udhaipadum mounam 400தோழர் மி.ராஜூ அவர்கள் தனது வாழ்க்கைப் பயணத்தை பதிவு செய்திருக்கும் ஆக்கம்தான் “உடைபடும் மௌனம்" என்னும் நூல். தன்னை ஒரு பார்வையாளனாக நிறுத்திக்கொண்டு, தான் கடந்துவந்த சமூக வரலாற்றைப் பதிவு செய்திருக்கும் இந்த ஆக்கம் தமிழில் மிக முக்கியமான பதிவாகக் கருதுகிறேன்.

கோவை அய்யாமுத்து, நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை, திரு.வி.க ஆகியோர் எழுதியுள்ள தங்களது வாழ்க்கை குறித்தப் பதிவுகளின் வரிசையில் இந்த நூலையும் கருத முடியும். நேர்மை யான உணர்ச்சிகளின் பதிவாகவே இந்நூல் அமைந் துள்ளது. இந்நூல் வெளிவந்த சில நாட்களிலேயே ஒருமுறை வாசித்தேன்.

இப்போது இந்நூல் பற்றி எழுத வேண்டும் என்ற மனநிலையோடு கடந்த ஒரு வாரமாக விட்டுவிட்டுப் படித்தேன். படிக்கும்போது ஒவ்வொரு பதிவும் ஒரு வரலாற்று நிகழ்வின் ஆவணமாகவே என்னால் கருத முடிகிறது. இந்நூல் நினைவலைகளின் குறிப்புகளாக அமையாது தான் வாழ்ந்தகாலத்தில் தான் எதிர்கொண்ட சமூக நிகழ்வுகளைப் பதிவு செய்த ஆவணமாகவே எழுதப்பட்டிருக்கிறது.

இதைப் படித்து முடித்தவுடன் என்னென்ன விஷயங்கள் குறித்து இப்பதிவுகளில் காணப்படுகிறது என்பதைச் சுருக்கமாகத் தொகுக்க முயலுகிறேன்.

- கத்தோலிக்க கிறித்தவம் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தென்தமிழகத்தில் ஆழமாகக் கால்பதித்தது. சுமார் நூறாண்டு வரலாற்றைக் கடந்து இருபதாம் நூற்றாண்டில் எவ்வகை யான முகத்துடன் அம்மதம் செயல்பட்டது என்பதைத் தமது இளமைக்கால நிகழ்வுகளைப் பதிவு செய்யும் போக்கில், இயல்பாகவே இந்நூலில் இடம் பெற்றிருப்பதைக் காண முடிகிறது.

-   இளமைக் காலம் முதல் கம்யூனிஸ்ட் கட்சி களோடு கொண்டிருந்த தொடர்பு; அதன் மூலம் இடதுசாரி கருத்துநிலை சார்ந்து சமூகத்தில் செயல்பட்ட முறைகள்; அவ் விதம் செயல்பட்டமை தொடர்பான தமது தனிப்பட்ட கருத்துநிலை ஆகியவை இந் நூலில் மிக விரிவாகவே பதிவாகியுள்ளது. இவ்வகையில் இந்திய இடதுசாரி கட்சிகள் தொடர்பான வரலாறாக இதனைக் கருதலாம்.

-  பல்வேறு தனிமனிதர்களின் செயல்பாடுகள் எவ்வகையில் இருந்தன? இவற்றை எப்படிப் புரிந்துகொள்வது? இம்மனிதர்கள் தொடர் பான தமது தனிப்பட்ட மதிப்பீடு ஆகிய பல கூறுகள் மிக வளமாகவே இந்த ஆக்கத்தில் இடம்பெற்றுள்ளதைக் காண்கிறோம்.

- தமிழ்ச் சமூகத்தின் செல்லுலாய்டு உலகமான தமிழ் சினிமா குறித்த விரிவான பதிவை இந்நூலில் காண்கிறோம். இவ்வகையில் தொடக்க கால தமிழ் சினிமா வரலாறு தொடர்பான தகவல்களையும் இந்நூலின் மூலம் அறிய முடிகிறது.

- கம்யூனிஸ்ட் கட்சியில் செயல்பட ஆசைப் பட்டாலும் அது சாத்தியமில்லாத சூழலில், வாழ்க்கை என்னும் கடும் போராட்டத்தில் மேற்கொண்ட பல்வேறு சிறுதொழில்கள்: சிறுதொழிற்சாலை என்னும் கேந்திரத்தை இந்திய சமூக வரலாற்றுக் கண்ணோட்டத் தோடு கண்டறியும் கூறுகள் ஆகியவை இந்நூலின் மிக துல்லியமான பதிவுகளாகக் கருத முடியும். இவ்வகையான பதிவுகள் நமக்கு எதுவும் இதுவரை இல்லை. இதுவே முதல்.

