27ஆண்டுகளுக்கு முன்பு உலகம் முழுவதும் ஒரு மாபெரும் கொண்டாட்டம் நிகழ்ந்தது. அப்போது உலகம் கி.பி. 2000 என்ற ஆண்டைச் சந்திக்க ஆயத்தமாகிக் கொண்டிருந்தது. அது புதிய புத்தாயிரத்தின் (Millennium) தொடக்கம் என்பதால் கோலாகலக் கொண்டாட்டங்களுக்குப் பஞ்சமில்லை.

அந்நேரம், லண்டனில் உள்ள உலகப் புகழ்பெற்ற பிபிசி (BBC) நிறுவனம், இப்புத்தாயிரம் ஆண்டுக் கொண்டாட்டத்திற்காகப் பல்வேறு நிகழ்வுகளை நடத்தியது. அதில் ஒன்றுதான் 1999இல் அந்நிறுவனம் நடத்திய ஓர் அற்புதமான இணையவழிக் கருத்துக்கணிப்பு. "கி.பி. 1000 முதல் கி.பி. 1999 வரையிலான கடந்த ஆயிரம் ஆண்டுகளில் இப்பூலகில் வாழ்ந்த மாபெரும் சிந்தனையாளர் யார்?" என்ற கேள்வியோடு அந்தக் கருத்துக்கணிப்பு வலம் வந்தது. இதில் உலகம் முழுவதிலுமிருந்து பிபிசி நேயர்கள் பல்லாயிரக்கணக்கில் ஆர்வத்துடன் பங்கெடுத்தார்கள்.vilimbu nilai marxகருத்துக்கணிப்பின் முடிவில் கிடைத்த தீர்ப்பு உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது; கூடவே முதலாளித்துவ உலகில் அதிர்ச்சி அலைகளையும் உருவாக்கியது. ஏனென்றால், அந்த ஆயிரம் ஆண்டின் மாபெரும் சிந்தனையாளராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் கார்ல் மார்க்ஸ்! பிபிசி நிறுவனம் இதனை உலகறியப் பிரகடனம் செய்தது.

நாடுகளற்ற உலக மனிதன்

1818இல் ஜெர்மனியில் பிறந்த கார்ல் மார்க்ஸ், படிக்கும் காலத்திலேயே சமூகத்திற்காகப் பாடுபடுவதைத் தன் வாழ்நாள் லட்சியமாகக் கொண்டவர். அக்காலத்தில் ஜெர்மன் தத்துவ உலகில் கொடிகட்டிப் பறந்த ஹெகலின் 'இயங்கியல்' தத்துவத்தையும், ஃபாயர்பாக்கின் 'பொருள்முதல்வாத'த் தத்துவத்தையும் உள்வாங்கி, கம்யூனிசத் தத்துவத்தின் தந்தையாக மலர்ந்தார்.

அதிகாரப் பீடங்களுக்குச் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்ததால், அவர் பிறந்த ஜெர்மனி அவரை நாடு கடத்தியது. பிரான்சின் பாரிஸ் நகரில் அடைக்கலம் புகுந்த அங்கிருந்தும் அரசியல் பழிவாங்கலால் துரத்தப்பட்டார். பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் நகரிலும் அவரால் நிம்மதியாக வாழ முடியவில்லை. முப்பது வயதுக்குள் மூன்று தடவைகள் நாடு கடத்தல்களைச் சந்தித்தபோதிலும், மார்க்ஸ் என்ற மாமனிதன் ஒருபோதும் ஓய்ந்து போகவில்லை; இயங்கிக் கொண்டேயிருந்தார்.

1840களில் ஐரோப்பியப் புரட்சிகள் படுதோல்வியைச் சந்தித்து, பிற்போக்குச் சக்திகள் ஆட்டம் போட்ட பின்னடைவுக் காலத்தில், மார்க்ஸ் 1849இல் லண்டனில் குடியேறினார். 1883 இல் அவர் மரணிப்பது வரை அங்கேயேதான் வாழ்ந்தார். ஆனால், அது இயல்பான வாழ்க்கையாக இருக்கவில்லை. வாழ்நாள் முழுவதும் அவர் ஓர் "அரசியல் அகதியாக", ரகசியக் குடியேறி”யாகவே வாழ்ந்து மடிந்தார்.

