தமிழ்நாட்டின் ‘பழங்குடியினர் மாவட்டம்' என்று குறிக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் மாநிலத்தின் பண்டைய பழங்குடிக் குழுக்களான ‘தொதவர்', ‘கோத்தர்', ‘குறுமர்',  ‘இருளர்', ‘பணியர்' மற்றும் ‘காட்டுநாயகர்' என்னும் 6 வகைமைகளும் இனங்கண்டறியப்பட்டு, அவை ஆய்வுகளுக்கு உள்படுத்தப்படலாகின்றன. இருப்பினும், நீலகிரி மாவட்டம், உதகமண்டலம் வட்டம், கல்லட்டியை அடுத்துள்ள உல்லத்தி ஊராட்சிக்கு உள்பட்ட ‘பன்னிமரம்' மற்றும் ‘தட்டனேரி' எனும் இரு மலைக் கிராமங்களில் மற்றுமொரு பழங்குடி வகைமையாக - அதாவது, 7-ஆம் பழங்குடிக் குழுவாக ‘மலை வேடன்' என்கிற பழங்குடிக் குழுவானது பன்னெடுங்காலமாக வாழ்ந்து வருவதை ஏனோ எந்த ஆய்வாளரும் அலுவலரும் கண்டுகொள்ளவில்லை - கண்டு குறிப்பிடவுமில்லை.nilgiris tribeஇத்தகைய பின்புலத்தில், நீலகிரியின் மறைக்கப்பட்ட மறக்கப்பட்ட பழங்குடிக் குழுவாகிய ‘மலை வேடன்' பற்றிய ‘இனக்குழுவரைவியல் பதிவை'ப் பகிர்வதுடன், இப்பழங்குடிக்குழு எதிர்கொள்ளும் ‘அடையாளச் சிக்கல்' குறித்து விவாதிப்பதும் இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.

I. மலை வேடன் பழங்குடியினர்க்கு வழங்கப்படும் இனக்குழுப்பெயரும் அழை பெயர்களும்

மலையில் வாழும் ‘வேடன்' என்கிற பொருளில் ‘மலை வேடன்' என்னும் இனக்குழுப்பெயர் பெறும் இப்பழங்குடியினர் பொதுவாக தமிழ்நாட்டில் ‘வேடன்', ‘வேட்டுவன்', ‘வேட்டுவக் கவுண்டர்', ‘வேடர்' எனவும் குறிப்பாக மதுரை, தேனி, திண்டுக்கல், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ‘வேட நாயக்கர்',  'வேட்டுவ நாயக்கர்' எனவும் பல்வேறு அழை பெயர்களைக் கொண்டுள்ளனர்.

II. தமிழ்நாட்டின் மாநிலப் பழங்குடியினர் பட்டியலில் 'மலை வேடன்' இடம்பெற்ற வரலாறு

 1975-ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்துச் செங்கோட்டை வட்டத்தில் மட்டும் பட்டியல் பழங்குடியாக அறிந்தேற்பு செய்யப்பட்டு வந்த ‘மலை வேடன்' பழங்குடிக் குழுவானது 1976-ஆம் ஆண்டின் ‘பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடிகள் ஆணை (திருத்தச்) சட்டம்' 108 - இன் படி, 27-07-1977 முதற்கொண்டு, தமிழ்நாடு மாநிலம் முழுவதுமே வாழும் ஒரு ‘பொதுப் பழங்குடி'யாக முறையாக அறிந்தேற்பு செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து, 1978 முதல் தமிழ்நாட்டில் மலை வேடன் பழங்குடியினர்க்குச் சமுதாயச் சான்றானது வருவாய் வட்டாட்சியரால் வழங்கப்படலாயிற்று. பின்னர், 11-11-1989 முதல் தொடர்புடைய வருவாய் கோட்டாட்சியர் (அல்லது சார் ஆட்சியர்') - ஆல் உரிய பட்டியல் பழங்குடிச் சமுதாயச் சான்றுகள் வழங்கப்பட உரிய தமிழ்நாடு முழுவதும் மலைவேடன் பழங்குடியினர்க்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

III. தமிழ்நாட்டில் மலை வேடன் பழங்குடி மக்கள் வாழ்விடங்கள்:

தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியின் பரப்புகளில் அமையும் மேற்குத் தமிழக மாவட்டங்களான நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்டவற்றிலும் தென் தமிழக மாவட்டங்களான திண்டுக்கல், மதுரை, தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்டவற்றிலும் மலை வேடன் பழங்குடி மக்கள் பெருவாரியாக தங்கள் வாழ்விடங்களைக் கொண்டுள்ளனர்.

பண்டைய பழங்குடிகள் என்கிற பெயரில் நீலகிரி மாவட்டத்தில் வாழ்ந்து வரும் ‘குறிப்பிடத்தக்க அழிநிலைப் பழங்குடிக் குழுக்கள்' (Particularly Vulnerable Tribal Groups) தவிர, இம்மாவட்டத்தின் உதகமண்டலம் வட்டம், கல்லட்டி அருகே, உல்லத்தி ஊராட்சியில் உள்ள பன்னிமரம், தட்டனேரி எனும் இரு மலைக் கிராமங்களில் ‘மலை வேடன்' பழங்குடியினர் இனங்காணப்பட்டாலும் மறைக்கப்பட்ட / மறக்கப்பட்ட பட்டியல் பழங்குடியினராகவே இம்மக்களுடைய இருப்பு இருட்டடிக்கப்பட்டுள்ளது; இருப்பினும், 1994, 1995, 1998 மற்றும் 1999 கால கட்டங்களில் இதுவரை 246 பட்டியல் பழங்குடிச் சமுதாயச் சான்றுகள் இம்மலை வேடன் மக்களுக்கு நீலகிரி மாவட்ட நிருவாகத்தினரால் வழங்கப்பட்டுள்ளன என்பதையும் மறுப்பதற்கில்லை.

