பின்நவீனமும் விளிம்பு நிலையினரும்
தொடக்க காலப் பின்நவீனச் சிந்தனைகளில் அரசியல் என்பது மையப்படுத்தப்பட்டதாக இருப்பதே அநீதியாக அறிவிக்கப்பட்டது. அரசனின் அதிகாரத்திற்கு நான்கு வகையான படைகளும் மக்களைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்பட்டன. அதையே இன்றைய அரசுகள் நவீன ஆயுதங்கள் கொண்டு செய்கின்றன. ஏதோ ஒரு வகையில் அதிகாரம் மக்களை விளிம்பு நிலையாக்கி வைத்து தன் ஆட்சியை நிகழ்த்துகிறது என்றனர். ஒரு சமூகத்தில் பல்வேறு அடுக்குகள் உள்ளன. அதில் விளிம்பாக்கப்பட்ட மக்கள் என்போர் வெகு மக்களின் நியதிகளுக்கு உட்படாதவர்கள் ஆவர். குடும்ப அமைப்பில் தன்னை இணைத்துக் கொள்ளாத பெண்கள் பரத்தையர் ஆக்கப்படுவது போல, மனநிலை பிறழ்ச்சியானவர்கள், நோயுற்றவர்கள், வறுமைக்கு ஆளானவர்கள், பிச்சைக்காரர்கள், அரவாணிகள் எனப் பலரும் விளிம்பாக்கப்பட்டவர்கள் ஆவர். பெருங்கதையாடலுக்கு மாற்றான சிறுகதையாடலை முன்னிறுத்தல் என்று இதனை பின்நவீனத்துவம் கூறுகிறது, “விளிம்புகள் ஒரு படித்தனாவை அல்ல. ஒற்றைக் கருத்தியல் கொண்டவையுமல்ல. விளிம்பு என்பது ஒரு ஒப்பீடான கருத்தாக்கமும் கூட ஒரு மையத்திற்கு விளிம்பாக இருக்கின்ற ஒன்று அதனினும் விளிம்புடன் ஒப்பிடும் போது மையமாகச் செயல்படுகிற வாய்ப்பு உண்டு”1 என்று அதிகாரத்துவம் செயல்படுவது போல ஒற்றைத் தன்மையில் விளிம்பினர் இருப்பதில்லை. அதன் அடிப்படையே பன்மைத்துவம் அல்லது வித்தியாசம்தான். வித்தியாசம் என்பது ஒரு படித்தானது என்பதிலிருந்து வேறுபட்டது. ஒரே உண்மை, ஒரே நீதி என்பது எப்படி சாத்தியமில்லையோ அது போல ஒரே மாதிரியான பாத்திரங்கள் சமூகத்தில் இருப்பதில்லை.
தமிழ்ச் சமூகத்தில் இலக்கியங்களில் பாண்டித்யம் என்பது போற்றப்பட்ட சூழலில் பேச்சு மொழியையும் எளிய மக்களையும் பாத்திரங்களாகக் கொள்ளும் போக்கு உருவானது. அது இலக்கியத்தில் நிகழ்ந்த பெரிய மாற்றம் என்றே கொள்ளலாம். குறிப்பாக பார்ப்பன, வெள்ளாளச் சாதியினரின் எழுத்துக்கள் மேட்டிமைத் தன்மையோடு இருந்ததற்கு மாறாக ஒதுக்கப்பட்ட, ஓரங்கட்டப்பட்ட, பாட்டாளி மக்களை பாத்திரங்களாகச் சித்திரிக்கும் போக்கு திராவிட இயக்கக் கருத்தியல்களால் உருவானது. அது மார்க்சிய சிந்தனையினாலும் ஏற்பட்டது. “தமிழகத்தில் ஐம்பது, அறுபதுகளில் திராவிட எதிர்ப்பிலக்கியதில் ஒரு புனித ஏழை கதாநாயகனான். பண்ணைகளிடம் வேலை பார்க்கின்ற வேலையாட்கள், வண்டிக்காரர்கள், நகரங்களிலிருந்த ரிக்ஷாக்காரர்கள், குப்பை கூட்டுபவர்கள், விதவைகள், விபச்சாரிகள், அனாதைகள் போன்றவர்கள் இத்தகைய புனித ஏழையின் பிம்பத்தை அடைந்தார்கள்”2 என்று அடித்தட்டு மக்கள் விளிம்பிலிருந்து மையப் பாத்திரங்களாக மாறிய நிலைமையைப் பற்றிக் கூறுகிறார் ராஜ்கௌதமன். ஏழை என்னும் புனிதப் பாத்திரம் என்ற அடிப்படையில் அவர்கள் கடுமையான ஒடுக்குமுறைகளை பண்ணையார்களால் எதிர்கொள்கிறார்கள் என்று சித்திரிக்கப்பட்டமையைப் பற்றிய பகடியை இக்கூற்றில் வெளிப்படுத்துகிறார்.
