உலக அளவில் இலக்கியப் புலம் சார்ந்த ஆய்வுப் பொருளைப் பற்றிய தேடல்களில் சமூக அறிவியல் புலங்களின் கருத்தியல் தாக்கம் எப்போதும் இருந்து வந்திருக்கிறது. தமிழ் இலக்கிய ஆய்வுலகம் என்பது, ஒரு பகுதி அளவிலேனும் பன்மைத்துவப் புலச் சிந்தனைகள் விரவிய கோணத்தை முன்னிறுத்தக் கூடியது. இலக்கியப் பனுவல் பிரதிபலிக்கும் சமூக உலகின் பரிமாணத்தை இனங்கண்டு, அதன் ஆழ்பொருளை வெளிப்படுத்துவதற்குக், கலைப்புலங்களின் எல்லையைக் கடந்துச் சென்று, சமூக அறிவியல் புலங்களின் — குறிப்பாக, மானிடவியலின் கருத்துருவங்கள், கோட்பாடுகள் ஆகியவற்றைப் பெற்று, அவற்றின் வாயிலாக உருவாக்கப்பட்ட நெறிமுறையைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் என்பன, கடந்த நூற்றாண்டில் தமிழியலில் ஒரு புதிய தடத்தைத் தோற்றுவித்தன. ஈரிடைப்புல நோக்கு, பன்மைத்துவப்புலப் பார்வை என்று தனியே அடையாளம் காணப்பட்ட அந்த ஆய்வுத்தடத்திற்கு வித்திட்ட முன்னோடிகளாக நா. வானமாமலை, க. கைலாசபதி, கா. சிவத்தம்பி உள்ளிட்ட அறிஞர்களைக் குறிப்பிடலாம் (காண்க: ஆ.தனஞ்செயன், 2025: தமிழில் இலக்கிய மானிடவியல்). தமிழ் இலக்கியப் புலத்திலும் நாட்டார் வழக்காற்றியலிலும் நமது முன்னோடித் தமிழறிஞர்களும் அவர்தம் வழிமரபினரும் கையாண்ட மானிடவியல் கருத்தாக்கங்கள், கோட்பாடுகள் ஆகியவற்றின் ஊடாக விளைந்த ஈரிடைப்புல ஆய்வு நெறிமுறையின் வாயிலாகவே மானிடவியல் புலம் பற்றிய ஓர்மை தமிழில் வலிமை பெற்றது என்பது வரலாறு.
தமிழ் இலக்கிய ஆய்வில் மானிடவியல் அணுகுமுறையைப் புகுத்திய இவ்வறிஞர்களின் வழிமரபினரான அடுத்துவந்த தலைமுறையினர், பிந்தைய காலத்தில் அதன் படிநிலைகளாகச் சில வகை ஆய்வுப் போக்குகளை முன்னெடுத்தார்கள். சங்க இலக்கிய நூல்கள் சித்திரித்த திணைக்குடிகளின் இனக்குழுப் பண்பாட்டுக் கூறுகளை அடியொற்றி, மானிடவியலின் பண்பாட்டிடை ஒப்பாய்வு அணுகுமுறையைப் பயன்படுத்திப் பண்டைய இனக்குழுச் சமூகங்களை மீட்டுருவாக்க முறையியலின் துணையோடு அடையாளம் கண்டனர் (காண்க: கா.சுப்பிரமணியன். 1987: சங்க காலச் சமுதாயம்). நாட்டார் வழக்காறுகள் பற்றிய ஆய்வில் மேற்குறித்த அணுகுமுறையின் ஊடாகத் தனித்தன்மை மிக்க ஆய்வுக் கட்டுரைகளை எழுதியவர் ஆ.சிவசுப்பிரமணியன் (காண்க: மந்திரமும் சடங்குகளும், 1988). மானிடவியலின் கருத்தியல் தாக்கம் பெற்ற ஆய்வு அணுகுமுறைகளைப் பிரதிபலித்த அறிஞர்கள் பலரின் எழுத்துகள் என்பன பேராசிரியர் நா.வானமாமலையின் ஆராய்ச்சி இதழின் ஊடக வெளியாகித் தமிழியலில் தனித்ததோர் ஈரிடைப்புல ஆய்வுத் தடத்தை உருவாக்கின. (காண்க: நா.வா. பதி.1975: மக்களும் மரபுகளும்) இது தனியே எழுதப்பட வேண்டிய வரலாறாகும்.
