பெரியாருக்கு எதிரான அடுக்கடுக்கான திரிபுகள் (8)

தனித் தொகுதி முறைக்கு எதிராக - காந்தியார் நடத்திய உண்ணாவிரதத்தை தொடர்ந்து காந்தியாரை சந்திக்குமாறு பலரும் அம்பேத்கர் அவர்களை நேரில் சந்தித்து வற்புறுத்தினர்; பெரும் நெருக்கடிகள் கொடுக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து நடந்த சந்திப்பு, விவாதங்கள், இறுதியில் தனித் தொகுதி முறையைக் கைவிட ஒப்புக் கொண்டும், பொதுத் தொகுதி முறையை சில நிபந்தனைகளுடன் ஏற்றுக் கொண்டும் பூனா ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதனைத்தான் இளைய பெருமாள், யார் 32 ஆம் ஆண்டு ஒப்பந்தம் போட்டாரோ அவரே 46 ஆம் ஆண்டில் அது சரியானது இல்லை என்று சொன்னார் என்று அம்பேத்கர் குறித்து விமர்சனமாகக் கூறியுள்ளார். 1932இல் பூனா ஒப்பந்தத்தில் கையெழுத்திட அம்பேத்கர் எளிதில் ஏற்றுக் கொண்டாரா? முழு மனதுடன் ஏற்றுக் கொண்டாரா? என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.

1932 மார்ச் மாதத் தொடக்கத்திலேயே காந்தியார் தீண்டத்தகாத இந்துக்களையும், ஜாதி இந்துக்களையும் பிரிக்கின்ற எந்த ஒரு முயற்சியும் என் உயிரை கொடுத்தேனும் தடுப்பேன் என்று அறிவித்திருந்தார். 17.8.1932 அன்று தனித் தொகுதி, இரட்டை வாக்குரிமையை ஏற்று பிரிட்டன் பிரதமர் அறிவித்தவுடன் மேலும் களம் பரபரப்பானது. காந்தியாரும் 20.9.1932 முதல் சாகும்வரை (கோரிக்கை நிறைவேறும் வரைகூட இல்லை) உண்ணாநிலைப் போராட்டம் அறிவித்தார். அது குறித்து விவாதிக்க 19.9.1932 அன்று பம்பாயில் இந்து தலைவர்களின் மாநாடு ஒன்று நடத்துவது என சிம்லாவில் இருந்து பண்டித மதன் மோகன் மாளவியா அறிவித்தார். அம்பேத்கருக்கும் தந்தி மூலம் அறிவித்து அழைப்பு விடுத்தார். தெளிவானதொரு மாற்றுத் திட்டத்துடன் வந்தால் பரிசீலிக்கலாம் என அம்பேத்கர் அறிவித்தார்.

மேலும் அறிக்கை ஒன்றையும் அம்பேத்கர் வெளியிட்டார். அதில் “நாட்டின் சுதந்திரத்துக்காக சாகும் வரை உண்ணாவிரதம் என்ற அந்த உச்சகட்ட நடவடிக்கையை காந்தியார் மேற்கொண்டு இருந்தால் அதில் நியாயம் இருக்கிறது; அவருடைய உயிர் துறக்கும் முயற்சிக்கு தீண்டப்படாத வகுப்புக்கு தனி பிரதிநிதித்துவம் தரப்பட்டுள்ளதை காந்தியார் காரணமாய் காட்டியிருப்பது வியப்பும் வருத்தமும் தருகிறது”

“மகாத்மா அழிவே இல்லாத மனிதர் அல்ல. மகாத்மாக்கள் வந்தார்கள்; மகாத்மாக்கள் மறைந்தார்கள். ஆனால் தீண்டப்படாதவர்கள் மட்டும் தீண்டப்படாதவர்களாகவே இருக்கிறார்கள்” என்ற செய்திகள் அடங்கிய அறிக்கை அது.