அவரே விளிம்பு நிலைப் பட்ட மக்களை புறக்கணிக்கப்பட்ட மக்கள் என்று அழைக்கிறார். Subaltern என்பதற்கு விளிம்பு நிலை மக்கள், ஓரப்பகுதி மக்கள் என்று பொருள் கூறப்படுகிறது. குறிப்பாக இனம், வர்க்கம், பண்பாட்டுப் பால், சாதி, இனக்குழு ஆகிய பிரிவுகளில் தள்ளப்பட்ட மக்கள் திரள்களை இச்சொல் குறிப்பது வழக்கம். வேறு விதத்தில் கூறுவதானால் இதுவரை புனைந்துரைக்கப்பட்ட மேலாதிக்கப் பிரிவினரின் வரலாறுகளால் பொருட்படுத்தப்படாத அல்லது புறக்கணிக்கப்பட்ட மக்கள் திரள்களைக் குறிக்க இச்சொல் பயன்படுத்தப்படுகிறது.”3 என்று குறிப்பிடுகிறார். புறக்கணிக்கப்பட்ட மக்கள் திரளில் அடையாளப்படுத்தப்படும் மக்களை மூன்று வகையாகவும் சிலர் மேலும் சிலரை இணைத்துக் கூறுவது வழக்கமாக இருக்கிறது என்றும் குறிப்பிடுகிறார்.
சமூகத்தின் பார்வையில் மனிதர்களின் செயல்பாடுகள் பல்வேறு மதிப்பீடுகளுக்கு உள்ளாகின்றன. நாகரிக மனிதன், நாகரிகமற்ற மனிதன் என்ற பகுப்புகள் காணப்படுகின்றன. அறிதல் முறையிலும் இத்தகைய பாகுபாடு இருக்கிறது. அறிவாளி, முட்டாள் என்பது போன்ற பகுப்புகள் ஒதுக்குதலுக்கும் விலக்கப்படுதலுக்கும் காரணமாகின்றன. இதனை பகுத்தறிவின் வன்முறை என்று பின்நவீனத்துவம் கூறுகிறது. அறிதல் முறையில் அறிஞர், முட்டாள், பைத்தியம் என யாவருடைய கருத்தையும் ஒதுக்க முடியாது என்று குறிப்பிடுகிறது. “மாறாக அறிவு முற்றிலும் ஒன்றுடன் ஒன்று பொருந்தாத எண்ணற்ற பல்வேறு மாற்றுச் சாத்தியக் கூறுகள் நிரம்பிய பெரும் சமுத்திரமாக இருக்கிறது. எந்தப் பிரச்சினையும் என்றென்றைக்குமாய்த் தீர்க்கப்படுவதில்லை. எனவே எந்தக் கருத்தையும் நாம் ஒவ்வாது எனத் தூக்கி எறிய முடியாது. துறை வல்லுநர்கள், மாபெரும் அறிஞர்கள் போன்றோரின் கருத்துக்கள் மட்டுமின்றி சாதாரண மக்கள், முட்டாள்கள், பொய்யர்கள், ஏமாற்றுப் பேர்வழிகள், பைத்தியங்களின் உளறல்கள் என எதையும் பயன்படாது உண்மைக்குப் பொருந்தாது எனத் தூக்கி எறியும் உரிமை நமக்கு இல்லை”4 என்று குறிப்பிடுகிறார் அ.மார்க்ஸ். எனவே உயரிய அறிவையும், நுட்பமான திறனையும் கொண்டவர்களே அறிவுக்குச் சொந்தக்காரர்கள் என்னும் பகுத்தறிவு சார்ந்த வன்முறைக்கு ஒழுங்கவிழ்ப்பாளர்களான பின்நவீனத்துவர் முடிவு கட்டுகின்றனர்.
பகுத்தறிவின் வன்முறையைப் போலவே பண்பாட்டின் வன்முறையும் பிறரை ஒடுக்கும் வகையிலானது என்பதை அறிய முடிகிறது.