இலக்கியம், மானிடவியல் ஆகிய இரண்டு புலங்கள் தழுவிய ஈரிடைப்புல நோக்கு என்பது, பண்டைய இலக்கிய நூல்கள், மற்றும் கவிதை, நாவல் முதலிய தற்கால இலக்கிய வகைகள் ஆகியவற்றைப் பற்றிய ஆய்வு என்னும் வகையில், ஒரு புதிய தடத்தில் பாதையை உருவாக்கிக் கொண்டது. அதில் இனவரைவியல் என்பது, ஓர் உரைகல்லாகவும் பகுப்பாய்வுக் கருவியாகவும் முதன்மை இடத்தை வகித்தது. மானிடவியலின் களப்பணி தழுவிய ஆய்வு முறையாகவும் ஆய்வுப் படைப்பாகவும் அமைந்த இனவரைவியல் என்பது, நாவல், கவிதை முதலிய தமிழ் இலக்கியப் படைப்புகளில் செறிந்துக் கிடந்த சமூக அலகு அல்லது பண்பாட்டுச் சித்திரிப்பினை உரசிப் பார்த்து, மதிப்பிடும் கருவியாகப் பயன்படுத்தப்பட்டது. இனவரைவியல் நூலை எழுதுவதற்குக் குறிப்பிட்ட குழுவினரிடமிருந்து சேகரிக்கப்படும் பலவகைப்பட்ட தரவுகள், குடும்பம், உறவுமுறை, வாழ்க்கை வட்டச் சடங்குகள், சமயம், நம்பிக்கைகள், சடங்கியல் நிகழ்த்துகைகள் என்பன போன்ற முதன்மையான பொருண்மை சார்ந்த அலகுகளுக்குள் அடக்கப்பட்டன. குறிப்பிட்ட மக்களின் சமூக வாழ்க்கை முறை அல்லது பண்பாட்டு விவரணையானது, மேற்சுட்டிய பொருண்மைசார் அலகுகளில் அடங்கும் தரவுகளைக் கொண்டே உருவாக்கப்பட்டது. அப்படைப்பே இனவரைவியலாகும். அத்தகைய இனவரைவியல் கூறுகளை எல்லாம் எழுத்தாளர்களால் உருவாக்கப்பட்ட நாவல் படைப்புகள் முன்னிறுத்தும் சமூக உலகமானது, எவ்வாறு தம்மில் பிரதிபலிக்கின்றன என்னும் கேள்வியை முதன்மையானதாகக் கொண்டதாகவே படைப்பிலக்கியம் பற்றிய இனவரைவியல் ஆய்வுமுறை என்பது தமிழில் தொடங்கியது
(ஆ. சிவசுப்பிரமணியன்,2014: 1- 42).
பொதுவாக நோக்கும் போது, தமிழில் படைப்பிலக்கியம் பற்றிய இனவரைவியல் அணுகுமுறையானது, குறிப்பிட்ட படைப்பை, இனவரைவியலுக்கு எதிரிணையாக நிறுத்தி, ஒப்புமைப்படுத்தும் விளக்க ஆய்வு என்ற நிலையில் நிறைவு காண்பதாகவே உள்ளது எனலாம்.
கி.ராஜநாராயணனின் கோபல்ல கிராமம் நாவலை ஓர் இனவரைவியல் நாவல் என்றோ பாமாவின் கருக்கு என்ற தன்வரலாற்றுக் கதையைக்
கருக்கு: தலித்துகளின் சுய இனவரைவியல் என்றோ பழமலையின் சனங்களின் கதை எனும் கவிதை நூலை அடியொற்றி, தமிழில் இனவரைவியல் கவிதை என்றோ குறிப்பிட்ட படைப்புகளுக்கு அடையாள முத்திரை சூட்டுவதோடு இனவரைவியல் ஆய்வு முடிவுபெறுவதில்லை. (ஆ.தனஞ்செயன், 2024: விளிம்புநிலை மக்கள் வழக்காறுகள்- இனவரைவியல் ஆய்வு, பக்.3- 82). அதனைக் கடந்த சமூக உலகின் ஆழ்பொருளைத் தேடிக் கண்டடையும் முயற்சியை அது எதிர்நோக்குகிறது. இக்கோணத்தில், இனவரைவியலையும் இலக்கியத்தையும் ஒருங்கிணைத்து விவாதங்களை முன்வைக்கும் ரோஸ் டி ஏஞ்சலிஸ் என்ற மானிடவியலரின் கருத்துகளும் அவர் பதிப்பித்த மானிடவியலுக்கும் இலக்கியத்திற்கும் இடையில் என்ற தொகுப்பு நூலில் அடங்கிய கட்டுரைகளை அடியொற்றி அவர் முன்வைக்கும் மதிப்பீடுகளும் தமிழ்ப் புலத்தில் இப்பொருள் குறித்துச் சிந்திப்போரின் கவனத்தை ஈர்க்கக் கூடியவையாகும்.
