labour law

இந்த உலகில் வெகுமக்களிடையேயும் முக்கியமான அரசியல் பாரம்பரியத்திலும் கொள்கையற்ற அரசியல் நிலவுகிறது. இதில் ஒழுக்கம் மற்றும் ஒழுக்கமின்மைப் பற்றிய கேள்வி பொருத்தமற்றதாக ஆகிக் கொண்டிருக்கிறது. தகுதியற்ற அரசாங்கங்கள், நிராதரவான அரசுகள், தொலைநோக்கற்றத் தலைமை, திசைவழியற்ற அரசியல், பலவீனமான நீதித் துறை, கீழ்ப்படிந்து போகிற ஊடக நிறுவனங்கள் ஆகியவை ஒழுக்கமற்ற, குறுகிய மனப்பான்மையுள்ள அரசியலின் நிகர விளைவுகளாக இருக்கின்றன.

ஜனநாயக அமைப்புக்குள் அரசியல் அமைப்புமுறை குறித்த நியாயமான விமர்சனம் புரட்சிகர அரசியலுக்கு எந்தவிதமான அரசியல் பயனையும் அளிப்பதில்லை. கொள்கை உருவாக்கங்கள் கருத்தில் கொள்ளப்படாமல் அரசியல் அமைப்புமுறை, மக்களைச் சுரண்டும் வகையில் வடிவமைக்கப்படுகிறது; அது முதலாளிகளின் பக்கம் நிற்கிறது. ஊழல் வழிகளில் பணம்படைத்த வர்க்கத்தின் நலன்களை உயர்த்திப் பிடிக்கிறது.

அரசியல் மற்றும் ஒழுக்கம் ஆகிய இரண்டுக்கும் இடையில் எந்தத் தொடர்பும் இல்லாமல் இருப்பது இங்கு ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்றாக இருக்கிறது. அரசியலில் கடின உழைப்பு, நேர்மை, தெளிந்த அறிவுநிலை, பாலியல் நெறிமுறை, சிக்கனம், அகிம்சை, உண்மை ஆகியவை அரசியலில் காலாவதியாகிப் போனவையாகக் கருதப்படுகின்றன.

காந்தி, அம்பேத்கர், மார்க்ஸ், மண்டேலா, மார்டின் லூதர் கிங் ஆகியோரின் ஒற்றுமை, பகிர்ந்துகொள்ளுதல் ஆகிய விழுமியங்கள் அடிப்படையிலான ஒழுக்கப் பண்புகள் அரசியலில் தேவையற்ற கடப்பாடுகளாகக் கருதப்படுகின்றன.

அரசியலில் ஒழுக்க நெருக்கடி ஆழமாகிக் கொண்டிருக்கிறது, இது தொடக்ககால தொழில்புரட்சியின் போது சேர்த்துக் கொள்ளப்பட்ட பயன்முறை மதிப்பீடுகளின் ஒரு விரிவாக்கமாக இருக்கிறது. அந்த மதிப்பீடுகள் 20 மற்றும் 21 ஆம் நூற்றாண்டில் மேலாண்மைவாத, சந்தைப் புரட்சியின் போது ஆதரித்து வளர்க்கப்பட்டவையாகும்.

இந்தத் தகவல் தொழில்நுட்பக் காலத்தில் கற்பனையான இணையவழி சமூகப் பொருளாதார, கலாச்சார வாழ்க்கையின் வளர்ச்சியால் அரசியலில் ஒழுக்கக்கேடான கலாச்சாரம் முடுக்கிவிடப்படுகிறது.

ஜனநாயகம் மற்றும் தனிநபர் சுதந்திரத்தின் பின்னால் மறைந்துகொண்டிருக்கும் கொடூரமான முதலாளித்துவத்தின் காலாவதியாகிப் போன, ஒழுக்கமற்ற சுயநல அரசியலால் மக்கள் படும் அவலத்தை அது உறுதிப்படுத்துகிறது. அதன் ஒழுக்கமற்ற அரசியல் வெளிக் காரணமாக, அது மக்களையும் சமுதாயத்தையும் அமைதி, முன்னேற்றம், மற்றும் வளமையை நோக்கி வழிநடத்திச் செல்லவில்லை.

