எண்பதுகளின் இறுதியில் கொடைக்கானல் செம்பானூர் புனித கல்லூரி விடுதியில் நடந்த நாட்டார் வழக்காற்றியல் பயிற்சிப் பட்டறையில் கலந்துகொண்டபோது அங்கிருந்த கல்லூரி அருங்காட்சியக நூலகத்திற்குப் போனேன்.  தமிழினி பதிப்பகத்திற்காக வேதசாட்சி தேவசகாயம் பிள்ளையைப் பற்றிய செய்திகள் சேகரிக்க வேண்டிய அவசரத்தில் அப்போது  இருந்தேன்.

19 ஆம் நூற்றாண்டு புத்தகங்கள்

அந்த நூலகத்தில் இருந்த வயதான நூலகரிடம் தேவசகாயம் பிள்ளை பற்றிய நூற்களைக் கேட்டேன்.  அவர் அள்ளிப்போட்ட கூட்டத்தில் அந்தோணிமுத்து பிள்ளையின் புத்தகங்களும் இருந்தன.  அவற்றில் 19ஆம் நூற்றாண்டு புத்தகங்களும் உண்டு.  பெரும்பாலும் எல்லாம் சிறுபிரசுரங்கள்.  குஜிலி பதிப்பு மாதிரி.

அந்தோணிமுத்து

அந்தோணி முத்துப்பிள்ளை தன் சமகாலத்தில் நடந்த விஷயங்களை (பிளேக் நோய் பரவல், வெள்ளப் பெருக்கு, சல்லிக்கட்டு) நாட்டார் மரபுச் சந்தங்களை அடியற்றி பாடியிருக்கிறார்.  அவர் எழுதிய கீர்த்தனைகள், நாடகங்கள் பற்றியே அதிகம் முன்னிறுத்தப் படுவதால் அவரின் சிந்துப்பாடல்கள் அறியப்படவில்லை. 

அந்தோணிமுத்து தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டம், கம்பம் பகுதியில் அனுமந்தன்பட்டி கிராமத்தில் 1863இல் பிறந்து 1929  இல் மறைந்தார்.  தந்தை சவரிமுத்துசாமிப்பிள்ளை, தாய் சின்னம்மா.  கார்காத்த வேளாள மரபினர்.

யாப்பு படித்தவர்

அந்தோணி உள்ளூர் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் மூன்றாம் வகுப்பு வரைதான் படித்திருக்கிறார்.  தந்தையின் விவசாயத் தொழிலில் தீவிரமான சமயத்தில் தானாய் தமிழ்ப் படித்திருக்கிறார்.  இவரது மொத்தப் படைப்புகளைப் படிக்கும்போது இவர் யாப்பு முறையாய் படித்திருக்கிறார் என்று தெரிகிறது.  கம்பத்தில் அக்காலத்தில் பிரபலமாயிருந்த தமிழ்ப் புலவர் மதுரகவி சீனிவாச அய்யங்காருடன் அந்தோணிமுத்துவிற்குத் தொடர்பு உண்டு.  பழம் இலக்கியங்களையும் யாப்பையும் படிக்க அய்யங்கார் காரணமாயிருந்திருக்கிறார்.

தமிழ்ப்புலமை

அக்காலத்தில் கம்பம் பகுதியில் உள்ள கிராமங்களில் அழகர்சாமி நாயுடு, சேசாத்திரி நாயுடு, சுப்பையாக்கோன், தங்கம் பிள்ளை, சவரிமுத்துப் பிள்ளை எனத் தமிழ்ப்புலவர்கள் சிலர் இருந்தனர்.  இவர்கள் முறையாகத் தமிழ்ப் படித்தவர்கள், புலமை உடையவர்கள்.  அந்தோணிமுத்து இவர்களுடன் சமமாக அமர்ந்து விவாதிக்கவும் பாடல்கள் இயற்றவும் வல்லமை உடையவராக இருந்தார்.

சங்கீதம் அறிந்தவர்

இவருக்கு சங்கீத ஞானம் உண்டு.  இவரது பாடல்கள் சிலவற்றில் ராகதாளங்கள் உண்டு.  இவர் சங்கீதம் யாரிடம் படித்தார் என்பதெல்லாம் தெரியவில்லை.  ஆனால், இசையுடன் பாடியிருக்கிறார்.

