12 - 8 - 1908 அமிர்த பஜார் பத்திரிகை ‘குதிராமின் முடிவு’ என்ற தலைப்பிட்டு, பெரிய எழுத்துக்களில் தலைப்புச் செய்தி வெளியிட்டிருந்தது. “மகிழ்ச்சி யோடும் புன்னகையோடும் அவன் மரணமடைந்தான்.  இறுதிச் சடங்கு அமைதியாய் நடந்தது.  காலை 6 மணிக்கு அவனைத் தூக்கிலேற்றினார்கள். அவன் தூக்கு மேடையை நோக்கி கம்பீரமாக நடந்து சென்றான்.  தலையில் கறுப்புத்துணியை மூடும் வரை அவன் மரணத்தை அலட்சியப்படுத்தும் புன்னகையோடு நின்றான்” என்று அப்பத்திரிகை, செய்தி வெளியிட்டது.

எம்பயர் என்ற வெள்ளைக்காரர்களின் பத்திரிகை “குதிராம்போஸ் இன்று காலையில் தூக்கிலிடப்பட்டான்.  அவன் மிகவும் விறைப்பாக மகிழ்ச்சியோடு சிரித்தவாறே தூக்கு மேடையேறினான்” என்று குறிப்பிட்டது.  ஆனால் அவன் எதற்காகப் போராடினான், ஏன் தூக்கு மேடையேறினான் என்பதைப்பற்றி அந்தப் பத்திரிகைகள் அலட்டிக் கொள்ளவில்லை. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கொள்ளைபற்றியோ, அதன் கோரமான அட்டூழியங்கள், அடக்குமுறைகள் பற்றியோ, அதன் மனிதத் தன்மையற்ற ஆட்சி குறித்தோ அப்பத்திரிகைகளில் எழுதப் படவில்லை.

ஆனால் அந்தப் புரட்சியாளன் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்துப் போராடியே தூக்கு மேடையேறினான்.  இள வயதிலேயே கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தி தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டான்.அந்த வெள்ளைக்கார நீதிபதிக்குத் தன்னால் விதிக்கப்பட்ட தண்டனையின் கடுமைபற்றி அந்தப் பையன் குதிராமுக்குப் புரியுமா என்ற சந்தேகம் வந்தது.  ஏனெனில் தீர்ப்பைக்கேட்டு அவன் சந்தோசமாகச் சிரித்துக் கொண்டிருந்தான். அவனிடம் பயமோ, துயரமோ சிறிதும் தென்படவில்லை.

குதிராம் 11-8-1908ஆம் நாள் காலையில் முசபர்பூர் சிறையில் தூக்கிலிடப்பட்டான்.மிட்னாபூர் மாவட்டத்திலுள்ள அவனது ஊரிலிருந்து அந்தச் சிறை வெகு தொலைவிலிருந்தது.  அந்தத் தூக்கு மேடை நாடகம் சில நிமிடங்களிலேயே நடந்து முடிந்துவிட்டது.பெங்காலி என்ற பத்திரிகையின் நிருபர் எழுதுகிறார்: “நான்கு போலீசார் குதிராமை அழைத்துவந்தனர்.  அவன் விறைப்பாக நடந்து வந்தான்.  வேகமாய் நடக்கும்போதே எங்களைப் பார்த்துச் சிரித்துவிட்டுப் போனான்.  அவனது தைரியமும், மிடுக்கும், மரணத்தைக் கண்டு அஞ்சாமையும் கண்டு எங்களுக்கு சிலிர்த்துவிட்டது.”

பெயர் தெரியாத பாடகன் ஒருவன் குதிராம் பாடுவது போலப் பாடினான்:

“விடைகொடு தாயே

தூக்குமேடை செல்கிறேன்

மகிழ்வோடு தண்டனையை ஏற்கிறேன்,

இந்தியர்கள் பார்க்கட்டும்.”

