தமிழக இறைமக்களின் தனிப்பெரும் ஒரே கிறித்தவ வார இதழான ‘நம் வாழ்வு’ 1975 முதல் வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்த இதழுக்கென்று நியமிக்கப்பட்ட ஆசிரியர்களால் எழுதப்பட்ட தலையங்கங்கள் வழியாக மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

2017 முதல் எட்டாவது ஆசிரியராகப் பொறுப்பேற்ற குடந்தை ஞானி எழுத்தாளராகவும், பத்திரிகையாளராகவும், அருட்தந்தையாகவும் விளங்கினார். அவர் எழுத்துகளில் வேகமும், விவேகமும் நிறைந்திருக்கும். அவர் எழுதிய 247 தலையங்கங்களே ‘நம் வாழ்வின் மெய்ப்பொருள்' என்ற நூலாகிறது.

kudanthai gnani book"குடந்தை ஞானியின் ‘நம் வாழ்வின் மெய்ப்பொருள்' என்றும் இந்நூல் நிச்சயம் ஓர் ஆய்வு நூலாகவும், வரலாற்று ஆவணமாகவும், இன்றைய தலைமுறைக்கும், எதிர்காலத் தலைமுறைக்கும், பத்திரிகை உலகிற்கும் விளங்கும் என்பது வெள்ளிடைமலை” என்று ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசியுரையில் கூறியுள்ளார்.

கோயிலுக்குக் கோபுரத்தைப் போல, சேலைக்கு முகப்பைப் போல, ஒரு இதழின் கம்பீரத்துக்கும், கவர்ச்சிக்கும், ஈர்ப்புக்கும் தலையங்கங்கள் வலு சேர்க்கின்றன. தலையங்கம் பத்திரிகையின் கொள்கை முழக்கம். அதுதான் பத்திரிகையின் முகமும், முகவரியும்.

“எல்லோரும் தலையங்கம் எழுதிவிட முடியாது. தலையங்கம் எழுதுகிறவர்களுக்கு சில அடிப்படைத் தகுதிகள் உண்டு. முதலில் அவர் நிறைய வாசிக்கும் பழக்கம் உள்ளவராக இருக்க வேண்டும், மாநில நிகழ்வுகள், தேசியச் செய்திகள், சர்வதேச நடப்புகளை அறிந்தவராக இருக்க வேண்டும்.” என்று பீட்டர் அல்போன்ஸ் தம் வாழ்த்துரையில் கூறுகிறார்.

இந்திய அரசியல் ஓர் உச்சத்தை அடைந்துள்ளது. இந்தியப் பொருளாதாரம் ஏழைகளை அந்நியப்படுத்தி பெரும் கார்ப்பரேட் முதலாளிகளை அரவணைக்கிறது. சனாதன சக்திகள் சமூக நீதிக்கு உலை வைக்கிறது. பிற்படுத்தப்பட்ட மக்கள், பட்டியலின மக்கள், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மை மக்கள் மேலும் மேலும் சுரண்டப்படுகின்றனர்.

காலங்கள் தோறும் சமுதாயத்தில், அரசியலில், மக்களாட்சி அமைப்பில் நிகழும் தவறுகளை அறச்சீற்றத்துடன் பத்திரிகைகள் வெளிப்படுத்த வேண்டும். சமூகத்தின் மாற்றுச் சிந்தனைக்கு இடம் தரும் விதமாய் விமர்சனம் செய்ய வேண்டும்.

பொன்விழா காணப் போகும் ‘நம் வாழ்வு' வார இதழின் ஆசிரியராகப் பொறுப்பேற்று அதனை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் சென்றவர் குடந்தை ஞானியாவார். இன்றைய இந்துத்துவா பாஜக ஆட்சியில் பத்திரிக்கைகள் சுதந்திரமாகச் செயல்பட முடியாத நிலையில் உள்ளன.

‘ஒரு தலையங்கத்தின் சிறப்பு அது முன்வைக்கும் கருத்து கடுமையாக இருக்க வேண்டுமே ஒழிய, அதன் வார்த்தைகள் அல்ல. தந்தை ஞானி அவர்களின் தலையங்கங்களில் கருத்து மட்டும் கடுமையாக அறச்சீற்றத்துடன் உள்ளது. ஒவ்வொரு வார்த்தையும் உயிரோட்டம் நிறைந்ததாக, பசுமரத்தானி போல் வாசகர் மனதில் பதியும்படி உள்ளது” என்று நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் தம் வாழ்த்துரையில் கூறியுள்ளார்.