Ambedkar with MR Jayakar Tej Bahadur Sapru at Yerwada jail19.9.1932 அன்று நடைபெற்ற இந்து தலைவர்களின் மாநாட்டில் முதலாவதாக பேச அம்பேத்கர் அழைக்கப்பட்டார். “தீண்டப்படாத வகுப்பு மக்களின் நலனுக்கு எதிராக காந்தியார் உண்ணா நோன்பு தொடங்கியிருப்பது மிகவும் வருத்தத்திற்குரியதாகும். காந்தியின் ஒப்பற்ற உயிரைக் காப்பாற்ற ஒவ்வொருவரும் முயற்சிக்க வேண்டும் என்பது மிகவும் சரியானது தான்; ஆனால் காந்தியிடமிருந்து மாற்று யோசனை எதுவும் வராத நிலையில் நான் எப்படி முடிவு செய்ய முடியும்” என்று அந்த உரையில் அம்பேத்கர் அவர்கள் குறிப்பிட்டார்கள்.

இதற்கிடையில் உண்ணாவிரதம் தொடங்கியதற்கு அடுத்த நாள் (21.9.1932) காந்தியார் அம்பேத்கரையும், அவருடைய கோரிக்கைக்கு எதிரானவராக உருவாக்கப்பட்டிருந்த எம்.சி.ராஜாவையும் நேரில் சந்தித்து அவர்கள் மனதை தெரிந்து கொள்ள விரும்புகிறேன் என்ற விருப்பத்தை தன்னை சந்திக்க வந்த தலைவர்களிடம் 21.9.1932 அன்று காலை 7 மணிக்கு தெரிவித்துள்ளார். அன்று காலையிலேயே முதலில் எம்.சி ராஜா சந்தித்து உரையாடினார்.

மாலையில் அம்பேத்கர் சந்தித்தார். “மகாத்மாவே நீங்கள் எங்களிடம் நியாயம் இல்லாமல் நடந்து கொள்கிறீர்கள்” (Mahatmaji, you have been very unfair to us) என்று அம்பேத்கர் தன் உரையாடலைத் தொடங்கியுள்ளார். அந்த பேச்சுவார்த்தையின் போது ஒரு செய்தியை மட்டும் அவர் திரும்பத் திரும்பக் கூறினார், எல்லோருக்கும் அந்த வாக்கியம் கேட்டது எனக்கு (எங்களுக்கு) உரிய நட்ட ஈடு வேண்டும் (I want my compensation) என்பதுதான் அது.

காந்தியார் முதல் நிலை தேர்வு குழுத் திட்டத்தை ஏற்றுக் கொண்டால் அது தாழ்த்தப்பட்டவர்களை இந்துக்களிடமிருந்து பிளவுபடுத்தும் என்ற தன் கருத்தை வலியுறுத்தினார். தொடர் அழுத்தங்களும் தனது மக்களே பாதிப்புக்குள்ளாகலாம் என்ற சிந்தனையும் அம்பேத்கர் மனதில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. “மாத்மாவே கூட்டுத் தொகுதி முறையை ஏற்றுக் கொண்டு நான் உங்களுக்கு சலுகை அளித்து விட்டேன்” என்று அம்பேத்கர் முடித்துக் கொண்டார்.

இதற்கிடையில் பம்பாயில் கூடிய இந்து மகாசபை கூட்டத்தில் வகுப்புவாரி தீர்ப்பை நிறுத்தி வைக்குமாறு கடிதங்களையும் தந்திகளையும் பிரிட்டன் பிரதமருக்கு அனுப்புமாறு சுநிலால் மேத்தா பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். மொத்தத்தில் பம்பாய் நிலைமை மோசம் அடைந்து வந்தது.