நீலகிரியில் ‘மலை வேடன்' பழங்குடி மக்கள் வாழும் பன்னிமரம், தட்டனேரி என்னும் இரு மலைக் கிராமங்களை ஒட்டி அமைந்துள்ள ஏனைய 12 மலைக் கிராமங்களில் வாழ்ந்து வரும் ஆதிக்க சாதிக் குழுவினரான படுகர், இப்பழங்குடிகள் வாழும் ‘தட்டனேரிக் கல்லட்டி'யைப் பேடர் கல்லட்டி' எனவும் ‘கோத்தகிரிக் கல்லட்டியைப் ‘பெத்துவக் கல்லட்டி' எனவும் வேறுபடுத்திக் குறிப்பிடுதல் நீலகிரி மாவட்டத்தில் ‘மலை வேடன்' பழங்குடியினர் வாழ்வதை உறுதிப்படுத்தும் தக்க சான்றரணாகக் கொள்ள வழிகோலுகிறது.

IV. நீலகிரி மாவட்ட ‘மலை வேடன்’ பழங்குடியினர் பற்றிய வாய்மொழி வரலாறு:

சென்னை அரசு அச்சக வெளியீடாக கிரிக் (H.B. Grigg) என்பவரால் 1880 - இல் கொணரப்பட்ட சென்னை மாநிலத்தில் உள்ள நீலகிரி மாவட்டக் கையேடு (A Manual of the Nilagiri District in the Madras Presidency), கல்லட்டிப் பகுதியில் ஒரு மலைக் கோட்டையை நிறுவிய ‘உம்மத்தூர் மன்னர்'  இம்மலை வேடன் பழங்குடியினருடைய வீரம் மற்றும் திறன்களைக் கருத்தில்கொண்டு, அம்மக்களைத் தமது மலைக் கோட்டையின் பாதுகாவலராக பணியமர்த்தியமையைத் தொடர்ந்து, இவர்கள் ‘காவல்காரரு' என்கிற பட்டப் பெயரை பெற்றனர் என்று மிகத் தெளிவாக நீலகிரி மலைவேடன் பழங்குடியினர் பற்றிய அரியதொரு வரலாற்றுத் தகவலைப் பதிவு செய்துள்ளது (காண்க: மேலது நூல் : ப. 279).

நீலகிரி ‘மலை வேடன்' பழங்குடியினர் இன்றும் பாதுகாத்து வரும் ‘வேட்டைக்கருவிகளான ‘ஈட்டி', ‘கத்தி', ‘வில்லு', ‘அம்புக்கத்தி,' ‘அருவா' மற்றும் சடங்குசார் பொருள்களான ‘கெட்டெ மணி சங்கு' எனப்படும் "மணி இணைக்கப்பட்ட சங்கு, ‘ஜெகட்டெ' எனப்படும் "அடிக்கத் தக்க உலோக வட்டு”, ‘தூப குண்டி' எனப்படும் "தூபக் கால்" 'கெண்டி' எனப்படும் "வால் மூக்குடைய பாண்டம்" உள்ளிட்டவை மேற்குறித்த வரலாற்றுப் பதிவிற்குக் குறிப்பிடத்தக்க தொட்டுணர் பண்பாட்டுச் சான்றாதாரப் பொருள்களாகத் திகழ்வதைக் குறிப்பிடலாம்.

நீலகிரி மாவட்டம், உதகமண்டலம் வட்டம், கல்லட்டி அருகில் உள்ள ‘வாழைத்தோட்டம்' எனும் சிற்றூரில் தொடக்க காலத்தில் இருந்த மக்களுடைய வாழ்விடப் பகுதியானது அவர்களுடைய மூத்த சகோதரர், இளைய சகோதரர் இருவருக்கும் இடையே நிலவிய தொடர் ‘பூசல்கள்' காரணமாகப் பின்னர் பன்னிமரம், தட்டனேரி எனும் இரு மலைக் கிராமங்களுக்குப் புலப்பெயர்ச்சி ஆனதாக இப்பழங்குடி மக்களுடைய ‘வாய்மொழி வரலாறு' வாயிலாகத் தெரிய வருகிறது.

V. நீலகிரி ‘மலை வேடன்’ பழங்குடியினரது வாழ்விடப் பரப்புகளின் சூழல்

நீலகிரியில் பழங்குடியினரான மலை வேடன் மக்களுக்கும் ஆதிக்கச் சாதியினராகிய படுக மக்களுக்கும் இடையே குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்குப் ‘பண்பாட்டுத் தொலைவு' (Cultural Distance) நிலவுகிறது; அதாவது, இவ்விரு வேறுபட்ட இனக்குழுக்களுக்கும் இடையே எவ்வகையான சமூகப் பண்பாட்டுத் தொடர்புறவுகளும் இல்லை.

நீலகிரியில் ‘மலை வேடன்' பழங்குடியினர் வாழும் பன்னிமரம், தட்டனேரி மலைக் கிராமங்கள் இரண்டையும் சுற்றி உல்லத்தி, கவரட்டி, ஏக்கோணி, மேலூர், காரபில்லு, பிக்கட்டி, அட்டிகல், கடசோலை, மாசிகல், அசகன் தொட்டெ, கல்லட்டி, கெம்பலை எனும் 12 படுகர் குடியிருப்புகள் உள்ளன. மேற்கண்ட 12 படுகர் குடியிருப்புகளிலும் வாழ்ந்துவரும் ஆதிக்கச் சமுதாயத்தினரான படுக மக்களுடைய விளை நிலங்களில் மலை வேடன் பழங்குடி மக்கள் வேளாண் கூலிகளாகப் பணிபுரிவதனால், இவர்கள் ‘படுகா மொழி'யைச் சரளமாகப் பேச வல்லோராகத் திகழ்கின்றனர்; இப்பழங்குடி மக்கள் படுக மக்களுடன் நெருக்கமான தொடர்புறவு கொண்டோராக விளங்குவதனால், அண்மைக் காலமாகத் தங்கள் குழந்தைகளுக்குப் படுக மக்கள் பெயர்களைச் சூட்டும் வழக்கம் உடையோராக மாறியுள்ளனர். இது மட்டும் அல்லாமல், தமது பேசு மொழியான மலை வேடன் பாஷையைப் பேசுவதுடன், அயலவர் மொழிகளான படுகா மற்றும் தமிழைத் தெளிவாகப் பேசக் கூடிய பன்மொழியாளராகவும் மலை வேடன் பழங்குடியினர் விளங்குகின்றனர்.