விளிம்பு நிலை பற்றிய அசூயை இருந்து வருகிறது. “மரபு வழி நமக்குக் கையளிக்கப்பட்டுள்ள இலக்கியத் தொகுதியில் விளிம்பு நிலை மக்கள் குறித்த மேட்டிமைச் சக்திகளின் பார்வையினூடான பதிவுகள் மட்டுமே நமக்குக் கிடைத்துள்ளன. மிகச் சமீப காலம் வரை விளிம்பு நிலைக் குரல்கள் இங்கு பதிவு செய்யப்படவில்லை.”5 என்ற கருத்தின் அடிப்படையில் இரண்டாயிரமாண்டு கால இலக்கிய வரலாற்றில் மேட்டிமைப் பார்வையினூடாகவே பதிவுகள் காணப்படுகின்றன. திராவிட, மார்க்சி, தலித்திய, பெண்ணிய மற்றும் விளிம்பு நிலை கருத்தாக்கங்கள் மேலெழுந்து வந்த சூழலில்தான் விளிம்பு நிலையில் ஆட்படுத்தப்பட்டகள் முதன்மைப் பாத்திரங்களாக உருவாகும் நிலை ஏற்பட்டது. ஆனால் பார்ப்பனிய, வெள்ளாளர்களின் பிரதிகளில் அடித்தட்டு மக்கள் சித்திரிக்கப்படும் விதம் கீழ்மையாக இருக்கிறது. இதற்கு புதுமைப்பித்தனின் சிறுகதைகள் உதாரணம் கொள்ளலாம் “புதுமைப்பித்தனுக்கு ஊர் என்றால் அது பார்ப்பனர், வெள்ளாளர் மற்றும் அவர்களுக்குச் சேவகமும் திருட்டுத் தொழிலும் செய்கிற மறவர்களும் மற்றவர்களும் வசிக்கும் இடம்தான். சேரிப் பறையருக்கு இதில் இடமில்லை. பறையர்களும் மற்றவர்களும் மனித மேன்மையில் ஒரு படி குறைந்தவர்கள் என்கிற சாய்வுடனேயே புதுமைப்பித்தன் பிரதிகளில் காட்டப்படுகின்றனர். குடிகாரர்கள், அசுத்தமானவர்கள் இவற்றின் விளைவாக இழிநிலை எய்தியவர்கள், தங்களின் இழிவு பற்றிய பிரக்ஞையற்றவர்கள், உரிமை வேட்கையைச் சீர்திருத்த மனம் கொண்ட பார்ப்பன வேளாளர் ஊட்டினால் கூட அதனை ஏற்றுக் கொள்ள மறுப்பவர்கள், முரடர்கள், எடுபிடிகளாகவும், அடியாட்களாகவும், வைப்பாட்டிகளாகவும், விபச்சாரிகளாகவும் இருக்கத் தகுதியானவர்கள் என்பதாகவே பறையர்களும் மறவர்களும் புதுமைப்பித்தனின் பிரதிகளில் இடம்பெறுகின்றனர்”6 என்று அ.மார்க்ஸ் குறிப்பிடுகிறார். இத்தகைய விளிம்பு நிலையினர் குறித்த பார்வை காலப் போக்கில் மாற்றம் பெற்றிருக்கிறது. அதாவது விளிம்பில் உள்ள மக்கள் மையத்திற்கு வந்துள்ளனர். அவர்கள் வாழ்வு மேம்பாட்டினை அடைந்திருக்கிறது.
அந்த வகையில் விளிம்பு நிலை மக்களை மையப் பாத்திரங்களாக்கிய கூர்ந்த நோக்கினை கி.ராஜநாராயணன் சிறுகதைகளில் காணமுடிகிறது.
கோமதி செட்டியார் திருநங்கை
சமூகத்தில் அரவாணிகள் என்றும் மூன்றாம் பாலினத்தவர் என்றும் அழைக்கப்படுபவர்கள். சிலர் இவர்களை இழிவாக ‘அசக்கு’ என்றும் ஒம்போது என்றும் அலி என்றும் அடையாளம் சொல்வார்கள். அவர்கள் சமூகத்தால் ஒதுக்கி வைக்கப்பட்ட பாலினத்தவராக இருக்கின்றார்கள். இன்றைக்கும் கூட அந்நிலை மாறவில்லை. ஆயினும் சிலர் தம் நிலையை கல்வி, வேலை வாய்ப்புகளால் உயர்த்திக் கொண்டுள்ளனர் என்பதைக் காணமுடிகிறது.
