உயிர்த்துடிப்புள்ள அறிவு ஜீவிகள் எனக் கிராம்ஷி வரையறை செய்துள்ள இலக்கணத்திற்கு வகை மாதிரியாக கடந்த அரை நூற்றாண்டுக்கு மேலாகத் தமிழக சமூக, அரசியல், தத்துவ, பண்பாட்டுத்தளத்தில் இயங்கி வருபவர் தோழர் பேராசிரியர் எஸ்.தோதாத்ரி அவர்கள்,
தோழரின் வரலாற்றை வாழ்க்கைத் தடங்களைத் தோழர் எஸ்.காசி விஸ்வநாதன் அவர்கள் இனிய எளிய தமிழ்நடையில் அணிந்துரை முன்னுரை இன்னபிற போகச் சுமார் 114 பக்கங்களில் 33 அத்தியாயங்களில் ஒரு அரிய வாழ்க்கைச் சித்திரமாகக் காட்சிப்படுத்தியுள்ளார்.
நூலுக்குள் புகுமுன் அணிந்துரையில், “பொதுவாகவே மிகவும் கடினமானவை என்று கருதப்படுகின்ற அரசியல் கோட்பாடுகளும் இலக்கிய வரையறைகளும் தத்துவ உரையாடல்களும் இந்நூலில் சுற்றி வளைக்காத நேரடித் தன்மையோடு முன்வைக்கப்படுகின்றன. நூலின் இத்தன்மை, தொடக்க நிலை வாசகர்களை மட்டுமின்றி ஆய்வாளர்களையும் கூட ஈர்க்கக் கூடியதாக இருக்கிறது இதன் சிறப்பு”
“…பேராசிரியரின் வாழ்க்கையை ஒரு புதினம் போல் எழுதிச் செல்லும் போக்கில் அவரது எழுத்துக்களையும் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகின்ற பாணியில் எழுதப்பட்ட நூல் இது…” எனத் தோழர் எஸ்.பாலச்சந்திரனும்,
முன்னுரையில் “மார்க்சியத்தின் போதாமை என்ற சொல்லாடல் மூலம் பல போக்குகள் முன்வைக்கப்பட்டு உலாவிக் கொண்டுள்ளன. அந்தக் குழப்பச் சிந்தனைகளுக்கு இந்த நூல் பதிலடி கொடுத்துள்ளது” என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக் கல்வித்துறையில் இயங்கும் தோழர் எம்.செல்வராஜ் அவர்களும் குறிப்பிடுவது நாம் கவனத்துடன் படிக்க வேண்டிய நூல் என்பதை உணர்த்துகிறது.
நூலின் “பிறந்தார்! வளர்ந்தார்” எனும் முதல் அத்தியாயம் தொடங்கி “முடிவாக” - என்ற இறுதி அத்தியாயம் வரை செய்திகள் - நிகழ்வுகள் - கருத்துக்கள் ஆகியவற்றுக்குப் பொருத்தமான மேற்கொள்களைக் குறிப்பிட்டுள்ளது சிறப்பாக உள்ளது.
“அடியார்கள் வாழ, அரங்க நகர் வாழ, சடகோபன் தமிழ் நூல் வாழ”
- என நாலாயிர திவ்ய பிரபந்தத்தோடு தொடங்கும் மூன்றாம் அத்தியாயத்தில் நாங்குநேரியின் வரலாற்றுப் பெருமிதத்தைச் சமயப்பின்புலத்தோடு மணவாள மாமுனி, திருக்கோஷ்டியூர் நம்பி, ராமானுஜர் போன்ற வைணவ ஆளுமைகளையும் விரிவாக, அருமையாக எழுதிச் செல்கிறார். இங்கு ஆசிரியரின் கவித்துவ நடையை நாம் பிரமிப்போடு பார்க்கிறோம்.
“பொதுவுடைமையின் தளம்” என்ற நான்காம் அத்தியாயம் தொடங்கி நூலாசிரியர் பேராசிரியர் வாழ்வை மட்டும் பதிவு செய்யவில்லை. அப்படி எழுதியிருந்தால் போகிற போக்கில் எழுதிச் செல்கிற சம்பிரதாயமான வாழ்க்கை வரலாறாக அமைந்திருக்கும்.
