தமிழர்களிடத்து மருத்துவவியலறிவு இன்று நேற்று வந்ததன்று. தமிழ் மாந்தர்கள் தங்கள் மூதாதையர்களிடமிருந்து தொன்றுதொட்டே பெற்ற தொன்மைக் கலையாகும். தமிழர் மருத்துவக் கலை சங்ககாலத்திற்கு முன்பிருந்தே காணப் படுகிறது. இலக்கியங்கள் வழி தமிழர்களின் மருத்துவக் குறிப்பினையும் சிறப்பினையும் அறிந்து கொள்ளமுடியும். எனினும் மிகையான விழுக்காடு குறிப்புகள் நடை முறையில் இன்று தமிழ் மருத்துவ உலகில் மிக அரிதாகவே காணக்கிடைக்கிறது என்பதே நிதர்சனம்

காரணங்கள் என்ன?

தமிழகத்திற்கே உரிய கலை, பண்பாடு நாகரிகம், மருத்துவம் ஆகிய முறைகளை முறையாகப் பயன் படுத்துவோர்களின் எண்ணிக்கை குறைகின்ற காரணத்தினால் மதிப்புக் குறையத் தொடங்கின. அவற்றுள் தமிழ் மருத்துவ முறைகள் மதிப்பிழந்து வெகுவாகத் தொலைந்துவிட்டன.

இதற்கான காரணங்கள் பாரம்பரிய மருத்துவ முறைகளைக் கையாளுவோர் இரகசியமாக வைத் திருப்பது, தமிழ் மருத்துவ முறைகளில் காணப் படும் பத்திய கட்டுப்பாடுகளை மக்கள் வெறுப்பது, தமிழ் மருத்துவர்கள் முறையாக மருந்துகளைத் தயாரிப் பதில் அக்கறை காட்டாதது. ஆங்கில மருத்துவ உலகோடு போட்டி போட முடியாதது, மக்களின் பொறுமை இன்மை ஆகியவைகளைக் குறிப்பிடலாம்.

பண்டைய கால மருந்தும் மருத்துவமும் மருந்து:

மருந்தின் இலக்கணம், உடலுக்கும், உள்ளத் துக்கும் ஏற்படும் நோய்களைத் தடுப்பதும், நீக்கு வதுமான பொருளே.

“வாயுறை வாழ்த்தே வயங்க நாடின்

வேம்பும் கடுவும் போல வெஞ்சொல்.” (தொல். செய்:424)

என்று தொல்காப்பியர் கூறுவதன் மூலம் அவர் கால மருத்துவ முறையைப்பற்றி அறிய முடிகிறது. இதை விட சற்று விளக்கமாகத் திருமூலர், வாயின் மூலம் அளிக்கப்படும் மருத்துவம், மருத்துவன் கூறும் இதமான சொற்களே என்கிறார். இதுவே வாயுறை என்பதற்குப் பொருளாகும். (வாயுறை - மந்திரச் சொற்கள்).

உடல் நோயைக் களைந்து உளநோயைப் போக்கி நோய் வராமல் காத்துச் சாவைத் தடுக்கும் திறன் கொண்டதே உண்மையான மருந்து என்பது முன்னோர் கண்ட முறையாகும்.

நல்ல மருந்து:

நல்ல மருந்தின் இலக்கணம் என்ன? என் பதைக் கலித்தொகை சுட்டுகிறது. மருந்தானது நோயை மட்டுப்படுத்தி நோயாளிக்குத் தீங்கு நேரா வண்ணம் காக்க வேண்டும் என்பதை;

“இன்னுயிர் செய்யும் மருந்தாகிப் பின்னிய”

(கலி. 32: 14-15)

என்ற தொடர் சுட்டியுள்ளது. அம்மருந்து பொறுக்க முடியாத துன்பத்தைப் போக்கும்படியாக இருக்க வேண்டும் என்பதை,

“அருந்துயர் ஆரஞர் தீர்க்கும்

மருந்தாகிச் செல்வம் பெரும”           (கலி. : 44)

என்ற வரிகளும், நோயை உடனுக்குடனே தீர்த்து நோயுள்ளவனை நலம்பெறச் செய்து பின் விளைவுகள் இல்லாமல் நோயை விரைவாகத் தீர்க்கும் ஆற்றல் உடையதாக இருக்க வேண்டும் என்பதை,

“என்னுள் இடும்பை தணிக்கும் மருந்தாக

நன்னுதல் ஈத்த இம்மா”           (கலி. : 140)

என்ற வரிகளும்;

“நோய் நாம் தணிக்கும் மருந்தெனப் பாராட்ட” (கலி: 81)

என்ற வரியும் கூறுவது குறிப்பிடத்தக்கன.