அந்தக்காலத்தில் வங்கம், பஞ்சாப், பம்பாய் போன்ற மாநிலங்களில் இளைஞர்கள் பலர் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்துப் போராடி தியாகம் செய்தனர்.  அவர்களில் பலர் ஆயுதமேந்திப் போராடினர்.  அன்றைய சமூக, அரசியல், பொருளாதார நிலைமை அவர்களைப் போராடத் தூண்டியது.

பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியிலும் பத்தொன்பதாம் நூற்றாண்டு முழுவதும் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்கள் நீடித்தன.  1762 - 74 பன்னிரண்டு ஆண்டு சந்நியாசி- பக்கீர் கலகம், 1873 - 96 பதின்மூன்றாண்டுகள் மலபார் கலகங்கள், 1855 - 56, 1899 - 1900 சந்தால், முண்டா ஆதிவாசிகளின் கலகங்கள், 1857இல் சிப்பாய் கலகம், 1857 - 70 வரை வகாபி இயக்கம், 1860இல் இண்டிகோ கலகம், பராசி இயக்கம் என காலனி ஆதிக்கவாதிகளையும் அவர்களது கைக்கூலிகளையும் எதிர்த்துப் போராட்டங்கள் வெடித்தன.  ஆனால் இந்தப் போராட்டங்கள் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் ஒடுக்கப்பட்டன.

பிரிட்டிஷ் வைஸ்ராயான கர்சான் 1905ஆம் ஆண்டு வங்கப்பிரிவினைக்கு வழிவகுத்தான்.  இதற்கெதிராக அயர்லாந்து நாட்டினரைப் போல நூறாண்டுகள் வரை போராட வேண்டுமென்று சுரேந்திரநாத் பானர்ஜி கூறினார்.  ஆனால் கர்சான் பிரபுவோ “அரசு ஒரு முடிவை எடுக்கும் வரை இந்தியர்கள் போராடுவார்கள்; முடிவை அமுலாக்கி விட்டால் பின்பு ஏற்றுக் கொள்வார்கள்” என்று கூறினான்.

ரவீந்திரநாத் தாகூர்:-

“வங்காள வீடுகளில் பிறந்த

சகோதர சகோதரிகள் ஒன்றுபடுக!

ஒன்று படுங்கள், ஒன்றுபட்டு நில்லுங்கள்!

ஒன்றுபடுத்து என் கடவுளே”

என்று பாடினார். வங்கப் பிரிவினைக்கெதிராகவும், பிரிட்டிஷாரின் அடக்குமுறைகளுக்கெதிராகவும் மக்கள் வீறு கொண்டு எழுந்தனர். ஆயிரமாயிரம் இளைஞர்கள் களமிறங்கினர்.

“அம்மா உன் வயிற்றில் மீண்டும்

நான்பிறப்பேன் குழந்தையாய்;

அப்போது என் கழுத்தை தடவிப்பார்

தூக்குக்கயிறின் தழும்பிருக்கும்.”

குதிராம் போஸ் 3-12-1889இல் மிட்னாபூர் அருகில் ஹாபிபூர் என்ற கிராமத்தில் பிறந்தார்.  ஆறு வயதிலேயே தாய் தந்தையைப் பறி கொடுத்தார். தகப்பனார் பெயர் திரிலோக நாயக், தாயார் லட்சுமிப்பிரியா.  பெற்றோர் இறந்தபின் குதிராம் தனது அக்கா அபரூபா தேவியின் வீட்டில் வளர்ந்தார்.  அவரது கணவரான அமிருதலால் ராய் ஒரு அரசு ஊழியர். சிவில் கோர்ட்டில் பணியாற்றினார்.