-  நவீனத் தமிழ்ப்படைப்பாளிகள் சிலர் குறித்த இவரது மதிப்பீடு: இடதுசாரி கண்ணோட்ட முடையவர்கள், நவீன படைப்புகளை எப்படிப் புரிந்துகொள்ளவேண்டும் என் பதற்கான விளக்கமாக அமைந்திருக்கிறது. தனது புரிதலில் ஆழமாகக் காலூன்றி, இடதுசாரி எதிர்ப்பு மனநிலையாளர்களை எவ்விதம் அணுக வேண்டும் என்பதை விரிவாக விவரித்துள்ளார்.

- தற்போது தமிழ்ச்சூழலில் பத்தி எழுதும் எழுத்தாளர்கள்: இருபது வயது தொடங்கி எண்பது வயது என்ற பல்வேறு வயது உடை யவர்கள் தங்களைப் பற்றியே எழுதுகிறார்கள். தன்னைப் புறமாகக் கருதும் மனநிலை இழந்து தானே எல்லாம் எனும் அகநிலை இருப் பதைக் காண்கிறோம். தன்வரலாற்றைப் பதிவு செய்திடும் "உடைபடும் மௌனமாகிய" இந்நூல், அனைத்தையும் புறநிலையில் வைத்து, ஒரு குறிப்பிட்ட தத்துவக் கண் ணோட்டத்தில் புரிந்துகொள்ள முயலும் முதிர்ச்சியை, இடதுசாரிப்பார்வையோடு வாழ்ந்த வாழ்வை இந்நூலில் காண்கிறோம். இந்நூலின் முதன்மையான கூறாக இதனைக் கருதுகிறேன்.

மேலே தொகுத்துக்கொண்ட செய்திகளை நூலில் காணப்படும் சில தரவுகள் வழி உரையாடலுக்கு உட்படுத்துவது அவசியம். அப்போதுதான் மி.ராஜு என்ற மனிதரைப் புரிந்துகொள்ள முடியும் என்று நினைக்கிறேன். இவ்வகையில் அரிய மனிதர்களும் இச்சமூகத்தில் வாழ்ந்தார்கள்/வாழ்கிறார்கள் என்ற பெருமித உணர்வை நாம் கொள்ள முடியும்.

"தாத்தா எப்போதும் தார்ப்பாய்ச்சி வேட்டி கட்டி, நீளக்கை வைத்த சட்டை அணிந்து, அதற்குமேல் கோட் போட்டு, ஜரிகை கரை போட்ட அங்கவஸ்திரத்தை கழுத்தில் சுற்றி யிருப்பார்கள். கோட் பொத்தானிலிருந்து

தங்க சங்கிலி தொங்கும். அதில் பாக்கெட் வாட்சு இருக்கும். காதில் சிகப்பு கடுக்கன் அணிந்திருப்பார்கள். நீளமான தலை

முடியை வளர்த்து பின்னால் கொண்டை போட்டிருப்பார்கள்" (ப.90)

மேலே விவரித்திருக்கும் தாத்தாவுக்குப் பேரனாகப் பிறந்தவர்கள் எப்படி வாழ்ந்திருக்க வேண்டும். அதுவும் அந்த தாத்தா கத்தோலிக்கத் திருக்கோயில்கள் பல வற்றைக் கட்டியவர். இரண்டாம் தலைமுறை கிறித்தவ வாழ்க்கை. மூன்றாம் தலைமுறை அதனைத் தொடர்ந் திருக்க வேண்டும். ஏனெனில் கிறித்தவம், இந்நூலின் ஆசிரியரான மி.ராஜூ அவர்களை ஆட்கொண்டிருக்க வேண்டும்.

வடக்கன்குளம் என்னும் ஊர் தென் தமிழக கிறித்தவ ஊர்களின் எடுத்துக்காட்டான ஊராக அமைந்திருக்கிறது. பேரா.தனிநாயகம்அடிகள் இளமையில் ஆசிரியராகப் பணியாற்றிய ஊர். இந்தப் பின்புலத்திலிருந்து இந்நூலாசிரியர் எங்கே விடுபட்டார்?

