vivekandar 450State, Society and Socialism என்கிற தலைப்பில் விவேகானந்தரின் கருத்துக்கள் அவரது நூல் தொகையி லிருந்து சேகரிக்கப்பட்டு புத்தகமாக வெளியிடப் பட்டுள்ளது. கல்கத்தா அத்வைத ஆசிரமம் 25 ஆண்டுகளுக்கு முன்னர் இதை வெளியிட்டனர். இப்புத்தகம் கேள்வி பதில் முறையில் அமைக்கப் பட்டுள்ளது. அவரது நூல்தொகையிலிருந்து ஆதாரம் உள்ள பகுதிகளை சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதே நேரத்தில் சகோதரி நிவேதிதா கருத்துக்களும், சுவாமி அவர்களின் மறைவிற்கு 15 ஆண்டுகள் பின்னர் உருவான சோவியத் லெனின் ஆட்சி குறித்தும் இதில் கருத்துக்கள் ஓரிரு இடங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன. எனவே வாசகர்கள் அவரது சிந்தனைகளையும் - அவரை பின்பற்றி சொல்பவர்கள் எழுத்துக்களையும் பிரித்து அறிய வேண்டியுள்ளது. இப்புத்தகம் சமூகம் - அதன் அம்சங்கங்கள், வரலாறும் முன்னேற்றமும், அரசும் வர்க்க ஆட்சியும், சுரண்டல் வடிவங்கள், ஜனநாயகமும் சோசலிசமும், புரட்சியும் சமூக மாற்றமும் என 7 பகுதிகளில் விவாத வடிவில் தொகுக்கப்பட்டுள்ளது. விவாதத்தின் சில முக்கிய அம்சங்கள் இக்கட்டுரையில் இடம் பெறுகின்றன.

பல்வேறுநாடுகளில் சமூகம் உருவாகி மாறி வருகிறது. கடலை நம்பி வாழ்ந்தவர், காடுகளில் வேட்டையாடி வாழ்ந்தவர், கால்நடை வளர்த்தோர், பயிர்த்தொழில் செய்தோர் என பல்வேறு பகுதியினர் - அவர்களிடம் ஏற்பட்ட பூசல்கள் ஆகியவற்றை ஒழுங்கு படுத்த சிறு ராஜ்யங்கள் தோன்றின. அசுரர் - தேவர் பண்புகளுடன் உருவான மோதல்கள் பின்னர் அரசாங்கத்திற்கு வழிவகுத்தன இவர்கள் மத்தியில் கலப்பும் உருவாகி இந்த fusionலிருந்து நவீனகால இனங்கள், சமூகங்கள், பழக்கவழக்கங்கள் உருவாகின. அறிவியல் கருத்துக்கள் தோன்றலாயின என விவேகானந்தர் சமூகம் - சிற்றரசு - அரசு உருவாக்கம் பற்றி விவரிக்கிறார்.

ஒருவர் வயலில் உழைத்தார். விளைபொருட்களை விற்க வைஸ்யர் வந்தார். மற்றவர்கள் அதை பாது காப்பதாக சொல்லி அபகரித்தனர்.  உழைப்பவர் காயத் துவங்கினர். நான்கு வர்ண முடிச்சுகள் சமூகத்தில் இறுகின. நாம் பார்க்கும் நவீன சிக்கலான சமூகம் வந்து விட்டது என்கிறார்.

கிழக்கு மேற்கு சமுக உருவாக்கங்கள் - வேறு பாடுகள் குறித்தும் விவாதிக்கிறார். ஆசிய வகைப்பட்ட நாகரீகம் கங்கை, ஈப்ரடிஸ், யாக்டிசியாங் போன்ற ஆற்றங்கரையில் வளர்ந்தன.  அய்ரோப்பிய சமூகமோ கடல் கொள்ளையில், குன்றுப் பகுதிகளில் வளர்ந்தது. இதை தேவ அசுர தன்மை என அவர் விவரிக்கிறார். அய்ரோப்பாவில் அரசியல் கருத்துக்களை கொண்ட தேசிய ஒற்றுமை உருவானது.  ஆசிய சமூகங் களில் சமய கருத்துக்கள் வடிவில் தேச ஒற்றுமை உருவானது. Introspective என்பது கிழக்கிலும் Scientific/ out seeing என்பது மேற்கிலும் இருந்தன.

இந்தியாவில் அத்வைத ஒளியில் சோசியல் கம்யூனிசம் என சகோதரி நிவேதிதா பேசுகிறார். மற்றொரு அம்சத்தை விவேகானந்தர் பளிச்சென விளக்குகிறார். மேற்கில் மனிதன் தனி மனிதனாகவே (as individual) பிறக்கிறான். இந்தியா விலோ அவன் சமூக மனிதனாக தனது சாதியில் பிறக்கிறான். அதன் கட்டுக்குள்ளேயே வளர்கிறான்.