கி.ரா.வின் கோமதி என்னும் சிறுகதையில் மூன்றாம் பாலினத்தவராக கோமதி குறிப்பிடப்படுகிறார். அவரை பெண்பாலாகக் குறிக்காமல் ஆண்பாலாகக் குறிக்கும் பொருட்டு கோமதி செட்டியார் என்றே குறிப்பிடுகிறார். ஒதுக்கப்பட்ட தன்னிலையாக இருக்கும் கோமதி அக்கதையின் நாயகத் தன்மையை அடைய கி.ரா.வின் முற்போக்குச் சிந்தனையே காரணமாக அமைந்திருக்கிறது. குழந்தையிலிருந்தே பாலின மாறுபாடு ஏற்படுவது பற்றிய பிரக்ஞை அற்று வளரும் நிலையினைப் பற்றி “இவனுக்குச் சிறு பிராயத்திலிருந்தே ஜடை போட்டு பூ வைத்துக் கொள்வதிலும், வளை அணிந்து கொள்வதிலும் கொள்ளை ஆசை. உருவம் ஆணாக இருந்தாலும் பெண்ணாகவே வளர்ந்து வந்தான். நீட்டி, நீட்டி தலை அசைத்துப் பேசுவது அவனுக்குக் குழந்தையாக இருக்கும் போதுதான் பொருத்தமாக இருந்தது. பெண் குழந்தைகளோடுதான் விருப்பமாக விளையாடப் போனான்” (கி.ரா. சிறுகதைகள், ப.123) என்ற கூற்றில் குழந்தையாக இருக்கும் கோமதி என்று பெயர் வைத்து விடுகிறார்கள். ஆனால் அவன் பெண்ணின் பண்புகளைக் கொண்டிருக்கிறான்.
பெண்களோடு பெண்களாகவே வளர்ந்து வந்தான். பெண்களும் இவனை வேறுபாடுடன் நடத்துவதில்லை. சமூகத்தில் ஒதுக்கப்படும் நிலையில் உள்ள ஒருவன் மீது சமூகம் கொண்டிருக்கும் ஆதர்சம் இவருடைய கதையில் வெளிப்படுகிறது. “பெண்கள் இவனை வித்தியாசமாக நினைப்பது இல்லை. நடத்துவதும் இல்லை. இவன் எங்கு சென்றாலும் இவனைப் பிரியமாக வைத்துக் கொள்வார்கள்” (கி.ரா.சிறுகதைகள், ப.125) இவனுக்குச் சமையலில் மிகுந்த திறமை இருந்தது என்பதால் ஒரு கல்யாணத்தில் சென்ற இடத்தில் ரகுபதி நாயக்கரின் வீட்டில் சமையல் வேலைக்கு அழைத்துச் செல்கிறார்கள்.
அவனுடைய நடையுடை பாவனைகள் மற்றவர்களிடமிருந்து வித்தியாக இருப்பதை கேலி செய்யாமல் ரஸித்து சிரித்தார்கள் என்று கூறப்படுவதைக் காணமுடிகிறது. “பக்கத்து வீட்டுப் பெண்களெல்லாம் இவனைப் பார்க்க வந்து விட்டார்கள். இவனுடைய நடையையும் நீட்டிப் பேசுகிற பேச்சையும் அசைவுகளையும் கண்ட பெண்கள் சிரித்து ரஸித்தார்கள்” (கி.ரா.சிறுகதைகள், ப.126) இவ்வாறு கேலி செய்து ஒதுக்கம் செய்ய வேண்டிய பாத்திரமான கோமதி பாத்திரம் பிற பாத்திரங்களை விடவும் தகுதி வாய்ந்த முதன்மையான பாத்திரமாக வார்க்கப்பட்டிருப்பதைக் காணமுடிகிறது.
வேறுபட்ட பாலாக இருந்தாலும் கோமதிக்கும் காதல் உணர்வுகள் வருகிறது என கி.ரா. சுட்டுகிறார். ரகுபதி நாயக்கரின் மகன் இவளுடைய சமையல் குறித்துப் பாராட்டுகிறார். கோமதியைப் பார்க்கவும் விரும்புகிறார். ஆனால் கோமதியை நேருக்கு நேராகப் பார்த்து அதிர்ச்சி அடைகிறார். “ரகு திரும்பிப் பார்த்தான், முகத்தச் சுழித்தான். இந்த ரஸவிஹாரத்தை அவன் ஆண்மை நிறைந்த உள்ளத்தால் தாங்க முடியவில்லை” (கி.ரா.சிறுகதைகள், ப.129) என்று குறிப்பிடுவதில் ரகு கோமதியைப் பார்த்து சிறிது அருவருப்பை வெளிப்படுத்துவது கூறப்படுகிறது. சீ வெளியே போ என்றும் உதாசீனம் செய்கிறான். இதனால் மனம் உடைந்து போகிறான் கோமதி. அவன் அவ்வாறு நடந்து கொண்டதை ஆட்சேபித்த அவனுடைய தங்கை இரக்கம் கொள்ள வேண்டிய ஒருவனிடம் உதாசீனத்துடன் நடந்து கொண்டது தவறு என்று சுட்டிக் காட்டுகிறாள். அவன் கோமதி மேல் இரக்கம் கொள்கிறான். கோமதியை நல்லமுறையில் நடத்த தீர்மானிக்கிறான். அவனுக்கு கோமதி பால் கொண்டு போய் கொடுக்கிறான். ரகுவின் நாடியைப் பிடித்து கொஞ்சுவது போல் பாலைக் குடிக்கச் சொல்கிறான். இதனால் எரிச்சல் அடைந்த ரகு அவனை ஓங்கி அறைந்து விடுகிறான். ரகுவின் மேல் அவனுக்கு சிறிது காதல் இருந்திருக்கும் அதனால்தான் உரிமையோடு தொட அவனோ வெறுப்படைந்தான். ரகு ஊருக்குச் சென்று விடுகிறான். வழக்கம் போல கோமதி தன் வேலைகளைச் செய்தாலும் ஈடுபாட்டினை இழந்தவன் போல இருக்கிறான். பின்பு அந்த வீட்டை விட்டு வெளியேறிச் சென்று விடுகிறான். இவ்வாறு ஒரு பாத்திரத்தை முதன்மைப் பாத்திரமாக படைத்து அக்கதையின் நடுநாயகமாக நிறுத்துகிறார் கி.ரா.
