thoopu 600உலகத் தொல்மாந்தரின் உணவுமுறைகள் இயற்கையோடு இயைந்தே இருந்தன. தொல்தமிழரின் உணவு முறை என்பதும் இயற்கையோடு இயைந்த ஒன்றாக இருந்திருக்கிறது. இயற்கை வளம் நிறைந்த சூழலில் வாழ்ந்த பழந்தமிழர்கள் தம்மைச் சூழ்ந்திருந்த உணவு வகைகளையே உண்டு வாழ்ந்துள்ளனர். காய்களும், கனிகளும், தானிய வகைகளும், புலால் வகைகளும் பற்றிய செய்திகள் பழந்தமிழ் நூல்கள் எங்கும் நிரம்பிக் கிடக்கின்றன. சங்க இலக்கியம் எங்கும் புலால் உணவு பற்றிய குறிப்புகள். இவற்றிற்கு இணையாகக் ‘கள்’ பற்றிய குறிப்புகள். தலைவன் ஒருவன் தன் தேரோட்டிக்குக் காதலியின் ஊருக்கு வழி சொல்லுவதாக அமைந்த நற்றிணைப் பாடல் (59) ஒன்றில் உள்ள இந்தக் குறிப்பு புலாலும், கள்ளும் சங்க காலத்தில் அன்றாட உணவு முறையாக இருந்திருக்கிறது என்பதைத் தெளிவுபடுத்துகிறது.

‘உடும்பைக் கொன்றும், வரியுள்ள தவளையை அகழ்ந்து எடுத்தும், நெடிய கோடுகளைக் கொண்ட புற்றுகளை வெட்டி அடியிலிருந்து ஈசல்களைத் தோண்டி எடுத்தும், வளைந்த தடியை எறிந்து முயலை வேட்டையாடியும் இரவின் கண் தன் அழகிய தோளில் சுமந்துகொண்டு பல்வேறு வகைப்பட்ட பண்டங்கள் பொதிந்த மூட்டையுடன் வீட்டிற்கு வந்து கள்ளை அளவுக்கு அதிகமாகக் குடித்துவிட்டு கொண்டுவந்த பொருளை மறந்து கள்ளின் மயக்கத்திலிருக்கும் அவனின் காட்டுக்கு நடுவே செல்’

இப்படிச் சங்க இலக்கியங்களில் எங்குப் பார்த்தாலும் புலாலும் கள்ளும் பற்றிய குறிப்புகள். பழந் தமிழரின் இயற்கையோடு இயைந்த பலவகை உணவு முறைகளுள் ‘கள்’ளும் ஒன்றாக இருந்தது. ‘கள்’ முக்கிய உணவாகவும் இருந்துள்ளது.

சங்க காலத்தில் கள் ஒரு உணவாக மட்டுமே கருதப்பட்டுள்ளது. சங்க இலக்கியங்களில் காணப்படும், நாட்டை ஆளும் மன்னன் ஒருவன் தன் சக வீரனுக்குக் கள் ஊற்றிக் கொடுத்த செய்தியும் (புறம். 289), கள் உண்ட தந்தைக்கு மகள் ஒருத்தியே மீன் ஊட்டிவிட்ட குறிப்பும் (அகம். 216), மன்னன் அளித்த விருந்தில் புலமையில் மிகுந்த புலவர்கள் மதுவைச் சுவைத்துப் பருகிய செய்தியும் (புறம். 381, 396, 397) சங்க காலத்தில் கள் உணவாகக் கருதிய வழக்கத்தைக் காட்டுகிறது. சங்க காலப் படைப்புலகில் பேராளுமை செலுத்திய பெண் கவி ஒளவை ‘கள்’ உண்ட செய்தியை அறிஞர்கள் அறிவர் (புறம், 235, 376). இல்லறப் பெண்களும் கள் உண்ட குறிப்பைச் சங்க இலக்கியங்களில் (அகம். 221) காணமுடிகிறது. இருந்த கள்ளை இருப்போர் இல்லாதோர் என இல்லந்தோறும் பகிர்ந்து உண்ட குறிப்பும் (புறம். 120) அங்கு உண்டு. சமகால மனநிலையிலிருந்து இவற்றையெல்லாம் வியப்பாக மட்டுமே நம்மால் பார்க்க முடிகிறது/பார்க்கவும் வேண்டும்.