குதிராம் எதற்கும் பணிந்து போகாத,அஞ்சாத வீரனாக இருந்தார்.  பள்ளியில் தனது ஆசிரியர்களிடம் மிக மரியாதையாக நடந்து கல்வி பயின்றார்.  1901ஆம் ஆண்டு, ஒரு நாள் தனது வகுப்பறை மேஜையை ஓங்கிக் குத்தி உடைத்தார்.  அவரது கையும் அடி பட்டு ரத்தம் ஒழுகியது.  பின்பு வேறு பள்ளிக்கு மிட்னாபூர் போக வேண்டியதாயிற்று. புதிய பள்ளியில் ஞானேந்திரநாத் போஸ், ஹேமச்சந்திர கனுங்கோ என்ற இரு ஆசிரியர்களிடம் குதிராம் நெருங்கிப் பழகினார். கலெக்டர் ஆபீசில் பணியாற்றிய சத்யன் போசிடமும் பழக்கம் ஏற்பட்டது.  இம்மூவரும் குதிராமிடம் தேசபக்தியையும், போராட்ட உணர்வையும் ஊட்டினர்.

1902இல் குதிராம் அந்நியராட்சியை ஆயுதமேந்தி வீழ்த்தும் லட்சியம் கொண்ட ஜுகாந்தர் குழுவில் இணைந்தார்.  அப்போது அவருக்கு வயது பதின் மூன்றுதான்.  காலரா, மலேரியா நோய் கண்ட மக்களுக்கும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் ஜுகாந்தர் அமைப்பு சேவை செய்தது.  மக்கள் சேவையில் இரவு பகல் பாராமல், பசியையும் பொருட்படுத்தாமல் குதிராம் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.  1905ஆம் ஆண்டு வங்கப் பிரிவினைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் பங்கேற்றார்.  1906ஆம் ஆண்டு போலீசாரால் கைது செய்யப் பட்டார்.

மீட்னாபூர் சிறைச்சாலை மைதானத்தில் சத்யன் போஸ் எழுதிய தங்க வங்கம் என்ற துண்டுப் பிரசுரத்தைப் பொதுமக்களிடம் வினியோகித்த போது தான் கைது செய்யப்பட்டார்.அவரது பள்ளி ஆசிரியர் ஒருவரே குதிராமை போலீசாரிடம் காட்டிக் கொடுத்தார்.ஆனால் குதிராம் இரண்டு போலீசாரையும் அடித்து நொறுக்கிவிட்டுத் தப்பிவிட்டார்.  மீண்டும் 1906 மே 16 அன்று கைது செய்யப்பட்டார். அவர் சிறுவனாக இருந்ததால் கோர்ட் விடுதலை செய்துவிட்டது.

1907ஆம் ஆண்டு தபால் ஆபீஸ் கொள்ளையில் பங்கேற்று தபால் பைகளைச் சூறையாடினார்.  அதே ஆண்டு டிசம்பர் 6ஆம் நாள் வங்காள கவர்னர் ஆண்ட்ரு பிராசர் வந்த ரயில் மீது வெடி குண்டுகளை வீசினார்.  இந்தச் சம்பவம் நாராயண் கார் என்ற ரயில்வே ஸ்டேசனில் வைத்து நடந்தது.  இரண்டு வெள்ளைக்கார அதிகாரிகளைக் கொலை செய்ய முயன்றார். இந்த வழக்குகளில் குதிராம் கைது செய்யப்பட்டார்.

அந்தக் காலத்தில் கல்கத்தாவில் கிங்ஸ் போர்டு என்ற வெள்ளைக்கார நீதிபதி இருந்தார்.  தேச பக்தர்களுக்கெதிராக காட்டுமிராண்டித் தனமான தீர்ப்புகளை அவர் வழங்குவார்.ஒருமுறை பிபின் சந்திரபால் என்ற தலைவர் அந்த நீதிமன்றத்திற்குக் கொண்டுவரப்பட்டார். அப்போது ஒரு 14 வயது சிறுவன் ‘வந்தேமாதரம்’ என்று கோஷமிட்டான்.  அதற்காக அந்தச் சிறுவனை மயங்கிவிழும் வரை சவுக்கால் அடிக்கச் செய்தார் அந்த நீதிபதி.

