mangala devi templeஇன்று சித்திரை பௌர்ணமி. கண்ணகி நீதிக்காகப் போராடி இறுதியில் கணவனைக் காண விண்ணுலகம் சென்ற நாள். ஆம்..... ஏறக்குறைய ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தலைவிரிக் கோலத்துடன், ஒரு பக்கம் அறுக்கப்பட்ட மார்பகத்துடன் குருதி கொட்ட விண்ணுலகம் புகுந்தாள் தன் கணவனுடன் சேர.

ஆயிரம் பேர் கூடியிருக்கின்ற அவையில் ஒரு அபலைப் பெண் மட்டும் வந்து நின்று மாட்சிமை பொருந்திய மன்னனை எதிர்த்து கேள்வி கேட்டால் என்ன நடக்கும்? சற்று சிந்தித்துப் பாருங்கள்... டெல்லிப் பேருந்தில் சீரழிக்கப்பட்ட நிர்பயாவின் நிலைதான் அவளுக்கும் நேர்ந்திருக்கும். தமிழகத்தின் முதல் பெண் புரட்சிக்காரி கண்ணகிதான் என்று பட்டிமன்றப் பேச்சுகளிலும் வாய்ப்பந்தல் இடுவர். உண்மையில் நடந்ததை எண்ணிப் பார்த்தால் கண்ணகிக்குப் பின்னால் ஒளிந்துள்ள உண்மைகள் அதிர்ச்சியூட்டும். கண்ணகியின் வாழ்க்கை, புதிர்கள் நிறைந்ததும், எண்ணற்ற திருப்பங்கள் நிரம்பப் பெற்றதும் ஆகும். கண்ணகியின் வாழ்க்கை நிகழ்வுகள்தான் தமிழக வரலாற்றின் மர்ம முடிச்சுகளை அவிழ்க்க வல்லவை.

சோழ நாட்டின் பூம்புகாரில் பிறந்து, சேர நாட்டில் வாழ்க்கைப்பட்டு, பாண்டி நாட்டில் கணவனைத் தொலைத்த கண்ணகி சின்னஞ்சிறு சிறுமியாவாள். ஆம்.. கண்ணகி திருமணம் ஒரு குழந்தைத் திருமணம் ஆகும். நம்ப முடியாததாக இருந்தாலும் கோவலன் – கண்ணகி திருமணத்தின் போது கண்ணகிக்கு பன்னிரெண்டு வயதும், கோவலனுக்கு பதினாறு வயதும் நிரம்பி இருந்ததாக சிலப்பதிகாரமே கூறுவது இதற்குச் சான்று. கண்ணகியை முதிராக் குளவியள் என்று சிலம்பு குறிப்பது இதனை உறுதிப்படுத்துவதாக உள்ளது.

கோவலனை இழந்த கண்ணகி மதுரையை விட்டு புறப்பட்டு, வைகைக் கரை வழியே ஆவேசமாகச் சென்றாள். பின்னர் வருஷ நாடு மலை வழியாக சுருளி மலையின் மேற்குத் தொடர்ச்சியான மங்கலதேவி மலைக்கு வருகிறாள். கண்ணகி தெய்வமான இடம் இதுவே. இவ்விடத்தில்தான் கண்ணகி விண்ணுலகம் சென்ற காட்சியைக் கண்ட குன்றக் குறவர்கள் சேரன் செங்குட்டுவனுக்கு செய்தி தெரிவித்து செங்குட்டுவன் கோயில் எடுப்பித்ததும், இளங்கோவடிகள் காவியம் பாடியதும் ஊரறிந்த வரலாறு. ஏனைய இலக்கியங்களைப் போன்றே காலவெள்ளத்திற்கேற்ப சிலப்பதிகாரத்தில் செருகப்பட்ட புனைவுகளும் உண்டு.

kannagi temple Inscriptionமுதலில் சிலப்பதிகாரம் பாடிய இளங்கோவடிகள் செங்குட்டுவனின் சகோதரர் என்று நாம் வரலாற்றில் பேசியும் எழுதியும் வருகிறோம். இளங்கோவடிகள் செங்குட்டுவனின் சகோதரர் என்பதற்கு சங்கப் பாடல்களில் குறிப்புகளில்லை. செங்குட்டுவனின் தந்தை நெடுஞ்சேரலாதனுக்கு இரு மனைவியர் இருந்தனர். அவர்களுள் ஒருவர் ஆவியர் குடியைச் சேர்ந்தவள். அவர்களுக்குப் பிறந்தவர்கள் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரலும், ஆடுகோட்பாட்டுச் சேரலாதனும் ஆவார்கள். மற்றொரு மனைவி சோழனின் மகளாவார். இவருக்குப் பிறந்தவனே சேரன் செங்குட்டுவன். இவ்வாறு பதிற்றுப் பத்தின் 4, 5, 6 ஆம் பதிகங்கள் கூறுகின்றன. சோழன் மகளுக்கு மற்றொரு மகன் இருந்ததாக எங்குமே குறிப்புகளில்லை. எனவே செங்குட்டுவனின் தம்பி இளங்கோவடிகள் எனக் கூறும் சிலப்பதிகாரத்தின் இறுதி 47 அடிகள் (சிலப்.30. 156- 202 ) பிற்சேர்க்கை என்றே கருத வேண்டும்.

