சமீபத்தில் (ஜனவரி 23 ஆம் தேதி) முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இந்திய தேர்தல் ஆணையத்தின் முதல் ஆணையர் சுகுமார்சென் என்பவரின் நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவாற்றினார். அவர் எப்பொழுதுமே இப்படிப்பட்ட சொற்பொழிவுகளை திறம்பட ஆய்வு அறிக்கைகள் போல் தயாரித்து அதில் தன் கருத்துக்களை ஆணித்தரமாக ஒரு வல்லுனராக எடுத்து வைக்கும் திறன் படைத்தவர். அந்த வகையில் இந்த அறக்கட்டளை நினைவுச் சொற்பொழிவாற்றும்போது ஒரு கருத்தை முன் வைத்துள்ளார். அந்தக் கருத்தை ஊடகங்கள் அனைத்தும் விவாதப் பொருளாக்கி செய்திகள் வெளியிட்டன. “இன்று பொதுவெளியில் பொதுமக்களும், மாணவர்களும், இளைஞர்களும் அமைதியான வழியில் போராடுவது என்பது நம் மக்களாட்சியில் வரவேற்கத்தக்கது. இந்தப் போராட்டங்கள் நம் மக்களாட்சியை வலுப்படுத்தும் என்பதுதான் அவர் கூறிய கருத்து. இந்தக் கருத்து எந்தச் சூழலில் முக்கியத்துவம் பெறுகிறது என்றால், “மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் தங்கள் கல்வி பயிலச் சென்றார்களே தவிர அரசியல் செய்வதற்கு அல்ல, எனவே, அவர்கள் பொதுப்பிரச்சினைகளுக்கு அரசியல் கட்சிகளுடன் இணைந்து போராடக்கூடாது” என்று ஒரு விளக்கத்தை மற்றொரு அரசியல் பிரிவு கூறும் நிலையில்தான், பிரணாப் முகர்ஜியின் கருத்து பொது வெளியில் விவாதத்திற்கான இடத்தைப் பிடித்துள்ளது.

students protest 343உலக வரலாறு நமக்கு உணர்த்திய பாடம் மக்களாட்சி என்ற முறை நீண்ட நெடிய போராட்டங்களுக்குப்பின் வந்தது என்பதைத்தான். மக்களாட்சி சிதிலமடைகின்றபோதெல்லாம் போராட்டங்கள் மூலம்தான் மக்களாட்சியை உலகத்தில் சரி செய்திருக்கின்றனர். மக்கள் எப்படி ஒரு சமூகத்தை ஆதிக்கப்பிடியிலிருந்து விடுவிக்கப் போராடுகின்றார்களோ, அதே நிலையில் சமூகத்தை மக்களாட்சிப்படுத்துவதற்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை மக்களாட்சிக் கட்டமைப்புக்குள்ளும், மக்களாட்சி விழுமியங்களுக்குள்ளும் செயல்பட வைக்க மக்கள் போராடுவது தேவையாக இருக்கின்றது. அமைதியான வழியில் நடக்கின்ற போராட்டங்கள் அனைத்தும் மக்களாட்சிக்கான பாதுகாப்புச் செயல்பாடுகளே. இப்படிப்பட்ட போராட்டங்கள் மக்களுக்கு தொடர்ந்து ஜனநாயகக் கல்வியையும் வழங்கிக் கொண்டேயிருக்கின்றன. மக்களாட்சியில் வாழ விரும்புவோர் பொது நிகழ்வுகள், அது போராட்டமாக இருந்தாலும், ஆர்ப்பாட்டமாக இருந்தாலும், அரசியல் மாநாடாக இருந்தாலும், தேர்தலாக இருந்தாலும், அதில் பங்கேற்பதன் மூலம்தான் தனக்குத் தேவையான மக்களாட்சிக் கல்வியை கற்றுக்கொள்கின்றனர். எனவே போராட்டங்கள் என்பதும் ஒருவித மக்களாட்சி நிகழ்வு என்பது பலருக்குப் புரிவதில்லை. பலர் புரிந்தாலும் அதை அரசாங்கத்திற்கு எதிராக நடக்கும் கலவரம் அல்லது கலகங்கள்போல் சித்தரித்து அமைதிக்கும் வளர்ச்சிக்கும் எதிரான நடவடிக்கையாக விமர்சனங்களை வைக்கின்றனர்.

