படித்துப் பாருங்களேன்...

K. Rajan, N. Athyaman(2011) - Archaeology of The Palani Hills: A case study of Thandikudi, Heritage India Trust, Thanjavur.

தொன்மையானதும் சிறப்பானதுமான வரலாற்றுப் பாரம்பரியம் தமிழர்கள் உடையது. இப்பாரம்பரியத்தை வெளிப்படுத்த சங்க இலக்கியங்கள் பெரிதும் துணை நிற்கின்றன. இவற்றை அடுத்துத் தொல்லியல் சான்றுகள் வருகின்றன. இச்சான்றுகள் கல்வெட்டுகள், செப்பேடுகள் வடிவிலும் பூமியினுள் புதையுண்டு கிடக்கும் பொருட்கள் வடிவிலும் கிட்டுகின்றன.

palani hillsதொல்லியல் சான்றுகளை வெளிக்கொணர்வதிலும் அவற்றைப் பாதுகாப்பதிலும் நமக்கு வழிகாட்டியவர்கள் ஆங்கில காலனியவாதிகள்தாம். நம்மைப் போன்று நீண்ட வரலாற்றுப் பாரம்பரியம் இல்லாத நாட்டைச் சேர்ந்தவர்கள்தாம் நம் தொல்லியல் சான்றுகளைப் பாது காப்பதிலும் பதிவு செய்வதிலும் நூலாக்கம் செய்வதிலும் முதலில் ஆர்வம் காட்டியுள்ளனர்.

இதன் வெளிப்பாடாக, இந்தியத் தொல்லியல் துறை (Archaeology Survey of India) என்ற அமைப்பை நிறுவினார்கள். இந்தியாவில் சில பகுதிகளில் அகழ் வாய்வுகளை மேற்கொண்டார்கள்.கல்வெட்டுகளையும் செப்புப் பட்டயங்களையும் படியெடுத்தார்கள்.இவற்றின் உள்ளடக்கத்தை “இந்தியக் கல்வெட்டு ஆண்டறிக்கை (Annual Report on Indian Epigraphy) என்ற பெயரில் ஆண்டுதோறும் வெளியிட்டார்கள்.இவற்றில் கல்வெட்டின் மூலத்தைப் பதிப்பித்து வெளியிட்டார்கள்.

நாடு விடுதலை பெற்ற பின் இப்பணிகள் வேகம் பெற்றிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நடைபெற வில்லை. அவர்கள் படியெடுத்து வைத்த கல்வெட்டுகள் கூட இன்னும் முழுமையாக நூல் வடிவம் பெறவில்லை. அச்சாக்கம் செய்யும் நிலையே இவ்வாறு என்றால், அகழ்வாய்வு நிலையைப் பற்றி கூறவே வேண்டாம்.

உலகின் தொன்மையான தொல்லியல் களங்களுள் ஒன்றான ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு விடுதலைக்கு முன்பே உலகறியச் செய்யப்பட்டது. நாட்டு விடுதலைக்குப் பின்னர் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தமிழ் நாட்டில் அகழ்வாய்வுகள் நடந்துள்ளன என்பது உண்மை. அதிக நிதியுதவி தேவைப்படும் என்பதால் இவை முழு வீச்சுடன் நடைபெறவில்லை. நம்மிடையே அறிவாற்றலும் அர்ப்பணிப்புணர்வும் கொண்ட தொல்லிய லாளர்கள் உள்ளனர். ஆனால் மாநில, மத்திய அரசுகளும் இவர்களை முறையாகப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் நிதி நல்குவதில்லை.

இத்தகைய அறிவுச்சூழலில் ஆர்வம் கொண்ட ஆய்வாளர்கள் சிலர் முயற்சியெடுத்து, நிதி நல்கை பெற்று, தொல்லியல் ஆய்வுகளை மேற்கொண்டு வருவது பாராட்டுக்கும் மகிழ்ச்சிக்கும் உரிய ஒன்று. இந்த நூலாசிரியர்கள் இருவரும் இந்தியத் தொல் பொருள் ஆய்வுத் துறையின் நிதி நல்கையையும் அனுமதியையும் பெற்று, ஆர்வம் கொண்ட ஆய்வாளர்கள், மாணவர்களின் துணையுடன் பழனி மலைப் பகுதிகளில் உள்ள தாண்டிக்குடி என்ற மலையகச் சிற்றூரில் அகழ்வாய்வு செய்துள்ளனர். அவர்கள் மேற்கொண்ட ஆய்வின் எழுத்துப் பதிவே இங்கு அறிமுகம் செய்யும் நூலாகும்.

நூல் ஆசிரியர்கள்

நூலாசிரியர்களில் ஒருவரான கே.ராஜன் இந்தியாவின் தொல்லியல் அறிஞர்களில் ஒருவர் ஆவார். தமிழ்நாட்டின் நடுகல் குறித்த இவரது நூலின் அறிமுகம் சில ஆண்டுகளுக்கு முன் உங்கள் நூலகம் (2013, பிப்ரவரி) இதழில் வெளியாகியுள்ளது. தற்போது புதுச்சேரிப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். “தொல்லியல் நோக்கில் சங்க காலம்” என்ற தலைப்பிலான இவரது நூல் குறிப்பிடத் தக்க ஒன்று ஆகும். மற்றொரு நூலாசிரியரான ந.அதிய மான் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் நீர் அகழ்வாய்வுத் துறையின் பேராசிரிய ராகவும் தலைவராகவும் உள்ளார். நீர் அகழ்வாய்வில் முறையான பயிற்சி பெற்றவர்.