நாட்டார் மரபு

இவர் எழுதிய பாடல்களில் பெரும்பாலானவை நாட்டார் மரபு சார்ந்த சந்தம் உடையவை.  இவர் கத்தோலிக்க மரபுவழி இலக்கியங்களை நுட்பமாய் அறிந்திருக்கிறார்.  இவர் எழுதிய இரட்சண்ய சிந்து தலைப்பில் உள்ள பாடல்கள் தேம்பாவணியின் சாரம் எனக் கூறலாம்.  இதில் சில பாடல்கள் அண்ணாமலை செட்டியாரின் காவடிச்சிந்து வடிவத்தை ஒட்டி எழுதப்பட்டவை

தேம்பாவணி விளக்கம்

அந்தோணிமுத்து தன் சொந்த ஊரான அனுமந்தன்பட்டியிலும் அதைச் சுற்றியிருந்த கிராமங்களிலும் தேம்பாவணி என்னும் காவியத்தைக் கொண்டு சென்றிருக்கிறார்.  பண்டித சவரிமுத்துப் பிள்ளை என்பவர் தேம்பாவணியின் மூலப்பாடலை ராகத்துடன் பாட அந்தோணி முத்து அதற்கு உரையும் விளக்கமும் சொல்லியிருக்கிறார்.  இச்செய்தி சுற்றுவட்டாரங்களில் பரவியதும் இவரை அவர்கள் விரும்பி அழைத்திருக்கின்றனர். இந்த நிகழ்ச்சிகளுக்குச் சன்மானமும் பெற்றிருக்கிறார்.

பாஸ்கா பாடல்கள்

கம்பம் பகுதியில் உள்ள ஊர்களில் புனித சவேரியார் விழா நடக்கும்போது ஊர்வலம் வரும் சப்பரத்தின் முன்னே பாடுவதற்கென்றே புனிதர்களைப் பற்றிய இசைப்பாடல்களை அந்தோணி இயற்றியிருக்கிறார்.  அப்போது உத்தமபாளையம் வட்டத்தில் உள்ள இராயப்பன்பட்டியில் பாஸ்கா நாடகம் - நடந்தது.  பாஸ்கா (Pascha) என்பது Passian Play எனப்படும்.

இந்த நாடக வகை கி.பி. 1581இல் அறிமுகமானது.  இது தமிழ்த் தெருக்கூத்தும் போர்ச்சுக்கீசிய நாடகமும் கலந்தது.  இந்த நாடகத்தில் இயேசுவின் இறப்பு தத்ரூபமாகக் காட்டப்படும்.  பாஸ்கா நாடகப்பாடல்களை எழுதியதற்காக இரண்டு சவரன் சன்மானம் பெற்றிருக்கிறார் அந்தோணி.

நிலம் பரிசு

கம்பம் பள்ளத்தாக்கில் உள்ள கோகிலாபுரம் என்ற கிராமத்தில் பொன்னுசாமித் தேவர் என்ற பெரும் செல்வந்தர் இருந்தார்.  அவரது மகனின் திருமணத்தில் மணமக்களைப் பாராட்டி அறிவுறுத்தி நீண்ட வாழ்த்துப் பாடல்கள் பாடினார் அந்தோணி.  தேவருக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை.  அந்தோணியாருக்கு இரண்டரை ஏக்கர் நிலம் தானமாகக் கொடுத்தாராம்.

