கல்வெட்டியல், வரலாற்றாய்வியல், தொல்லியல் போன்ற பன்முகங்களில் களப்பணியாற்றியவரும் இதழாசிரியர், பதிப்பாசிரியர் என மிகச்சீரியப் பங்காற்றியவருமான புலவர் செ.இராசு அவர்கள் ஆகஸ்ட் 9ந் தேதியன்று இயற்கை எய்தினார். அவரது மறைவு தமிழ் ஆய்வியல் துறைக்கும் தமிழ்ச் சமூகப் பண்பாட்டு ஆய்வாளர்களுக்கும் ஆர்வலர்களுக்கும் ஆகப்பெரிய பேரிழப்பாகும்..

se raasuபுலவர் செ.இராசு அவர்கள் ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் வெள்ளமுத்துக்கவுண்டன் வலசு என்னும் ஊரில்  பிறந்தவர். ஆரம்பகால பள்ளிக் கல்வியை திருப்பூரில் பயின்றார். திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் வித்துவான் படிப்பை நிறைவு செய்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் பி.லிட் மற்றும் முதுகலைப் பட்டங்களைப் பெற்றார்.  மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ‘கொங்குநாட்டு வரலாற்றில் சமண சமயம்' என்னும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.

ஈரோட்டில் 1959 ஆம் ஆண்டு தமிழாசிரியராகப் பணியைத் தொடங்கி 1980 வாக்கில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையில் பணிபுரியத் தொடங்கினார்.

ஈரோட்டில் பள்ளித் தமிழாசிரியராகப் பணியைத் தொடங்கிய அவர் களஆய்வுகள் மூலம் கொங்குநாட்டின் பல்வேறு பண்டைச் சிறப்புகளையும், பழம்பெருமைகளையும் கட்டுரைகள் வாயிலாகவும், நூல்கள் மூலமாகவும் வெளிப்படுத்தி வந்தார்.  பல்வேறு விதமான  கொங்குநாட்டு வரலாற்றுச் செய்திகளை வெளிக் கொணர்வதில் தீவிரமாகக் களப்பணியாற்றினார்.

பள்ளிப் பருவத்திலும், தமிழாசிரியராகப் பணி தொடங்கிய காலத்திலும் கொங்குநாட்டுப் பெரும் புலவர் மகாவித்துவான் வே.ரா.தெய்வசிகாமணிக் கவுண்டர் அவர்களோடு ஏற்பட்ட நெருக்கமான தொடர்பு புலவர் இராசு அவர்களின் ஆய்வு வளர்ச்சிக்குப் பெரிதும் காரணமாக இருந்தது.

பள்ளி ஆசிரியராக இருந்த அவரை மொழியியல் அறிஞர் டாக்டர் வ.ஐ.சுப்பிரமணியம் அவர்கள், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வெட்டு, தொல்லியல் துறையில் பணியில் அமர்த்தினார்.  தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியேற்ற இராசு அவர்கள் இணைப் பேராசிரியர், பேராசிரியர் ஆகச் செயல்பட்டு  துறைத்தலைவராக உயர்வு பெற்றார்.

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தபின் அவரது ஆய்வு படிப்படியாகப் பரந்து, விரிந்தது.  தஞ்சை மராட்டியர், இராமநாதபுரம் சேதுபதிகள், புதுக்கோட்டை - அறந்தாங்கித் தொண்டைமான்கள், சிவகங்கை மன்னர்கள், கொங்குச் சமுதாயம், பாளையக்காரர்கள் பற்றிய செப்பேடுகளையும் கல்வெட்டுகளையும் தொகுத்துப் பல நூல்களாக வெளியிட்டார்.  பல சுவடிப் பதிப்புக்களையும் வெளியிட்டார்.

கொடுமணல் அகழ்வாய்வுக்கு முழுமுதற் காரணமாக இருந்தவர் புலவர் இராசு அவர்களாவார்.  பதிப்பிக்கப்படாமலிருந்த கொடுமணல் ஏட்டுச் சுவடி இலக்கியங்களின் பதிப்பாசிரியராக இருந்தவரும் அவரே. 1981ஆம் ஆண்டில் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டையொட்டி இந்நூல் “கொடுமணல் இலக்கியங்கள்” என்ற தலைப்பில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் பதிப்பிக்கப்பட்டது.

மேனாள் தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்களின் முன்னோர் கொங்கு நாட்டிலிருந்து கேரள மாநிலத்திற்குக் குடிபெயர்ந்தவர்கள் என்ற வரலாற்று உண்மையினை ஆவண ஆதாரத்தின் அடிப்படையில் ஆராய்ந்து எழுதினார். இந்நூல் ‘செந்தமிழ் வேளிர் எம்.ஜி,ஆர்‘ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது.

தமிழ்நாட்டு வரலாற்றில் அடிமைகள் முறையையும் சேர்த்து எழுதினால்தான் வரலாறு முழுமை பெறும் என்ற நோக்கில் அவர் எழுதிய ‘அடிமை முறையும் ஆள் விற்பனையும்' என்ற நூல் அவரது ஆய்வுச் செயல்பாடுகளில் முக்கியமான ஒன்றாகும்.

1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட அறச்சலூர் இசைக் கல்வெட்டை ஆராய்ந்து கண்டறிந்து உலகிற்கு அடையாளப்படுத்தியவரும் இவரே. இந்தியாவில் கண்டறியப்பட்ட முதல் இசைக் கல்வெட்டும் இதுவேயாகும்.

செ.இராசு அவர்கள் தொல்லியலறிஞர் பேராசிரியர் அ.சுப்பராயலு அவர்களுடன் இணைந்து தமிழகத் தொல்லியல் கழகம் என்பதை நிறுவி எட்டாண்டுகளாக செயலாளராகவும், பின்னர் தலைவராகவும் செயல்பட்டார்

‘கொங்கு ஆய்வு மையம்’ எனும் பெயரில் நூல்களை வெளியிட்டு வந்ததோடு  முந்நூறுக்கும் மேற்பட்ட கல்வெட்டு ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார். ஈரோடு கலைமகள் அருங்காட்சியகத்தை நிறுவி அதில் ஈரோடு மாவட்டம் தொடர்பான பல அரிய சேகரிப்புகளையும் சேர்த்து வந்தார்.

தமிழக அரசு 2012ஆம் ஆண்டில் உ.வே.சா விருது வழங்கத் தொடங்கியபோது அதன் முதல் விருதைப் பெற்றவர் எனும் சிறப்புக்கு உரியவர். நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள இவரது படைப்புகளை தமிழக அரசு அவர் வாழுங் காலத்திலேயே நாட்டுடைமைப்படுத்தி கௌரவித்ததை உள்ளபடியே அவரது வாழ்நாட் பணிக்கான அங்கீகாரமாகக் கொள்ளலாம்.

தற்காலத் தலைமுறையினர் அறிந்துகொள்ளும் விதமாக அவரது நூல்களை பெருமளவில் பதிப்பித்து தமிழ்ச் சமூகத்திற்கு அறியச் செய்யவேண்டியது புலவர் செ.இராசுவைப் படித்துணர்ந்த அனைத்துப் பெருமக்களின் அவசியக் கடமையாகும்.

- ஜி.சரவணன்

Pin It