நூலாசிரியர்கள் இருவரும் மிகுந்த ஈடுபாட்டுடன் வரலாற்றுத் துறையில் பணியாற்றுபவர்கள். ஆழமான வரலாற்று நூல்களையும் ஆய்வுக் கட்டுரைகளையும் தொடர்ந்து எழுதி வருபவர்கள். பல ஆய்வுத் திட்டங்களை மேற்கொண்டவர்கள்.

ஆய்வுக்களம்

மேற்குத்தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான பழனி மலையின் மேல் பகுதிக்கும் கீழ்ப்பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் கொடைக்கானல் உள்ளது. இந்தியாவின் சுற்றுலா வரைபடத்தில் சிறப்பான இடம் இதற்கு உண்டு. இது தவிர கொடைக்கானலுக்கும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் வரலாற்றுச் சிறப்பும் உண்டு. இச்சிறப்பானது இதன் தொன்மையையும் இங்குக் காணப்படும் தொல்லியல் சான்றுகளையும் உள்ளடக்கியது. இரும்புக் காலத்திற்கு முந்தைய குடியிருப்புகளின் எச்சங்கள் இப்பகுதியில் உள்ளன (பார்க்க: வரைபடம்).

kodaikanal research

கோடைப் பொருநன் என்பவனோடு இப்பகுதியைத் தொடர்புப்படுத்தும் புறநானூற்றுப் பாடல் ஒன்று உள்ளது (205). பெருந்தலைச் சாத்தனார் பாடிய இப்பாடல் வெள் வேலிக் கோடைப் பொருநன் என்ற குறுநில மன்னனைக் குறிப்பிடுகிறது. கோடைப் பொருநன் என்ற பெயரின் முன்னால் உள்ள “கோடை” என்ற அடைமொழியானது கொடைக்கானல் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

கொடைக்கானலைச் சுற்றியுள்ள பகுதிகள் நல்ல புல்வெளிகளைக் கொண்டவை. “வெங்கலச் சரலை” என்ற பெயரில் அப்பகுதியில் அழைக்கப்படும் குவார்ட்ஸ் பாறைகள் இங்கு உள்ளன. ஆண்டுக்கு சராசரி 165 செ.மீ. மழை பெய்கிறது. இங்குள்ள காட்டுப் பகுதியில் பல்வேறு தாவரங்களும் விலங்குகளும் இருந்தாலும், இம்மலைக்குரிய சிறப்பாகக் குறிஞ்சி மலர் அமைகிறது. இது பன்னிரண்டு ஆண்டுகளுக் கொரு முறை பூக்கும் இயல்புடையது. இம்மலர் குறித்த பதிவுகள் சங்க இலக்கியத்தில் இடம்பெற்றுள்ளன.

ஆல்பார்ட் கிட்ஸ் புருனே (1859-1940), அவரது மனைவி எமிலி ட்ரி புருனே (1858-1954) ஆகிய இருவரும் இம்மலைப் பகுதியை ஆராய்ந்து 6,437 தாவர வகைகள் இங்கு இருப்பதாகவும், இவற்றுள் 2,143 தாவரங்கள் பழனிமலைக்கே உரியன என்றும் ஆவணப் படுத்தியுள்ளனர். பிலிப் ஃபூயுர்லி பைசா (1877-1947) என்பவர் இப்பட்டியலில் மேலும் 396 தாவர வகைகளை இணைத்துள்ளார். மருத்துவக் குணமுடைய தாவரங்கள் பல இங்கு உள்ளன.

ஆங்கிலேயர்களும் சேசு சபை பாதிரியார்களும் வாட்டில், பைன், கோனிபீர், யூக்கோளிப்ட்ஸ், இன்கோனா போன்ற மரங்களையும் பல வகை பழ மரங்களையும் காஃபி, பைரிதிறம், தீவனப் புல் வகைகள் போன்ற அயல்நாட்டுத் தாவர வகைகளையும் இப்பகுதியில் அறிமுகம் செய்துள்ளனர்.

யானை, புலி, காட்டெருமை, கரடி ஆகியன இங்கு வாழும் காட்டு விலங்குகள். இவை தவிர பல்வேறு வகையான பூச்சி இனங்களும் வண்ணத்துப் பூச்சிகளும் விட்டில் பூச்சிகளும் இங்குக் காணப்படுகின்றன.

குன்னுவர், புலையர், பழியர் ஆகியோர் இப் பகுதியின் பூர்விகக் குடிகள் ஆவர்.

பழனி மலையின் வளமானது வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்து மனிதர்களை ஈர்த்துள்ளது. இப்பகுதியில் கிடைக்கும் பெருங்கற்காலச் சின்னங்களும் கல்வெட்டுடன் கூடிய நினைவுக் கற்களும் வணிகக் குழுக்களின் கல்வெட்டுகளும் இப்பகுதியின் தொடர்ச்சி யான பண்பாட்டு வாழ்வை உணர்த்தி நிற்கின்றன.