மறுநாள் 23.9.1932 வெள்ளிக்கிழமை டாக்டர் அம்பேத்கரோடு அவரது தென்னிந்திய, வங்காள நண்பர்களும் வந்து சேர்ந்தனர். ஏற்கனவே தனித் தொகுதியாய் அறிவித்திருந்த 71 இடங்களுக்குப் பதிலாக, பொதுதொகுதியாய் அம்பேத்கர் 197 இடங்களைக் கேட்டார். மத்திய சட்டமன்றத்தில் தாழ்த்தப்பட்டோருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு ஏற்றுக் கொள்ளப்பட்டது. பிற்பகல் நான்கு மணி ஆகிவிட்டது. டாக்டர் அம்பேத்கரும் அவரது நண்பர்களும் ஒவ்வொரு கட்டத்திலும் நின்று போராடினார்கள்.(The redoubtable Doctor, supported by his colleagues fought every inch of ground) இதற்கிடையில் காந்தியாரின் உடல்நிலை மோசமாகி வந்தது.

மறுநாள் 24 9 1932 சனிக்கிழமை பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கியது. ஒதுக்கப்படும் பொதுத் தொகுதி இடங்களின் எண்ணிக்கை 147 என்று முடிவு செய்யப்பட்டது. பிற்பகல் 4 மணிக்கு காந்தியாரை சந்திக்க அம்பேத்கர் சிறைக்கு வந்தார். காந்தியார் உறுதியான குரலில் அம்பேத்கர் இடம் கூறினார், “எது வேண்டும்? உங்கள் கோரிக்கை அல்லது எனது உயிர்” என்றார். மனிதாபிமானம் மிக்க டாக்டர் அம்பேத்கர் இணங்கினார். அன்று (24.9.1932) மாலை பூனா ஒப்பந்தம் கையெழுத்தானது.

மேற்கண்ட செய்திகள் அனைத்தும் காந்தியாரின் தனிச்செயலாளர் பியாரே லால் எழுதிய இந்த (Epic Fast) பட்டினிக் காவியம் என்ற நூலில் காணப்படுபவையே.

24.9.1932இல் பூனா எரவாடா சிறையில் காந்தியார் முன்னிலையில் நிறைவேற்றப்பட்ட பூனா ஒப்பந்தம் குறித்து அடுத்த நாள் 25.9.1932இல் பம்பாயில் நடந்த சமரச மாநாட்டில் கொண்டு வந்த தீர்மானத்தின் மீது பேசிய டாக்டர் அம்பேத்கரின் உரை 2.10.1932 ஆம் நாளிட்ட ‘குடிஅரசு’ வார ஏட்டின் 8ஆம் பக்கத்தில் முழுவதுமாக வெளியிடப்பட்டுள்ளது.

அதன் முக்கிய பகுதிகள்:

சில தினங்களுக்கு முன் என் நிலை இருதலைக்கொள்ளி எறும்பு போல் இருந்தது. எனது நிலையை விட வேறு எவரும் அவ்வளவு சங்கடமான நிலையில் இருந்திருப்பார்கள் என்று கூற முடியாது. நான் இரு முக்கிய விஷயத்தில் எதைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது என்பதை அறியாமல் திணறினேன். ஒருபுறம் உலக சிரேஷ்டர் என விளங்கும் ஒரு மகானின் உயிர் ஆபத்தில் இருக்கிறது; மற்றொரு பக்கம் எனது சமூகத்தினரின் நல உரிமையை பாதுகாக்க வேண்டிய கடமை எனக்கு இருந்தது. இதில் எதைத் தேர்ந்தெடுப்பது என்பது அறியாமல் திண்டாட்டினேன். இறுதியில் மகாத்மாவின் உயிரைப் பாதுகாக்கக் கூடியதும் எதிர்காலத்தில் என் சமூகத்தின் நல உரிமைகளைப் பாதுகாக்க கூடியதுமான ஒரு சமரச முடிவுக்கு வந்துள்ளோம்.

லண்டன் மாநாட்டில் எனது கொள்கைக்கு முற்றிலும் மாறாக என்னை எதிர்த்து வந்த அவர் - மகாத்மா காந்தி, தற்போது எனது கொள்கையை ஆதரித்தது எனக்கு சாதகமாய் இருந்தது.