VI. நீலகிரி ‘மலை வேடன்’ பழங்குடியினரது இனக்குழுவரைவியல் - ஒரு பருந்துப் பார்வை

6.1 இனக்குழுப்பெயர்:

‘மலையில் வாழும் வேடர்' என்கிற பொருள்பட இப்பழங்குடி மக்கள் மலை வேடன் என்கிற இனக்குழுப்பெயரால் இனங்கண்டறியப்படுகின்றனர். நீலகிரி மாவட்ட நில விற்பனை ஆவணங்களில் இம்மக்கள் வேட ஜாதி என்றே குறிக்கப்பட்டுள்ளனர். இந்த அடிப்படையிலேயே இவர்களது அண்டை அயலரான படுக மக்கள் இம்மக்களைப் ‘பேடர் ஜாதி' என்றே அழைக்கின்றனர். இருப்பினும், ‘மலை வேடன்' என்று அறிந்தேற்பு செய்யப்படுவதையே இப்பழங்குடி மக்கள் பெரிதும் விரும்புகின்றனர். இம்மக்கள் ‘வேடன்', ‘வேட்டுவன்', எனப் பட்டியல் சாதிகள் பட்டியலிலும்; ‘வேட்டுவக் கவுண்டர்' என மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பின் கீழாகச் சீர் மரபினர் பட்டியலிலும், ‘வேடர்' எனப் பிற்படுத்தப்பட்ட வகுப்புப் பட்டியலிலும் பல்வேறுபட்ட முறைகளில் அறியப்படுவதனால், இவர்களைப் பற்றிக் குழப்பமான அடையாளச் சிக்கலே நிலவுகிறது.

6.2 உடற்கூறுப் பண்புகள்:

'இடைப்பட்ட உயரம்', 'இடைநிலைத் தலை', 'ஓரளவு சுருண்ட தலைமுடி', மாநிறம், கருமையான கண்கள், தட்டையான மூக்கு  உள்ளிட்ட உடற்கூறுப் பண்புகளுடன் விளங்கும் மலை வேடன் பழங்குடியினர் இப்பண்புகளின் அடிப்படையில், ‘தொல் ஆஸ்திரலாயிடு இனக்குழு'வைச் சார்ந்தோராக வகைபாடு செய்யப்படுகின்றனர்.

6.3 குடியிருப்பு அமைவுமுறை:

நீலகிரி மலை வேடன் குடியிருப்புப் பகுதியை ஒட்டித் தேவையான சிறுதானியங்கள், காய்கறிகள், பூண்டு உள்ளிட்ட விளைபொருள்களைப் பயிரிடும் வகையில் சிறு விளை நிலம் அமைந்திருக்கும் குடியிருப்பின் ‘தலய்வரு' (Headman) வசிக்கும் பொதுவெளியை அடுத்துத் தூய வெளியில் 'பெரிய வீடு' என்கிற அமைப்பின் உள்ளே தமது வழிபாட்டுச் சடங்கோடு தொடர்புடைய பொருள்களை வைத்துப் பாதுகாக்கப்படுகின்றன. இவ்வாறாகவே இவர்களது குடியிருப்பு அமைவுமுறையானது  உள்ளது.

6.4 புழங்குபொருள் பண்பாடு எனும் தொட்டுணர் பண்பாடு:

நீலகிரி மலைவேடன் பழங்குடியினர் தமது அன்றாடப் பயன்பாட்டிற்கென வைத்துள்ள தட்டுமுட்டுப் பொருள்களுடன் அவர்களுடைய முன்னோர் பயன்படுத்திய வேட்டைக் கருவிகளையும் வழிபாட்டுப் பொருள்களையும் கொண்டதாக இவர்களின் புழங்கு பொருள் பண்பாடு என்னும் தொட்டுணர் பண்பாடு அமைகிறது.

6.5 சமூக அமைப்பு:

நீலகிரி மலை வேடன் பழங்குடியினரது சமூகம் இரு பகுப்புப் பெருங்கால் வழிகளாக (Moieties) இனங்காணப்படுகிறது. இதன் ஒரு பகுப்பினுள்

(1) ‘குறிக்காரென் கூட்டொம்',  ‘எலுகன் கூட்டொம்', மற்றும் ‘காட்டி சித்தன் கூட்டொம்’ என மூன்று குலப் பிரிவுகள் அடங்கியுள்ளன; மற்றொரு பகுப்பினுள் ‘ஏலக்கி கூட்டொம்' என்கிற ஒற்றைக் குலப் பிரிவு மட்டும் உள்ளது. இவ்விரண்டு இரு பகுப்புப் பெருங்கால்வழிகளுள், மூன்று குலப் பிரிவுகளைக் கொண்ட பகுப்பானது ‘பங்காளிகள்' என்றும் ஒரேயொரு குலப் பிரிவைக் கொண்ட பகுப்பானது ‘மாமன் - மச்சான்கள்' என்றும் மண உறவுகளுக்கெனப் பாகுபடுத்தி, இனங்காணப்படுகின்றன; அதாவது, மலை வேடன் பழங்குடியினரது சமூக அமைப்பின் ஒரு பகுப்பைச் சார்ந்தோர் மற்றொரு பகுப்பைச் சேர்ந்தோரிடம் பெண் எடுக்கவும் பெண் கொடுக்கவுமான மண உறவுமுறையைக் கடைப்பிடிக்கின்றனர்.