இத்தனை நாடு கடத்தல்கள், கொடிய வறுமை, அதனால் விளைந்த பிள்ளைகளின் மரணங்கள் என அத்தனையையும் தாங்கிக்கொண்டு, தான் வாழ்ந்த முதலாளியச் சமூகம் தொழிலாளி வர்க்கத்தின் உழைப்பைச் சுரண்டுகிறது என்பதை மார்க்ஸ் அறிவியல் பூர்வமாக நிரூபித்தார். முதலாளியம் அழிந்து பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் சோசலிசம் மலரும் எனப் பகிரங்கமாக அறிவித்தார்.

"உலக நாடுகளின் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்!" என்ற மகத்தான முழக்கத்தை முன்வைத்த அந்த மனிதர், இறுதிவரை எந்த நாட்டின் குடிமகனாகவும் இல்லாமல், வாழும் காலத்திலேயே ஓர் உலக மனிதராக (Global Citizen) மலர்ந்தார்.

சோசலிசத்தின் வீழ்ச்சியும் மார்க்ஸின் மறுமலர்ச்சியும்

இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் திருப்புமுனை 1917இல் லெனின் தலைமையில் நடைபெற்ற ரஷ்ய சோசலிசப் புரட்சியாகும். அதனைத் தொடர்ந்து வியட்நாம், கிழக்கு ஐரோப்பிய நாடுகள், சீனா (1949), கியூபா (1959) என உலக வரைபடத்தில் சோசலிசம் ஒரு பிரம்மாண்டமாகத் தலைநிமிர்ந்தது. உலக முதலாளியம் அச்சத்தில் உறைந்தது.

ஆனால், 1990களில் சோவியத் யூனியனின் சிதைவோடு சோசலிச மாதிரி வீழ்ந்தபோது, "கம்யூனிசம் முடிவுக்கு வந்துவிட்டது; சோசலிசம் மண்ணைக் கவ்விவிட்டது" என்ற பிரசாரம் உலகை உலுக்கியது. "இனி உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் மட்டுமே ஒரே வழி" என முதலாளியம் கொக்கரித்தது. இடதுசாரிகள் சித்தாந்தக் குழப்பத்தில் தவித்த இந்த இக்கட்டான சூழலில்தான், பிபிசியின் கருத்துக்கணிப்பு மார்க்ஸை உலகின் ஆகச்சிறந்த அறிஞராகப் பிரகடனம் செய்தது. இது முதலாளியத்திற்கு விழுந்த கருத்தியல் மரண அடியாகவும், இடதுசாரிகளுக்கு ஓர் ஒளிக்கீற்றாகவும் அமைந்தது.

மேலும், 2008இல் ஏற்பட்ட உலகப் பொருளாதார வீழ்ச்சி (Global Economic Crisis), முதலாளிய வங்கி அமைப்புகளை உலுக்கியபோது, உலக அறிஞர்கள் மீண்டும் விடைகாண மார்க்ஸை நோக்கியே திரும்பினர். 19ஆம் நூற்றாண்டில் தோன்றி, 20ஆம் நூற்றாண்டில் புரட்சிகளாய் வெடித்து, நூற்றாண்டின் முடிவில் கேள்விக் குறியானாலும், 21ஆம் நூற்றாண்டிலும் மார்க்ஸ் மீண்டும் ஒளிவீசத் தொடங்கியிருக்கிறார் என்பதே உண்மை.

"விளிம்புகளில் மார்க்ஸ்" நூல் உருவான கதை

இந்தச் சூழலில்தான், கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் சமூகவியல் மற்றும் அரசியல் அறிவியல் துறைப் பேராசிரியரான மார்க்சிய அறிஞர் கெவின் பி. ஆண்டர்சன், "விளிம்புகளில் மார்க்ஸ்" (Marx at the Margins) என்ற உன்னத நூலைப் படைத்தார். மார்க்ஸின் வெளியிடப்படாத, புறக்கணிக்கப்பட்ட எழுத்துகளின் வழியே, அவரது பன்முகத்தன்மையை இந்நூல் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.