“ஆனால் நான் சம்பத்தப்பட்ட வரையில் தீண்டாதாருக்கு தனித் தொகுதி வேண்டும் என்பதே எனது அபிப்பிராயம். அந்த அபிப்பிராயத்தை என்னால் மாற்றிக் கொள்ள முடியாது”.

“இந்து வகுப்பைச் சார்ந்த தீண்டாதாருக்கு கூட்டுத்தொகுதியே கடைசி முடிவாக இருக்க வேண்டும் என்பதையும் நான் ஏற்றுக் கொள்ள முடியாது”.

பூனா ஒப்பந்தத்திற்கு அடுத்த நாள் பம்பாயில் நடந்த சமரச மாநாட்டில் ஆற்றிய உரையே அம்பேத்கருக்கு பூனா ஒப்பந்தத்தில் முழு நம்பிக்கை இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது அல்லவா? ஆனால் இளையபெருமாள் அவர்களோ “1932 இல் ஒப்பந்தம் போட்ட டாக்டர் அம்பேத்கர் 1946 ஆம் ஆண்டில்தான் அது சரியானது இல்லை” என்று சொன்னதாகக் கூறியுள்ளார். மேலும் 1942இல் நாக்பூரில் நடந்தது அந்த மூன்று நாள் மாநாடு. (அதுவும் 1942 ஆம் ஆண்டில் வைஸ்ராய் கவுன்சில் உறுப்பினராக பதவி ஏற்பதற்கு முன்னதாக 1942 ஜூலை 18,19,20 ஆகிய நாட்களில் நாக்பூரில் மாநாடுகளை நடத்தினார் புரட்சியாளர் அம்பேத்கர். இப்போது பெரிதும் கையாளப்படும் “கற்பி, போராடு, ஒன்று சேர்” அதாவது “அறிவூட்டு, உணர்வூட்டு, அமைப்பாக்கு” Educate Agitate and Organise என்ற முழக்கம் அந்த மாநாட்டு உரையில் தான் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் கூறினார்). அம்மாநாட்டை 1946இல் நடந்ததாக இளையபெருமாள் மாற்றிக் கூறியுள்ளார். தோழர் ரவிக்குமாரும் அப்படியே அதனை அவரது நூலில் பதிவும் செய்துள்ளார். ஒடுக்கு முறைக்கு தொடர்ந்து ஆளாக்கப்படும் மக்களின் முன்னணித் தலைவராகக் கருதப்படும் இளையபெருமாள் அவர்கள் தனித்தொகுதி, இரட்டை வாக்குரிமை குறித்தும், பூனா ஒப்பந்தம் குறித்தும், நாக்பூர் மாநாடு குறித்தும் அறிந்து கொள்ளாமல்தான் 1998 வரை இருந்தாரா? அந்தோ! பரிதாபம்!

“தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராகப் பெரியார் இருந்தார் என்றும், ஜாதி இந்து மனப்பான்மையோடுதான் அவரது செயல்பாடுகள் இருந்தன” என்றும் தோழர் பாலசிங்கம் ராஜேந்திரன் தனது ‘இளையபெருமாள் வாழ்க்கை சரித்திரம்’ என்ற நூலில் பதிவிட்டும் உள்ளார்.

தனித் தொகுதி, இரட்டை வாக்குரிமை, பூனா ஒப்பந்தம் ஆகியன குறித்து பெரியார், சுயமரியாதை இயக்கம், நீதிக்கட்சி ஆகியோரின் நிலைப்பாடு எவ்வாறு இருந்தது? அதையும் கொஞ்சம் பார்ப்போம்!