இன்று இந்தியாவில் நடைபெறும் போராட்டங்கள் பெரும்பாலானவை மாணவர்கள் நடத்துவது, ஆதிவாசிகள் நடத்துவது, இளைஞர்கள் நடத்துவது, விவசாயிகள் நடத்துவது. இவர்களுக்குப் பின்தான் அரசியல் கட்சிகள் செயல்படுகின்றன. நம் அரசியல் கட்சிகள் பின்னணியில் நின்று செயல்படுவது என்பது மக்களாட்சியில் வரவேற்கத் தகுந்த ஒன்றல்ல. அடிப்படையில் மக்கள் பிரச்சினைகளுக்குப் போராட வேண்டிய முக்கியப் பொறுப்பு ஒரு ஜனநாயக நாட்டில் அரசியல் கட்சிகளுக்குத்தான். அப்படி அரசியல் கட்சிகள் மக்கள் பிரச்சினைகளுக்காக நடத்தும் போராட்டங்களுக்கு ஆதரவாக செயல்படுபவர்களாகத்தான் மக்கள் இருக்க வேண்டும். மக்கள் போராட்டங்களை அரசியல் கட்சிகள் தூக்கிப் பிடித்து நடத்துவதில்தான் வெற்றி இருக்கிறது. ஆனால் இன்று நிலைமை அப்படி இல்லை. மக்கள் போராடுகின்றனர். அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்து விட்டு மக்கள் போராட்டங்களுக்கு ஆதரவு தந்து விட்டு நகர்ந்து விடுகின்றனர். ஆனால் அரசியல் நிகழ்வுகளை நடத்திக்கொண்டு இருக்கின்றன அரசியல் கட்சிகள். இதனால் மக்கள் போராட்டங்கள் தோல்வியைச் சந்திக்கும் சூழலில் உள்ளன. மக்களாட்சியில் இது ஒரு எதிர்மறை நிகழ்வு.

ஆனால் இன்று மையத்திலும் மாநிலங்களிலும் எதிர்கட்சிகளாக விளங்கும் பெரிய கட்சிகள் போராட்டங்களை முன்னெடுக்காமல், ஆர்ப்பாட்டங்களாக நடத்தி அரசியல் நிகழ்வாக முடித்துக்கொள்கின்றன. அத்துடன் பெரும்பலம் கொண்ட அரசியல் கட்சிகள் மக்கள் போராட்டங்களில் கலந்து அந்தப் போராட்டங்களை ஆர்ப்பாட்டங்களாக மாற்றியமைத்து விடுகின்றனவே தவிர அந்தப் போராட்டங்களை முன்னெடுக்க இயலாமல் தடைகளை உருவாக்கி விடுகின்றன என்பதுதான் இன்றைய சோக வரலாறு. கடந்த முப்பதாண்டு காலமாக சந்தைச் செயல்பாட்டால் மறக்கடிக்கப்பட்ட போராட்டங்கள் இன்று சந்தையின் தாக்கத்தால் தன்னெழுச்சியாக பாதிக்கப்பட்ட மக்கள் வீதிக்கு வந்து போராட ஆரம்பிக்கின்றனர். எனவேதான் இந்தப் போராட்டங்கள் என்பது வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை என்று வர்ணித்து விளக்குகின்றனர் சந்தைக்குப்பின் நிற்கும் கருத்தாளர்கள்.