நல்லுடம்பில் மருந்து:

நல்லொழுக்கத்தாற் பேணப்பட்ட நல்ல உடம்பிற்குத் தான் மருந்து நல்ல பலனளிக்கும். நோய் எதிர்ப்புச் சக்தியுடன் கூடய உடம்பும், மருந்தை ஏற்றுக்கொள்ளும். மருந்தை உடம்பு ஏற்றுக்கொள்ளவில்லையேல் பயனில்லை என்பதை,

“பொருந்தியான் தான் வேட்ட பொருள் நினைந்த சொல்

திருந்திய யாக்கையுள் மருத்துவன் ஊட்டிய

மருந்து போல் மருந்தாகி மன னுவப்பப்

பெரும் பெயர் மீளி பெயர்ந்தனன் செலவே.” (கலி. : 17)

என்ற வரிகள் குறிப்பிடுகின்றன. மருந்தால் பிணி தீருமென்பதையும், சில பிணிகள் தீராவென்பதையும் இன்ன பிணிக்கு இன்ன மருந்து பயனளிக்கும் என்பதையும் சங்கத் தமிழர் அறிந்திருந்தார்கள் என்பதை,

“விறலிழை நெகிழ்த்த வீவு அரும் கடு நோய்”

(குறிஞ்சிப்பாட்டு: 3)

என்ற வரிகள் சுட்டுகின்றன.

மருத்துவ அறம்:

“அரும்பிணி உறுநர்க்கு வேட்டது கொடா அது

மருந்தாய்ந்து கொடுத்த அறவோன் போல்”        (நற்றிணை: 136)

என்ற வரிகள் மருத்துவன், நோயாளி, நோயின் தன்மை, காலம் ஆகியவைகளைக் கணக்கெடுத்து மருத்துவம் செய்ய வேண்டும் என்பதைத் தெளிவு படுத்தியுள்ளது.

“திருந்திய யாக்கையுள் மருத்துவன் ஊட்டிய

மருந்து போல் மருந்தாகி மனன் உவப்ப.”

(கலி. 17 19-20)

என்ற கலித்தொகை வரிகள் மருத்துவன் நோயுற்ற வரின் உடல் நிலைகளை நன்கு ஆராய்ந்து, அவரின் தடுப்பாற்றல் அல்லது திருந்திய யாக்கையின் தன்மைக்கு ஏற்றவாறு மருந்து கொடுக்க வேண்டும் என்பதோடு கொடுக்கப்பட்ட மருந்து உண்மை யான மருந்தாகி நோயைப் போக்க வேண்டும். அவ்விதம் அமைந்தால் மருத்துவர், நோயுற்றவன் என இருவருமே மனம் மகிழ்வர் என மேற்கண்ட வரிகள் தெரியப்படுத்துகின்றன.

குழந்தை மருத்துவம்:

பண்டைய தமிழர் இளங்குழந்தைகளுக்குச் செய்த மருத்துவத்தை மிகவும் தேர்ந்த நிலை பெற்றதாகவே கருத வேண்டும். குழந்தைகள் நோய்க்கான மருத்துவத்தை மனையுறையும் பெண்டிரே செய்தனர் என்பதற்கு,

“காடி யாட்டித் தராய்ச்சாறும்

கன்னன் மணியும் நறு செய்யும்

கூடச் செம் பொன் கொளத் தேய்த்துக்

கொண்டு நாளும் வாயு றீஇப்

பாடற் கினிய பகுவாயும்

கண்ணும் பெருக உகிர்; உறுத்தித்

தேடித் தீந்தேன் திப்பிலி தோய்த்து

அண்ணா உரிஞ்சி மூக்குயர்த்தார்.” 

(சீவக சிந்தாமணி: 2703)

என்ற பாடல் சான்றாகும்.

“தந்த பசிதனை அறிந்து முலையமுது

தந்து முதுகு தடவிய தாயார்.”

என்ற திருப்புகழ் பாடல் தாய்மார்கள் பிள்ளைக்குப் பாலூட்டும் முறையினைப் படம் பிடிக்கிறது.