சுயமரியாதை இயக்கத் தலைவரான பெரியார் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ‘பெண்களைத் தூண்டி விட்டதாக’ குற்றஞ்சாட்டப்பட்டு 6.12.1938 அன்று பெரியாருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை பெற்ற அவரை சென்னை சிறையில் வைத்திருந்து, அடுத்து பெல்லாரி சிறைக்கு மாற்றம் செய்தார்கள். பெல்லாரி சிறையில் இருந்தபோதுதான் 1938 டிசம்பர் இறுதியில் நடைபெற்ற தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் (நீதிக் கட்சியின்) மாநாடு பெரியாரைத் தலைவராகவும் தேர்ந்தெடுத்தது. சிறை தண்டனை முடிந்து விடுதலை ஆகி வந்த பின்னர், நீதிக் கட்சி நடவடிக்கைகளை அறிந்து கொள்ளவும், அதன் தொடர் செயல்பாடுகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கவும் இருமுறை நீதிக் கட்சியின் நிர்வாகக் குழு கூட்டம் கூடி விவாதங்களை மேற்கொண்டது. அடுத்து 1940 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24, 25 ஆகிய நாட்களில் 15ஆவது மாகாண மாநாடு திருவாரூரில் நடைபெற்றது.

மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சர்.ஏ.டி.பன்னீர்செல்வம், இந்தி எதிர்ப்புப் போராளிகள் நடராசன், தாளமுத்து, கட்சியின் முன்னணித் தோழர்கள், மைசூர் அரசர் போன்றோருக்கு இரங்கல் தீர்மானமும், இந்தித் திணிப்பு ஆணையைத் திரும்ப பெற்றதற்கு நன்றி கூறும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டன

அடுத்தத் தீர்மானம் ‘ஆதி திராவிடர் தனித் தொகுதி’ என்ற தலைப்பில் முன்மொழியப்பட்டது.

“ஆதி திராவிடர் சமுதாயத்திற்கு சர்க்காரால் அளிக்கப்பட்ட தனித்தொகுதி காப்பு முறை பூனா ஒப்பந்தத்தால் அழிக்கப்பட்டு சமுதாயத்திற்கு சரியான பிரதிநிதிகள் வராமல் செய்யப்பட்டு விட்டதால், இனி வரும் தேர்தல்கள் யாவற்றிலும் தனித் தொகுதி முறையே ஏற்படுத்த வேண்டும் என்று சர்க்காரைக் கேட்டுக் கொள்கிறது” என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அந்தத் தீர்மானம் குறித்தும், பிற தீர்மானங்கள் குறித்தும் பெரியார் தனது தலைமை உரையில் பேசியுள்ளார். அதில் குறிப்பாக தனித் தொகுதி என்ற தலைப்பில் இயற்றப்பட்ட தீர்மானத்தை குறித்தும் பேசியுள்ளார். நம் நாட்டை போல் உள்ள, அதாவது கொள்கைகளிலும், லட்சியங்களிலும் சமுதாயத் துறையிலும் பல மாறுதல்கள் கொண்ட மக்களை உடைய ஒரு நாட்டில் தெரிந்திருக்கப்படும் பிரதிநிதி ஒவ்வொருவரும் அந்தந்தக் கொள்கைக்கும் லட்சியங்களுக்கும் ஏற்ற வகுப்பு, வர்க்க மக்களாலேயே தேர்ந்தெடுக்கப் பட்டவர்களாக இருக்க வேண்டும். மற்றவர்கள் தேர்தல்களில் பிரவேசிக்க இடம் இருக்கக் கூடாது. அப்பொழுதுதான் உண்மையான பிரதிநிதிகள் வர முடியும். சட்டசபையில் இருக்கும் போதும், பதவி பெறும் போதும் தனது வகுப்பு மக்களால் தெரிந்தெடுத்து அனுப்பப்பட்ட பிரதிநிதி என்பதும் ஞாபகத்தில் இருக்க வேண்டும். எப்படி எனில் வியாபார வகுப்புக்கு வியாபார பிரதிநிதியும், கற்றோருக்கு கற்றோர் பிரதிநிதியும், ஐரோப்பியருக்கு ஐரோப்பிய பிரதிநிதியும், முஸ்லிமுக்கு முஸ்லிம் பிரதிநிதியும், கிறிஸ்தவர்களுக்கு கிறித்துவ பிரதிநிதியும் இருப்பது போல் ஆதிதிராவிடர்களுக்கு ஆதிதிராவிடப் பிரதிநிதி இருக்கவேண்டும்; அந்தந்த வகுப்புப் பிரதிதியே இருக்க வேண்டும்.