6.6 பொருளியல் அமைப்பு:

வேட்டையாடுதல் தற்போது வனத் துறையினரால் முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டுள்ள நிலையிலும் நீலகிரி மலை வேடன் பழங்குடி மக்கள் சிறு வன விலங்குகள் நடமாட்டமுள்ள மலைப் பகுதிகளில் பாறைப் பரப்பின் மீது ஒரு கனமான பட்டைக் கல்லை உறுதியான மரக் குச்சிகொண்டு சரிவாக நிறுத்தி வைக்கின்றனர். இத்தகைய அமைப்பை விலங்குப் பொறி'யாகப்  பயன்படுத்தி ‘முள்ளந்தி' எனும் ‘முள்ளம்பன்றி', ‘மொசலு' எனும் ‘முயல்' உள்ளிட்டவை அதன்மீது இடறும்போது முட்டுக்கொடுக்கப்பட்டுள்ள மரக் குச்சி சரிந்து அப்பட்டைக் கல்லின் இடுக்கில் மாட்டிக்கொண்டு நசுங்கி விட, அவற்றைக் கைப்பற்றித் தமக்கான இறைச்சி உணவாக இம்மக்கள் பயன் கொள்கின்றனர்.

இது மட்டும் அல்லாமல், காட்டுத் தேனீக்களின் நடமாட்டத்தை ‘அர்ச்சுண்டு ஹோகுது' என்று மிக நுட்பமாகக் கண்காணித்துத் தேனடைகளின் இருப்பிடத்தைத் துல்லியமாகக் கண்டறிந்து, பல் வேறு தேன் வகைகளைத் திரட்டிடும் மரபார்ந்த அறிவு அமைப்பொழுங்கைக் கைவரப் பெற்றோராக நீலகிரி மலை வேடன் பழங்குடியினர் திகழ்கின்றனர். ‘கோல் ஜேனு' என்னும் ‘கொம்புத் தேன்', ‘தடுவெ ஜேனு' என்னும் ‘மலைத் தேன்', ‘நஸா ஜேனு' என்னும் ‘கொசுவந்தேன்' என்பன இவர்கள் திரட்டும் தேன் வகைகளுள் முதன்மையானவை ஆகும். தேன் திரட்டுதலில் மட்டும் அல்லாமல், இன்ன பிற மரம்சாராக் காடுபடு பொருள்கள் திரட்டுவதிலும் இம்மக்கள் ஈடுபடுகின்றனர். இன்றைய காலகட்டத்தில், நீலகிரி மலை வேடன் பழங்குடியினருள் பெரும்பான்மையோர் வேளாண் கூலிகளாக அருகே வாழும் படுக மக்களுடைய விளை நிலங்களில் பாடுபடுகின்றனர்.

6.7 சமய அமைப்பு:

நீலகிரி மலை வேடன் பழங்குடியினர் தங்களுடைய முதன்மைத் தெய்வமாகிய ‘ஈர் மாஸ்தம்மா' என்கிற ‘வீர மாசதி அம்மனை' வழிபடுவதுடன், ‘வன தேவரு' எனும் பொதுப் பெயரில் பல் வேறுபட்ட காடுறைக் கடவுளரையும் வணங்கி வழிபடுகின்றனர். குறிப்பாக, உருவம் அற்ற நெடுங்கல் ஒன்றைத் ‘தாரி கல்லு தேவரு' (அதாவது, ‘பாதையில் உள்ள கல் கடவுள் என்னும் பெயரில் வழிபடுவதைக் குறிப்பிடலாம்; இத்தெய்வத்தின் ஆற்றலே காட்டின் ஊடே மேய்ச்சலில் ஈடுபடும் தங்கள் கால்நடைகளைக் காப்பதாக இவர்கள் உறுதியாக நம்புகின்றனர்.

நீலகிரி மலை வேடன் பழங்குடி மக்கள் ‘ஈர் மாஸ்தம்மா'விற்கு ஆட்டைப் பலி கொடுக்கும்போது, ‘ஏலக்கி கூட்டத்தார்' அதன் பின்னங்கால்களை இறுகப் பற்றிக்கொள்கின்றனர்; ‘எலுகன் கூட்டத்தார்' ஆட்டை வெட்டிப் பலியிடக் ‘குறிக்காரென் கூட்டத்தா'ரோ வழிபாட்டிற்கு உரிய பல்வேறு பணிகளில் தம்மை ஈடுபடுத்திக்கொள்கின்றனர். குறிக்காரென் கூட்டத்தார்' முதல் பூசை செய்திடும் உரிமையைப் பெற்றிருக்க, அதையடுத்து, எலுகன் கூட்டத்தார் இரண்டாம் பூசை செய்திட அனுமதிக்கப்படுகின்றனர்.

6.8 அரசியல் அமைப்பு:

நீலகிரி மலை வேடன் பழங்குடி மக்கள் வாழும் பன்னிமரம், ‘தட்டனேரி' என்னும் இரு குடியிருப்புகளுக்கும், தலய்வரு' எனப்படும் பொதுத் தலைவர் உள்ளார்; இவரது பதவியானது பரம்பரைப் பதவியாக பணியமர்த்தப்படுகிறது.

6.9 வாழ்க்கைச் சுழற்சிச் சடங்குகள்:

6.9.1 திருமணம்

நீலகிரி மலை வேடன் பழங்குடிச் சமூகத்தில் திருமணத்திற்குப் பத்து நாள்களுக்கு முன்பாகவே மணமகனாகப் போகிற ஆண் மணமகளாகப் போகிற பெண்ணின் கழுத்தில் ‘கருகமணிகளாலான கழுத்தணி'யை அணிவிப்பார்; இச்சடங்கு ‘ஆற்றுகை' முடிவுற்ற 10-ஆம் நாளன்று, வாழ்விடத்தை ஒட்டியுள்ள நிலப் பகுதியிலிருந்து மணமகன் வெட்டிக் கொண்டுவரும் களிமண்ணால் மணமேடை அமைக்கப்படுகிறது; இம்மேடையிலேயே அனைத்துத் திருமணச் சடங்குகளும் மேற்கொள்ளப்படுகின்றன. திருமணத்தின்போது மணமகன், மணமகள் இருவர் கைகளிலும் ‘வெற்றிலைப் பாக்கு' பொதிந்து கங்கணமாகக் கட்டப்படுகிறது. திருமணச் சடங்குகளின் நிறைவாக, மணமகள் கழுத்தில் மணமகன் ‘பொட்டுத் தாலி'யைக் கட்டுகிறார்; இதுவே முறையான திருமணத் தாலியாக அமைகிறது.

