முத்தமிழில் ஒன்று நாடகம், மற்ற இரண்டு தமிழ்களும் நாடகத்திற்குள் அடக்கமே.  நாடகத்தின் முக்கியத்துவத்தை யாரும் மறுப்பதில்லை.  திராவிட இயக்கத்தின் பிரச்சார பீரங்கியாக நாடகம் தமிழ் நாட்டில் இருந்தது.  அண்ணாவின் ‘சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்’ நாடகத்திற்குத் தந்தை பெரியார் தலைமை தாங்கிப் பேசும்போது, ‘என்னுடைய நூறு சொற்பொழிவுகள் சாதிப்பதை அண்ணாவின் ஒரு நாடகம் சாதித்து விடுகிறது’ என்று குறிப் பிட்டார், நாடகத்தின் மகிமைக்கு இதை விட வேறு சான்று தேவையில்லை.

பெரியோர்களுக்கான நாடகத்தைக் குழந்தைகள் பார்ப்பது பொருத்தமற்றது என்பது புரிந்து கொள்ளப்பட்டபோது குழந்தைகளுக்கான நாடகம் பிறந்தது.  தமிழ்நாட்டில் ஒரு வேடிக்கை உண்டு.  பாய்ஸ் கம்பெனி, பால கான சபா என்ற பெயர் களில் பெரியோர்க்கான நாடகங்களைக் குழந்தைகள் நடித்துக் கொண்டிருந்தார்கள்.  ஆனால் இவை குழந்தை நாடகமல்ல.  நாடகங்களில் பெரியோர்கள் நடிக்க முடியாத காரணத்தால் குழந்தைகள் நடித் திருக்கிறார்கள்.  என்றாலும் இதிகாச காலத்திலேயே குழந்தைகள் நடித்திருக்கிறார்கள்.  தசரத மைந்தன் இராமனின் குமாரர்களான லவனும் குசனும் இராம கதையை ஆடிப்பாடி நடித்து நாடு முழுவதும் பரப்பியிருக்கிறார்கள்.

படித்துத் தெரிந்து கொள்வதை விட, கேட்டுத் தெரிந்து கொள்வதை விட, பார்த்துத் தெரிந்து கொள்வது மனதில் ஆழமாகப் பதிந்து விடுகிறது.  கல் மேல் எழுத்தாக நிலைத்து விடுகிறது.  இதற்கு உதாரணமாகச் சொல்லப்படுவது சிறுவன் காந்தி மனதில் அரிச்சந்திரன் நாடகம் ஏற்படுத்திய தாக்கம் அவரை மகாத்மாவாகவே மாற்றி விடுகிறது.

இதை உறுதிப்படுத்துவது போல் நாடக மேதை ஒளவை டி.கே. சண்முகம் அவர்கள் தனது ‘நாடகக்கலை’ என்ற நூலில் ‘பிஞ்சு மனங்கள் இளம் பருவத்திலேயே நல்ல பண்புகளைக் கடைப் பிடிக்கும் முறையில் நாடகம் அமைய வேண்டும்.  குழந்தைகள் விரும்பிப் பார்க்கக்கூடிய நகைச் சுவைக் காட்சிகள் இந்நாடகங்களில் நிறைய

இடம் பெற வேண்டும்.  கசப்பு மருந்தை இனிப் போடு கலந்து கொடுப்பது போல், நகைச்சுவை யினிடையே நல்ல கருத்துக்களையும் நாடகங்களில் காட்சிப்படுத்திக் கொடுக்க வேண்டும்.  வெறும் புத்தகப் படிப்பு, இந்தப் பண்புகளை வளர்க்காது, காட்சி வடிவாக நிற்கும் நாடகக்கலையினால் இதைச் செய்ய முடியும்’ என்கிறார்.

1950-80களில் குழந்தை எழுத்தாளர் சங்கம் வலுவாக இருந்த காலத்தில் குழந்தைகளுக்கென்று குழந்தைகள் நடித்த நாடகங்கள் அநேகமாக நடைபெற்றன.  குழந்தை எழுத்தாளர் சங்கம் ஆண்டுதோறும் நாடகப் போட்டிகளை நடத்திப் பரிசளித்தது.  பள்ளிகளில் நாடகங்கள் நடைபெற ஊக்கமளித்தது.