இலக்கியமும் மானிடவியலும்
குறிப்பிட்ட சமுதாயத்தில் எழுத்தாளர்களால் படைக்கப்படும் இலக்கியங்கள் எவ்வகையில் முக்கியத்துவம் பெறுகின்றன, அவை பெறும் இடம் எத்தகையது என்பதையும் இலக்கியத்தை முன்னிட்டு, மானிடவியல் ஆற்றும் பங்கின் தன்மையையும் பற்றி ரோஸ் டி ஏஞ்சலிஸ் முன்வைக்கும் நுண்ணிய பார்வையானது, ஈரிடைப்புல நோக்கைப் பற்றிச் சிந்திப்பவர்களுக்கு இன்றியமையாதது:
“இலக்கியம் என்பது, படைப்பாகவும், அதே வேளையில் பண்பாட்டைப் படைப்பதாகவும் அமைகிறது. மானிடவியலோ உற்றுநோக்குநராக/ வாசகராக/ விளக்கம் அளிப்பவராக அமைகிறது. இலக்கியத்தின் இரட்டைச் செயல்பாடுகளும், மானிடவியலின் மறுநிலைப்படுத்தலும் வாசித்தல், எழுதுதல், மற்றும் யதார்த்தமானது அல்லது கற்பனை செய்யப்பட்ட மக்கள், இடங்கள், மற்றும் கண்ணோட்டங்கள் ஆகியவற்றைப் பற்றிய விளக்கத்தில் பன்முகத் தன்மை வாய்ந்த சாத்தியப் பாடுகளுக்கு வாய்ப்பளிப்பவையாகும்” (ரோஸ் டி ஏஞ்சலிஸ் 2002: 1).
தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த மானிடவியலறிஞர் மெயர் ஃபோர்ட்ஸ் என்பவர். டெல்லன்சி, அசாந்தி மக்களைப் பற்றி ஆராய்ச்சி செய்தவர். தம்முடைய ஆராய்ச்சி அனுபவத்தின் அடிப்படையில் செவ்வியல் தன்மை வாய்ந்த இனவரைவியல் பற்றிய வரைவிலக்கணம் ஒன்றை வெளிப்படுத்தினார். அது வருமாறு:
“ஒரு மானிடவியல் வரைவு நூலை எழுதுவது என்பது, தன்னளவில் அதுவே ஓர் ஆய்வுக் கருவியாகும். அனேகமாக, மானிடவியலரின் ஆயுதக் கிடங்கில் அதுவே முக்கியத்துவம் வாய்ந்த ஆய்வுக் கருவியாகும். மானிடவியலரின் குறிப்புச் சுவடிகள், ஞாபகம் ஆகியவற்றில் உறையக் கூடிய காட்சிப் பூர்வமான மனித நடத்தையின் பலவண்ணக் காட்சிகளைச் சார்ந்த யதார்த்தம், சிந்தனை, உணர்வு ஆகியவற்றைத் துண்டாடி, அத்துண்டுகளில் இருந்து தர்க்கப் பண்பும் செறிவும் உடையதாக உருவாக்கப்படும் படிநிலையை அடியொற்றிய சமுதாயத்தின் பிரதி உருவமாக அமைவதே மானிடவியல் வரைவுநூலாகும்”. (மெயர் ஃபோர்ட்ஸ்)
மெயர் ஃபோர்ட்சின் இனவரைவியலைப் பற்றிய வரைவிலக்கணத்தைத் தமது கவனத்தில் எடுத்துக் கொள்ளும் நிலையில், அதனைப் பல இலக்கியப் படைப்புகளோடு பொருத்திப் பார்த்து அவற்றை எளிதாகப் பண்புருவாக்கம் செய்து புரிந்து கொள்ள முடியும் என்று கூறுவர். ஆண், பெண்களாகிய இருவேறு பாலினப் படைப்பாளிகள் தாங்கள் எழுதிய இலக்கியப் படைப்புகளின் பின்புலமாகச் சமுதாயத்தையும், பண்பாட்டையுமே பயன்படுத்தியுள்ளனர். அறிவியல் தன்மையும் இலக்கியப் பண்பும் உடைய இருவேறு அறிவுத் தொகுதிகளுமே, “மனித நடத்தை, சிந்தனை, உணர்வு ஆகியவற்றைத் துண்டாடி…” தம்மில் கையாளும் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கின்றன. தாங்கள் எந்த ஒரு சமுதாயத்தைப் பற்றி எழுதுகிறார்களோ அந்தச் சமுதாயத்தின் மாந்தர்களை மிகவும் துல்லியத் தன்மையோடு சித்திரிப்பதற்கு யதார்த்தமான மனித நடத்தை, சிந்தனை, உணர்வு போன்றவற்றைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
சமூக விஞ்ஞானிகளும் மானிடவியலர்களும் இலக்கியப் பகுப்பாய்வில் எப்போதும் பயன்படுத்தப்படக் கூடிய ஒப்பீடுகளையும் உருவகங்களையும் கடன் வாங்கிக் கொள்கிறார்கள். அவ்வாறே, இலக்கியப் புலத்தினர், மானிடவியலர்களிடமிருந்து. சிந்தனைகளைப் பெற்றுக் கொள்கின்றனர். அத்துடன், சமூக அறிவியல்களில் இருந்து படிநிலை மாற்ற மாதிரிகளையும், முறைமைகள், கலைச்சொல்லாக்கங்கள் ஆகியவற்றையும் பெற்றுக் கையாளுகின்றனர். இவ்வாறு, மானிடவியல் எழுத்தாக்கமானது, இலக்கியப் பகுப்பாய்வில் உட்படுத்தப்பட வேண்டும். இவ்வகையான தொடர்புமுறையானது, இரண்டு புலங்களுக்கு இடைப்பட்ட இணைப்புறவை அடிக்கோடிட்டுக் காட்டுவதோடு மட்டும் நில்லாமல், புதிய ஒன்றைக் கண்டறிந்து வெளிப்படுத்துவது விளக்கமுறைக் கட்டுரைகளில் உச்சம் தொட்டது போல், வேறு கோணங்களிலும் செயல்பட வேண்டும். அத்துடன், இரண்டினுக்கும் இடையே நிலவும் நெருக்கமான தொடர்பை மிகவும் அணுகி ஆராய்வதையும் அது அங்கீகரிக்கிறது.