தேவை ஏற்படும் போது, நீலகிரியின் இரு மலைக் கிராமங்களான பன்னிமரம் மற்றும் தட்டனேரியில் வாழும் மலை வேடன் பழங்குடிச் சமுதாயத்தினர் மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் வாழ்ந்து வரும் மலைவேடன் பழங்குடி மக்களுடன் திருமண உறவை ஏற்படுத்திக் கொள்கின்றனர்.

6.9.2 குழந்தைப் பேறு

பெண் குழந்தை பிறந்தால், வருங்காலத்தில் அதன் முறை மாப்பிள்ளை ஆகிட விரும்பும் ஆண் அதனுடைய காலில் சிறு பழந்துணியைக் கிழித்துக், கயிறு போலச் சுற்றிக் கட்டி, அதற்கு உரிய வருங்காலக் கணவன் என உறுதிப்படுத்திக் கொள்ளும் முறையானது நீலகிரி மலை வேடன் பழங்குடியினர் இடையே உள்ளது.

குழந்தைப் பேறு நிகழ்வைத் தீட்டாகக் கருதும் இம்மக்கள், குழந்தை பிறந்த 16-ஆம் நாளன்று 'தீட்டுக் கழிக்கும் சடங்கை' மேற்கொள்கின்றனர்; அதன் பிறகே, தாயையும் சேயையும் வீட்டிற்குள் அனுமதிக்கின்றனர்.

6.9.3 பூப்பு

நீலகிரி மலை வேடன் சமூகத்தில் பெண் பூப்பு அடையும்போது அப்பெண்ணின் தாய் மாமன் மகன் புதிய குடிசை ஒன்றைக் குடியிருப்பிற்கு வெளியே கட்டுகிறான்; இப்புதுக் குடிசையினுள் அப்பூப்புற்ற பெண் தனியாகத் தங்க வைக்கப்படுகிறாள். பூப்புற்ற 5 ஆம் நாள் பெண்ணிற்குத் தீட்டுக் கழிக்கும் சடங்கு கடைப்பிடிக்கப்பட்டுப், பூப்பு நீராட்டு நிகழ்த்திய பிறகே பூப்புற்ற பெண்ணை வீட்டிற்குள் அனுமதிக்கின்றனர்.

6.9.4 இறப்பு

முற்காலத்தில் இறந்தோரை எரியூட்டிய நீலகிரி மலை வேடன் பழங்குடியினர், தற்போது பிணத்தைப் புதைக்கும் வழக்கத்தைக் கைக்கொள்ளத் தொடங்கியுள்ளனர். இறந்தோர்க்குச் சொத்து இருக்குமானால், அவரது அனைத்துப் பிள்ளைகளுக்கும் அதைச் சமமாகப் பிரித்துக் கொடுக்கும் முறையானது பின்பற்றப்படுகிறது.

6.10 மரபார்ந்த அறிவு அமைப்பொழுங்கு

நீலகிரி மலைவேடன் பழங்குடி மக்களுள் குறிக்காரென் கூட்டத்தைச் சார்ந்தோர் ‘வெச கல்லு' எனும் சிறு கல்லைக் கொண்டு பாம்பு உள்ளிட்ட எல்லா நச்சு உயிரிகளின் கடிகளுக்கும் நச்சு முறிவு மருத்துவம் செய்யும் மரபார்ந்த அறிவைக் கொண்டுள்ளனர்; ‘எலுகன் கூட்டத்'தினரோ தசைப் பிடிப்பு நீக்கும் மருத்துவ முறைக்கென நீளவாக்கில் வெட்டப்பட்ட ஒரு சோடி ‘ஊளி குச்சி'யைப் பாதிக்கப்பட்ட பகுதியின் இரு புறமும் வைத்துக் கட்டுவதன்வழியே தசைப் பிடிப்பைச் சரி செய்கிற மரபார்ந்த அறிவுமிக்கோராக விளங்குகின்றனர். இவை மட்டும் அல்லாமல், பொதுவாகவே நீலகிரி மலை வேடன் பழங்குடியினர் மரபார்ந்த மூலிகை மருத்துவத்தில் கைதேர்ந்தோராக விளங்கினர் என்று இம்மக்களுடைய மரபுவழி மருத்துவத்தால் தற்போதும் பயனடைந்து வரும் ‘படுகர்' சாதியினர் சான்று பகர்கின்றனர்.

6.11 பேசு மொழி

நீலகிரி மலை வேடன் பழங்குடியினரது பேசு மொழியானது ‘பேடர் பாஷெ' என்று குறிப்பிடப்பட்டாலும் அது ஒரு தனித்துவமான தமிழ்க் கிளைமொழி என்று கருதப்படுகிறது; எனினும், இப்பழங்குடி மக்களுடைய பேசு மொழியில் கன்னட மொழிச் சொற்கள் கலந்துள்ளமையை மறுப்பதற்கு இல்லை.

முந்தைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் பகுதிகளாக இருந்த இப்போதைய கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் திருநெல்வேலி மாவட்டச் செங்கோட்டை வட்டம் மலை வேடன் பழங்குடியினரது பூர்வீக வாழ்விடங்களாக விளங்கின என்பதன் அடிப்படையில், தமிழ்நாட்டில் வாழும் ஒட்டுமொத்த மலைவேடன் பழங்குடி மக்களும் மலையாள மொழி பேசுவோர் என்கிற தவறான கருத்தானது தமிழ்நாடு அரசின் வருவாய் துறையினர்க்கு ஏற்பட்டுவிட்டமை ஒரு தவறான புரிதலே ஆகும்.

