கிழக்கில் வங்கக் கடலும், மேற்கில் அரபிக் கடலும் தெற்கில் இந்துமாக் கடலும் ஒருங்கிணைந்து ஓயாமல் தாலாட்டும் தென்குமரி இந்தியத்துணைக் கண்டத்தின் தென் எல்லையாக நின்று வரலாற்றுப் பெருமையை நிலை கொள்ளச் செய்கிறது. ஒவ்வொரு தமிழ்ப் புத்தாண்டு முதல் நாளன்று மாலைப் பொழுதில் முழுமையான சூரியனையும், உதயமாகும் முழுமையான சந்திரனையும் ஒரே நேரத்தில் தனித்தனியே காணலாம்.
இந்தியத் தத்துவத்தின் பெருமையை உலகுக்கு உணர்த்திய ஆன்மீகவாதியான சுவாமி விவேகானந்தர் தவம் செய்த வரலாற்றுப் பெருமை வாய்ந்த இடம் இது.
மகாத்மா காந்தி, கவிஞர் இரவீந்திரநாத் தாகூர் போன்ற மாமனிதர்கள் இங்கு வந்து தியானம் செலுத்திப் பெருமை சேர்த்த புனித இடம். கடந்த எழுபதுகள் வரை மிகப் பெரிய பாறையாக விளங்கிவந்த இந்தத் தளத்திற்குத் தோணியில் மட்டுமே சென்று வரக் கூடிய வசதி இருந்தது.
அதன் பிறகு, இது சுவாமி விவேகானந்தர் நினைவுத் தளமாக உணரப்பட்டுக் கோடிக்கணக்கான மக்களின் கவனத்தை ஈர்த்தது. இங்கு அவருக்கு நினைவு மண்டபம் தோற்றுவிக்கப் பட்டது. அதைத் தொடர்ந்து மேலும் சில வகையான மாமனிதர்களின் நினைவு மண்டபங்களும் உருவாகின.
தென்குமரியைச் சார்ந்த நிலப்பரப்பின் வாழ்க்கையும், வரலாறும் போற்றுதலுக்கு உரியவை.
அந்தப் பெருமைகளுக்குரிய தென்குமரி பற்றிய வியக்கத் தகுந்த செய்திகளைப் புதிய தலை முறைக்கும் சேர்த்து அறிமுகப்படுத்தும் நோக்கில் மாறுபட்ட வாழ்க்கை கலாச்சாரம் பண்பாட்டுத் தலித்தன்மைகளை ‘தென்குமரிச் செய்திகள்' என்ற பெயரில் அ.கா.பெருமாள் ஒரு நூலாக வடிவமைத்துள்ளார்.
“இந்நூலின் அனுபவம் வழக்காறு தொடர்பான பத்து வரலாறு சமூகம் தொடர்பான பதிமூன்று வழிபாடு, நாட்டார் தெய்வம் தொடர்பான ஆறு என மொத்தமாக இருபத்தொன்பது கட்டுரைகள் கன்னியாகுமரிச் செய்திகள்' என்ற வகையில் அடங்கியுள்ளன. இத்தனை கட்டுரைகள் அனைத்தும் கன்னியாகுமரி மாவட்டத்தை ஒரு சித்திரமாகப் புரிந்து கொள்ள துணை நிற்பவை குறிப்பாக, குமரி மாவட்ட நாட்டார் வழக்காற்றுச் செய்திகள் எல்லா கட்டுரைகளிலும் இழையோடுகின்றன”.
“இந்தக் கட்டுரைகளில் உள்ள ஒன்பது கட்டுரைகள் ‘உங்கள் நூலகம்’ மாத இதழிலும் ஐந்து கட்டுரைகள் ‘காக்கைச் சிறகினிலே இதழிலும் பிற கட்டுரைகளில் மூன்று நெய்தல், மானுடம், இந்திரன் கோட்டம் ஆகிய இதழ்களிலும் வெளி வந்தவை. ஏனைய 14 கட்டுரைகள் இந்நூலுக்காக எழுதப்பட்டவை” என்று குறிப்பிடுகிறார் நூலாசிரியர் அ.கா.பெருமாள்.
“தமிழகத்தின் பிற மாவட்டங்களை ஒப்பிடும்போது நாட்டார் வழக்காற்று மரபுகள் தாமாகச் சரிந்து பழமையை இழந்துவிடும் பகுதிகளில் கன்னியாகுமரி மாவட்டம் முதலிடத்தில் நிற்கிறது. இதற்கான அடிப்படையான காரணங்கள் சிலவற்றை ஊகிக்கலாம். தொடர்ந்து, கன்னியாகுமரி மாவட்டத்தின் பரப்பைக் குறிப்பிட்டு அங்கு தொடர்ந்து நிகழ்ந்த மாற்றங்களையும் வளர்ச்சிகளையும் குறிப்பிடும்.
