தமிழர்களின் பொதுப் புத்தியில் மதமாற்றம் என்பதைக் கிறித்தவத்துடன் இணைந்த ஒன்றாகவே பார்க்கும் எண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது.ஆனால் இது முற்றிலும் உண்மையல்ல. தமிழ்நாட்டின் சமூக வரலாற்றில் மதமாற்றம் என்பது இரண்டாயிரம் ஆண்டுகட்கும் முற்பட்ட ஒன்றாகவே இடம் பெற்றுள்ளது. வடபுலத்தில் தோன்றிய வைதீக சமயமும் அதனுடன் முரண்பட்டு உருவான சமணம், பௌத்தம், ஆசீவகம் ஆகிய சமயங்களும் அவை உருவான சிறிது காலத்திற்குள்ளேயே தமிழ்நாட்டில் பரவியுள்ளன. கி.மு.வில் உருவான தொல் தமிழ்க் கல்வெட்டுக்கள் (பிராமி) மட்டுமின்றி சங்க இலக்கியங்களும் காவியங்களும் இலக்கணங்களும் இதற்குச் சான்று பகர்கின்றன.

மதமாற்றம் என்பது கிறித்தவத்துடன் மட்டுமே தொடர்புபடுத்திப் பார்க்கப்படுவதற்குக் காரணமாக அமைந்தது அவர்கள் தொடக்கத்தில் மேற்கொண்ட கல்வி, மருத்துவப் பணிகள் மற்றும் பிற அறப்பணிகள் வழி அவர்களது இருப்பு துலக்கமாகத் தெரிந்ததுதான். எல்லாவற்றிற்கும் மேலாகக் கோவில் என்ற பொதுவெளிக்குள் அனுமதி மறுக்கப்பட்டிருந்த மக்கள் பிரிவை கிறித்தவத் தேவாலயத்தினுள் அனுமதித்ததுடன் வழிபாட்டை நடத்துவிக்கும் சமயக் குருவின் பணி கிடைக்கும்படிச் செய்ததும்தான். இன்று மதம் என்பது அரசியலுடன் பிணைக்கப்பட்ட சூழலில் மதமாற்றம் என்பதும் அரசியலாக்கப் பட்டுவிட்டது.christian missioneriesயேசுவின் நேர்முகச் சீடரான புனித தாமஸ் வாயிலாகப் பரவிய தொடக்ககாலக் கிறித்தவம் சொல்லிக் கொள்ளும் வகையில் ஒரு பரந்த குழுமமாக உருப் பெறாது போனது. இதனையடுத்து போர்ச்சுக்கீசியர், பிரெஞ்சியர் வருகையால் கத்தோலிக்கக் கிறித்தவமும், டச் , டேனிஷ், ஆங்கில நாட்டினர் வருகையால் சீர்திருத்தக் கிறித்தவமும் தமிழ் நாட்டில் அறிமுகமாயின. இவர்களுள் ஆங்கிலேயர் நீங்கலாக ஏனையோர் பரந்துபட்ட தமிழ்நாட்டில் சில பகுதிகளில் மட்டிலுமே நிலை கொண்டிருந்தனர். தொடக்க காலக் காலனியம் என்ற தமது நூலில் ஜெயசீல ஸ்டீபன் பொது ஆண்டு 1500 தொடங்கி 1800 முடிய உள்ள காலத்தை காலனியத்தின் தொடக்க காலம் என்று குறிப்பிட்டுள்ளார். இம் முந்நூறு ஆண்டுக் காலத்தில்தான் கிறித்தவம் தமிழ்நாட்டில் பரவலாக அறிமுகமாகி வளர்ச்சி பெற்றது.

காலனியவாதிகளுக்கும் கிறித்தவத்திற்கும் இடையே உறவு இருந்தது என்னவோ உண்மைதான். இருப்பினும் பெரியளவிலான ஆதாயங்களை மதமாற்றம் புதிய கிறித்தவர்களுக்கு வழங்கிவிடவில்லை.

