படித்தேன் ….! மலைத்தேன்…..! உண்மையில் நாவல் சிறுகதைகள் கட்டுரைகளைவிட எனக்குக் கவிதைகளே உற்சாகமூட்டுகின்றன. நீண்ட நாட்களுக்குப் பிறகு பேராசிரியர் தோழர் பா.ஆனந்தகுமார் தமிழாக்கம் செய்து என்.சி.பி.எச். வெளியிட்டுள்ள நூறாண்டுகால மலையாளக் கவிதைகள் என்னும் நூலை இன்று வாசித்துப் பெரு மகிழ்ச்சியடைந்தேன். நமது தமிழ்க் கவிஞர்கள் வாசித்தார்களா என்றறியேன். ஆகா… கவிஞன் என்றால் இதை வாசிக்க வேண்டும்.

noorandukala malaiyala kavithaigalநூறாண்டுகளுக்கு முந்தி எழுதிய ஸ்ரீநாராயணகுரு முதல் நிகழ்காலக் கவிஞர் தன்யா வரை நூறாண்டுக் கவிதைகளில் முக்கியமான 24 கவிஞர்கள்… அவர்களது கவிதைகளை மட்டுமே தோழர் ஆனந்தகுமார் தமிழாக்கித் தந்துள்ளார்.

பறைச்சிக்குப்பிறந்தார் முன்பு பராசரமுனி

மறையோதிய வியாசர் மீனவப்பெண்

வயிற்றில் பிறந்தார்,

ஒருசாதி ஒருமதம் ஒருதெய்வம் மனிதனுக்கு

ஒரு யோனியும் ஓர்உணவும் ஒரு பேதமுமில்ல

என்கிறார் நாராயண குரு..

இறுக்கமற்ற சாதிச்சரட்டில்

இனி மக்கள் நிற்கமாட்டார்

மாற்றுவீர் உமது சட்டங்களை

இல்லையேல் அவைதாம் உமை மாற்றும்

என்று அவரைத் தொடர்கிறார் குமாரன் ஆசான்.

இவர்களைப் போலவே மகாகவி வள்ளத்தோளும் சாதிப்பிரிவினைகளைச் சாடுகிறார். அவர் 1949ஆம் ஆண்டு சென்னை ராஜதானியின் அரசவைக் கவிஞராக அறிவிக்கப்பட்டு முதல் பத்ம பூஷன் விருதும் பெற்றார்.

மகாகவி வள்ளத்தோள் காந்தியவாதி, விடுதலைப்போராளி், காந்தியைப் புகழ்ந்து பின்வருமாறு பாடுகிறார்:

ஆயுதமில்லா அறப்போரை நடத்துவோன்

நூலின்றி நல்வினை கற்பித்தல் செய்வோன்

மருந்தின்றி நோயைத்தீர்ப்பவன் அகிம்சையெனும்

வேள்வியை நடத்துபவன் என் ஆச்சார்யன்

மேலும், தாய்மொழிதான் மனதில் நிறைகிறது, வேற்று மொழியோ மனதின் வெளியே நிற்கிறது என்று தாய்மொழியின் உயர்வைப் பேசுகிறார்.

பூர்வீகத்தமிழரும் மகாகவியுமான உள்ளுர் பரமேசுவர ஐயர் சாதிக் கொடுமைகளுக்கெதிராய் பின்வருமாறு கலகம் செய்கிறார்.

 யார் உயர்ந்தோர் யார் நீசர்? என்று கேள்வி எழுப்பி, இந்த வேறுபாடுகள் ஒட்டுமொத்த உலகத்தாரைத் தலைகுனியச் செய்கிறது என்று சாடுகிறார்.

கவி சங்கம்புழா நிலப்பிரபுத்துவச் சுரண்டலையும் உழைக்கும் வர்க்கத்தின் ஆதரவற்ற நிலையையும் உணர்ச்சி ததும்பும் பாடல்களாய் எழுதினார்.

 நலிந்தோர் துயருற்றோர் ஆதரவற்றோர்

 இவர்களின் துன்பங்களை யாரறிவார்

அவர்கள் அரை நிர்வாணர்கள் துயரத்தில்

ஆழ்ந்திருப்போர்அவர்களின் பட்டினி என்று தீரும்?

……

 இல்லாமை இரக்கமற்ற அடக்குமுறை

……

 வழங்கப்பட்ட நிராசையின் குருட்டுத்தனம் பயங்கரம்

வரம்பற்ற தண்டனைகளின் உக்கிரம் சட்டச்சுமைகள்

 இவற்றுக்கெல்லாம்

 பழிவாங்காது அடங்குவரோ? பாவிகளே, உங்கள்தம்

பின்தலைமுறையினர்

என்ற கேள்வியை முன்வைக்கிறார். அவரது வாழைக்குலை கவிதை புகழ்பெற்றதாகும்.