இரண்டு புலங்களிலும் உள்ள செயல்பாட்டாளர்களான ஆய்வாளர்கள் காட்டும் ஆர்வமும் இடைவிடாத குறிக்கோளும் முக்கியமானவையாகும். அதாவது, புலங்களின் “எல்லைகளைக் கடந்து செல்லுதல்” என்பது பற்றிய தீவிரமான விருப்பமானது, இரண்டு புலங்களிலும் செயல்படும் ஆய்வாளர்களுக்கு இன்றியமையாதது என்று வலியுறுத்தப்படுகிறது. அவ்வாறே, இலக்கியத்தைப் பண்பாட்டுக் "கலைப்படைப்பாக" (cultural "artifact") அல்லது சமூகச் “சொல்லாடலாக” (social “discourse”) மறு வரையறைப் படுத்துவது குறித்த இடைவிடாத இலட்சியமும் அச் செயல்பாட்டாளர்களிடம் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்துவர்.
இங்கு, இலக்கியத்தைக் கலைப் பொருளாக அணுக வேண்டும் எனக் கூறும் கருத்து கவனிக்கத் தக்கது. பொதுவாக, கலைப்பொருள் என்றால், மனிதர்களால் உருவாக்கப்படும் பருண்மையான வடிவங்களைக் குறிக்கும். பலவகைப் பட்ட கைவினைப் பொருட்கள், சமயச் சின்னங்கள், குடும்பப் புகைப்படங்கள், அணிகலன்கள், பழைய நாணயங்கள், அஞ்சல் தலைகள், உடை மற்றும் ஒப்பனைப் பொருட்கள் உள்ளிட்ட பலவற்றைக் கலைப் பொருள் என்பது குறிக்கும். அவற்றுடன், இலக்கியத்தையும் சேர்த்துக் கலைப்பொருள் என்ற கலைச் சொல் குறிப்பிடுகிறது என்பது நமது கவனத்தை ஈர்க்கக் கூடியதாகும். இக்கலைப் பொருட்கள் அனைத்தும் குறிப்பிட்ட பண்பாட்டினால் படைக்கப்படும் கலைப்படைப்புகளாகும்.
இலக்கியம், மானிடவியல் ஆகிய இரண்டு புலங்களைச் சேர்ந்த செயல்பாட்டாளர்களிடம் காணப்படும் புல எல்லைகளைக் கடந்து செல்வதற்கு விழையும் எண்ணமும் பண்பாட்டுக் கலைப் படைப்பாகவோ சமூகச் சொல்லாடலாகவோ இலக்கியத்தை மறுவரையறை செய்வதற்கு முனையும் இடையறாத விருப்பமும், ஈரிடைப்புலநோக்கின் தரம் பற்றிய விவாதத்தைத் தொடர்ந்துத் தூண்டிவிட ஏதுவாக அமையும் என்று கருதுகின்றனர். ஆகவே அதன் விளைவாக, இலக்கியத்திற்கும் மானிடவியலுக்கும் இடையே உருவாகும் நீடித்த தொடர்பு என்பது வியப்பானதாக இருக்காது. அத்துடன், சமூகம் மற்றும் பண்பாட்டுச் சூழலுக்குள் இலக்கியத்தை இடம்நிறுத்துதல் பற்றி ஆராய்வதில் நூல்களும் ஆய்விதழ்களும் பெருக்கெடுத்து வளம் சேர்க்கும் என்பது உறுதி என்று நம்பிக்கையை வெளிப்படுத்தினர்
பண்பாட்டியல் ஆய்வுகள்
இனவரைவியல், இலக்கியம் ஆகிய இரண்டு புலங்களின் எல்லைகளைக் கடந்த அணுகுமுறையை அடியொற்றிய ஆய்வுச் செயல்பாடுகளின் ஊடாக, உருவாகி வந்திருக்கும் ஆய்வு மரபைப் பின்பற்றி எழுதப்பட்டவையாக அமைந்த ‘மானிடவியலுக்கும் இலக்கியத்திற்கும் இடையில்’ என்னும் தொகுப்பு நூலில் அடங்கியுள்ள ஆய்வுக் கட்டுரைகள், தற்போதைய ஆர்வத்திற்குரிய பொருட்பரப்பாக அமைந்த பண்பாட்டியல் ஆய்வுகள் என்பதோடு மிகவும் அழகாகப் பொருந்துவனவாக மதிப்பிடும் ரோஸ் டிஏஞ்சல்ஸ், அதன் கருத்தாக்கத்தைப் பற்றி விளக்குகிறார்.