இயற்கையான கள் வகைகளுள் பனை, தென்னை வகைகளையே இன்றைக்கு நாம் அறிவோம். இந்தக் கள் வகைகளுக்கும் அரசு தடை. இயற்கை கள்ளினும் தீங்குடைய மது வகைகளை அரசு விற்பனை செய்கிறது. இது நம் தமிழ்ச் சமூகத்தில் நிலவும் ஒரு நகை முரண்.

நமது சங்க காலத்தில் ‘கள்’ பல பெயர்களில் வழங்கியுள்ளன. அரியல், தேறல், நறவு, மட்டு, மது, பிழி, வெப்பர் என்பன சங்க இலக்கியங்களில் பயின்று வந்துள்ள சில பெயர்களாகும். இந்தக் கள் வகைகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு உற்பத்திமுறையையும் சுவையையும் கொண்டவையாக இருந்திருக்கும். கள் எனும் பெயரிலேயே தொடரிக் கள், தினைக் கள், பனைக் கள் போன்றன பற்றிய குறிப்புகள் பழந்தமிழ் நூல்களில் உள்ளன.

தொடரிக் கள் என்பதனை ‘விளை கள்’ என்கிறது புறநானூற்றுப் பாடல் ஒன்று (328). இந்தத் தொடரிக் கள் பாலுடன், தொடரி என்ற பழத்தையும் களாப் பழத்தையும் ஒன்றாகக் கலந்து பதப்படுத்தி உருவாக்கப் பட்ட ஒரு கள் வகையாக இருக்கக்கூடும் என்பதை அப்பாடல் வழி உணரமுடிகிறது.

குறிஞ்சி நிலத்தில் தினைக் கள் கிடைக்கும் என்ற குறிப்பு சங்க இலக்கியத்தில் (அகம். 284) காண முடிகிறது. ஆனால் அக் கள் எவ்வாறு செய்யப்படும் என்பது பற்றிய குறிப்பு கிடைக்கப்பெறவில்லை. பனைக் கள் பனை மரத்திலிருந்து கிடைக்கப்பெறுவதை நாம் அறிவோம். இவற்றோடு ‘தோப்பி’ எனுமொரு கள் வகையும் இருந்தது பற்றிய குறிப்புகள் சங்க இலக் கியங்களில் காணப்படுகின்றன.  இது ‘தோப்பி’ என்றும் ‘தோப்பிக் கள்’ என்றும் பயின்றுவந்துள்ளன.

இந்தத்  ‘தோப்பிக் கள்’ பற்றிய குறிப்புகள் அக நானூற்று மூன்று பாடல்களிலும் பெரும்பாணாற்றுப் படையிலும் இடம் பெற்றுள்ளன.

அகநானூற்றில் உள்ள முப்பத்தைந்தாம் பாடல் குடவாயிற் கீரத்தனார் பாடியது. அது, தலைவனோடு உடன்போக்கு சென்ற தலைவியை நினைத்து அவள் வருந்தாதவாறு பாதுகாக்க நற்றாய் ஒருத்தி தன் மனதுக்குள் தெய்வத்தை வேண்டுவதாக அமைந்த பாடலாகும். தலைவனுடன் தலைவி உடன்போக்கு சென்ற வழியைப் பற்றிய பதிவில் தோப்பிக் கள் வகை பற்றிய ஒரு குறிப்பு சுட்டப்படுகிறது.

தனிமணி இரட்டும் தாளுடைக் கடிகை

நுழைநுதி நெடுவேல், குறும்படை மழவர்

முனைஆத் தந்து முரம்பின் வீழ்த்த   

வில்ஏர் வாழ்க்கை விழுத்தொடை மறவர்

வல்ஆண் பதுக்கைக் கடவுட் பேண்மார்;

நடுகல் பீலி சூட்டித் துடிப்படுத்துத்,

தோப்பிக் கள்ளடு துரூஉப்பலி கொடுக்கும்

(அகம். 35; 3- 9).