எங்கே கிறித்தவத்தோடு வாழ்ந்தார்? என்று கண்டறிவது அவசியம். தமிழ்ச் சூழலின் நிகழ்வுகளே கத்தோலிக்கக் கிறித்தவமாக பெயர்மாற்றம் பெற்று திகழ்கிறது. சாதி அழியவில்லை; வழிபாடு மாறவில்லை; திருவிழாக்கள் மாறவில்லை. இதற்குள் வாழ்ந்த நூலாசிரியர் கிறித்தவம் போதிக்கும் மதநெறிகளைக் கடந்து, கடவுள் என்ற நம்பிக்கையை இழந்து, மார்க்சிய கருத்துநிலை குறித்தத் தேடல்களை கம்யூனிஸ்ட் கட்சி மூலம் பெறுவதற்கு தமது இளமைக் காலத்தை செலவழித்திருக்கின்றார். இதனால், கல்லூரிப் படிப்பைத் தொடரும் மனநிலை இழந்திருக்கின்றார். இவரது இந்நிலை குறித்துப் பின்வரும் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.

Òஎனது அரசியல் ஈடுபாடு, முக்கியமாக கம்யூனிஸ்ட் கட்சியோடு எனக்குள்ள உறவு, அம்மாவுக்கு மிகுந்த கவலை தருவதாக இருந்தது. நான் சர்ச்சுக்குப் போகாதது, கிறிஸ்தவ மத சடங்குகளில் பங்கேற்காதது, அவர்களுக்கு மிகவும் துயரம் தருவதாக இருந்தது. நான் நாத்திகனாகிவிட்டேன் என்று எப்போதும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். தெய்வ பக்தியில்லாத நான் நரகத்துக்குப் போய்விடுவேன் என்ற பயம் அவர்களை ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தது என்று நினைத்தேன்Ó (ப.59-60).

எனவே கிறித்தவ சூழலிலிருந்து விடுபட்டு, புதிய சூழலுக்கு தன்னை எவ்விதமெல்லாம் ஆட்படுத்திக் கொண்டார் என்பது தொடர்பான விரிவான ஆவணமே இந்நூல். இடதுசாரி கருத்துச் சார்புடையவர் ஆகுதல் என்பது கிறித்தவப் பின்புலத்தில் மிகக் கடுமையான செயல். இந்தப்போராட்டத்தில் இந்நூலாசிரியர் எதிர்கொண்ட வாழ்க்கை குறித்தப் பதிவுகள் மிக முக்கியமானவை. மதம் எவ்விதம் ஆட்கொள்ளும்; அதிலிருந்து விடுதலை அடைவது எவ்வகையில் சாத்தியம் என்பது தொடர்பான உரையாடலுக்கு இப்பிரதி அரிய எடுத்துக்காட்டாக அமைந்திருக்கின்றது. தென்தமிழகக் கிறித்தவ வரலாறும் இடதுசாரி இயக்க வரலாறும் ஒன்றுக்குள் ஒன்றாய் இரண்டறக் கலந்து கிடக்கும் பதிவுகளை இந்நூலில் காண்கிறோம்.

நாகர்கோவில் என்ற புள்ளியிலிருந்துகொண்டு இந்திய இடதுசாரி இயக்க வரலாற்றை பதிவுசெய்ய முயலும் விமர்சனபூர்வமான அங்கமாக இந்நூல் அமைகிறது. இந்நூலை வாசிப்பதன் மூலம், இடதுசாரி கருத்துநிலை மீது ஈடுபாடு உடையவர்களுக்கு உருவாகும் மனநிலைகளை பின்கண்டவாறு தொகுக் கலாம். இவ்வகையான மனநிலை சரியா? தவறா? என்ற உரையாடல் வேறுதளத்தில் நிகழவேண்டும்.

-   கேரளாவில் தோழர்கள் பி.கிருஷ்ணப்பிள்ளை, ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாடு, கே.வி.பர்த்ரோஸ், ஆர்.சுகதன், எஸ்.குமாரன், பி.டி.புன்னூஸ், டி.வி.தாமஸ், கே.சி.ஜார்ஜ், எம்.என். கோவிந்தன்நாயர் ஆகிய பிற தலைவர்களின் செயல்பாடுகள் மூலம், கம்யூனிஸ்ட் இயக்கம் எவ்வகையில் வளர்த்தெடுக்கப்பட்டது; ஆலப்புழை, அம்பாலப்புழை, வயலார், புன்னப்புரா, மாராரிக்குளம், சேர்த்தலை ஆகிய இடங்களில் கம்யூனிஸ்டுகள் தங்கள் ஆட்சியை எவ்வகையில் கொண்டுவந்தார்கள். பின்னர், சர்.சி.பி.இராமசாமி அய்யர் வயலார் - புன்னப்புரா போராட்டத்தில் அப்பாவித் தோழர்கள் ஏழாயிரம் பேரை எப்படிச் சுட்டுக் கொன்றார்.