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் ஆதரவுடன் அவ்வை டி.கே. சண்முகம், எஸ்.வி. சகஸ்ரநாமம் போன்றோரின் நாடகக்குழுக்கள் குழந்தைகளுக்கென்று முழுநேர நாடகங்களை நடத்தின.  இதில் டி.கே.எஸ்.சின் ‘அப்பாவின் ஆசை’ குறிப்பிடத்தக்கது.  இந்நாடகத்தில் சிறுவன் கமல்ஹாசன் நடித்துள்ளார்.  இந்தியாவிலேயே முதன்முதலாக அரங்கேற்றப்பட்ட முழு நீளக் குழந்தைகள் நாடகம் ‘அப்பாவின் ஆசை’ தான்.

அப்போது குழந்தை எழுத்தாளர்களும் ஏராள மான நாடகங்களை எழுதினர்.  படிப்பதற்கும் நடிப்பதற்குமான நூற்றுக்கணக்கான நாடகங் களை பூவண்ணன் எழுதிக் குவித்துள்ளார்.  கூத்த பிரான் குழந்தைகளுக்காக அடையாறு சிறுவர் நாடக மன்றமே நடத்தினார்.  குழந்தை இலக் கியத்தில் ஈடுபாடு கொண்டவர்களாக வானொலி, தொலைக்காட்சியில் பணியாற்றியவர்கள் இருந்த தால் அவ் ஊடகங்களில் குழந்தை நாடகங்களுக்கு இடமளித்தனர்.  வானொலியில் நூற்றுக்கணக் கான நாடகங்கள் ஒலிபரப்பப்பட்டன.  தொடர் நாடகங்கள் கூட உண்டு.  இப்போது வணிக வானொலி (எப்.எம்.) களே கோலோச்சுகிற நிலையில் திரைப்படப் பாடல்களே கேட்கப்படுகிற நிலை உருவாகி விட்டது.

வானொலி நாடகங்கள் குழந்தைகளின் கேட்கும் திறனை (listening)  வளர்க்கிறது.  மாறி மாறிக் கேட்கும் உரையாடல்களின் வழியாக குழந்தைகள் மனதிற்குள் காட்சி பிம்பங்களை உருவாக்கிக் கொள்கின்றனர்.  இந்த மனப்பயிற்சி அவர்களுக்குக் கற்பனை மற்றும் சிந்தனைத் திறன் களைப் பலப்படுத்துகிறது.  மேலும் குழந்தை களுக்கு கவனம், பொறுமை போன்ற பண்பு களையும் தருகிறது.

படிப்பதற்கான நாடகங்கள் குழந்தைகளின் வாசிப்புத் திறனை  (reading) அதிகரிக்கிறது.  படிப் பதற்கான நாடகங்கள் உயிரோட்டம் உள்ளவை யாக இருக்க வேண்டும்.  அதாவது குழந்தைகளின் மனதில் காட்சி உணர்வை ஏற்படுத்த வேண்டும்.  பூவண்ணன் எழுதிய ‘கோமதியின் கோபம்’ அப்படிப்பட்ட ஒரு நாடகம்.  தமிழில் எழுதப் பட்டுள்ள ஒரு நாடகம்.  தமிழில் எழுதப்பட்டுள்ள படிப்பதற்கான நாடகங்கள் பெரும்பாலானவை உயிரோட்டமாக இல்லை.

சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் குழந்தை எழுத்தாளர்கள் படிப்பதற்கும் நடிப்பதற்குமான நாடக நூல்களை நிறைய எழுதினார்கள்.  இலக் கியம், சமூகம், வரலாறு, சமயம், அறிவுரை, நகைச் சுவை என்று பல பிரிவுகளில் நாடகங்கள் எழுதப் பட்டன.