உண்மைதான் தோழர்களே...! மார்க்ஸின் பன்முகத்தன்மை அண்மைக்காலமாகத்தான் முழுமையாக வெளிப்படத் தொடங்கியுள்ளது. கம்யூனிஸ்டு கட்சி அறிக்கை, மூலதனத்தின் முதல் தொகுதி போன்றவை மார்க்ஸ் வாழ்ந்தபோதே வெளிவந்தன. ஆனால், மூலதனத்தின் 2, 3 ஆம் தொகுதிகள் எங்கல்ஸால் செப்பனிடப்பட்டுப் பின்னாளில் வெளியிடப்பட்டன. அதேபோல் அவரது தத்துவக் கையெழுத்துப் பிரதிகள், கிரண்ட்ரிஸ்ஸே (Grundrisse) போன்றவையும் மார்க்சின் காலத்திற்குப் பிறகே வெளிவந்தன.

1920களில் சோவியத் அறிஞர் டேவிட் ரியாசனோவ் தலைமையில் மார்க்ஸ்-ஏங்கல்ஸ் எழுத்துக்களைத் தொகுக்கும் பணி (MEGA - Marx-Engels-Gesamtausgabe) தொடங்கினாலும், ஸ்டாலினியத் தலையீடுகளாலும், பின்னர் சோவியத் வீழ்ச்சியாலும் அப்பணிகள் முடங்கின. தற்போது நெதர்லாந்தின் சர்வதேச சமூக வரலாற்று நிறுவனமும், ஜெர்மனியின் பெர்லின்-பிராண்டன்பர்க் அறிவியல் அகாதமியும் இணைந்து இப்பணியைத் தொடர்ந்து வருகின்றன. மொத்தம் திட்டமிடப்பட்டுள்ள 114 தொகுதிகளில், 62 தொகுதிகள் வெளிவந்துள்ளன. எனில், இன்னமும் 52 தொகுதிகள் வெளிவரக் காத்திருக்கின்றன. இதன் பொருள் உலகம் அறிந்த மார்க்ஸ் என்பது ஒரு பகுதியளவே என நம்மால் உணர முடிகிறது.

இந்த மாபெரும் பதிப்புப் பணியில் ஒரு பதிப்பாசிரியராக (Editor) பணியாற்றும் நல்வாய்ப்பு பேராசிரியர் கெவின் ஆண்டர்சனுக்குக் கிடைத்தது. அதன் விளைவாக, மார்க்ஸ் எழுதிய, ஆனால், அதிகம் அறியப்படாத குறிப்பேடுகள் மற்றும் தரவுகளை ஆய்வு செய்து அவர் உருவாக்கிய அற்புதமே இந்நூல்.

இரண்டு முக்கிய மூலாதாரங்கள்: இரண்டு முக்கிய நோக்கங்கள்

பேராசிரியர் ஆண்டர்சன் இரு முக்கிய ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு இந்நூலை வடித்துள்ளார்:

1.      ஐரோப்பியத் தலைமை நிருபராகப் பத்தாண்டுகள் பணியாற்றி, மார்க்ஸ் 'நியூயார்க் டெய்லி டிரிப்யூன்' (New York Daily Tribune) பத்திரிகைக்கு எழுதிய எண்ணற்ற கட்டுரைகள்.

2.      மார்க்ஸ் தன் வாழ்நாளின் இறுதியில் (1879–1882) முன்-முதலாளியச் சமூகங்கள் குறித்து எழுதி வைத்த 1879-1882ஆம் வருடத்திய குறிப்பேடுகள்.

இவற்றுடன் மார்க்சின் கடிதங்கள் மற்றும் முதல் அகிலத்திற்கு அவர் வரைந்த அறிக்கைகளைத் துணை ஆதாரங்களாகக் கொண்டிருக்கிறார்

இவற்றைக் கொண்டு இந்நூல் இரண்டு முதன்மையான தளங்களைப் பேசுகிறது:

  • மேற்குலகு சாராச் சமூகங்கள்: இந்தியா, ரஷ்யா, அல்ஜீரியா, சீனா, இந்தோனேசியா போன்ற நாடுகளைப் பற்றிய மார்க்ஸின் பார்வைகள் மற்றும் அவற்றுக்கும் முதலாளிய/காலனிய ஆதிக்கத்திற்கும் இடையிலான உறவுகள்.