கவிஞர் புல்லாற்று பாசுகரன் தனது கவிதையில்

வீணையல்ல என் துாரிகை

வீரியம் துள்ளி எழும் வாள்

என்று முழங்குகிறார்.

வயலார் ராமவர்மா கவிதையைச் சமூக மாற்றத்திற்கான கருவியாக மாற்றிய பெருமைக்குரியவர்.

நேசிக்கவில்லை நான்

நோவும் ஆத்மாவினை நேசிக்காத

எந்த ஒரு தத்துவத்தையும்

என்பதே அவரது பிரகடனமாகும். அவரது தாடகையென்கிற திராவிட ராஜகுமாரி கவிதை ராமனை - ராமாயணத்தைத் தோலுரிக்கிறது.

அடுத்ததாக, ஞானபீடப்பரிசுபெற்ற ஓ.என்.வி. குறுப்பு கவிதைகள் குறித்து குறிப்பிட வேண்டும். நிங்கள் என்னை கம்யூனிஷ்டாக்கி என்ற புகழ்பெற்ற நாடகத்தின் பாடல்களை எழுதியவர் இவரே.

 நாம் அறுவடை செய்யும் வயல்களெல்லாம்

 நம்முடையதாகும் பைங்கிளியே

என்ற பாடல் அதில் புகழ் பெற்றது. கண்ணகி பற்றிய அவரது கதைப்பாடல் அற்புதமானது. முழுவதும் இதில் உள்ளது.

படைவீடுகளும் தேரும் நெறிகெட்ட சிம்மாசனங்ளும் பற்றி எரிகின்றன ஜ்வாலை படர்கிறது.

மீண்டும் இளங்கோவடிகளை வருமாறு அழைக்கிறார் கவி குறுப்பு.

இதனைத் தோழர் பேராசிரியர் ஆனந்தகுமார் அற்புதமாய்த் தமிழில் தந்திருக்கிறார்.

கவிஞர் குஞ்ஞுண்ணி விசித்திரமானவர்; அவர் கூறுவது….

நான் பசிக்கும்போது புசிப்பேன்

தாகமெடுத்தால் குடிப்பேன்

சோர்வடைந்தால் உறங்குவேன்

உறங்கும்போது எழுதுவேன் கவிதைகளை

எழுதுவதல்ல--எழுவதுதான் எழுத்து,

இவரது கவிதைகள் வேடிக்கையானவையும் கூட…

ஒரு தீக்குச்சி குடு

தீப்பெட்டி குடு

ஒரு பீடி குடு

விரல் குடு

உதடுகுடு

நான் ஒரு பீடியை இழுத்து ரசிக்கிறேன்.

இவரது கவிதைகள் ரசனைமிகுந்தவை, படிக்கத் தெவிட்டாதவை,

மக்கள் புரட்சியை நேசிக்காதது பற்றி கேவலமாக-----

 இத்தினியூண்டு நக்கக் கிடைத்தால் போதும்

 அப்போதே முடிந்துவிடும் இந்தியனின் புரட்சி

என்று எழுதுகிறார்.

கவிதை ஒரு விதையாக உருமாறியது

வயலுக்குச் சென்றது

புதுமழைபெய்து நிலம் உழுது புரட்ட

உழவன் வரும் நாளுக்காய்க் காத்துக்கிடந்தது

என்று வர்ணிக்கிறார் கவி சச்சிதானந்தன்.

நூறாண்டுகால மலையாளக் கவிதைகளின் பரிணாம வளர்ச்சியை அறிந்துகொள்ளும் வகையிலான தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் இந்நூலில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. தற்கால மலையாளக் கவிதைப் போக்கினை உணர்த்தும் வகையில் டி.அனில்குமார், தன்யா வேங்கச்சேரி உள்ளிட்டோரின் கவிதைகளும் இந்நூலில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. மலையாளக் கவிதைகளின் கவித்துவத்திலும் கருத்தாழத்திலும் ஈடுபாடுடைய இலக்கிய ஆர்வலர்களுக்கும் மலையாளக் கவிதைகளில் ஆய்வு மேற்கொள்ள விரும்பும் ஆய்வாளர்களுக்கும் இந்நூல் அரியதோர் ஆவணமாகத் திகழும் என்பதில் சந்தேகமில்லை.

நுாறாண்டுகால மலையாளக் கவிதைகள்
தமிழில்: பா.ஆனந்தகுமார்
விலை ரு 150. வெளியீடு : என்சிபிஎச்

- எஸ்.ஏ.பெருமாள்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.