத்கரைப் போற்றுகிறவர்கள் அம்பேத் கர் கூறிய கருத்துகளை-ஆழமான சிந்தனைகளைப் படித்து விட்டு தான் பேசுகிறார்களா? என்று அச்சம் எழுகிறது. இதே நூலில்தான் அம்பேத்கர் வடக்கு, தெற்குப் பிரச்சினை, இந்திப் பிரச்சினை பற்றி மிக விளக்கமாகக் குறிப்பிட்டுள்ளார். அரசமைப்புச் சட்ட அவையில் இந்தியைத் தேசிய மொழியாக ஆக்கும் பிரிவுக்கு அவையில் ஏற்பட்ட எதிர்ப்பினையும் சுட்டி யுள்ளார். 115ஆவது விதியைப் பற்றி விவாதம் செய்யும் போது ஏற்படுத்திய கருத்து வேறுபாடுகள் வேறு எந்த விதியைப் பற்றிப் பேசும் போதும் ஏற்படவில்லை. எந்த விதிக்கும் இது போன்ற எதிர்ப்பு உருவாகவில்லை. எந்த விதிக்கும் இது போன்ற சூடான விவாதம் நடைபெற வில்லை. நீண்ட விவாதத்திற்குப் பின்னர் வாக்கெடுப்பு மேற்கொண்ட போது, இந்தி வேண்டும் என்று 78 வாக்குகளும் இந்தி வேண்டாம் என்று 78 வாக்கு களும் சம அளவில் கிடைத்தன. சம வாக்குகள் வந்ததால் இப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடிய வில்லை. பின் காங்கிரசுக் கட்சியின் உள்கூட்டத் தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது இந்திக்கு ஆதரவாக 78 வாக்குகளும், எதிராக 77 வாக்குகளும் கிடைத்தன. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் வரைவுக் குழுவின் தலைவராக நான் இருந்த காரணத்தால் இந்த உண்மையை அறிந்து கொள்ள முடிந்தது என்றார் அம்பேத்கர். மற்றொரு நிகழ்வையும் இந்நூலில் அறிஞர் அம்பேத்கர் பதிவு செய்துள்ளார். இந்த விவரங்கள் எந்த அளவிற்குத் தெற்கு, வடக்கை விரும்ப வில்லை என்பதை வெளிப்படுத்துகின்றன. வடக்கு இதில் உறுதியாக இருப்பின் இந்த விருப்பமின்மை வெறுப்பாகவும் வளரலாம். வடக்கு அளவுக்கு மீறிய செல்வாக்கை இந்திய அரசியல் மீது திணிப்பது தொடர்ந் தால் தெற்கு பிரிந்துவிடும் என்றும் பதிவு செய்துள்ளார்.

அறிஞர் அம்பேத்கர் மொழிவாரி மாநிலங்கள் அமைக் கப்பட்டபோது தனது ஆய்வில் வடக்கு, தெற்கு மாநிலங்களின் நிலைமைகளைத் தெளிவாகச் சுட்டியுள் ளார். வடக்கிற்கும், தெற்கிற்கும் பெருமளவிலான வேறுபாடுகள் உள்ளன. வடக்கு பிற்போக்கானது, தெற்கு முற்போக்கானது. வடக்கு மூடநம்பிக்கையில் உள்ளது. தெற்கு பகுத்தறிவைப் போற்றக்கூடியது. தெற்கு, கல்வியில் முன்னிலையில் உள்ளது, வடக்கு கல்வி யில் பின்தங்கியுள்ளது. தெற்கின் பண்பாடு புதுமை நிறைந்தது வடக்கின் பண்பாடு பழமையில் உள்ளது. நான் இராசகோபாலாச்சாரியை வரைவுச் சட்டத்தின் தலைவர் என்ற முறையில் சந்திப்பேன். அரசமைப்புச் சட்டம் உருவாகும் நிலையில்-நீங்கள் பெரும் தவறைச் செய்கிறீர்கள். எல்லாப் பகுதிகளுக்கும் சமஅளவில் பிரதிநிதித்துவம் அளிக்கும் ஒரு கூட்டாட்சி அமைப்பு இங்குப் பொருந்தாது என்று குறிப்பிட்டார். அப்படிப்பட்ட கூட்டாட்சி அமைப்பில் பிரதமரும் குடியரசுத் தலைவரும் இந்தி பேசும் பகுதிகளில் இருந்துதான் வருவார்கள்.... இரண்டு கூட்டரசுகள் இருக்க வேண்டும். ஒன்று வடக்குக் கூட்டரசு, மற்றொன்று தெற்குக் கூட்டரசு. இந்திய பெரும் கூட்டமைப்பு அரசு சமமான அளவில் மூன்று துறைகளில் (சட்டமன்றம், நீதி, நிர்வாகம்) சட்டம் இயற்றும் அதிகாரத்தைப் பெற்றிருக்க வேண்டும். இவைகள்தான் இராசகோபாலாச்சாரியாரின் உண்மைச் சிந்தனையாக இருந்தன. இந்தக் கருத்தியல் உண்மை யான காங்கிரசுகாரரின் ஆழ்மனதின் வெளிப்பாடாகும். திரு.இராசகோபாலாச்சாரியை ஒரு தொலைநோக்குப் பார்வை கொண்டவர் என்று நான் மதிக்கிறேன்.