பண்டைய இந்தியாவில் நிலங்கள் பொதுவானது  அரசனுக்கு / அரசிற்கு சொந்தம். கிராமத்திற்கு பொது வாக அவை சாகுபடிக்கு கொடுக்கப்படும். விளைச்சலில் ஒருபகுதியை அரசாங்கத்திற்கு தரவேண்டும். கிராம  மருத்துவம், பள்ளிகள் வேறு பொது அம்சங்களை நிர்வகித்துக் கொள்ளவேண்டும். அய்ரோப்பிய சமூகம் போர் சமுகம். வாள் கொண்டு ஆளும் சமூகம். வாள் அங்கு நாகரீகம். ஆசியா மைனர் வழியே ஆசிய இனங்கள் சில அங்கே முன்னேறி சென்றிருக்கக்கூடும். இதன்மூலம் கலப்பு நிகழ்ந்தது. ருஷ்யாவின் மொழி கூட்டத்தில் தென்னிந்திய மொழிகூட்ட சாயல் தெரிகிறது என தன் ஆய்வை சுவாமி முன்னெடுக்கிறார் . கிரேக்கத்தில் யவன நாகரீகம் இவ்வாறு ஏற்பட்டது. பலரை வென்றுதான் ரோமராஜ்யம் உருவாக்கப்பட்டது. யூதர்கள் பல்வேறு இடங்களுக்கு செல்ல நேர்ந்தது. அய்ரோப்பாவின் காட்டுமிராண்டி இனம் வாளால் தன்னை உருவாக்கி கொண்டது என்கிறார். பின்னர் கிறிஸ்துவமதம்,  ராணிக்களின் அதிகார ஆட்சி என வளர்ந்தது. அரேபியர் பாலைவனப்பகுதியிலிருந்து இஸ்லாம் புறப்பட்டது. அது எல்லாவற்றையும் தூக்கி சென்றது. இந்தியாவில் அய்ரோப்பாவில் இஸ்லாம் நுழைந்தது.

ரோம சாம்ராஜ்ய அழிவிற்கு பின்னர் Franks  செல்வாக்கு அய்ரோப்பாவில் பரவியது. இப்போது நாம் பரங்கியர் என இச்சொல் மூலம் தான் அவர்களை குறிக்கிறோம். வாள் மூலம் பெர்ஷிய நாகரிகம் பரவியது. கிரீசின் அறிவுத்தாகம், கலை உணர்வுகள் பின்னர் இத்தாலியில் பிளாரன்ஸ் மறுமலர்ச்சியாக வெளிப் பட்டது. நாம் இன்று உணரும் அய்ரோப்பா 16 ஆம் நூற்றாண்டின் உருவாக்க தொடர்ச்சி. இந்தியாவில் அப்போது அக்பர், ஜஹாங்கிர், ஷாஜஹான் முகல் ஆட்சி நடந்திருக்கும். பின்னர் வந்த நூற்றாண்டுகள் பிரஞ்சு புரட்சியின் சுதந்திரம் - சகோதரத்துவம், சமத்துவம் முழக்கங்களை கண்டன. பிரான்சில் அது பேசப்படுகிறதோ இல்லையோ, உலக நாடுகளை அம்முழக்கம் கவ்விப் பிடித்தது.

வடக்கில் இமயம், தெற்கில் சமவெளி, இடையில் காடுகளின் பகுதியாக இந்தியா  என்பது உணரப்பட்டது. திராவிடர், பூர்வீக குடிகள் அவர்களது வழக்கம் - சமயம் இருந்தன. ஆரியர் என்ற பெருமித இனம் பல்வேறு அம்சங்களை அவர்களிடமிருந்து எடுத்துக் கொண்டாலும் இவர்களை தனித்தே வைத்திருந்தது. வாளின் வலிமை யிலாது மதிநுட்ப புரோகித வர்க்கம் செல்வாக்கு பெற்றது. உயர்தட்டாக மாறியது. குலத்தொழிலாக தொடர்ந்த குடும்பங்கள் சாதிகளாக இறுகின. எல்லைகளை வகுத்துக்கொண்டன. சாதியை எவரும் தாண்டமுடியாது. பிரிவினையாக சாதிகள் எனவும், சாதிக்குள் உதவிக்கொள்ளும் சமூகம் என்ற ஏற்பாடாக இருந்தது. சாதி என்கிற கட்டுமானம் ஆரோக்கிய போட்டி என்பதை மட்டுப்படுத்திவிட்டது. இதுவே இந்திய அரசியலின் வீழ்ச்சிக்கும் காரணமாகியது. நூற்றாண்டுகளுக்கு முன்னர் உலகின் பெரும் வர்த்தக மையம் இந்தியா. பருத்தி, சணல் சாயப்பொருட்கள், அரிசி, முத்து, பவளம், உயர்தர பட்டு, கம்பளி என ஏற்றுமதி செய்த நாடு இந்தியா. ஆப்கான், பெர்சியா வழியாக வர்த்தகம் செழித்தது.

ஆன்மீக வழியை அனைவருக்கும் திறக்க கிருஷ்ணன், சமூக சமத்துவத்திற்காக புத்தம் - வைஷ்ணவம் என போராட்டங்கள் நடந்தன. ஆன்மீக சமத்துவம் பேசிய நாடு சமூக வேறுபாடுகளை கொண்டே நகர்ந்தது. வடக்கில் குமரிலர், தெற்கில் ஆதிசங்கரர்  ராமானுஜர் செக்ட் வகைப்பட்ட கோட்பாடுகள், சடங்குமுறையிலான இந்துயிசம் உருவாயின. சங்கரரின் இயக்கம் மக்கள் தொண்டு இயக்கமாகாமல் அறிவு இயக்கமானது. சமஸ்கிருத வாகனத்தையும், சாதிய சட்டங்களுடனும் அது பயணித்தது. ராமானுஜர் உணர்வுகளின் எழுச்சி யாய் நடைமுறைத் தத்துவங்களுடன் சாதாரண மக்களை ஈர்த்து பயணித்தார். ராமானந்தர், கபீர், சைதன்யர், நானக் மனிதர்களின் சமத்துவம் என பேசினர். அதே நேரத்தில் பல்வேறு தத்துவதிசைகளில் அவர்களது பயணம் சென்றது.