இந்தச் செய்தியை 16-6-1907 தேதியிட்ட ஜுகாந்தர் பத்திரிகை வெளியிட்டது.  அந்தச் சிறுவன் மீது கசையடி விழும்போதெல்லாம் வந்தே மாதரம் என்று கோஷமிட்டுத் தன் வேதனையைக் குறைத்துக் கொண்டான்.  அரசியல் கைதிகளுக்குக் கசையடி தண்டனை கொடுப்பது எந்த நாட்டிலுமில்லை.  கொடூரமான ஆட்சி நடத்திய ஜார் மன்னனின் ரஷ்யாவில் கூட இல்லை என்று பத்திரிகைகள் எழுதின.  இந்தத் தண்டனையை விதித்த நீதிபதி கிங்ஸ் போர்டுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டு மென்று ஜுகாந்தர் பத்திரிகை எழுதியது. பொது மக்கள் அந்த நீதிபதியின் மீது கடுங்கோபத்திலிருந்தனர்.  ஆனால் அரசு, பொதுமக்களின் கருத்து பற்றிக் கவலைப்படாமல் கிங்ஸ்போர்டுக்குப் பதவி உயர்வு வழங்கியது. இது புரட்சி இயக்கத்தினருக்கும் பொது மக்களுக்கும் மிகுந்த ஆத்திரமூட்டியது.

வங்காளத்தில் பரீந்திரகுமார் கோஷ் தலைமையில் அனுசீலன் சமிதி என்ற புரட்சியாளர்கள் கழகம் இயங்கி வந்தது.அன்று இரவு முராரிபுகூரிலுள்ள பரீந்திரகுமாரின் தோட்ட வீட்டில் புரட்சியாளர்கள் கூடினர்.  இந்தியர்களைக் கொடூரமாகத் தண்டிக்கும் பிரிட்டிஷ் கொடுங்கோலன் கிங்ஸ்போர்டு மீது தாக்குதல் தொடுக்கவேண்டுமென்று கூட்டத்தில் முடிவு செய்தனர்.  இதை வெற்றிகரமாகச் செய்து முடித்தால் தங்கள் இயக்கத்தில் வேகம் பிறக்கு மென்றும், பொது மக்களும் இதை வரவேற்பார்கள் என்றும் அவர்கள் கருதினர்.சுதந்திரப் போராளி களைத் தண்டிக்கும் முன்பு இனிமேல் பிரிட்டிஷ் நீதிபதிகள் பலமுறை யோசிக்கும்படி செய்ய வேண்டுமென்றும் அனுசீலன் சமிதியினர் கூறினர்.

பிரிட்டிஷ் நீதிபதி மீது யார் போய் குண்டு வீசுவது என்று அனுசீலன் சமிதியில் விவாதித்தனர்.தலைவர் தனக்கு நம்பிக்கையான, எதற்கும் அஞ்சாத பையன்களைத் தெரியுமென்றும், அவர்களை அதற்குப் பயன்படுத்தலாம் என்றும் கூறினார்.  நீண்ட விவாதத்திற்குப் பிறகு அதை அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.

இதற்கிடையில் நீதிபதி கிங்ஸ் போர்டுக்கு ஏராளமான மொட்டைக் கடுதாசிகள் வந்தன.  உன்னைப் பழிதீர்ப்போம் என்று அக்கடிதங்கள் எச்சரித்தன.  இந்த மொட்டைக் கடுதாசிகளால் என்னை ஒன்றும் செய்யமுடியாது என்று நீதிபதி கொக்கரித்தான்.ஆனால் நீதிபதியின் நண்பர்கள் “மொட்டைக் கடுதாசிகளானாலும் உனக்குக் கடுமையான ஆபத்தை விளைவிக்கும், எதற்கும் எச்சரிக்கையாய் இரு” என்று எச்சரித்தனர்.  ஆனால் நீதிபதியோ இந்தக் காகிதப்புலிகளுக்கு நான் பயப்படமாட்டேன் என்று கூறினான்.  ஆனால் நண்பர்கள், மேல் அதிகாரி களுக்குத் தெரிவித்து நீதிபதியைப் பாதுகாப்புக் காரணம் கருதி முசாபர்பூருக்கு மாற்றினர்.