வடக்கு, தெற்கு என இந்தியா பிரிந்து போகலாம் என்கிற அவரின் கருத்து வெற்றி பெறக்கூடாது என்பதற் காக நாம் ஒவ்வொருவரும் பணியாற்றிட வேண்டும். அமெரிக்காவில் வடக்கிற்கும் தெற்கிற்கும் நடந்த உள் நாட்டுச் சண்டையை மறக்கக் கூடாது. இந்தியாவில் வடக்கிற்கும் தெற்கிற்கும் உள்நாட்டுச் சண்டைகூட ஏற்பட லாம். பெருமளவில் பண்பாட்டு வேறுபாடுகள் வடக் கிற்கும் தெற்கிற்கும் இருப்பதை மறந்து விடக்கூடாது. இந்த வேறுபாடுகள் தீப்பற்றும் நிலையை ஒத்தவை.

இத்தகைய கருத்துகளை இன்றைய நிலையில் ஒப்பிட்டுப் பார்த்தால் வேறுபாடுகளும் மாறுபாடுகளும் ஒன்றிய அரசின் ஆதிக்க மனப்பான்மையால் மேலும் பெருகி வருகின்றன. குறிப்பாகப் பிரதமர் மோடி ஒன்றிய அரசின் பிரதமரான பிறகு என்றுமில்லா அளவிற்கு இந்தித் திணிப்பும், செத்துப் போன சமஸ்கிருத மொழிக்கு முன்னுரிமை அளிப்பதும் மற்ற தேசிய மொழிகளை அவமதிப்பதும், சிறுபான்மையும், தலித் இன மக்களின் மீது தொடரும் தாக்குதல்களும் வடமாநிலங்களிலேயே பெரும் வெறுப்பையும் பிளவு களையும் ஏற்படுத்தியுள்ளது. பசுப் பாதுகாவலர்கள் என்ற போர்வையில் இந்துத்துவ அமைப்பினர் அடிக்கும் கொட்டம் எண்ணிலடங்காது. கல்வி நிலையங்களில் உயர் கல்வி அமைப்புகளில் பாசிசத்தை வளர்க்கும் போக்கு தொடர்ந்து பெருகி வருகிறது. மராட்டிய மாநிலத்தில் பகுத்தறிவாளர்கள் நரேந்திர தபோல்கர் பன்சாரே கர்நாடக மாநிலத்தில் கல்பர்கி, திருமதி. லங்கேஷ்வர் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே வரி போன்ற முழக்கங்கள் அம்பேத்கரின் சுதந்தர சமத்துவ சகோதரத்துவக் கருத்துகளை முழுமையாக சமுதாயத்திலும் நாட்டிலும் சிதைத்து வருகின்றன. மேலும் வடமாநிலங்கள், தென் மாநிலங் களின் வரி வருவாயை எடுத்துக்கொண்டு மிகக் குறைந்த அளவான நிதி ஒதுக்கீட்டைத் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு அளிப்பதும், இந்தி பேசும் வட மாநிலங் களுக்கு நிதியை வாரி வழங்குவதும் ஏற்கெனவே வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையே பெருகி வருகின்ற ஏற்றத்தாழ்வைக் குறைக்குமா? பெருக்குமா? என்பதை உணர வேண்டியவர்கள் உணரும் காலம் நெருங்கிவிட்டது.

இதையெல்லாம் புரிந்துதான் ராகுல் வடக்கு-தெற்கு பற்றிப் பேசினாரா? என்பதும் ஒரு புதிர்தான். இக்கருத்தைத் தமிழ்நாடு பாஜக தலைவர் பிரிவினைவாதம் என்று சொல்வது அறியாமையின் வெளிப்பாடே. வடக்கு-தெற்கு பிரச்சினைகளுக்கு இராஜகோபாலாச் சாரியார் அம்பேத்கரிடம் குறிப்பிட்ட வடக்கு-தெற்கு உறவைச் செம்மைப்படுத்தும் புதிய பெருங்கூட்ட மைப்பு உருவாகுமா? அல்லது வடக்கு-தெற்கு பிரிவினை யில் முடியுமா? காலம்தான் பதில் சொல்லும்.

Pin It