அவத் தொழிலாளர்
இச்சிறுகதை அரை ஊமையும் வாய் கொன்னிப் பேசும் மூட்டை தூக்கும் தொழிலாளி. கருகருவென்று இருக்கும் அவனைக் கண்டாலே யாராயிருந்தாலும் ஒரு அறை விடணும் போல இருக்கும் என்று கூறுகிறார். அவனைச் சீண்டுவது பிறருக்கு மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் அவன் அவர்கள் மேல் எரிச்சலும் கோபமும் வந்து அடிக்கப் பாய்வான். கல்லைத் தூக்கி எறியப் போவான். ஆனால் எறிய மாட்டான். “எதிர்பாரா சமயத்தில் ஒரு கண்டக்டரோ, டிரைவரோ அவன் முதுகில் ஒரு குடுப்புக் குடுப்பான். வீல் என்று அவன் அடித்தவன் மேல் பாயும் போது மற்றவன் அதை விட வேகமாக ஊமையின் முதுகில் ஒன்று கொடுத்து அவனை திசை திருப்புவான். அடிகளும் வேதனையும் தாங்க முடியாமல் போகும் போது அந்த அனாதை ஓடிச் சென்று ஒரு பெரிய்ய கல்லை இரண்டு கைகளாலும் தூக்கிக் கொண்டு வருவான். ஆனால் அவனிடமுள்ள நல்லகுணம் யார் மீதும் அதைப் போடமாட்டான்” (கி.ரா.சிறுகதைகள், ப.139) அவனை மேலும் பலபேர் அடித்துத் துன்புறுத்துவார்கள் என்று கூறுகிறார். மாற்றுத் திறனாளிகள் மற்றும் வயதானவர்களை உதாசீனப்படுத்தும் நிலை படிப்படியாக மறைந்து இன்று அவர்கள் அனைவரும் முதன்மை இடம் கொடுக்கப்படுபவர்களாக மாறிய நிலைமையினை ஒரு கிழவி இடைச் செவல் செல்ல பஸ் பயணத்திற்கான டிக்கெட் எடுப்பதற்காக நிற்பதும் திருநெல்வேலி பேருந்துகள் இடையில் நில்லா பேருந்து ஆகையால் கிழவியைக் கண்டு கொள்ளாமல் இருப்பதையும் பற்றிக் கூறி அத்தகைய நடத்துனர்கள், ஓட்டுநர்கள், பேருந்து உரிமையாளர்கள் இன்று இல்லை என்பதை உணர்த்தும் முகமாக “இதோ இருக்கும் இவர்களெல்லாம் தேவர்களா கண்டக்டர்கள்தானா? வயசான ஒரு கிழவியைக் கைலாகு கொடுத்து காரில் ஏற்றி விடுகிறானே. இப்போதெல்லாம் கிழவர்களுக்கும் குழந்தைகளுக்கும்தான் முதல் மரியாதை” (கி.ரா.சிறுகதைகள், ப.143) என்று பின்நவீனத்துவ உலகத்தில் ஒதுக்கப்பட்டவர்கள் முதல் மரியாதைத் தரப்படும் நிலை பற்றிக் கூறப்படுகிறது,
கறிவேப்பிலைகள்
முதியவர்களைத்தான் இந்தப் பெயர் இட்டு ஆசிரியர் குறிப்பிடுகிறார். கறிவேப்பிலைகள் தாளித்தவுடன் அதன் பணி முடிந்தது. அதை கீழே பொறுக்கிப் போட்டு விட்டுத்தான் சாப்பிடுவார்கள். அப்படித்தான் பப்புத் தம்பதியினர் இந்தக் கதையில் குறிப்பிடப்படுகின்றனர். அவர்களுக்கு சிறு இடம் குடியிருக்க இருந்தால் போதும். ஏதேனும் ஒரு வேலை பார்த்துக் கொண்டு காலத்தை ஓட்டி விடலாம். நல்ல சாப்பாடு கிடையாது, பார்த்துக் கொள்ள ஆட்கள் கிடையாது. சொந்த பந்தம் யாரும் இல்லை. இளவயதில் ஊருக்கு உழைத்தவராக பப்புத் தாத்தா குறிப்பிடப்படுகிறார். வயதாக வயதாக அவருடைய தேவை யாருக்கும் அவசியம் இன்றி போய் விட்டது. பப்புக் கிழவனும் கிழவியும் மட்டும் தங்களுக்குள் ஆதரவாக இருந்து கொள்கிறார்கள். அவர்களுடைய வாழ்க்கை லட்சியம் என்று எதுவுமில்லை. நல்ல சாப்பாடுதான் என்று கூறுகிறார் “அந்த வங்கிழடு தம்பதியர்க்கு இப்பொழுதெல்லாம் ஒரே ஒரு ஆசைதான். இழவு வீடுகளில் போய் உட்கார்ந்து இலை போட்டு அதில் நிறைய்ய நெல்லுச் சோறு போட்டு காரமும் புளிப்புமாயுள்ள பூசணிக்காய்க் குழம்பை தாராளமாய் விட்டு மூக்கில் நீர் சொட்டச் சொட்ட பெரிய பெரிய கவளமாகச் செய்து ஆசைதீரச் சாப்பிட வேண்டும் என்பதுதான்” (கி.