அனுசீலன் சமிதி, நீதிபதி கிங்ஸ் போர்டுக்கு மரணதண்டனை வழங்க முடிவுசெய்தது.  தலைவர் சத்யன்பாசு கூறிய இரண்டு பையன்கள் குதிராம் போசும், பிரபுல்லசாகியும் ஆவர்.  மரணதண்டனை வழங்கும்  பொறுப்பை அந்த இருவரிடமும் ஒப்படைத்தனர்.  அவர்கள் இருவரையும் அழைத்து அமரவைத்து சத்யன்பாசு முசாபர்பூரின் வரை படத்தை விரித்து விளக்கிக் கூறினார்.  பின்பு வெடி குண்டுகளையும், ஒரு கைத்துப்பாக்கியையும் அவர்களிடம் கொடுத்தார்.  வெடிகுண்டு வீச்சில் நீதிபதி தப்பிவிட்டால் துப்பாக்கியால் அவனைச் சுட்டுக் கொல்லும்படி கூறினார்.  தலைவர் அவர்கள் இருவரையும் கட்டித் தழுவி வந்தேமாதர கோஷமிட்டு வழியனுப்பி வைத்தார்.  குதிராமும், பிரபுல்ல சாகியும் ரயிலில் புறப்பட்டு முசாபர்பூர் போய்ச் சேர்ந்தனர்.

இருவரும் முசாபர்பூரில் இறங்கி அங்குள்ள தர்மசாலாவுக்குச் சென்று தங்கும் வசதி கேட்டனர்.  தர்மசாலாவின் நிர்வாகி சத்திரத்தின் மூன்றாவது அறையில் தங்கிக் கொள்ளுமாறு கூறினார்.  தர் சாலாவுக்கு எதிரில்தான் நீதிபதி கிங்ஸ் போர்டின் பங்களா இருந்தது. நீதிபதியின் நடமாட்டத்தைக் கண்காணிப்பதற்கு அந்த அறை வசதியாக இருந்தது.

நீதிபதி காலையில் குதிரைகள் பூட்டிய சாரட்டில் பாதுகாவலரோடு நீதிமன்றம் செல்வார்.  மதியம் பங்களாவுக்கு வந்து உணவு அருந்திவிட்டு சாரட்டி லேயே நீதிமன்றம் செல்வார்.  குதிராமும் பிரபுல்லாவும் நீதிபதியை எந்த இடத்தில் வைத்துத் தாக்குவது என்று ஆய்வு செய்தனர். மற்ற நீதிபதிகளைப் போல இவன் காலையில் வாக்கிங்கோ, குதிரை சவாரியோ போவதில்லை.நீதிமன்றத்திற்குள்ளோ, சாலையில் செல்லும்போதோ குண்டு வீசினால் சம்பந்தமே இல்லாத அப்பாவிகளும் கொல்லப்படுவார்கள் என்று கருதினர்.தொடர்ந்து கவனித்ததில் மாலை நேரத்தில் பிரபுக்கள் கூடும் கிளப்பிற்குச் சென்று சீட்டாடும் பழக்கம் நீதிபதிக்கு இருந்தது தெரிய வந்தது.  கிளப்பும் நீதிபதியின் வீட்டருகிலேயே இருந்தது.  அங்கு நீதிபதியின் நடமாட்டத்தை இருவரும் கண்காணித்து வந்தனர்.

30-4-1908ஆம் நாள் மாலையில் கிளப்பில் நீதிபதி கிங்ஸ்போர்டு ஒரு பெண்ணுடன் சீட்டாடிக் கொண்டிருந்தான்.  அவள் பெயர் திருமதி கென்னடி.  அவளும் அவளது மகளும் கிளப்புக்கு வந்திருந்தனர்.  சீட்டாட்டத்தில் அவளே ஜெயித்தாள்.  பின்பு அவள் தனது மகளை அழைத்துக்கொண்டு கிளம்பினாள்.