கிழக்கிந்தியக் கம்பெனி உருவாக்கிய திருநெல்வேலி மாவட்டத்தின் முதல் ஆட்சியாளரான லூஷிங்டன் என்ற ஆங்கிலேயர் அப்பகுதியில் செயல்பட்ட சீர்திருத்தக் கிறித்தவ சபைக்கு எழுதிய கடிதம் ஒன்றில் ‘சீசருக்கு உரியதை சீசருக்கும் தேவனுக்குரியதை தேவனுக்கும் கொடுங்கள்’ ( சீசர்: மன்னர்) என்ற விவிலியத் தொடரை அழுத்தமாகக் கற்றுக் கொடுக்கும்படி எழுதியுள்ளார் . கிறித்தவர்களாக மதம் மாறினும் வரியை ஒழுங்காகச் செலுத்த வேண்டும் என்பதையே அவர் இவ்வாறு வலியுறுத்தி உள்ளார். விதிவிலக்காக தம்மால் மதமாற்றப்பட்ட புதிய கிறித்தவர்களின் நலனுக்காக ஒரு சில கிறித்தவ மறைப்பணியாளர்கள் (மிஷனரிகள்) காலனிய அதிகாரிகளுடன் முரண்பட்டு நின்றதும் உண்டு.வெகுமக்களுடன் மட்டுமின்றி ஆளுவோருடனும் தொடர்புடையதாக விளங்கியதால் சமயங்களுக்கு வரலாற்றில் இடமுண்டு.

இந்தியப் பொதுமக்களின் சமய உணர்வைப் பாதிக்கும் கிறித்தவப் பரப்புரைகளால் இந்தியாவில் தம் நலனுக்கு ஊறு விளையும் என்று ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி கருதியது. தம் மேலாண்மையைப் பாதுகாக்கும் நோக்கில் இங்கிலாந்தில் இருந்து கிறித்தவ மறைப் பரப்பாளர்கள் வருவதை தடை செய்தது. ‘டெயிலி டிரிபியூன்’ (1853 ஆகஸ்ட் 8) இதழில் இந்தியாவைக் குறித்து எழுதிய கட்டுரை ஒன்றில் ‘இந்தியாவில் கிறிஸ்தவ மதப்பிரச்சாரத்தை நடத்தக் கூடாது என்று தடை செய்யவில்லையா?' என்று கார்ல் மார்க்சும் வினா எழுப்பியுள்ளார். கிறித்தவத்தை இந்தியாவில் அறிமுகம் செய்கிறோம் என்று இங்கிலாந்தில் கூறிவிட்டு அங்கிருந்து கிறித்தவ மறைப்பணியாளர்கள் வருவதைத் தடை செய்யும் இரட்டை வேடம் குறித்தே அவர் இவ்வாறு வினா எழுப்பி உள்ளார்.

இச்சிக்கலைத் தவிர்க்கும் வகையில் ஜெர்மனியின் லூத்தரன் மறைப்பணியாளர்களை ஆங்கிலத் திருச்சபை வரவழைத்தது. டேனிசியக் குருக்களின் செயல்பாட்டில் நம்பிக்கை இல்லாத நிலையில் டேனிஷ் மன்னரும் ஜெர்மன் மதக்குருக்களை தரங்கம்பாடிக்கு அனுப்பிவைத்தார். இக்காரணங்களால் கிறித்தவம் தொடர்பான ஜெர்மன் மொழி ஆவணங்களில் தமிழ்நாடு இடம் பெறலாயிற்று. திருநெல்வேலி மாவட்டத்தில் நன்கு அறிமுகமான ரேனியஸ் ஐயர், ஷாப்டர், தஞ்சை மாவட்டத்தில் பணியாற்றிய ஸ்வாட்ஸ் ஆகியோர் ஜெர்மனியில் இருந்து வந்தவர்களே. தரங்கம்பாடியில் அச்சுக்கூடம் நிறுவிய சீகன் பால்க் டேனிஷ் மன்னரால் அனுப்பப்பட்ட ஜெர்மனிய நாட்டவரே. கிறித்தவம் குறித்த ஜெர்மன் மொழி ஆவணங்களில் பெரும்பாலானவை சீர்திருத்தக் கிறித்தவம் தொடர்பானவை என்பர்.

jeyaseela stephen bookமற்றொரு பக்கம் இதற்கு முந்திய கத்தோலிக்கப் பரவலின் போது இந்தியாவில் செயல்பட்ட காலனிய நாட்டு மறைப் பணியாளர்களுடன் இத்தாலி, ஸ்பெயின் நாட்டுப் பணியாளர்களும் இணைந்து பணியாற்றி உள்ளனர். தமிழர்களுக்கு நன்கு அறிமுகமான தத்துவ போதகர் (டிநொபிலி) வீரமாமுனிவர் (பெஸ்கி) ஆகிய இருவரும் இத்தாலிய நாட்டினர்தாம். இதன் விளைவாக இவ்விரு மொழிகளிலும் எழுதப்பட்ட தமிழ்நாடு தொடர்பான ஆவணங்கள் உள்ளன.