முகலாயர்கள், பிரஞ்சுகாரர்கள், ஆங்கிலேயர்கள் என நுழைவை கண்டோம். ஆங்கிலேயர் வெற்றி பைபிளின் வெற்றி என பேசப்பட்டது. ஆனால் அவர்களின் உண்மையான யுத்தக்கொடி Ôஆலை சிம்னிகளில்’ பறந்தது. ஒவ்வொரு நாடும் தனக்கென செயல்முறைகளை கொண்டிருந்தன. சில அரசியல் வழி - சில சமூக சீர்திருத்த வழி என அடையாளம் பெற்றன. இங்கிலாந்து அரசியல் மூலம் சமயம் என அறியப் பட்டால் அமெரிக்காவை சமய சீர்திருத்தங்கள் மூலம் சமயம் என புரிந்துகொள்ளவேண்டியுள்ளது. உலக பாதுகாப்பு என்பது தேசங்களின் கருத்தாக இல்லாமல் போனால் அழிவுதான். நமது நாடு பல துயர்களையும் தாண்டி நிற்கிறது எனில் இந்த உலக பாதுகாப்பு எனும் எண்ணத்தால்தான். அய்ரோப்பியர்களுக்கு தாங்கள் இல்லாவிட்டால் உலகம் நகராது என்ற எண்ணம் உள்ளது. இந்த எண்ணம் அவர்களை வலிமைப் படுத்தியும் உள்ளது.

பிரஞ்சு மக்கள் அரசியல் சுதந்திரம் என்பதில் உறுதி பூண்டவர்கள். அரசாங்கத்தின் தாக்குதல்களை கொடுமைகளை கூட அவர்கள் சகித்துக் கொள்வர். ஆங்கிலேயர் give and take என்பர். இந்தியர் சிந்தனை முக்தியாகும் - ஆன்மீக சுதந்திரம் - விடுதலை என்கிறோம். இதை தொடாமல் யார் எதை செய்தாலும் இந்தியர்கள் சகித்துக் கொள்கின்றனர். ஒன்று மட்டும் உறுதி. சமுக, அரசியல், ஆன்மீகம் என்பதில் நானும் என் சகோதரனும் சமம்தான் என்ற பேருண்மை அனைத்து நாடுகளுக்கும் அனைத்து மக்களுக்கும் தேவைப்படுகிற ஒன்று. இந்தியாவின் சீரழிவிற்கு இங்கு நிலவிய பண்டைய பழக்கங்களோ சட்டங்களோ காரணமல்ல. அவற்றை சரியாக பின்பற்றாமைதான் என சொல்லும்போது சுவாமி எந்த சட்டம் - பழக்கத்தை சொல்கிறார் என ஊகிக்க முடியவில்லை. மனுவாக இருந்தால் அது இன்றைக்கு விவாதத்திற்குரியதாக மாறும்.

இந்திய சீன நாகரிகங்கள் உறைந்து போனதற்கு அங்கு நிலவிய வறுமைதான் காரணம் என்றார் சுவாமி. அன்றாட வாழ்விற்கே போராடும் மனிதனால் சிந்தனை புரட்சியை எவ்வாறு மேல் நகர்த்த இயலும் - புதியன காண நேரமேது என வினவினார். தர்மம், துறவு, மோட்சம் என்கிறோம். முதலில் மனிதன் அனைத்து மகிழ்ச்சியையும் பெறட்டும். பின் அவன் அவற்றை துறக்கட்டும். தேசம் முழுதும் ஒரே நேரத்தில் சந்நியாசம் எடுத்திடமுடியாது என்றார். புத்த மதத்தில் இந்த தவறுதான் நடந்தது. அனைவருக்கும் சீருடை என்பதை புகுத்திடமுடியாது என கேலி செய்கிறார். சுயதர்ம்ம் என்கிறோம். மோட்சம் பெரிய விஷயம்தான். ஓரடிகூட எடுத்து வைக்க முடியாதவனை இலங்கைக்கு பாய வைக்கமுடியாது என்கிற எதார்த்தம் உணர்த்துகிறார்.

தர்மம் என்பது செயல் சார்ந்தவை. செயலுக் காகவே வேதம் என்றார் ஜைமினி. அவரவர் கடமை அவசியமாகிறது. மனிதனுக்கு தைரியம் தேவை. நிலைமைகளுக்கேற்ப அவரவர் ஹீரோ ஆகவேண்டும். யாரையும் வதைக்காமல் காரியமற்றிடவேண்டும். ஆயிரம் முறை ஓம் உச்சரித்துவிட்டோம் ஒன்றும் நடக்கவில்லை. பாவம் போகும் என்றார்கள். பல ஆண்டுகள் உச்சரித்தும் பலனில்லை. நாம் சரியாக புரிந்துகொள்ளாததின் விளைவு இது. சித்த சுத்தி என்கிற செயலில் பரிசுத்தமாகும் புத்தி அவசியம். மோட்ச காரியங்கள் வேறு. தர்ம காரியங்கள் வேறு என கீதையில் கிருஷ்ணன் வகைப்படுத்துகிறார். செயல்படும் போது நன்மை தீமைகள் உருவாகும். சும்மாயிருப்பதை விட அது மேலானதல்லாவா என வினவுகிறார் சுவாமி.