குறுகிய மனப்பான்மையுள்ளக் கருத்துக்கள் மற்றும் நடைமுறையின் அடிப்படையில் அமைந்துள்ள ஒழுக்கமற்ற அரசியல் சமுதாயத்தையும் மக்களையும் ஒழுக்கப் பிரச்சனைகளில் பிளவுபடுத்துகிறது. 2012 இல், நேர்மையான மனம்: நல்ல மனிதர்கள் ஏன் மதத்தாலும் அரசியலாலும் பிளவுபடுத்தப்படுகிறார்கள் என்ற தனது நூலை உளவியலாளர் ஜோனாதன் ஹைத் வெளியிட்டார்.

அதில் அக்கறை, நியாயமான விசுவாசம், அதிகாரம், புனிதத்தன்மை, சுதந்திரம் ஆகிய இலட்சியங்கள் அடிப்படையில் அமைந்த அரசியலின் ஒழுக்க அடித்தளங்களை அவர் சுருக்கமாக எடுத்துக்கூறியுள்ளார். ஜோனாதன் ஹைத் கூற்றுப்படி, இந்த ஒழுக்கப் பண்புகள் மனிதர்களுக்கு உள்ளுணர்வாகவும் பிரிக்கமுடியாத பகுதியாகவும் இருப்பவையாகும்.

ஆனால் உண்மை நிலையில், இந்த ஒழுக்கப் பண்புகளை மனிதர்களிடத்தில் வளர்க்க உதவுகிற கூட்டான பொருளியல் அடித்தளங்கள் இருக்கின்றன. இந்தப் பண்புகள் தொழிலாளர்களின் வேலையிடங்களிலும் சக தொழிலாளர்களுடனான அவர்களுடைய உரையாடல்களிலும் தொழிலாளர் வர்க்கங்களின் அன்றாட அனுபவங்களால் ஏற்படக் கூடியவையாகும். அவை உழைக்கும் மக்களிடையே இந்த ஒழுக்கப் பண்புகளை உறுதிப்படுத்துகின்றன.

தொழிலாளர் வர்க்க மக்கள்திரள் முன்பு உள்ள அரசியல் மாற்றுக்கள் எவை? அரசியலில் ஒழுக்கத்தை உறுதிப்படுத்துவது எப்படி? இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் சிக்கலானவை, ஆனால் இவற்றுக்குப் பதிலளிப்பது ஒன்றும் கடினமல்ல.

வர்க்கத்தில் வேர்கொண்டுள்ள, வர்க்கத்துக்கு அர்ப்பணித்துக் கொண்ட, தொழிலாளர் வர்க்கங்கள் தலைமையிலான மக்கள்திரள் அரசியலை மீண்டும் கொண்டு வருவதற்கான நேரம் இதுவாகும். வர்க்க அரசியல் பற்றிய கருத்தாக்கம் அமைப்பாக்கப்பட்ட தொழில்துறை அரங்கில் மட்டுமே இதற்கு மேலும் அடைபட்டு இருக்க முடியாது.

தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களை அவர்களுடைய வேலையிடங்களில் அமைப்பாக்குவது வழக்கம். தொழிற்சங்கங்களும் தொழிலாளர் வர்க்கத்தினரும் வேலையிடங்களில் கூலிக்காகப் பேரம் பேசும் இயக்கங்களிலிருந்து காலனிய எதிர்ப்பு, முதலாளித்துவ எதிர்ப்புப் போராட்டங்கள் வரை மிகப்பெரிய பங்கினை வகித்துள்ளனர்.

தொழிலாளர் வர்க்கங்கள் சமுதாயத்தை ஜனநாயகமயமாக்குவதிலும் தனிநபர் சுதந்திரத்தையும் குடியுரிமை உரிமைகளை விரிவாக்குவதிலும் முக்கியப் பாத்திரத்தை வகித்துள்ளன. அரசியலில் தொழிலாளர் வர்க்க ஒழுக்கப்பண்பு, புரட்சிகர அரசியல் மற்றும் முதன்மைப் போக்கு அரசியல் ஆகிய இரண்டிலும் ஒழுக்கத்தை வடிவமைத்தது. வேலையும் வேலையிடங்களும் தாம் வழக்கமாக தொழிலாளர் வர்க்க உணர்வுநிலையின் மூலாதாரமாக இருந்துள்ளது. அந்த உணர்வு நிலையே தொழிலாளர் வர்க்க ஒழுக்கப்பண்பின் அடிப்படையில் அரசியல் இயக்கங்கள் கொள்கைகளை வடிவமைக்க உதவியது.