பின்னர் ஈ.எம்.எஸ். தலைமையில் 1957இல் உருவான கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியை, இந்திராகாந்தி வேண்டுகோளை ஏற்று சோசலிசவாதியாகக் கருதப்பட்ட நேரு பெருமகன் எவ்விதம் கலைத்தார்; தமது குறுகிய ஆட்சிக் காலத்தில், கம்யூனிஸ்ட் அரசாங்கம் செய்த நிலச் சீர்த்திருத்தம் போன்ற செயல்பாடுகள் ஆகியவை தொடர்பான விரிவான பதிவாக இந்நூல் அமைகிறது.

இவ்வகையில், பிரித்தானியரின் அதிகாரம் கைமாறி, இந்திய முதலாளிகளின் கையில் வரும்போது, அவர்கள் கொடுமையாக கம்யூனிஸ்டுகளை எவ்விதம் நடத்தினார்கள் என்பவை தொடர்பான ஆவணம் இந்நூல்.

-   தேசிய இனச்சிக்கல்கள் தொடர்பாக கம்யூனிஸ்டுகள், இந்தியச் சூழலில் எவ் வகையில் நடந்து கொண்டார்கள்; இந்தி யர்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்பு, மொழிவாரி மாநிலங்கள் 1956 இல் உருவாக்கப்பட்டது; அப்போது திருவிதாங்கூர் சமஸ்தான ஆட்சிப் பகுதியில் இருந்த,

தமிழர்களின் வாழ்விடங்களை தமிழ் நாட்டோடு இணைக்கப்பட்டது தொடர் பான போராட்டம் நேசமணி தலைமையில் நடந்துகொண்டிருந்தது; இப்போராட்டத்தை கேரளா மற்றும் தமிழ்நாட்டிலிருந்த கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் எவ் வகையில் எதிர்கொண்டார்கள்? அது சரியா?

அதில் தனது நிலைப்பாடு எத்தகையது? என்பவை தொடர்பான உரையாடல்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இதில் தான் தேர்ந்தெடுத்த கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் களை விமர்சனம் செய்வதைக் காண்கிறோம். இந்த உரையாடல் இன்றும் நிகழ்ந்து கொண் டிருக்கிறது. இவ்வகையில் இந்நூல் சமகாலம் தொடர்பான விமரிசனமாக அமைந்திருப்பதைக் காணமுடிகிறது.

வாழ்க்கைப் பதிவுகள் என்பதைவிட, தான் கொண்டிருக்கும் கருத்து நிலைகளே தமது வாழ்க்கைப் பதிவுகளாக எவ்வகையில் அமைய முடியும் என்பதை இடதுசாரிகளின் வாழ்க்கை மூலமும் அறிய முடியும். அதற்கான நல்ல எடுத்துக் காட்டாகவும் இந்நூல் அமைகிறது.

-  சீனிவாசராவ், ப.ஜீவானந்தம், ப.மாணிக்கம், எம்.ஆர்.வெங்கட்ராமன், எஸ்.ராமகிருஷ்ணன், உமாநாத், பார்வதி கிருஷ்ணன் கே.டி.கே. தங்கமணி, வ.சுப்பையா ஆகிய பிற கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களோடு தான் கொண்டிருந்த தொடர்புகளை இந்நூலா சிரியர் பதிவு செய்திருக்கிறார்.

இளமைக் காலத்தில் மட்டும் கம்யூனிஸ்ட் கட்சியில் பணியாற்றியவர், தம் வாழ்நாள் முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களோடு எவ்வகையில் தொடர்புகொண்டிருக்க முடிகிறது என்பதை அறிய முடிகிறது. இடதுசாரி கருத்துநிலைக்கு உட்பட்ட மனநிலை என்பது எவ்வகையான வாழ்க்கை முறைக்கு இட்டுச் செல்லும் என்பதற்கான அரிய தரவாக இந்நூல் அமைகிறது.

-  கம்யூனிஸ்ட்கட்சி கருத்துநிலை சார்புடைய வராக இருந்த போதும், அக்கட்சி தொடர்பான சுமார் இருபதுக்கு மேற்பட்ட விமரி சனங்களை இந்நூலில் பதிவு செய்துள்ளார். கீழ்க்காணும் பகுதி அவ்வகையில் குறிப்பிடத் தக்கது.