வெட்சி மறவர்களை வீழ்த்திய கரந்தை வீரர்கள் அவர்களின் ஆனிரைகளை மீட்டு வருகின்றனர். இந்த வெற்றிக்கும் தம் வலிய ஆண்மைக்கும் அறிகுறியான மணற் குன்றின் மேலுள்ள நடுகல் தெய்வத்தை வழி படுகின்றனர். துடியை முழக்கி தோப்பிக் கள்ளோடு செம்மறிக் குட்டியைப் பலி கொடுத்தனர். இப்படிப் பட்ட புலால் நாறும் காட்டு வழியில் என் மகள் செல்லத்துணிந்தனள்......என்பதாக அந்தப் பாடல் நீண்டுசெல்கிறது. 

போரில் வென்ற மறவர் கூட்டம் அந்தப் போரில் இறந்த வீரர்களுக்கு நடுகல் எடுப்பது, வழிபாடு செய்வது, அந்த நடுகல் வழிபாட்டில் தோப்பிக் கள்ளை வைத்து வணங்குவது பற்றிய குறிப்புகள் இந்தப் பாடல்வழிப் பெறப்படுகிறது. போரில் இறந்த வீரனுக்கு நடுகல் எடுப்பதும், நடுகல் வழிபாட்டில் ‘கள்’ வைத்து வணங்குவதும் பண்டைத் தமிழர் வழக்கு. வழிபட்ட பின்னர் அந்தக் கள்ளைக் குடித்து விட்டு ஆடும் ஆட்டத்தை ‘உண்டாட்டு’ என்கிறது நமது புறப் பொருள் இலக்கண நூல்கள். இதன் எச்சம்தான் இன்றைக்கும் தமிழக கிராமத்து வழக்கிலிருக்கும் வேடியப்பன், முனியப்பன் போன்ற தெய்வவழிபாடும் அந்த வழிபாட்டில் மதுவை (சாராயம்) வைத்து வழிபடுவதுமாகும்.   

போரில் இறந்த வீரன் நினைவாக எடுக்கப்படும் நடுகல் வழிபாட்டில் ‘தோப்பிக் கள்’ வைத்து வழி பட்டதாக மேற்கண்ட பாடல் சுட்டுகிறது. இன்னொரு அகநானூற்றுப் பாடல் ஒன்று கள்வர் கூட்டம் ‘தோப்பிக் கள்’ளைக் குடித்துவிட்டுக் கூத்தாடுவதாகச் சுட்டுகிறது.

அகநானூற்றின் 265ஆம் பாடல் மாமூலனார் பாடியது. பொருளை ஈட்டத் தலைவன் தலைவியைப் பிரிந்து செல்கிறான். அப்படிச் சென்ற தலைவன் வரு வதற்கு வெகுகாலம் நீண்டு விடுகிறது. இதனால் தலைவி துன்பத்தில் வருத்தமுற்றுத் தோழியிடம் புலம்புவதாக அமைந்த பாடல் அது. பாலைத் திணைப் பாடல் என்பதால் பிரிவும், தலைவன் சென்ற பாலை நிலத் தன்மையும் ஒருங்கு சுட்டப்படுகின்றன.

பொருள் தேடுவதற்காகத் தலைவன் சென்றுள்ள வழி பாலை நிலமாகும். அந்நில வழியில் ‘வலிமையான வளைந்த வில்லையும், கொடும் பார்வையும் கொண்ட ஆறலைக் கள்வர்கள், அங்குச் சுற்றித் திரியும் எழுச்சி கொண்ட எருதினைக் கொன்று, அதன் தசையை நெருப்பில் சுட்டு எடுத்துக் கண்டாரைத் துன்புறுத்தும் இயல்புடைய பேய்களைப் போலத் தின்பர். அதனால் உண்டான தாகம் தீர தோப்பிக் கள்ளினைக் குடிப்பர். புலால் நாற்றத்தைக் கொண்ட கையினராய், கழுவாத வாயினராய் தின்ற களிப்பில் கூத்தாடும் கள்வர்கள் நிறைந்த, எளிதில் கடந்து செல்வதற்கு இயலாத பாலை நிலத்தின் வழியே நம் தலைவன் சென்றுள்ளார்.  அவர் எப்போது வருவாரோ, வந்து மணம் முடிப்பாரோ என்பதாக அந்தப் பாடல் நீண்டு செல்லும். அவற்றுள் ‘தோப்பி’ குடித்த குறிப்பு