இந்நாட்டில் இன்று ஏற்பட்டிருக்கும் அரசியல் சிக்கலுக்கு முக்கியக் காரணம் புலி போலவும் ஆடு போலவும் உள்ள பல வகுப்பு மக்களையும் ஒரு பட்டியில் அடைத்து கையில் வலுத்த எந்த வகுப்பாரையும் விட்டு வேட்டையாட செய்துவிட்ட கொடுமையாகும். அதனாலேயே பலமற்ற ஒவ்வொரு வகுப்பு மக்களும் அவர்கள் எவ்வளவு பெரும்பான்மையாக இருந்தும், பொதுப்பட்டியிலிருந்து தப்பித்து ஓடி தனி பாதுகாப்பு தேடிக் கொள்ள வேண்டியதாயிற்று. எதிரிகளிடம் அடைக்கலம் போக வேண்டியதாயும் ஆயிற்று. ஆதலால் இப்படிப்பட்ட வகுப்பு கூட்டங்களில் இருந்து சிறுபான்மை பெரும்பான்மை பார்ப்பது என்பது விஷயம் அறியாத காரியமேயாகும்.

இதுபோலவே எனது ஆதிதிராவிட வகுப்பாரும் நம் எல்லோருடைய கூட்டுறவு முயற்சியாலும் அடைந்த தனித்தொகுதி உரிமையை, பூனா ஒப்பந்தத்தின் பேரால் இழந்து விட்டு முன்னிருந்த நிலையை விட மிக மோசமான நிலைமைக்கு போக நேர்ந்த தவறுகளை உணர்ந்து இனிமேலாவது கட்டுப்பாடாய் எச்சரிக்கையாக இருந்து பூரண, பரிசுத்த தனித் தொகுதி முறையை வலியுறுத்தி வெற்றி பெற வேண்டும். அதற்காக நாமும் நம்மாலான எல்லாவித ஒத்துழைப்பையும் அளிக்கத் தயாராய் இருக்கிறோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம். (குடிஅரசு. 25.8.1940)

இவ்வாறான கருத்துகளைக் கொண்டவர்கள் ஜாதி இந்து மனப்பான்மையோடு இருப்பவர்களாம்! ஆனால் தான் தலையேற்று நடத்தும் சமுதாயத்தின் கோரிக்கைகள், வழங்கப்பட்ட உரிமைகள், அவை சூழ்ச்சியால் பறிக்கப்பட்ட துரோகம், அதனை அம்பேத்கர் போன்றோர் ஏற்றார்களா? எதிர்த்தார்களா? என்று கூட அறிந்துகொள்ளாத பேதமை கொண்டோர்கள் சமுதாயத்தின் தலைவர்களாம்!