இளங்கோவடிகள் சேரன் செங்குட்டுவனின் சகோதரராக இல்லாவிடினும் இருவரும் சமகாலத்தவர் என்பதை மறுக்கவியலாது. சேரன் செங்குட்டுவனின் வடபுல படையெடுப்பைக் கொண்டு இவ்வுண்மையை அறியலாம். சிலப்பதிகாரம் இயற்றப்பட்ட காலம் கி.பி இரண்டாம் நூற்றாண்டாகும். செங்குட்டுவன் வடபுலம் நோக்கிப் படையெடுத்த போது கங்கையாற்றைக் கடக்க நூற்றுவர் கன்னர் (சதகர்ணிகள்) உதவியதாக சிலப்பதிகாரம் கூறுகிறது. இந்நூற்றுவர் ஆந்திரத்தை ஆண்ட சாதவாகனர்களேயாவர்!. இவர்களுள் கெளதமி புத்திர சதகர்ணியின் காலத்திலேயே (கி.பி. 106 – 130) சேரன் செங்குட்டுவன் வடபுலம் நோக்கிப் படையெடுத்த நிகழ்வு சிலப்பதிகாரத்தால் உறுதிப்படுத்தப்படுகிறது. எனவே இளங்கோவடிகளும், சேரன் செங்குட்டுவனும் சமகாலத்தவரே.

சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் தங்கியிருந்தாகக் குறிப்பிடும் குணவாயிற் கோட்டம் பெரியாற்றங்கரையின் வஞ்சி மாநகரில் அமைந்தவிடமாகும். வஞ்சியும், கரூர் என்று குறிக்கப்படும் பகுதியும் ஒன்றேயாகும். தற்போதைய கேரளத்தின் எர்ணாகுளத்திற்கு வடக்கே பொன்னானிக்கு அருகாமையில் திருக்கணா மதிலகம் என்னும் இடம் உள்ளது. மலையாளச் சொல்லான இதன் பொருள் கிழக்குக் கோட்டை மதிலை அடுத்துள்ள மாளிகை என்பதாகும். இதுவே சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் தங்கியிருந்த குணவாயிற் கோட்டம் ஆகும். வஞ்சி நகரக் கோட்டையின் கிழக்கு மதில் இவ்விடத்தில் இருந்திருத்தல் வேண்டும். இதன் அருகாமையில் இரண்டு மைல் தொலைவில் திருவஞ்சிக் குளம் என்ற பகுதி அமைந்திருப்பது மேற்கண்ட கூற்றை உறுதிப்படுத்தும்.

சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்கு கட்டிய கோயில் மங்கலதேவி கோட்டம் ஆகும். சேரன் செங்குட்டுவன் எடுப்பித்த கோயிலானது அப்போதைய மரபுப்படி மரத்தாலும், சுடுமண் செங்கலாலும்தான் கட்டப்பட்டிருந்தது. தற்போது நாம் பார்க்கிற கட்டுமானம் கி.பி 10 - 13 ஆம் நூற்றாண்டு கால பாண்டியர் கலைப் பாணியை ஒத்துக் காணப்படுகிறது. கேரள அரசின் அதிகாரப்பூர்வ சுற்றுலாத்துறை வலைத்தளத்திலேயே கண்ணகி கோயில் 10 ஆம் நூற்றாண்டு பாண்டியர்கள் கட்டுமானத்தில் (கற்றளியாக மாற்றியவர்கள்) காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்ணகி கோயிலின் அருகிலேயே சிவனுக்கு தனி சன்னதியும் காணப்படுகிறது. இங்கு எப்படி வைதீக சிவ ஆலயம் உட்புகுந்தது என்பது கண்ணகிக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.