குழந்தைகளுக்கான இலக்கிய நாடகங்கள் என்பது சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், மணி மேகலை போன்ற இலக்கியங்களில் வரும் கதை களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டன.  குமணன், பாரி மகளிர், சேரன் செங்குட்டுவன், கண்ணகி, பிசிராந்தையார், மனுநீதிச் சோழன் போன்ற நாடகங்கள் இத்தகையன.  ‘சங்க இலக்கிய நாடகங்கள்’ என்று ஒரு சிறப்பான தொகுப்பையே குழந்தை எழுத்தாளர் மு.வ.வெங்கடேசன் தந்துள்ளார். இலக்கிய வகை நாடகங்களில் வசனங்கள் இலக்கிய மொழியில் அமைந்தவை.  அதனால் குழந்தைகளின் மொழி வளத்திற்கு அவை உதவு கின்றன.  பள்ளிப் பாடப்புத்தகங்களில் இவ்வகை நாடகங்கள் இந்நோக்கத்திற்காகவே இடம் பெறு கின்றன.

சமூக நாடகங்களில் பேச்சு வழக்கில் வசனங்கள் இடம் பெறுகின்றன.  அதில் தவறில்லை.  ‘சிறுவர்கள் எதைப் பேசுவார்களோ, எப்படிப் பேசுவார்களோ, எந்த வகையில் பேசுவார்களோ அந்த வகையிலே நாடகத்தை எழுதித் தரவேண்டும்’ என்று அறிஞர் அண்ணா குறிப்பிடுவது கவனிக்கத் தக்கது.

திருக்குறள் தரும் ஒழுக்க நெறிகளுக்குக் கதைகள் எழுதியிருப்பது போல் நாடகங்களும் எழுதப்பட்டுள்ளன.  தெனாலிராமன், மரியாதை ராமன், பரமார்த்த குரு கதைகள் நகைச்சுவை நாடகங்களாக அஸ்வகோஷ், சுகுமாரன் ஆகி யோரால் எழுதப்பட்டுள்ளன.  பஞ்சதந்திரக் கதைகள், ஈசாப் கதைகள் போன்றவற்றை நாடகமாக்குவது குழந்தைகள் கதைகளைப் புரிந்துகொள்வதற்கும் இலக்கிய இன்பத்தைப் பெறுவதற்கும் உதவுகின்றன.   (drama enrich children’s understanding and excitement of a story). .  ஏனென்றால் கதைகளின்றி நாடக மில்லை.  கதையிலிருந்து நாடகம் தொடங்குகிறது.  அரிசி கதையென்றால் கூட்டாஞ்சோறுதான் நாடகம்.

இன்றைய நாடக வடிவம் மேலை நாட்டி னரிடமிருந்து பெறப்பட்டதுதான்.  நம்முடைய மரபு தெருக்கூத்து.  பெரியோர்களுக்கான மேடை நாடக முறைகளே குழந்தை நாடகத்திலும் இங்குப் பின்பற்றப்பட்டன.  இதில் ஒரு மாற்றத்தை எற்படுத்தியவர் தமிழ்நாட்டின் நவீன நாடகத்தின் முன்னோடி சே.ராமானுஜம் ஆவார்.  இவர் தேசிய நாடகப் பள்ளியில் சிறுவர் அரங்கை (Children Theatre) சிறப்புப் பாடமாகப் பயின்றவர்.  இவருடைய குழந்தை நாடகமான தங்கக்குடம் பரவலான வரவேற்பைப் பெற்றது.

நவீன குழந்தை நாடகத்தில் ஒரு பாய்ச்சலை ஏற்படுத்தியவர் வேலு சரவணன் ஆவார்.  பாண்டிச் சேரி, கடலூர் பகுதிகளில் நூற்றுக்கணக்கான பள்ளிகளில் குழந்தை நாடகங்களை நடத்தியவர்.  பொதுவாக இவருடைய நாடகங்கள் இயற்கைக்கும் குழந்தைக்கும் உள்ள உறவைச் சிறப்பாகப் பேசு வதாகும்.  இவருடைய ‘கொடி அரளி’ நாடகம் விலங்குகளிடம் காட்டப்படும் அன்பைப் பற்றியது, ‘பல்லி’ நாடகம் வலியவர்கள் எளியவர்களைத் துன்புறுத்தக் கூடாது என்பதைப் பற்றியதாகும்.  தேவலோக யானை, கடல்பூதம், குதூகல வேட்டை முதலிய நாடகங்கள் குழந்தைகளிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்ற நாடகங்களாகும்.

