ஜஹனாரா பேகம், ஷாஜஹான் - மும்தாஜ் இணையரின் மூத்த மகள். மொகலாய சாம்ராஜ்ய வரலாற்றில் தவிர்க்க இயலாத பெண் ஆளுமை. பதினான்கு வயதிலேயே தன் தந்தைக்கு அரசியல் ஆலோசனை கூறுமளவுக்கு நுண்ணறிவு பெற்றிருந்தவள். இளவரசிகளின் இளவரசியாகப் போற்றப்பட்டவள். கவிதை, நடனம், இசை, கட்டடக் கலைகளில் நிபுணத்துவம் பெற்றிருந்தவள். ஏராளமான யானைகள், குதிரைகள், ஒட்டகங்கள், கப்பல்களுடன் அதிகார பலமும் கொண்டிருந்தவள். மொகலாய வம்சப் பெண்களில் முதன்முதலில் நாட்குறிப்புகள் எழுதியவள். வேதங்கள், புராணங்கள், மதநூல்கள் பயின்றிருந்தவள். இந்தியாவில் சூஃபி மரபை வலுப்படுத்திய காஜா மொய்னுத்தீன் சிஷ்டியின் மாணவி என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவள். இத்தனை சிறப்புகள் இருப்பினும் வரலாற்றாசிரியர்களால் மிகக் குறைவாகவே கவனப்படுத்தப்பட்டிருந்த ஜஹனாரா, கவிஞர் சுகுமாரனின் ‘பெருவலி’ நாவல் வழியே பொது வாசகவெளிக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இராணுவத் தேவைகளுக்காக உருவாக்கப்பட்ட வெல்லிங்டன் எனும் ஊரின் வரலாற்றைக் கற்பனை கதைமாந்தர்களின் வாழ்க்கையுடன் புனைந்து வரலாற்றுபுனைவு என்னும் இருமைத்தன்மை தொழிற்பட ‘வெல்லிங்டன்’ எனும் முதல் நாவலைத் தந்தவர் கவிஞர் சுகுமாரன். அதே இருமைத்தன்மை அவரது இரண்டாவது நாவலான பெருவலியிலும் வெளிப்படுகிறது. ஜஹனாராவின் நாட்குறிப்புகளை மையமாகக் கொண்டு அதில் இருண்டிருந்த பக்கங்களையும் அவள் பேசாது மௌனித் திருந்த இடைவெளிகளையும் புனைவு அம்சங்களால் இட்டு நிரப்பி இந்நாவலை உருவாக்கியுள்ளார். ஜஹனாராவைப் பற்றி எழுதப்பட்ட புனைவுநூல்கள் ஏராளம் இருக்க, ஜஹனாராவின் நாட்குறிப்புகள் மையப்படுத்தப்பட்டிருப்பதாலேயே இந்நாவல் தனித்துவமும் முக்கியத்துவமும் வாய்ந்ததாகத் திகழ்கிறது. இந்நாட்குறிப்புகள் வெளிச்சத்திற்கு வந்த வரலாறு நாவலினும் சுவாரஸ்யம் கொண்டது.
1890-91 ஆம் ஆண்டுகளில் இந்தியாவுக்கு வருகை தந்திருந்த ஸ்வீடன் நாட்டுப் பெண்மணியான ஆண்ட்ரியா புடென்ஷான், ஆக்ரா கோட்டையில் ஜஹனாரா வாழ்ந்த மல்லிகை மாளிகையைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தார். அங்கிருந்த சுவரொன்றில் எதேச்சையாகக் கைகள் ஊன்றிய தருணத்தில் கற்களும் அவற்றுடன் சேர்ந்து சில காகிதத்திரட்டுகளும் கீழே விழுந்தன. அந்தக் காகிதத்திரட்டுகளே ஜஹனாராவால் எழுதப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த நாட்குறிப்புகள்.
“இந்தக் காகிதங்களை மல்லிகை மாளிகையின் கற்களுக்கு அடியில் ஒளித்து வைப்பேன் எதிர்காலத்தில் என்றாவது மல்லிகை மாளிகை சிதையும். அப்போது அந்தச் சிதிலங்களுக்கு அடியிலிருந்து என் சுயசரிதை மனிதர்களின் கண்ணில் தென்படும்” என்று தன் நாட் குறிப்பில் ஜஹனாரா எழுதி வைத்திருந்தார். நட்ட கல்லும் பேசும் நாட்குறிப்புகள் உள்ளிருக்கையில் என்று ஜஹனாரா உறுதியாக நம்பியிருந்தார் போலும். பாரசீக மொழியில் அமைந்திருந்த அந்நாட் குறிப்புகளைக் கண்டெடுத்த ஆண்ட்ரியா அவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து The Life of Mogul Princess Jahanara Begam- Daughter of Shajahan என்ற பெயரில் 1931ஆம் ஆண்டு வெளியிட்டார். இந்நூலே பெருவலி நாவலுக்கான முதன்மை ஆதாரம்.
நாட்குறிப்புகள் கிடைத்த வரலாறு வேண்டு மானால் சுவையானதாக இருக்கலாம். ஆனால் ஜஹனாராவின் வரலாறு அப்படியானதில்லை. சுவர் களுக்குள் சிறைப்பட்டிருந்த நாட்குறிப்புகள் போன்றதே அரண்மனைக்குள் அடைபட்டிருந்த ஜஹனாராவின் வாழ்க்கையும். மல்லிகை மாளிகைக்குள் வாழ்ந்திருந்த போதும் வாசத்திற்காக ஏங்கியவள். தன் பாட்டி நூர்மஹலுக்கும் தன் தம்பி ஒளரங்கசீபிற்கும் எதிரான கோபம் அவளுக்குள் நெருப்பாகக் கனன்ற போதிலும் கண்ணாடி விளக்குக்குள் துடிதுடிக்கும் நெருப்பாகவே அடங்கிக் கிடந்தவள்.