இக்கோயிலுக்கு பிற்காலத்தில் இராசராச சோழன் முதலானோரும் திருப்பணி செய்திருக்கிறார்கள். இராசராசனின் இரண்டு கல்வெட்டுக்களில் கண்ணகி “ஸ்ரீ பூரணி” என்று குறிக்கப்படுகிறாள். சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்கு கோவில் கட்டிய பின்னர் அவள் திருமாபத்தினி என்று தமிழரால் கொண்டாடப்பட்டாள். முதலாம் இராசராசன் மங்கலதேவி கோட்டத்திற்கு வந்து கண்ணகியின் சிறப்பை உணர்ந்தான். கோயிலுக்கு திருப்பணி செய்ததோடு மட்டுமல்லாது பிடி மண் எடுத்துச் சென்று தஞ்சையில் பத்தினித் தெய்வ வழிபாட்டை தொடங்கி வைத்தான். இக்கோயிலே சிங்களநாச்சியார், செங்கள நாச்சியார் என்று வழங்கி பின் பெயர் மருவி செங்களாச்சியம்மன் கோயிலாக தற்போது உள்ளது.

கண்ணகிக்கு ஸ்ரீ பூரணி, ஆளுடைய நாச்சியார் என்ற வேறு பெயர்களும் உண்டு. கன்னட நாட்டில் கண்ணகி சந்திரா என அழைக்கப்படுகிறாள். கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் இலங்கையை ஆண்ட மன்னன் இரண்டாம் கயவாகு, மங்கல தேவி கோட்டத்திற்கு வந்து கண்ணகியை வணங்கியதோடு இலங்கையின் யாழ்ப்பாணத்திலும் பத்தினித் தெய்யோ என்ற பெயரில் கண்ணகி வழிபாட்டைத் துவக்கியதாக இலங்கை வரலாற்றாளார் செ.இராசநாயகம் குறிப்பிடுகிறார்.

கண்ணகி மதுரையை அழித்த பின்னர் அவரின் உள்ளத்தை குளிர்விக்க கொற்கையை ஆண்ட பாண்டிய நெடுஞ்செழியனின் சகோதரன் வெற்றி வேற்செழியன் ஆயிரம் பொற்கொல்லரை பலியிட்டான் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. இத்தகைய பலி கொடுக்கும் முறை கி.பி 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை தொடர்ந்துள்ளதை ஆங்கில ஆவணங்கள் உறுதிப்படுத்துகின்றன. வெற்றி வேற்செழியன் தான் ஆண்ட கொற்கையில் கண்ணகிக்கு கோயில் ஒன்றை அமைத்தான். வெற்றி வேற்செழியனால் வழிபடப்பட்ட அம்மன் ஆதலால், காலப்போக்கில் இக்கோயில் வெற்றி வேலம்மனாக தற்போது மக்களால் வணங்கப் பட்டு வருகிறது. இங்கிருந்த கண்ணகி சிலையும் அகற்றப்பட்டு துர்க்கையம்மன் சிலையே தற்போது வழிபாட்டில் இருந்து வருகிறது. கோவலன் படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படுகின்ற பகுதி இப்பொழுதும் மதுரையில் கோவலன் பொட்டல் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இங்கு அமையப் பெற்றுள்ள கண்ணகி கோயிலில் கோவலன் தலையைக் கொய்யப் பயன்படுத்தப்பட்ட பாறை என்ற ஒன்றும் வழிபாட்டில் இருந்து வருகிறது.

kannaki templeதமிழறிஞர் சி. கோவிந்த ராசனாரே செங்குட்டுவன் அமைத்திட்ட கண்ணகி கோயில் இம்மங்கலதேவி கோட்டமே என்று உலகிற்கு அறிவித்தார். சேரன் செங்குட்டுவன் நிறுவியதாக சொல்லப்படுகின்ற சிலையின் ஒரு பகுதியை எடுத்து டாடா ஆராய்ச்சி நிலையத்திற்கு அனுப்பி வைத்தார். அவர்களும் கல்லினை ஆராய்ந்து இமயமலையிலிருந்து கொண்டு வரப்பட்ட கல்லிலிருந்துதான் சிலை செய்யப்பட்டிருப்பதாக சான்றும் அளித்தனர். 1963 ஆம் ஆண்டு நவம்பர் 17 ல் வெளியிடப்பட்ட இம்முடிவு தமிழக வரலாற்றில் ஒரு பெரும் திருப்பு முனையாக அமைந்தது.

சோழ வம்சத்து மன்னர்கள் இறந்துவிட்டால் அவர்களை எரித்த சாம்பலைக் கொண்டு பள்ளிப்படை கோயிலை எடுப்பிப்பது போன்று பாண்டிய வம்சத்தவர்கள் இறந்தால் அவர்களை எரித்த இடத்தில சாத்தன் ( பின்னாளில் சாஸ்தா ) கோயிலாக தங்களது மன்னரை வணங்கி வரலாயினர். பாண்டிய நெடுஞ்செழியன் மறைந்தபின்பு அவனையும் சாஸ்தாவாக்கினர். மதுரையில் வைகை ஆற்றங்கரையில் காணப்படும் பாண்டி முனீஸ்வரர் கண்ணகிக்கு தவறான தீர்ப்பு வழங்கிட்ட பாண்டிய நெடுஞ்செழியனின் ஆலயமே என்று வட்டார வழக்குகளில் நம்பப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் நோக்கில் பண்டைய கோட்டை கொத்தளத்தின் எச்சங்கள் கிடைக்கப் பெற்றதை தொல்லியல் துறையின் அறிக்கையும் உறுதி செய்கிறது.