ரா.சிறுகதைகள். ப.202) என்று கூறப்படுகிறது. அவர்களின் வாழ்வு ஒதுக்கப்பட்டதாக இக்கதையில் கூறப்படுகிறது. அதனால்தான் அவர்கள் கறிவேப்பிலைக்கு ஒப்பாக வாழ்கின்றனர் என்றும் கொள்ளமுடிகிறது.
ஜீவன்
ஊர்ப் பெண்கள் பகடி செய்து சிரித்து விளையாடும் ஆகருதியும் மனவளமும் கொண்டவனாக அங்குப்பிள்ளை இந்தக் கதையில் கூறப்படுகிறது. பெண்கள் தங்களுக்குள் சீண்டுவதற்கு அங்குபிள்ளையைத்தான் பயன்படுத்துவார்கள். “கிராமத்திலுள்ள குமரிப் பெண்டுகளுக்கு அங்குப்பிள்ளையைக் கண்டு விட்டாலே ஒரு வித குஷி வந்து விடும். ஜாடை செய்து ஒவ்வொரு வார்த்தைக்குமே ஜாடை செய்து ஒனக்கு (அங்குப்பிள்ளையைக் காட்டி) கலியாணம் (தாலி) கட்டுவதைப் போல கழுத்துப் பக்கம் கைகளைக் கொண்டு போய்) எப்போ (விரல்களை முஷ்டி மடக்கிக் குலுக்க வேண்டும்” (கி.ரா.சிறுகதைகள், ப.239) என்று அங்குப் பிள்ளையை பெரிதும் பகடியும் எள்ளலும் செய்வார்கள். அங்குப்பிள்ளை ஒரு அரைக்கால் பேச்சு ஊமை அவன் முன்னால் மூக்கில் கை வைத்து விட்டால் பழியாகக் கோபம் வரும். அவனது உடை உடுத்தும் விதமே எத்தகைய நிலையில் அவன் இருக்கிறான் என்பதை சுட்டுவதாக அமைந்து விடுகிறது “அவன் எப்பவும் துவைத்து நிழலில் உலர்த்திய ஒரு புழுக்க வாடையுள்ள பளுப்பு நிற வேட்டியையே உடுத்திக் கொண்டிருப்பான். துண்டுக்குப் பதிலாக மேலே போர்த்திக் கொண்டிருப்பதும் ஒரு வேட்டிதான். அதை ரெண்டாக மடித்துக் குறுக்கு வசத்தில் மேலே போட்டு இடது கக்ககத்துக்குள் அதன் மல்க்கோடிகளை இடுக்கிக் கொண்டிருப்பான்” (கி.ரா.சிறுகதைகள், ப.240) என்று அவனது உடை உடுத்தும் தன்மையில் அவனது இயல்பற்ற மனநிலை கூறப்படுகிறது. மேலும் அவனது முகலட்சணமும் பொருந்தா நிலையில் இருக்கும். “அவனுக்கு நான்கு முன்னத்தம் பற்கள் மிகவும் நீளம் பெரியவர்களின் பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் போது பற்கள் தெரியாமல் மரியாதைக்காக மூடிக் கொள்ள வேண்டும் என்று நினைத்து உதடுகளால் மறைத்துக் கொண்டு ஊ என்று இருப்பதைப் பார்க்கப் பரிதாபமாக இருக்கும்” (கி.ரா.சிறுகதைகள், ப.240)
இத்தகைய ஒருவனை தன் கதையின் மையப் புள்ளியில் வைத்து நகர்த்துகிறார் ஆசிரியர். அவனைச் சீண்டும் போது அவனது செயல்களை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. “நல்ல இளவட்டமான அங்குவை குமரிப் பெண்டுகள் விஷமில்லாத தண்ணிப் பாம்பு போல் நினைத்து நடத்தி வந்தார்கள்.”