மதமாற்றம் குறித்த ஆய்வு:

மதம் என்பது அடிப்படையில் தனிமனிதன் சார்ந்த ஒன்று. இருப்பினும் தனிமனித எல்லையைக் கடந்து சமூகம் சார்ந்த ஒன்றாகவும் அது பார்க்கப்படுகிறது. இது பற்றியே அது சமூகவியல், வரலாறு ஆகிய அறிவுத்துறையினரின் ஆய்வுப் பொருளாக விளங்குகிறது. மதமாற்றம் என்பதைத் தனிமனித மதமாற்றம், குழும மதமாற்றம் (Mass Conversion) என இரண்டாகப் பகுக்கலாம். முதலாவது ஒரு தனிமனிதனின் சமய நம்பிக்கை மாற்றமாக அமையும். மதவாதிகள் ஆன்மீகத் தேடலின் விளைவு என்று இதைக் கருதுவர். குழும மதமாற்றம் உலகியல் சார்ந்த ஒன்றாகவே பெரும்பாலும் அமையும். சமூகப் பாதுகாப்பு, சமூக உயர்மதிப்பு, பொருளாதார நலன் என்பனவற்றை இது அடிப்படையாகக் கொண்டிருக்கும். அத்துடன் இவர்களில் பெரும்பாலோர் கிராமப்புற ஏழைக் குடியானவர்கள். இது பற்றியே சோற்றுக் கிறித்தவர்கள் (Rice Christians) என்ற சொல்லாட்சி உருவாகியுள்ளது.

தமிழ்நாட்டைப் பொருத்த அளவில் சமூகப் பாதுகாப்புத் தேவைப்பட்டோரும் பொருளாதார நிலையில் நலிந்தோரும் பண்பாட்டு ஒடுக்குமுறைக்கு ஆளாகி இருந்தோருமே அதிக அளவில் குழுமமாக மதம் மாறியுள்ளனர். ஆன்மீகத் தேடல் என்பது அரிதான ஒன்றாகவே இருந்துள்ளது. தேவ அழைத்தல், மனமாற்றம் என்ற சொற்களுக்குப் பின்னால் சமூகச் சிக்கல் மறைந்துள்ளது.

இது காரணம் பற்றியே அடித்தள மக்களை முன் நிறுத்தும் புதிய வரலாற்று வரைவில் மதமும் இடம் பெறுகிறது.

கிறித்தவ சமய ஆவணங்கள்:

இங்கு நாம் ஆராயப் புகும் கிறித்தவம் ஒரு நிறுவன சமயம் என்பதன் அடிப்படையில் முறையான ஆவணங்களைப் பராமரித்து வரும் கடமை அதற்கிருந்தது. இவ்வகையில் திருமுழுக்கு தொடங்கி இறப்புவரை பல்வேறு வாழ்க்கை வட்டச்சடங்குகள் குறித்த ஆவணங்கள் உள்ளன. இவை தவிர அங்கு பணியாற்றிய சமயக் குருக்கள், துறவியர், துறவினியர், ஆகியோருக்கு அவர்களின் சமயத்தலைமை அனுப்பிய சுற்றறிக்கைகள், கடிதங்கள், சமயத் தலைமையுடன் இவர்கள் நடத்திய கடிதப் போக்குவரத்துகள், அனுப்பிய அறிக்கைகள் என்பனவும் குறிப்பிடத்தக்க அளவில் ஆவணமதிப்பைக் கொண்டுள்ளன. இவர்களில் சிலர் நாட்குறிப்பு எழுதும் பழக்கம் உடையவர்களாய் இருந்தமையால் அவையும் கூட சில சமூக-வரலாற்றுச் செய்திகளை உள்ளடக்கி இருந்தன. அவர்கள் எதிர்கொண்ட வழக்குகள் தொடர்பான ஆவணங்களும் கூட சில நேரங்களில் வரலாற்றாவணங்களாயின.