தேசியம் மற்றும் இனம்: போலந்து, அயர்லாந்து விடுதலை இயக்கங்கள்; அமெரிக்க உள்நாட்டுப் போரின்போது கறுப்பினத் தொழிலாளர்கள் மற்றும் பிரிட்டனில் வாழ்ந்த அயர்லாந்துத் தொழிலாளர்களுக்கிடையில் ஊடாடிக் கொண்டிருந்த வர்க்கம் (Class), இனம் (Race), இனத்துவம் (Ethnicity) போன்ற விவாத மற்றும் விமர்சனப் பிரச்சினைகள்.

“விளிம்புகள்” சொல்லும் சூட்சுமங்கள்

இந்நூலுக்கு "விளிம்புகளில் மார்க்ஸ்" என்று ஆசிரியர் கவித்துவமாகவும் தத்துவார்த்தமாகவும் பெயரிட்டதன் பின்னணியில் ஆழமான சூட்சுமங்கள் உள்ளன:

1.      புவியியல் மற்றும் சமூக விளிம்புநிலைகள் (Geographical and Social Margins): ஐரோப்பியச் சிந்தனை என்பது ஐரோப்பாவை மையமாகக் கொண்டது (Eurocentrism). அதற்கு வெளியே இருக்கும் இந்தியா, சீனா, அல்ஜீரியா போன்ற மேற்குலகு சாரா நாடுகள் தத்துவ ரீதியாக 'விளிம்புகள்' எனக் கருதப்பட்டன. இந்த விளிம்புநிலைச் சமூகங்களை மார்க்ஸ் ஆராய்ந்ததால் இப்பெயர் பொருத்தமாக இருக்கிறது.

2.      மார்க்ஸின் சொந்த விளிம்புநிலை (Personal Margins): விக்டோரியா காலத்து லண்டனில் மார்க்ஸ், எந்த நாட்டின் குடியுரிமையும் இல்லாத ஒரு ரகசிய அரசியல் அகதியாக, விளிம்புநிலையில்தான் வாழ்ந்தார். அதாவது, தத்துவஞானி ஜாக் தெரிதா (Jacques Derrida) குறிப்பிடுவது போல, "மார்க்ஸ் நம்மிடையே ஒரு புலம்பெயர்ந்தவராக, புனிதமானவராக, சபிக்கப்பட்டவராக இருக்கிறார்; ஆனால் இன்னமும் அவர் ஒரு ரகசியக் குடியேறியாகத்தான் இருந்தார்." எனவே, நூலின் பெயர் மேலும் பொருத்தமாக இருக்கிறது.

காத்திரமான உழைப்பில் கனிந்த இயல்கள்

இந்நூல் ஏனோதானோ என்று எழுதப்பட்டதல்ல; இதன் உருவாக்கத்திற்குப் பேராசிரியருக்குப் பத்து ஆண்டுகள் ஆயின. அமெரிக்க சமூகவியல் சங்கம், வரலாற்றுப் பொருள்முதல்வாத மாநாடுகள், வுஹான் பல்கலைக்கழகம் எனப் பல்வேறு அறிவுசார் தளங்களில் விவாதிக்கப்பட்டுச் செதுக்கப்பட்ட இந்நூல், ஆறு விரிவான இயல்களைக் கொண்டுள்ளது:

1.      1850களில் காலனியத்தை எதிர்கொள்ளல்: இந்தியா, இந்தோனேசியா, சீனா மீதான ஐரோப்பாவின் தாக்கம்.

2.      ரஷ்யாவும் போலந்தும்: தேச விடுதலைக்கும் புரட்சிக்குமான பந்தம்.

3.      இனம், வர்க்கம், அடிமைமுறை: உள்நாட்டுப் போர் என்பது இரண்டாவது அமெரிக்கப் புரட்சியே.