(கி.ரா.சிறுகதைகள், ப.241) என்று அங்குப் பிள்ளை பெண்களால் பரிகசிக்கப்படும் ஆகுருதியாக இருப்பதும் அவர்களால் ஏளனத்திற்கு உள்ளாகும் தன்னிலையாக இருப்பதும் சுட்டப்படுகிறது.
இத்தகைய பாத்திரங்கள் ஏளனத்திற்கு மட்டும் ஆட்படுவதில்லை. சுயவதைககும் உள்ளாகிறார்கள். அங்குப்பிள்ளைக்கு பெண் தர மறுக்கும் சொந்தக்காரர்கள் அவனை உதாசீனம் செய்யும் போது மனமொடிந்து போகிறவனாக மாறி விடுகிறான். அவனிடம் கல்யாணம் பற்றிக் கேட்கும் போது வெட்கம் கொள்கிறான். தனக்கும் தன் தந்தை திருமணம் செய்து வைப்பார் என்று நம்புகிறான். அவனுடைய தம்பி ஆதிலிங்கத்திற்குக் கல்யாணம் நடக்கும் போது தனக்கும் கல்யாணம் நடக்கும் என்று அவனது தந்தை விளையாட்டாகச் சொன்னதை நம்பிக் கொள்கிறான். ஊமைகள் யாருக்கும் கல்யாணம் பெரும்பாலும் ஆவதில்லை என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார். அங்குவுக்கும் அதுதான் நிலைமை என்பது அவனுக்குத் தெரியவில்லை. அவனுக்கு யார் பெண் தருவார்கள். “ஆதிலிங்கத்திற்குக் கலியாணம் என்ற போது தமக்கும் சேர்த்தே கலியாணம் என்று நம்பி இருந்தான் அங்கு. கல்யாணம் ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த போது எங்கள் அப்பாவிடம் வந்து அங்கு தனக்குக் கலியாணம் என்ற பெருமையோடு சொன்னான். நாங்கள் எல்லோரும் அது நிஜம் என்றே நினைத்தோம். (ஆனால் பொதுவாக ஊமைகள் யாருக்கும் அநேகமாகக் கல்யாணம் ஆவது இல்லை)” (கி.ரா. சிறுகதைகள், ப.246) என்று அங்கு தனக்கும் கல்யாணம் என்று நம்பிக் கொண்டிருந்தவனுக்கு அவ்வாறு இல்லை என்று தெரிந்த போது ஆற்றாமையும் சுயபச்சாதாபமும் கூடி விடுகிறது. அழுது கொண்டே இருந்தவன் வீட்டிற்குள் சென்று விறகுக் கட்டையை எடுத்து சமையலறைப் பாத்திரங்களை எல்லாம் நொறுக்க ஆரம்பித்தான். அவனுடைய தந்தை வந்த போது விறகுக் கட்டையைக் காண்பித்து அடித்து விடுவதாக ஜாடை செய்கிறான். பின்பு இளந்தாரிகள் கூடி அவனைப் பிடித்து ஒரு அறையில் போட்டு அடைத்து விடுகிறார்கள். அப்பா அவனை எங்கே என்று கேட்ட போது அறைக்குள் மூடி வைத்ததாகக் கூறவும் அறையைத் திறந்து பார்க்க அங்குப்பிள்ளை அலங்கோலமாகக் கிடக்கிறான். “அவன் இறந்து போய் விட்டானா? மயங்கிக் கிடக்கிறானா என்று தெரியவில்லை. வேட்டி பூராவும் முன் பக்கத்தில் ரத்தத்தால் நனைந்து இருந்தது. உடம்பில் எங்கும் காயம் தட்டுப்படவில்லை எங்களுக்கு. கொஞ்சம் விலகியிருந்த நனைந்த வேட்டியை நீக்கிப் பார்த்த போதுதான் தெரிந்தது. ஓரே ஒரு கழிப்பட்ட இரும்புத் தகட்டினால் அங்கு தன்னுடைய உயிர்த் தலத்தை அறுத்துக் கொண்டான்” (கி.ரா.சிறுகதைகள், ப.249) என்று அங்கு தன் முடிவைத் தானே எழுதிக் கொள்கிறான்.
இவ்வாறு விளிம்பு நிலைப் பாத்திரங்களை தன் சிறுகதைகளில் மையமாக்கி அவர்களை உரிய மதிப்போடு நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் எழுதினார்.