இக் காரணங்களால் வரலாற்று வரைவுக்கான தரவுகளாகவும் ஆவணங்களாகவும் விளங்கும் தகுதியை இவை கொண்டுள்ளன. வரலாற்றறிஞர் சத்தியநாதையர் ஆங்கிலத்தில் எழுதிய மதுரை நாயக்கர் வரலாறு, 17 ஆவது நூற்றாண்டுத் தமிழகம் என்ற இரு நூல்களிலும் பிரஞ்சு மொழியில் எழுதப்பட்ட கிறித்தவ ஆவணங்களின் பயன்பாடு குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்கு இடம் பெற்றுள்ளது.

ஸ்பெயின் நாட்டுக் கத்தோலிக்கத் துறவி ஒருவர் ஸ்பானிஷ் மொழியில் எழுதிய பதினாறு பக்க அளவிலான ஒரு கடிதம் மதுரை, தஞ்சை நாயக்க மன்னர்கள் விசய நகர மன்னருக்குக் கப்பம் கட்டுவதை நிறுத்தியதையும்,அவர் படையெடுத்து வந்ததையும், அவரைக் காண்பதற்காக மதுரையில் இருந்து திருமலை நாயக்கர்

தஞ்சாவூர் சென்றிருந்தபோது மேல்மலைக் கள்ளர்கள் மதுரையைக் கைப்பற்றியதையும் பதிவு செய்துள்ளது. கத்தோலிக்கத் திருச்சபையில் இலத்தீன் மொழி செல்வாக்குடன் இருந்தமையால் தமிழ்நாடு தொடர்பான சில ஆவணங்கள் இலத்தீனிலும் உள்ளன.

ஓர் அயற் பண்பாட்டாளர் என்ற முறையில் ஐரோப்பிய மறைப்பணியாளர்கள் தமிழ்நாட்டில் அவர்கள் கண்டவற்றையும் பெற்ற அனுபவங்களையும் ஐரோப்பாவில் உள்ள மதத் தலைவர்களுக்கு மட்டுமின்றி தம் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எழுதிய கடிதங்களிலும் பதிவிட்டுள்ளனர். சேசு சபை என்ற கத்தோலிக்கத் துறவற சபையை நிறுவிய இக்னேஷியஸ் இலயோலா தம் சபையின் துறவிகள் தாம் பணிபுரியும் நாடுகளில் வாழும் மக்களின் பழக்க வழக்கங்கள், அரசியல் சமூக நிகழ்வுகள், அங்கு காணப்படும் தாவரங்கள், விலங்குகள் பறவை இனங்கள் என்பன குறித்து ஆண்டுதோறும் அவர்கள் எழுதும் கடிதங்களில் பதிவிடும்படிக் கட்டளையிட்டுள்ளார். அவரது கட்டளைப்படி எழுதப்பட்ட சேசு சபையினரின் ஆண்டுமடல்கள் இன்று வரலாற்றாய்வாளர்களுக்கு ஓர் அரிய கருவூலமாக விளங்குகின்றன. கொரியா அஃப்பென்சா என்ற இந்திய சேசுசபைத் துறவி இந்திய வரலாற்று வரைவுக்கு இக் கடிதங்களின் பங்களிப்பு குறித்து மும்பை பல்கலைக் கழகத்தில் ஆய்வு செய்து ஆய்வுப் பட்டம் பெற்றுள்ளார். ஆனால் இக்கடிதங்கள் ஆங்கிலம் அல்லாத மேலே குறிப்பிட்ட ஐரோப்பிய மொழிகளில் எழுதப்பட்டிருப்பதால் தமிழ்நாட்டின் வரலாற்றாய்வில் இவற்றைப் பயன்படுத்துவோர் குறைவுதான்.