தற்காலத்தில் கண்ணகியின் வழிபாடு தமிழ் சமூகத்தில் வெவ்வேறு வடிவங்களில் நிலை பெற்றதாகவே கருதுதல் வேண்டும். ஒற்றை முலைச்சியம்மன், சிலம்பியம்மன், பகவதியம்மன், சிலவிடங்களில் பேச்சியம்மன், மாரியம்மன் என்றும் கண்ணகி இரண்டறக் கலந்துவிட்டாலும் தமிழர்கள் வழிபாட்டில் கண்ணகி வழிபாடென்பது நீண்ட நெடுங்காலமாய் நீடித்து வருவது பெரும் வியப்பே.

உருவ வழிபாடு முறைகள் எல்லாம் சங்க காலத்தில் இல்லை. அவ்வாறாயின் கண்ணகிக்கு எவ்வாறு சேரன் சிலை எடுத்திருக்க முடியும் என்ற கேள்வி நம்முள் எழும். சிலப்பதிகாரம் கண்ணகிக்கு கல் எடுப்பித்தான் என்று கூறுகிறதே தவிர சிலை வழிபாடு செய்தான் என்று குறிப்புகள் இல்லை. சங்க காலத்தைப் பொருத்தமட்டில் அருந்தவத்தோர், பத்தினிப் பெண்டிருக்கும் கல் எடுப்பித்து வழிபட்டதாக இலக்கியங்கள் நயம்பட பேசுகின்றன. அவ்வகையில்தான் கண்ணகிக்கும் இமயத்திலிருந்து கல் எடுத்து வந்து சேரன் வணங்கியிருக்க வேண்டும். அத்தொழுகல்லினை பின்னால் வந்த மன்னர்கள் சிற்பமாக சமைத்திருக்க வாய்ப்பு உண்டு.

கண்ணகி வழிபாடு காலப்போக்கில் மாரியம்மன் வழிபாடாக உருமாறியதாக நாட்டுப்புற ஆய்வாளர்கள் கருதுகின்றனர். கோவலன் – கண்ணகி பிரிந்தது ஆடி மாதம். எனவே இதன் பின்னரே திருமணத் தம்பதியரை ஆடி மாதம் பிரித்து வைக்கும் வழக்கம் தென்னகத்தில் உருவானது.

வரலாற்று நிகழ்வுகள் திரும்பத் திரும்ப நடக்குமென்பர். தற்போதும் எண்ணற்ற கண்ணகிகள் உரிமைகளுக்காக ... சுதந்திர வாழ்விற்காக தங்களது கற்பை இழந்து கொண்டுதான் இருக்கின்றனர். தவறான தீர்ப்புக்கு வருந்தும் மன்னர்கள்தான் இல்லை. நம்மவர்கள் ஒன்று வலுக்கட்டாயமாக நெருப்பில் தள்ளி விட்டு கணவனுடன் கலந்தாள் என்பர். கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்ட பெண்களை வக்கிர மாகாளி என்று கூறி குல சாமியாக மாற்றிக் கொள்வர். பெண்கள் என்று விடுதலை பெறுவர் என்றால் அவர்கள் கடவுளாக ஆக்கப்படாத வரை....

 ஆதார நூல்கள்

1. தொல்தமிழர் சமயம் – சிலம்பு.நா. செல்வராசு
2. சிலப்பதிகாரம் – புலியூர்க் கேசிகன் உரை.
3. தமிழக வரலாறும் பண்பாடும் – மயிலை.சீனி வேங்கட சாமி.
4. மங்கலதேவி கண்ணகி கோட்டம் – துளசி.ராமசாமி.
5. சேரமன்னர் வரலாறு – ஒளவை. துரைசாமிப்பிள்ளை.
6. வீரத் தமிழர் – ரா.பி. சேதுப்பிள்ளை.

- பேரா. இல.கணபதி முருகன், இயக்குநர், திராவிட வரலாற்று ஆய்வுக் கழகம் & உதவிப் பேராசிரியர், முதுகலை வரலாற்றியல் மற்றும் ஆராய்ச்சித் துறை, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி அரசு கலைக் கல்லூரி, திருத்தணி – 631209

Pin It