தகவல் தொழில்நுட்பம் சார்ந்தப் பொருளாதார அமைப்பு முறையின் காலத்தில், வேலை மற்றும் வேலையிடம் வேறு வேறாக ஆகியிருக்கிறது. தொழிலாளர் வர்க்க மக்களும் அவர்களுடைய வேலையிடங்களும் ஆடைத் தயாரிப்புத் தொழிலாளர்களின் படுக்கை அறைகளிலிருந்து தகவல் தொழில்நுட்பத் தொழிலாளர்களின் குளியலறைகள் வரை விரவியிருக்கின்றன.

தொழிலாளர்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு அடி எடுத்து வைப்பதிலும் வேலை நுழைந்து விட்டுள்ளது, மேலும் வேலையையும் வேலைக் கலாச்சாரத்தையும் தனிப்பட்டதாக ஆக்கியுள்ளது. குடிமக்களாக, வேலையிடத்திலிருந்தும் சக தொழிலாளர்களிடமிருந்தும் தொழிலாளர்கள் அந்நியமாக்கப்படுகிறார்கள், அது உணர்வுநிலையிலிருந்து அரசியலை அகற்றவும் அரசியல் எதிர்ப்பு உணர்வு வளர்வதற்கும் உதவியது.

முதலாளித்துவமும் அதன் அரசியல் முறைகளும், தொழிலாளர்களைக் குடிமக்களாகவோ, உரிமைகளும் சுதந்திரமும் கொண்ட மனிதர்களாகவோ அல்லாமல், தனிநபர்களாக ஒழுங்குபடுத்தப்பட்ட பொருட்களாக நடத்துகின்றன. வேலையிலும் வேலையிடத்திலும் இத்தகைய பொருளாதார, சமூக, அரசியல் மற்றும் கலாச்சார மாற்றம், தொழில்நுட்ப அதிகார அரசியலைத் தொழில்முறையானதாக வளர்வதற்கு இட்டுச் சென்றுள்ளது.

தமது சொந்த நலன்களை உயர்த்திப் பிடிப்பதற்காக ஆளும் வர்க்கங்கள் மற்றும் ஆட்சியிலில்லாத வர்க்கங்களால் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இது சுயநலமிக்க சொந்த நலன்களின் அடிப்படையில் அமைந்த ஒழுக்கமற்ற போட்டிக் கலாச்சாரத்தையும் அரசியலையும் பரப்புகிறது. எதேச்சாதிகார அதிகாரப் பித்து கொண்டவர்கள் தமது முதலாளித்துவ எஜமானர்களுக்கு ஆதரவாக அரசையும் அரசாங்கத்தையும் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

மேலும், உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோரிடமிருந்து சந்தையைப் பிரிப்பது சந்தைவழி ஜனநாயகத்தின் வளர்ச்சிக்கு உதவியுள்ளது, அது குடிமை உரிமைகளைக் குறைத்து, குடிமக்களை சுயநலம் கொண்ட சுயதிருப்தி கொண்ட வாடிக்கையாளர்களாக மட்டுமே மாற்றுவதற்கு முயற்சி செய்துக் கொண்டிருக்கிறது.

அரசியல், அரசு, அரசாங்கம் ஆகியவற்றின் கூட்டு அடித்தளங்களை, சுய-நலன்களை அடிப்படையாகக் கொண்ட வாடிக்கையாளர் சார்பு அரசியல் கலைத்து விட்டுள்ளது. முதலாளித்துவ வர்க்கங்கள் ஆளுகிற, ஒழுக்கமற்ற அரசியலைப் பரப்புகிற, ஒரு ஜனநாயக அரசு மற்றும் அரசாங்கத்தில் குடிமக்கள் பாரபட்சமற்ற வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள்.

அரசியலில் ஒழுக்க நெருக்கடி அரசின், அரசாங்கத்தின், மதச் சார்பின்மையின், பன்மைக் கலாச்சாரத்தின், சோசலிசத்தின், ஜனநாயகத்தின் நெருக்கடியாக உருவாக்கப்படுகிறது. அத்தகையப் பகுப்பாய்வு முதலாளித்துவத்தின் தோல்விகளையும் பலவீனங்களையும் அதன் ஒழுக்கமற்ற அரசியல் திட்டங்களையும் மறைக்கிறது.