இவர்களது தனிப்பட்ட பதிவுகளும் நூல்களும் கூட ஆவண மதிப்பைப் பெற்றுள்ளன. ஆனால் தமிழ்நாடு தொடர்பான தொடக்க காலத்திய காலனிய ஆவணங்களில் பெரும்பாலானவை போர்ச்சுக்கீஸ், டச், பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலி, ஸ்பானிஷ், டேனிஷ், இலத்தீன் மொழிகளில் உள்ளன. இம்மொழிகளில் புலமையும் வரலாற்றார்வமும் கொண்டோர் குறிப்பிடத்தக்க அளவில் தமிழ்நாட்டில் இல்லாத நிலையில் இவற்றைப் பயன்படுத்த முடியாத அவல நிலை இன்று வரை நிலவுகிறது. இத்தகைய அறிவுச் சூழலில் மேற்கூறிய ஐரோப்பிய மொழிகளில் உள்ள மூலஆவணங்களின் துணையுடன் எழுதப்பட்டுள்ள இந்நூல் குறிப்பிடத்தக்க ஒன்றாக அமைந்துள்ளது.

நூலாசிரியர்:

இந்நூலாசிரியர் ஜெயசீல ஸ்டீபன் ‘உங்கள் நூலகம்’ இதழின் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானவர். இவரது ஆங்கில நூல்களின் தமிழ் மொழிபெயர்ப்புகளை உங்கள் நூலகம் இதழை வெளியிடும் நியூசெஞ்சுரி புத்தக நிறுவனம் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

தாகூர் உருவாக்கிய விசுவபாரதி பல்கலைக் கழகத்தில்(சாந்திநிகேதன்) கடல்சார் வரலாற்றுத் துறையில் பேராசிரியராகவும் துறைத்தலைவராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஓய்வை அடுத்து பல்வேறு ஐரோப்பிய நாடுகளின் துணையுடன் புதுச்சேரியில் நிறுவப்பட்ட இந்திய ஐரோப்பிய ஆய்வு நிறுவனத்தின் இயக்குநராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். ஓலைச் சுவடிகளைத் தேடி கிராமம் கிராமமாக அலைந்து திரிந்து சேகரித்து அழிவில் இருந்து அவற்றைக் காப்பாற்றி வெளிக் கொணர்ந்த உ.வே.சா. போன்று இவரும் நாடுகள் தோறும் பயணித்து அங்குள்ள பல்வேறு ஆவணக் காப்பகங்களில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு தொடர்புடைய ஆவணங்கள், பழைய இதழ்கள், ஒளிப்படங்கள், ஒவியங்கள். கிடைப்பருமையான அரிய நூல்கள் என்பனவற்றைக் கண்டறிவதுடன்,அவற்றின் துணையுடன் “தமிழக மக்கள் வரலாற்றை" எழுதி வருகிறார். மேலே குறிப்பிட்ட ஐரோப்பிய மொழிகள் பலவற்றை அவர் அறிந்துள்ளமை அவரது இப்பணிக்குப் பெரிதும் துணை நிற்கிறது.

நூலின் அமைப்பு:

இந்நூலின் அறிமுக உரை முதல் இயலில் இடம் பெற்றுள்ளது. இந்நூல் ஐரோப்பிய மறைப்பணியாளர்கள், தமிழ்க் கிறித்தவர்கள் குறித்துக் கூறுவதுடன், மதம் மாறிய புதிய கிறித்தவர்களின் அக-புற அனுபவங்களை ஆராய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளதாக அறிமுக உரையில் நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தென் இந்தியாவில் கிறித்தவத்தின் மறைத் தளங்கள் (mission), மறைப்பணியாளர்கள் (missionaries) குறித்து இந்நூலுக்கு முன்னர் வெளியான ஒன்றிரண்டு நூல்களையும் அவற்றின் உள்ளடக்கத்தையும் குறிப்பிட்டுள்ளார். இவை மேற்கத்திய நாட்டவரால் எழுதப்பட்டவை. தமது நூல் கிறித்தவத்தை மேற்கொண்ட தமிழர்களுக்கு அது வழங்கிய அடையாளக் கட்டமைப்பு குறித்துப் பேசுவதுடன் மதமாற்றம் குறித்த அறிவுசார் புரிதலை உருவாக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதன் தொடர்ச்சியாக இந் நூலின் அமைப்பு குறித்தும் அறிமுகம் செய்துள்ளார்.