4.      அயர்லாந்து தேசியவாதம், வர்க்கம் மற்றும் தொழிலாளர் இயக்கம்.

5.      கிரண்ட்ரிஸ்ஸேவிலிருந்து மூலதனம் வரை: பலபடித்தான கருப்பொருட்கள்.

6.      மேற்குலகுசாரா முன்-முதலாளியச் சமூகங்கள் குறித்த மார்க்ஸின் பிற்கால எழுத்துக்கள்.

பார்வையில் ஒரு பாய்ச்சல்: ஒருப்படித்தான பார்வையிலிருந்து பலபடித்தான பார்வைக்கு (Unilinear to Multilinear)

1840களில் வெளியான கம்யூனிஸ்டு கட்சி அறிக்கையின்போது, சமூக வரலாற்று வளர்ச்சி என்பது ஒருப்படித்தான (Unilinear) பாதையைக் கொண்டது; அதாவது, எல்லா நாடுகளும் ஒரே மாதிரியான முதலாளியக் கட்டத்தைக் கடந்துதான் சோசலிசத்தை அடைய முடியும் என்ற 'இனமையவாத' (Ethnocentric) கண்ணோட்டம் மார்க்ஸிடம் ஓரளவுக்கு இருந்தது. காலனியம் முன்-முதலாளிய நாடுகளை நவீனப்படுத்தும் என்றும் அவர் தொடக்கத்தில் நம்பினார்.

ஆனால், பிற்காலத்தில் காலனியத்தின் கொடூர முகத்தைக் கண்ட மார்க்ஸ் தன் கருத்தை மாற்றிக்கொண்டார். ரஷ்யா, இந்தியா, சீனா போன்ற நாடுகள் மேற்கு ஐரோப்பாவிலிருந்து வேறுபட்ட சமூகக் கட்டமைப்பைக் கொண்டவை என்பதை உணர்ந்து, அங்கு நிலவும் உற்பத்தி முறையை 'ஆசிய உற்பத்தி முறை' (Asiatic Mode of Production) என்று வரையறுத்தார்.

ரஷ்யா போன்ற நாடுகள் முதலாளியக் கட்டத்திற்குள் நுழையாமலேயே, தங்கள் கிராமியக் கூட்டுச் சமூக அமைப்புகளின் வழியே நேரடியாக சோசலிசத்திற்குள் பிரவேசிக்க முடியும் என்ற பலபடித்தான (Multilinear) வரலாற்று வளர்ச்சிக் கண்ணோட்டத்திற்கு மார்க்ஸ் நகர்ந்தார். இதனை ஆண்டர்சன் தக்கத் தரவுகளுடன் மிக அருமையாக நிறுவுகிறார்.

புதிய புரட்சிக் கூட்டாளிகள்

வர்க்கப் போராட்டத்தை மார்க்ஸ் வெறும் வெள்ளையின ஐரோப்பியத் தொழிலாளர்களை மட்டும் வைத்துப் பார்க்கவில்லை. அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் நிலவிய தொழிலாளர் இயக்கங்கள், தங்கள் சொந்தச் சமூகத்தில் உள்ள இனம் மற்றும் தேசியச் சிறுபான்மையினருக்கு எதிராக நிலவிய இனவெறியை (Racism) எதிர்த்துப் போராடத் தவறியதை மார்க்ஸ் கடுமையாக விமர்சித்தார்.

மூலதனத்திற்கு எதிரான உலகளாவிய போராட்டத்தில், மேற்கத்தியத் தொழிலாளி வர்க்கத்திற்கு இணையாகப் புதிய புரட்சிக் கூட்டாளிகளை மார்க்ஸ் அடையாளம் காட்டுகிறார்:

  • இந்திய விவசாயி
  • ரஷ்ய விவசாயி
  • அயர்லாந்தின் குத்தகை விவசாயி
  • பிரிட்டனில் குடியேறிய அயர்லாந்துத் தொழிலாளி
  • அமெரிக்காவின் தென்பகுதி கறுப்பின முன்னாள் அடிமைகள்

கெவின் ஆண்டர்சன் தொகுத்துக் கூறுவது போல, மார்க்ஸின் சமூக மாற்ற இயங்கியல் என்பது வர்க்கம், இனம், தேசியம், இனத்துவம் ஆகியவற்றின் குறுக்குவெட்டில் (Intersectionality) உருவான மிகச் சிக்கலான, முற்போக்கான பகுப்பாய்வாகும்.