அணி இலக்கணம்

அந்தோணியார் யாப்பு, தண்டியலங்காரம், மாறனலங்காரம் போன்ற இலக்கண நூற்களைப் படித்திருக்கிறார்.  ஒரு பொருளைக் கொடுத்துப் பாடச் சொன்னால் அடுத்த நிமிடமே இசையுடன் பாட ஆரம்பித்து விடுவாராம்.  இதனால் ஆசுகவி, மதுரகவி என்றெல்லாம் புகழப்பட்டிருக்கிறார்.  இவர் சித்திரக்கவிகள் ரத பந்தனம், நாக பந்தனம் முதலிய வடிவங்களில் பாடல்கள் எழுதியிருக்கிறார்.  இவர் எழுதிய நூற்கள் திரு இரட்சண்ய சிந்து, சரம கவிதைகள், கீர்த்தனைகள், கவர்னர் வரவேற்பு சிந்து, பிளேக் சிந்து, பிளேக் நொண்டிச் சிந்து, கம்பம் தாக்கப்பன் குள உடைப்பு சிந்து, சல்லிக்கட்டு சிந்து, புதுக்கால் சிந்து, தேவசகாயம் பிள்ளை நாடகம், எஸ்தாக்கியார் நாடகம், மர்த்தீன் நாடகம் அல்லது ஆட்டு வணிகன் நாடகம் ஆகியன.

அச்சில் வந்தவை

இவை தவிர புனிதர்களின் சொரூபங்களின் முன்னே பாடுவதற்கு எழுதப்பட்ட இசைப்பாடல்களும் தேம்பாவணி விளக்கம் போன்றவை  முழுதும் அடையாளம் காணப்படவில்லை,  கிடைக்கவும் இல்லை.

இந்தப் படைப்புகளில் தேவசகாயம் பிள்ளை நாடகம் 1910 இல் வடக்கன்குளம் இளைஞர் அமைப்பின் வழி வெளியிடப் பட்டிருக்கிறது.  எஸ்தாக்கியார் நாடகம் கோயம்புத்தூர் கத்தோலிக்க பிரபுக்கள் முயற்சியால் 1909 இல் வெளிவந்தது.  பிற படைப்புகள் எல்லாம் 1920க்கு வெளிவந்திருக்கின்றன.  இவரது தேர்ந்தெடுத்த பாடல்களை, இவரது பேரன் அருள்பணி ஞா.பாக்கியராஜ், சே.ச., அவர்கள் வெளியிட்டுள்ளார்.  இந்நூல் இப்போது கிடைப்பதில்லை.

சல்லிக்கட்டு சிந்து

அந்தோணி முத்து எழுதிய சல்லிக்கட்டு சிந்து 24 பாடல்களைக் கொண்டது.  உத்தமபாளையத்தில் ஒரு தைப்பொங்கல் விழாவில் அந்த ஊர் பிரமுகர் கருத்த ராவுத்தர் (இவர் பேரில் ஒரு கல்லூரி உள்ளது)  தன் சொந்தச் செலவில் சல்லிக்கட்டு நடத்தியிருக்கிறார்.  இது 1905 - 07 ஆண்டுகளுக்குள் நடந்திருக்கலாம்.  சல்லிக்கட்டில் காளைகளின் போக்கு மக்களின் உற்சாகம் எல்லாம் சுவையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.  சல்லிக்கட்டில் கலந்து கொண்டவர்கள் எல்லோருக்கும் கருத்த ராவுத்தர் சன்மானம் கொடுத்திருக்கிறார். 

அரிதான மாடு பிடித்தோர்க்கும் வேட்டி

அரை மொட்டைக் காளையைப் பிடித்தோர்க்கும் வேட்டி

கருத்த ராவுத்தர் புகழைப் பாராட்டி

கணக்கின்றி வாங்கினார்கள் கையை நீட்டி

என்கிறார் ஆசிரியர்.

பிளேக் சிந்துகள்

1920-24ஆம் ஆண்டுகளில் தேனியைச் சுற்றியுள்ள பல கிராமங்களில் பரவிய பிளேக் நோயால் பலர் இறந்திருக்கின்றனர்.  இது குறித்து பிளேக் சிந்து (46 பாடல்கள்) நொண்டிச் சிந்து (43 கண்ணிகள்), என இரண்டு சிறு பிரசுரங்களை வெளியிட்டிருக்கிறார் (1924).

இச்சிறு நூலில் கம்பம் பகுதியில் எந்தெந்த கிராமங்களில் பிளேக் நோய் பரவியது.  உதவியவர்கள் யாவர்; இறந்தவர்களை எப்படிப் புதைத்தார்கள் என்பன பற்றிய செய்திகள் உள்ளன.  மதுரை மேனுவலில் (தேனி அப்போது மதுரை மாவட்டத்தில் இருந்தது) இல்லாத செய்திகள் இந்நூலில் உள்ளன.