ஏலம், மிளகு ஆகியனவற்றை பயிரிடல், மருந்துச் செடிகள், யானைத் தந்தம், தேன், தேக்கு, சந்தனம் ஆகிய காட்டுப் பொருட்கள் கிடைத்தமை ஆகியவற்றால் இரும்புக் காலகட்டத்திலேயே இம்மலைவாசிகளுடன் வணிகர்கள் தொடர்புகொண்டிருந்தனர்.

ஆய்வு முன்னோடிகள்

இப்பகுதியில் காணப்படும் தொல்லியல் சான்றுகள் காரணமாகத் தொல்லியலாளர்களின் ஆய்வுக் களமாக இப்பகுதி நீண்டகாலமாக விளங்கி வருகிறது. ரெவர்ண்ட் காஸ்டன், சேசு சபைத் துறவிகளான ஏ.வி.ரோஸ்னர், கிராஸ் ஆகிய கிறித்துவ மறைப் பணியாளர்கள், ஆங்கிலேட், அய்யப்பன் ஆகியோர் இப்பகுதியில் ஆய்வு செய்து, அவற்றை எழுத்தில் பதிவு செய்துள்ளார்கள். இவர்களுள் காஸ்டன் இப்பகுதியில் கல்லறைகள் குறித்த செய்திகளை முதலில் வெளிக் கொணர்ந்தவர்.

ராபர்ட் பெல் என்பவர் “சென்னை ராஜஸ் தானியின் தொல்லியல் தடயங்களின் பட்டியல்” (List of Andiquanritin Remains in the Presidency of Madras) என்ற நூலை 1882 இல் வெளியிட்டுள்ளார். இந்நூலில் இப்பகுதியின் கல்லறைச் சின்னங்கள் குறித்து பதிவு செய்துள்ளார்.

சில முக்கிய ஊர்கள்

இத்தகைய ஆய்வுகளை மேலும் மேற்கொள்ள வாய்ப்புள்ள ஊர்கள் இப்பகுதியில் காணப்படுகின்றன. அவை வருமாறு: 1. காமனூர், 2. குமரிகுன்று, 3. பெருங்கானல், 4. கதகுமலை, 5. கோட்டைக்கல் தேரி, 6. இடைஞ்ச குழி, 7. சங்கரன் பேத்து, 8. அடுக்கம்.

பாறை ஓவியங்கள்

பழங்கால மனிதனின் கலையுணர்வை வெளிப்படுத்துவனவாகப் பாறை ஓவியங்கள் விளங்குகின்றன. தமிழ்நாட்டில் 82 இடங்கள் பாறை ஓவியங்கள் காணப்படும் இடங்களாகக் கண்டறியப்பட்டுள்ளன. இவை பெரும்பாலும் வடதமிழ்நாட்டில் உள்ளன. கொடைக்கானல் பகுதியில் 1. நைனாவரை அலை, 2. தட்டக்குடிக்காடு, 3. நெல்பலாஅலை, 4. கருவேலம்பட்டி, 5. பாத்தியழி, 6. அலைக்கல்லு ஆகிய இடங்களில் பாறை ஓவியங்கள் காணப்படுகின்றன.

இப்பாறை ஓவியங்கள் பாறைகளில் இயற்கையாக அமைந்துள்ள தங்குமிடங்களில் (குகைகளில்) இடம் பெற்றுள்ளன. இவற்றின் அடித்தளப் பாறைகள் வழவழப்பாக உள்ளன. இத்தன்மையானது இத்தங்கு மிடங்கள் தொடர்ச்சியாகப் பயன்பட்டுள்ளதை உணர்த்துகின்றன. இவற்றுள் காணப்படும் ஓவியங்களை 1. மனித உருவங்கள், 2. விலங்கு உருவங்கள், 3. புனைவு (கற்பனை) உருவங்கள் என மூன்றாகப் பகுக்கலாம். ஊர்கள் வரிசையில் இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ள செய்திகள் இக்கட்டுரையில் இப்பகுப்பின் அடிப் படையில் இடம்பெற்றுள்ளன.

மனித உருவங்கள்

தனிமனிதன், ஆணும் பெண்ணுமான உருவங்கள், நடனமாடுதல், விலங்கு முகத்துடன் கூடிய மனிதன் ஒருவன் நடனமாடுதல், எருமையின் கொம்பு போன்ற ஒன்றை தலையில் அணிந்துகொண்டு விலங்கு ஒன்றின் மீது அமர்ந்திருத்தல், சண்டையிடுதல் என்பன மனிதனை மையமாகக் கொண்ட ஓவியங்கள். ஆயுதங்களுடன் ஆண் ஓடும் காட்சியும் ஆணும், பெண்ணும் இணைந்து நடனமாடும் காட்சியும் இடம்பெற்றுள்ளன.

விலங்கு உருவங்கள்

என்ன விலங்கு என்று அடையாளம் காண முடியாதவாறு பல ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. அதிக அளவில் குறி வரையப்பட்டுள்ளது. இது மிகுந்த எதார்த்த உணர்வுடன் வரையப்பட்டுள்ளது. வேட்டைக் காட்சிகள் சிலவும் இடம்பெற்றுள்ளன.