அது முதலாளித்துவம் தான் ஒரே மாற்று என்றும் எதேச்சாதிகார முதலாளித்துவக் கோட்பாட்டிற்கு வேறு எந்த மாற்றும் இல்லை என்றும் பரப்புகிறது. அரசியலில் ஒழுக்க நெருக்கடியானது தொழிலாளர் வர்க்கத் தேவைகள் மற்றும் விருப்பங்கள் ஆகியவற்றின் மீது மிகப் பெரிய தீங்கிழைக்கும் தாக்கங்களை ஏற்படுத்துகிறது.

முதலாளித்துவ அரசியலில் ஒழுக்க நெருக்கடி என்பது, தொழிலாளர் வர்க்கங்கள் அவற்றின் பல்வேறு பிரிவுகளையும் அமைப்பாக்கப்பட்ட மற்றும் அமைப்பாக்கப்படாத வடிவங்களில் திரட்டுவதன் மூலம் அவற்றின் அரசியல் திட்டத்திற்குப் புத்துயிரூட்டுவதற்கான ஒரு வாய்ப்பாகும்.

ஜனநாயகத்தையும் தனிநபர் சுதந்திரத்தையும் பாதுகாப்பதற்குத் தொழிலாளர் வர்க்க ஒழுக்கப் பண்பின் அடிப்படையில் அமைந்த தொழிலாளர் வர்க்கங்களின் கூட்டு அரசியல் இயக்கங்கள் மட்டுமே புரட்சிகர அரசியலுக்குப் புத்துயிரூட்ட முடியும்.

தொழிலாளர் வர்க்க அனுபவங்களின் உலகுதழுவிய இயல்பு, சமத்துவ அடிப்படையில் பகிர்ந்துகொள்ளும் உலகுதழுவிய அரசியல் ஒழுக்கப்பண்பை உருவாக்குகிறது, ஒருமைப்பாடு, ஒத்துழைப்பு மற்றும் சகோதரத்துவ அரசியலை உயர்த்திப் பிடிக்கிறது.

புதிய ஏகாதிபத்தியப் போர்கள் மற்றும் புதிய காலனியப் பொருளாதார முறையின் ஒழுக்கமற்ற அரசியலை தொழிலாளர் வர்க்க சர்வதேசியத்தின் மூலம் முறியடிக்க முடியும். அதுவே வளமையைப் பகிர்ந்து கொள்ளும் அடிப்படையிலான உலக சமாதானத்தை நிறுவுவதற்கானதாக இருக்கிறது.

தொழிலாளர் வர்க்க அரசியலையும் தொழிலாளர் வர்க்க ஒழுக்கப் பண்பையும் புதுப்பிப்பதன் மூலம், பிற்போக்கு மதவாத சக்திகள், பழமைவாத, வலதுசாரி அரசியல், குறுகிய மனப்பான்மை கொண்ட சந்தைப் பொருளாதாரம் ஆகியவற்றின் ஒழுக்கமற்ற கூட்டணியை முறியடிக்க முடியும்.

தொழிலாளர் வர்க்க ஒழுக்கப் பண்பை வலியுறுத்துவது மதச்சார்பற்ற அறிவியல்பூர்வப் பண்புநலத்துடன் உருவாகி வளர வேண்டும், அதேநேரத்தில் அந்தப் பண்பு மக்கள், விலங்குகள், சுற்றுச்சூழல் ஆகியவற்றின் அன்றாட வாழ்க்கைப் பிரச்சனைகளைத் தீர்ப்பதை நோக்கிச் செலுத்தப்பட வேண்டும்.

தொழிலாளர் வர்க்க ஒழுக்கப்பண்பு, சமுதாயத்தில் அரசியல், சமூக, கலாச்சார மற்றும் பொருளாதார மாற்றத்திற்கான ஒரு கூட்டுப் போராட்டத்தை மக்கள் தாங்களாகவே ஒருங்கிணைப்பதற்குத் தூண்டுதல் அளிக்கக் கூடியதாக இருக்கும். தொழிலாளர் வர்க்க ஒழுக்கப் பண்பு அடிப்படையிலான அரசியல் மட்டுமே சமத்துவம் மற்றும் மதச்சார்பின்மை விழுமியங்களின் அடிப்படையில் மாற்றத்துக்கான அரசியலைச் சாதிக்க முடியும்.

ஆங்கிலத்தில்: பவானி சங்கர் நாயக், கவன்ட்ரி பல்கலைக்கழகம், ஐக்கிய அரசியம் (UK)

நன்றி: countercurrents.org

தமிழில்: நிழல்வண்ணன்

Pin It