‘மாவட்டம் 1684 சதுர கிலோமீட்டர் பரப்பை உடையது. இங்கு மலைகளும், சமூகக் காடுகளும் அதிகம். மக்கள் வாழுமிடங்களின் நெருக்கம் அதிகம். பெரும்பாலான கிராமங்கள் நகரத் தாக்கம் உடையவை. படித்தவர்களின் எண்ணிக்கை அதிகம் உடைய மாவட்டம். இந்துக்கள் அல்லாதோரின் எண்ணிக்கையும் அதிகம்.
“இந்த மாவட்டம் 1956 ஆம் ஆண்டுவரைக் கேரளத்தின் ஒரு பகுதியாக இருந்தது. இங்கே சமயத்திலும் சமூகத்திலும் பெருமாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன.”
அந்த மாவட்டத்தில் நிகழ்ந்த முக்கியமான மாற்றங்களைக் குறிப்பிடுகிறார் ஆசிரியர். நாட்டார் கலைகள் தொடங்கி நாட்டார் விழுமியங்கள் வரை 14 வகையான வழக்காறுகளைப் பட்டியலிடுகிறார்.
வாழ்க்கை முறையிலும் தொழில் முறையிலும் தனித்தன்மை வாய்ந்த சமூகங்களையும், அவற்றிற்குரிய மக்களின் மனப்போக்குகளையும் விளக்குகிறார். அவைகளில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய படக்காரன் வாயிலாக மாறுபட்ட மக்களின் வாழ்க்கை முறைகளைக் கண்டு, கேட்டு உணர்ந்து அவர்களைப் பற்றிய செய்திகளைச் சேகரித்துத் தொகுத்துள்ளார் ஆசிரியர். “குமரிக்கு வருவதை நிறுத்திய யாசகர்கள்” என்று கட்டுரையில் இதைத் தெளிவாகக் காணலாம்.
தொகுப்பில் உள்ள கட்டுரைகள் ஒவ்வொன்றும் ஒரு கதைவடிவில் அமைக்கப்பட்டு நிகழ்கால நிலைமைகளுடன் ஒப்பிட்டுக் காட்டப்படுகிறது.
அவைகளில் “படக்காரன் சொன்ன கருட புராணம், ராஜகேசவதாசும் நம்பிநாராயணனும், குதிரைக்காரனுக்குப் பாவம் சேரும், கள்ளி நற்குழலாள், முத்தாள் கணவனைக் கருதிப்பாராள், அஞ்சலோட்டம் அவருக்கேயாச்சு போன்ற கட்டுரைகள் தனிச் சிறப்பு உடையவை. மாற்றங்கள் தொடர்பான பல வகைப்பட்ட செய்திகளை அறியவும் மக்களின் மாறுபட்ட வாழ்க்கை முறைகளோடு ஒப்பிட்டு சமுதாய வாழ்க்கை குறித்த தறிய விழிப்புணர்வைப் பெற ஊக்குவிக்கின்றன.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆன்மிக வாழ்க்கையும், பொருளியல் வாழ்க்கையும் சூழல்களுக்குத் தகுந்த படி ஒருங்கிணைந்து மக்களின் வாழ்க்கையை வழி நடத்தின.
‘ஆங்கிலக் கல்வியும், அலோபதி மருத்துவமும் தமிழ் வழி அறிவியல் நூல்கள் அச்சானதும் 12-ஆம் நூற்றாண்டு ஆரம்பத்திலேயே நிகழ்ந்து விட்டன. இவை போன்ற சமூக மாற்றங்கள் இந்த மாவட்டத்தில் நாட்டார் வழக்காற்றியல் நிகழ்வுகளைப் பாதித்திருக்கின்றன.
இந்த மாவட்டத்தில் அய்யா வைகுண்டர் ஸ்ரீ நாராயணகுரு ஆகிய இரு ஞானிகளும் மக்களிடம் செய்த பிரச்சாரம் விழிப்புணர்வை உண்டாக்கியிருக்கிறது. நாராயணகுரு நாகர்கோவிலின் ஒரு பகுதியாகிய கோட்டாற்றில் வாழும் ஈழுவ சமுதாய மக்களின் வாழ்க்கை வட்டச் சடங்குகளில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கும்.