மஞ்சள் நிறத்தில் நரி போன்ற விலங்கு ஒன்று இடம்பெற்றுள்ளது. நீண்ட வாலும் ஐந்து கால்களும் கொண்ட விலங்கு ஒன்றும் வரையப்பட்டுள்ளது. அதன் ஒரு கால் மடங்கி உடைந்த நிலையில் காட்டப் பட்டுள்ளது. இரு விலங்குகள் சண்டையிடும் காட்சியும் இடம்பெற்றுள்ளது.

புனைவு உருவங்கள்

நான்கு ஆரக்கால்களைக் கொண்ட இரு சக்கரங் களுடன் கூடிய வண்டியின் உருவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. சக்கரத்தில் அச்சும் காணப்படுகிறது. மற்றொரு ஓவியத்தில் காளை பூட்டப்பட்ட வண்டி இடம்பெற்றுள்ளது. காளையின் கொம்புகளும் வாலும் நன்றாகத் தீட்டப்பட்டுள்ளன. கயிறு ஒன்றால் இம்மாடுகள் கட்டப்பட்ட நிலையில் கயிற்றைப் பிடித்தவாறு மனிதன் ஒருவன் நடந்து செல்லும் காட்சி இடம்பெற்றுள்ளது.

ஆண் பெண்களின் கையுருவம் பதிவாகியுள்ளது. இவற்றின் எண்ணிக்கை 500 ஆகும். பெரிய அளவிலான மூன்று கரங்கள் தீட்டப்பட்டுள்ளன. இடது கரங்கள் இணையாகக் காட்டப்பட்டுள்ளன.

கல்வெட்டுகள்

கொடைக்கானல் பகுதியில் தாண்டிக்குடி, தேரியூர், போலூர், கீழவரை, மஞ்சம்பட்டி, பூம்பாறை ஆகிய ஊர்களில் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. இவற்றுள் தாண்டிக்குடி குறித்து விரிவாக காண இருப்பதால், ஏனைய ஊர் கல்வெட்டுச் செய்திகளை மட்டும் முதலில் காண்போம்.

தேரையூர் என்ற சிற்றூரில் 13ம் நூற்றாண்டு கல்வெட்டு ஒன்றை தொல்லியல் அறிஞர் வெ.வேதாச்சலம் கண்டுபிடித்துள்ளார். வண்ணன்குடி என்ற ஊரில் தங்கிய மன்னன் இவ்வூருக்கு நிலக்கொடை வழங்கியுள்ளான். களிங்கராயர், வேணாடு உடையார், தொண்டைமானார், செந்தமிழ்ப் பிள்ளை ஆகியோர் இதில் கையெழுத்து இட்டுள்ளனர்.

தொல்லியல் அறிஞர் சி. சாந்தலிங்கம் போலூர் கிராமத்து விநாயகர் கோயிலில் 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டைக் கண்டறிந்துள்ளார். கல்வெட்டின் இறுதியில் பாம்பு, யானை, காளை ஆகியவற்றின் உருவங்கள் புடைப்புச் சிற்பங்களாகப் பொறிக்கப்பட்டுள்ளன. மன்னனின் தூண்டுதலால் புதிய குடியிருப்பு ஒன்று இப்பகுதியில் நிறுவப்பட்டதை இக்கல்வெட்டால் அறிய முடிகிறது.

மன்னனுக்கு நன்றியுடன் நடந்துகொள்வதாக இவ்வூரார் உறுதிமொழி அளித்துள்ளனர். அடர்ந்த காட்டுப்பகுதியில் ஏற்கனவே அங்கு வாழ்ந்த குடியிருப் பாளர்களுக்கும் புதிதாக அங்குக் குடியேறியவர்களுக்கும் இடையிலான முரண்பாட்டை மன்னன் தீர்த்து வைத்ததை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. அத்துடன் அடர்ந்த காட்டுப் பகுதியில் புதிய குடியிருப்பு உருவாக்குவதில் மன்னன் காட்டிய ஆர்வத்தை அறிய முடிகிறது.

இச்செயலை மேற்கொண்ட மன்னனின் பெயரை இக்கல்வெட்டு குறிப்பிடாவிட்டாலும், இக்கல் வெட்டில் இடம்பெறும் `ஸ்ரீபாதம்’, `தம்பிரானார்’ என்ற சொற்கள் பிற்கால சேர மன்னர்களைச் சுட்டுகின்றன.

கொடைக்கானலில் இருந்து 45 கி.மீ. தொலைவில் உள்ள கீழவரையில் புதிய குடியிருப்பு ஒன்றை மன்னன் உருவாக்கியதைக் குறிப்பிடும் கல்வெட்டை சாந்தலிங்கம் கண்டுபிடித்துள்ளார். இக்கல்வெட்டில் எழுத்தமைதி அடிப்படையில் இதன் காலம் 14ம் நூற்றாண்டு என்று கருத முடிகிறது.