247 தலைப்புகளில் தொகுக்கப்பட்டுள்ள இந்நூல் தாய்மொழித் தமிழில் உள்ள 247 எழுத்துகளையும் நினைவுபடுத்துகிறது. உயிர் எழுத்து 12, மெய்யெழுத்து 18, உயிர்மெய்யெழுத்துகள் 216, ஆயுத எழுத்து 1, ஆக 247. ஒவ்வொரு தலையங்கத்திலும் உயிர் உண்டு, மெய் உண்டு, உயிர் மெய் உண்டு, ஏன் ஆயுதம் கூட உண்டு.

ஓர் அருட்பணியாளர் என்பதை விட ஓர் எழுத்தாளர், பத்திரிக்கையாளர் என்பதில் பெருமிதம் கொண்டு ஏறக்குறைய 25 ஆண்டுகளாக செயல்பட்டு வந்துள்ளார். இன்றைய அரசியல் சூழலில் உலகையும், ஒன்றியத்தையும் மாநிலத்தையும் நோக்கி விமர்சனம் செய்துள்ளார்.

தமிழக நிதிநிலை முதல் மத்திய அரசின் மதவாதம் வரை அலசப்படுகின்றது. உள்ளூர் விலைவாசி முதல் உலகப் பொருளாதாரம் வரை பேசப்படுகின்றன. காவிரி பிரச்சனை முதல் உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு வரை தலையங்கங்களில் இடம் பெற்றுள்ளன.

“ஓர் இதழின் தலையங்கத்தின் நோக்கம் சிந்திப்பதும், அவ்வாறே சிந்திக்கத் தூண்டுவதும், பார்ப்பதும், அப்படியே பாரக்க வைப்பதும், இயங்குவதும் அங்ஙனமே இயங்கச் செய்வதும் என்றால் நம்வாழ்வும், நம் ஞானியும் அவற்றைத் திறம்படச் செய்து வந்திருக்கிறார்கள்” என்று முனைவர் சுப.உதயகுமாரன் தமது அணிந்துரையில் கூறியுள்ளார்.

ஆசிரியர் குடந்தை ஞானி தாம் பணியாற்றிய காலங்களில் அவர் எழுதிய தலையங்கங்களைத் தொகுத்து ‘நம் வாழ்வின் மெய்ப்பொருள்' என்ற நூலாக 1200 பக்கங்களில் அளித்துள்ளார். இதுவொரு அவசியமான நடவடிக்கை எனலாம்.

ஆய்வாளர்கள், வரலாற்று ஆசிரியர்கள், பத்திரிகையாளரகள், களப் போராளிகள் என அனைவருக்கும் பயன்படும் கருவூலமாகத் திகழ்கிறது. இந்தக் கட்டுரைகளில் மதவாதம், ஸ்லாமிய வெறுப்பு, சாதியம், காந்தியம், மக்களாட்சி, மனித உரிமை, கல்வி மறுப்பு ஆகிய முக்கிய பிரச்சனைகள் அலசப்படுகின்றன.

கட்டுரையாளர்கள் தங்கள் கருத்தையும், எண்ணங்களையும் எழுதுகின்றனர். ஆனால் ஆசிரியர் தமது தலையங்கங்களின் மூலம் இதழின் குரலை எழுதுகிறார். நடுநிலை தவறாமல் அறவுணர்வோடும், கடமை உணர்வோடு இந்தத் தலையங்கங்கள் எழுதப்பட்டுள்ளன. அதுதான் பத்திரிக்கைக்கும், ஆசிரியருக்கும் பெருமை சேரப்பதாகும்.

நூலாசிரியர் குடந்தை ஞானி அவரகள் திருச்சி மாவட்டம் லால்குடி அருகே நகர் கிராமத்தில் 1977 ஆம் ஆண்டு பிறந்தவர். கீழவாளாடி அரசு உயர்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்புவரை பயின்று, குருவாக வேண்டும் என்ற எண்ணத்தில் கும்பகோணம் மறைமாவட்டத்தில் சேர்ந்து, இளங்கலை வணிகவியல், மெய்யியல், இறையியல், முதுகலை இதழியல் கற்று 2005ஆம் ஆண்டு குருவாக நிலைப்படுத்தப்பட்டார்.

