சுப்ரபாரதிமணியன் அவர்கள் எழுதிய 'ஸ்மைல் ப்ளீஸ்' என்கிற தலித் நாவலை ஓர் மழைக்கால இரவொன்றில் மின்மினிப் பூச்சிகள் வட்டமிடும் தருணத்தில் வாசிக்கத் துவங்கிய ஓரிரு பக்கங்களில் புரிந்துகொண்டேன். தீண்டாமை இந்நாட்டில் எப்படி பரவிக் கிடந்தது என்பதையும் தலித்தினர் மீது இந்த சமுதாயம் பல்வேறு கால கட்டங்களில் தொடர்ந்து காட்டி வரும் துன்புறுத்தல்களையும் அதனால் அவர்கள் படுகிற வேதனைகளையும் தனக்கே உரித்தான மெல்லிய சொற்களால் வாழைப்பழத்தில் ஊசியினை ஏற்றுவது போல் வாசகர்களின் இதயத்தில் ஏற்றுகிறார்.
நாவலின் நாயகனான கிருஷ்ணனை அறிமுகம் செய்த விதத்திலிருந்து கதைத் தொடங்குகிறது. மறைமுகமாக அவன் மீது செலுத்தப்படும் சாதிய ஆதிக்கமும் அவன் எதிர்கொள்ளும் மனோபக்குவத்தையும், வாழ்க்கையின் வேகத்திற்கும் அது ஏற்படுத்தும் காலம் மற்றும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் மனிதனே தன் வாழ்க்கையின் பரிபூரணத்தை வாழ்ந்து கழிக்க முடியும் என்பதை ஆசிரியர் இந்நாவலின் வழியாகக் கடத்துகிறார்...
கிருஷ்ணனின் பாட்டனார் கம்யூனிஸ்ட் தோழர் என்பதாலோ அவரின் வளர்ப்பு கிருஷ்ணன் என்பதாலோ கிருஷ்ணன் தான் கடக்கும் ஒவ்வொரு மனிதரையும் காலத்தினையும் அவற்றிலிருந்து தன்னை நிலைநிறுத்திக் கொள்ள மறைமுகமாகப் போராடியிருக்கிறான்...
செகந்திராபாத் மோண்டோ மார்க்கெட் மற்றும் க்ளாக் டவர் ஹைதராபாத்திலிருந்து கேரளாவுக்கும் நம்மைப் புகைப்படக் கருவியோடு ஆசிரியர் அழைத்துப் போகிறார்...
என்னைப் பொருத்த வரையில் கதையோடு கதையின் களத்தையும் அச்சு பிசகாத வண்ணம் தன் சொற்களாலும் கூறிய சிந்தனையாலும் வெளிப்படும் நாவல்களே காலத்தின் ஓட்டத்தில் நிலைப்பவை. அத்தகைய தன்மையினை இந்நாவலுக்குத் தந்திருக்கிறார் ஆசிரியர்...
செகந்திராபாத் மோண்டோ மார்க்கெட் மற்றும் க்ளாக் டவர் ஹைதராபாத்திலிருந்து கேரளாவென மனிதர்களோடு எங்கிலும் உரையாடும் இடங்களில் எல்லாம் சமூகத்தை நோக்கிய சின்ன சின்ன விமர்சனமும் அறிவுப்பூர்வமாக தன் எழுத்து மூலமாக கிண்டலும் செய்து போகிறார். அவர் தன் எழுத்து மூலமாக விவரிக்கும் ஒவ்வொரு சூழ்நிலையின் அமைப்பும் நாவலை வாசித்து முடித்த பின்னும் நினைவுகளில் மின்னுவதே இந்நாவலின் வெற்றியாகிறது.
நாயகனின் மனப்போக்கை தான்தோன்றிக் குணம் கொண்ட தன் நண்பர்கள் மற்றும் இயலாமைகளுக்கு இடையில் சிதையாமல் கடத்தியிருப்பது வாசகர்களின் மனதில் பெரும் வரவேற்பைப் பெரும் என்பதில் எனக்கு ஐயமேதுமில்லை..
இதை போன்ற பல உணர்வுபூர்வமான படைப்புகள் தந்து கொண்டிருக்கும் ஆசிரியர் சுப்ரபாரதிமணியன் மற்றும் என்சிபிஎச் நிறுவனத்திற்கும் என் அன்பும் நன்றிகளும்...
நாவல் : ஸ்மைல் ப்ளீஸ்
ஆசிரியர் : சுப்ரபாரதிமணியன் | வெளியீடு : NCBH
- விசித்திரக்கவி (எ) லோகேஷ்வரன்