நவீன நாடகங்கள் உருவத்தில் மட்டுமல்ல உள்ளடக்கத்திலும் பழைய நாடகங்களிலிருந்து வேறுபடுகின்றன.  குழந்தைகளுக்கு வெறுமனே புத்திமதி கூறும் நாடகங்கள், பொழுதுபோக்க உதவும் நாடகங்கள் என்ற போக்கிலிருந்து விலகி வேலு சரவணனின் நாடகங்கள் குழந்தை உரிமைகள், சுற்றுச் சூழல் பிரச்சினைகளைப் பேசின.  தெரு வோரக் குழந்தைகள், படிப்பை விட்டு விலகிய குழந்தைகள் (dropouts)  பற்றிய பிரச்சினைகள் அவருடைய நாடகங்களின் கருவாயின.

பேராசிரியை காந்திமேரி நவீன குழந்தை நாடகத்திற்குச் சிறப்பான பங்களிப்பைச் செய்து வருபவர்.  அவருடைய தெப்பத் திருவிழா, காட்டுக் குள்ளே திருவிழா, வெறியாட்டம் போன்ற குழந்தை நாடகங்கள் பரவலாக வரவேற்பைப் பெற்றவை.

வேலு சரவணனுடன் இணைந்து செயல் படும் ‘ஆழி’ வெங்கடேசன் ‘ஒரு பூ பூத்தது’ என்ற நவீன குழந்தை நாடகத்தைத் தந்தவர்.  போதனை முறையில் நாடகத்தைப் பயன்படுத்துவதுபற்றி ஆசிரியர்களுக்கு இவர் பயிற்சியளித்து வருகிறார்.

குழந்தைகளுக்கான நவீன நாடகங்கள் நடத்து வதில் தொடர்ந்து ஈடுபாடு உடையவர்களாக பார்த்திப ராஜா, கருணா பிரசாத், முருகபூபதி, ஜெயக்குமார், ஜெயராவ், அனிஸ், சண்முக ராஜா, கலை ராணி, பிரளயன் போன்றோர் உள்ளனர்.

இவர்களில் பிரளயன் செயல்பாடு குறிப் பிடத்தக்கது.  இவர் ‘கல்வியில் நாடகம்’(Theatre in education)  என்பதை முக்கியப்படுத்தி வருகிறார்.  இது மாற்றுக் கல்வியில் மாற்று போதனை முறை என்ற அணுகுமுறையாகும்.  தொடக்கப் பள்ளியின் செயல் திட்டத்தில் விளையாட்டு, ஓவியம், இசை இருப்பது போல் நாடகமும் ஒரு பாடமாக இருக்கவேண்டுமென்று பிரளயன் கோருகிறார்.  இது ஒரு நல்ல கோரிக்கையே.

‘கல்வி என்பது சமூக வாழ்வைப் பிரதிபலிப்ப தாகவும் அதை மாற்றியமைப்பதாகவும் இருக்க வேண்டும்’ என்பார் கவி தாகூர்.  ஆனால் நமது கல்விமுறை ஆளும் வர்க்கத்தின் அபிலாசைகளைத் தான் பிரதிபலிக்கிறது.  மதிப்பெண் பெறும் மூளை களைத் தேர்வு செய்வதற்கு மனப்பாடக் கல்வி

முறை போதும்.  இதற்கு மாற்றுக் கல்வி முறையாக கல்வியில் நாடகம் அமைகிறது என்பது உண்மையே.  நாடகம் மனப்பாடக் கல்வி முறையின் கேடுகளைக் களைகிறது.  குழந்தைகளின் படைப்பாற்றலை ஊக்குவிக்கிறது.  ஆளுமையை வளர்க்கிறது.  ஆசிரியர், பாடப்புத்தகம், வகுப்பறை என்பதைத் தாண்டி வாழ்க்கை உண்மைகளைக் கண்டறியும் வாய்ப்பைக் குழந்தைகளுக்கு நாடகம் வழங்குகிறது.  வாழும் சமூகத்தையும் வரலாற்றையும் வகுப்பறை யுடன் தொடர்புபடுத்துகிற நிகழ்வு அது!