விளரூன் தின்ற வேட்கை நீங்கத்         

துகளற விளைந்த தோப்பி பருகி    (அகம். 265; 15-16)

என வருகிறது.

போரில் வென்ற மறவர் கூட்டம் அந்தப் போரில் இறந்த வீரர் நினைவாகக் கொண்டாடும் நடுகல் வழிபாட்டில் ‘தோப்பிக் கள்’ளை வைத்து வழிபட்ட பின்னர் குடித்தனர், கள்வர் கூட்டம் ஊனைத் தின்றுவிட்டு அதன் வேட்கை நீக்க ‘தோப்பிக் கள்’ குடித்தனர் என்ற இருவேறு குறிப்புகள் இரண்டு அகநானூற்றுப் பாடல்களால் அறியவருகின்றன.

சேந்தன் கூத்தனார் என்னும் சங்கப் புலவர் பாடிய மற்றுமோர் அகநானூற்றுப் பாடல் ஒன்றிலும் ‘தோப்பிக் கள்’ பற்றிய குறிப்பொன்று அழகாகப் பதிவாகியுள்ளது. திருமணம் செய்யாமல் காலந்தாழ்த்திக் கொண்டு களவில் மட்டுமே ஈடுபட்டிருக்கும் தலைவனைப் பற்றி தோழியருத்தி அந்தத் தலைவன் கேட்குமாறு சில செய்திகளைச் சொல்ல, உடனின்ற தலைவி பேசுவதாக அமைந்த பாடலில் (348) அக்குறிப்பு காணப்படுகிறது.

............................... முன்றில்

தேன்தேர் சுவைய திரள்அரை மாஅத்துக்

கோடைக்கு ஊழ்த்த கமழ்நறுந் தீங்கனிப்

பயிர்ப்புறுப் பலவின் எதிர்ச்சுளை அளைஇ

இறாலொடு கலந்த வண்டுமூசு அரியல்         

நெடுங்கண் ஆடுஅமைப் பழுநிக் கடுந்திறல்

பாப்புக்கடுப்பு அன்ன தோப்பி......       (அகம். 348: 1-7)

‘வீட்டின் முன்பக்கத்திலுள்ள தேன் போன்ற சுவையினையுடைய திரண்ட அடியினையுடைய மாமரத்தின் கோடைக் காலத்தில்  பழுத்த நல்ல மணம் கமழும் இனிய கனிகளுடன் பிசினையுற்ற பலாச் சுளைகளைச் சேர்த்து தேனுடன் கலந்து செய்த, வண்டுகள் மொய்க்கும் அரியலையும், மூங்கில் குழாயில் ஊற்றி அடைத்த முதிர்ந்து கடிய வேகம் கொண்ட பாம்பினது சீற்றத்தை ஒத்த வெறியுடைய தோப்பியையும் குடித்துவிட்டுப் புனங்காக்கும் தொழிலை மறந்த குறவர்கள்...... என்பதாக அப்பாடல் நீண்டு செல்கிறது.

சுவையில் மிகுந்த நல்ல பழுத்த மாம்பழம், பிசினையுடைய பலாப்பழம், தேன் ஆகியன கலந்து செய்த அரியலும், மூங்கில் குழாயில் அடைக்கப்பெற்று நெடுநாள் விளைந்த ‘தோப்பிக் கள்’ளையும் மலைத் தெய்வத்திற்குப் படைத்த பின்னர் புனங்காக்கும் குறவர்கள் குடித்ததாக இப்பாடல் சுட்டுகிறது.

பத்துப்பாட்டுத் தொகுப்பில் உள்ள பெரும் பாணாற்றுப்படையிலும் ‘தோப்பிக் கள்’ பற்றிய குறிப்பொன்று வருகிறது.