கீதையில் விவேகானந்தர் சாரப்படுத்துவது அதன் அத்தியாயம் 2ல் Ôகளைப்படையாதே பார்த்தா’ என்கிற பாடல். எழு செயல்படு என்கிற உற்சாகப்படுத்தும் - செயலுக்கு உந்தித் தள்ளும் முழக்கம் அப்பாடலில் தொழிற்படுவதால் விவேகானந்தர் அதை திரும்ப திரும்ப எடுத்து பேசுகிறார். Arise Acquire Fame என்பார். சமூகம் வலிமை பெற அனைவருக்கும் கல்வி தான் வழி என்கிறார். மக்கள் கற்பிக்கப்படுவதன் மூலம் நமது தேசம் எழட்டும் என்கிறார். நல்லதின் சக்தியை உணர்தல், பொறாமை விட்டொழித்தல், அனைவருக்கும் நன்மை செய்தல் என்ற மூன்று அம்சங்கள் நம் எல்லாருக்கும் வலிமையை தரும் என்கிறார்.

நாம் விதவை திருமணம் என பேசினோம் ஆனால் உண்மையில் ஒரு பெண்ணிற்கு எத்தனை கணவன் கிடைக்கிறான் என்பது அல்ல முன்னேற்றம் - அங்குள்ள வெகுஜன மக்களின் வாழ்வில் என்ன மாற்றம் என்பதுதான் முன்னேற்றம் என சீர்திருத்தம் என்பதை redefine செய்கிறார். இந்த உதாரணத்தை அவர் ஏன் எடுத்துக் கொண்டார் என புரிந்துகொள்ள முடிய வில்லை. மறைமுகமாக வங்க சீர்திருத்தவாதிகள் எவரையாவது விமர்சனம் செய்கிறாரா? அவரது லட்சிய சமூகம் உடல் மற்றும் ஆன்மீக விடுதலையில் இருப்ப தாக சொல்கிறார். எந்திரங்கள் மட்டும் வறுமையை ஒழித்துவிடாது - மாறாக அவை நம் போராட்டத்தை அதிகப்படுத்திவிட்டன என்ற விமர்சனம் அவரிடம் இருந்தது. மனிதனின் தெய்வீகத்தன்மையை உணர்த்தாத எதுவும் நாகரீகமாகாது என்கிறார்.

II

எங்கு போராட்டம் உள்ளதோ, எதிர்ப்புணர்வு இருக்கிறதோ அங்கு விழிப்புணர்வும் உயிரும் உள்ளது. ஒன்றுபடுத்திக்கொண்டேயிருக்கும் சக்தியும், வேறு படுத்தும் சக்தியும் இயற்கையில் உள்ளன. இந்த இருசக்தி தன்மை இயற்கையின் ஒவ்வொரு துறையிலும், மனித வாழ்விலும் நிலவுகிறது.

மனித வளர்ச்சி நாகரீகம் என்பது இயற்கையை கட்டுப்படுத்துவதாகவே உள்ளது. மாறுபட்ட நடவடிக் கைகள் மூலம் இக்கட்டுப்பாட்டை மேற்கொள்ள மாறுபட்ட மனித இனங்கள் முயற்சித்தன. தங்கள் மக்களின்மீது பேரன்பும், பிறர்மீது வெறுப்பும் என்பது தொழிற்பட்டது. பெர்சியா எதிர்ப்பில் கிரீஸ், கார்த்தேஜ் - ரோம், காபீர் - அரபியர், ஸ்பெயின் - பிரான்ஸ், பிரான்ஸ் - இங்கிலாந்து என ஒன்றை விஞ்சி ஒன்றின் முன்னேற்றம் எட்டப்பட்டன. இவர்கள் ஒன்றுபட்டும், வேறுபட்டு நின்று எதிர்த்தும் கொண்டனர்.

உலக வரலாற்றை பார்த்தால் ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு பெரும் ஆன்மா, அவரது சிந்தனை களை பின்தொடர்ந்த மக்கள் என்பதை காண்கிறோம். மனிதர்கள் பட்டினியில்லாமல் உயிர்வாழவேண்டும் என்ற தேவை இயக்கிக்கொண்டே இருக்கிறது. பிராமணர்கள் கற்பதுதான் சக்தி என்றனர். சத்திரியர் வாள் என்றனர். வைஸ்யர் மின்னும் தங்கம் என்றனர். ஆனால் கவனிக்கவே பெறாத அடித்தட்டு வர்க்கம் நிலத்தில் உழைத்துக் கொண்டேயிருந்தது. யார் ஆண்டபோதும் அது அமைதியாக எதிர்க்க சக்தியின்றி உழைத்துக் கொண்டேயிருந்தது.

சமூகத்தில் ஒரு கட்டத்தில் சில குடும்பங்கள் கையில் சாதியிடத்தில் அறிவுக் குவிப்பு, வலுப் பெருக்கம், செல்வக்குவிப்பு தேவைப்பட்டிருக்கலாம். ஆனால் அவை சாசுவதாக நீடிக்க வேண்டியதில்லை. அவைகள்  diffuse - அதாவது பகிர்ந்து அளிக்கப்பட்டிருக்க வேண்டும் என்கிறார். அறிவோ அதிகார குவிப்போ செல்வமோ ஓரிடத்தில் என நிலைப்பெற்று விட்ட சமூகம் அழிந்துவிடும் என்றார்.

“அதிபௌதிகா அதிதெய்விகா அத்யத்மிகா”  (Adhibhautika, Adhidaivika, Adhyatmikaa) என்ற மூன்றுவகை துன்பங்கள் பற்றி அவர் குறிப்பிடுகிறார். இயற்கை பேரிடர்கள், சமூக தீமைகள், ஒருவரின் மோச மான உணர்ச்சி தூண்டல்களின் மூர்க்கம் ஆகிய வற்றையே இவ்வாறு குறிப்பிடுகிறார். இந்த மூன்றையும் சமூகம் வெல்லவேண்டும். வெல்லவேண்டியது அவசியம் என்றார்.

