எழுத்தாளர் பாமா அவர்களின் சமீபத்திய நூலான 'விருட்சங்களாகும் விதைகள்' நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடாக வந்துள்ளது. ஓர் ஆசிரியராக அவர் பல ஊர்களில் பல விதமான பள்ளிகளில் பணியாற்றிப் பெற்ற அனுபவங்களின் பிழிசாறாக இந்நூல் இருக்கிறது. இதை கட்டுரையாக- அ புனைவாக எழுதாமல், ஒரு புனைவாக எழுதியிருப்பது நூலுக்குக் கூடுதல் கனமும் உணர்வெழுச்சியும் தருகிறது.

writer bamaஆசிரியர்கள் தங்களின் வகுப்பறை அனுபவங்களை எழுதும் பயணத்தை பேராசிரியர் ச.மாடசாமி துவங்கி வைத்தார். எனினும் அத்திசையில் எழுதிட பள்ளி ஆசிரியர்கள் இன்னும் முனைப்புக் காட்டவில்லை. ச.க.முத்துக்கண்ணன், கலகல வகுப்பறை சிவா,மதுரை சரவணன், மதன்குமார் போல வெகு சிலரே முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர். அவ்வகையில் மிக முக்கியமான பங்களிப்பினை பாமா வழங்கியுள்ளார்.அரசுப்பள்ளிகள், தனியார் பள்ளிகள் இரண்டிலும் பணீயாற்றிய அனுபவம் அவருக்கு இருப்பதால் மொத்தப் பள்ளிக்கல்வியின் ஒரு குறுக்குவெட்டுத் தோற்றத்தை அவரால் இந்நூலில் வழங்கிவிட முடிந்திருக்கிறது.

மலர்விழி என்கிற ஒரு ஆசிரியைக் கதாபாத்திரத்தின் அனுபவங்களாக இந்நூல் விரிகிறது. பல பள்ளிகளில் அவள் பணி புரிந்தாலும் எல்லாப்பள்ளிகளிலும் அவள் சந்திப்பது வறுமையான பின்னணியிலிருந்து வரும் குழந்தைகளைத்தான்.

“வாழ்வின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாத குழந்தைகளின் மனநிலை, எதிர்பார்ப்பு, ஏக்கம், ஏற்றத்தாழ்வு நிறைந்த இந்தச் சமுதாயத்தில் அவர்கள் சந்திக்கும் இன்னல்கள், கலாச்சாரரீதியாக ஏற்படுத்தப்படும் புறக்கணிப்புகள் இவற்றையெல்லாம் கணக்கிலெடுக்காமல் கற்பித்தல் என்பது வெறும் இயந்திரகதியான ஒரு பணியாகவே இருக்குமென்பதை அனுபவத்தில் உணர்ந்திருந்தாள்.”

bama book on school childrenவகுப்பறையில் மட்டுமே குழந்தைகளைச் சந்திக்கும் ஆசிரியராக அல்லாமல் வாடிய முகங்களைக் கண்டபோதெல்லாம் வாஞ்சையுடன் அவர்களோடு உரையாடி பள்ளி முடிந்த பின் அவர்களைப் பின் தொடர்ந்து அவர்களின் குடிசைகளுக்குச் சென்று அவர்கள் எத்தகைய பொருளாதார மற்றும் கலாச்சாரப் பின்னணியிலிருந்து வருகிறார்கள் என்பதை அறிகிறார்..விதவிதமான பின்னணிகளிலிருந்து வகுப்புக்கு வரும் எல்லாக் குழந்தைகளுக்கும் ஒரே விதமான அணுகுமுறை சரியாக இருக்காது என்பதை அனுபவத்தில் புரிந்துகொண்டு தன்னை மாற்றிக் கொள்கிறார் மலர்விழி.தொடர்ந்து குழந்தைகளிடமிருந்து கற்றுக்கொள்ளும் மனநிலையோடு பணியாற்றிய ஆசிரிய அனுபவம் நூல் முழுக்க விரவிக் கிடக்கிறது.