“கல்விப்புலங்களுக்கு இடையில் அமைந்த மரபான எல்லைகளைப் பலவீனப் படுத்தி, அதன் வாயிலாக உருவாகும் ஈரிடைப்புலநோக்கில் அமைந்த ஆய்வு வடிவங்களின் வளர்ச்சியையே பண்பாட்டியல் ஆய்வுகள் என்பது முன்னிறுத்துகிறது.”, அத்துடன், “அது நடைமுறையில் இருக்கும் அறிவுப் பாகுபாடுகளுடைய வரையறைகளுக்குள் பொருந்தாமையைக் குறிக்கிறது” என்று ஹால் (1992) என்பவருடைய கருத்தை மேற்கோளாகக் காட்டி விளக்குகிறார்.
அந்நூலின் கட்டுரைகள் மற்றொரு பொருளைப் பற்றிக் கேள்விக்கு உட்படுத்துவதையும் இங்கே குறிப்பிட வேண்டும். அதாவது, திறனாய்வாளர்கள் குறிப்பிடத்தக்கது அல்லது தனித்துவம் என்பதைப் பற்றிச் சுட்டிக்காட்டுகின்றனர். “குறிப்பிடத் தக்க விழுமியங்கள், எல்லை வரையறைகள், பண்புத் தரம் என்பனவற்றின் வாயிலாக வரையறையை வலியுறுத்தியும் மீள் வலியுறுத்தியும் பேசும் அணுகுமுறையைக் குறிப்பிடுவதே” தனித்துவம்” ஆகும். இங்கு, அந்தோனியோ கிராம்சியின் எஜமானத்துவம் பற்றிய கருத்துருவத்தை ஏஞ்சலிஸ் மேற்கோளாகக் காட்டுகிறார். குறிப்பிட்ட யதார்த்தம் பற்றிய அர்த்தத்தை உருவாக்குவதில் ஒருமித்த கருத்து என்னும் அதிகாரத்துவம், வழிமுறையை அடைவதில் உள்ள அவர்தம் சவால் என்பதிலேயே மக்கள் தங்களுடைய "குறிப்பிடத் தக்க விழுமியங்களின்” சிறைக் கைதிகளாக ஆகிவிடுகிறார்கள். அந்தோனியோ கிராம்சியின் அதிகாரத்துவம் பற்றிய கருத்தாக்கம் என்பது, நிகழ் காலத்திய மற்றும், வருங்காலத்திய வாசகர்களைத் தற்போதைய அனுமானங்களை எல்லாம் உடைத்தெறிந்து, அவற்றிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்வதன் வாயிலாகப் புதிய ஒருமித்த நிலைப்பாடுகளை உருவாக்கிக் கொள்வதற்கு அனுமதிக்கிறது.
இருவேறு புலங்களில் காணப்படும் அறிவார்ந்த ஆய்வுகளின் ஒருமித்த நிலையைக் கண்டறிந்து தொகுத்தல், வெவ்வேறு தன்மைகளில் அமைந்த பகுப்பாய்வு வகைமைகளுக்கு அழுத்தம் கொடுத்தல், இந்தப் புலங்களின் ஒன்றோடு ஒன்று பின்னிய உறவுநிலைகளின் வாயிலாக முன்வைக்கப்பட்ட பன்முகப்பட்ட சிந்தனைகளுக்கு அழுத்தம் கொடுத்தல் முதலிய நோக்கங்களை, இத்தொகுப்பில் அடங்கிய கட்டுரைகள் பிரதிபலிக்கின்றன. மேலும், நிறுவப்பட்ட புலங்களின் மரபான எல்லைகளைக் கடந்தவையாக அமைதல், அல்லது நெகிழ்வானவையும் மறுசீரமைப்புக்கு உரியவையுமான எல்லைகளைப் பரிந்துரைக்கின்றன. இவ்விரண்டு அறிவுப் புலங்களின் முற்றிலும் வேறுபட்ட கூறுகளை ஒரு சமுக வெளியில் ஒருங்கு திரட்டிக் கொண்டுவந்து நிறுத்துகின்றன. ஏனெனில், அவை இரண்டும் தனித்தனியாக இருந்தவை. இவ்வாறு, செயல்படுவதன் காரணமாக, இப்புலங்கள் என்பன, ஒருபோதும் தேங்கிப் போவதில்லை; சட்டகப்படுத்தப்பட்ட தனிமமாகவும் ஆகிவிடுவதில்லை. ஆனால், பண்பாட்டு நீரோட்டங்கள், கல்விப்புல ஆர்வங்கள் ஆகியவற்றைப் படிநிலை மாற்றம் செய்யக் கூடிய நெகிழ்வுத் தளங்களாக ஆகின்றன. இலக்கியம் என்பது, ஏகக் காலத்தில், ஒரு படைப்பாக்கமாகவும், அவ்வாறே, பண்பாட்டைப் படைத்தளிக்கக் கூடியதாகவும் அமைகிறது. அவ்வாறே, மானிடவியல், உற்றுநோக்குவதாகும் வாசிப்பதாகவும் விளக்கம் செய்வதாகவும் அமைகிறது. இலக்கியப் படைப்பின் இரட்டைச் செயல்பாடுகள், மானிடவியலின் மறுநிலைப்படுத்தல் ஆகிய இரண்டும், வாசிப்பு, படைப்பாக்கச் செயல்பாடு, மற்றும் உண்மையான அல்லது கற்பனை செய்யப்பட்ட மக்கள், இடங்கள், கண்ணோட்டங்களைப் பற்றி ஆராய்ந்து விளக்குவதற்குரிய பன்முகத் தன்மை வாய்ந்த சாத்தியப்பாடுகளுக்கு வாய்ப்பளிக்கின்றன (ப.2).
