கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் அருந்தியதன் விளைவால் 55 பேர்கள் மரணம் அடைந்துள்ளனர் என்றும், நூற்றுக்கும் மேற்பட்டோர் சேலம், விழுப்புரம், ஜிப்மர் மருத்துவ மனைகளில் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள் என்றும்  வருகிற செய்திகள் பெரும் அதிர்ச்சியைத் தருகிறது.

தகவல் கிடைத்தவுடன் தமிழ்நாடு முதல்வர் விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆணை பிறப்பித்துள்ளார். அமைச்சர்கள் மா.சுப்பிரமணியம், எ.வா. வேலு ஆகியோரை உடனே கள்ளக்குறிச்சிக்கு அனுப்பி, பாதிக்கப்பட்டோருக்கு வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

இந்நிகழ்ச்சியைத் தடுக்கத் தவறிய உயர்மட்ட காவல் அதிகாரிகள் உள்பட பதவி இடைநீக்கம், காத்திருப்போர் பட்டியல் என துறைரீதியான நடவடிக்கையை மேற்கொண்டதோடு, மாவட்ட ஆட்சியரும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

கள்ளச் சாராய குற்றவாளிகளை இரும்புக்கை  கொண்டு அடக்குவேன் என்று சட்டமன்றத்தில் அறிவித்தார். சி.பி.சி.ஐ. டி விசாரணைக்கும் ஆணையிட்டு உள்ளார் அவர்.

 சம்பவம் நடந்த பகுதியில் காவல் நிலைய அதிகாரிகள், காவலர்கள் உள்பட காட்டிய அலட்சியம் பல உயிர்களைப் பலி வாங்கிவிட்டது. குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.

இறந்த குடும்பத்தினருக்கும், சிகிச்சை பெறுபவர்களுக்கும் நிதிஉதவி அறிவித்து இருப்பதுடன் அவர்களின், இறந்தவர்களின் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்தும் கவனத்தில் எடுத்துள்ளார்.

என்னதான் காரணம் சொன்னாலும் ஒவ்வொரு உயிரும் விலை மதிப்பற்றது. இனியும் யாருடைய உயிரும் போகக்கூடாது.

இதற்கு முன்னர் இதுபோன்ற நிகழ்வுகள் தமிழ்நாட்டில் நடந்துள்ளது என்று சொல்லி இச்சம்பவத்தை ஒப்பீடு செய்ய முடியாது. இனிவரும் காலங்களில் மீண்டும் கள்ளச்சாராய மரணங்கள் நிகழக்கூடாது.

அரசு உரிய நடவடிக்கைகளை, உறுதியுடன் செயல்படுத்த வேண்டும். பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் சொல்வதுபோல, "கள்ளக்குறிச்சியே கடைசியாக இருக்கட்டும்"!

- கருஞ்சட்டைத் தமிழர்

Pin It