பிரமிச்சாறு, கண்ட சருக்கரை, தேன், நறுநெய் ஆகியவற்றுடன் காடியைக் கூட்டிப் பொன்னினால் தேய்த்துக் குழந்தைகள் உண்ணு கின்ற அளவிற்குப் பக்குவப்படுத்திய மருந்தாக்கித் தினமும் வாய்வழி ஊட்டினர் என்றதனால் குழந்தை மருத்துவத்தினை வீட்டு மகளிரும் அறிந்திருந்தனர் என்பது பெறப் படுகிறது.

மருந்து கசப்பாக இருந்தால் குழந்தைகள் உண்ணாது. அதற்கு கசப்பு மருந்துக்கு தேன் தடவிக் கொடுத்த குழந்தை மருத்துவர்கள் அக் காலத்தில் இருந்தனர்.

“தேன் சுவைக் கொளீஇ வேம்பினூட்டும்

மகா அர மருந்தாளரின் மறத்தகை யண்ணலை”          (பெருங்கதை: 2-11: 173)

என்ற வரியால் உணர முடிகிறது.

பல் மருத்துவமுறை:

பற்கள் தூய்மையுடன் ஒளியுடன் திகழ கடுக்காயைச் சுட்டுப் பொடி செய்து பல் விளக்கும் முறையை,

“நீணீர் முத்த நிரைமுறுவல் கடுஞ்சுட்

டுரிஞ்சக் கதிருமிழ்ந்து.”            (சிந்தா - 2697 : 3)

என்ற அடியால் அறியலாம்.

வேது (ஒத்தடம்) மருத்துவம்:

சில குறிப்பிட்ட நோய்களுக்கு மருந்துப் பொருட்களைச் சூடாக்கி, அவற்றிலிருந்து எழும் ஆவி உடம்பில் படும்படிச் செய்யும், வேது கொடுக்கும் முறையைக் கலித்தொகையில்,

“பண் புதர வந்த என் தொடர் நோய் வேது

கொள்வது போலும் கடுபகல் ஞாயிறே.”      (கலித்தொகை: 145: 25-26)

என்னும் அடிகளில் சூரியனின் ஒளியே ஆவியாக இருந்தது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. காம நோயினால் இராவணன் வருந்துவதைக் கம்பர்;

“பொங்கு தீ மருந்தினால்

வேது கொண்ட தென்ன மேனி

வெந்து வெந்து...”

(ஆரணிய, மாரீசன் வதைப்படலம் - 91: 2-3)

என வேது கொடுக்கும் முறையை உவமை வழியாகக் காட்டுகிறார்.

இதனைக் கலிங்கத்துப் பரணியும், (55)

“தங்குகண் வேல் செய்த புண்களைத் தட முலை

வேது கொண்டு ஒற்றியும் செங்கனி

வாய்மருந்து ஊட்டுவீர்.”           

என்று சுட்டுகிறது.

அழகுக்கு மருந்து:

நாட்டிய நாயகி கலைச்செல்வி மாதவி, தன் காதலன் கோவலனுடன் உலாவிவர தன்னை ஒப்பனை செய்து கொள்ள நீராடுகிறாள். மாதவி நீராடிய நன்னீரில் “பத்து வகைப்பட்ட துவர், ஐந்து வகைப்பட்ட விரை, முப்பத்திரண்டு வகை ஒமாலிகை” ஆகிய நாற்பத்தேழு மருந்துப் பொருட் களும் ஊறிக் காய்ந்தது என்கிறது சிலம்பு. இவை அழகூட்டும் பொருள்கள் போலும். அப்பொருள்கள் ஊறிய நீரில் நீராடி மாதவி அழகு பெற்றாள் (சிலம்பு: 6: 76-9) எனக் குறிப்பிடப்படுகிறது.

மருந்து; நோய்க்கு மட்டுமின்றி உடல் வனப் பிற்கும் குறிப்பாக மேனி நிறம் பெறவும் இது பயன்பட்டிருக்கிறது என்பது புலப்படுகிறது. இதில் நாற்பத்தேழு மருந்துப் பொருள்களும் ஒரே வகையான பண்புகளை உடையவை என்பதை அறிந்தே மருத்துவப் புலமையாளர்கள் இக்கூட்டு மருந்தை உருவாக்கியிருக்க முடியும் என்பதையும் அறிய முடிகிறது.