ஆனால் கல்லூரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் மார்க்சியமும், மார்க்சிய ஆய்வுமுறையியலும், நாட்டுப்புறவியலும் பயிற்றுவிக்கக் காரணமாக அமைந்த “நெல்லை மார்க்சிய ஆய்வுக்குழு”வையும், “ஆராய்ச்சி” ஆய்விதழையும், அதனை இயக்கிய பேராசிரியர் நா.வா.-வின் பன்முக ஆளுமையும், எவ்வாறு எல்லோரையும் நா.வா. பயிற்றுவித்தார் என்பதும் நூல் முழுவதும் நிறைந்து காணப்படுகிறது.
நெல்லை மார்க்சிய ஆய்வுக்குழுவின் குறிப்பாக வெ.கிருஷ்ணமூர்த்தி, தி.சு.நடராசன், ஆ.சிவசுப்ரமணியன் ஆகியோரின் பங்களிப்புக்கள் பற்றியும், ரகுநாதனின் இலக்கியப் பார்வை, பொன்னீலனின் படைப்புக்களில் அரசியல் குறிப்பாக கரிசல் நாவலும் பஞ்சும் பசியும் தனுஷ்கோடி ராமசாமியின் தோழர் நாவல் என பேராசிரியர் பார்வையில் விரிவாகப் பேசப்படுகிறது. ஜெயகாந்தனை முன்வைத்து படைப்பாளியின் சார்புநிலை பற்றியும், ஜெய ஜெய சங்கர நாவல் குறித்தும் உரையாடுகிறார்கள்.
மார்க்சியக் கல்வி கற்பிப்பதைத் தமது வாழ்வின் பணியாக பேராசிரியர் எஸ்.தோதாத்ரி அவர்கள் எப்போதும் எங்கும் மன நிறைவுடன் பேசக்கூடியவர். மார்க்சியக் கல்வி எங்கு தொடங்கி எங்கு முடிய வேண்டும் என்ற வரலாற்றுப் பார்வை கொண்டவர். பொருளாதாய நோக்கில் வரலாறு (Materialist Concept of History) எப்படிக் கற்பிக்கப்பட வேண்டும் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்து வருபவர் பேராசிரியர் தோதாத்ரி சார் தான்.
தோதாத்ரி சார் மொழி பெயர்த்த நூல்கள், தனியாக அவர் எழுதியுள்ள நூல்கள் பட்டியலில் நமக்குத் தெரிந்த அளவில் சில முக்கியக் கட்டுரைகள், நூல்கள் விடப்பட்டுள்ளன. இரண்டாம் பதிப்பில் சேர்க்கப்பட வேண்டும்.
தோழர் காசிவிஸ்வநாதனின் இந்நூல் வெளியான பின்னர் மார்க்சியத் தத்துவத்துக்கும், தமிழ் மொழிக்கும் வளம் சேர்க்கும் வகையில் பேராசான் வி.இ.லெனினின் அரிய படைப்பான “பொருள் முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்” என்ற தத்துவ நூலினை மொழியாக்கம் செய்திருக்கிறார்.இந்தப் பணிக்கு ஈடு இணை இல்லை.
கல்விப் புலத்தில் செயல்படும் எத்தனையோ பேராசிரியர்கள் மார்க்சியம் குறித்து எழுதுகிறார்கள். அவர்கள் வெறும் பாடநூலாசிரியர்கள் மட்டுமே. நிலவுகிற சமூக அமைப்பை மார்க்சியம் மட்டுமே மாற்ற முடியும் என்ற அறிவார்ந்த சிந்தனையோடும் - அதற்காகப் போராடும் முன்னணிப்படையான கம்யூனிஸ்ட் கட்சியுடனும் தம்மை இணைத்துக் கொண்டு பேராசிரியர் என்ற “நான்” இல்லாமல் எல்லோருடனும் கைகோர்த்து நடைபயிலும் உயிர்த்துடிப்புள்ள அறிவு ஜீவியான தோழர் தோதாத்ரி சார் காலத்தில் நாம் வாழ்கிறோம் என்பதே பெருமைக்குரியதாகும்.