முடிவுரை
விளிம்பு நிலை ஆய்வுகளில் மக்களின் வாழ்வியல் நிலை என்பது பல அடுக்குகளில் பகுக்கப்பட்டிருப்பதும் குறிப்பிட்ட சாதி அல்லது வர்க்கத்தினர் மட்டும் மேல் நோக்கிய வளர்ச்சியில் இருப்பதும் பெருவாரியான அடித்தட்டு மக்கள் போதிய கவனிப்பற்று வாழ்தலை ஒரு கடமையாகச் செய்யும் நிலையும் இருந்து வந்தமை சுட்டிக்காட்டப்பட்டது. தமிழ் இலக்கியத்தில் விளிம்பு நிலைப்பட்ட மக்கள் பல வகையினராக இருக்கின்றனர். அவர்கள் பற்றிய ஒவ்வாமையை தமிழ் இலக்கிய வரலாற்றில் பார்ப்பனிய, வேளாள எழுத்தாளர்கள் வெளிப்படுத்தினர். திராவிட, மார்க்சிய, பெண்ணிய, தலித்திய நோக்கிலான எழுத்துக்கள் ஒதுக்கப்பட்ட, உரிமை மறுக்கப்பட்ட, பாட்டாளி வர்க்கத்தினரை தம் கதைகளில் முதன்மைப் பாத்திரங்களாக்கினர். அவர்களது வாழ்வியலும் கண்டுணரப்பட வேண்டியவையே என்று உணர்த்தினர். அந்த வகையில் விளிம்பு நிலைப் பாத்திரங்களை மையப் பாத்திரங்களாக்கியவர்கள் என்று இவர்களைக் கருதலாம். அந்த வரிசையில் கரிசல் காட்டு மக்களில் பண்ணையார், இடைநிலைச் சாதியினரின் வாழ்வியலை மட்டுமின்றி ஒதுக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட தன்னிலைகளாக வாழும் மக்களையும் தம் சிறுகதைகளில் முதன்மைப்படுத்தியவராக கி.ரா. விளங்குகிறார். அவருடைய சிறுகதைகளில் திருநங்கைககள், மூப்பினை உடைய வயதானவர்கள், உடல் ஊனமுற்றவர்கள், அடித்தட்டு மக்கள் எனப் பலரும் முதன்மைப் பாத்திரங்களாக்கப்பட்டு அவர்களது வாழ்வியல், அவர்களது உணர்வுகள் மையப்படுத்தப்பட்டுள்ளன.
அடிக்குறிப்புகள்
1. பொ.வேல்சாமி, அ.மார்க்ஸ்; விளிம்பு நிலை ஆய்வுகளும் தமிழ்க் கதையாடல்களும், ப.30
2. ராஜ்கௌதமன், தலித்திய விமர்சனக் கட்டுரைகள், ப.20
3. ராஜ்கௌதமன், ராஜ்கௌதமன் கட்டுரைகள், ப.131
4. அ.மார்க்ஸ், பின்நவீன நிலை, ப.75
5. மேலது, ப.31
6. அ.மார்க்ஸ், உடைபடும் மௌனங்களும் சிதறுண்ட புனிதங்களும், ப.412
துணை நூற்பட்டியல்
1. கி.ராஜநாராயணன், கி.ரா.சிறுகதைகள், அன்னம் வெளியீடு, தஞ்சாவூர், 2022
2. பொ.வேல்சாமி, அ.மார்க்ஸ், விளிம்பு நிலை ஆய்வுகளும் தமிழ்க் கதையாடல்களும், புலம் வெளியீடு, சென்னை, 2010
3. ராஜ்கௌதமன், தலித்திய விமர்சனக் கட்டுரைகள், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், 2011
4. ராஜ்கௌதமன், ராஜ்கௌதமன் கட்டுரைகள், நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, 2021
5. அ.மார்க்ஸ், பின்நவீன நிலை, புலம் வெளியீடு, சென்னை, 2010
6. அ.மார்க்ஸ், உடைபடும் மௌனங்களும் சிதறுண்ட புனிதங்களும், அடையாளம் பதிப்பகம், திருச்சி, 2019
கட்டுரையாளர்கள்: ரெ.காயத்ரி, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ் உயராய்வு மையம், ஸ்ரீ எஸ் இராமசாமி நாயுடு ஞாபகார்த்தக் கல்லூரி, சாத்தூர்.
& முனைவர் இரா.பூங்கோதை, இணைப் பேராசிரியர், தமிழ்த்துறைத் தலைவர், தமிழ் உயராய்வு மையம், ஸ்ரீ எஸ்.இராமசாமி நாயுடு ஞாபகார்த்தக் கல்லூரி, சாத்தூர்.