ஒரு முதுவேனில் காலத்துப் பகல் பொழுதில் வறுமையில் வாடிய பெரும்பாணன் ஒருவன் கையில் யாழொடு தம் வறுமை நீங்கப் பொருள்தேடி அலை கிறான். தொண்டைமான் இளந்திரையனிடம் பொருள் பெற்றுத் திரும்பும் ஒரு பாணன் வழியில் எதிரே வருகிறான். வறுமையில் வாடும் பாணனை வறுமை நீங்க இளந்திரையனிடம் செல்லுமாறு ஆற்றுப்படுத்தும் அந்தப் பாணன் அவன் செல்ல வேண்டிய வழியை மிக விரிவாக விவரித்துக் கூறும் வகையில் பாடப்பட்டது பெரும்பாணாற்றுப்படை.

பாணன் சுட்டிக் காட்டும் வழியில் குறிஞ்சி நிலக் குறிப்பும், மறவர் குடியிருப்பும் ஓரிடத்தில் சுட்டப் படுகிறது. ‘அந்த மறவர்கள் தம் வலிமையால் வாட்போர் புரிந்து கொள்ளையடிப்பர். மறக்குல மகளிர் யானை, பாம்பு, இடி, ஏறு ஆகியனவற்றிற்கு அஞ்சாதவர். மறவர் தலைவன் துணைவருடன் பகைவரது காட்டில் புகுந்து பசுக்களைக் கவர்ந்து வந்து அவற்றைக் கள்ளுக்கு விலையாக்குவான். பின்னர் வீடு சென்று தோப்பிக் கள்ளைப் பருகி ஆட்டுக் கிடாயை அறுத்துத் தின்று பலருடன் ஆடி இன்புற்று இருப்பான். அவற்றைக் கடந்து சென்றால் முல்லை நிலம் வரும்’ என்று அந்தப் பாடல் நீண்டு செல்கிறது. அவற்றுள் தோப்பி பருகிய குறிப்பு

நாள்ஆ தந்து நறவுநொடை தொலைச்சி

இல்லடு கள்ளின் தோப்பி பருகி         (பெரும். 141-142)

என்று காணப்படுகிறது.

தோப்பி என்பது சங்க காலத்திலிருந்த ஒரு கள் வகை என்பதை மேலே கண்ட தரவுகள் தெளிவு படுத்துகின்றன. ஆனால் அது எந்தெந்த பொருள்களைக் கொண்டு எவ்வாறு செய்யப்படுகிறது என்ற கருத்தைப் பெறுவதில் சிக்கல் காணப்படுகிறது. சில உரை யாசிரியர்கள் உரை விளக்கங்களே சிக்கலுக்கு இட்டுச் செல்கின்றன. இறுதியாகக் கண்ட அகநானூற்றுப் பாடலுக்கான (348) உரை மட்டுமே தோப்பிக் கள் பற்றிய ஐயத்தைக் கிளப்புகின்றது.

இந்தப் பாடலைத் தவிர ஏனைய இடங்களில் வரும் தோப்பி எனவரும் சொல்லிற்குப் பழைய, புதிய உரையாசிரியர்கள் அனைவரும் ‘நெல்லால் செய்தகள்’ என்கின்றனர். அகநானூற்றுக்கு முதல் தொண்ணூறு பாடல்களுக்கு மட்டும் பழைய உரை உள்ள நிலையில் தோப்பிக் கள் என்ற குறிப்புள்ள 35ஆம் பாடலுக்கான பழைய உரை ‘நெல்லாற் செய்யுங் கள்’ என்கிறது (ராஜகோபாலார்யன், ப. 58). தோப்பிக் கள் குறிப்புள்ள ஏனைய அகநானூற்றுப் பாடல்களுக்குப் (265, 348) பிற்கால உரைகளையே பார்க்கவேண்டிய நிலை. இவற்றுள் ந.மு.வேங்கடசாமி நாட்டார் ‘முதிர்ந்த நெல்லால் செய்த கள்’ ‘தோப்பிக் கள்’ (ந.மு.வே. ப. 89, 302) என்கிறார்.