இரண்டாவது இயல் பண்டையக் காலத்திலும் இடைக்காலத்திலும் தமிழ்நாட்டில் வழக்கில் இருந்த சமயங்கள் குறித்தும், நிகழ்ந்த மதமாற்றங்கள் மறுமதமாற்றங்கள் குறித்தும் பறவை நோக்கில் அறிமுகம் செய்கிறது. சமயவாதிகளின் சகிப்பின்மையும், மேற்கொண்ட சித்திரவதைகளும் சுட்டிக் காட்டப் பட்டுள்ளன. அத்துடன் இஸ்லாம் அறிமுகமானமையும் தமிழ் மக்கள் அதைத் தழுவியமையும் குறிப்பிடப்பட்டுள்ளது

இந் நூல் மூன்று பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது. முதல் பகுதி நான்கு இயல்களையும் (இயல்கள் 3 முதல் 6 வரை). இரண்டாவது பகுதி நான்கு இயல்களையும் (7-10) மூன்றாவது பகுதி மூன்று இயல்களையும் (11-13) கொண்டுள்ளன. இறுதி இயலான பதினான்காவது இயல் நூலின் முடிவுரையாக அமைந்துள்ளது

பகுதி- ஒன்று:

நூலின் முதலாவது பகுதியிலிருந்து நூலின் தலைப்புடன் முழுமையாகப் பொருந்தும் செய்திகள் வாசகனுக்கு அறிமுகமாகின்றன. தமிழ்நாட்டின் கிறித்தவ மதமாற்ற வரலாற்றில் போர்ச்சுக்கீசியரின் பங்களிப்பு புறக்கணிக்க முடியாத ஒன்று.இது தொடர்பான செய்திகள் முதலாவது பகுதியில் இடம் பெற்றுள்ளன. பொது ஆண்டு 1510-1514 காலகட்டத்தில் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டக் கடற்கரைப் பகுதிகளில் வாழ்ந்த முக்குவர்களும், 1532-1536 காலகட்டத்தில் முத்துக்குளித்துறை என்றழைக்கப்பட்ட இராமேஸ்வரம் தொடங்கி கன்னியாகுமரி வரை உள்ள கடற்கரைப் பகுதியில் வாழ்ந்து வந்த பரதவர்களும் போர்ச்சுக்கீசியரின் துணையுடன் கத்தோலிக்கர்களாக மதம் மாறினர். முக்குவரின் மதமாற்றத்திற்கு கொச்சி மன்னரும் பரதவரின் மதமாற்றத்திற்கு மதுரை நாயக்க மன்னரும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.christians in indian churchஇவ்வாறு மதம் மாறிய முக்குவர்களில் சிலர் இஸ்லாமியர்களாக மதம் மாறியுள்ளனர். இஸ்லாமிய இளைஞர்களைக் காதலித்து மணந்து கொண்ட முக்குவ இளம் பெண்களும், அவர்களது அன்னையரும் மதம் மாறியதாக நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

17ஆவது நூற்றாண்டில் கத்தோலிக்க சமயத்தின் துறவற சபைகளில் ஒன்றான சேசு சபையினர் கடற்கரைப் பகுதியில் பரவியிருந்த கத்தோலிக்கத்தை உள்நாட்டுப் பகுதியில் அறிமுகம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். இம் முயற்சியில் பிராமண சந்நியாசிகள், பண்டார சாமிகள் என்ற பெயர்களைக் கொண்ட இருவகையான துறவிகள் சேசு சபையில் உருவாக்கப்பட்டனர். பிராமண சந்நியாசிகள் என்போர் உயர் சாதியினரிடமும் பண்டாரசாமிகள் என்போர் இடைநிலை சாதியினர் மற்றும் தீண்டாமைக் கொடுமைக்கு ஆட்பட்ட சாதியினரிடமும் சமயப்பணியை மேற்கொண்டனர்.