மன்னனுக்கு எதிராக நடந்தால் அவன் தம்மை வெட்டிப் போடலாம் என்றும், மன்னனுக்கு எதிராக நடப்போரை தாமே பிடித்து வெட்டுவதாகவும் புதியதாகக் குடியேறியவர்கள் உறுதியளித்துள்ளனர்.

கல்வெட்டு சிதிலம் அடைந்துள்ளதால், வேறு செய்திகள் எவற்றையும் அறிய முடியவில்லை.

கொடைக்கானலில் இருந்து 65 கி.மீ. மேற்கில் உள்ள மஞ்சம்பட்டி என்ற கிராமத்திலும் சிதிலமடைந்த கல்வெட்டு ஒன்றை சாந்தலிங்கம் கண்டுபிடித்துள்ளார். எழுத்தமைதி அடிப்படையில் இது 15ம் நூற்றாண்டு சேர்ந்தது என்று கருத இடமுள்ளது. இக்கல்வெட்டி யிலும் பாம்பு யானை காளை ஆகியவற்றின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

கொடைக்கானலுக்கு மேற்கில் பத்து கி.மீ. தொலைவில் உள்ள பூம்பாறை கிராமத்தில் உள்ள தண்டபாணி சுவாமி கோயிலில் கல்வெட்டு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. பூம்பாறையில் உள்ள பூம்பாறை நாதன் கோயிலுக்கு பூம்பாறைக் கிராமத்தை தாண்டிக்குடி கிராமத்தார் கொடையாக வழங்கியதை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. இவ்விரு கிராமங்களுக்கும் இடையிலான தூரம் ஏறத்தாழ 40 கி.மீ. ஆகும். இவ்விரு கிராம மக்களுக்கும் இடையிலான உறவை இக்கல்வெட்டால் அறிய முடிகிறது. இதே கோயிலில் மற்றொரு கல்வெட்டு, கோயிலுக்கு வழங்கப்பட்ட நிலக்கொடையைக் குறிப்பிடுகிறது.

மேற்கூறிய கல்வெட்டுகள் மத்திய காலத்தின் இறுதிப் பகுதியில் சமவெளியில் இருந்து மக்களை அழைத்து வந்து இப்பகுதிகளில் மன்னர்கள் குடியேற்றியதை அறிவிக்கின்றன. மன்னர்கள் இதில் நேரடியாக அக்கறை காட்டியுள்ளார்கள். புதிதாகக் குடியேறியவர்கள் ஊரார், உள்ளாட்சி மன்றங்கள், நாடு போன்ற நிர்வாகப் பிரிவுகள் முதலான சமூக அமைப்புகளை உருவாக்கிக் கொண்டுள்ளார்கள். வணிகக் குழுக்களும் இங்கு உருவாகி உள்ளன. இச்சான்றுகள் இப்பகுதியின் தொடர்ச்சியான பொருளியல், சமூக வளர்ச்சிப் போக்கை உணர்த்துகின்றன.

தாண்டிக்குடி

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு நகரிலிருந்து வடகிழக்கில் 44 கி.மீ. தொலைவில் கடல் மட்டத்தி லிருந்து 4,400 அடி உயரத்தில் தாண்டிக்குடி உள்ளது. பழனி மலையில் உள்ள முக்கிய கிராமம் தாண்டிக்குடி.

ஐயூர் முடவனார் என்ற சங்க காலக்கவிஞர் எழுதிய புறநானூற்றுச் செய்யுள் (399:34) ``தோன்றிக்கோ” என்ற குறுநில மன்னனைக் குறிப்பிடுகிறது. தாண்றி என்ற சொல்லின் பழைய வடிவமாகவே தோன்றி என்ற சொல் இருந்திருக்க வேண்டும். அப்படியானால் தோன்றிக் குடியே இன்றைய தாண்டிக்குடியாக மாறி இருக்க வேண்டும்.

குணசேகரப் பாண்டியன் ஆட்சியில் கி.பி.1280ல் வெட்டப்பட்ட கல்வெட்டு ஒன்று இங்குக் கிடைத் துள்ளது. இக்கல்வெட்டில் ``தாண்றிக்குடி” என இவ்வூர் குறிப்பிடப்பட்டுள்ளது. தாண்றி என்பது ஒரு வகை மரம். இதன் தாவரவியல் பெயர் டெர்மினாலியா பெல்லரிகா (tமீக்ஷீனீமீஸீணீறீவீணீ தீமீறீறீமீக்ஷீவீநீணீ) என்பது ஆகும். இம்மரம் தற்போதும் இப்பகுதியில் பரவலாகக் காணப்படுகிறது. குடி என்பது ஊரைக் குறிக்கும். தாண்றிக்குடி என்ற பெயரின் திரிபு வடிவமாகவே தாண்டிக்குடி என்ற பெயர் வழங்குகிறது.

நான்கு புறமும் மலைகளால் சூழப்பட்ட இக் கிராமத்தில் மலைகளிலிருந்து தோன்றும் சிறிய ஓடைகள் ஒன்றாகக் கலந்து பெரியாறு ஓடை என்ற பெயரில் சிற்றாறு ஒன்று ஓடுகிறது. இது பின்னர் மருதா நதி என்ற ஆற்றில் கலக்கிறது.