  "கீழ்வெண்மணியில் தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்கள், உயர்சாதி நிலச்சுவான்தார்களால் எரித்துக் கொலை செய்யப்பட்ட நிகழ்ச்சியை, கட்சி, சாதிய ஒடுக்குமுறை என்று பார்க்கத் தவறி வர்க்க ஒடுக்குமுறை என்று மட்டுமே பார்த்து பெரும் தவறு செய்துவிட்டது. வர்க்க ஒடுக்குமுறை என்றால் தாழ்த்தப்பட்ட மக்களின் குடிசை களுக்கு அருகிலேயே இருந்த படையாட்சி களின் குடிசைகளை அவர்கள் ஒன்றும் செய்யாமல் விட்டதேன்?

படையாட்சி சாதியைச் சேர்ந்த நிலமற்ற விவசாயிகளும், கூலி உயர்வுப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள்தானே! உயர்சாதி நிலச் சுவான்தார்கள் கோபமெல்லாம், இந்த Ôபறப் பசங்கள்Õ தமக்கு எதிராகப் போராட்டம் நடத்துவதா என்பதுதானே! இதை ஏன் கட்சி புரிந்து கொள்ளவில்லை என்பது எனக்கு வியப்பாக இருந்தது.Ó(ப.153)

-     கம்யூனிஸ்ட் கட்சியில் மிகுந்த ஈடுபாட்டோடு செயல்பட்ட இந்நூலாசிரியர், கட்சி வாழ்க் கையை விட்டுவிட்டு, சமூகத்தில் வாழும் பிற மனிதர்களைப் போலவே வாழ முடிவு செய்கிறார். இளமைக் காலத்தில் இடதுசாரி இயக்கங்களில் செயல்படும் பலர், ஒரு குறிப் பிட்ட வயதுக்குப் பிறகு கட்சி செயல்பாடு களிலிருந்து விலகிக்கொள்வது அல்லது வேறுவகையான இடதுசாரி செயல்பாடுகளை மேற்கொள்வது என்பது பொதுவான நிகழ்வாக இருப்பதைக் காண்கிறோம். இத்தன்மை ஏன் உருவாகிறது? இதற்கான காரணங்கள் குறித்து இந்நூலாசிரியரின் கீழ்க்காணும் பதிவு கவனத்தில் கொள்ளத்தக்கதாக அமைகிறது.

 "கட்சியிலிருந்தும், கட்சிப் பணிகளிலிருந்தும் விலகி ஒரு வேலை தேடிக்கொள்ள முடிவு செய்தேன். கட்சியில் புதிதாக தலைதூக்கி யிருக்கும் சில போக்குகள்தான் இப்படி ஒரு முடிவு எடுக்கக் காரணமாக அமைந்தது. கட்சியில் நீண்ட நாட்களாக இருக்கும் தோழர்களுக்கு புதிதாக வரும் படித்த இளைஞர்களைப் பிடிக்கவில்லை.

அவர் களுடைய அறிவுத்திறனும், உலகளாவிய செய்திகளையும், அரசியலையும் அவர்கள் அறிந்திருப்பதும், மார்க்சீயத்தை அவர்கள் கற்றுத் தேர்ந்திருப்பதும் அவர்கள் மீது பொறாமை கொள்ளச் செய்தது. அவர்கள் மீது அதிகாரம் செலுத்தவும், அவர்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவுமே அவர்கள் விரும்பினார்கள். சுதந்திரமாக சிந்திக்கக்கூடிய எனக்கு இது உவப்பாக இருக்கவில்லை.

மேலும் விசாலத்தை நான் மணம் செய்துகொள்ளத் தீர்மானித்திருப்பதும், நான் ஒரு வேலை தேடிக் கொள்ள வேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்தியது.(ப.168) இவ்வகையில், இடதுசாரி இயக்கச் செயல்பாடு களில் ஈடுபடுபவர்கள் தொடர்பான உரையாடல்கள் பலவற்றை முன்னெடுக்கும் அரிய பதிவாக இந்நூல் அமைகிறது. நூலாசிரியரின் கருத்துநிலையை ஏற்கிறோமா? இல்லையா? என்ற நிலைப்பாட்டைத் தாண்டி, இவ்வகையான உரையாடல்கள் பொது வெளியில் நிகழ்த்த வேண்டும் என்பதற்கான

தன்மையை இந்நூல் கொண்டுள்ளது. இவ்வகையில் இடதுசாரி இயக்கச் செயல்பாடுகளில் உள்ளவர்கள் அனைவரும் வாசிக்க வேண்டிய பல பதிவுகளை இந்நூல் கொண்டிருப்பதைக் காண்கிறோம். இடதுசாரி கருத்துநிலை ஏற்பும், அது தொடர்பான விமர்சனமும் ஒன்றுக்குள் ஒன்று விரவி அமைந்துள்ள பதிவுகளை இந்நூலில் விரிவாகக் காணமுடிகிறது.