வெளியில் இருளில் குதிராமும் பிரபுல்லாவும் நீதிபதியின் வருகைக்காக நெடுநேரம் காத்திருந்தனர்.  நீதிபதி கிளப்பை விட்டு வெளியே வந்து சாரட்டில் ஏறிக் கிளம்பினான்.  அதற்கு முன்பாக திருமதி கென்னடியும் சாரட்டில் கிளம்பியிருந்தாள்.  குதிராம் வெடிகுண்டைக் குறிபார்த்து வீசினான். குண்டு வெடித்து சாரட் சிதறியது.

குதிராமின் குறிதவறிவிட்டது.  குண்டுவீச்சில் முதல் சாரட்டில் வந்த திருமதி கென்னடி கொல்லப்பட்டாள்.  அவளது மகள் காயமடைந்து உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தாள்.  என்ன நடந்தது என்று தெரியாமல் குண்டை வீசியதும் குதிராமும் பிரபுல்லாவும் ஓடிவிட்டனர். இரண்டாவது சாரட்டில் வந்த நீதிபதி கிங்ஸ் போர்டு இந்தச் சம்பவத்தைப் பார்த்துக் கீழிறங்கி ஓடிவந்து பார்த்தான்.  அங்கு திருமதி கென்னடியும் அவளது மகளும் ரத்த வெள்ளத்தில் மிதப்பதைப் பார்த்து அதிர்ந்து கத்தினான்.

குதிராமும் பிரபுல்லாவும் இருளில் ஓடி மறைந்து விட்டனர்.  குதிராம் திடீரென “நாம் இருவரும் நமது செருப்புகளை அங்கேயே விட்டு வந்து விட்டோம்” என்றார்.  பிரபுல்லா “அதைவிடு, இப்போது நாம் இருவரும் ஒன்றாய்ச் செல்லக் கூடாது; பிரிந்து செல்ல வேண்டும்” என்றார். இருவரும் பிரிந்து ஆளுக்கொருபக்கம் ஓடினர்.

இரவு முழுவதும் ஓடி, காலையில் பிரபுல்லா சமஸ்திபூரை அடைந்தார். அங்குக் கடையில் புதிய ஆடைகளையும், புதிய பூட்சுகளையும் வாங்கி அணிந்துகொண்டு ரயிலில் ஏறினார்.  அவர் ஏறிய பெட்டியில் நந்தாலால் பானர்ஜி என்ற போலீஸ் அதிகாரியும் பயணம் செய்தார். பதற்றத்துடன் ஏறிய பிரபுல்லாவை பானர்ஜி தனக்கு எதிரில் இருந்த சீட்டில் அமரும்படி கூறினார்.  அவர் பிரபுல்லாவிடம் இளைஞர்களின் தேசபக்தியையும், வீரத்தையும் பாராட்டிப் பேசினார்.பின்பு பிரபுல்லாவைப் பார்த்து “நேற்று முசாபர்பூரில் ஏன் இப்படிச் செய்தார்கள்?” என்று கேட்டார்.  பின்பு “அதுவும் இரண்டு வெள்ளைக்காரப் பெண்களை ஏன் கொலை செய்தார்கள்!” என்றும் கேட்டார்.  பிரபுல்லாவுக்குப் பொறிதட்டியது. தவறான பெட்டியில் ஏறி விட்டதை உணர்ந்தார்.  பிரபுல்லாவின் முகம் வெளிறிப் போனதைப் போலீஸ் அதிகாரி பானர்ஜியும் கவனித்தார்.