அறிவிற் சிறந்தவர் சிலர் இருக்கலாம். உடல் வலு சிலரிடம் இருக்கலாம். ஆனால் இவை சலுகையாகி விடக்கூடாது சமூகப் பயன்பாட்டிற்கு உதவக்கூடியதாக இருக்க வேண்டும் என்றார். இயற்கை சார்ந்த வேறு பாடுகள் இருந்தாலும் சமுகம் எனில் சம வாய்ப்புகள் இருக்கவேண்டும். இன்று பிராமண சிறுவன் கற்க ஓராசிரியர் போதும் எனில்  சண்டாள சிறுவனுக்கு பத்து ஆசிரியர் தேவைப்படுகிறது என affirmative action பற்றி  அவர் பேசி நம்மை பிரமிக்க வைக்கிறார். அப்போதுதான் வாய்ப்புகள் நேராகும் என்கிறார். நீ அரசாள்கிறாய் - நான் செருப்பு தைக்கிறேன் என்பதற்காக. என்னைவிட நீ உயர்ந்தவன் என ஏற்பதற்கில்லை என்கிறார். எங்கு போனாலும் சாதி குழுக்கள் இருக்கின்றன. இதன் பொருள் சிலருக்கு மட்டும் உயர் சலுகைகள் என்பதாகக் கூடாது. ஒரே கடவுள்தான் நம் இருவரிடமும் உறைந் துள்ளார். பின் எதற்கு தனி உயர் சலுகை என கேட்கிறார். சுதந்திரம் என்பதுதான் வளர்ச்சியின் முதல் நிபந்தனை என திரும்ப திரும்ப அழுத்தமாக எடுத்துரைக்கிறார்.

புரோகித வர்க்கம் நாகரிகத்தின் வருகையாகவும், பொருட்களின் மீதான கருத்துக்களின் ஆதிக்கமாகவும் இருந்தது. மானுட வர்க்கம் அநீதி, சுயநலம், கபடத்திற்கு பலியானது. அதீத இயற்கையின் குரலுக்கு செவிமடுப்பது என்ற பெயரில் அறிவும் ஞானமும் புதியன காண்பதும் முடங்கின. ஆனால் இயற்கை எப்போதும் புத்தாக்கத்தை தான் வரவேற்கும். தானே பின்னிய சிலந்தி வலையில் அவ்வர்க்கம் மாட்டிக்கொண்டது. தாங்க முடியாத எண்ணற்ற சடங்குகள், ஆசாரங்கள், பழக்கங்கங்கள் என சமூகத்தை இரும்பு சட்டகத்தில் வைத்துவிட்டது. அவ நம்பிக்கையின் ஆழ் உறக்கமது. எனவே வலையை அறுத்தெறிய வேண்டும். அதன் அடித்தளத்தை ஆட வைக்கவேண்டும். பிராமணர்கள் மீது சமூகத்திற்கு நம்பிக்கை போய்விட்டது.  தனக்கான SEPULCHRE எனும் கல்லறையை தன் கரங்களாலேயே கட்டிக் கொண்டு விட்டது. தனக்கான சிதையை அதுவே மூட்டிக் கொள்வது சரியானதேயாகும்.

அரசனோ பாதி கடவுள் - பாதி மிருகமாக இருந்தான். அவனுக்கு தேவை என்றால் தனது கூரிய நகங்களால் அப்பாவிகளை பிளந்து இரத்தம் குடிக்கும் மிருகமாக இருந்தான். சமூகத்தேவைகள்தான் அரசனை பிறப்பித்தன. சிதறிக் கிடப்பவர்களை திரட்டி ராஜ்யம் அமைக்கும் பணி செய்யப்பட்டது. இன்ப வேட்கைகளில் மட்டும் அவன் ஆழ்ந்துவிடவில்லை. கலை, அறிவியல், சிற்பம், இசை, ஓவியம் என புத்தாக்கங்களும் நடந் தேறின. தங்களின் சாகசங்களை உலகிற்கு உணர்த்த வேண்டிய தேவை இருந்தது. ஒப்பில்லாத இறை அவதாரம், இறைஏற்பாடு என தங்களை அவர்கள் காட்டிக் கொள்ளவும் செய்தனர். அரச கட்டளைக்கு பயந்து பல திறமையாளர்கள் தங்கள் கைவண்ணங்களை ராஜ விசுவாசத்திற்காக செய்யவேண்டியிருந்தது. நகரங்கள் எழுந்தன. குடிகளுக்கு தந்தையெனப்பட்டார் அரசர். கேள்வி கேட்கமுடியாத பணிவு கோரப்பட்டது. எதிர்ப்பு ராஜதுரோகம், பாவம் என்று சொல்லப்பட்டது. தண்டனைக்கு உரியதானது. ஆனால் சமூகம் வலுவாக இருக்குமிடத்தில் Ôகோ’விற்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன. பல ராஜ்யங்கள் இன்று மியூசியத்தில் என்கிறார் விவேகானந்தர்.

வைஸ்யர்கள் அனைத்து தங்கமும் தங்களிடத்தில் என்றனர்.  நாங்களும் அதிகாரமிக்கவர்கள் என உரிமை கோரலாயினர். அதே நேரத்தில் பிராமணர். சத்திரியர் குறித்த அச்சமும் அவர்களிடம் இருந்தது. தங்கள் வர்த்தகத்தை நாடு கடந்து எடுத்து சென்றனர். கலாச்சாரம், அறிவுத்திறனும் கூடவே சென்றது.