தன்வரலாற்றுப் பதிவுகள், வெறும் நினைவுக் குறிப்புகளாக அமைவதில்லை. தான் வாழ்க்கையில் சந்திக்கும் ஒவ்வொரு மனிதருக்கும் தனக்குமான தொடர்புகளை விமர்சனபூர்வமாகப் பதிவு செய்ய வேண்டும். Ôஉடைபடும் மௌனம்Õ என்னும் இந்த வாழ்க்கை வரலாற்று நூலில் தான் சந்தித்த மனிதர்கள் பலர் குறித்தும் பதிவு செய்துள்ளார்.

இதில் மோகன் தம்பி, லூயி வேதசகாயம், ஜெகத்யானி, நாஞ்சில் மனோகரன், செட்டியார், சர்மாஜி ஆகிய சிலர் குறித்த பதிவுகளை உரையாடலுக்கு உட்படுத்தலாம். இதன் மூலம், வாழ்க்கை வரலாற்றுப் பதிவில் தனிமனிதர்கள் இடம்பெறும் முறைமை குறித்தும் அறியமுடியும்.

இடதுசாரி கருத்து நிலைக்கு இளம் வயதிலேயே ஆட்பட்டவர் மோகன்தம்பி. திரு.மி.ராஜூ அவர்களின் வாழ்நாள் முழுக்கவும் நண்பர். சாதாரண போலீஸ் காவலரின் மகனாகப் பிறந்து துணைவேந்தர் பதவி வரை அவரால் எவ்விதம் சாத்தியமானது என்பது இந்நூல் முழுவதும் வரும் பல்வேறு குறிப்புகள் மூலம் அறிய முடிகிறது.

கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களோடு அவர் கொண்டிருந்த உறவுகள், பல்வேறு மாற்றங்களை பல்கலைக்கழகத்தில் தனது பதவியின் மூலம் செய்ய முடிந்த நிலை என பல பரிமாணங்களில், இந்நூலில் தொடர் பாத்திரமாகவே மோகன்தம்பி வருகிறார்.

கம்யூனிஸ்ட் இயக்க ஈடுபாடு உடைய ஒருவர், உயர்பதவி வகித்தாலும் எவ்வகையில் ஆளும் வர்க்க அதிகார மனநிலையைப் பெறாமல் இருக்கிறார் என்ற விவரணத்தை நாம் காண முடிகிறது. மனிதர்கள் தாங்கள் வரித்துக் கொள்ளும் தத்துவத்திற்கும் வாழ்க்கைக்குமான உறவை நாம் புரிந்து கொள்கிறோம்.

இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தில் நக்சல்பாரி இயக்கம் என்பது அறுபதுகளின் இறுதிக் காலங்களில் உருவானது. இவ்வியக்கம் குறித்து மிகுதியான விமர் சனங்களை பலரும் முன்வைப்பதைக் காண முடியும். லூயி வேதசகாயம் என்னும் தோழர் நக்சல்பாரி இயக்கத்தில் தொடர்பு கொள்கிறார். அவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் செயல்பட்டபோது, இந் நூலாசிரியர் மற்றும் இவரது நண்பர் முத்து ஆகியோர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதற்கு லூயி வேதசகாயம் திட்டமிட்டவர்.

இப்போராட்டம் தோல்வியுற்றது. இதனைப் பதிவு செய்யும் நூலாசிரியர், எவ்விதம் தவறாக வழிகாட்டப்பட்டது என்பதைப் பேசுகிறார். போராட்டம் என்பதை சாகசச்செயலாகக் கட்டமைக்கக் கூடாது. இளைஞர்களை சாகசச் செயலில் ஈடுபடுத்த கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் செய்யக் கூடாது.

இதன் மூலம் ஈடுபட்ட மாணவர்கள், இயக்கம் சார்ந்த ஈடுபாடுகளை இழப்பதற்கான வாய்ப்பு உருவாக வாய்ப்புண்டு. எனவே தோழர் லூயி வேதசகாயம் மூலம் கட்சிச் செயல்பாடுகளை எவ்விதம் நிகழ்த்துவது என்பது தொடர்பான விமர்சன பூர்வப் பதிவை இந்நூலில் காணமுடிகிறது.