அடுத்த ஸ்டேசனில் வண்டி நின்றதும் போலீஸ் அதிகாரி போனில் தகவல் தெரிவித்தார்.  பிரபுல்லா ஹவுராவுக்கு டிக்கெட் எடுக்கப்போனார். அதற்குள் போலீஸ் வந்துவிட்டது.  உடனே ஓடத் தொடங்கினார்.  போலீசாரைப் பார்த்து துப்பாக்கியால் சுட்டார்.  ஆனால் தோட்டா யார் மீதும் பாயவில்லை.  போலீசார் நெருங்கிவிட்டனர்.  போலீசாரிடம் சிக்கி விடக்கூடாது என்று கருதி தனது துப்பாக்கியைத் தனது நெஞ்சைக் குறிவைத்துச்சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.  போலீசார் பிரபுல்லாவின் இறந்த உடலைத்தான் சுமந்து செல்ல நேர்ந்தது.

குதிராம் போஸ் இதற்கிடையில் வைனி நகரை அடைந்தார்.  கடுமையான பசியில் ஒரு ஓட்டலில் நுழைந்து சாப்பாடு கேட்டார்.சாப்பிடத் துவங்கியதும் இரண்டு போலீசார் உள்ளே வந்தனர்.  காலில் செருப்பில்லாமல் களைப்பாகத்தெரிந்த குதிராம் மீது அவர்களுக்குச் சந்தேகம் வந்தது.  குதிராமை போலீசார் விசாரித்தனர்.  அவர் சொன்ன பதிலிலிருந்து போலீஸ்காரர்களுக்குச் சந்தேகம் வலுவானது.  தங்களோடு போலீஸ் ஸ்டேசனுக்கு வரவேண்டு மென்று அழைத்தனர்.

குதிராம் உடனே தனது ரிவால்வரை எடுத்து நீட்டினார்.  அதைப் போலீஸ்காரர் தனது தடியால் தட்டி விடவும் அது கீழே விழுந்துவிட்டது.  உடனே இரண்டு போலீஸ்காரர்களும் பசிக்கிறக்கத்திலிருந்த குதிராமைப் பிடித்துக் கைது செய்து விலங்கு மாட்டினர்.  போலீஸ்காரர்கள் குதிராமை முசாபர்பூருக்குக் கொண்டு வந்தனர்.  ரயிலைவிட்டு இறங்கும் போதே குதிராம் “வந்தே மாதரம்” என்று பலமுறை கோஷமிட்டார்.  உடனே ரயில் நிலையத்தில் பெரிய கூட்டம் திரண்டுவிட்டது.  சின்னவயதுக்காரனாகவும் வீரனாகவும் தெரிந்த குதிராமைப் பார்த்து கூடியிருந்த மக்கள் ஆச்சரியப்பட்டனர்.  இந்த வயதில் இத்தனை வீரமா என்று அதிசயித்தனர்.  பின்பு குதிராமைப் போலீசார் இழுத்துச் சென்றனர்.

பிரபுல்லாவின் மரணச் செய்தியும், குதிராம் கைது செய்யப்பட்ட செய்தியும் கல்கத்தாவை எட்டின.  உயர் போலீஸ் அதிகாரிகள் கூடி அனு சீலன் சமிதியின் மறைவிடங்கள் மீது தாக்குதல் தொடுத்தனர்.  மாணிக் தலா தோட்ட வீட்டைத் தாக்கி அங்கிருந்த வெடிகுண்டுகள், துப்பாக்கி களைப் போலீசார் கைப்பற்றினர்.பரீந்திரகோஷ் உட்பட முப்பத்துநான்கு புரட்சியாளர்களைக் கைது செய்தனர்.  பரீந்திரகோசுக்கு அவரது சகோதரர் அரவிந்த கோஷின் உதவி நிச்சயம் இருக்கும் என்று உயர் போலீஸ் அதிகாரிகள் கருதினார்.  அரவிந்த கோஷின் பேச்சும், எழுத்தும் புரட்சிகர ஆவேசத்தைத் தூண்டின.  எனவே அவரையும் கைது செய்து சிறையிலடைத்தனர்.