உலகில் கோட்பாட்டு ரீதியாக நிரூபிக்கப்பட்ட உண்மை என்னவென்றால் மக்களாட்சி என்பதுதான் வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் உறுதுணையாக விளங்கும் காரணி. மக்களாட்சிதான் ஏழைகளுக்கு ஏழ்மை குறைப்பதற்காகவும் முன்னேற்றம் அடைவதற்காகவும் செயல்படும் காரணி என்பது உலகத்தில் ஆய்வுகள் மூலம் நிரூபணமான உண்மை. மக்களாட்சி அமைப்புக்கள் இல்லாததும், மக்களாட்சி அமைப்புக்கள் இருந்தும் அவை செயல்படாமல் இருப்பதும்தான் தீவிரவாதம் வளர்வதற்கும் பரவுவதற்கும் மிக முக்கியமான காரணியாக விளங்குகின்றன என்பதும் உலகில் கண்டறியப்பட்ட உண்மை. மக்களாட்சி மலர்வதற்கும் மற்றும் நீடித்து செயல்படுவதற்கும் பல அடிப்படையான காரணிகள் ஒரு சமுதாயத்தில் இருந்திட வேண்டும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. பொது அமைதி, மக்களுக்கு வேலைவாய்ப்பு, பொருளாதார ஸ்திரத்தன்மை, ஆட்சியின் ஸ்திரத்தன்மை போன்ற காரணிகள்தான் மக்களாட்சி ஒரு சமுதாயத்தில் வேரூன்ற காரணமானவை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மக்களாட்சியில் மேலோங்கி நிற்கும் நாடுகள் தரும் செய்தி என்னவென்றால், ஏழ்மையை அகற்றாதவரையில் மக்களாட்சி முறையுடன் செயல்பட வாய்ப்புக்கள் குறைவு என்பதைத்தான்.

பொருளாதார வளர்ச்சி மேலோங்க மேலோங்க மக்களாட்சியை ஆழப்படுத்தும் அகலப்படுத்தும் செயல்பாடுகள் நடந்தேறிடும் என்பதையும் ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. ஆனால் இன்னொரு நிலையில் மக்களாட்சிக்கு இடையூறு பொருளாதாரம் கொண்டு வந்து சேர்க்கும். அதாவது வளர்ந்த பொருளாதாரம் பிரிக்கப்படாமல் குவிக்கப்பட்டால், ஏற்றத்தாழ்வுகள் எல்லையில்லா அளவு மேலோங்குமேயானால், அந்த நாடுகளில் மக்களாட்சி அதன் விழுமியங்களை இழக்க ஆரம்பித்துவிடும். இதைச் சரிசெய்ய போராட்டம் என்பதும் உதவியாக இருக்கும். ஆனால் அது போராட்டமாகவே இருக்க வேண்டும். அதற்கு மக்கள் சிறு சிறு தியாகங்களைச் செய்ய வேண்டும். உலகெங்கும் வளரும் ஜனநாயகத்துக்கு எதிர்ப்பு அலையை உருவாக்குவது யாரென்றால் சந்தைக்குத் தரகு வேலை பார்க்கும் அரசியல் தலைவர்கள்தான் என்பதும் நிரூபணம் ஆகியுள்ளது.

மக்களாட்சியைப் பாதுகாக்க போராட வாருங்கள் என்று மக்களை அழைக்கின்றனர் அரசியல் கட்சிகள். காங்கிரஸ் கட்சி அரசியல்சாசனச் சட்டத்தைப் பாதுகாக்க வாருங்கள் என்று அழைக்கிறது. மாநிலக் கட்சிகள் உங்கள் குடியுரிமையைப் பாதுகாத்திட போராட வாருங்கள் என்று அழைக்கின்றன. அனைவரும் மக்களை போராட அழைக்கின்றனர். உலகத்திலேயே மிகப்பெரிய அரசியல் கட்சி என்று கூறும் பாரதிய ஜனதா கட்சி நாட்டைப் பாதுகாக்க அரசுடன் போராட வாருங்கள் என்று அழைக்கின்றது. ஆக, மக்கள் போராட்டத்திற்குத் தயாராகிப் போராட ஆரம்பித்து விட்டார்கள். இந்தப் போராட்டங்கள் மூலம் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படும்; மக்களிடம் செய்திகள் போய்ச்சேரும். உண்மையின் அடிப்படையில் மக்கள் தெளிவு பெறுவார்கள். அந்தத் தெளிவினைப் பெற்று மக்கள் செயல்பட இன்று இந்தியாவில் மாற்றுத் தலைமையும், மாற்று முன்னேற்றப் பொருளாதாரப் பாதையும், மாற்று அரசியல் திட்டங்களும் கொண்ட புது அமைப்புக்கள் உருவாக வேண்டும். அதுதான் இன்றைய தேவையாகும்.

