கனவாகிப் போன கச்சத்தீவு

‘‘இலங்கைக் கடற்படைக்கு இந்திய கடற்படை கங்காணியாக இருக்கிறது. நம் மீனவர்கள் கச்சத்தீவு அருகே சென்று மீன் பிடிக்க உரிமை உண்டு. அப்படியிருக்கும்போது இலங்கைக் கப்பல்படைக்குச் சுடுவதற்கு என்ன அதிகாரம் உள்ளது? குஜராத் மீனவர்கள் பாகிஸ்தான் எல்லைக்கே சென்றனர். ஆனால் நமக்கும் பாகிஸ்தானுக்கும் கடுமையான விரோதம் இருந்தாலும் அப்போது இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடற்படை தாக்குதலோ, அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகமோ செய்யவில்லை.

ஒரு சமயத்தில் லண்டனில் லிபியாக்காரர்கள் தங்களது சொந்தப் பிரச்சனைக்காக லிபியா தூதரகத்தின் முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்தியபொழுது துப்பாக்கி சூட்டில் பிரிட்டிஷ் காவல்துறை சார்ந்த பெண்மணி மீது சுடப்பட்டு அந்தப் பெண்மணி இறந்து விட்டாள். உடனே பிரதமர் தார்ச்சர் எங்கள் நாட்டுப் பிரஜையைச் சுட உங்களுக்கு யார் உரிமை கொடுத்தது என்று கேட்டு லிபியா நாட்டு ராஜ்ஜிய உறவுகளை முறித்துக் கொண்டார். அவ்வாறு இந்தியா நமது மீனவர் விஷயத்தில் ஏன் கடமையாற்றவில்லை என்பேத நம் வினா’’.

நூல்: கனவாகிப் போன கச்சத்தீவு
ஆசிரியர்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன்.
வெளியீடு: உயிர்மை பதிப்பகம், 11/29, சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை 600 018.
பக்கங்கள் : 64. விலை: ரூ.40.

முதுகுளத்தூர் பயங்கரம்

தலித் சமூகம் தனது மீது சுமத்தப்பட்ட அடக்குமுறைக்கு எதிராக வரலாறு நெடுகிலும் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளது. அவற்றில் முக்கியமானது 50 ஆண்டுகளுக்கு முன்பு தென்தமிழ்நாட்டில் முதுகுளத்தூரில் நடைபெற்ற போராட்டம். அன்றைய பிரிக்கப்படாத ராமநாதபுரம் மாவட்டத்தில் உ.முத்துராமலிங்கமும், அவரது சாதியினரும் தலித் மக்கள் மீது ஏவிய கொடுமைகளையும், அதற்கு எதிராக இமானுவேல் சேகரன் தலைமையில் தலித்துகள் போராடியதையும் இந்நூல் விவரிக்கிறது. பத்திரிக்கையாளர் டி.எஸ்.சொக்கலிங்கம் எழுதியது. பி.மருதையாவின் அறிக்கை, சகஜானஸ்தாவின் சட்டமன்ற உரை ஆகியவற்றைத் தொகுத்து வெளியிட்டுள்ளனர். முதுகுளத்தூர் கலவரம் நடைபெற்று 50 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள வேளையில் இந்த நூல் முழுவதும் அதைப் பற்றி தெரிந்து கொள்ள உதவும்.

நூல்: முதுகுளத்தூர் பயங்கரம்
ஆசிரியர், டி.எஸ்.சொக்கலிங்கம். வெளியீடு- கவின் நண்பர்கள், ஆர்.சி.நடுத்தெரு, வ.புதுப்பட்டி 626 116. விருதுநகர் மாவட்டம். விலை ரூ. 100. பேசி: 99940  61508.


தமிழகச் சிறைகளில் முஸ்லிம் கைதிகள்

பல்வேறு காரணங்களுக்காகச் சிறையில் தீவிரவாதிகள் என முத்திரை குத்தப்பட்டு அடைக்கப்பட்டுள்ள இஸ்லாமிய சிறைக் கைதிகளுக்கு, மற்ற கைதிகளுக்கு வழங்கப்படும் அடிப்படை உரிமைகளான பரோலில் விடுதலை, மருத்துவ சிகிச்சை, பொது மன்னிப்பு என அனைத்து உரிமைகளும் புறக்கணிக்கப்படுவதை இந்த நூல் விவரிக்கிறது பல்வேறு சிறைகளில் வாடும் முசுலிம் கைதிகளின் விபரம், பாகுபாடின்றி 10 ஆண்டுகள் சிறைப்படுத்தப்பட்டுள்ள அனைத்துச் சிறைக் கைதிகளையும் விடுதவை செய்ய வேண்டும் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பு விடுதலைக்குத் தகுதியான நபர்களின் பட்டியல், என பல்வேறு ஆவணங்கள் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. அண்ணா நூற்றாண்டினையொட்டி ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் விடுதலை செய்யப்பட்ட பொழுதும் இஸ்லாமிய கைதிகள் ஒருவர் கூட விடுதலை செய்யப்படவில்லை என்னும் சூழலில் இந்த கவனம் பெறுகிறது.

நூல்: தமிழகச் சிறைகளில் முஸ்லிம் கைதிகள்
வெளியீடு: பயணி பதிப்பகம், 6/11, 4வது குறுக்குத் தெரு, எல்லையம்மன் காலனி, தேனாம்பேட்டை,
சென்னை 86. விலை ரூ.20.

திராவிட இயக்க வேர்கள்

சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த திராவிட இயக்கத்தின் முக்கிய தலைவர்களையும், அவர்தம் சமூகப்பணிகளையும் தொகுத்து இந்த நூல் வெளிவந்துள்ளது. ஒவ்வொரு தலைவர்களின் வாழ்க்கையிலும் நடைபெற்ற முக்கிய நிகழ்ச்சிகள், அவர்தம் சமூகப் பணிகள் என இரண்டு தொகுதிகளாக விரியும் இந்த நூல்களில் மொத்தம் 35 தலைவர்கள் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.

தந்தை பெரியார், பட்டுக்கோட்டை அழகிரிசாமி, குத்தூசி குருசாமி, சிவகங்கை ராமச்சந்திரன், இரட்டைமலை சீனிவாசன், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, சௌந்தரபாண்டியன் உட்பட பல தலைவர்கள் இடம்பெற்றுள்ளனர். திராவிட இயக்கத் தலைவர்கள் பற்றி அறிந்துகொள்ள இந்த நூல் உதவும்.

நூல்: திராவிட இயக்க வேர்கள், தொகுதி I, II
ஆசிரியர்: க.திருநாவுக்கரசு, வெளியீடு நக்கீரன் பதிப்பகம், 76, கற்பகம் அவென்யூ, இராஜா அண்ணாமலைபுரம், மந்தைவெளி, சென்னை  28.
பேசி: 98415 & 45516. விலை ஒவ்வொரு தொகுதியும் ரூ.100.

Pin It