ருஷ்யா சீனாவில் சூத்திரர் ஆட்சி எழும் என கணித்தவர் விவேகானந்தர் என அவரது சகோதரர் புபேந்திரநாத் தத்தா தனது பதிவாக செய்துள்ளார்.  சூத்திரர் எனும் உழைக்கும் மக்கள் எழுவர் - shudra Hood உருவாகும் என்றார். சோசலிசம், அனார்க்கிசம், நிகிலிசம் என பேசப்படுவதெல்லாம் சமூக புரட்சியின் வாகனகங்களாக அமையும் என்றார் (ருஷ்யா அனார்க் கிஸ்ட்களை சந்தித்து உரையாடியவர் விவேகானந்தர்) சூத்திரர் ஆட்சியில் அனைவருக்கும் கல்வி பரவும். ஆனால் தனித்த அறிவுஜீவிகள் குறைவர் என்றார் சுவாமி. முகலாயர் ஆட்சியில் குரான் செல்வாக்கு பெற்றது, சமஸ்கிருத செல்வாக்கு குறைந்தது (இந்துக்களில் அரசு வேலைகளில் பெர்ஷியன் தெரிந்தவர் வைக்கப்பட்ட சூழல் இருந்தது) புத்தர்களின் வீழ்ச்சிக்கும் முகலாயர் வருகைக்கும் இடையில் ராஜபுத்திரர் ஆட்சி எழுந் தாலும் அது வெற்றிபெறவில்லை என்கிறார். சங்கரர் ராமானுஜர் தத்துவங்கள் உறங்கின.  பின்னர் மாராட்டியர், சீக்கியர் விழிப்புணர்வு ஏற்பட்டது. அக்பர் போன்றவர் மக்களுக்கு நல்வாழ்வை தந்தனர் என சுவாமி குறிப்பிட்டு சொல்கிறார். அதே நேரத்தில் பலர் அவுரங்கசேப் போல இருந்தனர் என்ற குறிப்பையும் தருகிறார்.  யுதிஷ்ட்ரர், ராமர், அசோகர், அக்பர் ஆகியோரை  தெய்வநிகர் அரசர்கள் என பட்டியலிடுகிறார்.

எண்ணிக்கையில் அதிகமிருந்தும் சூத்திரர் ஆட்சி ஏன் அமையவில்லை என்ற விவாதத்திற்கு காரணம் சிலவற்றை பதிலாக தருகிறார். அவர்களுக்கு நண்பர்கள் இல்லை. எப்போது அடி விழும் எனக் கூட அறியாமல் உழைக்க வேண்டும். தாங்களும் மனிதர்கள்தான் என்கிற உணர்வு அவர்களிடமே வற்றிப்போன நிலை. உயர் வர்க்கத்தை அண்டித்தான் வாழ்க்கை என்ற நிலை. மேற்கின் கல்வி வந்தாலும் அவர்களிடம் போகாத நிலை- கற்கவோ, சொத்துரிமை பெறவோ வாய்ப் பில்லாத வாழ்க்கை சூழல் என பல்வேறு தடைகளை அவர் பட்டியலிடுகிறார். நம்பிக்கை இருக்கிறது அவர்கள் எழுவர். காணமால் அடிக்கப்பட்ட அந்த உழைக்கும் மனிதனை மீண்டும் நாம் கண்டறிவோம் என கடமை உணர்த்துகிறார் சுவாமி விவேகானந்தர்.

சுரண்டல் வடிவங்களை பற்றியும் பிராமண வர்க்கம், சத்த்ரிய வர்க்கம், வைஸ்ய வர்க்கம் எவ்வாறு சுரண்டியது என விவரிக்கிறார். எந்த வர்க்கத்தின் சக்தியும் அதிகமாக குவியும்போது சுரண்டல் தீவிரப்படும் என்கிறார். கடவுள் அனைத்து உயிர்களிலும் நீக்கமற நிறைந்துள்ளார். ஓருயிர் மூலம் அவர் பிற உயிரை காயப்படுத்துவதில்லை என்கிற கீதையின் (அத் 18 பாடல் 28)  பாடலை உயிர்களை சமநோக்கு கொண்டு பார்க்கவேண்டும் என்பதற்கு மேற்கோள் காட்டுகிறார். ஞானம், பலம், செல்வம் எதுவானாலும் அது பரவலாக  ஆக்கப்பட வேண்டும் என்பதை பலமுறை சொல்கிறார். என்னுடையது என முத்திரை குத்திக் கொள்ள வேண்டாம் என உபதேசிக்கிறார்.

சூத்திரர் ஆட்சியில் சுரண்டல் இருக்குமா என்பதையும் அவர் விவாதிப்பது அவரது பார்வை தீர்க்கத்தை உணர்த்துகிறது. பின்வரும் கருத்துக்கள் அப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. விவேகானந்தர் இதை சொல்லியிருக்க முடியாது. அவர் அப்போது உயிருடன் இல்லை. ருஷ்ய புரட்சியின் போது லெனின் அனைத்து அதிகாரங்களும் சோவியத்திற்கே என்றார். ஆனால் ஆகஸ்ட் 1918ல் சோவியத்துகள் அரசாங்கத்திற்கு கட்டுப்பட்டவை என உத்தரவு போட்டார்.  கட்சித் தலைவர்களின் புரட்சிகர குழு சோவியத்துக்களை நடத்தும் என்றனர். தொழிலாளர் சங்கங்கள் கட்சி, அரசாங்க தலைமைக்குள் கொணரப்பட்டன. அவர் களுக்கு அரசாங்கம்தான் வழிகாட்டுகிறது. உழைப்பவர் அதிகாரம் என்பதில் நாம் கவனம் கொள்ளவேண்டிய ஜனநாயக அம்சமாக இதை நாம் புரிந்து கொள்ளலாம்.