பிரளயன் ‘தொலைநோக்கி’ என்ற நாடகத்தின் மூலம் இன்னொரு பரிமாணத்தை எட்டியிருக் கிறார்.  ‘தொலை நோக்கி’ நாடகம் முன்கூட்டியே எழுதப்பட்டதல்ல, அதன் நாடக எழுத்துக்கள் குழந்தைகளைக் கொண்டே உருவாக்கப்பட்டது.  இதை ‘படைப்பாக்க நாடகம்’(Creative Theatre)  என்று சொல்லுவார்கள்.  நாடகத்தின் கதையையும் உரையாடலையும் குழந்தைகள் கூடி விவாதித்து உருவாக்குகிறார்கள்.  இது சவால் மிக்கது.  சவால் தான் குழந்தையின் ஆளுமையை வளர்க்கிறது.

ஓசூர் டி.வி.எஸ். அகாதமி பள்ளியின் 90 மாணவர்களைக் கொண்டு இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ‘யானை காணாமலாகிறது’ என்ற நாடகத்தை பிரளயன் அரங்கேற்றி இருக்கிறார்.  ஹாருகி முரகாமியின் சிறுகதை நாடகமாகியிருக்கிறது.  வனங்களுக்குள் இயற்கையாக வாழும் விலங்கு களின் வாழ்வுரிமையை மனிதர்கள் நில ஆக்கிர மிப்பு மூலம் பறித்து விடுகிற கொடூரத்தை நாடகம் சுட்டிக்காட்டுகிறது.

கல்வியில் நாடகத்தை ஒரு பாடமாக வைப்பதின் மூலம் கல்வி மேம்படுகிறது என்பது சரியே.  ‘ஏட்டுச் சுரைக்காய்க் கறிக்கு உதவாது’ என்பார்கள்.  வெறும் தகவல்களாய் கல்வி பொதி சுமையாய் மாறியிருக்கும் நிலையை மாற்றிச் செயலூக்கம் மிக்கதாய் மாற்றுவது நாடகந்தான்.  ஆனால் பள்ளியில் நாடகம் ஒரு பாடமாக இருப்பதற்கும் நாடகம் ஒரு போதனா முறையாக (drama as tool for learning)  இருப்பதற்கும் வேறுபாடு உள்ளது.  தமிழ்நாட்டுப் பள்ளிகளில் நாடகம் ஒரு போதனை முறையாக இன்னும் புரிந்து கொள்ளப் படவில்லை.

பள்ளியில் சேர்க்கப்படுவதற்கு முன்பே குழந் தைகள் வீட்டில் பொம்மைகளுக்கு கல்யாணம் செய்து வைத்து விளையாடுகிறார்கள்.  கடை வைத்து விளையாடுகிறார்கள்.  மணல் வீடு கட்டி விளையாடுகிறார்கள்.  இந்த விளையாட்டுகள் எல்லாம் நாடகத் தன்மையுடனே இருக்கின்றன.  இவ்வாறு இயல்பாகவே நாடகக் குணத்துடன் வரும் குழந்தைகளுக்கு நாடகம் மூலம் கற்பிப்பது ஆற்றல் உள்ளதாக இருக்கும்.  ஏனென்றால் கடை நிலை மாணவர்களையும் ஈர்க்கக்கூடியது நாடகம்.  பள்ளியில் எல்லாப் பாடங்களையும் நாடகமாக்கி விட முடியும்.  இதை என் அனுபவ சாட்சியாக கூறுகிறேன்.

பள்ளி ஆண்டு விழாவில் சிறப்பு நிகழ்ச்சியாக நாடகம் நடத்தித்தான் நாம் பழக்கப்பட்டிருக் கிறோம்.  இதில் என்ன நடக்கிறது? முதல் நிலை மாணவர்களை மட்டும் நடிப்பதற்கு அழைக் கிறோம்.  உடை, ஒப்பனை இவற்றிற்குச் செலவு செய்யத் தகுதி இருக்கும் மாணவர்களை மட்டும் சேர்க்கிறோம், மற்றவர்களை நிராகரிக்கிறோம்.  இவ்வாறு காலங்காலமாகச் செய்து சிலரை வல்லவர்களாக்குகிறோம்.  மற்றவர்களைக் கைத் தட்ட வைக்கிறோம்.  நாடகம் என்பது ஆண்டு விழாவில் நடைபெறுவது அல்ல. 