தோழர்கள் பாலதண்டாயுதம், ப.மாணிக்கம், சிந்துபூந்துறை சண்முகம், V.S.காந்தி, நல்லகண்ணு எல்லோரும் நூல் முழுவதும் வந்து செல்கிறார்கள் இதில் பேராசிரியர்கள் (நா.வா - எஸ்.தோதாத்ரி) இருவரின் சம கால ஆளுமைகளான எஸ்.ராமகிருஷ்ணன், பு.நாகராஜன் பற்றியும் கூடத் தோழர் காசி பேராசிரியருடன் உரையாடியிருக்கலாம். தோழர் காசி விஸ்வநாதன் அவர்கள் அடுத்த பதிப்புக்கு இன்னும் விரிவாக எழுதினால் தோதாத்ரி சார் வாழ்க்கை வரலாறு தமிழகத்தின் சமூக, அரசியல், தத்துவ வரலாறாகப் பரிணமிக்கும்.
இன்று நிலவும் தத்துவப் போக்குகள், நடைமுறைகள், அரசியல் நிலைமைகள், நமது சித்தாந்தப் போராட்டத்தின் திசைவழிகள் ஆகியன பற்றிய பேராசிரியர் தோதாத்ரி அவர்களின் கருத்துக்களை இவ்வாறு நாம் தொகுத்துக் கொள்ளலாம்.
“…ஆனாலும் அவர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய சில விவரங்கள் போராட்டங்களே அழுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, அடித்தளத்தில் வாழ்கின்ற தலித் மக்களுக்காக அம்பேத்காரிய வாதிகள் போராடுகின்றார்கள். ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டத்தில் ஒன்றாகச் சேர்ந்து போராடுவது அவசியம். அந்தப் போராட்டங்கள் பொருள் முதல் வாதப் பாதையில் கொண்டு செல்லப்படுவதற்கு நாம் தூண்டுகோளாக இருக்கலாம்.
“…மார்க்சிஸ்ட்களாகிய நம்மிடமிருந்து பொருள் முதல்வாத அடிப்படையில் போராட்டங்களை நடத்துவதற்கான வழிமுறைகளை அவர்களும் கற்றுக் கொள்ள வேண்டும்…”
“விவேகானந்தரின் தத்துவம் புறவய கருத்து முதல்வாதம் தான். அப்படித்தான் கொண்டு வர முடியும். ஏனென்றால் அவர் பொருள் முதல் வாதி இல்லை. அகத்துக்கு முக்கியத்துவம் தந்தார். கருத்து மனசுக்கு வெளியே இருக்கு என அதற்கு முக்கியத்துவம் கொடுத்தார். ஆன்மாவை புறவயமாகத்தான் பார்க்கின்றார். கருத்து முதல்வாதம் தான் விவேகானந்தரின் பார்வை. இதே பார்வை தான் பாரதிக்கும்”.
“...மதவாதத்திற்கு எதிராக பெரியார் ஒரு நிலை எடுத்தார். அவருடைய நிலை புறவயத் தன்மையான கருத்து முதல்வாதம் தான். ஆனால் அது வெறும் கருத்தை மட்டும் தாக்கித் தாக்கி கருத்தாகவே ஆகிவிட்டது”.
“…சாணிப்பால், சவுக்கடி கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது கம்யூனிஸ்ட் கட்சிதான். பகுத்தறிவு பேசியவர்கள் யாரும் போராட்டங்கள் நடக்கும்பொழுது பார்க்கவில்லை. நேரில் வரவும் இல்லை.
“பேராசிரியர் நா.வா. பேராசான் ஜீவா„ சோசலிச யதார்த்த வாதம் என்று சொல்லவில்லை„ யதார்த்த வாதம் என்று தான் சொன்னார்கள்”.
“மொழி என்பது சமூகத்தின் விளைவாகும். சமூகத்தின் பொருள், உற்பத்தி முறையோடும், அது சார்ந்த உழைப்பு, பிரிவினையோடும் தனக்குரிய தனித்த வளர்ச்சியை மொழி பெறுகிறது. மொழி சமூக வளர்ச்சியின் போக்கோடு தன்னைத் தகவமைத்துக் கொண்டு, சமூகத்தின் வரலாற்று வளர்ச்சியோடு தன்னை வளர்த்துக் கொள்கிறது. மொழி மனித சிந்தனையின் அடிப்படை வடிவம்; மனித சிந்தனை சமூக இயக்கத்தின் விளைவு; சமூக வாழ்க்கை எனும் பொருளியல் தளத்தின் மீது தான் மொழி, பண்பாடு நிலை கொள்கிறது. இப்படி மார்க்சியம் மொழியியல் கொள்கையை வரையறுக்கிறது”.