இந்திய சமூக மாற்றத்தில் மதத்திற்குரிய பங்கு குறித்து சுவாமி பேசுகிறார். இந்தியாவின் மொழிபோல மதம் இருக்கிறது என்கிறார். சார்வாகர், ஜைனர், புத்தர், சங்கரர், ராமானுஜர், கபீர், நானக், சைதன்யர், பிரம்ம சமாஜ், ஆர்ய சமாஜ் என அனைவருமே சமூக தேவை களுக்காகவே பயணப்பட்டனர். ராமானுஜர், கபீர் போன்றவர்கள் அடித்தட்டு மக்களுக்காக பேசினர். சங்கரர் சாதி ஏற்படுத்துவராக இருந்தார். உலகில் சாதியிருக்கலாம். ஆனால் இங்கு இருப்பது போல் எங்கும் இல்லை. கலாச்சார மேன்மையும், பரிசுத்தமும், தியாகமும் நிறைந்த சமுகம்தான் தேவை என்றார். வேதாந்தத்தில் சாதி ஏற்கப்படவில்லை என்கிறார். Trade

Guild வம்சவழி வளர்ச்சியில் சாதி உருவாகி, அரசியல் ஆட்சிகளால் கெட்டிப்பட்டுப்போனதாக விவேகானந்தர் தெரிவிக்கிறார். சாதிகள் இல்லாவிட்டால் நாம் எங்கே நின்றிருப்போம் - முகலாயர் அழித்திருப்பர் - அய்ரோப்பியர் ஆய்வேது எனவும் பேசுகிறார். அதே நேரத்தில் சாதி பிறப்பில் புனிதம் என்பது மாயைதான் என்பதை உறுதிபட தெரிவிக்கிறார்.

III

தனிநபர் - சமூக உறவுகள் குறித்து சுவாமி விவாதிக்கிறார். தனிநபரை வியஸ்தி (vyashti) என்கிறோம். கூட்டாக எனும்போது சமஸ்டி (samashti) என அறிகிறோம். வியஸ்திக்கு எந்த அளவு உரிமை, சமஸ்டிக்காக எந்த அளவிற்கு தியாகம் என்பது ஒவ்வொரு சமூகமும் சந்திக்கும் பிரச்சனைகள். நவீன மேற்கு சமூகம் இந்த அலைகளில் அல்லாடுகிறது. சமூக மேலாண்மைக்காக தனிநபர்களின் தியாகத்தை சோசலிசம் என பேசுகிறோம். மேற்கு நாடுகளில் Ôலிபர்ட்டி’ வளர்ச்சிக்கான முன் நிபந்தனையாக இருக்கிறது. அதே நேரத்தில் வலுத்தவர் வாழவும் இளைத்தவர் வீழவும் மேற்கு ஜனநாயகம் வழிவகுத்துள்ளது - அரசின் பெயரில் மக்கள் சுரண்டப் பட்டு சிலர் செல்வந்தர் ஆகின்றனர் என்கிற பார்வையை விவேகானந்தர் வைக்கிறார். இதை அவர்கள் ஜனநாயகம், அரசியல் அமைப்பு சட்ட ஆட்சி, நாடாளுமன்றம் என்றெல்லாம் அழைக்கின்றனர் என கேலி செய்கிறார். அனார்க்கிச தாக்கம் அவரிடம் இருந்திருக்கலாம்.

சோசலிசத்தில் நன்மை- தீமைகள் என அவர் விவாதிக்கிறார். (இப்பகுதிக்கு நூல்தொகை காட்டப்பட்டுள்ளது) அனைவருக்கும் கல்வி, சில வசதிகள் கிடைக்கும். ஆனால் மக்கள் எந்திரங்களாக்கப்பட்டு உள்ளனர். சுய அறிவுத்திறனற்று இரயில் என்ஜின்கள் போல் ஓடுகிறார்கள், திரும்புகிறார்கள். உயிர்த்துடிப்பு இல்லை. சுயவிருப்பம் சார்ந்த துள்ளல் இல்லை. புதுமை விழைவில்லை. No Stir of Inventive Genius என கடுமையான விமர்சனங்களையும் அவர் அடுக்குகிறார்.  எந்த நாட்டின் அனுபவம் கொண்டு அவர் இதை தெரிவிக்கிறார் என தெரியவில்லை.

சுவாமியை சோசலிஸ்ட் என அழைக்கலாமா என கேள்வி அவரிடம் எழுப்பப்படுகிறது. அதற்கு அவர் தயக்கமின்றி தனது பதிலை தருகிறார்.  I am a Socialist not because I think it is a perfect system, but half a loaf is better than no bread. அனைத்து மக்களுக்கும் பட்டினியை விட அரைத்துண்டு ரொட்டி கிடைப்பது மேலானது என்கிற சமூக முறைக்காக நான் சோசலிஸ்ட் ஆக இருக்கிறேன். அந்த முறை மிக நேர்த்தியானது என்பதற்காக அல்ல என தனது நிலையை அவர் தெளிவுபடுத்துகிறார். அவரின் வெளிப்படையான விமர்சனம், குறிப்பிட்ட கட்டத்தில் சரியான ஒன்றுடன் தன்னையும் அடையாளப்படுத்திக் கொள்ளும் நேர்மை கொண்டாடப்படவேண்டிய ஒன்றாக இருக்கிறது.