குழந்தைகளின் பள்ளி வாழ்வில் ஒரு அங்கம்.  அவர்களின் நட வடிக்கைகளில் பிரிக்க முடியாத அம்சம், நாடகத் திறன் இல்லாத குழந்தையே இல்லை என்பதே உண்மை.  அதனால் எல்லாக் குழந்தைகளுக்கும் வாய்ப்பளிக்கும் மேடை வகுப்பறையே.  நாடக மேடையாக்குவோம், சுதந்தரமான, ஜனநாயகப் பூர்வமான நாடகச் செயல்பாடுகள் வகுப்பறையில் தான் நடக்க முடியும்.

வகுப்பறையில் நடைபெறும் நாடகத்திற்கும் ஆண்டு விழா நாடகத்திற்கும் நிறைய வேறு பாடுகள் உண்டு.  வகுப்பறை நாடகத்தில் முன் கூட்டியே எழுதப்பட்ட வசனங்கள் இல்லை, ஒப்பனை இல்லை, ஒத்திகைகள் இல்லை.  ஆசிரியர் ஒரு பாடப் பொருளையோ அல்லது அன்றாட வாழ்வில் ஒரு சம்பவத்தையோ விளக்கிச் சொல்லு கிறார்.  அதுவே நடிப்பதற்குப் போதுமானது.  குழந் தைகள் சொந்தமாகவே வசனங்களை உருவாக்கிக் கொள்கிறார்கள்.  வகுப்பிலுள்ள அனைத்துக் குழந்தைகளும் பங்கேற்கும் விதமாக நாடகங்களை அமைத்துக் கொள்ள முடியும்.

நாடகம் என்பது ஒரு செயல்பாடு பாடங்களைச் செயல்பாடுகளின் வழியே ஏற்பதின் மூலமே கல்வியின் முழுப் பயனைக் குழந்தைகள் பெற முடியும்.  நாடகம் மூலம் கற்பதன் மூலம் மொழித் திறன்களைக் குழந்தைகள் எளிதாகப் பெறு கிறார்கள்.  ஆசிரியர் - மாணவர் உறவு சிறப்பாக உருவாகும், இடைநிற்றல், மெல்ல கற்றல், கற்கவே இல்லை என்ற நோய்களெல்லாம் ஒழிந்து விடும்.

நமது மொழியை முத்தமிழ் என்று பெருமை பேசுகிறோம்.  தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கென்று ஒரு நாடக அரங்கு கூட இல்லை.  ஒரு காலத்தில் சென்னையில் பாலர் அரங்கம் இருந்தது.  அதில் குழந்தை நாடகங்கள் நடைபெற்றன.  முத்தமிழ்க் காவலர்கள் பாலர் அரங்கை ஒழித்துக் கட்டி விட்டனர்.  மேலை நாடுகளில் பள்ளிகளில் ‘டிராமா கிளப்’ இருக்கின்றன.  தமிழ்நாட்டில், எந்தப் பள்ளிகளிலும் அது இல்லை, உலகத்தரம் வாய்ந்த (International Schools)  பள்ளிகளை நடத்துகிறோம் என்று பீற்றிக் கொள்ளும் தனியார் பள்ளிகளிலும் ‘னுசயஅய ஊடரb’ இல்லை.

என்னுடைய ஆசையெல்லாம் நாடகத்தின் மேன்மை உரைப்பட வேண்டும் பள்ளிகளில் நாடகம் ஒரு பாடமாக வேண்டும்.  போதனை முறையாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.  நாடகம் குழந்தைகளின் ஆளுமையை வளர்க்கிறது.  கற்றலையும் கற்பித்தலையும் உயிரோட்டம் உள்ளதாக மாற்றுகிறது.  இதைப் பெற்றோரும் ஆசிரியரும் புரிந்து கொள்ளும்போது குழந்தை இலக்கியத்தில் நாடகம் உன்னத இடத்தைப் பெறும் என்பதில் சந்தேகமில்லை.

Pin It