கூந்தல் வளர்ச்சிக்கு மருந்து:

மாதர்கள் மேனியெழிலுக்கு மருந்து ஊறிய நீரில் நீராடுவதைப் போல், அவர்கள் தங்கள் கூந்தல் வளர்ப்பும், பராமரிப்பும் இடம் பெறுமாகையால், பெண்கள் கூந்தல் ஒப்பனையை விரும்புவர்.

தண்ணீரில் நீராடிய பெண்டிர் தமது கூந்தலை அகில் புகையால் உலரச் செய்வர். கூந்தலை வளர்க்கவும், நிறங்கொடுக்கவும், பேணவும், மான்மதக் கொழுஞ்சேறூட்டி அலங்கரித்தனர். மான்மதக் குழம்பு என்பது கத்தூரிக் குழம்பு என்றும் சவ்வாது என்றும் அழைப்பர். (சிலம்பு: 6 - 80)

இது போல கூந்தல் நன்கு வளர்வதன் பொருட்டுக் கடுகு கலந்த கைபிழி எண்ணெயைப் பயன்படுத்தினர் எனவும் குறிப்பிடப்படுகிறது.   (தொல். சொல் சேனா. ப. 19)

இவை அனைத்தும் இன்றைய அழகு நிலையங் களின் குறிப்புகள் போல் அமைந்திருப்பது வியப்பை அளிக்கிறது.

குரல் வளம் தரும் மருந்து:

பஞ்சமரபு நூல் சேறை அறிவனார் என்னும் இசை மேதையால் இயற்றப்பட்டது. இசை, முழவு, தாளம், கூத்து, அபிநயம் என்னும் ஐந்துக்கும் இலக்கணமாக அமைந்துள்ளது இசைப்பாடல்கள். குரல் வளம் பெற மருந்தும் உரைக்கிறது.

“திப்பிலி தேன் மிளகு சுக்கினோ டிம்பூரல்

துப்பில்லா ஆன்பால் தலைக்கடை - ஒப்பில்லா

வெந்நீரும் வெண்ணெயு மெய்ச் சாந்தும் பூசவிவை

மன்னூழி வாழும் மகிழ்ந்து.”

என்னும் இச்செய்யுள் திப்பிலி, தேன், மிளகு, சுக்கு, இம்பூரல், பசுவின்பால் தலைக்கடை, மெய்ச்சாந்து, இவைகளை வெண்ணெய் விட்டு அரைத்து வெந்நீரில் குழைத்துப் பூசிவரக் குரலின் வளம் அதிகப்படும் என்கிறது. தொண்டையில் ஏற்படும் நோய்களுக்குத் தான் இக்கால நவீன மருத்துவம் பயன்படுத்தப்படு கின்றது. குரல் வளத்திற்குரிய மருந்துகள் நவீன மருத்துவத்தில் காணப்பெறவில்லை.

தலைக்குத்துக்கு மருந்து:

சங்கப்புலவர் மருத்துவர் தாமோதரனார் திருவள்ளுவமாலையில் 11-ஆம் பாடலைப் பாடியவர். இப்பாடல் மருத்துவத்தைச் சார்ந்தது.

“சீந்தினீர்க் கண்டம் தெறிசுக்குத் தேனளாய்

மோந்தபின் யார்க்கும் தலைக்குத்தில்.....”

(திருவள்ளுவமாலை செய். : 11)

சீந்திற் சருக்கரையும் சுக்குப்பொடியும் தேனுங் கலந்து மோந்தால் யாருக்குந் தலைவலி நீங்கிவிடும் என்று பாவாணர் இப்பாடலுக்கு உரை வகுக்கிறார்.

மேற்கூறப்பட்ட மருந்துகள் மூன்றும் நரம்பு மண்டலங்கள் வலிமையடைய பெரிதும் ஊட்டம் அளிப்பவையாகும் என்றும், இது ஒரு வகை தலைவலிக்கு (ருnனைநவேகைநைன ஆபைசயiநே) பயன்படும் என்றும் கூறப்படுகிறது. நவீன மருத்துவத்தில் ஒற்றைத் தலைவலிக்கு நேரடி மருந்து இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. (தமிழ் இலக்கியத்தில் சித்த மருத்துவம்: பக். 165 - 1655)

பசிப்பிணி போக்கும் கருநாவல்:

பன்னீராண்டு பசி வராமல் தடுக்கும் அரிய வலிமையுடைய கருநாவற்கனி பற்றிய குறிப்பினை மணிமேகலையில் வரும் விருச்சிக முனிவன் கதையில் காணலாம்.