பெரும்பாணாற்றுப்படையில் வரும் ‘தோப்பி பருகி’ என்பதற்கு ‘இல்லிலே சமைத்த கள்ளில் இனிதாகிய நெல்லாற் செய்த கள்’ (1986. ப. 224) என்றே உரை எழுதுகிறார் பழைய  உரைகாரர் நச்சினார்க் கினியர்.

இவற்றைத் தவிர அகநானூற்றின் 348ஆம் பாடலுக்கான உரை விளக்கமே குழப்பத்தைத் தருகின்றன. இந்தப் பாடலில் வரும் தோப்பி என்பதற்கு மாம்பழம், பலாப்பழம், தேன் ஆகியன கலந்து செய்த கள் வகை (மேலது, ப. 94,95) என்கிறார் ந.மு. வேங்கடசாமி நாட்டார். சில பிற்கால உரைகளும் (இரா. செயபால் உரை, என்.சி.பி.எச். வெளியீடு) இவ்வாறே உரை விளக்கம் தருகின்றன. ஆனால் வேங்கடசாமி நாட்டாரும் மற்ற உரைகார்களும் இப்பாடலைத் தவிர ஏனைய பாடல்களுக்கான உரையில் தோப்பி என்பதற்கு ‘நெல்லாற் செய்த கள்’ என்றே விளக்கம் தருகின்றனர். 348ஆம் பாடலில் உள்ள ‘தோப்பி’ என்பதற்கு மட்டும் மா, பலா, தேன் கலந்து செய்த கள் வகை என்கிறனர். இந்த முரண் பட்ட விளக்கங்கள் ‘தோப்பி’ எனும் கள் வகை பற்றிய குழப்பத்தை விளைவிக்கின்றன. அந்தப் பாடலடி இவ்வாறு உள்ளது.

என்ஆ வதுகொல் தானே- முன்றில்

தேன்தேர் சுவைய திரள்அரை மாஅத்துக்

கோடைக்கு ஊழ்த்த கமழ்நறுந் தீங்கனிப்

பயிர்ப்புறுப் பலவின் எதிர்ச்சுளை அளைஇ

இறாலொடு கலந்த வண்டுமூசு அரியல்

நெடுங்கண் ஆடுஅமைப் பழுநிக் கடுந்திறல்

பாப்புக்கடுப்பு அன்ன தோப்பி         (அகம், 348: 1-7)

இப்பாடலடிக்கான உரை விளக்கம் இவ்வாறு அமைந்து காணப்படுகின்றது. ‘வீட்டின் முன் பக்கத்தி லுள்ள தேன் போன்ற சுவையினையுடைய திரண்ட அடியினையுடைய மாமரத்தின் கோடைக் காலத்தில்  பழுத்த நல்ல மணம் கமழும் இனிய கனிகளுடன் பிசினையுற்ற பலாச்சுளைகளைச் சேர்த்து தேனுடன் கலந்து செய்த, வண்டுகள் மொய்க்கும் அரியலான மூங்கில் குழாயில் ஊற்றி அடைத்த முதிர்ந்து கடிய வேகம் கொண்ட பாம்பினது சீற்றத்தை ஒத்த வெறி யுடைய கள்ளை’ என்று ந.மு.வே. (ப.95) செயபால் (ப.1022) உரைகள் உரைவிளக்கம் தருகின்றன. இவற்றுள் வரும் அரியலையும் (அரியல் என்பதும் ஒரு வகைக் கள்) தோப்பியையும் ஒன்றாகக் கொண்டு உரை எழுதி யுள்ளனர். இவ்வகை உரை விளக்கமே தோப்பி என்பதற்கான தெளிவைத் தரவில்லை. இவற்றைக் கீழ்வருமாறு உரை விளக்கம் காணும்போது தெளிவு கிடைக்கிறது.