பனுவலும் வாசிப்பும்
ஒரு பனுவலை வாசிப்பது என்பது, கருக்கள், சிந்தனைகள், வகைமாதிரிகள் ஆகியவற்றைக் கண்டறிவதை விட மேலானதாக அமைகிறது. அறிவியல் பூர்வமானதோ, கலைப்புலப் பாங்கானதோ எழுதப்பட்ட வார்த்தையோடு தொடர்பை ஏற்படுத்தும் ஒரு வழிமுறையாக அவ்வாசிப்பு அமைகிறது. குறிப்பிட்ட இலக்கியப் படைப்பானது, நடைமுறையில் வியாபித்திருக்கும் எத்தகைய கோட்பாடுகளை அடியொற்றிப் படைக்கப்பட்டுள்ளதோ, அக் கோட்பாடுகளை நோக்கி வழித்தொடர்பை ஏற்படுத்துவதாகப் பனுவல் வாசிப்பு அமைகிறது. ஒரு புலனாய்வுப் பகுப்பாய்வோ பனுவல் பற்றிய மொழித்திறன் கூறுபாட்டாய்வோ எதுவாயினும், அந்தப் டிமுறையானது இலக்கியத் தன்மையானதாகும். ஏனெனில், அது விழிப்பூட்டப்பட்ட கற்பனையை அனுமதித்து, இலக்கியப் பனுவலை மறுசீராய்வும் மறுகட்டமைப்பும் செய்யவும் வாய்ப்பளிக்கிறது. அத்துடன், அது அறிவியல் பாங்கானது. ஏனெனில், இலக்கியப் பனுவலானது, அப்படைப்புக்கும் விழுமியங்கள், நிறுவனங்கள், மற்றும் அப்பண்பாடு எங்கும் அளாவியவையாக வழங்கும் செயல்பாடுகள் ஆகியவற்றுக்கும் இடையில் தொடர்புகளைக் கட்டுகிறது. பண்பாட்டுக் கலைப்பொருளாக அமையும் பனுவலானது, பகுப்பாய்வுக்கு உரிய குறியீடாகவும் கண்டுபிடிப்புக்கான கருவியாகவும் ஆகிறது. ஆகவே, இக்கட்டுரைத் தொகுப்பானது, இலக்கியம் அல்லது மானிடவியல் ஆகிய எவ்வகைப் பனுவலாயினும் அப்பனுவலோடு தொடர்புடைய மரபுவழி இணைப்புறவுக்கு எதிரான தடுப்பாற்றலை வலியுறுத்துகிறது. அத்துடன், முன்னர் நிறுவப்பட்ட எல்லைகளுக்கு இடைப்பட்ட உறவுத் தொடர்பை மறுகட்டமைப்பு செய்வதன் வாயிலாக, வேறுபட்ட நோக்குகளுக்கும் புதிய ஆய்வு மாதிரிகளை உருவாக்குவதற்கும் உத்வேகம் அளிக்கிறது. பனுவலுக்கு உள்ளும் வெளியிலும் இருப்பவற்றுக்கு இடையே உள்ள இறுக்கமான தனித்தன்மைகளைக் குழப்பத்திற்கு ஆட்படுத்துகிறது.