நிஷா என்கிற குழந்தை பத்தாம் வகுப்புப் படிக்கும்போதே அவளுக்குத் திருமண ஏற்பாடு நடக்கிறது. படிப்பில் மிகுந்த ஆர்வமுள்ள அக்குழந்தையின் பெற்றோரிடம் பேசித் திருமணத்தைத் தடுத்து அவள் படிப்பைத் தொடர மலர்விழி முயற்சிகள் எடுக்கிறார். ஆனால் நிஷாவின் அப்பா வந்து, “டீச்சர், உங்க வேல எதுவோ அத மட்டும் பாருங்க. இது எங்க குடும்ப விசயம். இதுல நீங்க தலையிடத் தேவை இல்ல. ஏம்பொண்ணுக்கு எப்ப என்ன செய்யணும்னு எனக்குத் தெரியும். நல்லாச் சொல்லிக்கொடுத்தீங்க.நல்லா மார்க் வாங்கீட்டா. அதுபோதும். நல்ல மாப்பிள வரும்போது உட்டுறக்கூடாது. இவா படுச்சு முடிக்கிற காலத்துல இதுமாதிரி மாப்பிள வரும்னு என்ன நிச்சயம்? காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ளணும் டீச்சர். அதுனால இந்த விசயத்துல தலையிடுறத இன்னையோட உட்டுறுங்க” என்று எச்சரித்துவிட்டுப் போகிறார். தன் நெருங்கிய தோழியிடம் விவாதித்து சட்டப்படி இதைத் தடுக்க முயற்சி எடுக்கலாமா என்று யோசிக்கிறார். தலைமையாசிரியரிடம் இருவரும் சென்று பேசுகிறார்கள். அவரோ, "உங்க ரெண்டு பேத்துக்கும் வேற வேல வெட்டி ஒண்ணுமில்லையா?அந்தப் பொண்ணாட அப்பா பெரிய பணக்காரரு. ஊருக்குள்ள மதிப்பும் மரியாதையும் உள்ளவரு. அவரப் போயி போலீசு அது இதுன்னு இழுத்தா என்னாகும்னு தெரியாம வௌ£ட்டுத்தனமா பேசுறீங்க. அவரு மகளுக்கு அவரு செய்யுறாரு. நீங்க போயி உங்க வேல எதுவோ அத மட்டும் பாருங்க. தேவையில்லாத விசயத்துல தலையிடாம இருங்க. அதுதான் உங்களுக்கும் நல்லது” என்று சத்தம் போட்டு அனுப்புகிறார்.

பெண் குழந்தைகளின் கல்விக்கான நியாயமான கனவுகளைக்கூட பெற்றோரே கருக்குகின்ற கொடுமை இன்றைக்கும் நடந்துகொண்டே இருக்கிறது. அதை என்னான்னு கேள்வி கேட்கக்கூட நாதியில்லை.எங்க குடும்ப விசயம் என்கிற வார்த்தைகளுக்குள் குழிதோண்டிப் புதைத்து விடுகிறார்கள். அக்கறையுள்ள ஓர் ஆசிரியரால் அதைக்கண்டு பதைக்கத்தான் முடிகிறது. பிரம்மாண்டமான இந்த சமூகத்தின் பிற்போக்குத் தனத்தை எதிர்த்துத் தனியாளாக அவரால் ஒன்றும் செய்துவிட முடியவில்லை. சட்டங்களால் மட்டும் ஒன்றும் செய்துவிட முடியாது. மனமாற்றம் தேவைப்படுவதை நிஷாவின் கதை நமக்கு உணர்த்தி நிற்கிறது. நிஷாவின் கதையைப் போலப் பல கிளைக்கதைகள் இந்த நூலில் அடுக்கடுக்காக வந்துகொண்டே இருக்க, நாம் அதிர்ந்துதான் போகிறோம்.

சாப்பாடும் அடிப்படைத் தேவைகளுமே கிட்டாத குடும்பச்சூழல் ஒருபுறம் எனில் மறுபுறம் வசதி இருந்தாலும் பெண் குழந்தை என்றால் காலாகாலத்திலே ஒருத்தன் கையிலே பிடிச்சுக் கொடுத்துட்டாப் போதும் என்கிற ஆணாதிக்க சமூக உளவியல் மறுபுறம்.

மலர்விழிக்குத் திருமணம் ஆகிறது. சென்னை வாழ்க்கை துவங்குகிறது. வேலையை விட்டுவிட்டுக் கணவனுடன் வாழச்செல்கிறாள். கணவனுக்கு இவள் வேலைக்குச் செல்வது பிடிக்கவில்லை. ஆனாலும் போராடிப் போராடிச் சம்மதம் பெற்று வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக்குலேசன் ஆங்கில வழிப் பள்ளியில் வேலைக்குச் சேருகிறாள்.