கல்லூரிப் பருவத்திலேயே பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி ஆகியவற்றில் மாவட்ட, மாநில அளவில் பல்வேறு பரிசுகளைப் பெற்றுள்ளார். 2017 ஆம் ஆண்டு தம் 39 ஆம் வயதில் ‘நம் வாழ்வு' வார இதழின் ஆசிரியராக தமிழக ஆயர் பேரவையால் நியமிக்கப்பட்டு 2023 வரை பணியாற்றினார்.

“என்னைப் பொருத்தவரை எழுத்து என்பது ஒரு வேள்வி, ஒரு தவம், ஒரு பிரளயம், ஒரு மாற்றுக்களம், ஒரு புரட்சியின் விதை. பாரதியின் வரியில் காட்டில் பொதிந்து வைக்கப்பட்ட அக்கினிக் குஞ்சு, இயேசுவின் பாணியில் அவரே எருசலேம் ஆலயத்தில் பின்னிய சாட்டை, ‘நம் வாழ்வு' வார இதழில் இடம் பெறும் ஒவ்வொரு தலையங்கமும் நம் தாய்த்திரு அவையின் உயிரோவியம்” என்று நூலாசிரியர் கூறுகிறார்.

கடந்த ஆண்டுகளாக நம் வாழ்வில் இடம் பெற்ற வாசகர் கடிதங்களில் பெரும்பாலானவை தலையங்கங்களை பாராட்டியே வந்துள்ளன. இது தலையங்கக் கட்டுரைகளின் சிறப்புகளுக்கு ஒரு சான்றாகும்.

பிரதமர் மோடியின் வெறுப்பு அரசியல் பற்றி பல கட்டுரைகளில் எதிர்க்கருத்துகளை வெளியிட்டுள்ளார். கூடங்குளம் அணுமின் நிலையம், காவிரிப் படுகையில் மீத்தேன், மீனவர் பிரச்சனை, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, சாதி ஆணவக் கொலை, மாணவர்களைப் பழிவாங்கும் நீட் தேர்வு முதலிய பிரச்சினைகளில் அவரது அறச்சீற்றம் வெளிப்படுகிறது.

உலக அமைதிக்காக, 'இன்னொரு போர் இனியும் வேண்டாம்' என்ற கட்டுரை மனித நேயத்தை வலியுறுத்துகிறது. ‘திணறும் இலங்கை, திண்டாடும் ஈழத்தமிழர்கள்' என்ற கட்டுரை இந்தியா உள்பட எல்லா நாடுகளும் உதவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறது.

பத்திரிகைப் பணி என்பது ஒப்பற்ற உன்னதமான பணியாகும். அவரைப் பொருத்தவரை முதலில் எழுத்தாளர். பின்னர்தான் அருட்பணி என்று வாழ்கிறார். அதனால் அவரது எழுத்துகளில் உண்மையும், அறமும் கைகோத்துப் போவதைக் காணலாம்.

அரசியல், சமூகம், பொருளாதாரம், கிறித்தவம் என்று அவர் தொடாத துறையில்லை. காலத்துக்கு ஏற்ப தேச நலனையும், மக்கள் நலனையும் இரு கண்களாக முன்னிறுத்தி அச்சமின்றி எழுதியுள்ளார்.

‘பேனா முனையை விட வலிமையான ஆயுதம் இவ்வுலகில் இதுவரை இல்லை. காட்சிகள் கனவாகிப் போகும். வார்த்தைகள் காற்றோடு போகும். எழுத்து மட்டும்தான் நிலைத்து நிற்கும் என்பதை வரலாறு உணர்த்தி இருக்கிறது. இனியும் உணர்த்தும்' என்று இவர் உரைத்திருப்பது இந்நூலுக்கும் பொருந்தும்.

(நம் வாழ்வின் மெய்ப்பொருள், குடந்தை ஞானி, பக்கங்கள்: 1248, விலை ரூ.1000, வெளியீடு: நம் வாழ்வு, 62, லஸ் சர்ச் ரோடு, மயிலாப்பூர், சென்னை - 600 004)

- உதயை மு.வீரையன்