இனவரைவியலரும் கதாசிரியரும்
சமூக அறிவியல் பனுவலை உருவாக்கும் இனவரைவியலரும் கலைப்புலப் படைப்பான இலக்கியத்தை அல்லது புனை கதையை எழுதும் எழுத்தாளரும் எவ்வாறு ஒரு புள்ளியில் சந்தித்து, இணைகிறார்கள் என்பதைப் பற்றி விளக்கும் கட்டுரைகள் வந்துள்ளன. இலக்கிய எழுத்தாளர்கள் என்போர், மக்களைப் பற்றியும் அவர்தம் உணர்வுகளைப் பற்றியும் அவ்வாறே, இடங்களைப் பற்றியும் அங்கு நடக்கும் சம்பவங்களைப் பற்றியும் சூழல்களைப் பற்றியும் கதைகளை எழுதுகிறார்கள் என்ற உண்மையின் அடிப்படையில், அவர்கள் இனவரைவியலர்களாக ஆகிறார்கள். இனவரைவியலர், தம்மியல்பாகவே, ஒரு குறிப்பிட்ட மக்கள் குழுவினரின் அன்றாட வாழ்க்கை நிகழ்வில் வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ பங்கேற்று, கவனிக்கவோ, உற்றுநோக்கவோ செய்கிறார்கள். அவ்வாறு, உற்றுநோக்கித் திரட்டும் தரவுகள் என்பன, உற்றுநோக்கப்பட்ட வாழ்க்கை முறையைப் பற்றிப் புரிந்து கொள்ள உதவுகின்றன. இலக்கியத்தில் ஓர் எழுத்தாளர் அல்லது உற்றுநோக்குவோர் என்பவர், மற்றொன்றின் பகுதியைப் பகிர்ந்து கொள்கிறார். அத்துடன், ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கிய பகுதிகள் என்பன ஒரு சன்னலை உருவாக்கிக் கொடுக்கின்றன. அந்தச் சன்னலின் ஊடாக, வாசகர் என்பவர், ஆழ்ந்த பொருளை உள்வாங்கிக் கொள்ளலாம். அதாவது, குறிப்பிட்ட பண்பாடுகள், சமூகங்களைப் பற்றிய சமூக மற்றும் பண்பாட்டுத் தரவுகளை உள்வாங்கிக் கொள்ளலாம். ஒரு பனுவலை ஒரு பண்பாட்டுக் கலைப் பொருளாக வாசிப்பது என்பது, சமூக ஆய்வில் பங்கேற்கும் ஒரு வழிமுறையாக ஆகிறது. எழுத்தாளர் / இனவரைவியலர் என்பவர், வாசகர்/ பங்கேற்பாளருக்குத் தகவலை அளிக்கிறார். வாசகர், எழுவாயாகவும் பயனிலையாகவும் செயல்படுகிறார். அவர் விநியோகிக்கப்பட்ட தகவலை வாசித்துத் தமது சொந்த உற்றுநோக்கல்களை வெளிப்படுத்துகிறார்.
வரலாற்றியலர்கள், செவ்வியல் இலக்கியவாதிகள், நாட்டார் வழக்காற்றியலர்கள், புராணவியலர்கள், தொல்லியலர்கள், இனவரைவியலர்கள் ஆகிய அனைவரும் கடந்த காலத்தை உருவாக்கி, அதனை வியாக்கியானம் செய்வதற்கோ அல்லது பண்பாட்டு வகைமாதிரிகளை அடையாளம் காண்பதற்காகவோ இலக்கிய நூல்களை மேற்கோள் காட்டியுள்ளனர்.
இனவரைவியல் தரவுகளைக் கண்டறிவதற்காகப் பல மானிடவியல் அறிஞர்கள் இலக்கிய நூல்கள் பலவற்றை ஆராய்ந்துள்ளனர். ஆன்ட்ரு லாங், ஜூன் ஹாரிசன், சபாட்டினோ மொஸ்கட்டி, ஜோஹன்னஸ் ப்ரண்ஸ்டெட், ரூத் பெனடிக்ட் போன்றோர் அவர்களில் குறிப்பிடத்தக்கவர்களாவர்.
பிரேசில் நாட்டு எழுத்தாளர் அன்டொனியோ ஒலின்டோ எழுதிய தி வாட்டர் ஹவுஸ் என்னும் நாவலை அடியொற்றி ஜேனட் டால்மேன் என்னும் மானிடவியலர் எழுதிய “இனவரைவியல் நாவல்: அகமாந்தரின் குரலைக் கண்டறிதல்” என்ற கட்டுரையின் சிறப்பியல்பினை அலசுகிறார். ஜேனட் டால்மேன் தமது கட்டுரையில், நாவலாசிரியர் மற்றும் இனவரைவியலரின் கண்ணோட்டங்களைப் பற்றி விவாதித்து, வேறுபடுத்திக் காட்டுகிறார். இனவரைவியல் நாவல் என்பதைப் பற்றிய கருத்தாக்கங்களை வரையறைக்கு உட்படுத்தியும் மறுவரையறை செய்தும் விவாதிக்கும் கட்டுரையாளர், நாவல் என்ற பனுவலுக்கு வெளிய நிற்கும் வெளிப்படையான முரணிய அறிவியல் புறவய உற்றுநோக்காளர், அந்நாவல் என்னும் பனுவலில் ஒரேமாதிரியாகத் தன்னுடைய அடையாளங்களை விட்டுச் செல்லக் கூடிய அகவயமனப் பாங்குடைய நாவலாசிரியர் ஆகிய இருவருக்கும் இடைப்பட்டவையாகத் தோன்றும் வெளிப்படையான இணையன்களைச் சுட்டிக் காட்டுகிறார். தம்முடைய நாவலைப் பற்றிய பகுப்பாய்வின் மூலம், டால்மேன், இலக்கியப் படைப்பானது, எவ்வாறு பண்பாடுகள், வரலாறு, சமூக மொழியியல் வகைமாதிரி போன்றவற்றைக் கண்டறிய வல்லதாக அமையும் என்பதையும், அது போலவே, ஒரு குறிப்பிட்ட நாவலானது, சமகாலத்திய இனவரைவியலைப் போல், எவ்வாறு இலக்கியப் பனுவலை அறிவியல் செயல்பாட்டுத் தளத்தில் நிறுத்துகிறது; அவ்வாறே, அறிவியல் பனுவலை, இலக்கியச் செயல்பாட்டிற்குரியதாக நிறுத்துகிறது என்பதையும் விளக்குகிறார்.