“இங்குள்ள பிள்ளைகளிடம் தனது அணுகுமுறை வேறுவிதமாக இருக்க வேண்டும் என்பதை விரைவில் புரிந்துகொண்டாள். இவர்களுக்குப் படிப்பு என்பதே பயங்கரமான போட்டிதானென்பதை அறிந்து அதிர்ந்து போனாள். எல்லோருமே முதல் மாணவியாக வரவேண்டும் என்று போட்டி போட்டுக்கொண்டு படித்தனர். அது ஓர் ஆரோக்கியமான போட்டியாக இல்லை என்பதுதான் மலர்விழிக்கு வருத்தத்தைத் தந்தது. பணபலமும் அந்தஸ்தும் அதிகாரமும்தான் அங்கு மதிப்புக்குரியவையாக இருந்தன. மனித நேயமுள்ள உறவுகளுக்கு அங்கு வரவேற்பில்லை என்பதைப் போகப்போகத் தெரிந்துகொண்டாள். தான் இதற்கு முன் பணி புரிந்த பள்ளிக்கும் இப்பள்ளிக்கும் இடையே இருந்த வேறுபாடு அவளை அதிர வைத்தது.

சமுதாயத்தின் விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கும் இவர்களுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. சாதாரண மக்களின் சங்கடங்களும் வாழ்க்கைப் போராட்டங்களும் இவர்களுக்குத் தெரியாத உலகங்களாகவே இருந்தன... மலர்விழிக்கு என்னவோ இது செயற்கைத்தனமான வாழ்க்கையாகத் தெரிந்தது. ஒரு பந்தபாசமற்ற உறவுகளற்ற இடமாக இருப்பதாக உணர்ந்தாள். படிப்பைத் தவிர வேறு ஒன்றுமில்லை என்பதுபோல அனைவரும் இருந்தனர். "இதென்ன படிப்போ என்ற அங்கலாய்ப்பு அவளுக்குள் இருந்தது.”

சமூகத்தோடு இணைப்பில்லாத கல்வி என்ன கல்வி? என்பதுதான் பாமா இந்நூலில் முன் வைக்கும் முக்கியமான கேள்வி. இன்றைய நம் கல்வி முறையின் மீது கேள்வி மேல் கேள்விகளை வைத்தபடி நகர்கிறது பாமாவின் இந்த நூல். தத்துவார்த்தமான கேள்விகள்.ஆனால் அவை அனுபவத்தில் காலூன்றிப் பேசுகின்றன.

குழந்தைகளை உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்கக் கற்றுக்கொடுத்துவிட்டு அவர்கள் வாழும் சூழலும் குடும்பமும் பெற்ற தாயும்கூட அறமற்று வாழும்போது அவர்களுக்கு இயல்பாக எழும் கேள்விகள் பற்றிய இந்நூலின் பகுதி மிகுந்த கவனத்துக்கும் சமூகத்தின் ஆழ்ந்த விவாதத்துக்கும் உட்படுத்த வேண்டிய பகுதியாகும். இந்த நூலின் மிக முக்கியமான முன்வைப்பாக இப்பகுதியை நான் கருதுகிறேன். நாம் உண்மையாக வாழ முடியாதபோது குழந்தைகளுக்கு உண்மையாக இருக்கும்படி போதனை செய்ய நமக்கு என்ன தகுதி இருக்கிறது? என்கிற கேள்வி ஆசிரியர்களை மட்டுமல்ல பெற்றோர் மற்றும் பெரியவர்களான நம் எல்லோரையும் குற்ற உணர்வுக்குள்ளாக்கும் கேள்வியாகும்.

உண்மையில் இந்த நூல் ஓர் ஆசிரியரின் பணி அனுபவப்பகிர்வல்ல. ஓர் ஆசிரியர் குற்ற உணர்வுடன் குழந்தைகளிடமிருந்து கற்றுக் கொண்ட பாடங்களின் தொகுப்பு என்றே சொல்ல வேண்டும்.பள்ளிக்கல்வித்துறை இந்நூலை மொத்தமாக வாங்கி தமிழ்நாட்டிலுள்ள எல்லா ஆசிரியர்களுக்கும் கொடுத்துப் படிக்கச் சொல்ல வேண்டும். அத்தனை ஆரோக்கியமான புத்தகம் இது. ஆசிரியர்கள் மட்டுமல்ல.கல்வியில் அக்கறை உள்ள ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய நூல் இது.

- ச.தமிழ்ச்செல்வன்

Pin It