நீலகிரி மலை வேடன் பழங்குடியினரது பேசு மொழியில் இக்கட்டுரை ஆசிரியர் இனங்கண்டறிந்துள்ள சொற்கோவை' கீழ் வருமாறு:

சடங்குசார் பொருள்கள்

கெட்டெ மணி சங்கு            ‘மணி இணைக்கப்பட்ட சங்கு'

ஜெகட்டெ                      ‘அடிக்கும் உலோக வட்டு'

தூப குண்டி                 ‘தூபக் கால்'

சமயம் சார்ந்தவை

ஈர் மாஸ்தம்மா                       ‘வீர மாஸ்தி அம்மன்'

வன தேவரு                 ‘வன தெய்வங்கள்'

தூரி கல்லு தேவரு ‘கால்நடைக் காவல் தெய்வம்'

வேட்டைக் கருவிகள்

அடச்சல்                         ‘விலங்குப் பொறி'

ஈட்டி                                 ‘குத்தீட்டி'

கத்தி                                ‘வாள்'

பில்லு                              ‘வில்'

அம்புக்கத்தி                              ‘இரும்பாலான அம்பு முனை'

அருவா                                          ‘வெட்டரிவாள்'

தேன் திரட்டுதல் தொடர்பானவை

அர்ச்சுண்டு ஹோகுது       ‘தேனீயோட்டம்'

காணி                                            ‘மூங்கிலாலான அளவை'

பெஸ்கி                                         ‘கூடை'

தேன் வகைகள்

கோல் ஜேனு                ‘கொம்புத் தேன்'

தடவு ஜேனு                  ‘மலைத் தேன்'

நஸர ஜேனு                  ‘கொசுவந் தேன்'

பிற சொற்கள்

ஆல்க கொடி                             ‘(தீய ஆவிகளை அண்டவிடாமல் காத்திட) மலை வேடன் ஆண், பெண் சிறார் அணியும் ஒரு திணை சார் கொடி'

ஊளி குச்சி                  ‘தசைப் பிடிப்பு நீங்கிடப் பாதிக்கப்பட்ட உடற்

                                             பகுதியின் இரு புறமும்வைத்துக் கட்ட நீள

                                             வாக்காக வெட்டப்பட்ட

                                             ஒரு திணைசார் மரக் குச்சி'

பெரிய வீடு                 ‘சாமி வீடு'

பேடர்                               “மலை வேடன் பழங்குடி'

புகுரி                                ‘மூங்கிலாலான நெடுங் குழல்'

தலய்வரு                       ‘(மலை வேடன்) ஊர்த் தலைவர்'

காவல்காரரு                             ‘பாதுகாவலர்'

கூட்டொம்                     ‘(மலை வேடன்) குலம்'

குறிக்காரென் கூட்டொம்

எலுகன் கூட்டொம்

காட்டு சித்தன் கூட்டொம்             

வெச கல்லு   ‘நஞ்சு முறிப்பு  மருத்துவத்தில் மலை வேடன்

                               மக்களால் பயன்படுத்தப்படும்

                               சிறு கல்'

VII. நீலகிரி மலை வேடன் மக்கள் இடையே இனங்கண்டறியப்பட்டுள்ள பட்டியல்

பழங்குடிப் பண்புகள்: இந்திய ஒன்றிய அரசால் 1965-இல் அமைக்கப்பட்ட ‘லோக்கூர் குழு' (Lokur Committee) பட்டியல் பழங்குடிக்கென அறிவுறுத்தியுள்ள 5 பண்பாட்டுப் பண்புகளும் ஒரு சேர நீலகிரி மலை வேடன் மக்களிடம் உள்ளமை நேரிடைக் களப்பணி ஆய்வின் போது தமிழ்நாடு அரசின் பழங்குடியினர் ஆய்வு நடுவத்து இயக்குநர் என்கிற முறையில், இக்கட்டுரை ஆசிரியரால் 2013 - ஆம் ஆண்டு இனங்கண்டறியப்பட்டுள்ளன. அவை வருமாறு :

1. தொன்மைப் பண்புகள்

i.  நேரான சிறு மரக் குச்சியின் மீது ஒரு பட்டைக் கல்லைச் சாய்த்து நிறுத்திவைத்து உருவாக்கும் ‘அடெச்சல்' எனும் தற்காலிக அமைப்பை விலங்குப் பொறியாகப் பயன்படுத்திச் சிறு வன விலங்குகளைப் பிடித்தல்.

ii.  பிறந்த பெண் குழந்தையைத் தனது வருங்கால உரிமை இணையர் ஆக்கிக் கொள்ள, அதன் காலில் பழந் துணியைக் கிழித்து வளையமாகக் கட்டுதல்.

2 தனித்துவமான பண்பாடு

சமூக அமைப்பானது இரு பகுப்புக் கால்வழிகளாகப் பிரிக்கப்பட்டு, ஒன்றைக் ‘குருதி வழி உறவினர்' தொகுதியாகவும் மற்றொன்றை மணவழி உறவினர் தொகுதியாகவும் கொள்ளல்.

3. புவியியல் தனிமைப்படுத்தம்

நீலகிரி மாவட்டம், உதகமண்டலம் வட்டம், கல்லட்டி வனப் பகுதி, உல்லத்தி ஊராட்சி எல்லைக்கு உள்பட்ட 14 மலைக் கிராமங்களுள் பன்னிமரம், தட்டனேரி எனும் இரண்டில் மட்டும் வாழ்வோராக, ஏனைய பகுதிகளில் வாழ்வோரிடமிருந்து புவியியல் அடிப்படையில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளமை.