கோட்டாற்று மக்களிடம் வழக்கில் இருந்த நாட்டார் தெய்வ வழிபாட்டு மரபை ஒழிப்பதில் நாராயணகுரு தீவிரமாக இருந்திருக்கிறார். நாட்டார் தெய்வ உருவங்களை குருவே முன் நின்று உடைத்திருக்கிறார். இவை தொடர்பான சடங்குகளை நிகழ்த்த வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார். பேய் நம்பிக்கையை உடைத்திருக்கிறார். இதன் காரணமாக நாட்டார் தெய்வ வழிபாடு, நாட்டார் கலைகள், நாட்டார் வழக்காறுகள் ஆகியன இச்சமூகத்தில் மறைய ஆரம்பித்துவிட்டன.
அய்யா வைகுண்டார் நாட்டார் தெய்வ வழிபாட்டைத் தீவிரமாகக் கொண்டிருந்த நாடார் மக்களின் ஒரு பிரிவினரிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இதன் காரணமாக அய்யாவழி (அய்யா வைகுண்டரைப் பின்பற்றியவர்கள்) மக்களிடம் நாட்டார் தெய்வ வழிபாடு மறைய வேண்டிய சூழ்நிலை உருவானது. இதனால் இவ்வழிபாடு தொடர்பான சடங்குகளும், கலைகளும் அழியத் தொடங்கின.
அவை, நாட்டார் கலைகள், சுவரோவியம் ஓலைச் சுவடிகளில் ஓவியம், தாள்களில் ஓவியம், துணிகளில் ஓவியங்கள், துணிகளில் வரையப்பட்ட ஆவணம், வழக்காற்றில் புழங்கிய சொற்கள், புழங்கு பொருள்களும், பண்பாடும் மருத்துவமும், உணவுப் பழக்கம், வாய் மொழிப் பாடல்கள் மரபுசார்ந்த தொழில்கள், மரபு சார்ந்த தொழில்நுட்பங்கள், நாட்டார் வழிபாடுகள், சடங்குகள், யாசகராக வந்த கலைஞர்கள், நாட்டார் விழுமியங்கள்.
கன்னியாகுமரி மாவட்டம் 1956-ஆம் ஆண்டு வரை கேரளத்தின் ஒரு பகுதியாக இருந்தது. இங்கே சமயத்திலும், சமூகத்திலும் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்தன. அடிமை ஒழிப்பு (1853) மேலாடைக் கலகம் (1859), கோவில்களை அரசு கையகப்படுத்தியது (1910), கோவில்களில் எல்லாச் சாதியினருக்கும் நுழையும் உரிமை (1936), கோவில் தேவதாசிமுறை ஒழிப்பு (1930) எனப் பலவற்றைச் சொல்லலாம்.
இவை போன்ற ஆன்மிக சமுதாய மாற்றங்கள் சமுதாயப் பொருதார வாழ்க்கையின் வளர்ச்சியின் ஊடாக எவ்வாறெல்லாம் நிகழ்ந்தன என்பதை ஆசிரியர் எளிமையாகவும், தெளிவாகவும், தக்க ஆதாரங்களோடும் ஆய்வு செய்து ஒவ்வொரு கட்டுரைகளிலும் வெளிப்படுத்தியிருக்கிறார்.
தென்குமரிச் செய்திகள் அடங்கிய ‘படக்காரன் சொன்ன கருடபுராணம்' என்ற இந்த ஆய்வு நூலை அனுபவம்/வழக்காறு, வரலாறு/சமூகம் மற்றும் வழிபாடு - நாட்டார் தெய்வம் என்று மூன்று பிரிவுகளாகப் பிரித்து அவைகளுக்குரிய கட்டுரைகளை தொகுத்துச் செய்திகளை தெரியப்படுத்தியுள்ளார். இந்த நூலின் அளவு சிறியதாக அமைந்திருந்தாலும் விரிவான செய்திகளைச் சுருக்கமாகவும், தெளிவாகவும் தன் எளிய தமிழ்நடையில் வெளிப்படுத்தி இருப்பது வியப்புக்குரிய ஒரு கலைத்திறன் எனலாம்.
கன்னியாகுமரி மாவட்டத்தின் மறைந்துபோன வழக்காறுகளின் விளைவாக இந்த மாவட்டத்திற்கு வந்த யாசகர்களான புலம் பெயர்ந்துவந்த மக்கள் இங்கே வராமல் இருந்ததற்கு உரிய சூழ்நிலை எழுபதுகளில்தான் உருவானது.