கே.பி.எஸ். மணி அவர்களின் வாழ்க்கை வரலாறு கூட அவர் வாழ்ந்த காலத்தில் எழுதப்பட்டதல்ல. 1990இல் காலமான அவரது வரலாறு 2005இல் எழுதப்பட்டுள்ளது. அவரது சட்டமன்ற உரைகள் (நில உச்ச வரம்பு சட்டம், கீழ்வெண்மணி, கணபதியாப் பிள்ளை கமிஷன்) ஆகியவை அவரது நேர்மையான சிந்தனைப் போக்கை வெளிப்படுத்துகின்றன. எப்படியோ நூலாசிரியர் தங்கள் தலைவரைப் பெருமைப்படுத்த வேண்டும் என்பதற்காக மிகைப்படுத்தி யிருக்கலாம்; அல்லது தான் வெறுப்பை விதைக்க நினைக்கும் தலைவரை சிறுமைப்படுத்தும் முயற்சியாகக் கூட இருக்கலாம்! ஆனால் இளைய பெருமாள் அவர்கள் வாழ்க்கை வரலாறு எழுதப்பட்டது அவர் வாழ்ந்த காலத்தில். அதுவும் அவராலேயே சொல்லப்பட்டு அதனை ஒலிப்பதிவு செய்து எழுதப்பட்டது. ‘சித்திரை நெருப்பு’ ஆகட்டும் ‘தலித்’ இதழின் நேர்காணல் ஆகட்டும், இரண்டும் ஒலிப்பதிவு செய்யப்பட்டவையே என முன்னுரை, அடிக்குறிப்பு ஆகியவை கூறுகின்றன. எப்படி உண்மைக்கு மாறான இத்தனை செய்திகளைக் கொண்டிருக்கிறது? காரணம் என்னவாக இருக்கும்? காரணம் யாராக இருக்கலாம்? அவற்றை உங்கள் சிந்தனைக்கே விடுகிறோம்.

பார்ப்பனியத்தால், சனாதனத்தால் காலம் காலமாக உரிமைகள் பறிக்கப்பட்டு, இழிவுகள் சுமத்தப்பட்டு, ஒடுக்கப்பட்டும் நசுக்கப்பட்டும் கிடந்த சூத்திர, பஞ்சமர்கள் எனப்படுவோர் ஒரு நூற்றாண்டாகத் தான் தட்டுத் தடுமாறி எழுந்து கொண்டுள்ளோம். இந்தக் கொடுமைகளில் இருந்து தப்பிக்க சுயமரியாதை தரும் மதங்களை நோக்கி சென்ற நம்மவர்களை, அரசியல் சாராத சங்கப் பரிவாரங்கள், தேர்தல் அரசியலில் ஆட்சியில் அமர்ந்துள்ள பா.ஜ.க ஆகியோர் விதவிதமான பொய்களைப் பரப்பி எதிரிகளாகக் கட்டமைப்பதில் வெற்றியடைந்து வருகிறார்கள்; அவர்களை மீண்டும் இந்துமத நுகத்தடியில் பிணைக்கவும் துடிக்கிறார்கள்; அந்த அபாயத்தைச் சுட்டிக்காட்டும் நம் எல்லோரையும் எதிரிகளாகக் காட்டுகிறார்கள். அறியாமையாலோ, ஆதாயம் தேடவோ அவர்களுக்கு அனுமார்களாக, விபீஷணர்களாக இயங்குகிற நம்மவர்களைக் கொண்டே வன்முறைகளை நிகழ்த்தவும், ஆட்சி பீடம் ஏறவும் முயற்சிக்கிறார்கள். இந்த வேளையில் கைகோர்த்து இயங்க வேண்டிய நமக்குள் இவ்வாறான விமரிசனங்கள், எதிர் விமரிசனங்கள் தேவையா என்றுதான் தோன்றுகிறது.

ஆனாலும் 1998, 2010இல் வெளிவந்தபோது எடுத்து விளக்கத் தவறியதால்தானே 2023இல் அந்த செய்தி மீண்டும் பதிவாகிறது. காலப்போக்கில் அது ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது என்பதாக ஆகிவிடுமே என்ற ஆதங்கமே இப்போதேனும் விளக்கிவிட வேண்டும் என்று நம்மை எழுத வைத்தது.

பொது எதிரியை அம்பலப்படுத்துவோம்!

பொதுமை மலர ஒன்றிணைவோம்!

சனாதனத்தை வீழ்த்திடுவோம்!

சமத்துவ சமூகம் படைத்திடுவோம்.

(நிறைவு)

கொளத்தூர் மணி

Pin It