4. பொதுச் சமூகத்தினரோடு பழகுவதற்குத் தயக்கம்

தமது வாழ்விடங்களான பன்னிமரம், தட்டனேரி மலைக் கிராமங்களைச் சுற்றிலும் உள்ள 12 குடியிருப்புகளில் வாழும் படுகச் சாதியினரோடும் மாவட்டத்தின் ஏனைய மக்கள் குழுக்களோடும் பழகிடத் தயக்கம் காட்டுதல்.

5. பிற்படுத்தப்பட்டுள்ளமை - சமூக மற்றும் பொருளியல் நிலைகளில்

பொருளியல் நிலையில் மட்டும் அல்லாமல், சமூக நிலையிலும் பிற்படுத்தப்பட்டுள்ளமை.

VII.  நிறைவுரை -

‘நீலகிரி மாவட்டம்' என்றவுடன் தொதவர், கோத்தர், குறுமர், இருளர், பணியர் மற்றும் காட்டுநாயகர் என்னும் 6 வகைப் பண்டைய பழங்குடிக் குழுக்கள் மட்டுமே அனைவரது நினைவிற்கும் கவனத்திற்கும் வருகின்றன. ஆனால், இம்மாவட்டத்தின் ஓர் ஒதுக்குப்புறமான இரு மலைக் கிராமங்களான பன்னிமரம், தட்டனேரி என்கிற இரு குடியிருப்புகளில் இன்று வரை வாழ்ந்து வரும் மலை வேடன் பழங்குடியினர் எவர் கண்ணிற்கும் கருத்திற்கும் வருவதில்லை. இத்தகைய சமூகப் போக்கானது திட்டமிட்டு நடந்தேறவில்லை - என்றாலும் பொதுச் சமூகத்தின் பார்வையிலிருந்து மறைக்கப்பட்ட / மறக்கப்பட்ட பழங்குடிக் குழுவினராக நீலகிரி மலைவேடன் பழங்குடி மக்கள் அமைந்துவிட்டமை சமூக நீதிக்குப் புறம்பானதே; அதிலும், கடந்த காலம் முதல் அண்மைக் காலம் வரை மாவட்ட நிர்வாகத்தினரால் இம்மக்களுக்கு நூற்றுக்கணக்கான எண்ணிக்கையில் பட்டியல் பழங்குடிச் சமுதாயச் சான்றுகள் வழங்கப்பட்டுள்ளமையும் கடந்த 2011-இல் நடைபெற்ற ஊராட்சி மன்றத் தேர்தலின் போது, பட்டியல் பழங்குடிக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த 7-ஆம் வார்டில் திரு.பி.ஆர்.ராமன் என்கிற மலை வேடன் சமுதாயத்தைச் சார்ந்தவர் நின்று, வென்று, தமது தொகுதியில் உரிய மக்கள் பணிகளை ஆற்றியுள்ளமையும் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் உல்லத்தி கிராம

பஞ்சாயத்தானது பழங்குடியினர்க்காக ஒதுக்கப்பட்ட நிலையில், மலை வேடன் பழங்குடி இனத்தைச் சார்ந்த திரு. டி.டி.சந்தோஷ்குமார் அவர்கள் பஞ்சாயத்து தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்பட்டு வரும் நிலையிலும் "மலை வேடன் பட்டியல் பழங்குடியினர் இம்மாவட்டத்தில் இருக்கிறார்களா?!" - என்பது போல நீலகிரி மாவட்ட நிருவாகத்தினர் நடந்துகொள்ளும் கண்டுகொள்ளாத போக்கானது முற்றிலும் சமூக நீதிக்கு எதிரானதே - என்பதை இங்கு வருத்தத்துடன் பதிவு செய்ய வேண்டியுள்ளது.

நீலகிரி மாவட்ட மலை வேடன் பழங்குடியினரது வாழ்விடங்களை' ஒட்டியுள்ள அண்டை வாழ்விடப் பரப்புகளில் வாழும் படுகச் சாதியினர் இம்மக்களைப் ‘பேடர் ஜாதி' என்று குறிப்பிடுவதாலும் இம்மாவட்டத்தில் வாழும் தமிழர் உள்ளிட்ட பொதுச் சமூக நீரோட்டத்தைச் சார்ந்த அனைவரும் இப்பழங்குடி மக்களை வேட நாயக்கர்' என்று அழைப்பதாலும் இம்மக்கள் ஒரு வகையான அடையாளச் சிக்கலுக்குத் தொடர்ந்து உள்ளாகி வருகின்றனர் என்பதும் மற்றுமோர் அவலமே.

இந்நிலை நீங்கி, நீலகிரி மாவட்டத்தின் மொத்தப் பழங்குடிக் குழுக்கள் ‘ஏழு.' அதாவது, ஏற்கனவே அனைவராலும் நன்கு அறியப்பட்ட தொதவர்' தொடங்கிக் காட்டுநாயகர்' என 6 வகைப் பழங்குடிக் குழுக்களுடன், ஏழாவதாக ‘மலை வேடன்' பழங்குடிக் குழுவும் அடங்கும்" என்று உரக்கச் சொல்லும் நிலை இனியாவது வரவேண்டும் என்பதே நம் விருப்பம்.

அடிக் குறிப்புகள்

1             மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியிலிருந்து முதலில் மலைப்பாங்கான இடங்களுக்கும் பின்னர் காலப்போக்கில் மேற்படி மலைப் பரப்புகளை ஒட்டிய சமவெளி மாவட்டங்களுக்கும் புலப்பெயர்வுற்றுச் சமவெளி வாழ்க்கையைத் தொடங்கிய இம்மக்களுடைய முந்தைய நில விற்பனை ஆவணங்களில் 'வேட ஜாதி' என்று இம்மக்கள் குறிக்கப்பட்டுள்ளனர்; தமிழகத்தில் நாயக்கர் ஆட்சிக் காலம் ஏற்பட்டமையைத் தொடர்ந்து, இவர்கள் வேட நாயக்கர் மற்றும் வேட்டுவ நாயக்கர் என்றும் அழைக்கப்படலாயினர்.