‘வீட்டின் முன்பக்கத்திலுள்ள தேன் போன்ற சுவையினையுடைய திரண்ட அடியினையுடைய மா மரத்தின் கோடைக் காலத்தில் பழுத்த நல்ல மணம் கமழும் இனிய கனிகளுடன் பிசினையுற்ற பலாச் சுளைகளைச் சேர்த்து தேனுடன் கலந்து செய்த, வண்டுகள் மொய்க்கும் அரியலையும், மூங்கில் குழாயில் ஊற்றி அடைத்த முதிர்ந்து கடிய வேகம் கொண்ட பாம்பினது சீற்றத்தை ஒத்த வெறியுடைய தோப்பியையும்’ என்று உரை விளக்கம் காணும்போது ஒரு தெளிவு கிடைக்கிறது.

சில செய்திகள்

தமிழர் மரபில் ‘கள்’ குடிக்கும் வழக்கம் மிக நெடுங்காலமாக இருந்துவருகின்றது. சங்க இலக்கியங் களில் எங்குப் பார்த்தாலும் ‘கள்’ பற்றிய குறிப்புகள். சங்க காலச் சமூகச் சூழலில் கள் என்பது ஏற்றுக்கொள்ளப் பட்ட ஒரு அன்றாட உணவாக இருந்துள்ளது. இதனால் தான் அரசரும், வீரரும், புலவரும், கூத்தரும், பாணரும், பெண்டிரும் கள்ளை விரும்பி உட்கொண்டுள்ளனர் என்ற குறிப்புகள் சங்க இலக்கியங்கள் முழுவதும் காணப்படுகின்றன. சங்க காலத்தில் கள்ளை ஒரு உணவாக மட்டுமே கருதியுள்ளனர் என்பதை நம் நினைவில் கொள்ள வேண்டும்.

தினையிலும், பனையிலும், பழத்திலும், பாலிலும், தேனிலும் செய்த பல கள் வகைகள் சங்க காலத்தில் இருந்தவை பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன.

இவற்றுள் ‘தோப்பி’ என்னும் ஒருவகையான கள் இருந்தது பற்றிய குறிப்புகள் அகநானூறு, பெரும் பாணாற்றுப்படை நூல்களால் வழி அறியவருகின்றன. இந்தத் தோப்பிக் கள் எவ்வாறு செய்யப்பட்டது என்பதற்கான குறிப்புகள் சங்கப் பாடல்கள்வழி பெறமுடியவில்லை. உரை மரபு வழி நெல்லால் செய்யப் படும் ஒருவகைக் கள் என்பதை அறியமுடிகிறது. இவற்றுள் நச்சினார்க்கினியரின் உரை விளக்கம் தெளிவுகொள்ளச் செய்கின்றது.

துணை நின்ற நூல்கள்

1. ஆசிரியர் குழு. 1952. பத்துப்பாட்டு சொற் பொழிவுகள், சென்னை: சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.

2. பரிமணம், அ.ம. & பாலசுப்பிரமணியன், கு. வெ. (ப.ஆ.); செயபால், இரா. (உ.ஆ.). 2011 (4ஆம் பதிப்பு). சங்க இலக்கியம் அகநானூறு (தொகுதி1,2) சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.

3. சாமிநாதையர், உ. வே. (ப.ஆ.) 1986 (நிழற் படப் பதிப்பு). பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும், தஞ்சாவூர்: தமிழ்ப் பல்கலைக்கழகம்.

4. காசிவிசுவநாத முதலியார், வெ.பெரி. பழ.மு. (வெ), வேங்கடசாமிநாட்டார், ந.மு., வேங்கடாசலம் பிள்ளை, ரா. (உ.ஆ.). 1968 (மறு அச்சு). எட்டுத்தொகையுள் ஒன்றாகிய அகநானூறு, சென்னை: சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.

5. ராஜகோபாலார்யன் (ப.ஆ.). 1926. அகநானூறு முதலாவது களிற்றியானை நிரை (முதல் தொண்ணூறு பாட்டிற்குப் பழைய உரையும் ஏனைய முப்பது பாட்டிற்கு ராஜ கோபாலார்யன் உரையும்) சென்னை: மயிலாப்பூர்: கம்பர் புஸ்தகாலயம்

Pin It