gowri 350

பாசிசத்தின் கோரமுகம் மீண்டும் வெளிப்பட்டிருக்கிறது. பெங்களூருவில் பத்திரிகையாளரும் மாற்றுச் சிந்தனையாளருமான கவுரி லங்கேஷ் கொடூரமாகச் சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் பிரபல கன்னட எழுத்தாளரும் முற்போக்கு இயக்கத்தைச் சேர்ந்த நாடகக் கலைஞருமான பி.லங்கேஷின் மகள். லங்கேஷின் நாடகங்கள் மக்களைத் தட்டி எழுப்பும் வல்லமை பெற்றவை. அவர் நடத்திய இதழ் லங்கேஷ். சாதி, சமய வேற்றுமை போக்கவும், மூடநம்பிக்கை ஒழிக்கவும், பத்திரிக்கை உலகில் சமூகச் சீரழிவுகளையும், அதிகார அத்துமீறல்களையும் துணிவுடன் வெளிப்படுத்தினார். அவர் எப்போதும் சொல்வது “பத்திரிக்கை ஓர் எதிர்கட்சியாகச் செயல்பட வேண்டும்” என்பது.

கவுரி தன் தந்தையின் நிழலில் வளர்ந்தவர் அல்ல. கருத்தியலில் தந்தையால் ஊக்கம் பெற்ற அவர் செயல்பாடுகளில் தன் சொந்தக் காலில் நின்று, போராடி, முன்னிலை பெற்றார். டைம்ஸ் ஆப் இந்தியா, சண்டே இதழ்களில் பணியாற்றிய கவுரி தன் தந்தை மறைவிற்குப் பின் லங்கேஷ் இதழின் ஆசிரியப் பொறுப்பேற்றார்.

வாராவாரம் லங்கேஷ் பத்திரிக்கையின் வரவு ஆள்பவர்களை அச்சம் கொள்ளவைத்தது. குறிப்பாக இந்துத்துவ சக்திகளுக்கு எதிராகப் போராடினார். இதனால் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க. வின் பல வழக்குகளைச் சந்தித்தார். 2008 ஆம் ஆண்டு தார்வார் தொகுதி பா.ஜ.க. எம்.பி பிரகலாத் ஜோஷி, பா.ஜ.க.வைச் சேர்ந்த உமேஷ் டூஷி ஆகியோரைப் பற்றி எழுதியதற்காக அவதூறு வழக்குக்கு ஆளாக்கப்பட்டார். இது குறித்து எழுதிய நிருபர் முதல் குற்றவாளி, ஆசிரியர் கவுரி இரண்டாம் குற்றவாளி. இவ்வழக்கில் கடந்த சில மாதத்திற்கு முன்பு தீர்ப்பு வெளியானது. நிருபர் விடுவிக்கப்பட்டு, கவுரிக்கு ஆறு மாதச் சிறையும், பத்தாயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

ஹ§ப்ளி நீதிமன்றத்தில் பின்னர் பிணையில் வெளிவந்தார். இது பற்றி பின்னர் கவுரி பேசுகையில், “என்னை சிறையில் தள்ளலாம் என்று பலரும் மனப்பால் குடித்துக் கொண்டிருக் கிறார்கள். அவர்களை நான் ஏமாற்றிவிட்டேன். ஹ§ப்ளி நீதிபதி அவர்கள் தனக்கு இருக்கும் அனைத்து அறிவையும் பயன்படுத்தி நான் குற்றவாளி எனக் கண்டறிந்துள்ளார். இது எனக்குத் தற்காலிகமான பின்னடைவுதான். நான் உயர் நீதிமன்றத்தில் சந்திப்பேன்” என்றார்.

இதுபோல் பல வழக்குகள் சமூக ஊடகங்களில் எதிர்ப்புகள். மிரட்டல்கள். கடைசி கடைசியாக “நரேந்திர தபோல்கர், கோவின்ந்த் பன்சாரே, எம்.எம்.கல்புர்கி, போல் நீயும் கொல்லப்படுவாய்” எனப் பகிரங்கக் கொலை மிரட்டல்கள். கவுரி லங்கேஷ் எல்லாவற்றையும் தன் துணிவால், கருத்தியல் தெளிவால் தீரத்துடன் எதிர் கொண்டார். ஜனநாயகத்தின் மீதும், சமூக மாற்றத்தின் மீதும் வேட்கையுடன் செயல்பட்டார்.

“இந்திய நாட்டின் ஒரு குடிமகளாக நான் பாஜக வின் பாசிச, மதவாத கொள்கைகளைக் கடுமையாக எதிர்க்கிறேன். ஹிந்து தர்மா என்ற பெயரில் சமூகத்தில் திணிக்கப்படும் சிந்தனைகளையும் நான் கடுமையாக எதிர்க்கிறேன். நான் ஹிந்து தர்மம் முன்னிறுத்தும் சாதியப் பாகுபாடுகளை எதிர்க் கிறேன். நான் எல்.கே. அத்வானியின் ரத யாத்திரையை எதிர்த்தேன். நரேந்திர மோடி ஆட்சியில் குஜராத்தில் நடந்த இனப் படு கொலையை எதிர்த்தேன். நமது அரசியல் அமைப்பு சாசனம் மதச் சார்ப்பற்றவளாக இரு என்று எனக்கு போதிக்கிறது. அதன்படியே நடக்கிறேன்.

மதவாதிகளுக்கு எதிராகப் போராடுவது எனக்கு வழங்கப்பட்டிருக்கும் உரிமை. சாதிக் கொடுமைகளுக்கு எதிராகப் போராடிய சமூக அநீதிகளுக்கு எதிராகப் போராடிய சீர்திருத்தவாதி பசவாவைத் தந்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவள் நான். எனவே இப்படித்தான் இருப்பேன்” என ஒரு பேட்டியில் மிகத்தெளிவாக தன்னை அறிவித்துக்கொண்டார்.

காவிரிப் பிரச்சினையின் போது கர்நாடகத்தில் தாக்கப்பட்ட தமிழர்களுக்கு ஆதரவாகவும், மாதொரு பாகன் நாவலுக்காகப் பெருமாள் முருகன் மீதான வன்முறைக்கு எதிராகவும் குரல் கொடுத்தவர் லங்கேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

மனுதர்ம எதிர்ப்பு, சாதிய எதிர்ப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, உலகமய எதிர்ப்பு, பகுத்தறிவு பரப்பல் என்பதையும் எல்லாவித அதிகார மையங்களை குறி வைப்பதையும் தன் வாழ்நாள் பணியாகக் கொண்டார். எனவேதான் ரோஹித் வெமூலாவையும், கன்னையா குமாரையும், ஜிக்னேஷ் மோவானியையும், சந்திர சேகரையும் தன் பிள்ளைகளாக அவரால் உணரமுடிந்தது.

தன் கண்முன் நிகழ்ந்த அனைத்து அரசியல், சமூகப் பண்பாட்டு நிகழ்வுகளிலும் கருத்துச் சார்புடன் களம் கண்டார் என்பதே கவுரியின் அடையாளம்.

தோட்டாக்கள் உன்னிடம் (கோழையே)

என்னிடம் அழியாத வார்த்தைகள்

எதற்கும் அஞ்சமாட்டேன்

நான் கவுரி லங்கேஷ்!

என மேடைகளில் முழங்கினார் கவுரி. காவு கொண்டு விட்டது காவிக்கும்பல். கவுரி லங்கேஷின் வார்த்தைகள் நிஜத்தோட்டாக்களாக மாறித்தான் ஆக வேண்டும்!

Pin It