இரு வாணிப வழிப்பாதைகளுக்கு அருகில் தாண்டிக்குடி இருந்துள்ளது. முதலாவது பாதை தென்பகுதியில் உள்ள பாண்டியரின் தலைநகரமான மதுரைக்குச் செல்வது. மற்றொரு பாதை சேரர்களின் தலைநகரமான வஞ்சி நகருக்கு சின்னமனூர், உத்தம பாளையம், உத்தமபுரம், கம்பம், கூடலூர் என முல்லைப் பெரியாறு ஆற்றின் கரைப் பகுதி வழியாகச் செல்வது. இப்பாதையானது வைகை ஆற்றின் முகத்துவாரத்தில் உள்ள பாண்டியரின் துறைமுகமான ஆலங்குளத்தையும் பெரியாற்றின் முகத்துவாரத்தில் உள்ள சேரர்களின் துறைமுகமான முசிறியையும் இணைத்தது. தமிழ்-பிராமிக் கல்வெட்டுகளுடன் கூடிய சமணப் படுக்கைகளும் தங்குமிடங்களும் இவ்வணிக வழித்தடத்தில் (சான்றாக விக்கிரமங்கலம், முதலைக்குளம், மேட்டுப்பட்டி ஆகிய ஊர்களில்) காணப்படுகின்றன.

இந்தியாவிலேயே தொன்மையான நினைவுக்கற்கள் இப்பாதையில் உள்ள புலிமான் கோம்பையிலும் தாதப்பட்டியிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மதுரையையும் வஞ்சியையும் இணைக்கும் இரண்டாவது வணிக வழித்தடம் பழனி மலையின் வடபகுதியில் இடம்பெற்றுள்ளது. ரோம் நாட்டின் நாணயங்கள் கண்டெடுக்கப்பட்ட ஆனைமலை, பொள்ளாச்சி, புதிநத்தம், தலையம்புத்தூர் ஆகிய ஊர்கள் இத்தடத்தில்தான் உள்ளன. இவை தவிர இப்பகுதியில் உள்ள தாமரைக்குளம், ராஜாபுரம், கொத்தமங்கலம் ஊர்களில் வணிகக் குழுக்களின் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன.

manpaanaiதாண்டிக்குடிக் கல்லறைகளில் நிகழ்ந்த அகழ் வாய்வில் கிட்டிய கலைப்பொருள்கள் வணிகர் களுடனும் வணிக மையங்களுடனும் இவ்வூர் கொண் டிருந்த நெருக்கமான உறவை வெளிப்படுத்துகின்றன. இன்று தாண்டிக்குடிப் பகுதியானது மிளகு, ஏலக்காய், காஃபி, ஆரஞ்சு, பட்டர் புரூட், வாழைப்பழம் ஆகியன விளையும் வளமான பகுதியாக உள்ளது. மிளகும் ஏலக்காயும் வாழைப்பழமும் வரலாற்றின் காலத்தில் தொடக்கத்திலேயே இங்குப் பயிரானது தொடர்பான இலக்கியப் பதிவுகள் உள்ளன. இப்பயிர்கள் சமவெளிப் பகுதியுடனான உறவைத் தக்கவைத்துள்ளன.

இரும்புக்காலத்திற்கு முன்பிருந்தே இப்பகுதி குடியிருப்புப் பகுதியாக இருந்துள்ளதை இங்கு அகன்றெடுக்கப்பட்ட தொல்லியல் சான்றுகள் உணர்த்து கின்றன. ஆங்கிலேட் என்பவர் தாண்டிக்குடியிலிருந்து மணலூர் செல்லும் பாதையின் ஓரத்தில் இறந்தோரை அடக்கம் செய்யும் பதுக்கைகள் (டால்மன்கள்) காணப் பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். அவர் பார்வையிட்ட காலத்திலேயே வரலாற்றுச் சின்னங்களான கற்குவியல் களும் கற்பலகைகளும் சாலை போடவும் கட்டிடம் கட்டவும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

46 கல்லறைகளில் மூன்று மட்டுமே அழிவுக்கு ஆளாகவில்லை. இப்பகுதி குறித்த வரலாறு சார்ந்த, வரலாறு சாராத தகவல்கள் அனைத்தும் இந்நூலாசிரியர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளன. கி.மு. 5ம் நூற்றாண்டில் தொடங்கி கி.பி. 16-17ம் நூற்றாண்டு வரையிலான சான்றுகளை இவர்கள் சேகரித்துள்ளனர். இவை பதுக்கைகள் (டால்மன்), கல்லறைகள், நினைவுக்கற்கள், கல்வெட்டுகள் என பல தரத்தவை.

பதுக்கைகள்

இங்குக் காணப்படும் பதுக்கைகளை முழுமையாகப் பார்க்கும்போது இவற்றை அமைப்பதில் ஓரே சீரான அமைப்பு முறை பின்பற்றப்படவில்லை என்பது தெளிவாகிறது. மழைநீர் நேரடியாகப் புதைகுழிக்குள் விழாதவாறு அமைக்கப்பட்டுள்ளன. தாண்டிக்குடியில் பதுக்கைகளை `பேட்டு’, `அரை மனிதன் வீடு’ என்று அழைக்கிறார்கள். இப்பதுக்கைகள் அனைத்தும் பாறைகளின் மீதே உருவாக்கப்பட்டுள்ளன. இவை தனித்தனியாக இல்லாமல் கூட்டமாகவே அமைக்கப் பட்டுள்ளன. இவற்றிலிருந்து இரும்பு கற்காலத்தைச் சேர்ந்த கருப்பு சிவப்பு மட்பாண்டங்கள், சிவப்பு நிறப் பாண்டங்கள், இரும்பு உளி ஆகியன கண்டெடுக்கப் பட்டுள்ளன.