2.            இவற்றுள், எலுமன் கூட்டத்துப் பெரிய வீட்டில் இவர்களுடைய மரபார்ந்த ஈட்டிகளும் குறிக்காரென் கூட்டத்துப் பெரிய வீட்டில் ஏனைய பிற மரபார்ந்த வழிபாட்டுப் பொருள்களும் இன்று வரை தொடர்ந்து பாதுகாத்து வரப்படுகின்றன என்பதும் மலை வேடன் பழங்குடியினரது பண்பாட்டு வேர்களைப் பறை சாற்றிடும் சான்றாதாரங்கள் ஆகும்.

3.            நீலகிரி மாவட்ட மலை வேடன் பழங்குடியினர் வாழும் குடியிருப்புகளான பன்னிமரம், தட்டனேரி எனும் இரு மலைக் கிராமங்களில் இக்கட்டுரை ஆசிரியர் விரிவான களப்பணி ஆய்வுகள் மேற்கொண்டபோது மேற்கே உள்ள ‘படுகர்' குடியிருப்புகளாகிய ஏக்கோணி, பிக்கட்டி, கடசோலை, அட்டிகல்; தெற்கே உள்ள படுகர் குடியிருப்பாகிய கவரட்டி, மற்றும் கிழக்கே உள்ள படுகர் குடியிருப்புகளாகிய மேலூர், உல்லத்தி, காரப்பில்லு உள்ளிட்டவற்றின் ஊராட்சி மன்றத் தலைவர்களுடைய கூற்றுகள் இதை மெய்ப்பிக்கின்றன; குறிப்பாக, ஏக்கோணி ஊராட்சி மன்றத் தலைவராகக் கடந்த 2013 - இல் செயலாற்றி வந்த திருமிகு. ஏ.டி. சந்திரன் - என்பவரிடம் இக்கட்டுரை ஆசிரியர் தமது களப்பணி ஆய்வின் போது நிகழ்த்திய நேர்காணலில் மேற்கூறப்பட்ட கருத்துகள் அனைத்தும் உறுதி செய்யப்பட்டமையைக் குறிப்பிடலாம்.

4.            ஆனாலும் காட்டுக் கிழங்கு, இறைச்சி உள்ளிட்டவற்றை எளிதில் கடித்து, கிழித்துத் தின்பதற்கு ஏற்றவாறு தமது முன் பற்களைக் கூராக்கிக் கொள்ளும் மலை வேடன் பழங்குடியினரது பண்பாட்டு நடத்தையானது இவர்கள் இடையே தற்போது அறவே அற்றுவிட்டது.

5.            இருப்பினும் இவற்றிற்கான பெயர்களை நீலகிரி மலை வேடன் பழங்குடியினர் குறிப்பிடத் தெரியாதோராக விளங்குதல் வியப்பை ஏற்படுத்துகிறது.

6.            அண்ணாமலைப் பல்கலைக்கழக மொழியியல் உயராய்வு நடுவத்தில் மொழியியல் முதுகலை நிறைவாண்டு மாணவரான திருமிகு எஸ்.ராதாகிருஷ்ணன் - என்பவர் திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டை வட்டம், சாம்பவார் வடகரை என்கிற சிற்றூரின் ஒதுக்குப்புறப் பகுதியில் வாழ்ந்து வந்த மலை வேடன் மக்களது பேசு மொழியைத் தமிழ்க் கிளைமொழியின் ஓர் உள் - கிளைமொழி என்று 1979-இல் பணிந்தளித்த தமது முதுகலை மொழியியல் ஆய்வேட்டில் அழுத்தந் திருத்தமாகப் பதிவு செய்துள்ளமையை இங்குக் கோடிட்டுக் காட்ட வேண்டியுள்ளது.

7.            மூங்கிலாலான மரபார்ந்த நெடுங்குழலாக அமையும் புகிரி என்கிற இக்காற்றிசைக் கருவி நீலகிரியின் பண்டைய பழங்குடியினருள் தொதவர், ஆலு குறுமர், இருளர் உள்ளிட்டோரிடமும் இனங்காணப்படுகிறது; கோத்தரிடம் இதற்கான சொல் மட்டும் வழக்கில் உள்ளது; மேலும், நீலகிரியின் திணைக்குடிகளுள் ஒருவரான படுகச் சாதியினரிடமும் இந்நெடுங்குழலானது அவர்களுடைய இனக்குழுத் தெய்வமாகிய ‘ஹெத்தை அம்மனு'க்கு உரியதாகவும் உகந்ததாகவும் உள்ளமை இங்கே குறிக்கத்தக்கது.

8             விரிவான விவரங்களுக்குக் காண்க :  Maheswaran, C. 2013.  

நோக்கீட்டு ஏடுகள் (ஆங்கிலத்தில்)

Grigg H.B 1880 A Manual of the Nilagiri District in the Madras Presidency Madras: Government Press.

Maheswaran, C. 2013 A Report on the Community Status (on ‘Malai Vedan') (Mimeo.) M. Palada, Udhagamandalam: Tribal Research Centre.  

நன்றியுரை:

இக்கட்டுரை எழுதுவதற்கு என்னை ஆற்றுப்படுத்திய முனைவர் பி. ராமமூர்த்தி, தலைவர் - நிருவாகம், சமீர் மின்காந்தவியல் நடுவம், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம், இந்திய அரசு - அவர்களுக்கும்

2013-ஆம் ஆண்டின் போது நான் மேற்கொண்ட களப்பணி ஆய்வுகளில் உடனிருந்து உதவிய (நினைவில் வாழும்) தெய்வத்திரு. டி. எச். தருமன், மேற்பார்வையாளர் (பணி நிறைவு), வெடிமருந்துத் தொழிற்சாலை, அருவங்காடு, நீலகிரி மாவட்டம் - அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிதனைப் படைத்து மகிழ்கிறேன்.

- முனைவர் சி. மகேசுவரன், மேனாள் இயக்குநர், பழங்குடியினர் ஆய்வு நடுவம், தமிழ்நாடு அரசு.

Pin It