சுதந்திரத்திற்காக ஏங்கித் தவித்த ஜஹனாராவின் வாழ்க்கையை மையச்சரடாகக் கொண்டு மூன்று தலைமுறை அதிகார யுத்தங்களையும் அரண்மனை அடிமைகள் முதல் அந்தப்புரத்து பெண்கள் வரை அனுபவித்து வந்த அவலநிலையினையும் பெருவலி பேசுகிறது. சமகால அரசியல் நிகழ்வுகளையும் அதிகாரத்திற்கான போட்டிகளையும் வெளிப்படை யாகப் பேச இயலாது என்பதால் அவற்றைக் கடந்த காலத்திற்குள் தேட முயன்ற ஆசிரியரின் விழைவே பெருவலி நாவல் எனலாம்.
நாவலின் தலைப்பு ‘பெருவலி’, பெரும் வலிமையைக் குறிக்கிறதா அல்லது பெரும் துன்பத்தைக் குறிக்கிறதா என்கிற பீடிகையுடன் வாசகனை நாவலுக்குள் அழைத்துச் செல்கிறது. ஆனால் நாவலுக்குள் புகுந்தபின் இரு வலிகளும் இணை கோடுகளாக இறுதிவரை பயணிப்பதை உணரமுடிகிறது.
அரசக்குடும்பத்தில் யாரை விடவும் செல்வமும் செல்வாக்கும் பெற்றிருந்த ஜஹனாராவின் பெரு வலிமையை மட்டும் நாவல் பேசவில்லை. மூன்று பேரரசர்களின் ஆட்சியின் சுகதுக்கங்களுக்குச் சாட்சியாக இருந்தும் எந்த இரகசியங்களையும் அம்பலப்படுத்தாமல் தனக்குள்ளேயே புதைத்துவைத்திருக்கும் பானிபட் எனும் அடிமையின் மனவலிமை, ஜஹாங்கீரை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த நூர்மஹலின் வலிமை, நூர்மஹலின் சூழ்ச்சியை வென்று ஆட்சியைப்பிடித்த ஷாஜஹானின் வலிமை, ஷாஜஹானை சிறையிலடைத்து அண்ணன் தாராவையும் கொன்று ஆட்சிபீடம் ஏறிய ஒளரங்கசீப்பின் வலிமை என்று பெருவலிமையினால் வென்ற வரலாறு புனைவு அம்சங்களுடன் மெருகேறி மொகலாய சாம்ராஜ்யத்திற்குள் நம்மை அழைத்துச் செல்கிறது.
அடிமைச் சந்தையில் விலைக்கு வாங்கப்பட்ட மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த பானிபட்டுக்கும் ஜஹனாராவுக்கும் இடையே நடைபெறும் உரை யாடலாக அமைந்த நாவலின் முதல்பகுதி இருவரின் துயர்மிகுந்த வாழ்க்கையின் மீது கழிவிரக்கத்தை ஏற்படுத்துகிறது. இளவரசிகள் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று அக்பர் விதித்திருந்த தடையை எதிர்கொள்ள முடியாமல் விகசித்து நிற்கும் பருவத்தின் காதல் அவலத்தை, தன் சகோதரன் தாரா ஆட்சிக்கு வந்தால் அந்தத் தடையை நீக்கிடுவான் என்ற நம்பிக் கையின் அடியாகப் பிறக்கும் காதல், போரில் கொலை யுண்ட காதலனுடனே தொலைந்த காதல், பதினான்காம் பிள்ளைப்பேற்றின் போது மரணத்தைத் தழுவிய தன் தாயின் இழப்பு, பதவிக்காகத் தன் சகோதரனே தன் தந்தையைச் சிறை வைத்த கொடுமை, ஷாஜஹான் சிறையிருந்த இறுதி எட்டு ஆண்டுகள் அவருடனே இருண்ட உலகில் முடங்கிக்கிடந்த வாழ்க்கை, இறுதியில் ஷாஜஹானின் மரணம் என்று ஜஹனாரா அனுபவித்த அடுக்கடுக்கான வலிகள் நாவல் முழுதும் வியாபித்து நிற்கிறது. இவ்வலிகள் சுகுமாரனின் கவிதைமொழியோடு இணையும்போது ஏற்படுத்தும் ரசவாதம் சொற்களுக்குள் அடங்கிவிடாது. வாசிப்பின் வழியாக மட்டுமே பெற்றுக்கொள்ளக் கூடிய அனுபவம்.
மல்லிகை மாளிகைக்குள் சிறைப்பட்டிருந்த ஜஹனாராவின் வரலாறு பெருவலி வழியாகத் தமிழிலக்கியப் பெருவெளியில் சிறகுவிரிக்கிறது. ஷாஜஹான் - மும்தாஜ் என்றதும் தாஜ்மஹால் மட்டுமல்ல, இனி ஜஹனாராவும் நினைக்கப்படுவாள்.
‘பெருவலி’
சுகுமாரன்
வெளியீடு:
காலச்சுவடு பதிப்பகம்
நாகர்கோவில் - 629001
ரூ. 225/-