உத்தமபாளையத்தில் 4000 பேர், சின்னமனூரில் 2000 பேர், கோம்பை நகரில் 500 பேர், கோவிலாபுரத்தில் 50 பேர், மேலும் இராயப்பன்பட்டி, அனுமந்தன் பட்டி, பாளையம்பதி போன்ற ஊர்களில் ஆயிரக்கணக்கில் பிளேக்குக்குப் பலியாயினர்.  இந்தச் சமயத்தில் கருத்த ராவுத்தர் மக்களுக்கு தாமாக முன்வந்து உதவி செய்தார்.  தனியாக ஒரு கம்பவுண்டரை ஏற்பாடு செய்து தடுப்பூசி போடச்செய்தார்.  மருந்து வாங்கவும் வேறு செலவுகளுக்கும் பணம் கொடுத்தார்.  இதை அந்தோணி முத்து,

மருந்தின்றி ஏழைச்சனங்கள் - அனுதினமும்

மடிவதைக் கண்டு மனமிரங்கி

மிக்க தரும குணவான் - முகம்மது

மீராவெனும் கருத்த ராவுத்தரும்

........

பூமான் கருத்த ராவுத்தர் செய்கின்ற

புண்ணியமே நிலைத்திருக்கும் கண்ணியமென்பர்

இவரல்லவோ மனித ஜென்மம்

என்று பாடுகிறார்.  ராவுத்தருடன் சாமுவெல் என்பவரும் (Sab Magistrate) உதவியிருக்கிறார்.

பிளேக் ஐரோப்பாவிலிருந்து பம்பாய் வழி கோயம்புத்தூருக்கு வந்து தேனீயில் பரவியது.  தேனீயில் பிளேக் உச்சக்கட்டத்திலிருந்த போது (ஐப்பசி மாதம்) அடமழை பெய்தது.  வீடுகள் உடைந்தன; வீட்டுச் சாமான்கள் மிதந்தன.  பிணங்களும் மிதந்தன.

அரசு அதிகாரிகள் உதவி செய்தது மாதிரி செய்திகளைக் கிளப்பிவிட்டனர்  போலிசார் கம்பத்தைச் சுற்றிய கிராமங்களில் எஞ்சியிருந்த சிலரிடம் வீட்டைக் காவி செய்துவிட்டுப் போங்கள் எனக் கட்டாயப்படுத்தினர்.

நரிகளும் கழுதைப் புலிகளும் பகலிலேயே கிராமங்களில் நடமாடின.  எங்கும் பிணவாடை.  திருடர்களுக்குக் கொண்டாட்டம்.  பகலிலேயே பாத்திர பண்டங்களைக் கவர்ந்து சென்றனர்.  காவல்துறை இதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை.

பிணங்களை எரிக்க காய்ந்த விறகு கிடைக்காமல் குழி தோண்டிப் புதைத்தனர்.  குழி வெட்ட ஆளில்லை. ஒரே குழியில் இரண்டு மூன்று பிணங்களைப் போட்டு மண்ணைத் தள்ளினர்.  பிளேக் சாதிமத வேறுபாட்டை உடைத்துவிட்டது.  மதச் சடங்குகள் இல்லாமலே பிணங்கள் அடக்கப்பட்டன.  இதை விமர்சித்து வம்புபேசும் ஆட்களும் அடங்கிப் போனார்கள்.

குள உடைப்பு சிந்து

கம்பத்தில் 1909 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 13ஆம் தேதி பெருமழை பெய்தது.  தொடர்ந்து பெய்த மழையால் வெள்ளம் வீடுகளில் புகுந்தது.  அடுத்த நாள் புதன்கிழமை இரவு கம்பம் நகருக்கு மேற்கே உள்ள தாத்தப்பன் குளம் உடைந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஊருக்குள் புகுந்தது.  வெள்ளம் தாத்தப்பன் கோவில் கல்மண்டபத்தைச் சாய்த்தது. இதே நேரத்தில் நாய்க்கன் குளமும் உடைந்தது. அடுத்தநாள் காலை வரை வெள்ளம் வடியவில்லை. உயிர் சேதம், பொருள் சேதம், கால்நடைகள் சேதம் எனச் சொல்லி மாளாது.