ஜெகத்யானி எனும் சிந்தி இனத்தவர். பாகிஸ் தானிலிருந்து வந்து குடியேறியவர். இவர் தான் செய்யும் தொழிலில், எவ்வகையில் நேர்மையற்று செயல்பட்டார். தமது தவறான செயல்பாடுகளை அரசு அதிகாரிகளுக்குக் கொடுக்கும் லஞ்சத்தின் மூலம் எப்படி சரிசெய்தார். இதனால் அவரது தொழிற்சாலை நட்டத்திற்கு ஆளான முறைமைகள்; அவரது தவறான நடவடிக்கைகள் அனைத்தையும் அறிந்த பிறகும்கூட அவரிடம் வேலை செய்த இந்நூலாசிரியரின் மனநிலை ஆகிய பல்வேறு செய்திகள் இடம்பெற்றுள்ளன. முதலாளித்துவ சந்தை முறை, முதலாளித்துவ அலுவலக நடைமுறைகள் ஆகியவற்றை இடதுசாரி மனநிலை உடையவர்கள் எவ்விதம் எதிர்கொள்கிறார்கள் என்பதற்கான அரிய தரவாக இப்பதிவுகள் அமைந்துள்ளன. அரசு எந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்துவோராக இடதுசாரி கருத்து நிலையுடையவர்கள் இருக்கமாட்டார்கள் என்பதையும் அறிய முடிகிறது.

திராவிட இயக்க வளர்ச்சி வரலாற்றில் செயல் பட்ட அவ்வியக்கத் தலைவர்களின் செயல்களை விமர்சனம் செய்யும் பாங்கில் பதிவுகள் உள்ளன. நாஞ்சில் மனோகரன் இளம்வயது முதல் வளர்ந்த பாங்கு; தி.மு.கட்சியில் பெற்றிருந்த செல்வாக்கு; பின்னர் கட்சி தாவியது ஆகிய பல தகவல்களை இந்நூலில் காண்கிறோம். முதலாளித்துவ மனநிலையாளர்கள் பொதுவெளியில் எப்படிச் செயல்படுகிறார்கள்; மனித உறவுகளை முற்றிலும் பேணாத நிலை எவ்விதம் உருவாகிறது ஆகியவற்றை நாஞ்சில் மனோகரன் மூலம் எடுத்துக்காட்டுகிறார்.

திரைப்படத்துறையில் இவர் சந்தித்த பல்வேறு அரிய அனுபவங்களைப் பதிவு செய்துள்ளார். செட்டியார் என்ற பட முதலாளியின் செயல்பாடுகளை விரிவாகப் பதிவு செய்துள்ளார்.

1940- 1960 காலங்களில் தமிழ்த்திரைப் படத்துறை எவ்வகையில் செயல்பட்டது என்பதை இந்நூல் பதிவு மூலம் அறிகிறோம். இருண்ட அந்த உலகத்திற்குள்ளும் இவர் பயணப்பட்டார். படச் சுருள் நறுக்கும் Ôஎடிட்டிங்Õ தொழிலில் இவருக்கு ஏற்பட்ட ஆர்வம், நடைமுறையில் அது சாத்தியப் படாமல் போன நிலைமைகள் ஆகியவை திரைப்படத் துறை குறித்த அரிய பதிவுகளாக உள்ளன.

தமிழ்த் திரையுலகம் எப்படிச் செயல்பட்டது என்பதை செட்டியார் என்ற பதிவின் மூலமாக விரிவாகவே அறிய முடிகிறது. சுவையான மொழியாகவும் இப்பகுதி அமைந்துள்ளது. எள்ளல் தொனி சிறப்பாக இப்பகுதியில் அமைந்திருப்பதைக் காண்கிறோம்.

சர்மாஜி எனும் இடதுசாரி இயக்கச் செயல் பாட்டாளர் குறித்தப் பதிவு இந்நூலில் விரிவாக இடம் பெற்றுள்ளது. திரு.மி.ராஜூ அவர்களுக்கு பலவகை களில் உதவியவராக அவர் காட்டப்படுகிறார்.

ஈ.எம்.எஸ். அலுவலகத்தில் பணிபுரியும் வாய்ப்பு பெற்றவர். கம்யூனிஸ்டாக அறிமுகப்படுத்தப்படும் அவர் தொடர்ந்து பின்வரும் பகுதிகளில் பல்வேறு அதிகாரச் செயல்பாடுகளுக்கு உடந்தையாக இருப்பதையும் இந்நூல் பதிவு செய்திருப்பதைக் காண்கிறோம், மிகவும் வேறுபட்ட பதிவாக இப்பாத்திரம் அமைந்திருக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சிகள் குறித்துப் புரிந்து கொள்ள சர்மாஜி பாத்திரம் உதவுகிறது.