21 ஆம் நூற்றாண்டுக்கான மார்க்ஸ்

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வெறும் அரசியல் பொருளாதார நிபுணராகப் பார்க்கப்பட்ட மார்க்ஸ், பின்னாளில் மனிதநேய தத்துவஞானியாகவும், பண்பாட்டு விமர்சகராகவும் அறியப்பட்டார். ஆனால், கெவின் ஆண்டர்சன் தன் நூலின் மூலம் "21ஆம் நூற்றாண்டுக்கான உலகளாவியக் கோட்பாட்டாளராக" மார்க்ஸை நம் முன்னே நிறுத்துகிறார்.

அவர் ஜெர்மானியராகவோ, ஆங்கிலேயராகவோ தன்னைக் குறுக்கிக் கொள்ளவில்லை. லண்டனில் வாழ்ந்தபோதும், அங்கு வாழ்ந்த ஜெர்மானியரோடு அல்லாமல், மாறாக, சாசன இயக்கவாதிகள் (Chartists) மற்றும் தொழிற்சங்கச் செயல்பாட்டாளர்களுடன் நெருக்கமாக இணைந்து சர்வதேச லட்சியத்திற்காக இயங்கினார்.

1999இல் பிபிசி கருத்துக்கணிப்பின்போது, அமெரிக்காவின் ஜோட்ஸ்னா கபூர், "19ஆம் நூற்றாண்டைப் புரிந்து கொள்ள மார்க்ஸ் எவ்வளவு தேவையோ, அவ்வளவு இன்றைய முதலாளித்துவத்தைப் புரிந்துகொள்ளவும் தேவை" என்றார். நார்வேயின் டேக் தொரேசன், "அவர் நவீன அரசியல் சிந்தனையின் தந்தை" என்றார். இந்த நேயர்களின் எதார்த்தக் குரலும், ஆண்டர்சனின் ஆழங்கால் பட்ட ஆராய்ச்சியும் ஒரே நேர்கோட்டில் சந்தித்துக் கைகுலுக்கிக் கொள்ளும் அழகு இந்நூலின் பேரழகு எனலாம்!

உயிர்ப்புள்ள தத்துவம்

மார்க்சியம் ஒரு விடுதலை கீதம். சுரண்டல் மற்றும் ஒடுக்கு முறைகளுக்கு எதிராகக் கிளர்ந்துவரும் விடுதலை கீதம். ஐரோப்பிய எதார்த்தங்களிலிருந்து முகிழ்த்து வந்த இத் தத்துவம் ஓர் உயிர்ப்புள்ள தத்துவம்.

எனவேதான், ஐரோப்பாவுக்கு வெளியேயுள்ள எதார்த்தங்களை மார்க்ஸ் கண்டறிந்த போது, அவற்றைத் தனக்கே உரிய இயங்கியல் கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து, அவர் தன்னைத்தானே புதுப்பித்துக் கொண்ட வரலாற்றை நுட்பமாக ஆவணப்படுத்திய ஓர் அற்புதம்தான் ஆண்டர்சனின் நூல்.

பேராசிரியர் கெவின் பி. ஆண்டர்சனின் "விளிம்புகளில் மார்க்ஸ்" நூல், மார்க்ஸ் குறித்த சர்வதேச இலக்கியங்களில் ஒரு தனித்துவமான மைல்கல். எனவே, இந்நூல் இடதுசாரிகளுக்கு மட்டுமல்ல, உரிமைக்கும் விடுதலைக்கும் போராடுகின்ற எல்லாப் போராளிகளுக்கும் ஒரு கலங்கரை விளக்கமாக நிச்சயம் திகழும்.

எஸ். கே. கங்கா,  மாநிலத் தலைவர், த.க.இ.பெ. இயக்குநர், ஜீவாநாவா சிந்தனைப்பள்ளி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.