போராட்டங்களைத் தடுப்பவர்கள் மக்களாட்சி பற்றிய புரிதல் குறைவாக இருப்பவர்கள். அது மட்டுமல்ல தேர்தல்மட்டும்தான் மக்களாட்சி என்று எண்ணிக்கொண்டிருப்பவர்கள், தேர்தலைத் தாண்டி நடைபெறும் மக்களாட்சிச் செயல்பாடுகளை நாட்டு நலனுக்கு எதிரானது, மேம்பாட்டுக்கு எதிரானது என்று சிந்திப்பார்கள். எனவே மக்களாட்சியைப் பற்றிய ஒரு பொதுப்புரிதலை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி விட்டால் போராட்டங்கள் என்பது மக்களாட்சியில் கற்றுத் தரும் ஒரு பாடமாகக் கருதிவிடுவார்கள். அடுத்து அரசியல்சாசனத்தை முறையாக மக்களிடம் எடுத்துச் சென்றுவிட்டால், பொதுமக்கள் என்பவர்கள் நல்ல குடிமக்களாக மாறிவிடுவார்கள். நல்ல குடிமக்களாக மக்கள் மாறிவிட்டால் அரசோ அரசியல் கட்சிகளோ மக்களை ஏமாற்ற முடியாது.

இன்றைய நிலையில் நம் அரசியல் கட்சிகள் மக்கள் மத்தியில் நன் மதிப்பை இழந்த நிலையில் செயல்பட்டுக் கொண்டுள்ளன. ஊழலில்லாமல் அரசியல் செய்ய முடியாது என்ற சூழலுக்கு கட்சிகளைக் கொண்டு வந்து விட்டனர். பணமற்ற கட்சிகள் திகைத்து நிற்கின்றன. வேறு வழியில்லாமல் தங்களுக்கு ஒரு மக்களாட்சி அரசு வேண்டும் என்ற காரணத்தால் மக்கள் வாக்களிக்கின்றார்களே தவிர, இப்படிப்பட்ட கட்சிகள் வேண்டும் என்று வாக்களிப்பதில்லை. அரசியல் கட்சிகளால் இதற்குமேல் வளர முடியவில்லை. மக்களுக்குப் புதுத்திசையைக் காட்ட முடியாமல் பணமூட்டையை வைத்து அரசியல் நடத்தி அலுத்து நிற்கின்றன. இன்றைய சூழலில் அரசாங்கம் என்ற அமைப்பு மக்களின் தேவைகளையும், அபிலாஷைகளையும் தீர்க்க முடியாமல், அதன் தோல்வியை ஒப்புக்கொண்டு மாற்றத்திற்காகக் காத்து நிற்கிறது. பொருளாதார வளர்ச்சியை முன்னிருத்திய மக்கள் செயல்பாடு மற்றும் அரசின் செயல்பாடு என்பது மக்களை பொருள்களின் மோகம் கொள்ள வைத்து பிரச்சினைகளில் சிக்க வைத்துவிட்டனவேயன்றி, சமூகத்தில் நிலைத்த மேம்பாட்டைக் கொண்டு வர இயலவில்லை. எனவேதான் கட்சி அரசியலைத் தாண்டி எதாவது புதிய முறை அரசியல் உள்ளதா என்று யோசிக்க வேண்டியிருக்கிறது. பொருளாதார வளர்ச்சி என்பதைத் தாண்டி வேறு வளர்ச்சி முறை உள்ளதா எனக் கேட்க வேண்டி உள்ளது.

இந்தச் சந்தைச் செயல்பாட்டில் உள்ள வளர்ச்சி, நுகர்வு என்பதைத் தாண்டி மக்களுக்கு ஏதாவது புதுத்திசையைக் காட்ட முடியாதா என்பதுதான் இன்றைய கேள்வி. அரசியல் கட்சிகளைத் தவிர்த்து புதிய அரசியலை உருவாக்க முடியாதா என்பதுதான் இன்று நம்மிடம் எழும் கேள்வி.

- க.பழனித்துரை

Pin It