ஐரோப்பிய மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்படுகின்ற வரலாற்றை 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வீரமாமுனிவர், திருக்குறளை இலத்தீனில் மொழிபெயர்த்த காலத்திலிருந்து பார்க்கவியலும். இலத்தீன் மொழியையடுத்து ஜெர்மன், பிரெஞ்சு, ஆங்கிலம் முதலிய ஐரோப்பிய மொழிகளில் திருக்குறள் முழுமையும், தேர்ந்தெடுக்கப்பட்ட சில குறட்பாக்களும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இதனால், மேலைநாட்டவர் பலரின் விருப்பத்திற்குரிய அறநூலாகத் திருக்குறள் காலனித்துவக் காலத்தில் கவனம் பெற்றிருந்தது.
இலத்தீன் முதலான மொழிகளில் திருக்குறள், மேலைநாட்டுச் சமயப் பரப்புரையாளர்களாலும் காலனிய ஆட்சியாளர்களாலும்தான் தொடக்ககாலத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டிருந்தது. அதனால் மொழிபெயர்ப்பு என்னும் கலையாக்கத்தின் பின் அமைந்திருக்கும் காலனித்துவ நுண்அரசியலையும் அறிய நமக்கு வழியேற்படுகிறது. குறிப்பாக, பிரிட்டிஷார் ஏற்படுத்திய இந்துச்சட்ட உருவாக்கத்தின் பின்னணியில் திருக்குறள், மனுஸ்மிருதி உள்ளிட்ட இந்திய அறநூல்களின் ஆங்கிலமொழிபெயர்ப்புகள் முக்கியப்பங்கு வகித்தமை அறியத்தக்கது. ஆகவே காலனித்துவ கால ஐரோப்பியர்களின் திருக்குறள் மொழிபெயர்ப்புகள் அனைத்தும் தன்னகத்தே பல்வேறு நுண்செய்திகளைப் பொதிந்து வைத்துள்ளன.
இருப்பினும், ஐரோப்பியக் காலனியத்திற்குச் சிறிதும் தொடர்பில்லாத ஐரோப்பிய அறிஞர்களின் திருக்குறள் மொழிபெயர்ப்புகள் எப்படி இருக்கும்? அவர்கள் எத்தகைய வாசிப்பை நிகழ்த்தியிருப்பர்? என்பது குறித்து இன்னும் விரிவாக ஆராயப்படாத நிலையும் உள்ளது. இக்கேள்விகளுக்கு ஐரோப்பிய நாடான ஹங்கேரியை மையமிட்டு விடை காண முடியும். ஹங்கேரிய மொழியில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதா என்னும் ஐயம் திருக்குறள் ஆய்வாளர்கள் பலரிடமும் நிலவிவருகிறது. உலகளாவிய திருக்குறள் மொழிபெயர்ப்புகளைத் திரட்டி வலைத்தமிழ் நிறுவனம் வெளியிட்டுள்ள ‘Thirukural Translations in World Languages’ நூலடைவிலும், ஹங்கேரிய மொழியில் முழுமையாகவோ பகுதியளவிலோ திருக்குறள் மொழியாக்கம் பெறவில்லை என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. வேறு எவ்விதச் சான்றிலும் ஹங்கேரிய மொழியில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்கள் நம்மிடம் இல்லையாதலின் பெரும்பாலான முடிவுகள் ‘இல்லை’ என்றே வழிமொழிகின்றன. ஆனால் காலனியப் பின்னணியில் திருக்குறள் மேலை நாடுகளில் பரவலாக்கம் பெற்றதை ஆராயும் போக்கைக் கடந்து நோக்கும்போது, காலனித்துவ நாடுகளைச் சேராத அன்றைய ஆஸ்திரிய-ஹங்கேரி அரசின் தொடர்புமொழியாக இருந்த ஹங்கேரிய மொழியில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதைக் காணமுடியும். அதனை நிகழ்த்தியவர் பாலிந்த் காபோர் (Szentkatolnai Bálint Gábor : 1844 - 1913) என்னும் மொழியியலாளர்.