சிலவாரங்கள் கழித்து முசாபர்பூர் நீதிமன்றத்தில் குதிராம் போசின் வழக்கு விசாரணை துவங்கியது.  குதிராம் தனது வாக்குமூலத்தில் “சாரட் வண்டியில் அந்தக் கொடூர நீதிபதி கிங்ஸ் போர்டு வருவதாய்க் கருதித்தான் நான் வெடிகுண்டை வீசினேன்.ஆனால் இரண்டு அப்பாவிப் பெண்மணிகளின் சாவுக்குக் காரணமாகிவிட்டேன்.  அதற்காக நான் மிகவும் வருத்தப் படுகிறேன்” என்று கூறினார்.

நீதிமன்ற விசாரணை ஒரு சடங்கு போல நடத்தப்பட்டது.  இறுதியில் குதிராமுக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்புக் கூறினார். குதிராம் இந்தத் தீர்ப்பைக் கேட்டு எவ்விதப் பதற்றமும் அடையவில்லை.  அமைதியாய், கம்பீரமாய் மௌனமாய் அதை ஏற்றுக் கொண்டார். இதைக் கண்ட நீதிபதி மிகுந்த ஆத்திரமடைந்து “இந்தத் தீர்ப்பினால் உனக்கு நேரப்போவது என்னவென்று தெரியுமா?” என்று குதிராமைப் பார்த்துக் கேட்டார்.  குதிராம் தலையை ஆட்டிச் சிரித்துவிட்டு ‘வந்தே மாதரம்’ என்று கோஷமிட்டார்.

குதிராம் பின்பு நீதிமன்றத்திற்கு வெளியே கொண்டுவரப்பட்டார்.வெளியே வந்து தனது வழக்கறிஞரிடம் “எனக்குள்ள ஒரே வருத்தம் அந்த நீதிபதி கிங்ஸ்போர்டு செய்த குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட முடியாமல் போனதுதான்; தூக்கு மேடைக்கு நான் அஞ்சவில்லை.  என் தாய்நாட்டுக் காக மரணத்தைத் தழுவுவது எனக்குப் பெருமைதான்!” என்று கூறினார்.

குதிராமுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து கல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு அப்பீல் செய்யப்பட்டது.  அங்கும் மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது.  11-8-1908ஆம் நாள் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.குதிராம் தூக்குக் கயிறைத் தனது கழுத்தில் மாட்டுவதற்கு முன்பு “என் தாய்நாட்டின் விடுதலைக்காக மகிழ்ச்சி யோடு மரணத்தைத் தழுவுகிறேன்.என் தாய்த் திருநாடே, நான் மீண்டும் பிறந்து வருவேன்-  உன் விடுதலைக்காக! வந்தே மாதரம்!” என்று முழங்கினார்.  அவரது மரணதண்டனை நிறைவேறியது.

இந்தச் சதி வழக்கில் கைது செய்யப்பட்ட புரட்சி யாளர்கள் மீதான வழக்கு அலிப்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.  அவர்களுக்காக தேசபந்து சித்த ரஞ்சன்தாஸ் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடினார்.  இவ்வழக்கில் பதினைந்து பேருக்கு நீதிமன்றம் தண்டனையளித்தது. அரவிந்த கோசும் வேறு சிலரும் விடுதலை செய்யப்பட்டனர்.  பரீந்திரகோசும் அவருடன் மற்றவர்களும் ஆயுள் தண்டனை விதிக்கப் பட்டு அந்தமான் சிறைக்கு அனுப்பப்பட்டனர்.

குதிராம், பிரபுல்லசாகிபின் தியாகம் வங்க இளைஞர்களிடையே பெரும் எழுச்சியை ஏற் படுத்தியது.  அவர்களது தியாகத்தைப் போற்றும் பாடல்கள் புனைந்து மக்கள் பாடினர்.  விடுதலைப் போரில் வங்க மக்களை ஈர்த்ததில் இந்த இரு தியாகிகளும் புகழ்பெற்றனர். ‘வந்தேமாதரம்’ என்ற கோஷம் வங்கம் முழுதும் எதிரொலித்தது.

Pin It