“பெருங்குலைப் பெண்ணைக் கருங்கனி யனைய தோர்

இருங்கனி நாவற்பழம்.”

என்று அடையாளம் காட்டப்படும் கருநாவற்பழம் பனைமரத்தின் கரிய கனியைப் போன்றிருக்குமாம்.

உயிர் காக்கும் அற்புத அரிய மருந்துகள்:

இன்றைய அறிவியல் வளர்ச்சியுற்ற மருத்து வத்தில் இல்லாத மருந்துகள் குறிப்பாக மூலிகை மருந்துகள் இருந்ததைப் பற்றிய நால்வகை மருந்து விபரங்கள் கம்பராமாயண யுத்த காண்ட மருத்து மலைப்படலத்தில் காணப்படுகிறது.

“மாண்டாரை உய்விக்கும் மருந்தொன்றும்

உடல் வேறு வகிர்களாகக்

கீண் டாலும் பொருந்து விக்கும் ஒரு மருந்தும்

படைக்கலங்கள் கிளைப்பதொன்றும்

மீண்டேயும் தம்முருவை அருளுவதோர்

மெய்ம் மருந்து முள.”                   (பாடல்: 27)

இறந்தவரைப் பிழைப்பிக்கும் மருந்து ஒன்றும், உடல் வேறு வேறு பிளவாகப் பிளந்திட்டாலும், ஒட்டும்படிசெய்யும் ஒரு மருந்தும் தைத்த படைக் கல ஆயுதங்களை வெளியே எடுக்க ஒரு மருந்தும், உருவம் குலைந்த போது மீண்டும் பழைய உருவினைக் கொடுக்கும் உண்மையான மருந்து ஒன்றும் உள்ளன என்று இப்பாடல் குறிப்பிடுகிறது. இதே பொருளுடைய மற்றொரு பாடலும் மருந்து மலைப் படலத்தில் வருகிறது.

“சல்லியம் அகற்றுவது ஒன்று சந்துகள்

புல்லுறப் பொருத்துவது ஒன்று போயின

நல்லுயிர் நல்குவது ஒன்று நன்னிறம்

தொல்லையது ஆக்குவது ஒன்று தொல்லையோய்.”        (மருந்து: 27)

என்ற பாடலடிகள் விளக்குகின்றது.

முந்தைய பாடலில் மருந்துகள் கூறப் பட்டாலும், இப்பாடலில் அவை, இவ்வளவின என்றும் இன்ன ஆற்றலுடையன என்றும் குறிக்கப் படுகின்றன. சல்லியம் அகற்றுவது படைக்கல ஆயுதங்களை வெளிப்படுத்துவது - சல்யகரணி, மாண்டாரை உய்விக்கும் மருந்து சஞ்சீவகரணி, உடம்பு பிளவுபட்டிருந்தாலும் பொருந்தச் செய்யும் மருந்து சந்தான கரணி, இந்நால்வகை மருந்து களும் அக்காலத்தில் உயிர் காக்கும் மருந்துகளாக கருதப்பட்டன. கி.பி. 10-ஆம் நூற்றாண்டில் சித்த மருத்துவத்தில் இந்நால்வகை - மருந்துகளும் இருந்ததை கம்பராமாயணம் உறுதிப்படுத்துகிறது.

இறந்த உயிரை மீட்பதாகக் கூறப்படும் மருந்து மிருத சஞ்சிவினி எனப்படும்.

“வீயும் உயிர் மீளும் மருந்தும் எனல் ஆகியது

வாழி மணியாழி.  (பாடல்: 5295)

என்று சுந்தர காண்டத்தில் உருக்காட்டுப் படலத்தில் வரும் குறிப்பொன்று, அழியும் நிலையில் இருந்த உயிர் மீண்டும் பிழைத்ததற்கக் காரணமாக அமைந்த மருந்து என்று கூறியுள்ளது.