19ஆம் நூற்றாண்டில் ஆஸ்திரிய – ஹங்கேரிய அறிஞர்கள், தங்களின் பூர்வீகத்தை அறிவதற்குப் பெரும் ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர். அதற்காக ஆசியாவை நோக்கிப் பல்வேறு ஹங்கேரிய மொழியியல் அறிஞர்கள் சென்றுள்ளனர். இதனை ‘ஹங்கேரியக் கீழைத்தேயவாதம்’ என்று வரலாற்றாசிரியர்கள் மதிப்பிடுவர். ஹங்கேரிய மொழியியலாளர்கள் பலர் துரானிய மொழிக்குடும்பத்தைப் பின்பற்றித் தங்கள் வேர்களை அறியமுயன்றுள்ளனர். அந்த மரபில் வந்தவர்தான் பாலிந்த் காபோர். அவர் முதல்முறை ஆசியாவிற்கு வந்தபோது ஓரளவு ஆசியமொழிகளை அறிய முயன்றார். “1877-1878 ஆம் ஆண்டுகளில், பாலிந்த் மீண்டும் கிழக்கு ஆசியாவிற்குப் பயணம் மேற்கொண்டார். இம்முறை அவர், கவுண்ட் இஸ்த்வான் செச்சென்யியின் மகனான கவுண்ட் பேலா செச்சென்யினால் உருவாக்கப்பட்ட ஆய்வுக்குழுவில் ஓர் உறுப்பினராக இணைந்து சென்றார். அந்தப் பயணத்தின் போது பாலிந்த், திராவிட மற்றும் தமிழ் ஆய்வுகளில் முழு கவனத்தையும் செலுத்தினார்” (Marácz, L., 2018) தமிழுக்கும் ஹங்கேரிய மொழிக்கும் இடையேயான சிந்தனைகளை நூலாகவும், தென்னிந்திய மொழிகள் குறித்துக் கட்டுரைகளையும் ஹங்கேரிய மொழியில் எழுதினார்.

(ஹங்கேரிய மொழியில் அன்புடைமை அதிகாரம்)
இதன் விளைவாக, அன்று பொதுவிலிருந்த பல்வேறு தமிழ் இலக்கியங்களையும் அவர் அறிய முனைந்தார். அப்போதுதான் திருக்குறளை வியந்து, அதனைத் தன் நாட்டுமக்களுக்கு மொழிபெயர்த்துத் தர எண்ணினார். ஆனால் அவர் அடிப்படையிலேயே ஒரு மொழியியல் ஆய்வாளராகத் திகழ்ந்தமையால் இலக்கியமொழிபெயர்ப்பைக் குறைந்தளவிலேயே செய்தார். இருப்பினும் அதில் முதன்மையாக இருந்தது திருக்குறளாகும். அன்புடைமை அதிகாரத்தை ஹங்கேரியத்தில் தந்ததோடு மட்டுமில்லாமல் ஆங்கில எழுத்துகள் மூலம் தமிழ் ஒலிபெயர்ப்பையும் செய்துள்ளார். இவை, பாலிந்த் எழுதிய ‘Tamul (Dravida) Tanulmányok’ (தமிழ் (திராவிட) ஆய்வுகள்) என்னும் நூலில் இடம்பெற்றுள்ளன. (Széchenyi, Béla., 1897:153-154) மேலும், இந்த மொழிபெயர்ப்புடன் பிற்காலத்தில் வாழ்ந்த திருவள்ளுவர் என்னும் பெயருடைய முனிவர் ஒருவர் இயற்றிய ஞானவெட்டிப் பாடல்கள் சிலவற்றையும் ஹங்கேரிய மொழியில் தந்துள்ளமையால் (Széchenyi, Béla., 1897:154) திருவள்ளுவர் என்னும் பெயரில் பாலிந்த் காபோர் தடுமாற்றம் அடைந்துள்ளதையும் பார்க்கமுடிகிறது. மேலும் தன்னுடைய தமிழ் மொழி சார்ந்த கட்டுரைகளின் பல இடங்களில் திருக்குறளை வியந்து குறிப்பிட்டுள்ளார்.
காலனித்துவம் அடர்த்தியாக இருந்த 19ஆம் நூற்றாண்டில், தமிழ்நிலத்திற்கு நேரடியாகத் துளியும் தொடர்பில்லாத ஒரு ஐரோப்பியர், திருக்குறளைக் கண்டு வியந்து, அதன் ஒரு அதிகாரத்தை மொழிபெயர்த்துத் தன் மக்கள் படித்து இன்புறச் செய்ததென்பது திருக்குறள் பெற்ற மாபெரும் வெற்றிகளில் ஒன்று என்றே குறிப்பிட வேண்டும்!
துணைநூற்பட்டியல்
1. Marácz, L., Gábor Bálint de Szentkatolna (1844-1913) and the Study of Kabardian, Circassian world e-magazine, 31 jan 2018.
2. Széchenyi, Béla., Gróf Széchenyi Béla keletázsiai utjának tudományos eredménye. Vol.2, Kilián Publication, Budapest, 1897.
- ஜெ. கார்த்திக், முனைவர் பட்ட ஆய்வாளர் (முழுநேரம்), அயல்நாட்டுத் தமிழ்க்கல்வித் துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.