சுந்தர ராமசாமி, வெங்கட் சாமிநாதன், ஜெய மோகன் ஆகியவர்கள் குறித்த விரிவான பதிவுகளை இந்நூலில் காணலாம். சுந்தர ராமசாமி என்ற படைப்பாளியின் முழுப் பரிமாணத்தை அறிந்து கொள்வதற்கு இந்நூல் உதவுகிறது. இளம் வயது முதல் அவரது இறுதிக்காலம் வரை எவ்வகையில் சுந்தர ராமசாமி செயல்பட்டார்; அவரது படைப்புகளில் காணப்படும் இடதுசாரி கருத்துநிலை எதிர்ப்பு எந்தப் பின்புலத்தில் உருவானது. இளமையில் இடதுசாரிக் கருத்துகளில் ஈடுபாடு கொண்டவராக இருந்து, படிப்படியாக எவ்வகையில் எதிர்நிலைக்கு அவர் சென்றார் என்பதை உடன் இருந்து உணர்ந்தவராக இந்நூலாசிரியர் பதிவு செய்துள்ளார். கால ஒழுங்கில் சுந்தர ராமசாமியை

இனம் கண்டுகொள்ள இந்நூல் செய்திகள் பெரிதும் உதவுவதைக் காண்கிறோம்.வெங்கட் சாமிநாதன், ஜெயமோகன் ஆகிய இருவர் கம்யூனிச கருத்துநிலை எதிர்ப்பாளராகவே எவ்விதம் செயல்பட்டார்கள்? அது எத்தன்மையது என்பதை விரிவாக நூல் பேசுகிறது. வாழ்க்கை வரலாற்று நூலில் நவீன தமிழ் எழுத்துலகில் செயல்படுவோர் குறித்துப் பதிவு செய்ய வேண்டிய தேவை எவ்வகையில் உருவானது என்பது நியாயமான கேள்வி. தாம் நம்பும் தத்துவார்த்த நிலைப்பாட்டின் உரையாடலாகவே, இந்தப் பதிவுகளைச் செய்துள்ளார்.

இந்திரா பார்த்தசாரதியோடு புதுச்சேரியில் வாழ்ந்த அனுபவம், அவர் குறித்த பதிவு என்பது அகச் சார்பாக அமைந்துவிட்டது. Ôகுருதிப்புனல்Õ எனும் நாவல், கீழ வெண்மணிப் போராட்டத்தை திரித்துப் பேசியநாவல். விவசாயப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி எழுதியதும் கூட. இதனை இவரால் எப்படிக் கொண்டாட முடிகிறது என்பது வியப்பாக இருக்கிறது. திராவிட இயக்கம் மற்றும் பெரியார் குறித்தப் பதிவுகளும் மிகவும் மேலோட்டமானவை. பார்ப்பனீயக் கருத்து நிலைக்கு வலுசேர்ப்பவை. இப்பகுதிகளை ஏற்றுக்கொள்ள இயலவில்லை.

Ôவாழ்க்கை வரலாறுÕ என்றால் இன்றைய சூழலில், குறிப்பிட்ட நபர்களின் குடும்பத்தைப் பற்றி எழுதுவது என்றும், தன்னை முதன்மைப்படுத்தி எழுதுவது என்றும் கருதிக்கொள்கிறார்கள். இந்நூலில் ராஜூ அவர்கள் அந்த ஆபத்தில் மாட்டிக்கொள்ளவில்லை. அவரது உற்ற தோழியான விசாலம் கூட ஆங்காங்கே லேசாகப் பதிவு செய்யப்பட்டுள்ளார்.

அவரது குடும்பம் பற்றிய பதிவுகள் சமூக இயங்கியலாக வடிவம் பெற்றுள்ளது. இவ் வகையில் தமிழில் உள்ள மிகமிக அரிய வாழ்க்கை வரலாற்றுப் பதிவுகளில் இதுவும் ஒன்று. இடதுசாரி இயக்கத் தோழர்கள் அவசியம் படிக்கவேண்டும். இப்பதிவைச் செய்த தோழர் மி.ராஜூ அவர்களுக்கும் அவரது உற்ற தோழியும் துணைவருமான படைப்பாளர் விசாலம் அவர்களுக்கும் எனது அன்பான வணக்கங்கள்.

(குறிப்பு: தோழர் மி.ராஜூ அவர்கள் Ôஉடைபடும் மௌனம்Õ என்னும் தலைப்பில் தனது இடதுசாரி இயக்கச் சார்பு வாழ்க்கையைப் பதிவுசெய்துள்ளார். இந்த தன்வரலாற்று நூலை காவ்யா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.)

Pin It