தாத்தப்பன் குளம், நாய்க்கன் குளம் உடைப்பு சேதம் பற்றி 20 பாடல்களில் ஒரு சிந்து எழுதியிருக்கிறார் அந்தோணி முத்து.  இதன் இணைப்பாக மனோரஞ்சித அலங்கார மெட்டில் 10 தெம்மாங்குப் பாட்டுகளும் உண்டு.

புதுக்கால் சிந்து

கம்பம் குளம் உடைந்த பின்னர் அணையிலிருந்து புதிய கால் வெட்ட பொதுமக்களிடமிருந்து கோரிக்கை வந்தது. புதுக்கால்களும் வெட்டப்பட்டன.  1910-11இல் நடந்த இந்நிகழ்ச்சி பற்றி அந்தோணிமுத்து புதுக்கால் சிந்து என்ற தலைப்பில் 40 பாடல்கள் வெளியிட்டிருக்கிறார்.  இதன் இணைப்பில் 3 கண்ணிகள் கொண்ட 9 பாடல்கள் உள்ளன.

புதுக்கால் வெட்டவேண்டும் என்ற ஆலோசனை கூறப்பட்டதிலிருந்து தொடர்ந்து முயற்சி எடுத்தவர்கள் பொதுமக்களே.  அதிலும் தியாகராஜ முதலியார் மகன் சுப்பிரமணிய முதலியார் பெரும் பணம் செலவழித்திருக்கிறார்.  அதோடு சுருளியில் அணைகட்ட முயற்சித்தவரும் இவரே.

கீர்த்தனைகள்

அந்தோணி முத்து, விழாக்களிலும் ஊர்வலங்களிலும் பாடுவதற்கென்றே கீர்த்தனைப் பாடல்கள் எழுதியிருக்கிறார்.  இவை பெரும்பாலும் புனிதர்களைப் பற்றியவை.  இப்பாடல்களின் மெட்டுகள் - அக்காலத்தில் (1900 - 1925) பிரபலமாயிருந்த அரசியல் தலைவர்களைப் பற்றிய பாடல்களைப் பின்பற்றியவை (காந்தி மகான் வந்தாரே, சுயராஜ்யம் தூரமில்லை).  சில பாடல்கள் நாட்டார் மரபிலிருந்து எடுக்கப்பட்டவை.  (தசரத ராஜகுமாரா, பாண்டி மீனாட்சியே, வேலாவள்ளி மணாளா)

நாடகங்கள்

இவர் எழுதிய மூன்று நாடகங்களுமே கம்பம் வட்டார கிராமங்களில் நடிக்கப்பட்டிருக்கின்றன. ஒரு நாடகம் 3 முதல் 4 நாட்கள் வரை நடந்திருக்கிறது. பாடலும் வசனமும் கலந்த இந்த நாடகத்தை நடித்தவர்கள் உள்ளூர்க்காரர்களே.  இவரது தேவசகாயம் பிள்ளை நாடகப் பிரதி ஈழத்தில் கிடைத்த செய்தியை ஒருமுறை பத்மநாப அய்யர் சொன்னார். கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை வட்டம் காற்றாடி மலை விழாவில் இந்த நாடகம் நடிக்கப்பட்டிருக்கிறது.  அந்தோணி முத்துவின் பாடல்கள் படிக்க சிரமம் என்பதால் இதைப் பயன்படுத்தவில்லை என்பதை 70களில் கேட்டிருக்கிறேன்.

அந்தோணி முத்து கத்தோலிக்கர்தான்.  அவருக்கு கருத்த ராவுத்தரையோ சுப்பிரமணிய முதலியாரையோ பாராட்டுவதில் தயக்கம் இல்லை.  இந்து புராண இதிகாசங்களிலிருந்து சில தொன்மங்களை (ஆதிசேஷன், ஆலவாய் அடிகள்) பயன்படுத்துவதில் வெறுப்பில்லை.

Pin It