“சாதிய சமூக உருவாக்கத்தில் திணை வாழ்வு அழிந்தது. வேளாண் உற்பத்தி வட்டார சாதிப் பெருக்கத்தை ஏற்படுத்தியது”
தேசியம் என்ற பெயரால் பல வட்டார மொழிகள் அழிக்கப்படுகின்றன. மொழி குறித்த இனப் பெருமித போதையில் இருந்து விடுபட வேண்டும். மூலதனத்திற்கெதிரான நலனுக்காக அழித்தொழிக்கப்படும் சமூக, பொருளியல், பண்பாடு நிலைமைகளுக்கு எதிரான போரை நடத்துவது குறித்ததாக அது மாற்றப்பட வேண்டும். இந்த சாராம்சத்தில் வர்க்க அரசியல்தான் மொழிவழியே உழைக்கும் மக்கள் நடத்த வேண்டிய வர்க்கப் போராட்டங்கள் தான் மொழியைப் பாதுகாக்கும்”.
“…இனம், மொழி, மதம் சார்ந்த விஷயங்களை அடையாளமாக வைத்துக் கொண்டு மக்களை வேறு பக்கத்திற்கு திசை திருப்புவது தான் இதன் நோக்கம். அடையாள அரசியல் இந்தியாவில் இம்மாதிரி உள்ளது. அடையாள அரசியல் என்றால் ஐரோப்பாவில் வேறுவிதமாக இருக்கும்”
“இனம், மொழி, மதம் போன்ற அடையாளங்களை முன்னிறுத்தி மற்ற அடிப்படை விஷயங்களைத் திருப்புவதற்கு செய்யும் காரியமே அடையாள அரசியல்.”
“இடதுசாரிக் கட்சிகளில் அடையாள அரசியலை தத்துவமாக வைப்பது இல்லை. பொதுவாக அடையாள அரசியல் பூர்ஷ்வாக்களின் வர்க்க நலன்களைப் பாதுகாப்பது தான். பெரியார், அம்பேத்கர் போன்றவர்களை அவர்களுடைய முற்போக்கு கருத்துக்களுக்காக ஏற்றுக் கொள்ளலாம். மார்க்சிசத்தைவிட உயர்ந்த தத்துவங்களை அவர்கள் தரவில்லை. ஆகவே தத்துவ நிலையில் மார்க்சியர்கள் இத்தகைய தத்துவங்களை ஏற்றுக் கொள்ள முடியாது. ஆனால் அவர்களுடைய முற்போக்குக் கருத்துக்களை முன்வைத்து அரசியல் பேசுவது தப்பு இல்லை.”
மேற்கண்ட பேராசிரியர், தோழர் தோதாத்ரி அவர்களின் கருத்துக்கள் ஆழ்ந்து பரிசீலிக்கப்பட வேண்டும். இயக்கங்களிலும், அறிவார்த்த தளங்களிலும், பொது வெளிகளிலும் விவாதிக்கப்பட்டுத் திட்டவட்டமான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். இப்போது சித்தாந்தப் போராட்டத்தைக் காத்திரமாகவும், கூர்மையாகவும் நடத்திட இதுவே சிறநந்த வழியாகும்.
பேராசிரியர் அவர்கள் ஏறக்குறைய 84 ஆண்டுகளைத் தாண்டியும் இன்னும் உயிர்த்துடிப்புடன் சிந்திக்கிறார், செயல்படுகிறார். இவரை நாம் இன்னும் கூடுதலாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
மார்க்சியப் பெருங்கடலில் சங்கமிக்க, “கல்பொருதிரங்கும் மல்லற் பேரியாற்று வெள்ளம் போலப்” பொங்கிப் பிரவாகித்து பேராற்றலோடு இன்னும் தாமிரபரணி ஓடிக் கொண்டிருக்கிறது.
(தாமிரபரணி ஓடிக் கொண்டிருக்கிறது (பேராசிரியர் எஸ்.தோழர் தோதாத்ரி வாழ்க்கைத் தடங்கள் | எஸ்.காசி விஸ்வநாதன் | வெளியீடு: NCBH, விலை ரூ.170)
- ஓடை.பொ.துரைஅரசன், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின், ஈரோடு மாவட்டச் செயலாளர்.