அவர் காணவிரும்பும் இலட்சிய அரசு என்பது குறித்த வினாவிற்கு அவரின் கற்பனை சித்திரத்தை அவர் வழங்குகிறார். மார்க்சிய வகைப்படுத்தலில் சமூக மாற்றத்தை அவர் விளக்கவில்லை. இந்திய வருண முறையில் அவர் எடுத்துரைக்கிறார். அதை வர்க்கம் என்ற சொல்லாக்கி அவர் விளக்குகிறார். நால்வகை வர்க்கத் தாரின் தீமைகள் ஏதுமற்ற அவர்களின் உயர் அடை யாளங்களை இணைத்துக்கொண்ட - புரோகித அடை யாளமான அறிவு - சத்ரிய போர்க்குண பலம் - வைஸ்யர் வணிக நியாயம் - சூத்திரர்களின் சமத்துவ உணர்வு என கட்டப்படும் அரசுதான் லட்சிய அரசாக அமையும் என அவர் பேசுகிறார். அரசின் தலைமைபாத்திர வர்க்கம் என்கிற மார்க்சிய சொல்லாடலை அவரிடம் நாம் எதிர் பார்க்க முடியாது.

அரசு பாதுகாப்பில் என எப்போதும் இயங்கும் சமுகத்தில் அரசில் வளர்ச்சி நின்றுபோய்விடும். வலிமையான மனிதனை குழந்தைபோல் பாவித்தால் என்ன ஆகும்? அந்நாடுகள் அழிந்து கூட போகும் என தெரிவித்த  அவரின் பார்வைதீர்க்கம் ஆச்சர்யமானது. தேர்தல், பொறுப்பேற்றல், விவாதம் அச்சமுகத்தில் தேவை என்கிறார். பரவலாக வேலையை பொறுப் பாக்கிக் கொள்ளும் பழக்கம் தேவை. உழைப்பில், சொத்தில் மட்டுமில்லாது நிர்வாகத்திலும் பங்கிருந்தால் தான் நல்ல வளர்ச்சி ஏற்படும் என்கிறார்.

நமது நாட்டில் நாம் செய்ய வேண்டிய கடமை யாது என்ற விவாதத்தை  தொடர்ந்து செய்தவர் விவேகானந்தர். நமது பெரும்பான்மை மக்களுக்கு கல்வி, உணவு, பராமரிப்பு உடனடி கடமை. வளம் நிறைந்த நாட்டில் பட்டினி என்ற முரணை ஏற்பதற் கில்லை. மக்களுக்கு கற்று கொடுத்தால், பொருளாதாரம் உட்பட பிரச்சனைகளை அவர்கள் தீர்த்துக்கொள்வர். நாடாளுமன்றத்தில் நல்ல சட்டங்கள் வருவதால் மட்டுமே நாடு சிறந்துவிடாது. ஆன்மிகத்தன்மையும் வேண்டும். இதன் பொருள் மூடநம்பிக்கைகளை சுமக்க வேண்டும் என்பதல்ல என நேர்படுத்துகிறார். அவரின் பரிந்துரை வேதாந்தம். பிராமணர் அல்லாதவர்கள் சம்ஸ்கிருதத்தை கைவிடக்கூடாது என வேண்டுகோள் விடுத்தவர் அவர். புரோகித வர்க்கத்தின் ஏகபோகத்தி லிருந்து அதை மீட்க அவர் விழைந்திருக்கலாம்.

இளைஞர்கள் ஆற்றல்மீது மிகுந்த நம்பிக்கை வைத்து அவர்களை செயலுக்கு உந்தி தள்ளியவர் விவேகானந்தர். புரட்சியின் சக்தி என அவர்களை கருதினார். அவர்களுக்கான சமூக கடமையை வலியுறுத்தி நிறைவேற்ற அறைகூவல் விடுக்கிறார். நம்பிக்கையற்ற நிலையில் உள்ள நம் மக்கள் தெய்வத்திற்கு நிகரானவர்கள். பணம் உள்ளவர்களை நிமிர்ந்து பார்த்திருக்க வேண்டாம். அனைத்து வேலை களையும் செய்துவரும் ஏழைகளை நிமிர செய்வீர். அவர்களுக்கு தீர்வை கொணருங்கள். அவர்களுக்கு விஞ்ஞானம், இலக்கியம் கற்பியுங்கள். அவர்கள் இல்லாமல் பணக்காரர்களுக்கு வாழ்வேது? அவர்கள் எழ வேண்டும். எழுவார்கள். உங்களுக்கு நன்றி பாராட்டு வார்கள். இதில் காலதாமதம் வேண்டாம். இளைஞர் களே! இதுதான் உங்கள் mission என செயலுக்கு அழைக்கிறார்.

தேசபக்தி எனும் நம்பிக்கை குறித்து பேசுகிறார். இதயத்தின் அடி ஆழத்திலிருந்து அந்த உணர்வு பெருக வேண்டும். அன்பு திறக்காத கதவு என ஏதுமில்லை. அவர் மேற்கோள் ஒன்றை காட்டுகிறார். "துறவிகள் தூற்றட்டும் அல்லது போற்றட்டும். அதிர்ஷ்ட தேவதை வரட்டும் - வராமல் போகட்டும். சாவு இன்று வந்தாலும் சரி - நூறு ஆண்டுகள் தள்ளிப் போனாலும் சரி. நான் ஒருபோதும் உண்மையிலிருந்து அங்குலம் கூட விலகமாட்டேன் என்ற உறுதிப்பாடு கொண்ட புரட்சிகர மனிதன் எழுந்து வரட்டும்” பார்திஹரி என்கிற மன்னனின் உண்மைக்காக நிற்கும் வைராக்கிய வரிகள் அவை.