இலக்கியப் பனுவல்களை எவ்வாறு வேறுபட்ட கண்ணோட்டங்களில் அணுகவியலும் என்பதற்குச் சில உதாரணங்களைச் சுட்டிக் காட்டுகிறார்,ரோஸ் டி ஏஞ்சலிஸ். இலக்கியப் பனுவல்கள் என்பன, எவ்வாறு பண்பாடுகள், சமூகக் கதையாடல் ஆகியவற்றின் தடயங்களாக விளங்குகின்றன என்பதைக் கண்டறிந்துள்ளனர். “உன்னதமான புலங்கள்:அமெரிக்க இந்தியப் பெண்களின் இனவரைவியல் இலக்கியம் என்னும் தலைப்பில் ரோசியான்னே ஹோயிஃபெல் என்பவர், எல்ல கோரா டிலோரியா என்பவரின் வாட்டர் லில்லி என்ற நாவலைப் பற்றி விவாதித்துள்ளார். எல்ல கோரா டிலோரியா அடிப்படையில் ஓர் இனவரைவியலர் ஆவார். அத்துடன், ஃப்ரான்ஸ் போவாசின் இணை ஆய்வாளராக இருந்து தனது லகோட்டா சீயோக்ஸ் இனத்தைச் சேர்ந்த மக்களைப் பற்றிய மானிடவியல் ஆய்வில் அவருக்கு உதவி செய்தவர். அவருடைய நாவல் பற்றியும், மற்றும் மானிடவியலராகவும் இனவரைவியலராகவும் ஒருங்கே விளங்கிய ஜூலி குருயிஷாங்க் மேற்கொண்ட ஆய்வின் போது அவருக்குத் துணைபுரிந்த யூக்கோன் திணைக்குடிச் சமூகத்தின் மூன்று முதியவர்களுடைய வாய்மொழி வரலாற்றுக் கதைவிவரணைகள் குறித்தும் ஹோயிஃபெல் மேற்கொண்ட ஆய்வின் மூலமாக, இலக்கியத்திற்கும் இனவரைவியலுக்கும் இடையில் காணப்பட்ட ஆற்றல் மிக்க இணைப்புறவை வெளிப்படுத்தினார்; அவ்விரண்டுக்கும் இடைப்பட்டதாக நிலவிய தொடர்பினைக் கலப்பினப் பண்புடைய கலையாக நோக்கினார். இக்கலை வடிவமானது, கடினமான அமெரிக்க இந்தியப் பெண்கள் குடியிருந்த இருபதாம் நூற்றாண்டு நெடுகிலும் வளமான அவ்வுலகங்கள் பற்றிய புரிதலை விரிவுப்படுத்தியதோடு, அவை பற்றிய ஈடுபட்டை ஆழப்படுத்தியது.
மானிடவியலுக்கும் இலக்கியத்திற்கும் இடையில் நாலில் அடங்கிய கட்டுரைகள் யாவும் பொருட்செறிவானவை. இவ்விரு புலங்களின் எல்லைகளைக் கடந்த கருத்தியல் தளத்தில் ஆர்வத்தோடு ஆய்வுச் செயற்பாட்டில் இயங்குவோர் அல்லது இயங்க விழைவோருக்கு ஓர் உந்துதலைக் கொடுத்து நெறிப்படுத்தக் கூடியவை. மானிடவியல் தனி வரைவுநூல் (இனவரைவியல்) பற்றிய மெயர் ஃபோர்ட்சின் வரையறையும் ரோஸ் டி ஏஞ்சலிசின் மானிடவியல், இலக்கியம் பற்றிய வரையறையும் நமது ஈரிடைப்புல ஆய்வுத் தேடலை மதிப்பிட்டுக் கொள்ள உதவும் ஓர் உரைகல்லாக நிச்சயம் அமையும்.
ஆதாரங்கள்
Rose De Angelis,(ed) 2002: Between Anthropology and Literature: Interdisciplinary Discourse, London: Routledge
சுப்பிரமணியன், கா.1987:: சங்க காலச் சமுதாயம், சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,
சிவசுப்பிரமணியன்,ஆ.2014: இனவரைவியலும் தமிழ் நாவலும், சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,
தனஞ்செயன், ஆ.2024: விளிம்புநிலை மக்கள் வழக்காறுகள் – இனவரைவியல் ஆய்வு, சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,
தனஞ்செயன் ஆ.2025: தமிழில் இலக்கிய மானிடவியல், சென்னை: பரிசல்
வானமாமலை,நா. (பதி.)1975: மக்களும் மரபுகளும், சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,
- ஆ.தனஞ்செயன்