‘படக்காரன் என்பவரை நாஞ்சில் நாட்டின் காவடிப் பண்டாரம் என்று அழைத்திருக்கிறார்கள். படக்காரன் என்ற பண்டாரம் தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட பண்டாரம், பண்டாரம் ஜாதியினரின் உட்பிரிவினர் ஆவர். பெரும்பாலும் நாடோடிகளாக வாழ்ந்தனர். இவர்களில் சிலர் முருகன் கோவில்களில் காவடி எடுக்கும் சடங்குகளில் பங்கு கொண்டு சன்மானம் பெற்றிருக்கின்றனர்.
இந்தப் பண்டாரங்களில் பெரும்பாலானவர்கள் தென் மாவட்டங்களில் காவடி எடுத்துக் கொண்டு நாடோடிகளாய் சுற்றியலைந்து யாசகம் பெற்று வாழ்ந்திருக்கிறார்கள்.
“படக்காரன் ஊரின் முச்சந்தியிலும் சந்தையிலும், மக்கள் கூடுகின்ற இடங்களில் காவடியைச் சுமந்து கொண்டு நின்று பாடுவார். இவர் பாடுவதைக் கேட்க என்றே கூட்டம் கூடிவிடும். பெரும்பாலும் வயதானவர்கள் இவரது பாட்டைக் கேட்க வருவார்கள், பொறுமையாக நின்று கேட்பார்கள்".
இதுபோன்ற வியக்கத்தகுந்த செய்திகளைத் தனது நூலில் ஆசிரியர் குறிப்பிட்டிருக்கிறார். அன்று இந்தியாவில் வாழ்ந்த உலகம் போற்றும் மாமனிதர்கள் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வந்து சென்ற பெருமைக்குரிய செய்திகளையும் தன் நூலில் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர்.
“கன்னியாகுமரி மாவட்டம் 1956 வரை கேரளத்துடன் இருந்தது. பிரிட்டிஷ் ஆட்சியின் கொடுமை முழுவதும் அறியாதது இந்த மாவட்டம். அதனால், விடுதலைப் பேராட்ட நிகழ்வு அடங்கித்தான் இங்கே நிகழ்ந்தது என்றாலும் மகாத்மா காந்தி, சரோஜினிநாயுடு, சி.ஆர்.தாஸ், லாலா லஜபதிராய் எனச்சில தலைவர்க்ள் நாகர்கோவிலுக்கு வந்திருக்கின்றனர். மகாத்மா குமரி மண்ணுக்கு நான்கு முறை வந்திருக்கிறார்.
“வங்கக் கவிஞர் ரவீந்திரர் 1913-ல் நோபல் பரிசு பெற்ற பின்பு தான் தந்தையின் கனவை நனவாக்க இந்தியா முழுக்கப் பயணம் செய்தபோது கேௗரத்துக்கு வந்தார். ஸ்ரீ நாராயண குருவைச் சந்தித்தார்.’
இதுபோன்ற வியக்கத் தகுந்த வரலாற்று நிகழ்ச்சிகளை நூலில் பல இடங்களில் ஆசிரியர் பதிவு செய்திருக்கிறார்.
அதைப்போலவே, குமரி மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற கோவில்களைப் பற்றிய வரலாற்று ஆவணச் செய்திகளும் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன.
அவற்றில் ஸ்ரீபத்மநாப சுவாமிகள் திருக்கோயிலும் ஒன்று. அன்றைய காலகட்டத்தில் இது கன்னியாகுமரியுடன் இணைந்திருந்தது. இன்று அது திருவனந்தபுரத்தில் கேரளாவின் ஒரு பகுதியில் உள்ளது.
அதைப் போலவே, புகழ் மிக்க சுசீந்திரம் என்ற திருக்கோயிலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது.
கன்னியாகுமரியின் பழமையும், புதுமையும் நிறைந்த வரலாற்றுச் செய்திகளை இந்த நூல் ஆழமாகவும், தெளிவாகவும், சுருக்கமாகவும் உள்ளடக்கி இருக்கிறது.
இது, முன்மாதிரியான ஒரு தமிழ் நாட்டுப் பகுதியின் தனிப்பட்ட வரலாற்று செய்திகளை ஒருங்கிணைத்துப் பகுப்பாய்வு செய்துள்ளதால் இதன் தனித்தன்மையைப் புரிந்து கொள்ளலாம்.
(படக்காரன் சொன்ன கருட புராணம் (தென்குமரிச் செய்திகள்), அ.கா.பெருமாள், வெளியீடு: NCBH, விலை. ரூ.280)
- சி.ஆர்.ரவீந்திரன்