கல்லறைகள்

இரும்புக்காலத்திய புதைகுழிகள் மூன்று இடங் களில் கண்டறியப்பட்டுள்ளன. ஒன்று தலைக்காட்டில் உள்ள காஃபி வாரிய வளாகம், இரண்டாவது முருகன் கோயில் வளாகம், மூன்றாவது பொம்மக்காடு என்னும் பகுதி.

இம்மூன்று பகுதிகளிலும் கற்பெட்டியைப் போல கல்லறைக் குழிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை மூடியிருந்த கற்பலகைகள் பல புதைகுழியை விட்டு அகற்றப்பட்டுத் தனித்துக் கிடைக்கின்றன.

கல்லறை ஒன்று நன்றாகச் செதுக்கப்பட்ட கற்பலகைகளால் அமைக்கப்பட்டுள்ளது. மண் தரையில் செங்கோண வடிவில் தோண்டப்பட்ட குழியில் கற்பலகை ஒன்று பதிக்கப்பட்டுள்ளது. குழியின் நான்குபுறமும் கற்பலகைகளைச் செங்குத்தாக நட்டு, ஒரு பெட்டி போன்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர். மேலும் இக்குழியானது சம அளவிலான இரு பிரிவுகளாக இரண்டு மீட்டர் ஆழத்தில் பிரிக்கப்பட்டுள்ளது.

இக்கிராமத்தினரின் கூற்றுப்படி இத்தகைய கல்லறைகள் காஃபி சாகுபடிக்காக நிலத்தைச் சமப்படுத்தும் போது அழிந்து போயின. அடர்ந்த காடும் தீவிரமான காஃபி சாகுபடியும் எல்லா கல்லறைகளையும் ஆராய முடியாதவாறு செய்துவிட்டன. இருந்த போதிலும் இப்பகுதி யானது பெரிய அளவிலான அடக்கத் தளமாக இருந்துள்ளதை இக்கல்லறைகளும் அவற்றின் அமைப்பும் உணர்த்துகின்றன.

இரும்பு வாள்கள், சில மண்பானைகள் ஆகியன சிதைவடைந்த கல்லறைகளில் கிடைத்துள்ளதாக இக் கிராம மக்கள் கூறுகின்றனர். ஆங்கிலட் என்பவர் 1954ல் நிகழ்த்திய அகழ்வாய்வில் சேகரித்த பொருட்கள் செம்பகனூர் அருங்காட்சியகத்தில் உள்ளன. கிராம மக்களின் கூற்றுக்கு அருங்காட்சியகப் பொருட்கள் வலுவூட்டுகின்றன.

தாழிகள்

இறந்தோரின் உடலை வைத்து அடக்கம் செய்யும் முதுமக்கள் தாழிகளும் தாண்டிக்குடியில் கிடைத் துள்ளன. இத்தாழிகள் காணப்படும் இடத்தின் அடிப் படையில் மூன்று வகையாகப் பகுக்கலாம். 1. குழியில் புதைக்கப்பட்டவை 2. கல்லறையினுள் காணப் படுபவை 3. பதுக்கையினுள் கண்டெடுக்கப்பட்டவை.

முதல்வகையில் புதைக்கப்பட்ட 15 மேற்பட்ட தாழிகளை ஆங்கிலட் என்பவரும் அவரது குழுவினரும் செண்பகனூர், பெருமாள் மலைப் பகுதியில் அகன் றெடுத்துள்ளனர்.

தாண்டிக்குடியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட தாழிகள் சில இரும்புக்காலத்திற்கு (கி.மு.1500- கி.மு. 1000) முந்தியன. இத்தாழிகள் அளவில் சிறியவை. கிடை மட்டமாகக் குழியில் புதைக்கப்பட்டவை. கல்லறையில் கண்டெடுக்கப்பட்ட நான்கு தாழிகள் இரும்புக் காலத்தை (கி.மு.1000-கி.மு. 500) சேர்ந்தவை. கலைநயமின்றி சொரசொரப்பாக இவை செய்யப் பட்டுள்ளன.

புதைகுழிப் பொருட்கள்

பலவகையான கத்திகள், உளிகள், வாள்கள், அம்பின் இரும்பு முனைகள், ஈட்டி முனைகள் ஆகியன இங்குக் கிடைத்துள்ளன. கருப்பு-சிவப்பு மட்பாண்டங் களும் கிடைத்துள்ளன. மேற்கூறிய மூன்று வகையான கல்லறைகளில் கிடைத்துள்ள பொருட்கள் அவற்றின் இயல்பாலும் அளவாலும் மதிப்பு மிக்கன ஆகும்.