புதிய கிறித்தவர்களுக்காக மறைப் பணியாளர் கிணறு வெட்டிக் கொடுத்தமை, அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப் பட்டமை போன்ற செய்திகள் இம் முதலாவது பகுதியில் இடம் பெற்றுள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக சாதிய வேறுபாடுகள் கிறித்தவத்திலும் நுழைந்துவிட்டதை இம் முதற்பகுதியின் இறுதி இரண்டு இயல்கள் வெளிப்படுத்தியுள்ளன. இதற்குச் சான்றாக மதுரை, திருச்சி, வடக்கன்குளம், சென்னை -இராயபுரம், கடலூர் ஆகிய ஊர்களில் வாழ்ந்த கத்தோலிக்கர்களிடையே சாதியை மையமாகக் கொண்டு உருவான முரண்பாடுகளைக் குறிப்பிட்டுள்ளார். திருமணச்சடங்கு, கல்லறைத் தோட்டம், வழிபாட்டில் அமரும் இடம் என்பன முரண்பாட்டிற்கான காரணங்களாக இருந்துள்ளன. தம் மதத்தைத் துறந்து மற்றொரு மதத்தை விரும்பித் தழுவியவர்களால் சாதியைத் துறக்க இயலவில்லை என்ற வரலாற்றுண்மை முதற்பகுதியில் வெளிப்படுகிறது.

பகுதி: இரண்டு:

இந்நூலின் இரண்டாவது பகுதியின் நான்கு இயல்களில் (7-10) முதலாவதாக அமைந்துள்ள ஏழாவது இயல் தமிழ் நாட்டில் பரவிய கிறித்தவத்தைத் தழுவியவர்களிடமிருந்து சமயக் குருக்கள் உருவானதை அறிமுகம் செய்கிறது. அடுத்த மூன்று இயல்களும் (8-10) சமயக் குருக்களுக்குத் துணை புரியும் வகையில் உருவாக்கப்பட்ட உபதேசியார்கள் என்போர் குறித்த விரிவான செய்திகளை அறிமுகம் செய்கின்றன. தொடக்கத்தில் பிராமண, வேளாளர் சாதிகளில் இருந்து உபதேசியார்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.பின்னர் தீண்டாமைக் கொடுமைக்கு ஆட்பட்ட சாதிப் பிரிவில் இருந்தும் தேர்வு செய்யப்பட்டனர். சமய வழிபாட்டுச் சடங்குகளை நடத்தி வைக்கும் உரிமையும், அதில் உதவும் உரிமையும் அனைத்துச் சாதியினருக்கும் உரிய ஒன்று என்பதை இந்நியமனங்களின் வழி கிறித்தவம் அறிமுகம் செய்துள்ளது. ஆயினும் இதை நடைமுறைப்படுத்துவது என்பது அவ்வளவு எளிதாக அதற்கு இருக்கவில்லை.

பகுதி மூன்று:

மூன்று இயல்களைக் கொண்ட (11-13) மூன்றாம் பகுதியில் முதல் இயல் திருவேங்கிடம் என்ற வில்லியம் ராபர்ட் என்பவரின் மதமாற்ற அனுபவங்களை வெளிப்படுத்தும் கட்டுரை. வரலாற்று ஆவணங்களின் துணையுடன் கட்டமைக்கப்பட்ட ஓர் உண்மை மனிதனின் வரலாறு என்று இதைக் குறிப்பிடலாம்.

இறுதி இரண்டு கட்டுரைகளும் மத மாற்றம் குறித்த ஆய்வுக்கட்டுரைகள்.

நூலாசிரியரின் முடிவுரை:

மகேந்திர பல்லவன் (பொ.ஆ.590-630), குலோத்துங்கச் சோழன் (பொ.ஆ1070-1118) ஆகியோரின் மதச் சகிப்பின்மைச் செயல்பாடுகளில் தொடங்கி சாதியம் தொடர்பான ஐரோப்பிய மறைப் பணியாளர்களின் பார்வையுடன் நூலின் இறுதி இயல் முடிவுறுகிறது.

எஸ்.ஜெயசீல ஸ்டீபன் (2023): கிறித்தவர்களாக மதம் மாறிய தமிழர்களும் ஐரோப்பிய மறைப்பணியாளர்களும் (ஆன்மீக மற்றும் உலகியல் வாழ்க்கை அனுபவங்கள் உள்ளும் புறமும் 1510-1858).

S.Jeyaseela Stephen (2023): Tamil Christian Converts & European Missionaries.

(The Spiritual and Worldly Life Experience Inside and Outside, 1510-1858)

Institute for Indo- European Studies. Puducherry 605 011.

(தொடரும்)

ஆ.சிவசுப்பிரமணியன்

Pin It