மேற்கூறப்பட்ட மூலிகை மருந்துகளின் மாபெரும் சிறப்புக்களை மனதிற்கொண்டு, சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் தம்பதியர் இடையே உண்டாகும் ஊடல் பற்றி விரித்துரைக்கும் போது இத்தகு ஊடல்களினால் தம்பதியர்களுக்கு நேரும் துயரங்களைக் களைய தக்கதொரு மருந்து சல்லியக்கரணி, சந்தான கரணி, சாமந்திய கரணி மற்றும் மிளகு சஞ்சீவினி போன்ற சக்திமிகு மருந்துகளைக் கொண்டுள்ள இப்பரந்த உலகினில் காண முடியவில்லையே என்று வருத்தத்துடன் குறிப்பிடுகின்றார். மேலும், அவர் மிருத சஞ்சீவினி எனும் மருந்து, பிரிந்து கொண்டிருக்கும் உயிரினைக் கண் சிமிட்டும் நேரத்திற்குள் மீட்டு நிலை நிறுத்தும் தன்மை பெற்றிருத்தலால் அதை உயிர் மருந்து என்றும் குறிப்பிடுகின்றார். பொருட்டொகை நிகண்டு, இதே விதமான மூலிகைகள் இன்றி யமையா நான்கினை ஓர் நூற்பாவில் சுட்டுகிறது. அவை,

“சல்லிய கரணி, சந்தான கரணி

சமனிய கரணி, மிருத சஞ்சீவி

இவையே நால்வகை மருந்தென செப்புக.” (நூற்பா: 349)

பல மருந்துகளைத் தொகையாகக் குறிப்பிடும் சொல் வழக்கில் இருந்ததைக் கொண்டு மருந்தியலில் வளர்ந்த நிலையினை உணரலாம். நில வரைப்பு என்று மருந்தின் தொகைச்சொல் - இச்சொல்லைப் பற்றிய கருத்துரை வழங்கிய அடியார்க்கு நல்லார் சல்லிய கரணி, சந்தான கரணி, சமனிய கரணி, மிருத சஞ்சீவினி எனும் நான்கு மருந்துகளை உள்ளடக்கியதாகக் குறிப்பிடுகிறார். (உ.வே. சாமிநாதய்யர், சிலப்பதிகாரம்: 1969 - 5: 224 - 34, உரை பக். 171)

மேற்கண்ட நான்கு வித மருந்துகளின் வினைப் பயனை நோக்கும் போது தமிழ் மருத்துவம் மிக உயர்ந்த நிலையில் இருந்தது தெரியவருகிறது. இம்மருந்துகளைப் போன்ற பயனுடைய மருந்துகள் நவீன மருத்துவத்திலும் இல்லை.

பழங்கால தமிழகத்தில் வாழ்ந்து வந்த சித்தர்கள் கொங்குநாடு, குடகு நாடு, சேர நாடு ஆகியவற்றில் இக்கிடைத்தற்கரிய மூலிகைகள் கிடைக்கக் கூடியவைகளாகத் தங்கள் சித்த மருத்துவ நூற்களில் குறிப்பிட்டு மூலிகைகள் வளரக்கூடிய இடங்கள் அட்டமங்கலம் எனப் பெயரிட்டுள்ளனர். (தமிழ் இலக்கியத்தில் சித்த மருத்துவம்: ப. 237)

முதுமை வராதிருக்க மருந்து:

“யாண்டு பலவாக நரையில வாகுதல்

யாங்கா கியரென வினவுதி ராயின்

மாண்ட என் மனைவி யொடு மக்களும் நிரம்பினர்

யான்கண் டனையரென் இளையவரும் வேந்தனும்

அல்லவை செய்யான் காக்கும் அதன் தலை

ஆன்றவிந் தடங்கிய கொள்கைச்

சான்றோர் பலர் யான் வாழு மூரே.”  (புறம்: 191)

என்ற பாடல், குடும்பம், அரசாட்சி, பணியாட்கள், சமூகத்தில் வாழ்வோர் ஆகியோர் நாம் விரும்பிய படியே அமையின் முதுமை என்னும் சிதைவு நோய் வராது என்பதை உணர்த்துகிறது. இதிலிருந்து ஒருவருக்கு நோய் அணுகாமல் இருக்கக் குடும்பம், சமூகம், தனிமனிதன் ஆகியோரிடையே சீரான உறவு தேவை என்று காட்டும் புதிய சிந்தனை. தற்காலத்தில் உணரப்பட்டு புதிய துறையாக (Clinical Ecology வளர ஆரம்பமாகியுள்ளது வியக்கத் தக்கதாக உள்ளது.

இப்பாடலாசிரியர் நரைமுடி இல்லாமைக்குத் தெய்வத்தையோ, கிருமிகளையோ அல்லது பேய், பிசாசுகளையோ அல்லது மருந்துகளையோ கூற வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Pin It