சிவப்புநிற மணிக்கற்கள், கனிம மணிகள், கழுத்தணி கலனில் கோக்கும் பதக்கங்கள், இரத்தின மணிகள், சிறு தங்கத் துண்டுகள் ஆகியனவும் நூலாசிரியர்களின் கள ஆய்வில் கிடைத்துள்ளன.

பொருளியல் நிலையில் உயரிய நிலையில் இருந்துள்ளமையாலே இப்பொருட்களை இம்மக்கள் பயன்படுத்தியுள்ளனர். அத்துடன் இவை வெளி யுலகத்துடனான இவர்களின் தொடர்பையும் வெளிப்படுத்துகின்றன. வனத்தில் கிடைக்கும் பொருட்களுக்குப் பண்டமாற்றாக இவற்றை அவர்கள் பெற்றிருக்க வேண்டும்.

புதைகுழிகளின் அமைப்பும் நேர்த்தியும்

அவற்றில் கிடைத்துள்ள பொருள்களும் இந்நினைவுச் சின்னங்கள் மேட்டிமையோர்க்கு எழுப்பப்பட்டிருக் கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது. கொல், தச்சு வேலை, மணிக்கற்களை வெட்டுதல், மண்பாண்டம் செய்தல் தொடர்பான தடயங்கள் கிடைக்கவில்லை. எனவே பண்டமாற்று வாயிலாகவே இப்பொருட்களைப் பெற்றிருக்க வேண்டும். வேளாண்மையில் இவர்கள் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்களா என்பதும் கேள்விக் குரியதே.

நினைவுக்கற்கள்

தாண்டிக்குடி கிராமத்தில் ஆறு நினைவுக்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஒரு நினைவுக்கல்லில் இடது கையில் துப்பாக்கியும் வலது கையில் வாளும் ஏந்திய நிலையில் வீரன் ஒருவன் புடைப்புச் சிற்பமாக உள்ளான். இதன் காலம் 17 அல்லது 18ம் நூற்றாண்டாக இருக்கலாம்.

இரண்டாவதாக ஒரு நினைவுக்கல்லில் வில்லை வளைத்து அம்பெறியும் தோற்றத்தில் வீரன் ஒருவன் இடம்பெற்றுள்ளான்.

மூன்றாவதாக வாளேந்திய நிலையில் வீரன் ஒருவன் இடம்பெற்றுள்ளான். நான்காவது நினைவுக்கல் புலியைக் கொன்ற வீரனுக்கு எழுப்பப்பட்டுள்ளது. ஐந்தாவது ஆறாவது நினைவுக்கற்கள் கைகூப்பிய நிலையில் வலது பக்கம் குடுமியுடன் கூடிய வீரர்களைச் சித்தரிக்கின்றன. முதல் நினைவுக்கல் நீங்கலாக ஏனைய ஐந்து நினைவுக்கற்களும் 15-16வது நூற்றாண்டு வரையிலான காலத்தைச் சேர்ந்தவை ஆகும்.

வணிகக் குழுக்களின் கல்வெட்டு

முன்னர் குறிப்பிட்ட குலசேகர பாண்டியன் காலத்து (கி.பி.1280) கல்வெட்டு மணலூர் ஊரார்க்கும் தாண்டிக்குடி ஊரார்க்கும் இடையிலான பகையைத் தீர்த்து வைத்து ஏற்படுத்திய உடன்படிக்கையைக் குறிப்பிடுகின்றது. மணலூர் கிராமம் மழைமண்டலம் என்ற ஆட்சிப் பிரிவுக்குள் அடங்கி இருந்த ஊராகவும் `ஐயாபுலி’ என்ற வணிகக் குழு வாழ்ந்த ஊராகவும் இருந்ததை இக்கல்வெட்டுக் குறிப்பிடுகிறது.

நூலின் சிறப்பு

தொல்லியல் அறிவு மிக்கோர்க்குப் பயன்படும் வகையில் நுட்பமான தொல்லியல் செய்திகளுடனும் தொல்லியல் கலைச்சொற்களைப் பயன்படுத்தியும் இந்நூலை எழுதியுள்ளனர். இதைத் தவிர்த்து பொது வாசிப்பிற்கு ஏற்ற செய்திகள் மட்டுமே இந்நூல் அறிமுகக் கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. எனவே வெகுசன வாசிப்பிற்கான எளிய நூலாகக் கருதிவிடக் கூடாது.

இரும்புக் காலத்திற்கு முந்தைய காலம் - இரும்புக் காலம் - பேரரசுகளின் காலம் என தாண்டிக்குடி ஊர் வரலாற்றுத் தொடர்ச்சியைக் கொண்டுள்ளதைக் கள ஆய்வின் வாயிலாக நூலாசிரியர்கள் வெளிப்படுத்தி யுள்ளனர். தம் முடிவுகளை நிறுவ மேலும் சான்றுகள் தேவை என்பதையும் ஆய்வுலக நேர்மையுடன் பதிவு செய்துள்ளனர்.

தமிழரின் தொன்மை அடையாளம் புறக்கணிக்கப் படும் இன்றைய சமூகச் சூழலில் இத்தகைய நூல்களின் தேவை அவசியமாகிறது.